செவ்வாய், 19 டிசம்பர், 2017

கட்டுரை


                முன்னத்தி ஏருக்கோர் அஞ்சலி
-----------------------------------------------------------------------------------------
பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தேறிய சம்பவம் இது. நான், நூலகத்திற்கு தொடர்ந்து செல்லத் தொடங்கிய காலம் அது. நூலகத்தில் ஆனந்த விகடன் இதழ் இருந்தது. அதில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதையொன்று பிரசுரமாகியிருந்தது. அடுத்து கல்கி இதழைப்பிரித்தேன். அதிலும் அவரது கதை இருந்தது. அடுத்ததாக என் கவனம் குமுதத்தின் பால் சென்றது. அதில் பிரசுரமாகியிருந்த கதையும் அவருடைய கதையாகவே இருந்தது.
       முந்தைய வாரம் குமுதம் இதழில் புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை வாசித்திருந்தேன். அதற்கும் இந்த வாரம் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதை மூன்று இதழ்களில் பிரசுரமாகியிருந்ததற்கும் நான் விபரீதமாக யோசித்தேன். இக்கதைகள் மூன்றும் மேலாண்மை பொன்னுசாமியின் நினைவுச்சிறுகதைகள் என்று.
       மூன்று கதைகளை வாசித்ததும் மேலாண்மை பொன்னுசாமியின் குடும்பத்தார்களிடம் பேசலாமென்று அழைப்பு விடுத்தேன். அவருடைய அலைப்பேசி எண்ணை நூலகத்திலிருந்து கிடைக்கப்பெற்றேன். எதிர்க்குரல் மெல்லியக் குரலாக ‘ நான் மேலாண்மை பொன்னுச்சாமி பேசுறேன்.....’ என்பதாக ஒலித்தது.
       அய்யோ! இவர் இறந்து விட்டார் என்றல்லவா நினைத்துவிட்டேன் என்பதாக அதிர்ச்சிக்கு உள்ளான நான் அவரிடம் சற்றும் யோசிக்காமல் கேட்டுவைத்துவிட்டேன்..‘ நீங்க இன்னும் உயிரோடுதான் இருக்கீங்களா...?’ என்று. அவரிடமிருந்து பெரும் மூச்சு மட்டுமே வந்திருந்தது. தடித்த உச்சரிப்பில் கேட்டார் ‘ நீங்க யார்...?’
       ‘ நான் புதுக்கோட்டை சிறுகதை வாசகன். நீங்க மேலாண்மை பொன்னுச்சாமி தானே...?’
       ‘ ஆமாம்...’
       ‘ இந்த வாரம் ஆனந்த விகடன், குமுதம், கல்கியில் கதைகள் வந்திருக்கிறதே அது உங்கள் கதை தானே...?’
       ‘ ஆமாம்...!’
       ‘ மன்னிக்க வேணும். கடந்த வாரம் குமுதத்தில் புதுமைப்பித்தன் நினைவுச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதைத் தொடர்ந்து  இந்த வாரம் உங்கள் கதை வந்ததும் நினைவுச்சிறுகதை என்று நினைத்து விட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்...’ என்றேன்.
       அவர் ஒரு எதிர்வினையாற்றலுமில்லாமல் அலைபேசியை அணைத்து வைத்தார். அவரிடம் அப்படியாகக் கேட்டக் குற்றவுணர்வு அவரது படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கவும், அவரிடம் உரையாடவும் செய்தது.
       தமிழகத்திலிருந்து வெளியான அத்தனை இதழ்களிலும் அவரது கதைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்திருக்கிறது. காலச்சுவடு என்கிற ஒரு இதழைத் தவிர. தானொரு கம்யூனிஸ்ட் எழுத்தாளரென அறிவித்துக்கொண்ட ஒருவரின் எழுத்தை தமிழகத்திலிருந்து வெளிவரும் அத்தனை இதழ்களும் கொண்டாடியது என்றால் அது மேலாண்மை பொன்னுசாமியின் எழுத்தை மட்டும்தான். அவரை  விடவும் வலுவானக் கருக்களை எடுத்துகொண்டு கதையாக்கிய எழுத்தாளர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருந்தாலும் போட்டிக் கதைகளின் வழியே பட்டித் தொட்டியெங்கும் தன்னை கவனிக்கும் படியாகச் செய்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி.       அவர் கலந்து கொண்டு பரிசு பெறாத போட்டிகளே இல்லை என்று சொல்லலாம். அதைத் தாண்டியும் அவரது கதைகள் வாசகர்களிடம் ஆணிவேர் விடுமளவிற்கு அவரது எழுத்தில் மண்ணும், ஈரமும் இருந்தது. மானாவாரிப்பூ, சிபிகள், மானடப்பிரவாகம்....என தொகுப்புகளை வாசித்து அவரிடம் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன்.
       அவரது சிறுகதைகளில் எனக்கு பிடித்தக் கதை ரோஜாக்னி, அரும்பு, இரண்டையும் சொல்லலாம். ரோஜாக்னி இறந்து போன மாட்டை அறுத்து தின்னும் மக்களைப் பற்றியக் கதை. இக்கதையில் மாடு வெட்டப்படும் காட்சியும், அக்கறியைச் சமைத்து தின்னும் காட்சியும் கண் முன்னை விரிந்து நிற்கும். அவரது கதையிலிருந்து மனதை விட்டு நீங்காத கதாப்பாத்திரம் என்றால் அவள் ‘செல்லி’.
       அரும்பு என்கிற கதையில் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்குப்போகும் ஒரு சிறுமிதான் செல்லி. சிறுமிகள் இனி வேலைக்கு வரக்கூடாது என்றும் அதிகாரிகள் இப்பொழுதெல்லாம் தொழிற்சாலைகளைக் கண்காணிக்கிறார்கள் என்றும் தொழிற்சாலை நிர்வாகம் சொல்லிவிட அவரது குடும்பம் தவியாய் தவிக்கும். செல்லி வேலைக்குச் சென்றால் மட்டும்தான் குடும்பம் பசியாற முடியும். கதையின் கடைசிப் பத்தி இவ்வாறு பேசும்.
       ‘ என்ன செல்லி , வேலைக்கு வரலியா?’
       ‘ வாரேன்’ உயிரில்லாமல் முனங்கினாள்.
       ‘ தாவணி?’
       ‘ மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும்’ சத்தமில்லாத தெருவில் , சத்தமில்லாமல் நடந்தனர்.
       இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்சின் ஹாரன்.
       ஒரு பிரேதத்தைப்போல....அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது, அந்த அரும்பு.

       இக்கதையை வாசிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கவே செய்யும். தாவணி என்பது பூப்பெய்ததற்கு பின் அணியக் கூடிய ஆடை என்று. ஆனால் குடும்பத்தின் வறுமை பூப்படைவதற்கு முன்பாக அவ்வாடையை அணிவித்திருக்கும்.
       மேலாண்மை பொன்னுச்சாமி முதலில் ஜெயகாந்தன் கதைகளைத் தொடர்ந்து வாசித்து வந்ததாகவும் அவரைப்போலவே முதலில் கதைகள் எழுதியதாகவும் பிறகு அப்படியான நடைப்போக்கு தனக்கான அடையாளத்தைத் தராது என்று உணர்ந்த நான் இன்னும் சற்று எளிய நடைக்கு மாற்றிக்கொண்டதை அவர்  பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
       மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் பாமர மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் எழுத்தாளர்கள் மத்தியில் சில விமர்சனங்களைச் சந்திக்கவே செய்தன. அவர் ஒரு முறை கி.ரா வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் எழுத்தாளர் அம்பையைச் சந்திக்க நேரிட்டது. அம்பை சொன்னாராம் ‘ மேலாண்மை பொன்னுச்சாமி என்ன நீங்கள் கதை எழுதுகிறீர்கள். உங்கள் கதை எனக்கு பிடிப்பதே இல்லை. உங்கள் கதைகளில் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருக்கிறது. ஆனால் உங்கக் கதையைத்தான் பத்தரிக்கைகள் கொண்டாடுகின்றன. எனக்கு அதில் உடன்பாடே இல்லை...’ என்று அலுத்துக்கொண்ட அவர் கொஞ்சத் தூரம் சென்று திரும்பி வந்தவர் ‘ ஆனாலும் பொன்னுச்சாமி என் அம்மாவிற்கு பிடிப்பது என்னவோ உங்கக்கதைதான்...’ என்றார். ஒரு சிறுகதை எழுத்தாளர் பார்வையில் ஒரு விதமாகவும், வாசகர்கள் மத்தியில் வேறொரு விதமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு எழுத்தாளர் வாசகரின் மனநிலையைக் கருத்தில் கொண்டே கதையாக்கம் செய்ய வேண்டும் என்றார்.
       அவர் சிறுகதைக் குறித்து அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்றுண்டு . ‘ சிறுகதை, வடிவத்தால் அடையாளப்பட்டு , உள்ளடக்கத்து நேர்மையால் அர்த்தப்பட்டு அழகாகும். கவிதையில்லாத - நாவலல்லாத - கட்டுரையல்லாத  வடிவத்தில் சிறுகதைக்குரிய வடிவத்தில் இருக்க வேண்டும்’.  சின்னதாக இருப்பதால் அல்ல சிறுகதை. சிறுகதை, ஐம்பத்து மூன்று பக்கம் கொண்ட ஆறாவது வார்டு என்ற ஆண்டன் செகாவ் எழுதிய படைப்பும் சிறுகதைதான். இரண்டரைப் பக்கம் மட்டுமே கொண்ட புதுமைப்பித்தனின் பொன்னகரமும் சிறுகதைதான் என்பார். அவருடன்  உரையாடுகையில் அடிக்கடி ஆறு கதைகளைச் சொல்லி என்னை அக்கதைகளை வாசிக்கத் தூண்டுவார். அக்கதைகள் ஆண்டன் செகாவ் எழுதிய ஆறாவது வார்டு, பச்சோந்தி, ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேஷம், புதுமைப்பித்தனின் பொன்னகரம், கு.அழகிரிசாமியின் திரிபுரம், கந்தர்வனின் துண்டு போன்றக் கதைகள். அவரது தொகுப்புகள் பற்றிக்கூறுகையில், அவரது முதல் தொகுப்பு மானுடம் வெல்லும். அதைப்பற்றி இதுவரை யாரும் பாராட்டிச் சொன்னதில்லை. அது ஒரு தோல்வியான தொகுப்பாகவே அமைந்திருந்தது. புதுக்கோட்டை மீரா பதிப்பகம் வெளியிட்ட ‘ சிபிகள்’ தொகுப்புதான் தமிழிலக்கியத்தில் பரிசீலிக்கப்பட்டது.  
       ஒரு முறை அவரது கதையொன்று கருக்கல் விடியும் இதழிலும் அதேக் கதை உயிர் எழுத்து இதழிலும் பிரசுரமாகியிருந்தது. ஒரே கதை இரண்டு இதழ்களில் பிரசுரமானச் செய்தியைச் சொல்லி அவருடன் தொடர்புகொண்டேன். அதை அவர் குற்றவுணர்வாகக் கருதினார். என் இத்தனை ஆண்டுகால இலக்கியப் பயணத்தில் இப்படியான நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை எனச் சொல்லி பெரிதும் வருந்தினார். அதற்காக வருத்தக்கடிதம் உயிர்எழுத்து இதழுக்கு எழுதப் போவதாக சொன்னார். அடுத்த மாத இதழில் அக்கடிதம் உயிர் எழுத்து இதழில் வெளியானது. அதற்குப்பிறகு மேலாண்மை பொன்னுச்சாமியின் கதை உயிர் எழுத்து இதழில் பிரசுரமாகவில்லை என்றே நினைக்கிறேன்.
       ‘ ஓர் எழுத்தாளருக்கு கற்பு மிக முக்கியம். தன் கணவன் வெறொரு பெண்ணை ஏறெடுத்துப்பார்க்கக் கூடாது என்கிற எதிர்ப்பார்ப்பு மனைவிக்கு இருப்பதைப்போல பத்திரிகையாசிரியர்களும் இருக்கவே செய்யும். அதை என்ன விலைக்கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும். ஒரு முறை அக்கற்பு நெறி தவறினால் அதன் பிறகு நம் கதைகளைப் பிரசுரம் செய்ய பத்திரிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவார்கள்’ என்றார்.
       அவரை நான் கடைசி வரைக்கும் நேரில் சந்தித்ததில்லை. மன்னார்குடியில் கடைசியாக அவருக்கு பெரிய அளவில் பாராட்டு விழா நடந்தேறியது. அதுவே அவருக்கு எடுக்கப்பட்ட கடைசி விழா என்று நினைக்கிறேன். ஒரு வாசகன் - எழுத்தாளன் போன்ற எனக்கும் அவருக்குமான அலைபேசி தொடர்பு பிறகு தந்தைக்கும் - பிள்ளைக்குமான நெருக்கமாக மலர்ந்தது. அந்த உறவுதான் எனது மொத்தக்கதைகளையும் தொகுத்து அவரது வாசிப்பிற்கு அனுப்பி வைக்கத் தூண்டியது. வெறும் வாசிப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்ட அத்தொகுப்பிற்கு அவர் அன்பில் ஓர் அணிந்துரை தந்து என்னை வியப்பில் ஆழ்த்தியதுடன், எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மழைக்குப் பிறகான பொழுது’ பரவலாக கவனிக்கும் படியாகவும் செய்தது. நான் தொடர்ந்து எழுதுவதற்கு உத்வேகமாக இருப்பவரும் அவர்தான். என் எழுத்தின் பிதா என்று அவரை நான் சொல்லிக்கொள்கிறேன். அவரது எழுத்து அவரின் மீதான நினைவுகளை விடவும் கனமானது. உண்மையானது. ஈரமிக்கது.
                                                                  

சனி, 2 டிசம்பர், 2017

2016 -2017 நூல்கள்
நான்கு பிரதிகள்
கடைசி தேதி - 31.12.2017

பரிசுகள் 3000,2000,1000
முகவரி

பேராசிரியர் இராம.குருநாதன்
4/28 பழைய பங்காரு குடியிருப்பு 2 ஆம் தெரு
கலைஞர் நகர் மேற்கு
சென்னை - 79

நன்றி - அமுதசுரபி இதழ்

வெள்ளி, 10 நவம்பர், 2017

சிறுகதை பாகிஸ்தானி பிரியாணிக் கடை


டெல்லி அசோக் மந்தர் பகுதியில் அக்கட்டிடம்  இருந்தது.  அப்பகுதியின்  பாழடைந்தக் கட்டிடம் அது ஒன்றுதான். அக்கட்டிடம் பார்க்க மசூதியைப் போலிருந்தது. ஆனால் அது மசூதி அல்ல. மசூதியைப் போன்ற கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட பழைய காலத்து உணவகம் அது.  கட்டிடத்தில் இல்லாத இரண்டு ஸ்தூபிகள்  அது வழிப்பாட்டுத் தளம் இல்லாத வேறு ஒன்று எனச் சொல்லிக்கொண்டிருந்தது. அதன் மேற்கூரையும் திமில் போன்ற குடைவும் பார்க்க மசூதியைப் போலிருந்தது. முகலாயக் கலை அம்சத்துடன் கட்டப்பட்டிருந்த அக்கட்டிடத்தின் பெரும்பகுதி சாயம் இழந்துபோய் மேற்பகுதியின் ஒரு பகுதி  இடிந்து வெளிப்புறமாக விழுந்துவிட்டிருந்தது.

சுதந்திர இந்தியக் காலத்தில் அப்பகுதியின் மிகப்பெரிய உணவகமாக அது இருந்தது. தென் இந்திய, வட இந்திய, மேற்கத்திய என மூன்று வகை உணவுகளும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்  கிடைக்குமளவிற்கு பிரசித்திப்பெற்ற உணவகம் அது. இன்றைக்கு அக்கட்டிடத்தைச் சுற்றிலும் அடைசலாக புல் பூண்டு புதர்கள். மேல் ,கீழ் தளத்தில் ஆல , அரச கன்றுகள் முளைத்திருந்தன.  மேற்கூரையில் விட்டிருந்த ஆணி வேர்  பூமி வரைக்குமாக வளர்ந்து விட்டிருந்தது. மேற்தளத்தில் வளர்ந்திருந்த மரங்களுக்கிடையில் கட்டிடத்தைப் பார்க்கையில்  வேர்களுக்கிடையில் தொங்கும் கட்டிடம் போல அக்கட்டிடம் இருந்தது.
 
அன்றைக்கு அப்பகுதியின் பிரமாண்டம் அதுதான். தங்கும் விடுதியும் கூட. ஆனால் இன்றைக்கு அக்கட்டிடத்தை விடவும் பெரிய கட்டிடங்கள் அதைச் சுற்றி முளைத்துவிட்டிருந்தன. அத்தனையும் வானளாவிய கட்டிடங்கள். அவ்வுயரத்திற்கு முன்னால் அக்கட்டிடமும் அதன் குவிந்து வளைந்த கோபுரமும்  சிறியதாகி விட்டிருந்தது.

டெல்லியில் எந்த மூலையில் கலவரம் நடந்தாலும் தவறாது தாக்குதலுக்கு உள்ளாகும் கட்டிடமாக அக்கட்டிடம் இருந்தது.  எத்தனைப் பேர் சேர்ந்து தாக்கினாலும்  அதன் கம்பீரமும் கட்டமைப்பும் சற்றும் குன்றாமல் இருந்தது அக்கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கே வியப்பு அளிக்கும்படியாக இருந்தது. அதன் தலையில்  திமிலை நிமிர்த்திக்கொண்டு அது நிற்கும் கம்பீரமே தனி அழகுதான்.

அக்கட்டிடம் அடிக்கடி  தாக்குதலுக்கு உள்ளானதன் பிறகு அக்கட்டிடத்தின் வழியே கிடைக்கும் வருமானம் ஒரு கட்டத்தில்  அதை சீர்செய்வதற்கென்று  மட்டுமே  பயன்பட்டிருந்தது.  இதற்கு மேலும் இதை நிர்வகிக்க முடியாது என்று உணர்ந்த அக்கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்தின் முன்பு பெரிய பூட்டினைத் தொங்கவிட்டு வேறொரு நகரத்தை நோக்கி இடம் பெயரலானார். அவரால் பூட்டப்பட்ட பூட்டு பல வருடங்கள் திறக்கப்படாமலேயே இருந்தது.

அக்கட்டிடத்தின் உரிமையாளர் உருது மொழி  பேசக்கூடியவராக இருந்தார். பெரிய செல்வந்தர். இதுமாதிரியான உணவகம் அவரிடம் நான்கைந்து நகரங்களில் இருந்தன. இதைத் தவிரவும் அவர்  ஒன்றிரண்டு தொழில்கள் செய்யக்கூடியவராக இருந்தார். ஒரு தொழிலில் ஏற்பட்டிருந்த நட்டத்தை ஈடு கட்ட அவர் அக்கட்டிடத்தை அவருக்கு நெருக்கமான உறவினரிடம்  கேட்ட விலைக்கு  விற்றுவிட்டிருந்தார்.

அக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய உறவினர் அதை அடியோடு தகர்த்தெறிந்துவிட்டு இந்திய - முகலாயக் கட்டிடக் கலை அம்சத்துடன் கூடிய  ஒரு சொகுசு உணவகத்தை கட்டிவிடலாமென  நினைத்தார். அதை அவர் வாங்கிய நாட்களில் இடித்திருந்தால் இடித்திருந்திருக்கலாம். அவர் ஆண்டுகள் பல கடந்து இடிக்கலாமென இறங்குகையில் அக்கட்டிடத்தைச் சுற்றிலும் நிறைய கட்டிடங்கள் முளைத்துவிட்டிருந்தன. கட்டிடங்களை விடவும் அக்கட்டிடத்திற்கு வெளியிலிருந்த பிள்ளையார் கோயிலும் இடது புறமிருந்த அனுமார் கோயிலும் என் மீது சிறு துரும்பேனும் படாமல் எப்படி இடிக்கிறீர்கள் எனப் பார்த்துவிடுகிறேன்....என்றபடி இரண்டும் பதட்டத்தைக் கொடுத்தபடி  இருந்தன.

அக்கட்டிடத்தை இடித்துவிட உரிமையாளர் படாதப்பாடுபட்டார். தினமும் இடிமான நிறுவனங்கள் வந்து பார்த்து செல்வதாக இருந்தன. கட்டுமான பொறியாளர்கள் அக்கட்டிடத்தை நான்கைந்து சுற்று வந்து பார்த்து சென்றிருந்தார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.  அடுத்தடுத்தக் கட்டிடங்களுக்கு ஒரு பாதகமும் இல்லாமல் அதை தகர்த்தெறிவதற்கான ஒரு வழியும் இருப்பதாக இல்லை. அருகாமை கட்டிடங்களை விடவும் பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்தது  பிள்ளையார் , அனுமார் இரு கோயில்களும்தான்.

இடிக்கப்பட வேண்டியக் கட்டிடமாக இருந்த அக்கட்டிடத்தின் உள்ளரங்கம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே கிரிக்கெட போட்டி நடத்தி முடிக்கும் அளவிற்கு பரந்து விரிந்த பரப்பளவைக் கொண்டதாக இருந்தது. யானையை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டதைப்போல அதன் தூண்கள். மலையைக் குடைந்ததைப்போல மேற்கூரைகள். கூரையின் ஓவியங்களும் ,சித்திரங்களும் அதன் வேலைப்பாடுகளும் பார்க்கிறவர்களை திகைக்கவைக்கும்படியாக இருந்தன. அதன்   நுண் கலை வடிப்புகளில்  நூலாம் படைகள் போர்த்தி  போர்வைப் போல படிந்துபோயிருந்தது.

அனுமார் கோயிலின் உயரம் அக்கட்டிட உயரத்திற்கு இருந்தது. கோயிலின் கோபுரத்தில் புதுப்பித்தல் பணி நடந்துகொண்டிருந்தது. அதற்காக நான்குபுறமும் சாரம் கட்டப்பட்டிருந்தது. அச்சாரம் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்தது.

 அக்கட்டிடத்திற்கு வெளியே அதன் முகப்பிலிருந்த பிள்ளையார் மிகச்சிறிய கோயிலாக இருந்தது.அதன் உயரம் இரண்டு ஆள் மட்டம் அளவிற்கே இருந்தது.  ஆஸ்பெட்டாஸ் கூரையினலான அக்கோயிலின் கூரை நான்கு இரும்புக் கம்பி தூண்களில் பந்தல் போல் பரந்து மழை நீர் மட்டத்திற்காக ஒரு பக்கமாக ஒடுங்கியிருந்தது. 

கட்டிடம் இடிக்கப்பட்டால் நிச்சயம் பிள்ளையார் கோயில் சேதாரம் அடையவே செய்யும். இரு கோயில்களுக்கும் ஒரு சேதாரமும் இல்லாமல் இடிக்க வாய்ப்பில்லாத அக்கட்டிடத்தை தான் வைத்திருப்பது வீண் என்று உணர்ந்த அவர் அதை ஒரு வெளிநாட்டு  நண்பரின் உதவியுடன் ஒரு வணிகரிடம் விற்றுவிட்டிருந்தார்.
அதை வாங்கியிருந்த வணிகர் அதை இடித்தால் மட்டுமே  வாங்கிய விலைக்கேனும் விற்கவோ அல்லது அதிலிருந்து வேறொரு வியாபாரத்தைத் தொடங்கவோ முடியும்  என கருதிய அவர் என்ன விலைக்கொடுத்தேனும் அதை இடித்து தரைமட்டமாக்கிவிட வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இறங்கினார்.

முதற்கட்டமாக அவர் இரு கோயில் நிர்வாகத்துடனும்  பேசினார். கோயில் நிர்வாகத்தினர் என்னச் சொல்கிறோமெனச் சொல்லாமல் பதில் சொல்லிவிட்டிருந்தார்கள். 'நீங்கள் உங்கள் கட்டிடத்தை இடிக்கிறீர்கள். அதை ஏன் எங்களிடம் பகிர்ந்துகொள்கிறீர்கள். நீங்கள் இடிக்கும் கட்டிடத்தில் ஒரு தூசி எங்கள் கோயிலின் மீது பட்டால் கோயிலின் புனிதம் கெட்டுப்போய்விடும். அப்படியொன்று நடந்தால்  என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும்..' என்பதை அவர்கள்  மிரட்டல் விடுப்பதைப் போல சொல்லிவிட்டிருந்தார்கள். இதைக் கேட்டதும் கட்டிட உரிமையாளர்  ஒரு கணம் பின்வாங்கவேச் செய்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து அவர் திரும்பவும் பேச்சு வார்த்தையில் இறங்கினார்.  சேதாரம் நடந்தால் இழப்பீடு  தருவதாகப் பேசிப்பார்த்தார். மசூதி போல கட்டப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் ஒரு கல் எங்கள் ஆலயத்தின் மீது விழவேக் கூடாது என  கோயில் நிர்வாகிகள் உறுதியாக சொல்லி பேச்சுவார்த்தையை முறித்துகொண்டார்கள்.

என்ன நடந்தாலும் சரி அதை இடித்தாக வேண்டும் என்பதில் கண்கொத்திப் பாம்பாக இருந்த அவர் இடிப்பு இயந்திரங்களைக் கொண்டு வந்து  அக்கட்டிடத்திற்கு முன்பு நிறுத்தினார். இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை  கண்டவர்கள் அந்த இடத்தைச் சூழத் தொடங்கினார்கள். அந்த இடம் சற்று நேரத்திற்குள் பதட்டத்திற்கு உள்ளானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று இயந்திரக்காரர்கள் இயந்திரத்தை எடுத்துகொண்டு தலைத் தெறிக்க ஓட்டமெடுத்தார்கள்.

அக்கட்டிடத்திலிருந்த ஒரே குறை போதுமான நுழைவுவாயில் இல்லாமைதான். அதன்  நுழைவுவாயில் ஒரு குதிரை நுழையும் அளவிற்கே இருந்தது. அந்நுழைவு வாயிலுக்குள் எப்படி நுழைந்தாலும் நுழைய முடியாததாக அவ்வாசல் இருந்தது .  அவ்வாசல் இடத்தில்தான் பிள்ளையார் கோயில் இருந்தது.

ஒரு நாள் அவர் டெல்லியில் வெளியாகும் அனைத்து தினசரிகளிலும் ஒரு பக்கம் அளவிற்கு  விளம்பரம் கொடுத்தார். அருகாமை கட்டிடத்திற்கு ஒரு சேதாரமும் இல்லாமல்  இடித்து தரைமட்டமாக்கும் நிறுவனத்திற்கு பரிசும் இரட்டிப்பு கூலியும் தரப்படும் என அறிவிப்பு செய்தார். அவர் விளம்பரம் கொடுத்த நாட்கொண்டு ஒவ்வொரு நிறுவனமும்  வந்து கட்டிடத்தை எட்டிப்பார்க்கவே செய்தார்களே தவிர யாரும் அதன் மீது கை வைக்கவில்லை. ஒரு வருடக்காலம் அப்படியாகவேச் சென்றது. அக்கட்டிடத்தை விலைக்கொடுத்து வாங்கியிருந்தவரின் வயிறு  புளி கரைக்கத்தொடங்கியது. பல கோடிகள் அதற்குள் விழுந்து ஒரு செரிமானமுமில்லாமல் இருக்கும் அக்கட்டிடத்தை  அவர் வேறொருவரிடம் விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை.

நான்காவதாக அக்கட்டிடத்தை விலைக்கு  வாங்கியவர் வெளிநாட்டுக்காரராக இருந்தார். அவர் இந்தியர்களின் நுகர்வோர் கலாச்சாரத்தை தெரிந்து வைத்தவராக இருந்தார். அவர் அக்கட்டிடத்தை விலைக்கு வாங்கியதும் அதை சீரமைக்கும் வேலையில் இறங்கினார். கட்டிடத்தின் மீது முளைத்திருந்த புல், புதர் செடிகளை வேரோடுக் களைந்தார். ஒட்டடையடித்தார். வெடிப்புக்கண்ட இடத்தில் மேற்ப்பூச்சு பூசினார். தினமும் இருபது பேர் இரவு பகல் பாராமல் கட்டிடத்தைச் சீரமைக்கும் வேலையில் இறங்கியிருந்தார்கள். இரண்டு மூன்று முறை கட்டிடத்திற்கு வெள்ளையடித்தார்கள்.  அதன் மீது வண்ணப்பசை பூசினார்கள்.

பழைய பாழடைந்தக் கட்டிடம்  ஒரு வாரக் காலத்திற்குள் புதுக்கட்டிடமானது. போகிறவர்கள்  வருகிறவர்களை கட்டிடம் சுண்டி இழுத்து நிற்க வைத்து தான் எப்படி இருக்கேன் எனக் கேட்டுக்கொண்டது.

அவ்வழியில் போகிறவர்கள் வருகிறவர்கள அக்கட்டிட உரிமையாளரைப் பார்ப்பதைப் போலவே  புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை வேடிக்கையோடு பார்த்தார்கள்.

இன்றோ நாளையோ  தானாக இடிந்து விழுந்துவிடப்போகிற கட்டிடத்திற்கு இவர்  வண்ணமடிப்பதைப் பார்....என   கிசுகிசுத்து கொண்டார்கள்.  அந்த வெளிநாடடுக்காரர் யார் பேச்சையும் காதுக்கொடுத்து கேட்பவராக இல்லை. அவர் அவருடையப் போக்கில் கட்டிடத்தைச் சீரமைக்கும் வேலையில் இறங்கி முழுவதுமாக முடித்துவிட்டிருந்தார்

அடுத்ததாக அவருடைய கவனம் கட்டிடம் திறப்பு விழாவை நோக்கித் திரும்பியது. இக்கடைக்குறித்து விளம்பரம் செய்தார். கடை திறக்கப்போகும் ஒரு வாரத்திற்கு முன்பு கடைக்கு வெளியே பெரிய எழுத்துகளால் எழுத்தப்பட்ட கடையின் பெயர் பலகையை  உயரத்தில் நிறுத்தினார். அதில் மின் விளக்குகள் ஒளிர விட்டார்.  கடையின் பெயரும் தடித்த எழுத்தும் போகிறவர் வருகிறவர்களை ஒரு கணம் நிறுத்தி கவனிக்க வைத்தது.

அக்கட்டிடம் திறப்பு விழாவிற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றது. கட்டிடம் என்னை யாரும் என்ன செய்திட முடியும் எனக் கேட்பதைப்போல நின்றுகொண்டிருந்தது. 

கட்டிடம் திறப்பு விழா பற்றிய விளம்பரங்கள் டெல்லி தினசரிகளில்  தொடர்ந்து வந்தபடியே இருந்தன. விளம்பரத்தைக் கண்டிருந்த பலரும் கும்பல் கும்பலாக வந்து கடையைப் பார்த்து செல்வதாக இருந்தார்கள். சிலர் புகைப்படம் எடுத்துகொண்டார்கள். 

கடை திறக்கப்படவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து வெளியாகும்  அனைத்து  தினசரிகளிலும் அக்கட்டிடம் பற்றியச் செய்தி தவறாது இடம் பிடித்திருந்தது. அச்செய்தி இவ்வாறு  இருந்தது.

' புதிதாகத் திறக்கப்படவிருந்த பாகிஸ்தானி பிரியாணிக்கடை  நாசக்கார கும்பலால்  ஒரே இரவில் இடித்து தரை மட்டம்...' 
                                      - பிரசுரம் - பேசும் புதிய சக்தி நவம்பர் - 2017
 

செவ்வாய், 17 அக்டோபர், 2017

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் அளவில் இருக்கிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்த நாவல் அது. இலக்கிய ரீதியில் நான் யாருக்காவது பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது க.நா.சு.வுக்குத்தான். ‘ இலக்கிய விசாரம்’ என்ற நூலில் க.நா.சு ‘எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தை என் இலக்கியச் செயல்பாடுகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் முன்னுரையில் வண்ணநிலவன். ரெயினீஸ் ஐயர் தெரு நாவலை வாசிக்கையில் அதன் உருவமும், நடையும் அப்படியாகத்தான் தோன்றுகிறது.


ரெயினீஸ் ஐயர் தெருவின் ஆரம்பம் திருவனந்தபுரம் ரோட்டிலிருந்து பிரிகிறது. இருபுறமும் வீடுகள் கொண்ட மொத்தமே ஆறு வீடுகள். அவ்வீடுகள் அவர்களின் வாழ்க்கைச்சூழல் , கொண்டாட்டம், அமைதி, இருப்பு, வாழ்க்கைக்கூறுகள் , அன்றாட பொழுது போக்குகள் இவற்றைச் சொல்லிச்செல்வதுதான் இந்நாவல். முதல்வீடு - இரண்டாவது வீடு - மூன்றாவது வீடு - திரும்பவும் முதல் வீடு - நான்காவது வீடு - இன்றொரு நாள் முதல் வீடு - தெரு -இப்படியாக வடிவமைப்பைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. முதல் வீடு டாரதி , இரண்டாவது வீடு இருதயத்து டீச்சர், மூன்றாவது வீடு அற்புத மேரி , நான்காவது வீடு ஆசீர்வாதம் பிள்ளையின் வீடு, இதைக்கடந்து தெரு இவற்றைப்பற்றி பேசும் இந்நாவல் தாயிடமிருந்து பிரிந்து தனித்து மேயும் ஒரு பெட்டை கோழிக்குஞ்சில் தொடங்கி கோழிக்குஞ்சில் முடிகிறது. மழைக்கு பிடித்தமான அத்தெருவில் இன்பம், துன்பம், துக்கம், கொண்டாட்டம் இவற்றைக் கடந்து போகிறது. அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்துநிற்கும் டாரதி பெரியம்மா வீட்டில் வசிக்கிறாள். தாய் இல்லாமல் தனித்து வாடும் அவளது நாட்கடத்தலை தாயிடமிருந்து பிறந்து இரைதேடும் கோழிக்குஞ்சுடன் ஒப்பீடுவதும் ரேயஜனீஸ் ஐயரின் கல்லறை, கல்லறையிலிருந்து வெளிவரும் பாம்பு ஒன்று ரோஸம்மாள் என்கிற அபூர்வமான பெண் செத்துப்போவதுமான கதையாக்கம் ஓர் அலையுமில்லாமல் சலனமற்று போகும் கதையில் குறுக்கலையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வீட்டின் கதையை சொல்லி தெருவிற்கு அழைத்து வரும் இக்கதைப்பின்னல் முதலில் வாசிக்கையில் குழப்பம் வரத்தான் செய்யும். காரணம் தொடர்ச்சியின்மை. கதை மீண்டும் முதல் வீட்டிற்கும், தெருவிற்கும் வருகையில்தான் கதையோட்டம் புதிய உத்தி என்று தெரிய வருகிறது.
வண்ணநிலவன் முன்னுரையில் சொல்லியிருப்பதைப்போல ஓரெ ஒரு சந்தர்ப்பத்தில் தவிர , நாவலில் எந்தக் கதாபாத்திரங்களுக்கிடையிலும் , நேரடியான உரையாடல்கள் இல்லை. ஆனால் இக்கதையை வாசித்ததும் யாரிடமேனும் உரையாடத் தோன்றுவதில் ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் பேசும் நாவலாகிறது

நர்மதா பதிப்பகம் .

ஆப்பிள் கிழவி

நூல் விமர்சனம் - ஆப்பிள் கிழவி
நவீனம் கலந்த மனச்சுனை - ஆப்பிள் கிழவி
சந்தக் கடை மாதிரி ஆகிவிட்டது இலக்கிய உலகம் என்பதாகத் தொடங்குகிறது இந்நூலின் ஆசிரியர் உரை. அவர் அடுத்து சொல்லியிருப்பதைப்போல இங்கே சப்தங்கள் அதிகம் உண்டு. ஆனால் சரக்கு குறைந்துவிடவில்லை. அதற்கு அவருடைய ஆப்பிள் கிழவி சிறுகதைத் தொகுப்பே சாட்சி.

புது உத்தி, மொழி, நடையில் எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது இன்றைய சிறுகதைகள். அப்படியான நடை மொழியில் எழுதப்பட்டிருக்கும் தொகுப்புதான் ஆப்பிள் கிழவி. இந்த இடத்தில் இந்நூலின் ஆசிரியர் எம். ஆர்.சி. திருமுருகன் பாராட்டப்பட வேண்டியவர். நூலினை அவர் யாருக்கும் காணிக்கை , சமர்ப்பணம் செய்து அவர்களை நீங்கா நினைவில் ஆழ்த்திவிடவில்லை. மற்றொன்று அணிந்துரை எழுத யாருக்கும் அவர் நூலைக் கொடுத்து காத்திருக்கவோ, இதை நீங்கள் படித்தேயாகவேண்டும் என்கிற அன்புக்கட்டளையில் ஆழ்த்தவோ இல்லை. சமீப திரைப்படங்கள் எழுத்து ஓடுகின்ற பொழுதே கதையும் தொடங்கிவிடுவதைப்போலதான் புத்தகத்தைத் திறந்தால் கதை நம்மை அழைத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது.

தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள். அத்தனையும் பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகள். இரண்டு கதைகள் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளும் கூட. ஒற்றைக்காது என்கிற முதல் கதை இதற்கு மு்ன்பு ஒரு இதழில் வாசித்தக் கதை. இயல்பான நடையில் , ஒரு திருடன், திருடப்போய் மாட்டிக்கொள்ளும் கதி, அதனால் அவனின் ஒற்றைக்காது அறுபடுவது, அதனால் அவனுக்கு ஏற்படும் குற்ற உணர்வு, தற்கொலை செய்துவிடலாம் என அவனுக்குள் அவன் எடுக்கும் முடிவு, ஒரு பாம்பும், குரங்கும் சண்டையிடுவது, பாம்பு வெற்றிப்பெற்றலாம் தற்கொலை செய்துகொள்ளலாம், குரங்கு வெற்றிப்பெற்றால் வீடு திரும்பலாம்,...என்பதாக ஒரு மலையின் உச்சியிலிருந்து பார்ப்பது, பிறகு அவன் நான் ஏன் வாழக்கூடாது...என வீடு திரும்புவது, யாரேனும் கேட்டால் ஒற்றைக் காது அறுப்பட்ட செய்தியை உரக்கச் சொல்வது என்கிற ஆயாசத்துடன் கூடியக் கதை. இக்கதையால் இன்றைய களவாணி தேசத்தின் முகத்தை கலைடாஸ்கோப்பில் பார்த்துவிடலாம். ‘ திருடுவதும் ஒரு கலையே...’ மனோகரா வசனம் நாட்டின் கீதாசாரமாகிவிட்ட நிலையில் அவன் திருடியதற்காக வருந்தச் செய்வது தேசத்தின் முதுகெலும்பை நமிரச் செய்கிறது. இக்கதையை வாசிக்கையில் எனக்கு இமையம் எழுதிய ஒரு சிறுகதை நினைவிற்கு வந்தது.

வயிற்றுப்பசிக்காக திருடப்போகும் ஒருவன் திருட்டுக் கறுப்புசாமியிடம் உத்தரவு கேட்டு உட்கார்ந்திருப்பான், அவன் 2ஜீ, 3ஜீ, போர்பஸ், ,,..இதில் நடந்த திருட்டுகளைச் சொல்லி உத்தரவு கேட்பவன் நான் திருடுவது பசிக்கு . எனக்கொரு உத்தரவு கொடு...என்பதாக பல்லி கீச்சிடுதலுக்காகக் காத்திருக்கும் கதை ஒற்றைக்காதுடன் பொறுத்திப்பார்க்க வேண்டிய ஒன்று.

பாலு பையன் என்கிற சிறுகதை வேறொரு வடிவிலானது. இக்கதையில் ஓரிடம் .‘ யார் செய்தப் பாவங்களோ நம் தலையில் பெண் சவளப்பிள்ளையாய் வந்துப் பிறந்து விழுந்துவிட்டது. இந்தப் பாவத்தைச் செய்து வேறு ஒரு பாவமா? மகள் இறந்தால் ஒரு கன்னிப்பெண் குலதெய்வமாய் மாறிவிடுவாள்....’ என்கிற இடம் பெண்ணை இருப்பு, இறப்பு என்கிற இரண்டு கோணத்தில் பார்க்கும் வலி. இது ஒன்றும் கற்பனையானதில்லை. கடைசியில் சவளப்பிள்ளையை அக்கா மகன் பாலு பையன் ஏற்றுக்கொள்வதும், சவளப்பிள்ளை மனை ஏறுவதும் சுபம்.

ஆப்பிள் கிழவி நாவலாக எழுதியிருக்க வேண்டிய சரித்திரமும், கிராமியமும் புனைவும் கொண்ட ஒரு குறியீட்டுக் கதை. ஆப்பிள் கிழவி நாகமலையின் அடிவாரத்தில் நீர்சினையாக இருப்பதும், அவள் சிலந்தி, கருவண்டுடன் வாழ்ந்து வருவதுமான கதையோட்டம் ஒரு பகுதி. மற்றொரு பகுதியில் ஒரு சிறுவன் அம்மாயி வீட்டிற்கு போவதுமான பயணம். இதற்கிடையில் சோமபுரி அரண்மனை, சமஸ்தானம், மாறவன், ஒரே மகன் சசிதரன், தாய் வள்ளியம்மை, மகள் பார்கவி , சண்முகப்பண்டாரம் இவற்றுடன் ஆப்பிள் கிழவியையும் விடுமுறைக்காக அம்மாயி வீட்டிற்குச் செல்லும் சிறுவனும் பொருந்துவதுதான் கதை. ஒரு சரித்திரக் கதை, ஒரு உண்மைக்கதை இரண்டும் கதையின் முடிவில் கைக்கோர்பது கதைக்கும் தொகுப்பிற்கும் கனம் சேர்க்கிறது. ஒரு சில பத்திகளே வந்து சென்றாலும் பார்கவி மனதில் பதிந்து விடுகிறாள். சண்முகப்பண்டாரம் மாயாஜாலம் செய்யும் பேர்வழியாக காட்டுகையில் தெரிந்துவிடுகிறது காமப்பேர் வழி என்று.

ஆப்பிள் கிழவி , அவள் வாழும் நாகமலை நீர்ச்சுனை அதைச்சூழ்ந்த காட்சி வர்ணனைகளால் இக்கதை மற்றக் கதைகளிலிருந்து வேறுபடுகிறது. கிழக்கு வானம் சிவந்திருப்பதை இறைவன் வெற்றிலை எச்சிலைத் துப்பிய சிவப்பு என்றும் இன்னொரு இடத்தில் மேற்கு வானச் சிவப்பை வெட்கச் சிவப்பு என்றும் வர்ணித்தது கதையின் ஓட்டத்தில் அழகு சேர்க்கிறது. இத்தனையும் அம்மாயி வீட்டிற்கு செல்லும் சிறுவனின் மாமா என்னவானான்..? என்பதைச் சுற்றிய கதைப்பின்னல் என்பதால் கதை கற்பனை சுருளிலிருந்து தாண்டி நிகழ்காலப் புனைவிற்கு வந்து நிற்கிறது.

இதே போன்று தைலக்கிணறு மற்றொரு புனைவு குறியீட்டு சிறுகதை. அருள்வாக்கு அங்கதச் சுவை கொண்ட சாமியார், ஜோதிடம், பில்லி, சூனியம் இவற்றை கேலியும், சில எச்சரிப்புகளையும் செய்யும் கதை..

இப்படியாக ஆப்பிள் கதை சிறுகதைத் தொகுப்பு நவீனமும் கிராமியமும், புனைவும், மனச்சாட்சியுடன் வாழக்கூடிய மனிதனைப் பேசும் கதையாக வந்திருக்கிறது. நல்ல வரவு. ஆப்பிள் கிழவி சிலந்து வலையின் வழியே சிறுகதை உலகத்திற்குள் கரையேறுகிறாள். கை நீட்டி அழைக்கும் பொறுப்பு தமிழ் சிறுகதை வாசகர்களுக்கு இருக்கிறது.


ஞாயிறு, 15 அக்டோபர், 2017

யாரோ ஒருத்தியின் கடிதம் (குறுநாவல் ) - ஸ்டெபான் ஸ்வெய்க் @தமிழில் - ராஜ்ஜா

புகழ்பெற்ற நாவலாசிரியர் ரா...வெளியூர் சென்று திரும்பி வருகையில் வீட்டில் குவிந்து கிடக்கும் கடிதத்தில் ஒன்றைப் பிரித்து வாசிக்கிறார். அக்கடிதம் தன் பெயரைக் குறிப்பிடாத ஒரு பெண்ணின் கடிதமாக இருக்கிறது.

மகன் இறந்துகிடக்க அவனைச் சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அந்த வெளிச்சத்தில் எழுதி அனுப்பிய கடிதமாக அக்கடிதம் இருக்கிறது. சின்ன வயதிலிருந்து உங்களை நான் காதலித்து வந்ததாகவும் உங்களைத் தொட , பார்க்க , ரசிக்க , சிரிக்க இருந்ததாகவும் நீங்கள் வசிக்கும் அதே வீட்டில்தான் நான் என் தாயுடன் வசித்து வந்ததாகவும் பிறகு என் தாய் வேறொரு திருமணம் செய்துகொண்டதும் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் நீள்கிறது கதை.

ஒரு நாள் எழுத்தாளரை நேரில் சந்திக்கிறாள். தனிமையில் இருக்க  அவளை அவன் அழைக்கிறான். அவனுக்கு அவளைக் கொடுக்கிறாள். அந்த குழந்தைதான் இறந்தக் குழந்தை என்பதை வாசிக்கையில் கதை திருப்பம் கொள்கிறது.

என்னை நீங்கள் சந்திக்க வர வேண்டாம். ஒரு வேளை வந்தால் நான் இறந்தே இருப்பேன். உங்கள் பிறந்த நாள் அன்று எப்பொழுதும் நான் வெள்ளை ரோஜா அனுப்பி வைப்பேன். இனி என்னால் அனுப்பி வைக்க முடியாது. நீங்களே பூஞ்சாடியில் ஒரு வெள்ளை ரோஜாவை வைத்து என் நினைவூட்டிக்கொள்ளுங்கள்   என்பதாக கடைசி பத்தியை நோக்கி நகரும் கடிதம் உங்களை நான் காதலிக்கிறேன்...மனதார நேசிக்கிறேன்...என் அன்பே நான் போகிறேன்...
என்பதோடு கதை முடிகிறது.


இக்குறுநாவலையொட்டி ஆசிரியரைக்குறித்தும் சொல்லியாக வேண்டும். யூதர். ஜெர்மனியிலிருந்து விரட்டப்பட்டவர் அமெரிக்கா , பிரேசில் என அடைக்கலம் தேடி கடைசியில் தற்கொலைக்கு உள்ளானவர். சிக்மண்ட் ப்ராய்டின் சீடர்.

Letter from an unwoman.

தமிழினி பதிப்பகம். 
 

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

விக்கிரமன் நினைவு தினக் கட்டுரைப் போட்டி

தலைப்புகள்
1. புதுக்கவிதையில் மானுடச் சிந்தனைகள்

2. உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு

3. இன்றைய இளைய தலைமுறையினரின் சிந்தனையும் செயல்பாடும்

4.ஆன்மிக மறுமலர்ச்சியில் மகான்கள்

பனிரெண்டு கட்டுரைகள் தேர்வு. மொத்தப்பரிசு 12000

கடைசி தேதி 30.09.2017

முகவரி
இலக்கியப் பீடம்
எண் 3 ஜெய்சங்கர் தெரு
மேற்கு மேம்பாலம்
சென்னை 33
ilakiyapeedam@gmail.com

சனி, 16 செப்டம்பர், 2017

எல்லா சொல்லும் பொய் குறித்தனவே


நிற வேறுபாடு தலைத்தூக்கியிருந்தக் காலத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவோடு ஒரு கருப்பின மாணவி மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்தாள். ஒரு கருப்பின பெண் தமக்கு நிகராக மருத்துவம் படிப்பதா…என வெகுண்டெழுந்த ஆங்கிலேய மருத்துவர்கள் அவளை அழைத்து அவளுக்கொரு தேர்வு வைத்தார்கள். அத்தேர்வு இப்படியாக இருந்தது. ‘ கை  நடுக்கமில்லாமல் உனக்கு நீயே இந்த ஊசி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும்’ அவளுக்கு முன்பு ஊசி, சிரஞ்ச், மருந்துக்குப்பி வைக்கப்பட்டிருந்தன. மருந்துக்குப்பியை எடுத்துப்பார்த்தாள் அவள். அக்குப்பியில் இருப்பது விஷமாக இருந்தது. விஷம் எனத் தெரிந்தும் மருத்துவராகும் கனவில் விஷத்தை சிரஞ்ச்சில் எடுத்து கை நடுக்கமுமில்லாமல் அவளது உடம்பில் செலுத்திக்கொண்டு மருத்துவராகிவிட்ட மகிழ்ச்சியில் வேரோடு சாய்ந்தாள்.
நீக்ரோ என்கிற சொல் தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய பொழுது மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு கருப்பினப் பெண்ணிற்கு ஏற்பட்ட கோர நிகழ்வு இது. அவளது மரணத்தை  உலகப் பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதின. ‘அவளது கனவு மருத்துவராக வேண்டும் என்பதுதான்.  மருத்துவராக வாழ்வதில் அல்ல…’


மருத்துவர் ஆகுதல் - மருத்துவராக வாழ்த்தல் இரண்டுக்கும் இடையில் ஆறுக்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அதில் ஒரு வித்தியாசம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அனிதாவிற்கும் இடையிலான வித்தியாசம்.  இரண்டாவது டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கும் அனிதாவிற்கும் இடைப்பட்ட வித்தியாசம். அடுத்து டாக்டர் தமிழிசை சௌந்தராஜனுக்கும் அனிதாவிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது.
சட்டப் பேரவையில் அவசரச் சட்டம் இயற்றி வந்தால் தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தரப்படும் என்கிற ஆசை வார்த்தையை வார்த்தார் நம் ஊர்க்காரரான மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொய் சொன்ன வாய்க்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. நம் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லி அனுப்பிவைத்ததும் மருத்துவராகிவிட்ட கனவில் மூழ்கத் தொடங்கினார் அனிதா.
சட்ட பேரவையின் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இனி ஒரு நொடியேனும் காத்திருப்பதில் பயனில்லை என்ற உணர்ந்த அனிதா சுப்ரீம் கோர்ட் கதவுகளைத் தட்டத் தொடங்கினாள். இதற்கிடையில் தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரானப் போராட்டம் ஆங்காங்கே வெடித்துகொண்டிருந்தது. பிரச்சனை கோர்ட் வரைக்கும் சென்றதால் மராட்டிய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் எழுதிய ஒரு நாடகமான ‘அமைதி! கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது’ ரீதியில் நம் மக்கள் கோர்ட் சமிக்ஞையை எதிர்ப்பார்த்து ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.
உச்ச நீதிமன்றத்தை அனிதா பெரிதாக நம்பினாள். அப்படியாக அவள் நம்பக்காரணம் நீதி மன்றத்தின் நீதி தேவதையும் அது கையில் பிடித்திருக்கும் தராசும்தான். நீதி தேவதை நீதி தேவர்களால் வடிக்கப்பட்டது. நீதி தேவதை பார்வையில் குருடாக இருந்தாலும் அதன் காதுகள் கூர்மையானவை. எதையும் கூர்ந்துக் கேட்கும் தேவதை தன் ஏக்கக்குரலை காதுக்கொடுத்து கேட்கத்தான் போகிறது. அதன் வழியே தன் கோரிக்கை வெல்லத்தான் போகிறது என பகல் கனவு கண்டுக்கொண்டிருந்தாள். நீதி தேவதை என்ன செய்வாள் பாவம்! அவளும் பெண் தானே! நீட் தேர்விற்கு எதிராக வறிந்துக்கட்டிக்கொண்டு வாதாடியவர்கள் வாய்ச்சொல்லில் வீரராகிப்போனார்கள். அனிதா என்ன செய்வாள்! தாய் இல்லாத பிள்ளை. நான் கூடாதக் கனவொன்றைக் கண்டிருக்கிறேனென தற்கொலை செய்துகொண்டாள்.


அனிதா தரப்பிலிருக்கும் ஒரு குறை அவள் மருத்துவராகக்  கனவு கண்டதுதான். ஆனால் அதே நேரம் அவளைக் கொன்றதிலும் கொல்லப்பட்டவளைத் திரும்பத் திரும்ப கொலை செய்ததிலும் மருத்துவர்களின் பங்கு பெரும்பங்காற்றியிருக்கிறது. அனிதா செய்துகொண்டது தற்கொலை. இப்படியான ஒரு முடிவை அவள் எடுத்திருக்க வேண்டியதில்லை. இத்தற்கொலையை அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்பதற்காகப் பார்க்கிறார்கள்.  அவள் எடுத்திருந்த மொத்த மதிப்பெண், மருத்துவ படிப்பிற்குரிய கட் ஆப் மதிப்பெண் இரண்டும் அவளுக்கான மருத்துவ படிப்பை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் அவளது தற்கொலை என்பது தனக்கு மருத்துவ வாய்ப்பு கிடைக்கவில்லை  என்பதற்கானது அல்ல. தமிழ்நாட்டில் நீட் தேர்வு என்கிற ஒன்று கூடவே கூடாது என்பதற்கானது.


அனிதாவின் தற்கொலையில் மர்மம் இருக்கிறது. அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மனு நீட்டியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. யாரால் அனிதாவிற்கு நீதி கிடைத்திருக்க வேண்டுமோ அவரிடம் அவளது மரணத்திற்கான விசாரணை மனு போய்ச்சேர்ந்திருப்பது இவ்வாண்டின் மிகக்கொடுமையான கொடூரம். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. விசாரித்தால் தனக்கு மருத்துவ சீட்டு கிடைக்குமா என்பதே அனிதாவின் கவலை. அனிதாவிற்கு கிடைக்கவிட்டாலும் அனிதா போல கவிதா, புனிதா,….யாரேனும் ஒருவருக்கு கிடைத்தாலும் பரவாயில்லைதான்!
நீட் தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவம் படித்து  டாக்டராகிய கிருஷ்ணசாமி, தான் மட்டும் மருத்துவம் பயின்றது போதாதென்று தன் மகளையும் மருத்துவராக துடித்தார். அவரது மகள்  இன்றைய அனிதாவை விடவும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் எப்படியேனும் மருத்துவ இடம் பெற்றுவிட முணைப்பில்  அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மூலமாக மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற செய்தியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி போட்டுடைக்க தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அவருடைய சுயநல அரசியல் நடுசந்திக்கு வந்து நிற்கிறது.


அனிதா தற்கொலை சந்தேகத்திற்கு உட்பட்டது என்றார் அவர். அவரது இக்கருத்தை புறம் தள்ள வேண்டியதில்லை. சந்தேகத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே இருக்கலாம். தமிழகம் ஒன்றும் அத்தனை புனிதமான ஒன்று இல்லை. நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணமே மர்மமாக இருக்கையில் அனிதா தற்கொலை வெறும் தற்கொலைதான் என நம்ப வேண்டியதில்லைதான்.  அத்தற்கொலைக்கு அவர் கற்பிக்கும் காரண - காரியம்தான் ஆணாதிக்க உலகத்தை  சீழ் வடிய வைக்கிறது. அனிதா இளவயதுக்காரர். அவரை டெல்லி வரைக்கும் அழைத்துசென்றது யார், அவரை எங்கே தங்க வைத்தார்கள்….? அவருடன் யார் துணைக்கு தங்கியிருந்தார்கள்,.. என்பதாக  நீளும் அவருடைய சந்தேகக் கேள்விகள் அனிதாவின் தற்கொலையை திசைத்திருப்பும் வேலையை மட்டும் செய்யவில்லை. ஒரு வேளை நாம் , நம் சகோதரி, மகள், தாயை அழைத்துகொண்டு ஆண் மருத்துவர்களிடம் மருத்துவச்சிகிச்சை எடுத்துக்கொள்ள செல்கையில் மருத்துவர்களின் கற்பு நெறியை ஜெராக்ஸ் எடுத்து பார்த்துக்கொள்ள தூண்டியிருக்கிறது.


அவர் எதையோ சொல்லி அதை முழுமையாகச் சொல்லி முடிக்க முடியாமல் பாதியோடு இடையில் நிறுத்தியிருக்கிறார். அவரது அறிக்கையிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள  முடிந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி மொழிதலின் படி சொல்வதாக இருந்தால் இளவயது ஒரு பெண் நீதிப்பிச்சைக்கேட்டு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்றிருக்கக்கூடாது. ஓர் இளம்பெண்ணை ( அனிதாவை ) ஓர் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர் உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுத்திருக்க முடியும்  என்றால் அதே வயதுடைய இளம் பெண்ணுக்கு ஓர் ஆண் மருத்துவரால் மனம் நோகும்படியாக உளவியல் சித்தரவதை செய்யவும் முடியும். அப்படித்தானே !
அடுத்து அவருடைய விளக்கம் இவ்வாறு இருந்திருக்கிறது. அனிதா அப்படியாக தற்கொலை செய்திருக்க வேண்டியதில்லை. மருத்துவம் மட்டுமே வாழ்க்கையா என்ன..? சரிதான். அனிதா பாவம். அவள் வெறும் புத்தகப் புழுவாகவே இருந்துவிட்டு போயிருக்கிறாள்.  அனிதா டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு கணம் ஆழ்ந்து கவனித்திருக்க வேண்டும்.
தலித் வாக்குகளைப் பெற்று சட்டமன்றத்திற்குள் தனித்துவமாக நுழைந்த டாக்டர் கிருஷ்ணசாமி (இப்போதைக்கு அவர் தலித் அல்ல) தமிழக பல்வேறு  துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு  இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அதற்கான வெள்ளை அறிக்கை வேண்டுமென உரக்கப்பேசி தாழ்த்தப்பட்ட மக்களிடம் மதிப்பு மரியாதையைக் கூட்டிக்கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி , அடுத்த தேர்தலில் சாதி ஓட்டுகளை நம்பி தோல்வியைச் சந்தித்ததும் தலித் அரசியல் நீரோட்டத்திலிருந்து நீந்தி கரையேயில்லாத கரையில் ஏறி நின்று உரத்தக்குரல்களைக் கொடுத்துகொண்டிருக்கிறார். நாங்கள் தலித் அல்ல. மாட்டுக்கறி  சாப்பிடுவது உடம்பிற்கு கேடு. நீட் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, நீட் தேர்வில் இந்த வருடம் வெற்றிப்பெற முடியவில்லையென்றால் அடுத்த வருடம்...அதிலும் முடியவில்லை என்றால் அடுத்த வருடம்….இப்படியாக கீதாசாரம் ஒப்பிக்கும் அவரது சமீப வளர்ச்சியை நூலைப் பிடித்து பார்ப்போமேயானால் நூலின் ஒரு  முனை  கேரளாவில் புதிதாக  கட்டிக்கொண்டிருக்கும் மருத்துவமனையில் போய் நிற்கவே செய்யும். அதற்குள் பசை கண்ட இடத்தில் ஒட்டிக்கொள்ளும் சாமர்த்தியம் தெரியக்கூடும். தலித் அரசியலை ‘நூல் அரசியலுடன்’ கலந்து அவருக்கான பீடத்தை உயர்த்திக்கொள்ளும் வேலையை கவனித்திருக்கக்கூடும்.

இதைக்கொண்டு அனிதா ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அதைத்தாண்டி அரசியல் இருக்கிறது. அதுவுமே கைக்கூட வில்லையென்றால் இருக்கவே இருக்கிறது. குலத் தொழில். காரிகை கற்று கவி பாடுவதிலும் பேரிகைக்கொட்டி பிழைப்பது மேல்! இதையே டாக்டர் கிருஷ்ணசாமி மொழிதலில் சொல்வதாக இருந்தால் மருத்துவராகி மருத்துவமனை கட்டுவதைக்காட்டிலும் பேரிகைக் கொட்டி பிழைப்பது மேல் அப்படித்தானே!
மருத்துவரின் வாய்த்துர்நாற்றத்தைப்பற்றி நாடோடிக் கதை ஒன்றுண்டு. ஒரு மருத்துவர் இருக்கிறார். அவரிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள மக்கள் தயங்குகிறார்கள். காரணம் அவர் பேசுகையில் வரும் வாய்த்துரு நாற்றம். மருத்துவ தொழில் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அவர் மருத்துவத் தொழிலைக் கைவிட்டு பிற தொழில்களுக்கு மாறுகிறார். மற்றத் தொழில்கள் அவருக்கு பேரும் புகழையும் பெற்றுத்தருகிறது.
மற்றத் தொழிலின் வழியே அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். முதல் நாள் இரவில் அவரது வாய்த்துரு நாற்றத்தை பொறுக்க முடியாமல் மனைவி விலக நினைக்கிறாள். மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு மருத்துவர் சொல்கிறார். இது வாய்த்துரு நாற்றம் அல்ல. நான் மருத்துவர் இல்லையா! போஸ்ட்மார்ட்டம் பிரிவில் வேலைப்பார்க்கிறேன் இல்லையா! அத்தொழிலால் வரும் நாற்றம் என்கிறார். அதற்குப் பிறகு ஊர்மக்கள் பேசிக்கொள்வார்கள்.  ‘ மருத்துவர் வாய் இருக்கிறதே..அது நல்ல வாய். ஆனால் அவர் வேலைச் செய்யும் இடம்தான் நாற்றமுடையதாக இருக்கிறது’

புதன், 6 செப்டம்பர், 2017

ஹெச்.ஜி.ரசூலின் பேட்டிக்கட்டுரை

கொலை செய்வதற்கு ஆயுதங்களோடு
எப்போதும் துரத்தி வருகின்றனர்
அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா
சாத்தியங்களையும் திறந்து வைத்திருக்கின்றனர்
எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால்
எழுத்துக்கள் எலிகளாய் செத்துக்கிடக்கும்
என நம்புகின்றனர்.
இப்படியாக நீளும் இக்கவிதை 'உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்' என்கிற கவிதைத்தொகுப்பிற்கு ஹெச்.ஜி.ரசூல் எழுதிக்கொண்ட முன்னுரையின் முதல் பத்தி.  இம்முன்னுரைக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு  ' கொலை செய்வது அல்லது தற்கொலை செய்வது'. அவரது லப் டப் வாழ்க்கையின் மொத்த  ஓட்டத்தையும் சொல்லி நிறுத்த இத்தலைப்பு ஒன்றே போதும்.

கடந்த மே மாதம் கன்னியாகுமரியில் கூடிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இரு நாள் முகாமில் ஹெச்.ஜி. ரசூல் அவர்களின் தலைமையில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் பேசியத் தலைப்பு ‘ அறியப்படாத கதையாளர்களின் கதைகள்’. அவ்வாய்ப்பினைக் கொடுத்தவர் ரசூல் அவர்கள்.

நான் பேசத் தொடங்குகையில் அறியப்படாத கதையாளர்களின் கதைகள் பட்டியலில் முதல் நபராக ஹெச்.ஜி. ரசூல் அவர்களைத்தான் வைத்தேன். அந்தப் பட்டியலில் இன்னும் பலரையும் வைத்திருந்தேன். எழுத்தாளர்கள் கீரனூர் ஜாகிர்ராஜா, அழகியபெரியவன்....இத்தகையவராக.

இத்தகைய உரைக்கு ரசூல் அவர்கள் வருத்தப்பட்டாரோ என்று கூட நான் அவர் குறித்து யோசிக்கவில்லை. தமிழக இலக்கிய அமைப்புகளின் மீது எனக்கு வருத்தம் இருக்கவே செய்தது. இவரை ஏன் கொண்டாட மறுக்கிறார்கள்....? என்று. இந்த உள்ளக்குமறல்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் அவரது படைப்புகளைக் கொண்டு அரை நாள் நிகழ்வை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - கந்தர்வகோட்டை கிளையின் சார்பில் நடத்தினேன். அந்நிகழ்விற்கு தலைமை எழுத்தாளர் சந்திரகாந்தன்.
அன்றைய தினம் ஹெச்.ஜி. ரசூல் அவருடைய முகம் இதற்கு முன் யாராலும் கண்டிராத அழகான முகமாக இருந்தது. அவர் படைப்புகளைக் குறித்து பேசுகிறோம் என்பதற்காக அல்ல. அவரைச் சூழ்ந்திருந்த இலக்கியவாதிகளின் எண்ணிக்கைக்காக. அந்நிகழ்விற்கு நாங்கள் சூட்டியிருந்த பெயர் ‘ ரசூல் சூழ் ரசூல்’.

அவருடைய அத்தனை நூல்கள் குறித்தும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. அவரது படைப்புகளைக் குறித்து முழுக்கப் பேசிய முதல் மற்றும் கடைசி நிகழ்வு அதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன். இக்காலத்தையொட்டி அவர் சமீபத்தில் வெளியிட்ட ‘ போர்ஹேயின் வேதாளம்’ என்கிற குறுங்கதைகள் தொகுப்பிற்காக ஒன்றிரண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்பவராக இருந்தார்.

அந்நிகழ்விற்காக அவரை நான் அழைக்கையில் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ இதனால் என்ன பயன்..?’ என்பதாகவே இருந்தது. அவரிடம் நான் திருப்பிக்கேட்டேன் ‘ நீங்கள் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள். இதனால் என்ன பயன் கிட்டுமோ, அதே பயன் புதுக்கோட்டைக்கு கிட்டும்’ என்றேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். சிரிப்பு என்பது சம்மதத்தின் அறிகுறிதான் இல்லையா!

அந்நிகழ்வு தொடங்க இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையில்  அவருடன் அவரது இலக்கிய மேடு, பள்ள பயணங்கள் குறித்து உரையாடினேன். அப்பொழுதுதான் எனக்கு புரிய வந்தது,  நான் எத்தனை சிரத்தையான வேலையைத் தொடங்கியிருக்கிறேன் என்று.
அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில், பேட்டி எடுப்பதைப்போலதான் அவருடனான என் உரையாடல் இருந்தது. அதன் சாராம்சங்களை இக்கட்டுரையில் தர விரும்புகிறேன்..

முதலில் அவர்தான் உரையாடலைத் தொடங்கினார். ' இந்த நூல் குறித்த விமர்சன நிரலில் இஸ்லாம் தோழர்களை வைக்காமல் இருந்தது  நிகழ்ச்சி நடத்தும் உங்களுக்கு நல்லது. அதை விட நல்லது  யாரேனும் ஒருவர் கூட்டத்திற்கு வராமல் இருப்பது...' என்றவாறு சிரித்தார். இதைச் சொன்னத் தொனியால் எனக்குச் சற்று பதட்டம் வரவேச் செய்தது.
'ஏன் தோழர்...?’
 'இஸ்லாம் மார்க்கத்தில் மதத்தைக் கேள்விக்கேட்கும் உரிமையை தனி நபர் கையில் எடுப்பதை இன்னொரு இஸ்லாமியன் ஏற்க மாட்டார். அதைக் குறித்து நிகழ்வில் யாரேனும் ஒருவர் கேள்வி எழுப்புவராயின் அது பதட்டத்தில் வந்தே முடியும்..’
நான் சற்றுநேரம் அமைதியாகவே உட்கார்ந்திருந்தேன். பல மேடைகளில் அவரது கவிதைகளை வேறு யாரும் உச்சரிப்பதற்கும், அவரைக் கொண்டாட தயங்குவதற்கும் காரணம் இதுதான் என்று அப்பொழுதுதான் நான் புரிந்துகொண்டேன்.
' அப்படி என்னதான் கேள்வி கேட்டீர்கள்..?'
' இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா பெண் நபி ’ என்கிற கேள்விதான்'
இதற்கு அடுத்து நான் என் அறிவிற்கு  எட்டிய கேள்வியொன்றைக் கேட்டடிருந்தேன். இதுநாள் வரைக்கும் யாரும் கேட்காத கேள்வியாக அதை அவர் பார்த்தார். ' ஏன்  வாப்பா  ஒரு பெண் நபி இல்லை ' என்கிற கேள்விதான் பிரச்சனையா.?  இல்லை அக்கேள்வியை மகள் வாப்பாவிடம் கேட்டதால் பிரச்சனையா..? '.
 அவர் சிரித்துகொண்டார். ' பெண் குழந்தை கேட்பதுதான் பிரச்சனை'
' நீங்கள், ஏன் உம்மா இல்லை ஒரு பெண் நபி.. என்று எழுதியிருக்கலாமே ’
' எந்த மதமாக இருந்தால் என்ன... எல்லா மதமும் பெண்களை  ஒடுக்கி வைக்கும் வேலையைதானே செய்து வருகிறது. மதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான முதல் கேள்வி என்பது பெண் குழந்தையின் வாயிலாக அப்பாவிடம் கேட்பதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும் . அதைத்தான் நான் செய்திருந்தேன்...'
அவர் அவர் சார்ந்த மதத்திலிருந்து கவிதைகளைப் படைத்திருந்தாலும் அவரது உரை, அவரது கவிதைக்கான சுவடுகளை அவரது இந்த விளக்கம் பொதுமையப்படுத்தியிருந்தது.
‘எனக்கு உங்கள் கவிதைகளில் முதலில் அறிமுகமானது உம்மா கவிதைதான். அக்கவிதையை நீங்கள் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில மாநாட்டில் நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்…
ஒரே உதையில் தூரத்தில் போய் விழுந்த
பொம்மை சொன்னது
இப்படியெல்லாம் நடந்திருக்காது
எனக்கு ஒரு உம்மா இருந்திருந்தால்’
நான் முடிப்பதற்குள் அவர் தொடர்ந்தார்.
' உங்களுக்கு பிடித்ததைப் போல பலருக்கும் இக்கவிதைதான் பிடித்தக் கவிதையாக இருக்கிறது '
' தோழர்,உம்மா என்பதை  முதலில் முத்தம் என்பதாக நான் நினைத்தேன்'
அவர்  வயிறு குழுங்கச் சிரித்தார். ' நீங்கள் பரவாயில்லை. சிலர் அதை வேறொரு விதமாகப் புரிந்துகொண்டு தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்'
' எப்படி..?'
' உம்மாவை ' உம்மா' வுடன் தொடர்புபடுத்தி அக்கவிதையின் போக்கை வேறொரு தளத்தை நோக்கி கொண்டு சென்றுவிட்டார்கள். அக்காலத்தில் ' உம்மா இயக்கம்' தலையெடுத்திருந்த காலம் அது. ஒரு நண்பர் என்னிடம் சற்றும் மனம் கூசாமல் கேட்டார் ' உங்கள் கவிதையில் உம்மா என்பது அம்மாவா...இல்லை உம்மாதானா..’என்று.
சற்று நேரம் இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். அடுத்து என் கேள்வி வேறொரு பக்கத்திற்குச் சென்றது.
‘அப்துல் ரஹ்மான், ஹெச்.ஜி. ரசூல் , மனுஷ்யபுத்திரன் மூவரும் எனக்கு பிடித்தமான மானசீக கவிஞர்கள். அப்துல் ரஹ்மான் சூபி மற்றும் அரபு கவிதைகளின் சாராம்சத்தை தமிழ் மொழியில் தந்தவர். இஸ்லாம் மார்க்கத்தின் உச்சத்தையும் காட்டியது அவருடைய கவிதைகள் என்பது எனது புரிதல். அவர் உங்களுடைய பிரச்சனைக்கு எந்த வகையிலாவது குரல் கொடுத்தாரா...?’
‘அப்துல் ரஹ்மான் வேறு இஸ்லாம் மார்க்கம் வேறு அல்ல. அவர் கட்டுடைத்தல் வேலையை செய்திருக்கவில்லை.  எனது கட்டுடைத்தல் அவருக்கு பிடித்திருக்கவும் செய்யாது. அதைக்குறித்து ஆதரவாகவோ எதிராகவோ கருத்தைப் பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை’
'மனுஷ்யபுத்திரன்...?' நீண்ட நேரம் அமைதியாக இருந்தவர் பிறகு சொன்னார் ' மைலாஞ்சி இவ்வளவு பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்ததற்கு காரணம் அவர்தான் '
'என்னச் சொல்கிறீர்கள் தோழர்..?'
' தவறாகச் சொல்லவில்லை. மைலாஞ்சி நூலை அக்கு வேறு அணி வேறாக பிரித்து விமர்சனம் செய்து அதை எதிர்ப்பாளர் வரைக்கும் கொண்டுபோய் சேர்த்தது உயிர்மை இதழ். அப்படியொரு விமர்சனம்  உயிர்மையில் வந்திருக்காவிட்டால் மைலாஞ்சியின் கவிதையின் வீச்சு துபாய் , சௌதி அரேபியா வரைக்கும் போய்ச்சேர்ந்திருக்க வாய்ப்பில்லை.  என்னைப் பற்றி உலகம் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை. அதே நேரம் சமூக வில்லக்கத்திற்கு நான் ஆளாக வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்பட்டிருக்காது’
' உங்கள் கவிதை சௌதி அரேபியா , துபாய் வரைக்கும் ஏன் போக வேணும்..?'
' மைலாஞ்சி நூல் வெளிவந்ததற்குப் பிறகு மார்க்கத்திற்கு எதிராக அவர்களுக்குத் தெரிந்த சில கவிதைகளை கவிதைகளின் சில வரிகளை ஜெராக்ஸ் எடுத்து பரவலாகக் கொடுத்தார்கள். ஒரு நாள் என்னை வக்பு வாரியத்திற்கு அழைத்துசென்று விடிய விடிய கேள்விகளாகக் கேட்டார்கள். அத்தனை கேள்விகளுக்கும் நான் விடாது பதில் சொல்லிகொண்டு வந்தேன். எனது பதில்கள் ஒரு வேளை அவர்களை அவமதிப்பிற்கு உள்ளாக்கிருக்கக் கூடும். பிறகு அவர்கள் ஜெராக்ஸ் எடுத்த கவிதைகளை மொழிப்பெயர்த்து சௌதி அரேபியா, துபாய் நாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
நபி கவிதை மட்டும் பிரச்சனையில்லை. ஜிகாதி நூலில் இப்படியாக ஒரு கவிதை இருந்தது. (அக்கவிதையை அவரே மனனமாகச் சொன்னார்). அதாவது அல்லா  அவன் என்று சொல்லுதல் கூடாது ஏனென்றால் அவன் ஆண் அல்ல. அவள் என்று சொல்லக்கூடாது ஏனென்றால்  பெண் அல்ல. ஆணும் பெண்ணும் இல்லாத ஒன்றை எப்படி நான் அழைப்பது என்பதுதான் அக்கவிதையின் சாராம்சம்.  இக்கவிதையை வாசித்ததும் கன்னியாகுமரி மதக்குருமார்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். ' ஹெச். ஜி.ரசூலை உடனே சமூக விலக்கம் செய்ய வேண்டும் என்று '
' பிறகு..?'
' என் கவிதையின் கேள்வியால் மதமார்கள் ஒன்று கூடி மதப்போதனைகளில் ஒரு திருத்தம் செய்து அதையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அது அல்லா ஒரு ஆண் வழியே பெண்ணையும் இந்த உலகத்தையும் படைத்தார் என்பதால் அல்லாவை ஆண்களை விளிக்கும் அவன் என்று சொல்லலாம் என்கிற திருத்தம் அது'
‘மத விலக்கம் என்பது என்ன.? அதை எப்படி நீங்கள் எதிர்க்கொண்டீர்கள்...?'
' இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த யாரும் எங்கள் குடும்பத்துடன் எந்த ஒரு பற்றுதல் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் மத விலக்கம். எல்லோர் வீட்டுக்கும் திருமண பத்திரிகை கொடுத்து வருபவர்கள் எங்கள் குடும்பத்தை மட்டும் விலக்கி செல்வார்கள். துக்க வீட்டிற்கு சென்றால் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். அழைக்கமாட்டார்கள்...அப்படியாகவே நீண்ட ஆண்டுகள் யார் வீட்டு விசேஷத்திற்கும் செல்லாமல் வீட்டிற்குள் அடைப்பட்டுக் கிடந்தோம்...'
' உங்கள் பெற்றோர்கள் சமூக விலக்கை எப்படியாக பார்த்தார்கள் என்பது இருக்கட்டும். உங்கள் துணைவியார் அதை எப்படி எடுத்துகொண்டார்கள்...?'
' அதை இப்பொழுது நினைத்தாலும் திக் என்றே இருக்கிறது... ஒரு சில நேரம் அவரது வார்த்தைகள் சொல்லாததை அவருடைய பார்வைச் சொல்லும். போதுமா...? இதை நீங்கள்  எழுதிருக்கவிட்டால்தான் என்ன..? நம்ம குடும்பம் அதோகதியில் நிற்பதை பார்க்கிறீர்கள் தானே...?'
' சமூக விலக்கத்தின் உச்சக்கட்ட பாதிப்பாக எதைப் பார்க்கிறீர்கள்..?'
' மகள் திருமணத்தைதான். சொந்த மாவட்டத்தில், மாநிலத்தில் வரன் அமையவில்லை. பெங்களூரில் வரன் அமைந்தது. அத்திருமணத்தை நடத்தி வைக்க மார்க்கத்தைச் சார்ந்த யாரும் வருவதாக இல்லை. வருவதாகச் சொல்லியிருந்தவரகளும் வர மறுப்பு தெரிவித்தார்கள். ( இந்த இடத்தில் அவரது கண்கள் கலங்கியிருந்தன ). பிறகு நண்பர்கள் ஒன்று திரண்டு மகளின் நிக்காஹ் நடத்தி வைத்தார்கள்...'
' பிறகு எப்படி மத விலக்கை முறியடித்தீர்கள்..?'
' நீதி மன்றத்திற்கு சென்று தொடர்ந்து போராடினேன். நீதி மன்றம் மத விலக்கு செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியது....'
' அதற்குப்பிறகு மதத்தில் சேர்த்துகொண்டார்கள் தானே..?'
' இல்லை. அதற்குப்பிறகும் பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது...'
' இஸ்லாம் மார்க்கத்தில் பெண் சுதந்திரம் , பெண் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கீர்கள்...இஸ்லாம் பெண்கள் அதை எப்படியாகப் பார்த்தார்கள்..? அவர்களிடமிருந்து உங்களுக்கு  ஆதரவு கிடைத்ததா..?'
' ஆம்...இருந்தது. ஆனால் அதை வீட்டிற்கு வெளியில் வந்து நின்று சொல்ல முடியாதவர்களாக இருந்தார்கள்....' ' இப்பிரச்சினை உங்களை எந்த வழியில் உங்களை ஒழுங்குப்படுத்தியது..?' அவர் சிரித்தார். இப்படியெல்லாம் கேள்விக் கேட்கிறீர்களே….அவர் சிரித்தார். ' ஒன்று சொல்கிறேன். மைலாஞ்சியை நான் எழு‌தி முடிக்கும் காலம் வரைக்கும் எனது இஸ்லாம் மதம் , அதன் தத்துவங்கள், வழிபாடு, நபிகள் , சூபிகளின் போதனைகள்....இவற்றில் எந்தவொரு ஆழமான புரிதலும் இல்லாமல் இருந்தேன். மைலாஞ்சி பிரச்சனைக்குப் பிறகு இஸ்லாமிய நூல்கள் அத்தனையும்  தேடிப்பிடித்து வாங்கி வாசிக்கத்தொடங்கினேன். அதற்கு பிறகு மார்க்கத்தைப் பற்றிய ஆழமான அறிவு எனக்கு கிடைத்தது...'
' இப்படி எழுதியிருக்க வேண்டியதில்லை  என்கிற மனநிலை உங்களுக்கு வந்ததா..?'
' நிச்சயமாக இல்லை.  எழுதியதெலலாம் சரிதான். ஒரு வேளை மைலாஞ்சி எழுதுவதற்கு முன்பே இஸ்லாம் நூல்களை ஆழ்ந்து வாசித்திருந்தால் எனது எழுத்து வேறொரு போக்கில் பயணம் செய்திருக்கும்..என்றே நினைக்கிறேன்....'
' சமீபத்தில் பசு.    கவுதமன்    தன் பேட்டியில் தலித் முஸ்லீம் என்கிற பதத்தைப் பயன்படுத்தியிருந்தார். அதில் கீரனூர் ஜாகிர்ராஜா,  ஹெச். ஜி. ரசூல் இருவரின் பெயர்களையும் பயன்படுத்தியிருநதார். இந்து மதத்தில் ஏற்றுககொள்ள முடியாத ஒடுக்குமுறை பதம் தலித் என்பது. இஸ்லாம் மதத்தில் அப்படியாக ஒன்று இருக்கிறதா..? தலித் முஸ்லீம் என நீங்கள் ஒரு நூல் கூட எழுதியிருக்கிறீர்களே...?' ' இருக்கிறது. இந்துக்களில் இருப்பதைப்போன்று வெளிப்படையாக தெரியாது. முக்கிய தினங்களில் உணவு பரிமாறுகையில கையில் ஒரு ஏத்திரத்தை வைத்துகொண்டு அதில் அள்ளி உணவு வழங்கினால் அவர்கள் இஸ்லாம்  மதத்தில் சமமாக மதிக்கப்படுகிறார்கள் என்று பொருள். அதையே வெறும் கையால் வழங்கினால் அவர்கள் தலித் முஸ்லீம். அவர்களுக்கு சம உரிமை என்பது கிடையாது..' 'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறீர்கள். சமூக விலக்கத்தின் போது இயக்கம் உங்களுக்கு துணையாக இருந்ததா..?'
' ஆம். நிச்சயமாக. எனக்கான நிம்மதி தேடும் இடமாக இருந்தது இலக்கிய பெருமனறம்தான். அதிலும் அண்ணாச்சி பொன்னீலன் ஒரு படி மேலே போய் என் குடும்பத்தை மார்க்கத்திலிருந்து மத விலக்கம் செய்தவர்களிடம் எனக்காக பேசவும் செய்தார்...'
' உங்கள் எழுத்து பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்பது என் கருத்து. சமீபத்தில் மே மாதம் கூடிய கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய சந்திப்பில் என்னை அறியப்படாத எழுத்தாளர்களின் எழுத்துகள் தலைப்பின் கீழ் பேச அழைத்திருந்தீர்கள். அறியப்படாத எழுத்தாளர் பட்டியலில் முதல் நபராக உங்களை வைத்துதான் பேசினேன். என் பார்வை சரியா..? இல்லை உங்களுக்கு கிடைத்த  அங்கீகாரம் போதுமென நினைக்கிறீர்களா...?'
' அங்கீகாரத்தை எதிர்ப்பார்த்து எழுதுவது எழுத்தாக இருக்க முடியுமா என்ன.. ஆனாலும் என் எழுத்துக்காக நீங்கள் கவலைப்படும் அளவிற்கு என் எழுத்து இருந்திருக்கிறதே...அதுவே நல்ல அங்கீகாரம்தானே...'
 ' நீங்கள் ஓய்வு பெற்றுவீட்டீர்கள் இல்லையா. இனி நீங்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தையும் என்னைப்போன்ற வளரும் எழுத்தாளர்களையும் வழி நடத்த வேண்டும்....'
' பழைய வீச்சுக்கு எழுதலாமென இருக்கேன்....'
' நல்லது...அப்படியானால் நாவல் எழுதுங்களே...'
' பார்க்கலாம்…’
 ‘நீங்கள்  உங்கள்  வாழ்க்கையையே நாவலாக எழுதினால் தமிழ் நாவல்கள் பட்டியலில்  மிக முக்கிய நாவலாக உங்கள் நாவல் இடம் பிடிக்கும்...'
'அப்படியா...' என்றவாறு சிரித்தார்.
' . மணியாகிக்கொண்டிருக்கிறது. நான் சென்று நிகழ்விற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும். கடைசியாக நீங்கள் எழுதியக் கவிதையை உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன். ஏதேனும் ஒன்று சொல்லுங்களே...?’'
அவர் சற்றும் யோசிக்காதவராய் சொன்னார்
 ' சகாபி வகாபி சண்டையில்லை
சுன்னி ஷியா மோதலில்லை
பாபர்மசூதி அயோத்தி கலவரமில்லை
குரான் பைபிள் விவாதமில்லை
தொட்டில் குழந்தையின்
நிச்சலனமற்ற மௌனம்
அதிகாலை தோறும்
என்னை வீழ்த்திவிடும் தூக்கத்திற்கு
நன்றி சொல்கிறேன்
தொழுகையைவிட தூக்கம் மேலானது’

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

குட்டியக்கா - மலையாள சிறுகதை - எம்.டி.வாசுதேவன் நாயர் @ மொழிப்பெயர்ப்பு - இராம. குருநாதன்

ஜானு , குட்டியக்கா இருவரும் சகோதரிகள். குட்டியக்கா மூத்தவள். படு கருப்பி. காது ஓரத்தில் ஒரு மச்சம். அதுவும் அசிங்கமாக.

ஜானு அழகு. எல்லோருக்கும் அவளைத்தான் பிடிக்கிறது.

குட்டியக்காவிற்கு வரன் அமையவில்லை. ஆனால் சின்னவளுக்கு வரன் நிறைய வருகிறது.

ஒரு நாள் பருவை அறுத்துக்கொள்கிறாள். முகத்தில் பவுடர் ஏற்றிக்கொள்கிறாள். அப்படியும் வரன் அமையவில்லை.

ஒரு தாழ்த்தப்பட்டவோடு காதல் பிறக்கிறது. குடும்பத்தினர் கண்டித்து செத்துப்போ என திட்டுகிறார்கள்.

குட்டியக்காவுடன் முழுக்கவே அவளுடைய சித்தி மகன் இருப்பான். அவனிடம் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருப்பாள். ' தம்பி....அம்மாவையும் பெரியம்மாவையும் பத்திரமாப் பார்த்துக்கோ...' 

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு சிறுகதை


சிவப்பு  ரொட்டித்துண்டு
‘ அடேய் விவசாயி மகனே....என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித்துண்டுகளைத் திருடியிருக்கிறாயடா நீ....?’
கண்களுக்குள் தனலைக்காட்டி கேட்டிக்கொண்டிருந்தான் உருஷ்ய ஜாரரசன் இரண்டாம் நிக்கோலஸ் . உறைக்குள்ளேருந்து வெளிவரும் வாளினைப்போல அவனது கேள்வி வந்திருந்தது. அவனது நாசிகள் துப்பாக்கிக் குழல்களாக விடைத்து நின்றன.
புஷ்கின், பொந்துக்கிளியாக இருக்க வேண்டியவன். கூண்டுக்கிளியாக கையறு நிலையில் நின்றுகொண்டிருந்தான். அவனது கால்கள் ஆட்டம் கண்டிருந்தன. அவனுடைய நாசியிலிருந்து ரத்தம் சன்னமாக ஒழுகிக்கொண்டிருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று - அவனைச்சுற்றி ஒன்பது சிவப்புப்படை காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜாரரசனின் அதிகாரப்பூர்வ காவலர்கள். அவன் காட்டும் ஒவ்வொரு சமிக்ஞைக்கும் ஒவ்வொரு குத்து புஷ்கின் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது.
‘ ஜாரரசன் அரண்மனைக்குள் நுழைய உனக்கு யாரடா தைரியம் கொடுத்தது...?’
‘ எத்தனை நாட்களாக இந்த திருட்டு நடக்கிறது...?’
‘ கேவலம் நீ விவசாயி மகன்தானா நீ...?’
‘ போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவனா....?’
‘ உன் திருட்டுக்கு துணைக்கு வந்தவன்கள் யாரடா....?’
ஒவ்வொரு கேள்வியும் சாட்டையாக, உதையாக,அடியாக விழுந்துகொண்டிருந்தன. புஷ்கின் வாயைத் திறக்கவில்லை. திகில் பிடித்த பாவம் அவனது முகத்தில் இருந்தது. வாங்கிய அடி, உதைகளால் அவனது தோல்கள் மரத்துப்போயிருந்தது. உணர்வுகள் அறுந்துவிட்டிருந்தது. கண்களை மூடுவதும், திறப்பதும், மூடுவதுமாக இருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படையாக இறங்கிக்கொண்டிருந்தது.
‘ அடேய்...நீ போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவன். கருவறுக்கப்பட வேண்டியவன்....!’ ஜாரரசன் வார்த்தைக் கொப்பளத்தால் விரோதித்தான். கொடும்பார்வையால் கயிறு திரித்தான். அனலிலிட்ட புழுவைப்போல துடிக்க வைத்தான்.
ஜாரரசனுக்கு அரண்மனைத் திருட்டு பெருத்த அவமானமாக இருந்தது. நாசிக்குள் பாம்பு நுழைந்துவிட்டதைப்போல குறுகுறுத்தது. ஆட்சிக்கு எதிராக கலகம் தூண்டிவிட்டதைப்போலிருந்தது. அவன் நியமித்திருந்த ஒற்றர்கள் மீதும் சிவப்புப்படை காவலர்களின் மீதும் நீதிபதிகளின் மீதும் நம்பிக்கையற்று வெறுப்பு வந்தது.
இரண்டாம் நிக்கோலஸ் ஜாரரசனுக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை இருந்து வந்தது. அவன் பேரரசன் என அழைக்கப்பட வேண்டும் என்று. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருஷ்ய தேசம் பைஸாண்டிய தேசத்தைப்போல பரந்து விரிந்த தேசமாக இருந்தது. முதலாம் ஜான் பீட்டர் மக்களால் பேரரசன் என்று அழைக்கப்பட்டுவந்தார். பைஸாண்டிய என்கிற பரந்து விரிந்த தேசம் இப்பொழுது இல்லை. ஆனால் அத்தேசத்திற்குரிய பல நிலப்பகுதிகளை இரண்டாம் நிக்கோலஸ் பிடித்திருந்தான். இப்போதைக்கு இப்பூவுலகின் பெரிய தேசம் அவனுக்கும் கீழ் இயக்கும் உருஷ்ய தேசம்தான். அத்தேசத்தை ஆளும் தான் பேரரசன் என விளிக்கப்பட மரபு வழித்திருச்சபை, போயர் மன்றம், சிவப்பு படை இராணுவ வட்டங்களில் தெரிவித்திருந்தான். அவனுக்கு முன் உருஷ்யாவை ஆட்சிப்புரிந்த முதலாம் நிக்கோலஸ், முதலாம் ,இரண்டாம், மூன்றாம் அலெக்ஸாண்டர்களை விடவும் நன்மதிப்பு, மரியாதை அவன் மீது கூடியிருந்தது. அதற்கொரு காரணமிருந்தது.
மரணக்கைதிகளை கல்லால் அடித்து கொல்லும் சட்டத்தை அவன் அடியோடி நீக்கியிருந்தான். அதற்குப்பதிலாக தூக்குத் தண்டனை விதித்திருந்தான். இந்த திருத்தம் வால்கா கரையோரம் முதல் ட்வினா வரை எழுச்சி இளைஞர்களின் மத்தியில்  நன்மதிப்பை கூட்டியிருந்தது. குறிப்பாக டார்டார்கள், உக்ரைனியன்கள், செர்பியர்கள்,யுரல்மலை பகுதி வாழ் மக்களிடமிருந்து பெருத்த வரவேற்பு கிடைத்திருந்தது.
ஜாரரசனின் மனைவிகள் ஜாரினாக்கள் என அழைக்கப்பட்டு வந்தார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சமிக்ஞை காட்டிக்கொண்டு வந்தார்கள். அரசக்குடும்பத்திற்கு எதிராக சதி நடக்கிறதென்றும், சிவப்பு படை வீரர்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்றும், படைத்தளபதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும்......! ஆனால் ஜாரரசன் அதனை காதுக்கொடுத்துக்கேட்டதில்லை. விரைந்து சுழலும் இந்தப்பூமிப்பந்தில் அடியேன் ஒருவனே பேரரசன் மற்றவர்கள் என் அடிமைகள் என சொல்லிக்கொண்டுவந்தான். ஆனால் அவன் எதிர்ப்பார்த்திராத அந்த அரண்மனைத் திருட்டு அவனுக்குள் ஒரு பெரியக் கலவரத்தை மூட்டியிருந்தது. ஜாரினாக்கள் அவனை துச்சமாகப் பார்ப்பதைப்போலிருந்தது.
அரண்மனைத் திருட்டு விசாரணையை முதலில் ஏதேனும் ஒரு நீதிபதியை வைத்துதான் விசாரிக்க வேண்டும் என ஜாரரசன் நினைத்திருந்தான். நீதிபதிகள் மீதும் அவனுக்கு அவ்வளவாக நம்பிக்கை இருக்கவில்லை. ஆகவே அவனே ஒரு அவசர நீதிமன்றத்தை செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் பொதுவெளி சதுக்கத்தில் கூட்டியிருந்தான். இவ்விசாரணை மூலம் பொதுமக்களுக்கும், ஆட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களுக்கும், போல்ஷவீக் கும்பலுக்கும் ஓர் எச்சரிக்கையைக் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தான்.
‘ அடேய் விவசாயி மகனே... அரசாளும் அரண்மனைக்குள் நுழைந்து திருடக் கற்றுக்கொடுத்தவன் எவனடா....?’
புஷ்கின் மேனி குலுங்கினான். அவனது நிர்வாண உடம்பு சில்லிட்டிருந்தது. கையறு நிலையில் அவன் நின்றான். மொத்தக்கண்களும் அவனை மேய்வதைப்போலிருந்தது.
நகரத்தில் பனி கொட்டிக்கொண்டிருந்தது. புஷ்கின் என்றோ ஒருநாள் கனவின் நடுப்பகுதியில் கண்ட பிரமாண்டமான கட்டிடத்தைப்போல செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் கட்டிடங்கள் இருந்தன. அவனால் அதை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. அவனது பற்கள் கிட்டிற்றன. தோல்கள் சுருங்கி சில்லிட்டன. உடல் வெடவெடத்தன.
புஷ்கின் செய்கையைப்பார்த்து ஜாரரசன் சிரித்தான். இரணியன் போல அவன் வயிறு வெடிக்கச் சிரித்தான். அரசன் சிரித்தால் அவையினர் சிரிக்க வேண்டும் இல்லையா!. ஜாரினாக்கள் சிரித்தார்கள். அமைச்சர்கள்,நீதிபதிகள், வழக்காடுபவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் சிரித்தார்கள். புஷ்கினும் சிரித்தான். புஷ்கின் ஜாரரசன் சிரிப்பதைப்போல உடம்பை நான்கு புறமும் குலுக்கிச் சிரித்தான். அவன் சிரிப்பால் ஜாரரசனின் முகம் சிவந்தது. தன் வாகான தோளை நிமிர்த்தி புஷ்கினைப் பார்த்தான். அதேப்பார்வையில் அவையை முறைத்தான். அவையினர் சிரிப்பை முறித்து தொண்டைக்குள் அடைக்கினர். மன்றம் ஒரு நொடிக்குள் அமைதிக்குள் வந்து விழுந்தது.
‘அடேய் விவசாயி மகனே....திருடும் போது இல்லாத பயம் விசாரணையில் ஏனடா வரவேண்டும்.....?’
ஜாரரசனின் இக்கேள்விக்கு புஷ்கினிடம் பதில் இருந்தது. பதில் சொல்ல வேண்டுமென்றால் தலையை நிமிர்த்த வேண்டும். கழுத்தில் இரும்புச் சங்கிலியால் புணைக்கப்பட்ட ஒரு பெரிய உலோகக்கொண்டு தொங்கிக்கிடந்தது. அது புவி ஈர்ப்பு விசையுடன் சேர்த்து அவனது தலையை தரையை நோக்கி இழுத்துகொண்டிருந்தது.
புஷ்கின் மொத்தப்பலத்தையும் கழுத்திற்கு கொடுத்தான். உலோகக்குண்டுடன் சேர்ந்து தலையை நிமிர்த்தினான். ஜாரரசனை ஏறிட்டுப்பார்த்தான். ‘நான் பெரிதென மதிக்கும் மாட்சிமைத்தாங்கிய சக்கரவர்த்தி அவர்களே....என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்...என் நடுக்கம் பயத்தினாலானது இல்லை....’
‘ பிறகென்ன பனியினாலானது என்கிறாயா....?’
‘ அதுவும் அன்று. பசியினாலானது....’
ஜாரரசன் ‘ கொல்’லெனச் சிரித்தான். ‘ அடேய்...பசி கெஞ்சச் செய்யும். இப்படி நடுங்கச் செய்யாதேடா.....’
‘ பேரரசரே... இளம்பசி நடுங்க செய்யும்.கொடும்பசி சூறையாடச் செய்யும்...’
‘ என்னடா பேசுகிறாய்....? யாரிடம் நீ பேசுகிறாய்....?’ ஜாரரசன் கடைக்கண்களை அங்கேயிங்கே ஓடவிட்டான். அவனது பார்வைகேற்ப ஒரு சிவப்புப்படை காவலன் புஷ்கினின் முகத்தில் குத்தினான். இன்னொருத்தன் நீண்ட சாட்டையை முதுகில் பாய்ச்சினான்.
நரம்பிற்குள் ஓடிய இரத்தம் தோலிற்கு வெளியில் ஓடிக்கிடந்தது. சிலர் அதை இரத்தமாகப் பார்த்தார்கள். சிலர் கலகத்தை மூட்டும் சிவப்பாகப் பார்த்தார்கள். ஜாரினாக்கள் அவனது ரத்தத்தைக் கண்டு ரசித்தார்கள். இன்னும் கூட அவனது இரத்தம் சிந்தப்பட வேண்டும் என வெறித்தார்கள். சிலர் அரசக்குடும்பத்தினர்களின் முகம் கோணாமல் இருக்க ரசிப்பதைப்போல நடித்தார்கள்.
நீதிமன்றம் மக்கட்திரளால் நிரம்பி வழிந்தது. ஜாரரசன் கீழ் இயங்கும் அத்தனை அதிகார சக்கரங்களும் அவனது பிடிக்கு வந்திருந்தன. இந்த வழக்கு ஜாரரசனின் குடும்ப வழக்கு. ஜாரரசனே விசாரித்து கைதிக்கு தீர்ப்பளிக்கப்போகிறார். இது எப்பொழுதாவது நடந்தேறும் பிரகடனம். பதினாறாம் நூற்றாண்டில் இப்படி நிறைய பிரகடனம் நடந்தேறி இருக்கிறது. பலருக்கு கல்லெறி மரணத்தண்டனை நிறைவேற்றியிருக்கிறது. ஜார் அரண்மனையின் கொந்தளிப்பான ஆண்டுகள் அவை. அவ்வாண்டுகள் புவி சுழற்சியில் திரும்பவும் திரும்பியிருக்கிறதோ....ஜாரரசனுக்கு எதிராக இளைஞர் படை ஒன்று திரண்டிருக்கிறதோ....அதன் தொடக்கம்தான் இந்த அரண்மனைத் திருட்டோ.....? மக்கள் புதிரான கேள்விகளுடன் விசாரணை சதுக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் மையத்தில் இரண்டு அரண்மனைகளுக்கு இடையில் அவ்விசாரணை நடந்துகொண்டிருந்தது. விசாரணை ஒன்றுபட்ட உருஷிய தேசமும் புதிதாக சேர்ந்த செர்பியா, யுரல் பகுதி மக்களும் காது வழிச் செய்தியைக் கேட்டறியும் பொருட்டு செவியைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஜாரரசன் அகோரமாக எழுந்தான். நாவை மடக்கி கண்களை உருட்டிக் கேட்டான். ‘ அடேய்.. உன் மேல் நான் சுமத்திருக்கும் குற்றத்திற்கு நீ சொல்லவரும் பதில்தான் என்ன...?’ மொத்த அமைதியையும் அவனது கேள்வி முறித்திருந்தது. பலரும் திடுக்கிட்டிருந்தார்கள். சதுக்கம் ஒரு குலுங்கி குலுங்கி நிமிர்ந்தது. புஷ்கின், ஒரு பதட்டமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தான்.
‘ புஷ்கின்...நீ செய்திருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்....’ சூழ்ந்திருந்த மக்கள் பார்வையால் அவனைக் கனிந்தார்கள். உதடுகளால் கெஞ்சினார்கள். அவர்களின் நெற்றியும், முகச்சுழிப்பும் அதையே சொல்லிக்கொண்டிருந்தன. புஷ்கின் இரத்தம ஒழுகிய முகத்தோடு அதனைக் கவனித்தான். நெற்றியை ஏற்றி இறக்கி உங்கள் தவிப்பு எனக்கு புரிகிறது என்றான்.
ஒரு தடித்த அரைக்கால் டவுசர் அணந்த சிவப்புப்படை காவலன் சொன்னான் ‘ அடேய்....குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குற்றவாளிக்கு தண்டனை குறைந்திருக்கிறது.....’
இன்னொரு காவலன் சொன்னான் ‘ அடேய்....யூதர்கள் பின்பற்றிய கல்லால் அடித்தே கொல்லும் மரணத்தண்டனையைத் தூக்குத்தண்டனையாக மாற்றிய பேரரசன் நம் ஜாரரசன். உன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்....’ காதிற்குள் கிசுகிசுத்தான்.
இன்னொரு காவலன் ‘ அடேய்....பிழைக்கத்தெரியாதவனே....நம் சக்கரவர்த்தி எத்தனையோ மரணத் தண்டனைக் கைதிகளுக்கு விடுதலைத் தந்திருக்கிறார். நான் கூட அப்படியாகப்பட்டவன்தான். சிலருக்கு விடுதலையுடன் சேர்த்து வெகுமதியும் கொடுத்திருக்கிறார். நம் உக்ரைன் மாகாண தரைப்படை தளபதி ஒரு காலத்தில் மரணத்தண்டனை கைதி. அவருக்கு விடுதலை கிட்டும் என்று யார் எதிர்ப்பார்த்தார்கள். இன்றைக்கு அவர் ஒரு மாகாணத்தின் தளபதி...
உருஷ்ய முழுவதும் இப்படி குற்றத்தை ஒப்புக்கொண்டு உயிர்ப்பிச்சையுடன் பதவிகள் பெற்றவர்கள் நிறையப்பேர். மாஸ்கோ தலைமை நீதிபதி ஒரு காலத்தில் உன்னைப்போல  சங்கிலி உலோகக்குண்டு புணைக்கப்பட்ட குற்றவாளிதான். அவர் செய்த குற்றத்திற்கு  மரணத்தண்டனையை விடவும் பெரியத் தண்டனை கிடைத்திருக்க வேண்டும்... அவர் செய்த குற்றம் என்னத் தெரியுமா....? ஜாரரசனின் தம்பி மகனை அரண்மனைக்குள் வைத்து கொன்றதுதான். விசாரணை நீதி மன்றத்திற்குச் சென்று மரணத்தண்டனை உறுதியாகிவிட்டிருந்தது. குற்றவாளி உன்னைப்போல விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கவில்லை.   ஜாரரசனை சந்தித்து ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் எனக் கெஞ்சி மன்றாடினான். விசாரணை ஜாரரசனுக்கு வந்தது. ஜாரரசன் வழக்கை விசாரித்தார். ‘ அடேய்...என் உடன்பிறப்பு மகனை ஏனடாக் கொன்றாய்....?’ எனக் கேட்டார். அவன் சொன்னான் ‘ என்னை மன்னிக்க வேண்டும் பேரரசே... உங்களுக்கு எதிராக சதி நடந்தது. உம்மைத் தீர்த்துக்கட்டி உம் அரியாசனத்தில் ஏறும் சதியில் அவன் இறங்கியிருந்தான். வலையையும் பின்னினான். அதற்கான நாளைக் குறித்தான். இதை நான் கண்ணால் கண்டேன். உமக்கு எதிராக சதியா....! அதையும் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா....! ஒரு வாளினை உருவினேன். அவனது சிரத்தைக் கொய்தேன்...இதற்கு மேல் நீவிர் என்னத் தண்டனைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்...’ என்று சிரம் தாழ்ந்தான்.
இதற்கு ஜாரரசன் என்ன தீர்ப்பளிக்கப்போகிறார் என உலகமே பார்த்திருந்தது. ஜாரரசன் எழுந்தார். தன் தீர்ப்பை வழங்கினார் ‘ இவன் குற்றவாளி அல்ல. இவன் என் நிழல். இவனை இப்பொழுதே விடுதலை செய்கிறேன். இவன் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைப்பாத்திரமாக இவனை நான் மாஸ்கோ நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறேன்.....’என்றார். இதுதான் நம் ஜாரரசன். அவர் நம்பும் படியாக ஏதேனும் ஒரு பொய்யைச் சொல். அவரிடமிருந்து உயிர்ப்பிச்சை வாங்கிக்கொள்....’ ஒரு காவலன் புஷ்கின் முகத்தை நிமிர்த்தி கண்கள் பார்க்க அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லி முடித்தான்.
ஜாரரசன் புஷ்கினை அதட்டினார். அந்த அதட்டல் பெய்யும் பனிமழையைத் துளைத்தது. மக்கள் பயத்தில் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தார்கள்.
‘ அடேய்....உன்னைத்தாண்டா கேட்கிறேன்....என் அரண்மனைக்குள் நுழைந்து திருடியிருக்கிறாய்....இதற்கு நீ சொல்லவரும் விளக்கம் என்ன....?’
நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த மக்கள் வாயில் கையை வைத்துகொண்டு அவனை பரிதாபமாகப் பார்த்துகொண்டிருந்தார்கள். அவர்களின் இதயத்துடிப்புகள் இரட்டித்துக்கொண்டிருந்தன. மூச்சை உள்ளே மெதுவாக இழுத்து நெஞ்சு அடைக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ‘திக்....திக்...’ என இருந்தது.
புஷ்கின் தலையை மெல்ல உயர்த்தினான். தடதடக்கும் நடுக்கத்துடன் சொன்னான்‘ மாட்சிமைத்தாங்கிய பேரரசே....நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. சிறு தவறுதான் செய்திருக்கிறேன்....’
சூழ்ந்திருந்த மக்களின் முகம் சட்டென இருண்டது. எப்படியேனும் இவன் விடுதலைப்பெற வேண்டும் என தவித்துக்கொண்டிருந்தவர்களின் துடிப்பு இறுக்கம் கொண்டது.
‘ என்னடா சொல்கிறாய்.....குற்றம் செய்யவில்லை...தவறுதான் செய்திருக்கிறாயா.....! இரண்டிற்கும் ஆகப்பெரிய வித்தியாசமாக என்னடா வைத்திருக்கிறாய்.....?’ ஜாரரசனால் ஒரே இடத்தில் இருப்புக்கொள்ள முடியவில்லை. பிட்டம் தானாக இருக்கையிலிருந்து எழுவதும் அமர்வதுமாக இருந்தது. நாற்காலி அவன் ஆட்சி செய்யும் நாட்டைப்போல ஆட்டம் கண்டது. நாற்காலி ஆடும் ஆட்டத்திற்கேற்ப அவரைச்சுற்றியிருந்தவர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
‘ அடேய்....உன் பெயரென்ன சொன்னாய்....?’
‘  பேரரசு அவர்களே, என் பெயர் புஷ்கின்...’
ஜாரரசன் முகம் சினத்தால் சிவந்தது. ‘ இப்படி தலை வால் இல்லாமல் சொன்னால் எப்படி...? தலையெழுத்து, வால் எழுத்தென்று எதாவது இருக்கிறதா இல்லையா...?’
‘ இருக்கிறது பேரரசே...என் முழுபெயர் அலெக்ஸாண்டர் புஷ்கின்....’
‘ விவசாயி மகன் தானா நீ....?’ ஒரு அலட்சியமான உச்சரிப்பில் அக்கேள்வி இருந்தது.
‘ ஆமாம்... அரசே...’
‘ என் அரண்மனைக்குள் திருடியிருக்கிறாய்.....?’
‘ ஆமாம் அரசே...’
‘ ஒப்புக்கொள்கிறாயா...?’
‘ ஆம்....ஒப்புக்கொள்கிறேன். அரசே....’
‘ அப்படியானால் நீ குற்றம் புரிந்தவன் அப்படித்தானே...?’
‘ என்னை மன்னிக்க வேண்டும் அரசே.... பசிக்காக உணவைத் தேடுவதும் கிடைக்கையில்  அதைப்பறிப்பதும் எப்படி அரசே  குற்றமாக முடியும்...?’
‘ இவ்வுலகின் மிகப்பெரிய தேசத்தை ஆளும் என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித் துண்டுகளைத் திருடியவன் குற்றம் புரிந்தவன் இல்லாமல் வேறு என்னவாம்...?’
‘ நான் பெரிதென மதிக்கும் அரசே....நான் அரண்மனைக்குள் நுழைந்தேன். ஒப்புக்கொள்கிறேன். ஓர் அறையில் தங்கக்குவியல்களாக இருந்தன. நான் நினைத்திருந்தால் அதை வாறி அள்ளி முடிந்திருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்தவனில்லை. இன்னொரு அறைக்குள் நுழைந்தேன். அறை முழுவதும் ஆபரணங்களாக இருந்தன. அதையும் நான் சீண்டவில்லை. மற்றொரு அறையில் பொற்காசுகள் குவிந்திருந்தன. அதையும் நான் தொட்டவனில்லை. மற்றொரு அறையில் நீர் உடுத்தும் விலை மதிப்புமிக்க ஆடைகளும், மற்றொன்றி்ல் போர் குறித்த ரகசிய ஆவணங்களும் இருந்தன. இவற்றில் ஏதேனும் ஒன்றை திருடியிருந்தால் உம் கேள்வி சரியென இருக்கும். நான் எடுத்தது ஒன்றிரண்டு ரொட்டித்துண்டுகள் தான் அரசே...! அதையும் நான் என் பசிக்காகதான் எடுத்தேன். பசி தணிந்தப்பிறகு மேலும் ஒரு ரொட்டித்துண்டுகளைத் தின்றிருந்தால் நீவிர் சொல்வதைப்போல நான் குற்றம் புரிந்தவனாகியிருப்பேன். மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி அடுத்தவர் ரொட்டி அரசே...! இது என் தந்தை எனக்கு சொன்னது அரசே...
ரொட்டித்துண்டுகளை எனக்காகத்தான் நான் எடுத்தேன். தின்றேன். பசி அடைந்த பின் அரண்மனைக்கு வெளியே ஒரு மரத்தடியில் உண்ட மயக்கத்தில் உறங்கினேன். உம் சிவப்புப்படை காவலர்கள் வேறு யார் யாரையோ பிடித்துவைத்துகொண்டு அடித்து உதைத்து வதைத்தார்கள். என் மனம் பொறுக்கவில்லை. நானாக முன் வந்து நான் செய்த தவறை ஒப்புக்கொண்டேன். இது எப்படி அரசே குற்றமாக முடியும்...?’
‘ அடேய்...நீ செய்தது பெருங்குற்றம்...’
‘ இல்லை அரசே....என்னை நீங்கள் மன்னித்தாக வேணும்....அது குற்றமல்ல....தவறுதான்....’ ஜாரரசன் விலங்கிடப்பட்டு நின்றுகொண்டிருந்த புஷ்கினைப் பார்த்தான். ஒரு ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதைப்போல அப்பார்வை இருந்தது.
‘ குற்றத்திற்கும் தவறுக்குமிடையில் நீ காணும் வித்தியாசம் என்ன...?’
‘ நான் பெரிதென மதிக்கும் நீதியரசர் அவர்களே...இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைப் பார்க்கிறேன்.....’
‘ அதைத்தான் கேட்கிறேன்....’
‘ சொல்கிறேன் அரசே....தாகமெடுக்கிறது...நா வறண்டுத் தவிக்கிறது.. கண்கள் இமைகளுக்குள் கனக்கிறது....ஒரு மிடற்று தண்ணீர் வேண்டும்..தாருங்கள் தாகம் தணித்துகொண்டு இரண்டிற்குமான வித்தியாசத்தைச் சொல்கிறேன்....’
ஒரு காவலன் கையில் வேலுடன் தண்ணீர் கொண்டு வர ஓடினான். ஜார் மன்னன் அவனைத் தடுத்தான். ‘ அவனுக்கு தண்ணீர் கொடுக்காதீர்....அவன் செய்திருக்கும் குற்றத்திற்கு ஒரு மாத காலம் தாகம் தணியாமல் இருக்க வேண்டும் என்பது நான் அவனுக்கு கொடுக்கும் ஒரு தண்டனை....’
தண்டனையைக் கேட்டதும் மக்கள் காதினைப் பொத்தினார்கள். செய்தி மெல்ல அரண்மனைக்கு வெளியே காதுவழியாக கசிந்துகொண்டிருந்தது. நகரம் துக்கம் தொணித்த அமைதியானது. புஷ்கின் கால்கள் ஆட்டம் கண்டன. கழுத்தில் தொங்கிய உலோகக்குண்டு அவனை தரையோடு சாய்த்தது. புஷ்கின் முட்டிக்காலிட்டு குப்புற விழுந்தான். நெற்றி அடிபட சுருண்டான்.
‘ என் அரண்மனைக்குள் நுழைந்தது ஒரு குற்றம். அரண்மனை ரகசியங்களை கண்டது இன்னொரு குற்றம். ரொட்டித்துண்டுகளைத் திருடியது இன்னொரு குற்றம். குற்றத்தின் மேல் குற்றம் செய்திருக்கிறாயடா நீ.....’
‘ எனக்கு ஒரு மிடற்று தண்ணீர் மட்டும் தாருங்கள் அரசே....’
‘ தருகிறேன்...என் இன்னொரு கேள்விக்கு பதில் சொல்....நான் கேள்விப்பட்டிருக்கும் பதிலை நீ சொல்வாயேயானால் உன்னை விடுதலை செய்கிறேன். எதாவது ஒரு மாகாணத்தின் தளபதியாக்கி அழகுப்பார்க்கிறேன்.....’
குப்புற விழுந்துக்கிடந்தவன் தலையை உயர்த்தி ஜாரரசனைப் பார்த்தான். உறைந்து உட்கார்ந்திருந்த மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
‘ விவசாயி மகனே... உன்னுடன் சேர்ந்து திருடியவர்கள் யார் யார்....?’
புஷ்கின் தலையை மேலும் நிமிர்த்தினான். தெரிந்தக் கேள்வியைக் கேட்டமைக்காக கண்களால் நன்றி நல்கினான். என்னை விடுதலை செய்துவிடுமாறு கெஞ்சினான்.
‘ நான் பெரிதென மதிக்கும் மாமன்னர் அவர்களே....என்னுடன் சேர்ந்து மூன்று தோழர்கள் திருடினார்கள்....’
ஜாரரசன் ‘வீறீட்...’டென்று எழுந்தான். அவனுடன் சேர்ந்து நீதிபதிகள் எழுந்தார்கள். அதிகாரிகள்,ஊழியர்கள் எழுந்தார்கள். ஜாரரசன் கையை ஒரு முறை தட்டிக்கொண்டான். மீசையை நீவி விட்டுக்கொண்டான். ஒரு முறை கனைத்துகொண்டான். அதே இடத்தில் நின்றவாறு குதித்தான். அதற்கும் இதற்குமாக நடந்தான். ‘என் கணிப்பு சரியாகி விட்டது. என் ஆட்சிக்கு எதிராக போல்ஷவீக் கும்பல் சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவருகிறது! காவலர்களே....என் ஆளுமையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களே...கேட்டுக்கொள்ளுங்கள்....போல்ஷவீக் பயல்கள் தேசத்திற்கு விரோதமானவர்கள். அவர்கள் கருவறுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் வேறொடு களையப்பட வேண்டியவர்கள். அவர்களின் நிழல் என் ஆட்சி பகுதிக்குள் விழுதல் கூடாது.....’
சிவப்புப்படை வீரர்கள் ஒரு சேர எழுந்தார்கள். நெஞ்சை நிமிர்த்தி நின்றார்கள். ஒன்றாகக் குனிந்து நிமிர்ந்தார்கள். ‘ மாட்சிமை தாங்கிய மாமன்னர் வாழ்க...ஜாரரசன் புகழ் ஓங்குக...’
ஜாரரசன் ஒரு கணம் அமைதியாக வீற்றிருந்தான். புஷ்கின் முகத்தைப்பார்த்தான். அவனுடைய தவிப்பையும் கெஞ்சல் துடிப்பையும் ரசித்தான். ஒரு காவலனிடம் கையை நீட்டி அவனுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுக்குமாறு பணித்தான்.
ஒரு காவலன் தண்ணீர் கொண்டு வந்தான். இன்னொரு காவலன் அதை வாங்கி புஷ்கின்  வாயினில் ஊற்றினான். தண்ணீர் நூலிழையாக தொண்டைக்குள் இறங்கியது.
‘ அடேய்...புஷ்கின்....நீ மிக விரைவில் விடுதலையாகப் போகிறாய்....தாமதிக்காதே....உன்னுடன் சேர்ந்து திருடியவர்கள் யார் யாரென சொல்லி முடி...’
‘ அந்த மூவருமே என் தோழர்கள் அரசே....?’
ஜாரரசனின் முகம் இருண்டது. பற்களைக் கடித்தான். கண்களை உருட்டி விழித்தான். ‘அவர்கள் யார் யார்....?’
‘ சொல்கிறேன் அரசே....அதற்கு முன் பசியாற எனக்கு இரண்டு ரொட்டித்துண்டுகள் வேணும்....’
ஒரு காவலன் ஓடினான். ஒரு தட்டில் சில ரொட்டித்துண்டுகளை எடுத்து வந்தான். அதை ஒவ்வொன்றாக எடுத்து பஷ்கின் வாயினில் திணித்தான். புஷ்கின் பசியாறினான். தண்ணீர் பருகினான்.
‘ வேறு என்ன வேணும்....சொல் தருகிறேன்....?’
‘ போதும் பேரரசே.....’ புஷ்கின் தலை குனிந்து நன்றி நல்கினான்.
‘ சொல். அவர்கள் யார் யார்....?’
நீதிமன்றம் நிசப்தமானது. மக்கள் விதிர்விதிர்த்து உட்கார்ந்தார்கள். அவர்களின் ஆசுவாசமான மூச்சு நின்று பேருமூச்சாக நெஞ்சுக்குள் அடைத்து நின்றது. ‘ இவன் தொலைகிறான் என்றில்லாமல் யார் யாரையோ காட்டிக்கொடுக்கப்போகிறான்...இவன் படுபாவி.! இவனுக்காக நாம் இரக்கமுற்றோமே....இவன் கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டியவன்....துரோகி....’ மக்கள் தொண்டைக்குள் பேசிக்கொண்டார்கள்.
புஷ்கின் மெல்ல எழுந்தான். மக்களைப் பார்த்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்றவாறு கெஞ்சி நின்றான். ‘ அரசே....என்னுடன் சேர்ந்து திருடியவர்கள் மூன்று தோழர்கள்....’
‘ ஆம்...சொல்....அவர்கள் யார் யார்....?’
‘ முதல் தோழர் அடர் இருட்டு.’
ஜாரரசன் வெகுண்டான்.
‘ இரண்டாவது தோழர் சிட்டெனச் சீறிப்பாயும் ஒரு குதிரை...’
அவன் முகம் இருண்டது.
‘  மூன்றாவது தோழர் ஓர் வில். அத்துடன் சில அம்புகள்....’
‘விராட்...’ டென்று எழுந்தான் ஜாரரசன். ஒன்றிரண்டு பேர் சிரித்திருந்தார்கள். இன்னும் சிலர் சிரிப்பை கொடும்பிற்குள் அடைத்தார்கள்.
‘ அடேய்.விவசாயி மகனே...நீ நன்றாகப் பேசுகிறாயடா..என் நீதி மன்றத்து அவையில் இதற்கு முன் எவனும் இப்படி  பேசியதில்லையடா. .உன் பேச்சுத் திறமையைப் பாராட்டுகிறேன். அத்துடன் உனக்கு நான் மூன்று பரிசுகள் தருகிறேன்.
முதல் பரிசு கிடைமட்டமாக ஊன்றப்பட்ட இரண்டு கம்பங்கள்.
இரண்டாவது பரிசு அதன் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சட்டம்.
மூன்றாவது பரிசு அதில் தொங்கும் ஒரு கயிறு’
ஜாரரசன் அம்பென அம்மன்றத்திலிருந்து  வெளியேறினான். இது அவனது கடைசி வெளியேற்றம்!


