புதன், 7 நவம்பர், 2018

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை
அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
             ***************

‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.
‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’
நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின.
கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீதிபதி கேட்டிருந்தக் கேள்விகளில் இக்கேள்வி தடிமனுக்கு மாறாக கனமானதாக இருந்தது. கலெக்டரின் கண்கள் உருண்டன. வெண்விழிகள் துடித்தன. யாரைச் சொல்லலாமென மண்டைக்குள் தேடினார்.
‘ கலெக்டர் சார், உங்களைத்தான் கேட்கிறேன், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து உங்களுக்கு தகவல் தெரிவித்தது யார்...?’
கலெக்டருக்கு அந்நேரத்தில் நினைவிற்கு வந்தவரை பதிலாகச் சொன்னார். ‘ தாசில்தாரர் தெரிவித்தார்...’
நீதியரசரின் முகம் சிவந்து கண்கள் சிவந்தன. ‘ துப்பாக்கி சூடு நடத்தியவரே தகவல் தெரிவிக்கவும் செய்தார். அப்படித்தானே...?’
‘ அப்படியன்று, துப்பாக்கி சூடு நடத்தியவர் தாசில்தாரர் அல்ல...’
‘ பிறகு..?’
‘ காவல் துறையினர்’
நீதியரசர் சிரித்தார். சிரித்து ஆற்றிக்கொள்ளும் பதிலாகவே கலெக்டரின் பதிலிருந்தது. அவர் சிரித்ததும் மாமன்றம் சிரித்தது. அவர்கள் சிரித்த சிரிப்பில் அவரவர் உட்கார்ந்த நாற்காலிகள் குலுங்கிச் சிரித்தது.
‘ அமைதி, அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது ‘ நீதிபதி மேசையைத் தட்டி நீதிமன்றத்தை அமைதிப்படுத்தினார். அதையும் மீறி சிரிப்பின் மிடறல்கள் தெறிக்கவே செய்தன. நீதியரசர் கோபத்துடன் கேட்டார். ‘ அப்படியென்றால் துப்பாக்கி சூடு நடத்திய காவலர் அல்லவா தகவல் தெரிவித்திருக்க வேண்டும். தாசில்தாரர் தெரிவிக்கக் காரணம்...?’
‘ துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர் அவர்தான்...’
‘ எவர்தான்...?’
‘ தாசில்தாரர்..’
நீதியரசர் தலையை ஆட்டிக்கொண்டார். சற்று நேரம் கண்களை மூடி பதிலை உள்வாங்கினார். பிறகு குறிப்பெடுப்பதற்கு உகந்ததாக குனிந்தார். அவர் எடுக்க வேண்டிய குறிப்பு முன்பே குறிக்கப்பட்டு கட்டம் கட்டப்பட்டிருந்ததால் அதன் மீது மேலும் ஒரு கட்டம் கட்டி நிமிர்ந்தார். ‘ தகவலை அவர் எப்படி தெரிவித்தார்...?’
‘ உண்ணா போராட்டம் கலவரமாகிவிட்டதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்றார் ’
‘ தகவல் மட்டும் தெரிவித்தாரா, இல்லை அதற்காக வருத்தமும் தெரிவித்தாரா..?’
‘ வருத்தமும் தெரிவித்தார்...’
‘ வருத்தமென்றால் எப்படி..?’
கலெக்டருக்கு கேள்வி புரிந்தது. ஆனால் புரியாததைப் போல பற்களால் உதடுகளை வருடினார். அப்படியாக நடிப்பதும், நேரம் கடத்துவதும் அவர் வகிக்கின்ற பதவிக்கும், அவர் மேல் விழுந்திருக்கும் கறையைப் போக்கிக்கொள்ளவும் தேவையென இருந்தது. ‘கனம் நீதியரசர் அவர்களே, உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை’
கலெக்டரின் எதிர்வினை இரு தரப்பிலும் நின்றுகொண்டிருந்த வழக்கறிஞர்களின் நெற்றியைச் சுழிக்க வைத்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் சொல்லி வைத்தார் போல இருக்கையிலிருந்து எழுந்தார்கள். கறுப்பு அங்கியை ஒரு கையால் எடுத்துவிட்டுக்கொண்டு முன் வந்தார்கள். நீதியரசர் அவர்களைப் பார்த்து தன் கையால் அவர்களின் நுழைவைத் தடுத்தார். உங்களின் வாதம் பிரதிவாதங்கள் முடிந்துவிட்டது. நீங்கள் கேட்காமல் விட்டக் கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றவாறு வழக்கறிஞர்களைப் பார்த்தார். அவரது பார்வைக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.
‘ பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்குமளவிற்கு தாசில்தாரருக்கு அதிகாரமிருக்கிறதா...?’ வார்த்தைகள் பிசிறாமல், தடித்தக் குரலில் விரலை நீட்டிக் கேட்டது நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த பலரையும் எச்சரிக்கை செய்வதைப்போலவே இருந்தது. இப்படியொரு கேள்வியை கலெக்டர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவரையும் அறியாமல் தலை சுண்டியது. ‘ இ..ல்..லை...’
‘ என்ன இல்லை...?’
‘ துப்பாக்கிச் சூடு பிறப்பிக்கும் அதிகாரம் தாசில்தாரருக்கு இல்லை’
‘ பிறகு எப்படியாம் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார்..? ’
கலெக்டர், தலைக்குள் பொங்கினார். அதே நேரம் நீதியரசர் முன் பணிந்து படிந்து நின்றார். அவருக்கு அவசர யோசனை தேவைப்பட்டது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு கால அவகாசம் கேட்கலாமா, என்று நினைத்தார். வாதம் , பிரதி வாதங்களுக்கு காலம் அவகாசம் வழக்கறிஞர் கேட்கலாம், சாட்சியம் கேட்கலாம், குற்றம் சுமத்தப்பட்டவர் கால அவகாசம் கேட்பது, குற்றம் சுமத்தப்பட்டவரின் மீதான குற்றத்தை, உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடும்... விரல்களைப் பிசைந்தபடி நின்றார்.
‘ கேள்வியை நான் திரும்பவும் கேட்கத்தான் வேண்டுமா...?’ நீதியரசர் ஆடாமல், அசையாமல் அதே நேரம் கலெக்டரின் கண்களைப் பார்த்துக் கேட்டார். கலெக்டரின் நா வரைக்கும் வந்திருந்த சொற்கள் அடி நாவிற்குள் உருண்டன. ‘ உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது’
‘ சொல்லுங்கள், அந்த அதிகாரத்தை தாசில்தாரருக்கு கொடுத்தவர் யார்...?’
இக்கேள்விக்கான பதில் இதயத்திலிருந்து வந்தது. அப்பதிலை முறித்து, மனதிற்குள் எரித்து, மூளையிலிருந்து ஒரு பதிலை உருவி நீதிபதியின் முன் வைத்தார். ‘போராட்ட மக்களின் நடவடிக்கையைக் கண்காணித்து வந்தவர் அவர்தான், அதுமட்டுமன்று அறவழிப்போராட்டம் கலவரமாக மாறுகையில் அவ்விடத்தில் நின்ற ஒரே உயர் அதிகாரி அவர்தான்...’
‘ அவர்தான் என்றால் தாசில்தாரரைச் சொல்கிறீர்கள்...’
‘ ஆமாம், தாசில்தாரரைச் சொல்கிறேன்...’
நீதியரசருக்கு குறிப்பு தேவைப்பட்டது. ஒரு பக்கம் முழுவதும் எழுதி மறுபக்கமும் எழுதினார். அவரது பேனா குறிப்பேட்டில் ஊர்ந்துகொண்டிருக்க, தலையை ஒரு கணம் நிமிர்த்தி குறிப்பெடுத்தலை ஒரு புள்ளியில் நிறுத்திக் கேட்டார் ‘ டெபுடி கலெக்டர் அவ்விடத்தில் நின்றிருக்க வேண்டுமே..?’
‘ அவர்  வேறொரு அலுவலில் இருந்தார்...’
அவர் பேனாவை குறிப்பேட்டிற்குள் வைத்து மூடிவிட்டு விரல்களை விரல்களுக்குள் கோர்த்து நெட்டி பறித்தவாறு கேட்டார். ‘ அவரது அலுவலை இந்த நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது...’
கலெக்டருக்கு இக்கேள்வி பிடித்திருந்தது. மெல்லப் பதுங்கி அதே நேரம் நீதியரசரின் முன் முகத்தை நீட்டி சொன்னார் ‘ அவரது அலுவல் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் நீதியரசரே..’
நீதிபதியின் முதுகு குன்றியது. குன்றிய வேகத்தில் நிமிரவும் செய்தது. அவரது கேள்விகள் சக்கரம் போலச் சுற்றி அவர் எதிர்ப்பார்த்த விடை கிடைக்காத, அதேநேரம் மிக முக்கிய கேள்வியாகத் தெரிந்த ஒரு கேள்வியை எடுத்து தீட்டி கலெக்டர் முன் நீட்டினார். ‘தாசில்தாரருக்கு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்குளவிற்கு அதிகாரம் இருக்கிறதா...?’
‘ அதிகாரம் இல்லை...’
‘ பிறகு எப்படி உத்தரவு பிறப்பித்தார்...?’
‘ அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள், காவல் துறையினர் மீதும், அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தத் துவங்கினார்கள். காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கவும், தீ வைக்கவும் செய்தார்கள்....’
‘ ஆகையினால்...’
‘ஆமாம் நீதியரசர் அவர்களே, அரசு கோப்புகளைக் காக்கவும், போராட்டக்காரர்களின் தாக்குதலிலிருந்து  மக்களை மீட்கவும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது...’
நீதியரசரின் ஒரு விரல் குறிப்பேட்டைத் திறந்தது. அவரது பேனா குறிப்பேட்டில் கோலமிட்டது. பிறகு அவருக்குப் புரியும் படியாக இரண்டு மனித உருவங்களை வரைந்து அதில் ஒன்றை அடித்து விட்டு ஒரு உருவத்தை வட்டம் கட்டியது. அக்குறிப்பு விசாரணையின் மைய நரம்பை பிடித்துவிட்ட களிப்பை நீதிபதிக்குக் கொடுத்திருந்தது.
‘ ஒரு சிறுவன் துப்பாக்கி சூட்டில் இறந்திருக்கிறான். ஒரு சிறுவனால் கூட காவல் துறையினர் மீதும், அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்த முடியுமா..?’
கலெக்டர் சற்றும் யோசிக்கவில்லை. அவர் எதிர்ப்பார்த்திருந்த கேள்வியைக் கேட்டுவிட்டதைப்போல பதிலளித்தார் ‘ அவன் கீழே குனிந்து காவல் துறையினரைத் தாக்க கற்களை எடுத்திருக்கிறான்...’
இக்கணம் அவர் எழுந்திருக்க வேண்டியிருந்தது. அவர் எழுந்ததும் அவரது உதவியாளர் ஓடி வந்தார். அவரை நோக்கி நீதியரசர் விரலைக் காட்டி அவருக்குத் தேவையான கோப்பை எடுக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தார். உதவியாளர் அவர் கேட்டக் கோப்புகளை எடுத்து பணிந்து குனிந்து நீதிபதியிடம் நீட்டினார். நீதிபதி கோப்பின் நாடாவை அவிழ்த்தார். அதிலிருந்த ஒரு புகார் மனுவை எடுத்து மனதிற்குள் வாசித்தார். பிறகு அதிலிருந்து ஒரு சாராம்சத்தை தன் குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டு கலெக்டரை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் ‘ துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான என் மகன் என்னுடன் கடைத்தெருவிற்கு வந்தவன். காய்கறி வாங்கி திரும்பி வருகையில் கூடையின் மேலிருந்த ஒரு தேங்காய் தவறி கீழே விழுந்து விட்டது. அதை அவன் குனிந்து எடுக்கையில் என் கண் முன்னே என் மகனைச் சுட்டு படுகொலை செய்துவிட்டார்கள்.. என்றல்லவா அத்தாய் புகார் கொடுத்திருக்கிறார்...?’
கலெக்டர் இரு புறமும் திரும்பிப் பார்த்தார். அவருக்கு படபடப்பு வந்திருந்தது. அவரையும் மீறி அதற்கானப் பதில் நழுவி விழுந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, இது ஆதாரமற்றது...’
‘ அவனது தாயார் கொடுத்த புகார் மீதான முதல் தகவல் அறிக்கை அப்படியாகத்தான் சொல்கிறது...’
கலெக்டர் அந்த ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றார். பிறகு மெல்ல சுதாரித்துக்கொண்டு சொன்னார். ‘ அவன் கடையிலிருந்து தேங்காய் வாங்கிவந்தது காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தவே..’
நீதிபதியின் உடம்பு குலுங்கியது. மெல்ல தலையை ஆட்டிக்கொண்டார். ‘ 144 தடை உத்தரவு அமுலில் இருந்ததா, இல்லையா...?’
‘ ஆம், இருந்தது...’
‘ பிறகு எப்படி அச்சிறுவனால் உள்ளே நுழைய முடிந்தது...?’
‘ கலவரம் வெடித்ததும் மக்கள் நாலாபுறமும் சிதறினார்கள். அச்சிதறலுக்குள் அவன் ஊடுறுவச் செய்தான்...’
நீதியரசரின் ஆறாம் விரல் குறிப்பேட்டில் ஊர்ந்தது. ‘ முதல் துப்பாக்கிச் சூடு அச்சிறுவன் மீதே நடத்தப்பட்டிருக்கிறது...’
‘ ஆமாம், அவன்தான் கலவரத்தைத் தூண்டியவன்..’
‘ யார், அச்சிறுவன்...?’
‘ ஆமாம் , அவனேதான்...’
நீதியரசரால் அதற்கு மேல் கேள்வித் தொடுக்க முடியவில்லை. கலெக்டரை சில நிமிடங்கள் பார்த்தபடியே இருந்தார். மின் விசிறியின் சுற்றும் இரைச்சல் மட்டும் தனியே கேட்டுக்கொண்டிருந்தது. குறிப்பேட்டின் ஒரு பக்கத்தைக் கிழித்து பந்து போல் சுருட்டிக்கொண்டு கேட்டார் ‘ அறவழியில் மட்டுமே போராடத் தெரிந்த மக்களுக்கு கலவரம் செய்யவும் தெரியுமா...?’
‘ இயல்பாகவே அவர்கள் கலவரக்குணம் மிக்கவர்கள்...’
கலெக்டர் உச்சரித்த அதே சொற்களை நீதிபதியின் நா உச்சரித்தது. கலவரக்குணம் மிக்கவர்கள் என்கிற வாக்கியத்தை அவர் இரண்டொரு முறை தொண்டைக்குள் உருட்டினார். ஒரு தனி பக்கத்தில் அதை மட்டும் தனியே எழுதினார்.
‘துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவு பிறப்பிக்க தாசில்தாரருக்கு அதிகாரமில்லை. அவரது உத்தரவின் பேரில்தான் துப்பாக்கி சூடு நடந்தேறியிருக்கிறது. உத்தரவு பிறப்பித்தவரே தகவல் தெரிவிக்கவும் செய்திருக்கிறார். அதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார், அப்படித்தானே...?’
‘ ஆமாம் நீதியரசர்...’
‘ வருத்தம் என்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காகவா, இல்லை மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்காகவா...?’
‘ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக...’
‘ அப்படியென்றால் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கான வருத்தம்...?’
‘ வேண்டியதில்லை நீதியரசரே..’
நீதியரசர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ஆனால் முதுகெலும்பிற்கும் தோள் தலைக்கு இடையேயான முடிச்சு குன்றியே இருந்தது.
‘ ஏன்..?’ அவரது இமைகள் நெற்றிக்கு மேல் ஏறி அப்படியே நின்றன.
‘ இப்படியான துப்பாக்கி சூட்டின் மூலம்தான் அவர்களுக்கு சரியான பாடத்தைக் கற்பிக்க முடியும்...’
நீதிபதியின் மேசையில் தண்ணீர்க்குவளை இருந்தது. அதை எடுத்து தொண்டையை நனைத்துகொண்டார். நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டார்.
‘ அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்களின் கோரிக்கைக் குறித்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா...?’
‘ இல்லை...’
‘ காரணம்..?’
‘அவர்கள் போராட்டத்தை போராட்டம் போல் நடத்தவில்லை. திருவிழா போல் கொண்டாடினார்கள்...’
‘ திருவிழா போல் என்றால்...?’
‘கூட்டம் கூட்டமாக களத்திற்கு வருவதும், போராடுவதும், செல்வதும், திரும்பவும் கூடுவதுமாக இருந்தார்கள்..’
‘ இதற்கும் பேச்சுவார்த்தை நடத்த முடியாமைக்கும் என்ன காரணம் இருக்க முடியும்..?’
‘ யாரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென அரசுக்குத் தெரிந்திருக்கவில்லை..’
‘  தெரிந்திருக்கவில்லையா, தெரிந்துகொள்ளவில்லையா...?’
கலெக்டருக்கு இக்கேள்வி குழப்பமாக இருந்தது. இரண்டும் ஒன்று போலவே இருந்தாலும் இரண்டில் எதை தேர்வு செய்வதென தடுமாற்றமிருந்தது. அவரது கை பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைந்தது. கைக்குட்டையைத் தேடி உதடுகளைத் துடைத்தது.
‘ தெரிந்துகொள்ளவில்லை...’
‘ அதான் ஏனென்று கேட்கிறேன்...?’
‘ போராட்டக் களத்தில் கூடியவர்கள் பட்டினி விரதமிருப்பார்கள். பசியெடுத்ததும் கலைந்துவிடுவார்கள் என்று நினைத்து அத்தகைய முயற்சியில் இறங்கிவில்லை..’
நீதிபதி இப்படியொரு பதிலை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் மெல்ல எழுந்து இருக்கையில் நன்றாக உட்கார்ந்துகொண்டார். ‘துப்பாக்கி சூடு பெண்களின் மீதும் நடத்தப்பட்டிருக்கிறதே...’
‘ அவர்கள்தான் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள்...’
‘ முன்னின்று என்றால் தலைமையேற்று என்கிறீர்களா...?’
‘ இல்லை, முன் வரிசையில் நின்று எனச் சொல்ல வருகிறேன்...’
நீதியரசர், குறிப்பேட்டில் குறுக்காக ஒரு கோடு வரைந்தார். கோட்டின் மீது நான்கைந்து வட்டம் வரைந்து அந்த வட்டத்தைத் தொடும்படியாகக் கூட்டல் குறியிட்டார்.
‘ சிறுவர், சிறுமியர் மீதும் தாக்குதல் நடத்தப்பட காரணம்...?’
‘ பெரியவர்கள் மீதே லத்தி சார்ஸ் செய்யப்பட்டது. ஆனால் சிறுவர், சிறுமியர் மீது அடி விழுந்தது எதிர்பாராதது...’
‘ துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் முன்னறிவிப்பு பிறப்பிக்கப்பட்டதா...?’
‘ அதற்கான கால அவகாசம் இருந்திருக்கவில்லை...’
‘ தண்ணீர் வீச்சு, புகைக்குண்டு...?’
‘ அக்கட்டத்தை கலவரம் தாண்டிவிட்டது’.
‘ துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா...?’
‘ தெரிவிக்கப்பட்டது...’
‘ பின் ஏன் காயமுற்றவர்கள் மரணமுற்றார்கள்...?’
‘ மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை...’
இக்கேள்வியைத் தொடர்ந்து அடுத்தக் கேள்விகளைக் கேட்க நீதியரசருக்கு நேர அவகாசம் தேவைப்பட்டது. ஒரு நிமிடம் எழுந்து நின்று பார்வையைச் சுற்றிக்கொண்டார். போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனையை நினைக்கையில் அவரது நாசிகள் விடைத்தன. நாசியுடன் சேர்ந்து உதடுகளைச் சுழித்தார்.
