செவ்வாய், 19 ஜனவரி, 2016

லெக்கிங்ஸ்


       ‘த்தனை ஆடைகள் இருந்தென்ன.....லெக்கிங்ஸ் அணிவது தனி சுகம்தான். லெக்கிங்ஸை வடிவமைச்சது யாருனு கண்டுப்பிடிச்சு அவருக்கொரு விருதுக்கொடுக்கணும். என்ன சொல்றே நீ.....?’ என்றவாறு யாரிடமோ அவள் அலைபேசியில் அலாவிக்கொண்டிருந்தாள் கண்மணி.
       ‘வறுமை நிறம் சிவப்பு அல்ல. லெக்கிங்ஸ்’ இது வறுமைக்கு அவள் வகுத்திருக்கும் இலக்கணம். ஒரு சேலை எடுக்கும் விலையில் பத்து லெக்கிங்ஸ் எடுத்துவிடலாம் என்பது அவளது சமீப பொருளாதாரக் கண்டுபிடிப்பு. குட்டைப்பாவாடை அணிந்து டென்னிஸ் விளையாடும் சானியா மிர்ஸா அக்காவிற்கு இரண்டு மூன்று லெக்கிங்ஸாவது  எடுத்து அனுப்பி வைக்க வேணும் என்பது அவள் கொண்டிருக்கும் இலட்சியங்களில் ஒன்று.   
       சேலை அணிந்து போட்டி நடனமாடிய பார்வதிதேவி ஒற்றைக்காலைத்தூக்கி காதின் அணிகலனைக் கலட்ட முடியாமல் சிவபெருமானிடம் தோற்றுப்போனவளுக்கு லெக்கிங்ஸ் வாங்கிக்கொடுத்து அந்தப்போட்டியை மறுபடியும் நடத்திப்பார்த்திட வேணும் என்பது அவளது மற்றொரு இலட்சியம்.
       அதுமட்டுமா... உலகம் முழுவதும் சர்க்கஸ் நடத்தும் சகோதரிகளுக்கும், திரைப்படங்களில் அரைகுறை உடையில் நடனமாடுபவர்களுக்கும் ஒரு சோடி லெக்கிங்ஸாவது வாங்கிக்கொடுக்க வேணும் எனவும் அவள் நினைத்திருந்தாள். 
       ‘ உண்ண லெக் பீஸ். உடுத்த லெக்கிங்ஸ். இது எப்படி இருக்கு....? ’ அவளது தோழிகளிடம்  வசனம் பேசிக்கொண்டு தலைமுடியை நீவி விட்டுக்கொண்டாள்.
        லெக்கிங்ஸ் பற்றிய ஒரு பாடம் கல்லூரியில் வைத்தாலும் தேவலாம் என நினைத்தாள்.  ‘லெக்கிங்ஸ்  என்றால் என்ன....?’ என்றொருக் கேள்வியை அவள் அவளுக்குள்ளாகக் கேட்டுகொண்டாள். அதற்கான பதிலை அவளே வரையறுத்தாள். மக்களாட்சி  என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் கொடுத்த வரையறையைச் சற்று திருத்தி மாற்றி தொகுத்தாள். லெக்கிங்ஸ் என்பது பெண்களால், பெண்களுக்காக, பெண்களே வடிவமைத்த உடையாகும். இப்படியொரு பதிலை  வரையறுத்ததை நினைத்து தனக்குத்தானே மெய்ச்சிக்கொண்டாள்.
       லெக்கிங்ஸ் உடுத்திக்கொள்ள மட்டுமல்ல, உச்சரிக்கவே சுகமாகத்தான் இருக்கிறது. லெக்கிங்ஸ் என்பதை விடவும் லெக்கிங்ஸ் எனப் பெயர் சூட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு வேளை ஆண்கள் அவ்வுடையை வடிவமைத்திருந்தால் அவர்கள் லெக்கிங்ஸ் என்றே பெயர் சூட்டியிருப்பார்கள். பெயர் சூட்டுவதில் பெண்களை விடவும் ஆண்கள் தேர்ந்தவர்கள். 
