செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தேசியக் கல்விக் கொள்கை


        ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016 இன் முன்னோட்டம் பொது மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தொழிற்நுட்பக் கல்வி, தேர்வு முறைகளில் மாற்றம், பத்தாம் வகுப்புகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் தவிர்த்து தொழிற்பாடங்கள் அறிமுகம், அங்கன்வாடி மாணவர்களை பள்ளியுடன் இணைத்து முன்பருவக்கல்வி, மீத்திறம் மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு, உதவித்தொகை, ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை ஆசிரியர்களுக்கு கட்டாயத் தேர்வு,...என பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு, முன்னோக்கிய திட்டமிடல் இருந்தாலும் வழக்கம் போலவே ஆரம்பக்கல்வியை விடவும் உயர்கல்விக்கு அதிக முன்னுரிமை, நிதி ஒதுக்கீடு, திட்டமிடல் இருக்கத்தான் செய்கிறது.
        இயல் - 1
        ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கல்விக்கொள்கை - 2016 இன் முகப்புரையை வாசித்தால் இம்முகப்புரை யாருடைய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது என சொல்லிவிடுமளவிற்கு முகப்புரையின் சில உதாரணங்கள் இருக்கின்றன.
        விடுதலைப்போராட்டக்காலத்தில் கல்விக்காக போராடியவர்களின் பட்டியலில் கோகலே, ராம் மோகன்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா, காந்தியடிகள் இவர்களுடன் முகப்புரை மெல்ல நழுவிக்கொள்வதைப் பார்க்கையில் இத்தேசியக் கல்விக்கொள்கை, யாருக்கானது, யாரால் ஆனது என்பதை ஓரளவேனும் யூகித்து பரந்துப்பட்ட, வெளிப்படையான நோக்கத்தில் வடிவமைக்கவில்லை என்பதை கணித்துவிட முடிகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்கென தனி பள்ளிகளை உருவாக்கிய ஜோதிராவ் கோவிந்தராவ் புலே, உலக கல்வித் திட்டத்தை இந்தியாவில் திட்டமிட்ட அபுல் கலாம் ஆசாத், தாகூர்  போன்ற பல தலைவர்களின் பெயர்கள் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீஅரவிந்தர், காந்தி, சுவாமி விவேகானந்தர் கல்வியைப் பற்றியும் எதிர்கால இலக்குப்பற்றியும் சொல்லிருப்பதை வரைவிற்குள் கொண்டு வந்திருக்கும் குழு இன்றைய தொழிற்நுட்பக் கல்வி, உலகளாவியக் கல்வி, ஆழக்கல்வி , தேர்வு நோக்கமற்ற பரந்துபட்ட கல்வி இவற்றைப்பற்றிய கருத்துருக்களைச் சொல்லிருக்கும்  இந்திய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர்களின் கருத்துகளை சேர்த்திருக்க வேண்டும். அமிர்தியா சென், தாகூர் , உட்பட தொழிற்நுட்ப நடப்பு அறிஞர்களின் பெயர்கள் விடுபட்டது ஏனோ.......?
        கோகலே இந்திய கல்விக்காக போராடிக்கொண்டிருக்கையில் அம்பேத்கர் போன்றவர்கள் பள்ளிக் கல்வியை சம உரிமையுடன் பெற முடியவில்லை.  இந்திய சுதந்தரம் பெற்று இன்னும் இத்தகைய சமமின்மை நீடிப்பதை தேசியக் கல்விக்குழு உள்வாங்க மறுத்திருப்பது ஏன்...? இன்றைய அரசு தொடக்கப்பள்ளிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களே அதிகம் படித்து வருக்கிறார்கள்....மற்றவர்கள் அரசுப்பள்ளியை புறக்கணிக்கும் காரணத்தை இக்குழு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
இயல் - 2
        கல்வித்துறையிலுள்ள முக்கியமானச் சவால்கள்
        - தலைப்பின் கீழ் ஆசிரியர் - மாணவர் பற்றி கவலைப்படும் கல்விக்கொள்கை பெற்றோர் - மாணவர் பற்றி கவலைப்படவில்லை. மேலும் ஒரு நகரத்திற்குள் அருகாமைப்பள்ளிகளாக ஒரு தனியார் பள்ளி, ஓர் அரசு பள்ளி இரண்டும் அரை மைல் தூரத்தில் இருப்பதற்கான அவசியம் ஏன் வந்திருக்கிறது என்பதைப்பற்றி கல்வியாளர்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும்.
இயல் -3
        தொலைநோக்கு
        பெண்கல்விக்கு தனிக்கவனம், அமைச்சகம் வழியுறுத்தியிருக்கலாம்.
        வடக்கிழக்கு மாநிலங்களான ஏழு சகோதரிகளின் நாடு என அழைக்கப்படும் மாநிலங்களுக்கென ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் இருக்கிறது. யூனியன் பிரதேசங்கள் என்கிற உள்ளடக்கத்திற்குள் ஆந்தமான், தாத்ரா, இலட்சத் தீவுகளையும், டெல்லி, பாண்டிசேரியும் ஒன்றாக வைத்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
இயல் - 4
கொள்கை வடிவமைப்பு
        பள்ளிக்கு முந்தையக் கல்வி அவசியம் - வரவேற்கத்தக்கது.
        முன் பள்ளிக்கல்வி ஆசிரியர்களை பற்றி தகவல் இல்லாதது - ஏமாற்றம்
        அங்கன்வாடிகளை பள்ளியுடன் இணைப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த அவர்களை பள்ளி குழந்தைகளாக ஏற்றுக்கொண்டு பள்ளி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அவர்களை தனித்து முன்னுரிமை கொடுப்பது சரியானதாக இருக்கும்.
        பெண்களுக்கென தனி பள்ளி தேவையா , இல்லையா என்பதைப்பற்றிய புரிதல் இல்லை. ஓரு பாலர் கல்வி, இருபாலர் கல்வி, பாலியல் கல்வி இவற்றில் கவனம் செலுத்தப்பட வில்லை. ஆனால் வளரிளம் பெண்களுக்கான கல்வி அவசியம் - வரவேற்கத்தக்கது.
        தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் இக்கல்விக்கொள்கை அரசியல் அறிவு, சட்ட அறிவு பற்றிய கல்வி அவசியம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. மாற்றுப்பள்ளி அச்சமூட்டுகிறது. இது தனியார் பள்ளிகளை வளர்த்தெடுக்க உதவும்.
        ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி - அபாயகரமானது. பள்ளி செல்லா, இடையில் நிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அது மட்டுமன்று . தாமத நுண்ணறிவு குழந்தைகளை ஊக்கப்படுத்துவதாக இருக்காது. - எட்டாம் வகுப்பு வரைக்கும் அனைவருக்கும் தேர்ச்சி அவசியம்.
