புதன், 28 டிசம்பர், 2016

போடோ மொழி சிறுகதை


போடோ-கக்சாரிசு என்று அழைக்கப்படும் போடோ மொழி அசாமில் பிரம்புத்திரா பள்ளத்தாக்கு பகுதிகளில் பேசக்கூடிய பழங்குடியின மொழி. அரிதான மக்களால் பேசப்பட்டு வந்த இம்மொழி பேசும் மக்களால் மொழியின் அவசியத்தை உணர்ந்து எழுத்து மொழியாகவும் , தொடக்கக்கல்வி மொழியாகவும் கடைப்பிடித்து பத்து ஆண்டுகளாக உயர்க்கல்வி மொழியாகவும் விளங்கிறது.
இம்மொழியின் முதல்  இலக்கிய  இதழ் 1955 ஆம் ஆண்டு சதீசு சந்திர பசுமதாரி என்பவரால் கொண்டுவந்த போடோ என்கிற இதழ்தான். இம்மொழியின் முதல் சிறுகதை 1930 ஆம் ஆண்டு இசான் முசாகாரி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை ' அபரி   '. இக்கதை அதே ஆண்டு காதார்கிலா என்கிற இதழில் பிரசுரமாகியிருக்கிறது. 
     
அபரி பதினெட்டு வயதுடைய பெண்.அவளுக்கு வரன் தேடுகிறான் சகோதரன் உலி. அபரிக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை.  மாப்பிள்ளை முதுகில் கூன் விழுந்து போய் பார்க்க கிழவன் மாதிரி தெரிகிறான். மாப்பிள்ளை பிடிக்கவில்லை  என்கிற தகவலை அவள் சகோதரனிடம் சொல்கிறாள். உலி , ' நீ ஊனம் என்பதால் உனக்கு இப்படியாகப்பட்ட மாப்பிள்ளைதான் கிடைப்பான் ' என்கிறான். அவனை மணக்க முடியாது ' என்கிறாள் அபரி. மாப்பிள்ளையிடம் கை நீட்டி வளையல் வாங்கியாகி விட்டது  ( வளையல் வாங்கினால் சம்மதம் ) என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறான் உலி. கடைசியில் அவனது இன்னொரு சகோதரியை மணம் முடித்துகொடுக்கிறான்.
       அபரியின் பரிதாபமான நிலையைப்பார்த்து அவ்வூர் இளைஞன் ஒருவனுக்கு அவள் மீது காதல் வருகிறது. திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அபரி மீது சகோதரன் உலியும் சொந்தங்களும் எரிந்து விழுகிறார்கள். ஒரு நாள்  உலி விஷம் வாங்கிகொடுத்து இன்றைக்குள் செத்துவிட வேண்டும் என்கிறான். சரி என விஷத்தை வாங்கி வைத்துக்கொள்ளும் அவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன்  ஊரை விட்டு ஒதுங்குகிறாள்.
          போடோ மொழியின் முதற்கதையே பெண்ணடிமை , அதை உடைக்கும் பெண்ணெழுச்சியாக படைக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமானதாக இருக்கிறது.
          சாகித்ய அகாதெமி வெளியீடாக போடோ சிறுகதைகள் எனும் பெயரில் வெளியாகியிருக்கும் இந்நூல் ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா என்பவர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். தமிழில் இரா.குருநாதன் மொழிபெயர்த்திருக்கிறார்.
இத்தொகுப்பில் மொத்தம் 11 கதைகள் உள்ளன. அத்தனையும் பெண்களின் மீதான ஒடுக்கு முறையையும் அதற்கு எதிரான குரலையும் உரக்கச்சொல்கிறது.
       இத்தொகுப்பில் வேறொரு முக்கியமான சிறுகதை வேறு வழி  என்கிற சிறுகதை. பகுண்டா விறகு வியாபாரி. விறகு விற்றுவந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும். விறகு  விற்காமல் வீடு திரும்புகிறான்  பகுண்டா. முடியாமல் படுத்துவிடுகிறான். மூன்று குழந்தைகளுக்கும் பசி. மறுநாள் மனைவி மூத்த மகள் தார்லியை வீட்டில்  விட்டுவிட்டு  இரண்டு பிள்ளைகளுடன்  அவள் பிச்சை எடுத்து வர செல்கிறாள். தார்லி வீட்டில் இருக்கிறாள். ஒரு சாராய வியாபாரி  அத்தெருவின் வழியே வருகிறான். அவனிடம் நேற்றைய தினம் நான்  உன் முகத்தில் விட்டெறிந்த நூறு ரூபாயை தரச்சொல்லி அவனை வீட்டிற்குள் இழுத்துச் செல்கிறாள். அப்பன் படுக்கையில் குமறுகிறான். இக்கதையை எழுதியவர் அரேச்வர் பசுமதாரி.

1 கருத்து:

  1. இந்நூலை நான் படித்துள்ளேன். அருமையான மொழிபெயர்ப்பு. http://drbjambulingam.blogspot.com/2016/09/blog-post.html என்ற பக்கத்தில் எனது தளத்தில் முனைவர் இராம.குருநாதன் அவர்களின் பிற நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு