செவ்வாய், 19 டிசம்பர், 2017

கட்டுரை


                முன்னத்தி ஏருக்கோர் அஞ்சலி
-----------------------------------------------------------------------------------------
பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தேறிய சம்பவம் இது. நான், நூலகத்திற்கு தொடர்ந்து செல்லத் தொடங்கிய காலம் அது. நூலகத்தில் ஆனந்த விகடன் இதழ் இருந்தது. அதில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதையொன்று பிரசுரமாகியிருந்தது. அடுத்து கல்கி இதழைப்பிரித்தேன். அதிலும் அவரது கதை இருந்தது. அடுத்ததாக என் கவனம் குமுதத்தின் பால் சென்றது. அதில் பிரசுரமாகியிருந்த கதையும் அவருடைய கதையாகவே இருந்தது.
       முந்தைய வாரம் குமுதம் இதழில் புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை வாசித்திருந்தேன். அதற்கும் இந்த வாரம் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதை மூன்று இதழ்களில் பிரசுரமாகியிருந்ததற்கும் நான் விபரீதமாக யோசித்தேன். இக்கதைகள் மூன்றும் மேலாண்மை பொன்னுசாமியின் நினைவுச்சிறுகதைகள் என்று.
       மூன்று கதைகளை வாசித்ததும் மேலாண்மை பொன்னுசாமியின் குடும்பத்தார்களிடம் பேசலாமென்று அழைப்பு விடுத்தேன். அவருடைய அலைப்பேசி எண்ணை நூலகத்திலிருந்து கிடைக்கப்பெற்றேன். எதிர்க்குரல் மெல்லியக் குரலாக ‘ நான் மேலாண்மை பொன்னுச்சாமி பேசுறேன்.....’ என்பதாக ஒலித்தது.
       அய்யோ! இவர் இறந்து விட்டார் என்றல்லவா நினைத்துவிட்டேன் என்பதாக அதிர்ச்சிக்கு உள்ளான நான் அவரிடம் சற்றும் யோசிக்காமல் கேட்டுவைத்துவிட்டேன்..‘ நீங்க இன்னும் உயிரோடுதான் இருக்கீங்களா...?’ என்று. அவரிடமிருந்து பெரும் மூச்சு மட்டுமே வந்திருந்தது. தடித்த உச்சரிப்பில் கேட்டார் ‘ நீங்க யார்...?’
       ‘ நான் புதுக்கோட்டை சிறுகதை வாசகன். நீங்க மேலாண்மை பொன்னுச்சாமி தானே...?’
       ‘ ஆமாம்...’
       ‘ இந்த வாரம் ஆனந்த விகடன், குமுதம், கல்கியில் கதைகள் வந்திருக்கிறதே அது உங்கள் கதை தானே...?’
       ‘ ஆமாம்...!’
       ‘ மன்னிக்க வேணும். கடந்த வாரம் குமுதத்தில் புதுமைப்பித்தன் நினைவுச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதைத் தொடர்ந்து  இந்த வாரம் உங்கள் கதை வந்ததும் நினைவுச்சிறுகதை என்று நினைத்து விட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்...’ என்றேன்.
       அவர் ஒரு எதிர்வினையாற்றலுமில்லாமல் அலைபேசியை அணைத்து வைத்தார். அவரிடம் அப்படியாகக் கேட்டக் குற்றவுணர்வு அவரது படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கவும், அவரிடம் உரையாடவும் செய்தது.
       தமிழகத்திலிருந்து வெளியான அத்தனை இதழ்களிலும் அவரது கதைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்திருக்கிறது. காலச்சுவடு என்கிற ஒரு இதழைத் தவிர. தானொரு கம்யூனிஸ்ட் எழுத்தாளரென அறிவித்துக்கொண்ட ஒருவரின் எழுத்தை தமிழகத்திலிருந்து வெளிவரும் அத்தனை இதழ்களும் கொண்டாடியது என்றால் அது மேலாண்மை பொன்னுசாமியின் எழுத்தை மட்டும்தான். அவரை  விடவும் வலுவானக் கருக்களை எடுத்துகொண்டு கதையாக்கிய எழுத்தாளர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருந்தாலும் போட்டிக் கதைகளின் வழியே பட்டித் தொட்டியெங்கும் தன்னை கவனிக்கும் படியாகச் செய்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி.       அவர் கலந்து கொண்டு பரிசு பெறாத போட்டிகளே இல்லை என்று சொல்லலாம். அதைத் தாண்டியும் அவரது கதைகள் வாசகர்களிடம் ஆணிவேர் விடுமளவிற்கு அவரது எழுத்தில் மண்ணும், ஈரமும் இருந்தது. மானாவாரிப்பூ, சிபிகள், மானடப்பிரவாகம்....என தொகுப்புகளை வாசித்து அவரிடம் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன்.
       அவரது சிறுகதைகளில் எனக்கு பிடித்தக் கதை ரோஜாக்னி, அரும்பு, இரண்டையும் சொல்லலாம். ரோஜாக்னி இறந்து போன மாட்டை அறுத்து தின்னும் மக்களைப் பற்றியக் கதை. இக்கதையில் மாடு வெட்டப்படும் காட்சியும், அக்கறியைச் சமைத்து தின்னும் காட்சியும் கண் முன்னை விரிந்து நிற்கும். அவரது கதையிலிருந்து மனதை விட்டு நீங்காத கதாப்பாத்திரம் என்றால் அவள் ‘செல்லி’.
       அரும்பு என்கிற கதையில் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்குப்போகும் ஒரு சிறுமிதான் செல்லி. சிறுமிகள் இனி வேலைக்கு வரக்கூடாது என்றும் அதிகாரிகள் இப்பொழுதெல்லாம் தொழிற்சாலைகளைக் கண்காணிக்கிறார்கள் என்றும் தொழிற்சாலை நிர்வாகம் சொல்லிவிட அவரது குடும்பம் தவியாய் தவிக்கும். செல்லி வேலைக்குச் சென்றால் மட்டும்தான் குடும்பம் பசியாற முடியும். கதையின் கடைசிப் பத்தி இவ்வாறு பேசும்.
       ‘ என்ன செல்லி , வேலைக்கு வரலியா?’
       ‘ வாரேன்’ உயிரில்லாமல் முனங்கினாள்.
       ‘ தாவணி?’
       ‘ மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும்’ சத்தமில்லாத தெருவில் , சத்தமில்லாமல் நடந்தனர்.
       இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்சின் ஹாரன்.
       ஒரு பிரேதத்தைப்போல....அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது, அந்த அரும்பு.