        சிறுபான்மை பள்ளிகள் வந்ததன் பிறகே பள்ளி பருவ குழந்தைகளுக்கான கல்வி பரவலாக்கப்பட்டது. ஏழை, பணக்காரன், சாதி மதம் பாகுபாடற்று சீருடை முறையை கொண்டு வந்தது சிறுபான்மையினர் பள்ளிகள்தான். அவர்களுக்கு அரசு அளித்து வந்த நிதிகளை நிறுத்துவது வேறு வழியில்லாமல் சமாதானமடையலாம். ஆனால் அதற்குப் பதிலாக கேந்திரிய, வித்யாலய பள்ளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறுபான்மையினர் இடத்தில் பெரும்பான்மையினர் வருவதைப் போலிருக்கிறது.
        இன்றைய அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மட்டும் அதிகமாக படித்து வருவதன் காரணம் என்ன....மற்ற மேற்குடி குழந்தைகள் அரசு பள்ளிகளுக்குள் வராமல் இருப்பதற்கான காரணம் ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
        தனியார் பள்ளிக் குழந்தைகள் அரசுப்பள்ளி குழந்தைகளை விடவும் ஓபிசி குழந்தைகள் எஸ்சி, எஸ்டி குழந்தைகளை விடவும் சிறப்பாக படிக்கிறார்கள் என தேசியக் கல்விக்குழு ஏற்றுக்கொண்டமைக்கு பாராட்டலாம். அதற்கான காரணம், அவற்றைக் களைவதற்கான காரணக்காரியங்கள் போதுமானதாக இல்லை.
        தேர்வு சீர்த்திருத்தத்தில் ப்ளஸ் 1 வகுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது பெரிய அளவிலான பின்னடைவு.
        பத்தாம் வகுப்பு கணக்கு அறிவியல் படிக்காமல் தொழிற்கல்வி அறிமுகம் - ஆரோக்கியம். அதே நேரம் அதற்குப்பதிலாக தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் என்பதை நினைக்கையில் அச்சப்பட வேண்டியிருக்கிறது. குலத்தொழிலை தொழிற்பாடமாக வைத்துவிடுவார்களோ என்கிற சந்தேகம் வேறு வழியில்லாமல் எழுகிறது.
        நலிவடைந்து வரும் மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் மொழியுடன் உருது, அரபி மொழிகளையும் சேர்க்கலாமே...சமஸ்கிருதம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த மொழிகளுக்கும் கொடுக்கலாமே...சமஸ்கிருதம் மொழிக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம்.....? காரணம்....? பெருபான்மை இந்து என்பதாலா....?.
        பழங்குடி மக்கள், அஸ்ஸாம், பீகார், மியான்மர் பகுதி குழந்தைகளுக்கான கல்விக்காக பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு , முக்கியத்துவம் தரப்பட்டிருக்கவில்லை.
        ஆசிரமப்பள்ளிகளைத் தவிர்க்கலாம்...
        மும்மொழிக்கல்வி - வரவேற்கத் தக்கது. மூன்றாவது மொழி இந்தி என கட்டாயப்படுத்தாமல் இருந்தால்....
        நல்ல ஆசிரியர் என்பதை திறமையான ஆசிரியர் என அழைக்கப்படலாம். சிறந்த ஆசிரியர் விருது தலைமைஆசிரியர்க்கு மட்டும்தான் கொடுக்கப்பட வேண்டுமா.....? தனித்திறமை மற்றும் உழைப்பை மையமாக்கொண்டு விரிவுபடுத்தலாம்...!
        ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்கென தேர்வு நடத்துவது அவசியம். அதே நேரம் ஐந்தாம் ஆண்டின் இறுதியில் என இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு வருடத்தில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என வரையறை வகுக்கலாம் .
        ஆசிரியர் பயிற்சி நவீனப்படுத்தப்பட வேண்டும். திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை பாடப்புத்தகம் தயாரிப்பு குழுவில் இடம் பெற செய்ய வேண்டும்.
        சமூகவியல் பாடத்திட்டத்தை பகுதியளவு என இல்லாமல் முழுமையாக மாநில அரசிடம் கொடுக்கலாம்.
        தேசிய ஆதரவுத் தொகை பத்து இலட்சம் சரி. அதை பழங்குடி, கிராம மாணவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் சமமாக பகிர்தல் கிராமப்புற, பழங்குடி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவாது.
                பழங்குடி மக்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மாநில மொழியில் பயில்வதில் சிரமம் ஏற்படுவதைப்போலவும் அவர்களுக்கு பல்மொழிக்கல்வி அவசியம் என்பதைப்போலவும் சொல்லும் வழிமுறை ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.
        தாய்மொழிக்கல்வி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம், மூன்றாவது மொழியை மேனிலை வகுப்பில் அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்கது.
        மேனிலை பள்ளி மாணவர்கள் வரைக்குமாக சத்துணவு விரிவுப்படுத்தப்படுதல் நல்ல செயல்த்திட்டம். அதேநேரம் மையமாக்கப்பட்ட சமையல் பரிமாற்றம் என்பது ஆதிக்க , அரசியல் பின்புலம் உள்ளவர்களின் கைக்கு சத்துணவுத்திட்டம் செல்வதற்கான வழியாக இருந்துவிடக்கூடும்.
        இதைவிடவும் ஒரு முக்கியம், விவசாயக்கல்வி, விவசாயக்கல்வியை மருத்துவ, பொறியியல் கல்விக்கு நிகராக தரம் உயர்த்துதல், விவசாயத்தில் தொழிற்நுட்பம், தொழிற்நுட்ப விவசாயம், விவசாயக்கல்வியை எந்த வகுப்பிலிருந்து தொடங்குவது...போன்ற வரையறுப்புகள் தேசியக் கல்விக்கொள்கையில் பெரிய அளவில் திட்டமிட்டு சேர்க்கப்பட வேண்டும்.                                                                                                                       

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நின்னை சரணடைந்தேன்


              அவன் எட்டையபுரம் சிவன் சன்னதியின் கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கிழக்கு நோக்கிப் பார்த்திருந்தான். அவனுக்கு முன்னே , அவனுக்குள், அவனைச்சுற்றிலும் கண்ணம்மா பற்றிய றினைப்புதான்! புல்லின் நுனி பனித்துளியாக அவனுக்குள் கண்ணம்மா குவிந்திருந்தாள். அவளது எதற்கெடுத்தாலும் புன்னகை  கண் முன்னே நிறைந்து வழிந்தது.  
              தனித்திருத்தலும், காத்திருத்தலும்தானே காதல். கூண்டுக்கிளியினைப் போல் அவன் தனிமை கொண்டிருந்தான். அவளுக்காகக் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்குள் கதம்பம் போலக் கனத்தன. அந்தச் சுமையிலும் ஒரு சுகமிருந்தது. கனல் இருந்தது. அவளைப்பற்றிய ஒவ்வொரு நினைவிலும் பூச்சொரிந்து அலங்கரித்தது.
              சின்னஞ்சிறு கிளியே, செல்வக்களஞ்சியமே, பிள்ளைக் கனியமுதே, பேசும் பொற்சித்திரமே, எப்பொழுது நீ வருவாயடி கண்ணம்மா....அவனுக்குள் யாரோ பாடுவதைப்போலிருந்தது.
                     ‘ சிவ, சிவ, சிவ,....’,
              ‘ ஜீவ...ஜீவ...ஜீவ....’,
              ‘ தேவ...தேவ...’,
              ‘ கிலுகிலு கிலுகி......’,
              ‘ கிக்கீ....கிக்கீ.....’,
              ‘ கேக்க.....கேக்க.....’,
              ‘ கொக்கெக்கே.....கொக்கெக்கே.....’,
              ‘ குக்குக் குக்குக் குக்குக் குக்குக் குக்கூவே.......’ ,
              ‘ கீச்கீச்...கீச்கீச்.....’ ,
              ‘ கிசு...கிசு...கிசு....’ ,
              ‘ ரங்க...ரங்க....’ என்றவாறு பட்சிகளின் குதூகல ஒலியும், ஆடவர்களின் களியாட்டமும் இரண்டறக் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. அத்தனை ஒலிகளுக்கிடையில் அவன் கண்ணம்மா அணிந்து வரும் கால் கொலுசின் சிணுங்கலை மட்டும் தனியே பிரித்தறியக் காத்திருந்தான்.
              கார்க்காலம் அது. மாலை நேரம் முடிந்து இரவு மேனியைப் போர்த்திருந்தது.
              விடிந்தால் சுப்பையாவிற்கு திருமண வைபோகம்.  அவனது வீட்டில் கெட்டிமேளம், நாதஸ்வரம் முழங்கிக்கொண்டிருந்தன. அவனது வீட்டின் ஆரவாரம் தெருவைத்தாண்டி, வானுயர மரங்கள் தாண்டி அவனுக்கு கேட்கத் தொடங்கியிருந்தன. உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் வேலைகளை வரிந்துக் கட்டிக்கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவனது வீட்டில் நண்பர்கள், உறவினர்கள் பேசிக்கொள்ளும் குதூகலம் அரவம் கூட கல்தூரம் தாண்டி அவனுக்கு கேட்டுக்கொண்டிருந்தன. சுப்பையா எதையும் பொருட்படுத்தவில்லை. சன்னதியில், கடைசி படிக்கட்டில், பின் வாசலில் உட்கார்ந்திருந்தவன் மெல்ல எழுந்து தீர்த்தக் கரையில்  தெற்கு மூலையில் உட்கார்ந்தான்.
              பொழுது நகர, நகர சன்னதியில், தீர்ததக் கரைதனில் ஆளரவம் மெல்ல கரைந்துகொண்டிருந்தது. சிலைக்கு அபிஷேகம் செய்யும் அய்யர்வாள் இல்லை. சன்னதியைச் சுற்றி வரும் பெண்கள் இல்லை. குழந்தைகள் இல்லை. பெண்களின் துணை, இணை, தந்தை பேச்சுக்கொடுக்க,.... என அவனைச்சுற்றிலும் யாருமில்லை.
              சுப்பையாவின் இதயம் துடிக்கும் ஓசை உரல் இடிக்கும் சப்தமாக அவனுக்குள் கேட்டுக்கொண்டிருந்தன. அவனது மேனிக் கொதித்தது. விடைக்கும் நரம்புகள் துழன்றது. கண்களை உருட்டித் திரட்டி அவள் வரும் திசையைப் பார்த்தான். ஒத்தையடிப் பாதைகள் துடைத்துக்கிடந்தது.
              ‘இன்று வருவதாகச் சொல்லிருந்தாளே... வருவதாக இருந்தால் இந்நேரம் வந்திருப்பாளே....வரவில்லையே......’ அவனுக்குள் சொல்லிக்கொண்டு திசைகளைச் சுற்றும்முற்றும் பார்த்தான். அவள் நின்ற இடங்கள், பார்த்த இடங்கள் அவளைப் போலவே தெரிந்தது.
              ‘ வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!’ அவனுக்குள் பாடிக்கொண்டான். தீர்த்தக் கரையின் கடைசிப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவன் மெல்ல எழுந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். சன்னதியை ஒரு சுற்று சுற்றி வந்தான். சன்னதியை நோக்கி வரும் வட, தென் , கீழ், மேல் ஒத்தையடிப் பாதைகளைப் பார்த்து நின்றான்.
              ‘ கண்ணம்மா...கண்ணம்மா....’
              அவளது பெயரை அவன் உச்சரிக்கையில் அவனுக்குள் தேன் வந்து பாய்வதைப்போலிருக்கிறது. வந்தே மாதரம் சொல்லுகையில் அவனுக்குள் பாயும் உயிர் போல ஓர் உருவமற்ற பாய்ச்சல் அவனுக்குள் பாய்ந்தது. கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தான்.  நேற்றைய தினம் அவளை நினைத்து எழுதியப் பாடல் அப்பொழுது அவனது நினைவிற்கு வந்தது. காற்றில் அலாவி கைகளை வீசிக்கொண்டு உரத்தக்குரலில் பாடினான்.
.             ‘ காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்
              காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
              தூற்றினை யொத்த இதழ்களும்...’
              ‘ ம்..... இதழ்களும்....?’ 
              ஒரு கிளிப்பேச்சு அவனது காதிற்குள் நுழைந்தது. பாடிக்கொண்டிருந்தவன்  பாடலை நிறுத்தி கண்களை மெல்லத்திறந்தான்.
              ‘ சுப்பையா...’
              அவளது பிம்பம் விழித்திரையில் விழுவதற்கும் அவளது கொஞ்சும் மொழி அழைப்பு செவிதனில் நுழைவதற்கும் சரியென இருந்தது.
              ‘ கண்ணம்மா....’ அவன் அவளது கரத்தைப் பற்ற நெருங்கினான்.
              ‘ வேணாம்....’ என்றாள் அவள்.