வியாழன், 10 ஆகஸ்ட், 2017

எது வாழ்க்கை?

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்.

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*்.

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*,

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."


இந்தியை இடித்துக்கட்டுதல்

‘ பிரெஞ்ச் மக்களே, வாருங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வோம். ஆங்கிலேயர்களைப் பார்த்து உம் ஆங்கிலம் எமக்குத் தேவையில்லை எனச் சொல்வதற்கு நமக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்...’ 
பிரெஞ்சு மொழியில் ஆங்கிலம் கலப்பதற்கு எதிரானப் போராட்டத்தில் அறிஞர் டி.எஸ். எலியட் ஆற்றிய உரை இது. அவர் உரையாற்றி முடித்து கீழே இறங்குகையில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழியைக் காப்பாற்ற போராடும் நாம் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளச் சொல்வது நம் மொழிக்குச் செய்கிறத் துரோகம் இல்லையா...?. எலியட் சொன்னார். ‘வேண்டும் என்பதை நம் மொழியில் சொல்லத் தெரிந்த நாம் , வேண்டாம் என்பதை அவன் மொழியில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்...’ 

தமிழர்களின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தன் வாழ்நாட்களின் பிற்பகுதியை இந்தி எதிர்ப்பிற்காகக் கழித்தவர். ஆனால் ஒரு முரண் என்னத்தெரியுமா..? அவர் தொடக்கத்தில் தன் சொந்த செலவில் இந்திக்கென்று பள்ளி நடத்தியவர் அவர். 1922 ஆம் ஆண்டு அவரது வீட்டிற்கு டாக்டர் அன்சாரி, விட்டல்பாய் படேல், பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வந்து சென்றதற்கு ஞாபகார்த்தமாக ஒரு பதிய காரியம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த பெரியார் இந்தியை இன்றுமுதல் சில பிள்ளைகளுக்கு தன் சொந்தச் செலவிலேயே கற்றுக்கொடுக்கலாம் என முடிவு எடுத்தார். அதன்படி முப்பது பேர்கள் கொண்ட பள்ளியைத் தொடங்கி பதினைந்து ஆசிரியர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இரண்டு ஆசிரியர்களை நியமித்தார். பதினைந்து மாணவர்களின் தங்கும் மற்றும் உணவு செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. மற்றக் குழந்தைகளுக்கான செலவு இவருடையது. அவரது தகப்பனார் சமாதிக்கு அருகாமையிலுள்ள கட்டிடமே பள்ளிக்கூடமாகச் செயல்பட்டது. பாடம் ஆறுமாதம் நடத்தப்பட்டிருந்தது. குழந்தைகள் இந்தியின் வழியில் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தொடங்கினார். அவர்கள் இந்தியில் வேதங்களைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்பள்ளியை அத்துடன் நிறுத்தியிருந்தார். ஓரளவு இந்திப்படித்த மாணவர்களைக் கொண்டு இந்தியில் எதிர்ப்பு தெரிவிக்க வைத்தார். ‘ உங்கள் வடநாட்டு இந்தி, எங்கள் திராவிட நாட்டிற்கு தேவை இல்லை’
தமிழ்நாட்டில் எப்பொழுதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் பெரியாரின் பெயர் தவறாமல் அடிபடும். ஒரு முறை பெரியாரிடம் கேட்டார்கள் ‘ நீங்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள். ஆங்கிலத்தை ஈர்க்கிறீர்கள்....’என்று. பெரியார் சொன்னார் ‘ இந்தியில் திதி, திவசம், கன்னியாதானம், கருமாதி, பூசுரர் - வான்சுரர், மோட்சலோகம் - நரகலோகம், பிராமணன் -  சூத்திரன், தேவதாசி,..போன்ற சொற்கள் இருக்கின்றன. அதனால் அதை எதிர்க்கிறேன். இத்தகைய சொற்கள் இல்லாத ஆங்கிலத்தை விரும்பி ஈர்க்கிறேன்...’
பெரியார் இல்லாமல் நடக்கும் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு இதுதான். இது இந்திக்கு எதிரான நான்காவது போராட்டம். அன்றைய இந்திக்கு எதிரானப் போராட்டம் என்பது இந்தி எதிர்ப்பு போராட்டம். அதிலும் மூன்றாம் கட்டப்போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மேற்குவங்காளம் என பரந்துபட்ட போராட்டமாக எழுந்தது. இப்போராட்டம் நீண்ட கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட ஆட்சிக்கு வழி வகுத்தது. இன்றைக்கு நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் துளிர்விடும் இந்திக்கு எதிரானப் போராட்டம் அத்தகையப் போராட்டம் அன்று. இது இந்தி திணிப்பிற்கு எதிரானப் போராட்டம். முன்னது இந்தி எந்த வடிவத்திலும் வேண்டாம். பின்னது தேவைக்கு ஏற்ப கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்...கட்டாயப்படுத்தினால் எப்படி...? 
ஏன் இந்த இறக்கம்...? இந்திக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களின் வாரிசுகள் இன்றைக்கு ஹிந்தியில் சகலகலா  வல்லவர்களாக இருக்கையில் நாம் ஏன் இந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்கிற கேள்வியின் விளிம்புதான் காரணம். அவர்கள் ஹிந்தியின் தேவையை உணர்ந்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் டெல்லியில், ஆட்சியில், அதிகாரத்தில், நிர்வாகத்தில், வியாபாரத்தில் ஆழமாக காலூன்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதன் விளைவுதான் ‘ இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக பரிணாமம் அடைந்திருக்கிறது. 
மார்க்சிய தத்துவத்தில் ஹெகலின் இயக்கவியல் முரண் கோட்பாடு என்று ஒன்று உண்டு. முட்டைக்குள் இருக்கும் மஞ்சள் கரு குஞ்சாக மாற முட்டைக்கு ஓடு தேவை. அதே ஓடுதான் முட்டைக்குளிலிருந்து குஞ்சு வெளியில் வர தடையாகவும் இருக்கும். சமஸ்கிருதம் தமிழகத்தில் எடுபடாத மொழியாக மாறிப்போனதற்கு காரணம் இயக்கவியல் முரண் கோட்பாடுதான். அன்றைய மெட்ராஸ் சர்க்காரில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் இராமேஸ்வரம் மற்றும் திருப்பதியில் இருந்தன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் வர்ணாசிரம கட்டமைப்பில் சூத்திரர்களும், பஞ்சமார்களும் படிக்கக்கூடாத மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. இவர்கள் சமஸ்கிருதம் படித்தால் அவர்களின் நாக்கு அறுக்க வேண்டும். காதினில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என வேதங்கள் சொல்லியிருந்தன. 
மற்றொன்று இதை விடவும் சூழ்ச்சியானது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் காலம் வரைக்கும் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவத்துறைக்கான விண்ணப்பத்தில் சமஸ்கிருதம் தெரிந்த ஒருவர் மட்டும்தான் மருத்துவம் படிக்க தகுதியானவர் என்கிற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் சமஸ்கிருதத்திற்கும் ஆங்கிலத்தில் படிக்கும் அலோபதி மருத்துவத்திற்கும் என்னத் தொடர்பு...? என்கிற கேள்வியோடு அக்குறிப்பை அடியோடு நீக்கியிருந்தது. இதற்குப் பிறகே மருத்துவம் எல்லோருக்குமான படிப்பானது. பிராமணர்களுடன் போட்டிக்கு நிற்கும் மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியேற்ற தேவைப்படும் மொழியாக இருந்ததுதான் சமஸ்கிருதம். அன்றைக்கு தலைத்தூக்கியிருந்த வேணும், கூடாது என்கிற பாகுபாட்டின் வடுதான் இன்றைக்கும் நம்மை சமஸ்கிருதத்திலிருந்து மெல்ல, மெல்ல நம்மை விலக்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தேசிய அளவில் நீட் தேர்வு நடைபெற்றது இல்லையா! இத்தேர்வு எழுதுவதற்கு அடிப்படைத் தகுதி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தால் எப்படி இருக்கும்...? அப்படியாகத்தான் அன்றைக்கு மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையென இருந்தது. 
சரி! சமஸ்கிருதம் வெறுப்பிற்கு காரணம் இருக்கிறது. இந்தியை ஏன் நாம் எதிர்க்க வேண்டும்....?. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் மொழியில் சொல்வதாக இருந்தால் ‘ சமஸ்கிருதத்தின் வாலறுக்கப்பட்ட நரிதான் இந்தி’
சிலர் இந்தி தேசிய மொழி என்கிறார்கள். தேசியம் என்கிற ஒன்று இந்தியாவில் இல்லைவே இல்லை. என்றைக்கு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றைய தினமே தேசியம் என்கிற சொல் சடமாகிவிட்டது. தேசியம் என்பது ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றைக் கலாச்சாரம் கொண்டது. அதை கட்டமைக்கும் வேலையில்தான் இன்றைய ஆளும் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
‘இந்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் தமிழ்மொழி அழிந்துபோய்விடுமா...?’ பெரியாரிடம் கேட்டார்கள். பெரியார் சொன்னார். ‘ தமிழை அழிக்க இந்தியால் முடியாது. ஆனால் இந்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் திராவிட கலாச்சாரம் சிதைந்துபோய்விடும்...’ என்றார். இந்தி என்பது உருது மற்றும் பாரசீக மொழிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மொழி. இந்தியால் திராவிட நாட்டில் துளசிதாஸ் இராமாயணம் படிக்கலாம். சாதிகளை வளர்க்கும் வேதங்கள் படிக்கலாம். நம் திராவிடர்களுக்குத் தேவை அது இல்லை. இராக்கெட் என்பது இந்தியில் உண்டு. ஆங்கிலத்திலும் உண்டு. இந்தியில் உள்ள இராக்கெட் மந்திரத்தால் இயங்கக்கூடியது. ஆங்கிலத்தில் உள்ள இராக்கெட் எந்திரத்தால் இயங்கக்கூடியது. நமக்குத் தேவை இந்தியா, ஆங்கிலமா...? குடிஅரசு தலையங்கத்தின் அவர் எழுதிய  கட்டுரை இது. 
இந்தி 96 வகைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முரண்பாடுகளைக் கொண்டவையாக இருக்கிறது. அதில் ஒரு வகை தேவநாகரி ( தேவ - கடவுள் , நாகரி - நகரம் )இந்தி.  அதாவது கடவுளின் நகரத்து மொழி என்பது அதன் பொருளாகும். இந்தி மட்டுமல்ல சமஸ்கிருதம், மராட்டி, குஜராத்தி, காஷ்மீரி, சாந்தாலி, சிந்தி மொழிகள் யாவும் அவ்வகையைச் சார்ந்த மொழிகளாகவே காட்டப்படுகிறது. சிலர் இம்மொழிகள் கிமு 500 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பிராமி எழுத்தின் நீட்சி என்கின்றார்கள் . பலர் அதை மறுக்கின்றனர். மேலும் இது அபுகிடா  என அழைக்கப்படும் எழுத்து முறை வகையைச் சார்ந்தது. ஒரு எழுத்தை வைத்துக்கொண்டு அதன் வடிவத்தை நீட்டுவதன் மூலம் புதிய புதிய எழுத்துகளை உருவாக்கும் வகையைச் சார்ந்த மொழி அது.
தற்போது பேச்சு, எழுத்து வழக்கத்தில் இருக்கும் இந்தி தேவநாகரி வடிவம் அல்ல. கடிபோலி வடிவம். அதாவது முகலாயர்களின் வருகைக்குப்பிறகு உருவான கலப்பின மொழிதான் கடிபோலி. இது உருது மொழியின் கிளை மொழியாகும். 1867 ஆம் ஆண்டிற்கு முன்பு  இந்தியின் பேச்சு மற்றும் எழுத்து வடிவம் தேவநாகரி அதன்பிறகு கடிபோலி. கடிபோலி எழுத்து வடிவம் வளர்ந்தக்காலம் ‘துவிவேதி யுகம்’ என அழைக்கப்படுகிறது.
கடிபோலி இந்தியை வளர்த்தெடுத்தவர் மகாவீரர் பிரசாத்து துவிவேதி ( 1868 - 1938 )  அவர்கள். அவர் உருது வடிவத்துடன் கூடிய இந்தி மொழியை வளர்த்தெடுத்தார். உருது மொழியுடன் இந்தி கலைச்சொற்களை இணைத்து நவீன இந்தியை உருவாக்கினார். அவ்வடிவின் வாயிலாக  கவிதை நூல்களை இயற்றினார். ‘விதி விடம்பனா’,‘ குமார சம்பவ சாரம் ’முதலிய உயர்ந்த கவிதை நூல்கள் கடிபோலி வடிவ இந்தி நூல்களாகும்.
 இந்தியின் தேசிய கவிஞரான  ‘மைதிலி  சரண் குப்தா’ அவர்களின்  ‘சாகேத்து’, ‘யசோதரா ’ போன்ற காப்பியங்களும் இன்றைய நவீன இந்தி இலக்கியங்களும் கடிபோலி இந்தி வடிவத்தால் ஆனவை. ஆனால் இந்தியின் வேதம் என அழைக்கப்படக்கூடிய ரிக், யஜுர் வேதங்கள் தேவநாகரி வடிவத்தலானவை. 
மத்திய இந்தியாவில் அதாவது டெல்லி, லக்கோ ,... பகுதிகளில் கடிபோலி இந்தியும் மற்ற பகுதிகளில் தேவநாகரி இந்தியும் பேசும் மொழியாக இருக்கின்றன. டெல்லி வாழ் மக்கள் பேசுகின்ற இந்தி காஷ்மீர் வாழ் இந்து பண்டிட்களுக்கு புரியாது. மக்கட்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்திய சுதந்திரத்தின் போது கடிபோலி இந்தி பேசுபவர்கள் அதிகமாக இருந்தார்கள். என்வே சுதந்திரத்திற்கு பிறகு கடிபோலி வடிவ இந்தி நிர்வாக மொழியாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தேசிய மொழியாக  அல்ல.  ஆனால் தேவநாகரி இந்தி பேசுபவர்கள் அன்று முதல் இன்று வரை கடிபோலி இந்தியைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.. இதற்கிடையில்  கடிபோலி இந்தி உருது மொழியின் கிளை மொழி என்பதால் அம்மொழியை புறக்கணித்து தேவநாகரி வடிவம் கொண்ட இந்தியை பரவலாக்கும் முயற்சி நடந்தேறி வந்தது. சமீபத்தி்ல் மத்திய அரசு நிறுவிய அரசிற்கான இணையதளம் தேவநாகரி வடிவிலானது. அதாவது உருது மொழி கலப்பற்ற இந்தி அது. 
 காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் அவர் ‘இந்துஸ்தானி’ என்கிற கலப்பு மொழியின் தேவையை அவர் வலியுறுத்தினார். ஆனால் அவர்காலத்திலேயே இந்தியில் இருந்த பாரசீகம், உருது மொழிகள் அகற்றப்பட்டு தூய வடிவ சமஸ்கிருதம் மொழியுடன் கூடிய இந்தியை உருவாக்கினார்கள். காந்தி பேசிய இந்தி கீழ் இந்தி வகையைச் சேர்ந்தது. 
இன்றைக்கு நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணித்ததில் பண்டித நேரு அவர்களுக்கு இருந்த நோக்கமும், இன்றைக்கு மோடி அரசுக்கு இருக்கும் நோக்கமும் வேறு , வேறு. நேரு காலத்தில் அவர் கடிபோலி மொழியை முன்மொழிந்தார். இந்தி என்கிற ஒற்றை நூழிலையின் வாயிலாக இந்திய மாநிலங்களை கோர்த்துவிடலாம் என நினைத்தார். அவரது கனவு மெல்ல நிறைவேறிக்கொண்டு இருந்தன. வட சென்னைக்கு வடக்கு இந்தி தன் ஆளுமையைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இந்தி பரவலாக பேசப்படும் மொழியாகியிருக்கிறது. ஆனால் அவர்கள் பேசுவது கடிபோலி இந்தி. அவற்றை முறியடித்து தேவநாகரி இந்தியை விதைக்கும் வேலையில் இன்றைய மோடி அரசு செயல்படுத்த நினைக்கிறது. 
இந்தி எதிரிப்புக்கு விதை இட்டது அன்றைய மருத்துவ படிப்புதான். 1937 ஆம் ஆண்டு காங்கிரசு அமைத்த முதல் அரசாங்கத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க திட்டமிட்டது. வட நாட்டு காங்கிரஸ்க்காரர்களை திருப்திப் படுத்த இந்த கொள்கை முடிவு அவர்களுக்கு தேவையென இருந்தது. 
சென்னை மாநிலத் தமிழர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 26 - 1937  நாளன்று கூடியது. கி. ஆ.பெ. விசுவாதம் செயலளராகவும், பசுமலை பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார் மாநாட்டு தலைவராகவும் இருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ‘இந்திக்கு எதிரான முதல் மாநாட்டு தீர்மானமாகும்.’
இந்தி தமிழ்நாட்டிலிருந்து பின்வாங்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப்போரும் காரணமாக இருந்தது என்பது வியக்கத்தக்க ஒன்று. அன்றைய ஆளும் காங்கிரசு அரசு 21.04.1938 ஆம் நாள் ஆணைப்படி தமிழகத்தில் 60 பள்ளிகள், ஆந்திரத்தில் 54, கன்னட நாட்டில் 4, கேரளத்தில் 7 என மொத்தம் 125  பள்ளிகளில் முதல் மூன்று வகுப்புகளுக்கு இந்தி கட்டாய மொழியாகத் திணிக்கப்பட்டது. இந்த ஆணையை எதிர்க்க சென்னை மாநில இந்தி எதிர்ப்பு உரிமை அணையம் என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தமிழக அறிஞர்களைக் கொண்டு கிளை அமைப்புகள் அமைத்து இந்தி கற்பிக்கும் பள்ளிகள் முன்பு இந்திக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தி தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ்க்காரர்கள் இந்தியா இரண்டாம் உலகப் போரில் கலந்துகொள்கிறது என அறிவித்ததும் ஆங்கிலேயர்களுக்கும் - காங்கிரஸ்காரர்களுக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு மெட்ராஸ் சட்டமன்றத்திலிருந்து விலகிக்கொண்டனர். மாநிலத்தின் நிர்வாகம் ஆளுநர் கைக்கு சென்றது. இக்காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் இந்திக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் நடந்தேற போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு ஆளுநர் இந்தியை தற்போதைக்கு பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்தார். 
இந்திய விடுதலைக்கு பிறகு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் முதல் அமைச்சரவையில் 20.06.1948 ஆம் நாளன்று அரசாணையில் இந்தி கட்டாயப் பாடமாக ஆணைப் பிறப்பித்தது. இதன் பிறகு இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் கிளர்ந்தெழுந்தது. அப்பொழுது ஓமந்தூர் இராமசாமி பெரியாரை நேரில் அழைத்து சொன்னார் ‘ நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்...உங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ளுங்கள்...’ எனக் கேட்டுக்கொண்டும் பெரியார் இந்திக்கு எதிரானப் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக இல்லை. இந்த போராட்டம் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் அவர்களுக்கு எதிரான போராட்டமாக அமைந்ததால் அவினாசிலிங்கம் தன் பதவியை ராஜினாமா செய்ததும் இந்தி இரண்டாவது முறையாக பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. 
 அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் இந்தி மட்டுமே ஆட்சியாக விளங்கும் என்றும் ஜனவரி- 26 1965 முதல் இந்தி கட்டாய மொழி என்றும்  அறிவிப்பு செய்தார். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டிற்கு வருகையில் திமுகவினர்களால் அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ஹைதரபாத்தில் அவர் பேசுகையில் தமிழர்கள் காட்டிய கறுப்புக்கொடிக்கு பதில் சொல்லும் பொருட்டு‘ இந்தி பேசா மக்களின் இடர்கள் உணர்ச்சிகள் பறக்கணிக்கப் படமாட்டா’ என்று உறுதியளித்தார்.
மூன்றாம் கட்ட எதிர்ப்பு போராட்டம் மிக முக்கியமான எதிர்ப்பு போராட்டமாக அமைந்தது. இந்தி பேசாத மாநிலங்களிலிருந்த ஆங்கிலம் மாற்று மொழியிலிருந்து துணை மொழியாக கீழிறக்கப்பட்டது. பிறகு அது இணை மொழி என்றானது. இதற்கு பிறகு கூடிய திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மொழிப்பிரிவின் 17 ஆவது பகுதியை வெளிப்படையாக அறிவித்து விட்டு பொதுக்கூட்டத்தில் கொளுத்துவேன்’ என அறிவித்திருந்தார். அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர் மீ. பக்தவத்சலம் அவர்கள். மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய போராட்டமாக இது மாறியது. பலர் தீக்குளித்தனர். இப்போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கன்னடம், மேற்கு வங்காளம் எனப் பரவியது. இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு இந்திராகாந்தி இந்தி எதிர்ப்பு மாநிலங்களுக்கு விரைந்து சென்று இந்தியை விலக்கிக்கொள்வதாக உத்திரவாதம் அளித்ததும் மாணவர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தது. இந்த மாணவர்களின் எழுச்சிதான் திராவிட ஆட்சிக்கு வழிக் கோலியது. 
ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதால் ஏற்படும் விளைவுகளை அவ்வபோது உலக நிகழ்வுகள் காட்டிக்கொண்டிருந்தன. ஒன்றுபட்ட பாகிஸ்தான் உருது மொழியை ஆட்சி மொழியாகவும், தேசிய மொழியாகவும் திணிக்க முற்பட்டதன் விளைவுதான்  வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உதயமானது. ஒன்றுபட்ட சோவியத் யூனியனில்  ஒற்றை மொழி மாகாணம் முழுமைக்கும் திணித்தால் நாடு பல நாடுகளாக சிதைந்து போய்விட வாய்ப்புண்டு என்பதை அவர் லெனின், ஸ்டாலின் புரிந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் மொழி ஆதிக்கம் தலைத்தூக்க அந்நாடு உடையவும் செய்தன. இலங்கையில் முதல் பிரிவினைவாதமே சிங்கள மொழியைத் திணிப்பதில் தொடங்கியது. 
இந்தி திணிப்பு ஆதரவாளர்கள் கேட்கின்ற ஒரு நியாயமான கேள்வி ஒன்றுண்டு. அந்நியர்களின் மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் நம் நாட்டின் மொழியான இந்தியை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது...? 
இந்தியாவை ஆங்கிலேயர்கள் மட்டும் ஆளவில்லை.ஒரு பகுதியை ப்ரெஞ்சுக்காரர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் ப்ரெஞ்சு மொழி தழைக்காமல் ஆங்கிலம் ஆழமாகக் கால் ஊன்ற காரணம் என்ன...? காஷ்மீரை ஆங்கிலேயர்கள் ஆளவில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் ஆங்கிலம் விரும்பிக் கற்றுக்கொள்ளவும், பேசவும் செய்வதற்கானக் காரணம் என்ன...?. இன்றைய உலகம் அரசியல், மருத்துவம் என்கிற இரண்டு அச்சுகளில் இயங்கக்கூடியது. அரசியல் கிரேக்கச் சொற்களாலும், மருத்துவம் இலத்தீன் சொற்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு மொழிகளையும் உள்வாங்கி உருவான மொழி ஆங்கிலம். ஆகவே ஆங்கிலத்தின் தேவை உலகத்தின் தேவையென இருக்கிறது. 
‘இந்தியிலும் ஆங்கிலத்திற்கு நிகரான கலைச்சொற்கள் இருக்கின்றன’ எனச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். ‘இருக்கினறன என்பதை விடவும் இருந்தது’ என்பதே சரியானப் பதமாக இருக்க முடியும். கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கு நிகரான மொழிகளாக இருந்த அன்றைய மொழிகள் பாரசீகம் மற்றும் உருது. இவ்விரு மொழிகளும் சமஸ்கிருதத்துடன் இணைந்து உருவான மொழிதான் இந்தி. ஆனால் இன்றைக்கு இந்தி ஆதிக்கவாதிகளால் திணிக்கப்படும்  தேவநாகரி என்கிற இந்தி உருது, பாரசீகம் நீக்கப்பட்ட இந்தி. அதாவது சமஸ்கிருத இந்தி. இந்த இந்தி வேதம் படிக்கவும் இந்து அடைப்படையிலான சட்டத்தர்மங்கள் பேசவும் மட்டுமே பயன்படுமே ஒழிய உலக அரசியலுக்கும் உலக மருத்துவத்திற்கும் உதவாத மொழி அது. இன்னும் சொல்லப்போனால் ஒப்பீட்டு அளவில் மருத்துவம் மற்றும் அரசியலுக்கு தமிழில் இருக்கும் கலைச்சொற்கள் தேவநாகரி இந்தியில் கிடையாது. இம்மொழியை யாரும் கற்றுக்கொள்ள தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவரரவர் தேவைச்சேர்ந்து பிறதொரு மொழியைக் கற்றுக்கொள்ளவும், பேசவும் செய்கிறார்கள். அதிலென்று இந்தி மொழியாகவும் இருக்கிறது. அம்மொழியை கட்டாய மொழியாக திணிக்கையில்தான் அதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு உள்ளாகியிருக்கிறது. 
இக்கட்டுரையின் வாயிலாக கடைசியில் ஒரே ஒரு கேள்வி. இராமர் ஆட்சியை அமைத்துகொண்டிருக்கும் இன்றைய மத்திய அரசு இராமன் - சீதை பேசிய மொழியாகப் பாவிக்கப்படும் மைதிலி மொழியை தேசிய மொழியாக்க முயற்சிக்காமல் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேவநாகரி இந்தியை கடை விரிப்பதன் பின்னணி என்ன...?