‘ துப்பாக்கி சூடு குறிபார்த்து சூடப்பட்டதா, இல்லை உத்தேசமாக நிகழ்த்தப்பட்டதா...?’
‘ குறி பார்த்தே சுடப்பட்டது’
‘ குறி என்னவாக இருந்தது....?’
‘ பெண்கள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் இல்லாமலிருக்க பார்த்துக்கொள்ளப்பட்டது’
‘ போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மீது முதல் குறி வைக்கப்பட்டது. அப்படிதானே...?’
‘ அப்படியன்று. ஆனால் குறியில் ஒன்றிரண்டு தலைமையேற்றவர்கள் இருக்கவே செய்தார்கள்...’
நீதியரசர் ஆசனத்தின் முன் அமர்விற்கு வந்தார். அடுத்து மிக முக்கியமானக் கேள்வியொன்றை கேட்கப்போகிற தாகத்தில் நிமிர்ந்தார். ‘ முழங்கால்களுக்கு கீழ்தானே துப்பாக்கி சூடு நடத்தியிருக்க வேணும். மார்பில் , தலையில், குறி வைக்கக் காரணம்...’
‘ அவர்கள் சர்க்கார் வாகனத்தின் மீதும், அலுவலகத்தின் மீதும் தீ வைத்ததால் புகை மூட்டம் எழுந்தது. ஆகவே குறி தவறிவிட்டது’
‘ துப்பாக்கி சூடு நடத்த உடனடி காரணம், அம்மக்கள் மீதிருந்த முன் விரோதம் என நீதிமன்றம் சந்தேகப்படுகிறது. இதற்கு கலெக்டர் சொல்லும் பதில் என்ன...?’
‘ அம்மக்கள் மீது அரசுக்கு  ஒரு போதும் முன்விரோதம் இருந்ததில்லை..’
நீதியரசர் அவருடையக் கோப்பிலிருந்து சில ஆதாரங்களை எடுத்தார். தூசிகளைத் தட்டினார். ‘ அம்மக்கள் இதற்கு முன் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதில் முக்கியமானப் போராட்டமாக  கூலி உயர்வு போராட்டம், வார விடுமுறை, எட்டு மணி நேரப் போராட்டம்,..’
கலெக்டர், நீதியரசரின் வாசிப்பிற்கிடையில் நுழைந்தார். ‘ கனம் நீதியரசர் அவர்களே, இப்போராட்டங்களை துப்பாக்கி சூட்டுடன் முடிச்சுப்போட வேண்டியதில்லை...’
‘ உங்கள் பதில் திருப்தியளிக்கும்படியாக இல்லை. வ.உ.சிதம்பரனார் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவர். அவர் தலைமையிலான  கோரல் பஞ்சாலை தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. அப்போராட்டத்தை வழிநடத்தியவர் சுப்பிரமணிய சிவா. இவரும் மக்களின் தலைவர்தான். அவரின் பேச்சும் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சிம்மச்சொப்பனமாக இருந்திருக்கிறது. அப்போராட்டத்தை ஒடுக்குவதிலும், ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதிலும் ஆளும் பிரிட்டிஸார் அரசு தோல்வியைத் தழுவியிருக்கிறது...’
கலெக்டரால் ஒன்றும் பேச முடிந்திருக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் நின்றுகொண்டிருந்தார்.
மேலும் நீதியரசர் தொடர்ந்தார். ‘ ஆமாம், அப்போராட்டத்தில் ஏற்பட்ட தலைக்குனிவு ஆட்சியாளர்களிடம் புகையும் நெருப்பாக இருந்திருக்கிறது. இதற்கிடையில் வங்கத் தலைவர் பிவின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கிறார். அவரது விடுதலையை தூத்துக்குடி மக்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படியான கொண்டாட்டத்தில்தான் அவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறீர்கள். வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, போன்றவர்களைக் கைது செய்திருக்கிறீர்கள். சுப்பிரமணிய பாரதி என்கிற ஒரு கவிஞர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தப்பித்து பாண்டிசேரியில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். பாண்டிசேரி பிரெஞ்ச் ஆட்சிக்கு கட்டுப்பட்ட பகுதி என்பதால் அவரை உங்களால் கைது செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் கலெக்டர் என்கிறவர் முறையில் என்னச் சொல்ல வருகிறீர்கள்..?..’