                     சுப்பையாவின் முகத்தை அவள் குறுகுறுவெனப் பார்த்தாள். அரும்பிக்கொண்டிருந்த மீசையை ரசித்தாள். அவனது தலையில் கட்டியிருந்த முண்டாசை ரசித்தாள். அவனது ஏறிய நெற்றி, நிமிர்ந்த நெஞ்சு, குவிந்த இதழ்கள், ஏறு போல நடை, குன்றென நிமிர்ந்து நின்றதை கண்கொள்ள ரசித்தாள். மெல்ல சிரித்தாள்.
              ‘ நல்லா இருக்கிறது சுப்பையா....’
              ‘ என் பாட்டைத்தானே சொல்கிறாய்....’ என்றான் அவன்.
              அவள் திடுக்கிட்டாள். ‘ ஆம்...ஆம்..... ஊகூம்.... இல்லை இல்லை.....’ என்றவாறு நீள் கிடை வாக்கில் தலையாட்டினாள்.
              ‘ கண்ணம்மா....உனக்கு நான் எழுதிய பாட்டு இது. பிடிக்கவில்லையா....?’
              ‘ பிடித்திருக்கிறது....ஆனால் ....’
              ‘ ஆனால்......?’
              ‘ பிடிக்கவில்லை....’
              ‘ என்ன சொல்கிறாயடி கண்ணம்மா...?’
              ‘ உன் பாடலில் பிழை இருக்கிறது சுப்பையா...’
              ‘ இருக்காது கண்ணம்மா....’ என்றவாறு அவன் குன்றென நெஞ்சை நிமிர்த்தினான்.
              ‘ பிறகு என்ன நான் பொய் சொல்கிறேன் என்கிறாயா....?’
              ‘ சரி...சரி.... கற்றதொழுகு. என்னப்பிழை...?’
              ‘ பொருட்பிழை...’
              ‘ இருக்காது. நீ சொல்வது பொய்....’
              ‘ மெய். வேண்டுமானால் இன்னொரு முறை உன் பாடலைப்பாடேன்....’
      அவன் கண்களை இறுக மூடிக்கொண்டு பாடினான்.
                     ‘ காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்...’
              ‘ நிறுத்தும் சுப்பையா’
              அவன் விகற்பத்தோடு தான் பாடியதை நிறுத்தினான். ‘ பிழை தெரிகிறதா இல்லையா....?’
              ‘ என்னப் பிழை....?’
              ‘ உன் பாடலில் இருக்க வேண்டியது கண்ணம்மா இல்லை செல்லம்மா...’
              ‘ கண்ணம்மா என் காதலி ’
              ‘ செல்லம்மா உன் வாழ்க்கைத் துணைவி. காற்று வெளியிடை செல்லம்மா - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்....இப்படித்தான் உன் பாடல் இருந்திருக்க வேணும் ’
              ‘ கண்ணம்மா.... இது உனக்கு நான் எழுதியப்பாட்டு’
              ‘  எனக்கு நீ பாட்டு எழுத வேண்டாம் என்கிறேன் நான்’
              ‘ கண்ணம்மா....! வானமழை நீ எனக்கு , வண்ணமயில் நானுனக்கு; பானமடி நீ எனக்கு, பாண்டமடி நான் உனக்கு’
              ‘ சுப்பையா..... உன்னை கும்பிடுகிறேன். போதும்...போதும்....’
              ‘ மாட்டேனடி கண்ணம்மா..... காதலடி நீ எனக்கு காந்தமடி நானுக்கு ; வேதமடி நீ எனக்கு, வித்தையடி நானுக்கு’
              ‘ அய்யோ... என்னை உன் எதிர்காலத்துடன் உதைத்து விளையாடும் பந்தாக்கி விடாதே... நான் உன்னைப்போல ஆண் அல்ல....’
              ‘ கண்ணம்மா.... பேதம் பார்க்காதே... காதலில், களவில், கற்பில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. கற்பென்று வைத்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்பவன் நான்’
              ‘ சுப்பையா....நான் உன் குலத்தாள் இல்லை....’
              ‘ பார்ப்பானை ஐயரெனடற காலமும் போச்சே ! பாடியிருக்கிறேன் கண்ணம்மா....’
              ‘ போச்சு! போச்சு! உன்னால் என் நிம்மதியெல்லாம் போய்விட்டது’ கண்ணம்மா அதை இடத்தில் உட்கார்ந்து மடிக்குள் தலையை புதைத்துகொண்டு மேனி குலுங்கினாள்.
              ‘ கண்ணம்மா.... என்ன செய்கிறாய்... எங்கே உன் முகத்தைக்காட்டு’ அவள் மடியிலிருந்து தலையை நிமிர்த்தினாள். அவளது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியிருந்தது. அவளது கன்னத்துளியை விரல்களால் துடைத்தான். ‘ அழாதடி கண்ணம்மா... அழாதே..... உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி.....’
              கண்ணம்மா சட்டென அழுகையை நிறுத்தினாள். முந்தாணையால் முகத்தைத் துடைத்துகொண்டான். இருவரும் சோலையைத் தாண்டி மரம் செடி கொடிகளின் பூக்களைக்கிள்ளி ஒருவர் மீது ஒருவர் விட்டெறிந்து கொண்டு நடந்தார்கள்.
              ‘ சுப்பையா...போதும்.... எனக்கு விடைகொடு. நான் விடைபெறுகிறேன்...’
              ‘ மாட்டேன்.....நீ என் கூடவே இருக்க வேண்டியவள்....’
              அவள் நின்று நிதானித்து சுப்பையாவை நேருக்கு நேர் பார்த்து முறைத்தாள். ‘ என்ன சுப்பையா விளையாடுகிறாயா.... நாளை உனக்கும் செல்லம்மாவிற்கு திருமணம் மறந்து விட்டாயா.....?’
              ‘ உன்னை மறக்க முடியவில்லையே கண்ணம்மா...’
              ‘ நீ என்னை மறந்துதான் ஆக வேண்டும்....’
              ‘  நான் ஏன் உன்னை மறக்க வேண்டும்....?’
              ‘ நீயோ பிராமணன். நானோ உங்கள் குலத்திற்கு தொண்டுழியம் செய்பவள். நான் உனக்கு காதலியாக இருக்கலாம். துணைவியாக இருக்க முடியாது’
              ‘ சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திர மேதுக்கடீ? ஆத்திரங் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திர முண்டோடீ? ’
              ‘ நான் ஒன்றும் சாத்திரம் பேசவில்லை. சாதிதர்மம் அப்படியாக இருக்கிறது என்றுதான் சொல்கிறேன்’
              ‘ சாதிகள் இல்லையடி பாப்பா என பாடியவன் நான்....’