       இக்கதையை வாசிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கவே செய்யும். தாவணி என்பது பூப்பெய்ததற்கு பின் அணியக் கூடிய ஆடை என்று. ஆனால் குடும்பத்தின் வறுமை பூப்படைவதற்கு முன்பாக அவ்வாடையை அணிவித்திருக்கும்.
       மேலாண்மை பொன்னுச்சாமி முதலில் ஜெயகாந்தன் கதைகளைத் தொடர்ந்து வாசித்து வந்ததாகவும் அவரைப்போலவே முதலில் கதைகள் எழுதியதாகவும் பிறகு அப்படியான நடைப்போக்கு தனக்கான அடையாளத்தைத் தராது என்று உணர்ந்த நான் இன்னும் சற்று எளிய நடைக்கு மாற்றிக்கொண்டதை அவர்  பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
       மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் பாமர மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் எழுத்தாளர்கள் மத்தியில் சில விமர்சனங்களைச் சந்திக்கவே செய்தன. அவர் ஒரு முறை கி.ரா வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் எழுத்தாளர் அம்பையைச் சந்திக்க நேரிட்டது. அம்பை சொன்னாராம் ‘ மேலாண்மை பொன்னுச்சாமி என்ன நீங்கள் கதை எழுதுகிறீர்கள். உங்கள் கதை எனக்கு பிடிப்பதே இல்லை. உங்கள் கதைகளில் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருக்கிறது. ஆனால் உங்கக் கதையைத்தான் பத்தரிக்கைகள் கொண்டாடுகின்றன. எனக்கு அதில் உடன்பாடே இல்லை...’ என்று அலுத்துக்கொண்ட அவர் கொஞ்சத் தூரம் சென்று திரும்பி வந்தவர் ‘ ஆனாலும் பொன்னுச்சாமி என் அம்மாவிற்கு பிடிப்பது என்னவோ உங்கக்கதைதான்...’ என்றார். ஒரு சிறுகதை எழுத்தாளர் பார்வையில் ஒரு விதமாகவும், வாசகர்கள் மத்தியில் வேறொரு விதமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு எழுத்தாளர் வாசகரின் மனநிலையைக் கருத்தில் கொண்டே கதையாக்கம் செய்ய வேண்டும் என்றார்.
       அவர் சிறுகதைக் குறித்து அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்றுண்டு . ‘ சிறுகதை, வடிவத்தால் அடையாளப்பட்டு , உள்ளடக்கத்து நேர்மையால் அர்த்தப்பட்டு அழகாகும். கவிதையில்லாத - நாவலல்லாத - கட்டுரையல்லாத  வடிவத்தில் சிறுகதைக்குரிய வடிவத்தில் இருக்க வேண்டும்’.  சின்னதாக இருப்பதால் அல்ல சிறுகதை. சிறுகதை, ஐம்பத்து மூன்று பக்கம் கொண்ட ஆறாவது வார்டு என்ற ஆண்டன் செகாவ் எழுதிய படைப்பும் சிறுகதைதான். இரண்டரைப் பக்கம் மட்டுமே கொண்ட புதுமைப்பித்தனின் பொன்னகரமும் சிறுகதைதான் என்பார். அவருடன்  உரையாடுகையில் அடிக்கடி ஆறு கதைகளைச் சொல்லி என்னை அக்கதைகளை வாசிக்கத் தூண்டுவார். அக்கதைகள் ஆண்டன் செகாவ் எழுதிய ஆறாவது வார்டு, பச்சோந்தி, ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேஷம், புதுமைப்பித்தனின் பொன்னகரம், கு.அழகிரிசாமியின் திரிபுரம், கந்தர்வனின் துண்டு போன்றக் கதைகள். அவரது தொகுப்புகள் பற்றிக்கூறுகையில், அவரது முதல் தொகுப்பு மானுடம் வெல்லும். அதைப்பற்றி இதுவரை யாரும் பாராட்டிச் சொன்னதில்லை. அது ஒரு தோல்வியான தொகுப்பாகவே அமைந்திருந்தது. புதுக்கோட்டை மீரா பதிப்பகம் வெளியிட்ட ‘ சிபிகள்’ தொகுப்புதான் தமிழிலக்கியத்தில் பரிசீலிக்கப்பட்டது.  
       ஒரு முறை அவரது கதையொன்று கருக்கல் விடியும் இதழிலும் அதேக் கதை உயிர் எழுத்து இதழிலும் பிரசுரமாகியிருந்தது. ஒரே கதை இரண்டு இதழ்களில் பிரசுரமானச் செய்தியைச் சொல்லி அவருடன் தொடர்புகொண்டேன். அதை அவர் குற்றவுணர்வாகக் கருதினார். என் இத்தனை ஆண்டுகால இலக்கியப் பயணத்தில் இப்படியான நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை எனச் சொல்லி பெரிதும் வருந்தினார். அதற்காக வருத்தக்கடிதம் உயிர்எழுத்து இதழுக்கு எழுதப் போவதாக சொன்னார். அடுத்த மாத இதழில் அக்கடிதம் உயிர் எழுத்து இதழில் வெளியானது. அதற்குப்பிறகு மேலாண்மை பொன்னுச்சாமியின் கதை உயிர் எழுத்து இதழில் பிரசுரமாகவில்லை என்றே நினைக்கிறேன்.
       ‘ ஓர் எழுத்தாளருக்கு கற்பு மிக முக்கியம். தன் கணவன் வெறொரு பெண்ணை ஏறெடுத்துப்பார்க்கக் கூடாது என்கிற எதிர்ப்பார்ப்பு மனைவிக்கு இருப்பதைப்போல பத்திரிகையாசிரியர்களும் இருக்கவே செய்யும். அதை என்ன விலைக்கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும். ஒரு முறை அக்கற்பு நெறி தவறினால் அதன் பிறகு நம் கதைகளைப் பிரசுரம் செய்ய பத்திரிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவார்கள்’ என்றார்.
       அவரை நான் கடைசி வரைக்கும் நேரில் சந்தித்ததில்லை. மன்னார்குடியில் கடைசியாக அவருக்கு பெரிய அளவில் பாராட்டு விழா நடந்தேறியது. அதுவே அவருக்கு எடுக்கப்பட்ட கடைசி விழா என்று நினைக்கிறேன். ஒரு வாசகன் - எழுத்தாளன் போன்ற எனக்கும் அவருக்குமான அலைபேசி தொடர்பு பிறகு தந்தைக்கும் - பிள்ளைக்குமான நெருக்கமாக மலர்ந்தது. அந்த உறவுதான் எனது மொத்தக்கதைகளையும் தொகுத்து அவரது வாசிப்பிற்கு அனுப்பி வைக்கத் தூண்டியது. வெறும் வாசிப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்ட அத்தொகுப்பிற்கு அவர் அன்பில் ஓர் அணிந்துரை தந்து என்னை வியப்பில் ஆழ்த்தியதுடன், எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மழைக்குப் பிறகான பொழுது’ பரவலாக கவனிக்கும் படியாகவும் செய்தது. நான் தொடர்ந்து எழுதுவதற்கு உத்வேகமாக இருப்பவரும் அவர்தான். என் எழுத்தின் பிதா என்று அவரை நான் சொல்லிக்கொள்கிறேன். அவரது எழுத்து அவரின் மீதான நினைவுகளை விடவும் கனமானது. உண்மையானது. ஈரமிக்கது.
                                                                  

சனி, 2 டிசம்பர், 2017

2016 -2017 நூல்கள்
நான்கு பிரதிகள்
கடைசி தேதி - 31.12.2017

பரிசுகள் 3000,2000,1000
முகவரி

பேராசிரியர் இராம.குருநாதன்
4/28 பழைய பங்காரு குடியிருப்பு 2 ஆம் தெரு
கலைஞர் நகர் மேற்கு
சென்னை - 79

நன்றி - அமுதசுரபி இதழ்

வெள்ளி, 10 நவம்பர், 2017

சிறுகதை பாகிஸ்தானி பிரியாணிக் கடை


டெல்லி அசோக் மந்தர் பகுதியில் அக்கட்டிடம்  இருந்தது.  அப்பகுதியின்  பாழடைந்தக் கட்டிடம் அது ஒன்றுதான். அக்கட்டிடம் பார்க்க மசூதியைப் போலிருந்தது. ஆனால் அது மசூதி அல்ல. மசூதியைப் போன்ற கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட பழைய காலத்து உணவகம் அது.  கட்டிடத்தில் இல்லாத இரண்டு ஸ்தூபிகள்  அது வழிப்பாட்டுத் தளம் இல்லாத வேறு ஒன்று எனச் சொல்லிக்கொண்டிருந்தது. அதன் மேற்கூரையும் திமில் போன்ற குடைவும் பார்க்க மசூதியைப் போலிருந்தது. முகலாயக் கலை அம்சத்துடன் கட்டப்பட்டிருந்த அக்கட்டிடத்தின் பெரும்பகுதி சாயம் இழந்துபோய் மேற்பகுதியின் ஒரு பகுதி  இடிந்து வெளிப்புறமாக விழுந்துவிட்டிருந்தது.

சுதந்திர இந்தியக் காலத்தில் அப்பகுதியின் மிகப்பெரிய உணவகமாக அது இருந்தது. தென் இந்திய, வட இந்திய, மேற்கத்திய என மூன்று வகை உணவுகளும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்  கிடைக்குமளவிற்கு பிரசித்திப்பெற்ற உணவகம் அது. இன்றைக்கு அக்கட்டிடத்தைச் சுற்றிலும் அடைசலாக புல் பூண்டு புதர்கள். மேல் ,கீழ் தளத்தில் ஆல , அரச கன்றுகள் முளைத்திருந்தன.  மேற்கூரையில் விட்டிருந்த ஆணி வேர்  பூமி வரைக்குமாக வளர்ந்து விட்டிருந்தது. மேற்தளத்தில் வளர்ந்திருந்த மரங்களுக்கிடையில் கட்டிடத்தைப் பார்க்கையில்  வேர்களுக்கிடையில் தொங்கும் கட்டிடம் போல அக்கட்டிடம் இருந்தது.
 
அன்றைக்கு அப்பகுதியின் பிரமாண்டம் அதுதான். தங்கும் விடுதியும் கூட. ஆனால் இன்றைக்கு அக்கட்டிடத்தை விடவும் பெரிய கட்டிடங்கள் அதைச் சுற்றி முளைத்துவிட்டிருந்தன. அத்தனையும் வானளாவிய கட்டிடங்கள். அவ்வுயரத்திற்கு முன்னால் அக்கட்டிடமும் அதன் குவிந்து வளைந்த கோபுரமும்  சிறியதாகி விட்டிருந்தது.

டெல்லியில் எந்த மூலையில் கலவரம் நடந்தாலும் தவறாது தாக்குதலுக்கு உள்ளாகும் கட்டிடமாக அக்கட்டிடம் இருந்தது.  எத்தனைப் பேர் சேர்ந்து தாக்கினாலும்  அதன் கம்பீரமும் கட்டமைப்பும் சற்றும் குன்றாமல் இருந்தது அக்கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கே வியப்பு அளிக்கும்படியாக இருந்தது. அதன் தலையில்  திமிலை நிமிர்த்திக்கொண்டு அது நிற்கும் கம்பீரமே தனி அழகுதான்.

அக்கட்டிடம் அடிக்கடி  தாக்குதலுக்கு உள்ளானதன் பிறகு அக்கட்டிடத்தின் வழியே கிடைக்கும் வருமானம் ஒரு கட்டத்தில்  அதை சீர்செய்வதற்கென்று  மட்டுமே  பயன்பட்டிருந்தது.  இதற்கு மேலும் இதை நிர்வகிக்க முடியாது என்று உணர்ந்த அக்கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்தின் முன்பு பெரிய பூட்டினைத் தொங்கவிட்டு வேறொரு நகரத்தை நோக்கி இடம் பெயரலானார். அவரால் பூட்டப்பட்ட பூட்டு பல வருடங்கள் திறக்கப்படாமலேயே இருந்தது.

அக்கட்டிடத்தின் உரிமையாளர் உருது மொழி  பேசக்கூடியவராக இருந்தார். பெரிய செல்வந்தர். இதுமாதிரியான உணவகம் அவரிடம் நான்கைந்து நகரங்களில் இருந்தன. இதைத் தவிரவும் அவர்  ஒன்றிரண்டு தொழில்கள் செய்யக்கூடியவராக இருந்தார். ஒரு தொழிலில் ஏற்பட்டிருந்த நட்டத்தை ஈடு கட்ட அவர் அக்கட்டிடத்தை அவருக்கு நெருக்கமான உறவினரிடம்  கேட்ட விலைக்கு  விற்றுவிட்டிருந்தார்.

அக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய உறவினர் அதை அடியோடு தகர்த்தெறிந்துவிட்டு இந்திய - முகலாயக் கட்டிடக் கலை அம்சத்துடன் கூடிய  ஒரு சொகுசு உணவகத்தை கட்டிவிடலாமென  நினைத்தார். அதை அவர் வாங்கிய நாட்களில் இடித்திருந்தால் இடித்திருந்திருக்கலாம். அவர் ஆண்டுகள் பல கடந்து இடிக்கலாமென இறங்குகையில் அக்கட்டிடத்தைச் சுற்றிலும் நிறைய கட்டிடங்கள் முளைத்துவிட்டிருந்தன. கட்டிடங்களை விடவும் அக்கட்டிடத்திற்கு வெளியிலிருந்த பிள்ளையார் கோயிலும் இடது புறமிருந்த அனுமார் கோயிலும் என் மீது சிறு துரும்பேனும் படாமல் எப்படி இடிக்கிறீர்கள் எனப் பார்த்துவிடுகிறேன்....என்றபடி இரண்டும் பதட்டத்தைக் கொடுத்தபடி  இருந்தன.

அக்கட்டிடத்தை இடித்துவிட உரிமையாளர் படாதப்பாடுபட்டார். தினமும் இடிமான நிறுவனங்கள் வந்து பார்த்து செல்வதாக இருந்தன. கட்டுமான பொறியாளர்கள் அக்கட்டிடத்தை நான்கைந்து சுற்று வந்து பார்த்து சென்றிருந்தார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.  அடுத்தடுத்தக் கட்டிடங்களுக்கு ஒரு பாதகமும் இல்லாமல் அதை தகர்த்தெறிவதற்கான ஒரு வழியும் இருப்பதாக இல்லை. அருகாமை கட்டிடங்களை விடவும் பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்தது  பிள்ளையார் , அனுமார் இரு கோயில்களும்தான்.

இடிக்கப்பட வேண்டியக் கட்டிடமாக இருந்த அக்கட்டிடத்தின் உள்ளரங்கம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே கிரிக்கெட போட்டி நடத்தி முடிக்கும் அளவிற்கு பரந்து விரிந்த பரப்பளவைக் கொண்டதாக இருந்தது. யானையை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டதைப்போல அதன் தூண்கள். மலையைக் குடைந்ததைப்போல மேற்கூரைகள். கூரையின் ஓவியங்களும் ,சித்திரங்களும் அதன் வேலைப்பாடுகளும் பார்க்கிறவர்களை திகைக்கவைக்கும்படியாக இருந்தன. அதன்   நுண் கலை வடிப்புகளில்  நூலாம் படைகள் போர்த்தி  போர்வைப் போல படிந்துபோயிருந்தது.

அனுமார் கோயிலின் உயரம் அக்கட்டிட உயரத்திற்கு இருந்தது. கோயிலின் கோபுரத்தில் புதுப்பித்தல் பணி நடந்துகொண்டிருந்தது. அதற்காக நான்குபுறமும் சாரம் கட்டப்பட்டிருந்தது. அச்சாரம் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்தது.

 அக்கட்டிடத்திற்கு வெளியே அதன் முகப்பிலிருந்த பிள்ளையார் மிகச்சிறிய கோயிலாக இருந்தது.அதன் உயரம் இரண்டு ஆள் மட்டம் அளவிற்கே இருந்தது.  ஆஸ்பெட்டாஸ் கூரையினலான அக்கோயிலின் கூரை நான்கு இரும்புக் கம்பி தூண்களில் பந்தல் போல் பரந்து மழை நீர் மட்டத்திற்காக ஒரு பக்கமாக ஒடுங்கியிருந்தது. 

கட்டிடம் இடிக்கப்பட்டால் நிச்சயம் பிள்ளையார் கோயில் சேதாரம் அடையவே செய்யும். இரு கோயில்களுக்கும் ஒரு சேதாரமும் இல்லாமல் இடிக்க வாய்ப்பில்லாத அக்கட்டிடத்தை தான் வைத்திருப்பது வீண் என்று உணர்ந்த அவர் அதை ஒரு வெளிநாட்டு  நண்பரின் உதவியுடன் ஒரு வணிகரிடம் விற்றுவிட்டிருந்தார்.
அதை வாங்கியிருந்த வணிகர் அதை இடித்தால் மட்டுமே  வாங்கிய விலைக்கேனும் விற்கவோ அல்லது அதிலிருந்து வேறொரு வியாபாரத்தைத் தொடங்கவோ முடியும்  என கருதிய அவர் என்ன விலைக்கொடுத்தேனும் அதை இடித்து தரைமட்டமாக்கிவிட வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இறங்கினார்.

முதற்கட்டமாக அவர் இரு கோயில் நிர்வாகத்துடனும்  பேசினார். கோயில் நிர்வாகத்தினர் என்னச் சொல்கிறோமெனச் சொல்லாமல் பதில் சொல்லிவிட்டிருந்தார்கள். 'நீங்கள் உங்கள் கட்டிடத்தை இடிக்கிறீர்கள். அதை ஏன் எங்களிடம் பகிர்ந்துகொள்கிறீர்கள். நீங்கள் இடிக்கும் கட்டிடத்தில் ஒரு தூசி எங்கள் கோயிலின் மீது பட்டால் கோயிலின் புனிதம் கெட்டுப்போய்விடும். அப்படியொன்று நடந்தால்  என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும்..' என்பதை அவர்கள்  மிரட்டல் விடுப்பதைப் போல சொல்லிவிட்டிருந்தார்கள். இதைக் கேட்டதும் கட்டிட உரிமையாளர்  ஒரு கணம் பின்வாங்கவேச் செய்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து அவர் திரும்பவும் பேச்சு வார்த்தையில் இறங்கினார்.  சேதாரம் நடந்தால் இழப்பீடு  தருவதாகப் பேசிப்பார்த்தார். மசூதி போல கட்டப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் ஒரு கல் எங்கள் ஆலயத்தின் மீது விழவேக் கூடாது என  கோயில் நிர்வாகிகள் உறுதியாக சொல்லி பேச்சுவார்த்தையை முறித்துகொண்டார்கள்.

என்ன நடந்தாலும் சரி அதை இடித்தாக வேண்டும் என்பதில் கண்கொத்திப் பாம்பாக இருந்த அவர் இடிப்பு இயந்திரங்களைக் கொண்டு வந்து  அக்கட்டிடத்திற்கு முன்பு நிறுத்தினார். இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை  கண்டவர்கள் அந்த இடத்தைச் சூழத் தொடங்கினார்கள். அந்த இடம் சற்று நேரத்திற்குள் பதட்டத்திற்கு உள்ளானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று இயந்திரக்காரர்கள் இயந்திரத்தை எடுத்துகொண்டு தலைத் தெறிக்க ஓட்டமெடுத்தார்கள்.

அக்கட்டிடத்திலிருந்த ஒரே குறை போதுமான நுழைவுவாயில் இல்லாமைதான். அதன்  நுழைவுவாயில் ஒரு குதிரை நுழையும் அளவிற்கே இருந்தது. அந்நுழைவு வாயிலுக்குள் எப்படி நுழைந்தாலும் நுழைய முடியாததாக அவ்வாசல் இருந்தது .  அவ்வாசல் இடத்தில்தான் பிள்ளையார் கோயில் இருந்தது.

ஒரு நாள் அவர் டெல்லியில் வெளியாகும் அனைத்து தினசரிகளிலும் ஒரு பக்கம் அளவிற்கு  விளம்பரம் கொடுத்தார். அருகாமை கட்டிடத்திற்கு ஒரு சேதாரமும் இல்லாமல்  இடித்து தரைமட்டமாக்கும் நிறுவனத்திற்கு பரிசும் இரட்டிப்பு கூலியும் தரப்படும் என அறிவிப்பு செய்தார். அவர் விளம்பரம் கொடுத்த நாட்கொண்டு ஒவ்வொரு நிறுவனமும்  வந்து கட்டிடத்தை எட்டிப்பார்க்கவே செய்தார்களே தவிர யாரும் அதன் மீது கை வைக்கவில்லை. ஒரு வருடக்காலம் அப்படியாகவேச் சென்றது. அக்கட்டிடத்தை விலைக்கொடுத்து வாங்கியிருந்தவரின் வயிறு  புளி கரைக்கத்தொடங்கியது. பல கோடிகள் அதற்குள் விழுந்து ஒரு செரிமானமுமில்லாமல் இருக்கும் அக்கட்டிடத்தை  அவர் வேறொருவரிடம் விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை.

நான்காவதாக அக்கட்டிடத்தை விலைக்கு  வாங்கியவர் வெளிநாட்டுக்காரராக இருந்தார். அவர் இந்தியர்களின் நுகர்வோர் கலாச்சாரத்தை தெரிந்து வைத்தவராக இருந்தார். அவர் அக்கட்டிடத்தை விலைக்கு வாங்கியதும் அதை சீரமைக்கும் வேலையில் இறங்கினார். கட்டிடத்தின் மீது முளைத்திருந்த புல், புதர் செடிகளை வேரோடுக் களைந்தார். ஒட்டடையடித்தார். வெடிப்புக்கண்ட இடத்தில் மேற்ப்பூச்சு பூசினார். தினமும் இருபது பேர் இரவு பகல் பாராமல் கட்டிடத்தைச் சீரமைக்கும் வேலையில் இறங்கியிருந்தார்கள். இரண்டு மூன்று முறை கட்டிடத்திற்கு வெள்ளையடித்தார்கள்.  அதன் மீது வண்ணப்பசை பூசினார்கள்.

பழைய பாழடைந்தக் கட்டிடம்  ஒரு வாரக் காலத்திற்குள் புதுக்கட்டிடமானது. போகிறவர்கள்  வருகிறவர்களை கட்டிடம் சுண்டி இழுத்து நிற்க வைத்து தான் எப்படி இருக்கேன் எனக் கேட்டுக்கொண்டது.

அவ்வழியில் போகிறவர்கள் வருகிறவர்கள அக்கட்டிட உரிமையாளரைப் பார்ப்பதைப் போலவே  புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை வேடிக்கையோடு பார்த்தார்கள்.

இன்றோ நாளையோ  தானாக இடிந்து விழுந்துவிடப்போகிற கட்டிடத்திற்கு இவர்  வண்ணமடிப்பதைப் பார்....என   கிசுகிசுத்து கொண்டார்கள்.  அந்த வெளிநாடடுக்காரர் யார் பேச்சையும் காதுக்கொடுத்து கேட்பவராக இல்லை. அவர் அவருடையப் போக்கில் கட்டிடத்தைச் சீரமைக்கும் வேலையில் இறங்கி முழுவதுமாக முடித்துவிட்டிருந்தார்

அடுத்ததாக அவருடைய கவனம் கட்டிடம் திறப்பு விழாவை நோக்கித் திரும்பியது. இக்கடைக்குறித்து விளம்பரம் செய்தார். கடை திறக்கப்போகும் ஒரு வாரத்திற்கு முன்பு கடைக்கு வெளியே பெரிய எழுத்துகளால் எழுத்தப்பட்ட கடையின் பெயர் பலகையை  உயரத்தில் நிறுத்தினார். அதில் மின் விளக்குகள் ஒளிர விட்டார்.  கடையின் பெயரும் தடித்த எழுத்தும் போகிறவர் வருகிறவர்களை ஒரு கணம் நிறுத்தி கவனிக்க வைத்தது.

அக்கட்டிடம் திறப்பு விழாவிற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றது. கட்டிடம் என்னை யாரும் என்ன செய்திட முடியும் எனக் கேட்பதைப்போல நின்றுகொண்டிருந்தது. 

கட்டிடம் திறப்பு விழா பற்றிய விளம்பரங்கள் டெல்லி தினசரிகளில்  தொடர்ந்து வந்தபடியே இருந்தன. விளம்பரத்தைக் கண்டிருந்த பலரும் கும்பல் கும்பலாக வந்து கடையைப் பார்த்து செல்வதாக இருந்தார்கள். சிலர் புகைப்படம் எடுத்துகொண்டார்கள். 

கடை திறக்கப்படவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து வெளியாகும்  அனைத்து  தினசரிகளிலும் அக்கட்டிடம் பற்றியச் செய்தி தவறாது இடம் பிடித்திருந்தது. அச்செய்தி இவ்வாறு  இருந்தது.

' புதிதாகத் திறக்கப்படவிருந்த பாகிஸ்தானி பிரியாணிக்கடை  நாசக்கார கும்பலால்  ஒரே இரவில் இடித்து தரை மட்டம்...' 
                                      - பிரசுரம் - பேசும் புதிய சக்தி நவம்பர் - 2017
 

செவ்வாய், 17 அக்டோபர், 2017

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் அளவில் இருக்கிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்த நாவல் அது. இலக்கிய ரீதியில் நான் யாருக்காவது பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது க.நா.சு.வுக்குத்தான். ‘ இலக்கிய விசாரம்’ என்ற நூலில் க.நா.சு ‘எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தை என் இலக்கியச் செயல்பாடுகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் முன்னுரையில் வண்ணநிலவன். ரெயினீஸ் ஐயர் தெரு நாவலை வாசிக்கையில் அதன் உருவமும், நடையும் அப்படியாகத்தான் தோன்றுகிறது.


ரெயினீஸ் ஐயர் தெருவின் ஆரம்பம் திருவனந்தபுரம் ரோட்டிலிருந்து பிரிகிறது. இருபுறமும் வீடுகள் கொண்ட மொத்தமே ஆறு வீடுகள். அவ்வீடுகள் அவர்களின் வாழ்க்கைச்சூழல் , கொண்டாட்டம், அமைதி, இருப்பு, வாழ்க்கைக்கூறுகள் , அன்றாட பொழுது போக்குகள் இவற்றைச் சொல்லிச்செல்வதுதான் இந்நாவல். முதல்வீடு - இரண்டாவது வீடு - மூன்றாவது வீடு - திரும்பவும் முதல் வீடு - நான்காவது வீடு - இன்றொரு நாள் முதல் வீடு - தெரு -இப்படியாக வடிவமைப்பைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. முதல் வீடு டாரதி , இரண்டாவது வீடு இருதயத்து டீச்சர், மூன்றாவது வீடு அற்புத மேரி , நான்காவது வீடு ஆசீர்வாதம் பிள்ளையின் வீடு, இதைக்கடந்து தெரு இவற்றைப்பற்றி பேசும் இந்நாவல் தாயிடமிருந்து பிரிந்து தனித்து மேயும் ஒரு பெட்டை கோழிக்குஞ்சில் தொடங்கி கோழிக்குஞ்சில் முடிகிறது. மழைக்கு பிடித்தமான அத்தெருவில் இன்பம், துன்பம், துக்கம், கொண்டாட்டம் இவற்றைக் கடந்து போகிறது. அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்துநிற்கும் டாரதி பெரியம்மா வீட்டில் வசிக்கிறாள். தாய் இல்லாமல் தனித்து வாடும் அவளது நாட்கடத்தலை தாயிடமிருந்து பிறந்து இரைதேடும் கோழிக்குஞ்சுடன் ஒப்பீடுவதும் ரேயஜனீஸ் ஐயரின் கல்லறை, கல்லறையிலிருந்து வெளிவரும் பாம்பு ஒன்று ரோஸம்மாள் என்கிற அபூர்வமான பெண் செத்துப்போவதுமான கதையாக்கம் ஓர் அலையுமில்லாமல் சலனமற்று போகும் கதையில் குறுக்கலையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வீட்டின் கதையை சொல்லி தெருவிற்கு அழைத்து வரும் இக்கதைப்பின்னல் முதலில் வாசிக்கையில் குழப்பம் வரத்தான் செய்யும். காரணம் தொடர்ச்சியின்மை. கதை மீண்டும் முதல் வீட்டிற்கும், தெருவிற்கும் வருகையில்தான் கதையோட்டம் புதிய உத்தி என்று தெரிய வருகிறது.
வண்ணநிலவன் முன்னுரையில் சொல்லியிருப்பதைப்போல ஓரெ ஒரு சந்தர்ப்பத்தில் தவிர , நாவலில் எந்தக் கதாபாத்திரங்களுக்கிடையிலும் , நேரடியான உரையாடல்கள் இல்லை. ஆனால் இக்கதையை வாசித்ததும் யாரிடமேனும் உரையாடத் தோன்றுவதில் ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் பேசும் நாவலாகிறது

நர்மதா பதிப்பகம் .

ஆப்பிள் கிழவி

நூல் விமர்சனம் - ஆப்பிள் கிழவி
நவீனம் கலந்த மனச்சுனை - ஆப்பிள் கிழவி
சந்தக் கடை மாதிரி ஆகிவிட்டது இலக்கிய உலகம் என்பதாகத் தொடங்குகிறது இந்நூலின் ஆசிரியர் உரை. அவர் அடுத்து சொல்லியிருப்பதைப்போல இங்கே சப்தங்கள் அதிகம் உண்டு. ஆனால் சரக்கு குறைந்துவிடவில்லை. அதற்கு அவருடைய ஆப்பிள் கிழவி சிறுகதைத் தொகுப்பே சாட்சி.