கலெக்டர் விஞ்ச் துரை தலையை சற்று நிமிர்த்தினார். நீண்ட சம்பவத்துடன் கூடிய கேள்விக்கு ஓரளவேனும் நேர்த்தியாகப் பதில் சொல்லிவிட வேண்டுமென முயற்சித்தார். ‘ கனம் நீதியரசர் அவர்களே, மக்களின் கொண்டாட்டம் என்பது பிவின் சந்திரபாலின் விடுதலை போராட்டமாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அது ஹிந்துஸ்தான் மக்களின் விடுதலைக்கானப் போராட்டம். அப்போராட்டத்தை துப்பாக்கி சூடு வழியே கட்டுப்படுத்தாவிட்டால் அப்போராட்டம் மதராஸ் மாகாணம் முழுமைக்கும் பரவியிருக்கும். இதனால் ஆளும் நம் பிரிட்டிஸார் ஆட்சிக்கு பெரிய தலைவலியாக அமைந்திருக்கும்...’
நீதியரசரின் கண்கள் சிவந்தன. வார்த்தைகள் அமிலத்துளி போலத் தெரித்தன. ‘ இத்துப்பாக்கி சூடு பிரிட்டிஷ் மகாராணி குடும்பத்தைக் கலங்கப்படுத்தியிருக்கிறது. மேலும் நம் பிரிட்டிஸார் நிர்வாகம் பிரெஞ்சு, டச்சுக்காரர்களின் கேலிக்கு உள்ளாகியிருக்கிறது...’
கலெக்டரின் உதடுகள் துடித்தன. கண்கள் கண்ணீரால் பனித்தன. கைகளைக் கட்டிக்கொண்டு சரணாகதியாக நீதியரசர் முன் நின்றார். அவரது தலை மன்னிப்பு கோரி நின்றது. ‘ கனம் நீதியரசரே, இலண்டன் மாநகர் அனுமதியில்லாமல் இத்துப்பாக்கி சூடு நடத்தியமைக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். அதற்காக கிழக்கிந்திய மகாராணியிடம் மன்னிப்புக் கோருகிறேன்...’
நீதியரசர் ஆசனத்தில் குலுங்கி உட்கார்ந்தார். அவர் மேல் போர்த்தியிருந்த கருப்பு ஆடையை நன்றாக எடுத்துவிட்டுக்கொண்டார். அக்கனமே துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான தீர்ப்பை எழுதினார்.
‘ ஹிந்துஸ்தான் காலனி , மதராஸ் மாகாணம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி சரகத்தில் நடந்தேறிய எதிர்பாரா துப்பாக்கி சூடு, அச்சூட்டில் இறந்து போனவர்கள், காயமுற்றவர்கள்,.. என இச்சம்பவத்திற்காக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஞ்ச் துரை தெரிவித்த ஆழ்ந்த வருத்தத்தையும், நமது பிரிட்டிஸ் மகாராணியிடம் கேட்டிருந்த மன்னிப்பையும் இந்த நீதிமாமன்றம் பெரிதென ஏற்கிறது. மேலும் விஞ்ச் துரையின் நிர்வாகத் திறமை, சாதூரியமான பேச்சு இரண்டையும் பெரிதும் மதிக்கிறது. அவரது ஆட்சித்திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் மேலும் இரண்டு ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக பணியாற்ற மாட்சிமை தங்கிய பிரிட்டிஸ் மகாராணியின் அதிகாரத்திற்குட்பட்ட இந்த நீதி மாமன்றம் ஆணை பிறப்பிக்கிறது....’ என தன் தீர்ப்பை வாசித்து எழுந்தார் நீதிபதி ஏ.எஃப். பின்ஹே.


விமர்சனம் - அருள்ராஜ்

1 கருத்து:

  1. Can you make money by making money from gambling?
    The best way to do this is to combine your bank account and online poker. You will หารายได้เสริม get 바카라 instant access to the biggest online septcasino casino games in the world,

    பதிலளிநீக்கு