              ‘அட பைத்தியக்காரா.....பாப்பாவிற்குத்தானே பாடியிருக்கிறாய்....தாத்தாகளுக்கு இல்லையே...’ என்றவாறு அவள் ஒரு பூச்சொரிந்த மரத்தின் தூணில் முகம் பதித்தாள்.
              ‘ கண்ணம்மா... நீ வாய்ச்சொல்லில் வீரரடீ....’ என்றவாறு அவன் அவளது முகத்தைத் திருப்பி  அவளது நிலா முகத்தைப் பார்த்தான். அவளது வேதத்திருவிழி தேன்சிட்டின் சிறகைப்போல அடித்துகொண்டிருந்தன. அவளது தேனிதழ் வறண்டு துடித்தன. அவளது நகை புதுரோஜா பூ, விழி இந்திர ரோஜாப் பூ, முகஞ்செந்தாமரைப் பூ ...
              ‘உன்னை நான் விடப்போவதில்லை....இப்படி வா. என் மடியில் உட்கார்....’
              ‘ நான் மாட்டேன் சுப்பையா.... மாட்டேன்....’
              ‘ அப்படியானால் நீ என்னை இத்தனை நாளும் காதல் செய்யவில்லை அப்படித்தானே....?’
              ‘ என் காதலுக்கு முன்னால் உன் காதல் மண்டியிட வேணுமடா....’
                     ‘ என்னை விடவும் நீ அதிகமாகக் காதலித்தாய் என்கிறாயா....?’
              ‘ பின்னே இல்லையா....?’
              ‘ எப்படி சொல்கிறாய்...!’
              ‘ நீ என்னை மட்டுமா காதலித்தாய்.....?’
              ‘ பிறகு....!’
              ‘ நீ கவிதையை காதலித்தவன். இந்திய சுதந்திரத்தைக் காதலித்தவன். பத்திரிக்கைகளைக் காதலித்தவன். எழுத்தைக் காதலித்தவன். அதோ....அங்கே ஓடுகிறதே வெள்ளை நிறத்திலொரு பூனை அதைக்கூட விட்டு வைக்காதவன். இத்தனையையும் காதலித்து மிச்சம் நேரமிருந்தால்தானே என்னை நீ காதலித்தாய்.... ஆனால் நான் என்ன அப்படியா....! எனக்கு சக நேரமும் உன் நினைப்புதான்!’
              சுப்பையா கண்ணம்மாவின் பேச்சை மெய்மறந்து ரசித்தான். ‘ அப்பப்பா.... ஒரு பல்லவியையே மூச்சு விடாமல் ஒப்பித்து விட்டாயே.... நல்லாப் பேசுகிறாயடீ கண்ணம்மா....’
              ‘ நீ எனக்கு எழுதி தரும் காதல் கவிதைகளைப்படித்து இதைக்கூட பேசாவிட்டால் என்னவாம்!’
              இருவரும் பேசிக்கொண்டே சன்னதியை ஒரு சுற்று சுற்றி வந்தார்கள். எப்பொழுதும் கண்ணம்மா முன்னே நடக்க சுப்பையா பின்னால் நடந்து வருவான். அன்றையத்தினம் சுப்பையாவை முன்னே நடக்க விட்டு அவள் பின்னால் நடந்தவளாக இருந்தாள்.
              ‘ சுப்பையா...நான் ஒன்று கேள்விப்பட்டேன் உண்மையா...?’
              ‘ சொல்லடி கண்ணம்மா....?’
              ‘ உன்னை இப்பொழுது யாரும் சுப்பையா என்று அழைப்பதில்லையாமே....?’
              ‘ நீ அப்படித்தானே என்னை அழைத்து வருகிறாய்....?’
              ‘ என்னை விடும்..மற்றவர்களைச் சொல்கிறேன்....’
              ‘ சுப்பையா என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்கிறார்களாம்....?’
              ‘ சுப்பிரமணியம் என்றும் பாரதி என்றும் அல்லவா  அழைக்கிறார்களாம்.’
              ‘ நீ என்னை என்றும் சுப்பையா என்றே அழை கண்ணம்மா....’
              ‘ நான் மாட்டேன்....’
              ‘ ஏன்....?’
              ‘ நான் உன்னை அப்படி அழைக்க நான் உன் இல்லத்தாள் செல்லம்மாளா என்ன...?’
              அவள் அப்படி சொன்னதும் சுப்பையாவின் முகம் சூரியக்கதிர் பட்டு உடையும் பனித்துளியைப் போல உடைந்தது. அவன் அவளை செல்லமாக அறையாக கையை ஓங்கினான். அவள் அவனிடமிருந்து தப்பித்து ஓடினாள். அவன் அவளை துரத்தினான். மான் மானைத் துரத்துவதைப்போலதான் இருவரும் சன்னதியைத் தாண்டி தெப்பக்குளத்தைத்தாண்டி அந்த சோலை வனத்திற்குள் ஓடினார்கள். அவள் அவனிடம் பிடிகொடுக்கவில்லை. காதலனிடம் பிடிபடாத ஆனந்தம் அவளுக்கு. அவளை வெற்றியடைய வைத்துவிட்ட திருப்தி அவனுக்கு. மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க இருவரும் ஓடி  கூப்பிடும் தூரத்தில் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு நின்றார்கள்.
              சுப்பையா கண்ணம்மாவை அழைத்தான் ‘ வெற்றிகொண்ட கையினாய் வா வா வா’
              கண்ணம்மா பதிலுக்கு அவனுடைய பாடலையே பதிலாகப் பாடினாள் ‘ வலிமையற்ற தோளினாய் போ போ போ’
              அவன் அவளைப்பார்த்து சிரித்தான். பதிலுக்கு அவளும் சிரித்தாள்.       .
                     ‘ நீ ஏன் என்னைத் துறத்துகிறாய்....?’ கேட்டாள் கண்ணம்மா.
              ‘ கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ....?’
              ‘அட...கண்ணில் தெரிகிறது வானம். அதற்காக வானம் உன்னிடம் வசப்படலாகுமோ...?’
              ‘கண்ணின் மணி போன்றவளே....கட்டியமுதே....கண்ணம்மா.....நீ என் தீராத விளையாட்டுப்பிள்ளை’
              ‘ இனி அந்த இடத்தில் செல்லம்மாள் என்கிறேன்’
              ‘ சகியே.... உன்னை என்னால் மறக்க முடியாது....’
              ‘ சுப்பையா.... மறக்க வேண்டாம். நினைக்காமல் இருக்கச் சொல்கிறேன்....’
              ‘ சுப்பையா கண்ணம்மாவின் கரத்தைப்பற்ற எத்தனித்தான்.  அவள் அவனிடமிருந்து விலகி விலகி தூரத்திற்குச் சென்றாள்.