புது உத்தி, மொழி, நடையில் எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது இன்றைய சிறுகதைகள். அப்படியான நடை மொழியில் எழுதப்பட்டிருக்கும் தொகுப்புதான் ஆப்பிள் கிழவி. இந்த இடத்தில் இந்நூலின் ஆசிரியர் எம். ஆர்.சி. திருமுருகன் பாராட்டப்பட வேண்டியவர். நூலினை அவர் யாருக்கும் காணிக்கை , சமர்ப்பணம் செய்து அவர்களை நீங்கா நினைவில் ஆழ்த்திவிடவில்லை. மற்றொன்று அணிந்துரை எழுத யாருக்கும் அவர் நூலைக் கொடுத்து காத்திருக்கவோ, இதை நீங்கள் படித்தேயாகவேண்டும் என்கிற அன்புக்கட்டளையில் ஆழ்த்தவோ இல்லை. சமீப திரைப்படங்கள் எழுத்து ஓடுகின்ற பொழுதே கதையும் தொடங்கிவிடுவதைப்போலதான் புத்தகத்தைத் திறந்தால் கதை நம்மை அழைத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது.

தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள். அத்தனையும் பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகள். இரண்டு கதைகள் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளும் கூட. ஒற்றைக்காது என்கிற முதல் கதை இதற்கு மு்ன்பு ஒரு இதழில் வாசித்தக் கதை. இயல்பான நடையில் , ஒரு திருடன், திருடப்போய் மாட்டிக்கொள்ளும் கதி, அதனால் அவனின் ஒற்றைக்காது அறுபடுவது, அதனால் அவனுக்கு ஏற்படும் குற்ற உணர்வு, தற்கொலை செய்துவிடலாம் என அவனுக்குள் அவன் எடுக்கும் முடிவு, ஒரு பாம்பும், குரங்கும் சண்டையிடுவது, பாம்பு வெற்றிப்பெற்றலாம் தற்கொலை செய்துகொள்ளலாம், குரங்கு வெற்றிப்பெற்றால் வீடு திரும்பலாம்,...என்பதாக ஒரு மலையின் உச்சியிலிருந்து பார்ப்பது, பிறகு அவன் நான் ஏன் வாழக்கூடாது...என வீடு திரும்புவது, யாரேனும் கேட்டால் ஒற்றைக் காது அறுப்பட்ட செய்தியை உரக்கச் சொல்வது என்கிற ஆயாசத்துடன் கூடியக் கதை. இக்கதையால் இன்றைய களவாணி தேசத்தின் முகத்தை கலைடாஸ்கோப்பில் பார்த்துவிடலாம். ‘ திருடுவதும் ஒரு கலையே...’ மனோகரா வசனம் நாட்டின் கீதாசாரமாகிவிட்ட நிலையில் அவன் திருடியதற்காக வருந்தச் செய்வது தேசத்தின் முதுகெலும்பை நமிரச் செய்கிறது. இக்கதையை வாசிக்கையில் எனக்கு இமையம் எழுதிய ஒரு சிறுகதை நினைவிற்கு வந்தது.

வயிற்றுப்பசிக்காக திருடப்போகும் ஒருவன் திருட்டுக் கறுப்புசாமியிடம் உத்தரவு கேட்டு உட்கார்ந்திருப்பான், அவன் 2ஜீ, 3ஜீ, போர்பஸ், ,,..இதில் நடந்த திருட்டுகளைச் சொல்லி உத்தரவு கேட்பவன் நான் திருடுவது பசிக்கு . எனக்கொரு உத்தரவு கொடு...என்பதாக பல்லி கீச்சிடுதலுக்காகக் காத்திருக்கும் கதை ஒற்றைக்காதுடன் பொறுத்திப்பார்க்க வேண்டிய ஒன்று.

பாலு பையன் என்கிற சிறுகதை வேறொரு வடிவிலானது. இக்கதையில் ஓரிடம் .‘ யார் செய்தப் பாவங்களோ நம் தலையில் பெண் சவளப்பிள்ளையாய் வந்துப் பிறந்து விழுந்துவிட்டது. இந்தப் பாவத்தைச் செய்து வேறு ஒரு பாவமா? மகள் இறந்தால் ஒரு கன்னிப்பெண் குலதெய்வமாய் மாறிவிடுவாள்....’ என்கிற இடம் பெண்ணை இருப்பு, இறப்பு என்கிற இரண்டு கோணத்தில் பார்க்கும் வலி. இது ஒன்றும் கற்பனையானதில்லை. கடைசியில் சவளப்பிள்ளையை அக்கா மகன் பாலு பையன் ஏற்றுக்கொள்வதும், சவளப்பிள்ளை மனை ஏறுவதும் சுபம்.

ஆப்பிள் கிழவி நாவலாக எழுதியிருக்க வேண்டிய சரித்திரமும், கிராமியமும் புனைவும் கொண்ட ஒரு குறியீட்டுக் கதை. ஆப்பிள் கிழவி நாகமலையின் அடிவாரத்தில் நீர்சினையாக இருப்பதும், அவள் சிலந்தி, கருவண்டுடன் வாழ்ந்து வருவதுமான கதையோட்டம் ஒரு பகுதி. மற்றொரு பகுதியில் ஒரு சிறுவன் அம்மாயி வீட்டிற்கு போவதுமான பயணம். இதற்கிடையில் சோமபுரி அரண்மனை, சமஸ்தானம், மாறவன், ஒரே மகன் சசிதரன், தாய் வள்ளியம்மை, மகள் பார்கவி , சண்முகப்பண்டாரம் இவற்றுடன் ஆப்பிள் கிழவியையும் விடுமுறைக்காக அம்மாயி வீட்டிற்குச் செல்லும் சிறுவனும் பொருந்துவதுதான் கதை. ஒரு சரித்திரக் கதை, ஒரு உண்மைக்கதை இரண்டும் கதையின் முடிவில் கைக்கோர்பது கதைக்கும் தொகுப்பிற்கும் கனம் சேர்க்கிறது. ஒரு சில பத்திகளே வந்து சென்றாலும் பார்கவி மனதில் பதிந்து விடுகிறாள். சண்முகப்பண்டாரம் மாயாஜாலம் செய்யும் பேர்வழியாக காட்டுகையில் தெரிந்துவிடுகிறது காமப்பேர் வழி என்று.