              ‘ சுப்பையா.... நான் சொல்வதைக் கேள். இனி நாம் ஒருவரையொருவர் மறந்துவிடுவோம்...’
              ‘ கண்ணம்மா...என்னிடம் நீ. விளையாட்டுக் காட்டாதே....’
              ‘ நான் விளையாட்டுக் காட்டவில்லை. சுப்பையா.... நாளை முதல் நீ இன்னொருத்தியின் கணவன் என்பதை நினைவுபடுத்துகிறேன்’
              ‘ அதற்காக....’
              ‘ காதல் வேண்டாம் என்கிறேன்’
              ‘ காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல் தெரியும்தானே......?’
              ‘ கூடல், கூடல், கூடல் கூடிப்பின்னே குமரன் போயில் வாடல் வாடல் வாடல் இது நீ சொன்னதுதானே....’
                     இருவரும் ஒருவரையொருவர் நெருங்கிவந்தார்கள்.
              ‘ உன்னை நான் பார்த்துகொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது கண்ணம்மா.....’அவன் அவளது கையைப்பிடித்தான். அவள் மெல்ல விசும்பினாள்.
              ‘  நீ என்னை பார்த்துகொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதானே.... இங்கே வா....’ என்றவாறு அவனை அவள் சன்னதியின் படித்துறைக்கு அழைத்துச்சென்றாள்.
              ‘ இப்படி உட்கார் ’ என்றாள்.
              அவன் உட்கார்ந்தான்.
              அவனது முன்னே அவள் நின்றாள். ‘ என்னைப் பார்....’ என்றாள். அவன் அவளைப் பார்த்தான். பார்த்துகொண்டே இருந்தான்.
              ‘ இப்பொழுது உன் கண்களை இறுக மூடு’ என்றாள்.
              அவன் இறுக மூடினான்.
              ‘ என்னை உன் மனதிற்குள் ஓட விடு’
              ‘ ஆம்.... ஓட விடுகிறேன்...’ என்றான்..
              ‘ நான் தெரிகிறேனா....?’
              ‘ இம்....தெரிகிறாயடி கண்ணம்மா...’
              ‘ நல்லாத் தெரிகிறேனா.....?’
              ‘ ஆம்.... நன்றாகவேத் தெரிகிறாய்...’
              ‘ கண்களைத் திறக்காமல் என்னையே பார்த்துகொண்டிரு....’
              சுப்பையா கண்களை இறுக மூடி கண்ணம்மாவை உள்ளூர பூசித்தான். மனதிற்குள் பூரித்தான். அவளது நினைப்பில் ஆகாயத்தில் மிதந்தான். அவளால் நிரப்பப்பட்ட மனதால் அவன் நீண்ட நேரம் தன்னை மறந்திருந்தான்.
              ‘ கண்ணம்மா.... கண்ணம்மா......!’ மெல்ல அழைத்தான். அவளடமிருந்து ஓர் அரவமுமில்லை.
              கண்களைச் சட்டெனத் திறந்தான். அவன் எதிரே அவள் விட்டுச்சென்ற வெட்டவெளிதான் இருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தான். நாலாபுறமும் அவளைத் துலாவினான். கண்ணம்மாவை அப்பொழுதே பார்க்க வேண்டும் போலிருந்தது. கண்களை இறுக மூடினான். தன்னிலை மறந்து பாடினான்.
              ‘ நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
              நின்னைச் சரணடைந்தேன்!’                                                         -


யாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்

 யாதுமாகி நின்றேன் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு கவிதை இப்படியாக... இக்கவிதையை எழுதிய கவி இளவலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
      கோழிகள் மிதித்ததில்
      குஞ்சுகள் மடிந்தன.   
      ஆனால் இறந்தவை அனைத்துமே
      ‘கோழி’க் குஞ்சுகள்

      என்ன நண்பர்களே...புரியவில்லையா! கவிதையின் தலைப்பு ‘ பெண் சிசுக்கொலை’

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

பிரச்சாரப் பீரங்கி


  ட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தினைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கக்கூடிய கட்சியின் மாவட்டத் தலைவர் அவர்களே....
       முன்னிலை வகித்திருக்கக்கூடிய கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் அவர்களே....
     இக்கட்சிக் கூட்டத்தினை நெறிப்படுத்த கட்சியின் தலைமையிடத்திலிருந்து வந்திருக்கக்கூடிய மத்திய பொதுக்குழு உறுப்பினர் அவர்களே....
      நன்றி நல்க இருக்கிற கட்சியின் பொருளாளர் அவர்களே...
      கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களே....
    கட்சிக்காகவும் நம் தலைவருக்காகவும் தன் இன்னுயிரையும் கொடுக்க இருக்கிற கட்சித் தொண்டர்களே....அனைவருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்கிறவன் முறையில் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.
       நண்பர்களே.....
       இது அவசரக்கூட்டம். தலைவரின் உணர்ச்சிப்பூர்வமான பொதுக்கூட்ட உரைக்குப் பிறகு கூடியிருக்கிற கூட்டம். மிக முக்கியமானக் கூட்டம். நம்மை , நம் கட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டுச்செல்கிற கூட்டம்.
       நாம் நம் கட்சியை எவ்வாறு வளர்த்தெடுத்து வருகிறோம்....நம்மால் நம் கட்சி எவ்வாறு வளர்ந்து வருகிறது. கட்சியால் நாம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்று இல்லை! நாம், நம் கட்சியை வளர்த்தெடுத்த விதம், மாநில தலைமை , மத்திய தலைமை இடத்துடன் நாம் கொண்டிருக்கக்கூடிய நெருக்கம் வேறு எந்த மாவட்ட நிர்வாகிகளும் கொண்டிறாத ஒன்று என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது போதாது...! மேலும் நம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக உங்களை நான் தயார்ப்படுத்தவே இந்த இடத்தில்  நின்று கொண்டிருக்கிறேன். இப்படியொரு அவசர பொதுக்குழு கூட்டத்தினைக் கூட்டியிருக்கிறேன்.
       நண்பர்களே....
       நமது மாவட்டத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு நம் கட்சியின் பலம், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருந்தது. உங்களுக்கு ஒன்றும் தெரியாததில்லை. மாவட்ட செயற்குழு கூட்டினால் தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்கள் மூவரைத் தவிர வேறு யாரும் கூட்டத்திற்கு அவ்வளவு எளிதில் வந்துவிட மாட்டார்கள். வந்தாலும் கட்சியோடு ஐக்கியமாகிவிட மாட்டார்கள். அப்படியே ஐக்கியமானாலும் கட்சி கொடுக்கும் வேலைகளை மனமுகந்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
       இதை நான், நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. உள்ளபடியே கட்சியின் நிலை அந்தளவுளவே இருந்தது. ஆனால் இன்றைக்கு நம் கட்சியின் பலம் அவ்வாறாகவா இருக்கிறது என்பதை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.
       ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் நம்மை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறோம். அவ்விரு கட்சிகளின் வெற்றித் தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்திருக்கிறோம். நம்மை பிறர் கூட்டணிக்கு அழைக்கும் அளவிற்கு தவர்க்க முடியாத கட்சியாக உயர்ந்து நிற்கிறோம். நாம் இத்தகைய பலம் பெற யார் காரணம்.....?. நமது கட்சியின் தலைவர் அவர்கள்தான். அவரால்தான் நான் கட்சியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள்.
       அதுமட்டுமா.... நடைபெற இருக்கிற உள்ளாட்சித் தேர்தலிலும், அதை அடுத்து வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் நாம் ஒவ்வொருவரும் வேட்பாளராகத் தேர்வு பெற இருக்கிறோம். வெற்றிப்பெற இருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருக்கிறோம். அமைச்சராக இருக்கிறோம்.
       இதை நான், நீங்கள் கைக்கொட்டி ஆராவாரத்துடன் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நம் பலம், நம் கட்சியின் பலம் இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைப்பதற்காகச் சொல்கிறேன். நமது கிராமத்தை , நமது தொகுதியினை, நமது மாநிலத்தை, நமது தேசத்தை ஆளும் தகுதி நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை நினைவூட்டுவதற்காச் சொல்கிறேன்.
       நண்பர்களே....
       இந்த நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நாம் தொடர்ந்து பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். உலகளாவிய கட்சிகள், சர்வதேச தலைவர்கள் நம் கட்சியையும் கட்சித் தலைவரையும் எவ்வாறு புகந்து பேசுகிறார்கள். அதே நேரம் நம் தேசத்தில் நம் கட்சியையும் , நம் கட்சித் தலைவர்களையும் எவ்வாறு இகழ்ந்து பேசுகிறார்கள் என்பதை பத்திரிக்கை செய்தியின் ஊடாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் நாமும், நம் கட்சியும்தான் காரணமா.....?
        நம் தலைவர் நேற்றைக்கு முந்தையத் தினம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சி பெருக்கோடு உரையாற்றினார். அவரது உரை பல்வேறு பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. நம் தலைவரின் முகத்தில் இதற்கு முன் இப்படியொரு உணர்ச்சியைப் பார்த்திருக்க முடியாது. அத்தனைக் கோபம், அத்தனை உணர்ச்சி . அவரது உரையை , அவரது வேண்டுகோளினை என்ன விலைக்கொடுத்தேனும் நிறைவேற்றிக் கொடுத்தாக வேண்டிய நிலையில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
       நண்பர்களே....
       நாம், நம் தலைவரின் உரையை அறியாதவர்கள் இல்லை. அவரது வேண்டுகோளினை புரிந்துக்கொள்ளாதவர்கள் இல்லை. தலைவர் என்ன எதிர்ப்பார்க்கிறார், எப்படி எதிர்ப்பார்க்கிறார்....என்ன அளவில் எதிர்ப்பார்க்கிறார்....என்பதைப்புரிந்துகொண்டு நாம் கட்சியை வளர்த்தெடுத்து வந்திருக்கிறோம். அவரைக் கொண்டாடிக் கொண்டாடியே கட்சியை பலப்படுத்தியிருக்கிறோம்.
       ஐந்து வருடத்திற்கு முன்பு தலைவர் அதுநாள் வரைக்குமில்லாமல் ஒரு அறிக்கையை விட்டிருந்தார். அவர் என்னச் சொல்லிருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கும்... ‘ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...’ என ஒரு சுற்றறிக்கை விட்டிருந்தார். ‘ இந்த வருடம் எனது பிறந்தநாளை கட்சித் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் ’ என அறிக்கை விட்டிருந்தார். நாம் என்னச் செய்தோம்.... அதுநாள் வரைக்கும் அவரது பிறந்த நாளினைக் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த நாம் அந்த வருடம் அவருடைய பிறந்த நாளினை நமது மாவட்டம் குலுங்கும் அளவிற்கு  ஜாம் ஜாம்மெனக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
       அவரது வயதினைக் குறிக்கும் விதமாக கிலோ கேக் ஆடர் கொடுத்து கட்சி அலுவலகத்தில் வைத்து ஒரு நாள் முழுமைக்கும் வெட்டி வருகிறவர்கள் , போகிறவர்களுக்கு ஊட்டிக்கொண்டிருந்தோம் இல்லையா! அதை நம்மால் மறக்க முடியுமா....? கட்சிப்பத்திரிக்கை, வெகுஜனப்பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அந்த பிறந்தநாள் கொண்டாட்டம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. என்னை உள்ளிட்ட பலரையும் முதற்பக்கத்தில் பிரசுரத்திருந்தது. அதை நாம் இன்னும் மறக்கவில்லை. நமது கொண்டாட்டத்தைப் பார்த்த தலைவர் நம்மை கட்சித் தலைமையிடத்திற்கு அழைத்திருந்தார். மாவட்ட எல்லையைத் தாண்டி பயணம் மேற்கொள்ளாத நாம் முதன்முறையாக விமானத்தில் கட்சித் தலைமையிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரது பிறந்த நாளினை மிகப்பெரிய அளவில் கொண்டாடியத்திற்கு கிடைத்த பரிசு என்ன....? எனக்கு மாவட்ட செயலாளர் பதவி.  அண்ணனுக்கு தலைவர் பதவி. இவருக்கு பொருளாளர் பதவி.
       இந்தப் பதவிகள் நமக்கு எப்படிக் கிடைத்தது. தலைவரின் பிறந்த நாளினை மிக எழுச்சியோடும், பகட்டோடும், ஆடம்பரத்தோடும் கொண்டியதால் கிடைத்தது. என் பிறந்த நாளை கட்சித் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்கிற  அவரது வேண்டுகோள் , சுற்றறிக்கையை கண்டுக்கொள்ளாமல் அவரது மனத்திற்குள் இருந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகக் கொண்டாடியதால் நமக்கு இத்தகையப் பதவிகள் கிடைத்திருக்கிறது . இதை யாராலும் மறுக்க முடியுமா....?’
       நண்பர்களே....
       இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். கட்சித் தலைவர் நம்முடைய மாவட்டத்திற்கு வருகைத் தந்தார். மாநில மற்றும் மாவட்டப் பொருப்பாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை விட்டிருந்தார். என்ன விட்டிருந்தார். ‘ என்னை எந்த அளவிற்கு எளிமையாக வரவேற்க முடியுமோ...அந்த அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுங்கள் ’ என விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் விருப்பம் என்ன அதுவா...? தலைவரின் ஆசைகளை நாம் அறியாதவர்களா....? நாம் என்னச் செய்தோம்....? ஒரு நாள் அவசரமாக மாவட்ட செயற்குழுக்கூட்டத்தினைக் கூட்டி ஒரு முடிவு எடுத்தோம். இதே இடத்தில் நின்று கொண்டு நான் தலைவர் அனுப்பியச் சுற்றறிக்கையை வாசித்தேன். தலைவர் வருகையை எப்படியெல்லாம்  கொண்டாடலாமென உங்களிடம் கருத்துக்கேட்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்து சொல்லிருந்திருந்தீர்கள். உங்கள் கருத்துகள் அத்தனையையும் உள்வாங்கி அவர் விட்டிருந்த சுற்றறிக்கையை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவரது உள்மனம் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது வருகையை அமர்களப்படுத்தினோம்...
       மாவட்ட முழுவதும் ப்ளெக்ஸ் வைத்தோம். கேரளத்து செண்டை மேளம்  என்ன...வாண வேடிக்கை என்ன.... பறை என்ன...., கரகம் என்ன...., புரவி ஆட்டம் என்ன....காசை நாம் காசாகவாப் பார்த்தோம். தண்ணீயாக அல்லவா செலவு செய்தோம். விமான நிலையத்திலிருந்து கட்சி அலுவலகம் வரைக்கும் சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தோம். ஆயிரம் பெண்களை இருபுறமும் நிறுத்தி ஆலாத்தி எடுக்க வைத்தோம். யானையால் மாலை அணிவித்தோம். நான் கூட ஒரு பண மாலை அணிவித்தேன். நம் தலைவர் ஒரு படி மேலே போய் ஆயிரம் ரூபாயினாலான மாலையை அணிவித்தார்.
       அவர் கேட்டுக்கொண்டது எளிமையான வரவேற்பு. நாம் செய்தது...? மாவட்டம் குலுங்கும் அளவிலானக் கொண்டாட்டம். இதனால் என்ன பயன் கிடைத்தது....? கட்சி வளர்ந்தது. தலைவர் வளர்ந்தார். நாம் வளர்ந்தோம். நமக்கு பல்வேறு ஆதாயங்கள் கிடைத்தன.
       நடந்து முடிந்த தேர்தலில் கட்சி செலவுக்கான தேர்தல் நிதி நம் கைக்கு வந்தது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்....யாருக்கு சீட் கொடுக்கலாம்...யார்க்கு எந்தத் தொகுதியைக் கொடுக்கலாம்....எங்கெங்கே...யாரையெல்லாம் வைத்து கட்சிக்கூட்டம் நடத்தலாம்...பிரச்சாரத்திற்கு யாரையெல்லாம் அழைக்கலாம்....என்கிற முடிவு எடுக்கிற வாய்ப்பு நம் கைக்கு வந்திருந்தது. இல்லையா....!
       அதுமட்டுமா....? வருகிற உட்கட்சித் தேர்தலில் மாநில பொறுப்பாளர்கள் தேர்வு பட்டியலில் நான் உட்பட பலரும் இருப்பதற்கானக் காரணம் அந்தக் கொண்டாட்டம் தானே...மற்ற மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம் நம் எதிர்ப்பார்பையும் மீறி வளர்ந்து உயர்ந்து நிற்கிறோம்.....
       நம் தலைவர் நாம் வளர்வதற்கு இன்னொரு வாய்ப்பினைத் தந்திருக்கிறார். நேற்றைக்கு  முந்தைய தினம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சிப் பொங்க உரையாற்றியிருக்கிறார். கோபம் கொப்பளிக்க, கண்களில் நெருப்புத் தெறிக்க, நாசி விடைக்க வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். அவரது பேச்சில் கெஞ்சல் இருந்ததைக் கவனித்திருப்பீர்கள். அவரது பேச்சு வழக்கமானப் பேச்சாக இருந்திருக்க வில்லை. தேசத்தின் நலனை விடவும் கட்சியின் நலன் அதிகமிருந்தது.
       தலைவர் விடும் ஒவ்வொரு அறிக்கையையும் உள்வாங்கிக்கொண்டு வழக்கம் போல நாம் எப்படி அவரது ஆசையை நிறைவேற்றிக் கொடுப்போமோ அதைப்போலவே இந்த வேண்டுகோளையும் நாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அவரது ஆசையை நாம் மெய்யாக வேண்டும்.
       நண்பர்களே...
       நான் பேசி முடித்ததன் பிறக கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ஒவ்வொருவராக எழுந்து எப்படியெல்லாம் தலைவரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்பதை அவரவர் கோணத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். யாரும், யாருக்காகவும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை.        கருத்து தெரிவிக்க இயலாது என்றோ, முடியாது என்றோ தட்டிக்கழிக்க வேண்டியதில்லை. அது நமக்கும் நாம் சார்ந்திருக்க கட்சிக்கும் உகந்ததாக இருக்காது. நமக்கும் நம் வளர்ச்சிக்கும் அது உதவாது
       நமக்கு நம் தேசம் முக்கியம். அதை விட நம் கட்சி முக்கியம். கட்சியை விடவும் நமக்கு நம் பதவி முக்கியம். இவை எல்லாவரையும் விடவும் நமக்கு நாம் முக்கியம். நமது வரலாறு முக்கியம்....
       தலைவர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் என்னப் பேசினார் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்...நீங்கள் பத்திரிக்கைகளில் படித்ததுதான்....தொலைக்காட்சிகளில் பார்த்ததுதான்.....அவர் கட்சித் தொண்டர்களைப் பார்த்துக்கேட்டுக்கொண்டார். கட்சி நிர்வாகிகளை, தேச நலவிரும்பிகளை, அபிமானிகளைப் பார்த்துக்கேட்டுக்கொண்டார். ஒரு முறை அல்ல. ஒரு முறைக்கு மூன்று முறை. கும்பிட்டு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.‘ தலித்களைக் கொல்லாதீர்கள்...கொல்லாதீர்கள்... கொல்லாதீர்கள்.....’
       தலைவரது வேண்டுகோளினை நிறைவேற்ற கட்சி அபிமானிகளாகிய நீங்கள் உங்களால் முடிந்த கருத்துகளை நல்க வேண்டுமாய் கூறி வாய்ப்பிற்கு நன்றி கூறி இடம் அமர்கிறேன். நன்றி வணக்கம்!