ஆப்பிள் கிழவி , அவள் வாழும் நாகமலை நீர்ச்சுனை அதைச்சூழ்ந்த காட்சி வர்ணனைகளால் இக்கதை மற்றக் கதைகளிலிருந்து வேறுபடுகிறது. கிழக்கு வானம் சிவந்திருப்பதை இறைவன் வெற்றிலை எச்சிலைத் துப்பிய சிவப்பு என்றும் இன்னொரு இடத்தில் மேற்கு வானச் சிவப்பை வெட்கச் சிவப்பு என்றும் வர்ணித்தது கதையின் ஓட்டத்தில் அழகு சேர்க்கிறது. இத்தனையும் அம்மாயி வீட்டிற்கு செல்லும் சிறுவனின் மாமா என்னவானான்..? என்பதைச் சுற்றிய கதைப்பின்னல் என்பதால் கதை கற்பனை சுருளிலிருந்து தாண்டி நிகழ்காலப் புனைவிற்கு வந்து நிற்கிறது.

இதே போன்று தைலக்கிணறு மற்றொரு புனைவு குறியீட்டு சிறுகதை. அருள்வாக்கு அங்கதச் சுவை கொண்ட சாமியார், ஜோதிடம், பில்லி, சூனியம் இவற்றை கேலியும், சில எச்சரிப்புகளையும் செய்யும் கதை..

இப்படியாக ஆப்பிள் கதை சிறுகதைத் தொகுப்பு நவீனமும் கிராமியமும், புனைவும், மனச்சாட்சியுடன் வாழக்கூடிய மனிதனைப் பேசும் கதையாக வந்திருக்கிறது. நல்ல வரவு. ஆப்பிள் கிழவி சிலந்து வலையின் வழியே சிறுகதை உலகத்திற்குள் கரையேறுகிறாள். கை நீட்டி அழைக்கும் பொறுப்பு தமிழ் சிறுகதை வாசகர்களுக்கு இருக்கிறது.


ஞாயிறு, 15 அக்டோபர், 2017

யாரோ ஒருத்தியின் கடிதம் (குறுநாவல் ) - ஸ்டெபான் ஸ்வெய்க் @தமிழில் - ராஜ்ஜா

புகழ்பெற்ற நாவலாசிரியர் ரா...வெளியூர் சென்று திரும்பி வருகையில் வீட்டில் குவிந்து கிடக்கும் கடிதத்தில் ஒன்றைப் பிரித்து வாசிக்கிறார். அக்கடிதம் தன் பெயரைக் குறிப்பிடாத ஒரு பெண்ணின் கடிதமாக இருக்கிறது.

மகன் இறந்துகிடக்க அவனைச் சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அந்த வெளிச்சத்தில் எழுதி அனுப்பிய கடிதமாக அக்கடிதம் இருக்கிறது. சின்ன வயதிலிருந்து உங்களை நான் காதலித்து வந்ததாகவும் உங்களைத் தொட , பார்க்க , ரசிக்க , சிரிக்க இருந்ததாகவும் நீங்கள் வசிக்கும் அதே வீட்டில்தான் நான் என் தாயுடன் வசித்து வந்ததாகவும் பிறகு என் தாய் வேறொரு திருமணம் செய்துகொண்டதும் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் நீள்கிறது கதை.

ஒரு நாள் எழுத்தாளரை நேரில் சந்திக்கிறாள். தனிமையில் இருக்க  அவளை அவன் அழைக்கிறான். அவனுக்கு அவளைக் கொடுக்கிறாள். அந்த குழந்தைதான் இறந்தக் குழந்தை என்பதை வாசிக்கையில் கதை திருப்பம் கொள்கிறது.

என்னை நீங்கள் சந்திக்க வர வேண்டாம். ஒரு வேளை வந்தால் நான் இறந்தே இருப்பேன். உங்கள் பிறந்த நாள் அன்று எப்பொழுதும் நான் வெள்ளை ரோஜா அனுப்பி வைப்பேன். இனி என்னால் அனுப்பி வைக்க முடியாது. நீங்களே பூஞ்சாடியில் ஒரு வெள்ளை ரோஜாவை வைத்து என் நினைவூட்டிக்கொள்ளுங்கள்   என்பதாக கடைசி பத்தியை நோக்கி நகரும் கடிதம் உங்களை நான் காதலிக்கிறேன்...மனதார நேசிக்கிறேன்...என் அன்பே நான் போகிறேன்...
என்பதோடு கதை முடிகிறது.


இக்குறுநாவலையொட்டி ஆசிரியரைக்குறித்தும் சொல்லியாக வேண்டும். யூதர். ஜெர்மனியிலிருந்து விரட்டப்பட்டவர் அமெரிக்கா , பிரேசில் என அடைக்கலம் தேடி கடைசியில் தற்கொலைக்கு உள்ளானவர். சிக்மண்ட் ப்ராய்டின் சீடர்.

Letter from an unwoman.

தமிழினி பதிப்பகம். 
 

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

விக்கிரமன் நினைவு தினக் கட்டுரைப் போட்டி

தலைப்புகள்
1. புதுக்கவிதையில் மானுடச் சிந்தனைகள்

2. உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு

3. இன்றைய இளைய தலைமுறையினரின் சிந்தனையும் செயல்பாடும்

4.ஆன்மிக மறுமலர்ச்சியில் மகான்கள்

பனிரெண்டு கட்டுரைகள் தேர்வு. மொத்தப்பரிசு 12000

கடைசி தேதி 30.09.2017

முகவரி
இலக்கியப் பீடம்
எண் 3 ஜெய்சங்கர் தெரு
மேற்கு மேம்பாலம்
சென்னை 33
ilakiyapeedam@gmail.com