       சேலை, தாவணி, பாவாடை, குர்த்தா, சுடிதார், மிடி, ஸ்கர்ட், கோட், கவுன்,ஜீன்ஸ்,  நைட்டி, ஜோலி, .....என இத்தனை ஆடைகள் வந்திருந்தாலும் லெக்கிங்ஸ் அளவிற்கு குறைவான விலையில் சுகமான ஆடையென இதற்குமுன்  எந்தவொரு ஆடையும் வந்ததாகத் தெரியவில்லை. உலகில் எத்தனை நிறங்கள் இருக்கிறதோ அத்தனை நிறத்திலும் லெக்கிங்ஸ் இருக்கிறது. சராசரி, பெரியது, நடுத்தரம் என எல்லா அளவிலும் கிடைக்கிறது. ஒரு ப்ளவுஸ் தைக்க தையற்காரருக்கு கொடுக்கும் கூலிதான் லெக்கிங்ஸின் விலை.
       உங்கள், நமது தொலைக்காட்சிகளின் வழியே நடு வீடு வரைக்கும் வந்து  கன்னத்தில் அறைந்து கவனிக்கச்சொல்லும் விளம்ப நடிகைகள் உடுத்தியிருக்கும் உடை லெக்கிங்ஸாகவே இருக்கிறது. பெண்களுக்கான உடையில் விலைக்குறைந்த உடை லெக்கிங்ஸ்தான். ‘ எனக்கு ஏன் லெக்கிங்ஸ் பிடித்திருக்கிறது தெரியுமா....வருமானத்திற்கேற்ற சரியான உடை’ என ஒரு விளம்பரம் வராதக்குறை ஒன்றுதான்.
       இரவில் ஆடை விலகியதுக்கூடத் தெரியாமல் தூங்கும் அக்காவிற்கு  பத்து சோடி லெக்கிங்ஸ் வாங்கிக்கொடுத்திருந்தாள். தன் வயதிற்கும், உயரத்திற்கும், நிறத்திற்கும் ஏற்ப  ஐந்து லெக்கிங்ஸ் எடுத்துகொண்டாள்.
       தோல் நிறத்திலும் லெக்கிங்ஸ் வந்திருக்கிறது. அது அரிதினும் அரிதாகக் கிடைக்கிறது. இருப்பதில் அதுதான் படுவிலை. ஆனால் அவளுக்கு அந்த நிற  லெக்கிங்ஸ் பிடிக்கவில்லை. அந்த நிறத்தை உடுத்திக்கொள்வது செயற்கையாக முகத்தை சர்ஜரி செய்துக்கொள்வதைப்போல அசூசையாக உணர்ந்தாள். அவளுக்கு பிடித்தது கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை இப்படியான நிறம்தான். வானவில்லில் உள்ள சிவப்பு நிறத்தைத் தவிர மற்ற நிறங்கள் யாவும் அவளுக்கு பிடித்தவையாக இருந்தன.  இத்தனை நிறங்களையும் ஒன்றுசேர்த்து கலக்கினால் கிடைக்கும் கறுப்புதான் அவளுக்கு மிகவும் பிடித்தமான நிறமாக இருக்கிறது. 
       அவள் கல்லூரிக்கு அணிந்து செல்வதற்கென்று ஒன்றிரண்டு லெக்கிங்ஸ்களை தனியாக எடுத்து வைத்திருக்கிறாள். கத்தரிப்பூ , வெளிர் பச்சை, சந்தன நிறத்திலான லெக்கிங்ஸ்கள் அவை. அவளுடைய  கல்லூரித் தோழி காந்திமதிக்கும், விடுதியில் அவளது அறை தோழியாக இருக்கும் சாந்தி, புனிதவதிக்கும், அவளுக்கு பிடித்தமான பேராசிரியர் நிர்மலா மேடத்திற்கும் கூட ஒரு சோடி லெக்கிங்ஸ் எடுத்து வைத்திருக்கிறாள்.  
       செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கையில் அந்த வாரத்தை விடுத்து மறுவாரம் அதை உடுத்திச்செல்ல வேண்டும் என நினைத்தாள். கல்லூரி திறக்கும் முதல் வாரம், முதல் நாளே புது லெக்கிங்ஸை உடுத்திச்செல்லலாம்தான். அவளது தோழிகள் அவளை கிண்டல் செய்து, வறுத்துக் கொட்டிவிடுவார்கள். ‘ இதை உடுத்தி வர எப்ப கல்லூரி திறப்பாங்கனு காத்திருந்தியாடி நீ.....’ என கேலி செய்து பிய்த்து நின்று விடுவார்கள். அவளை இப்படி வறுத்துக்கொட்ட மகேஸ்வரி ஒருத்தி போதும். அவளுக்குப்பயந்தே யாரும் முதல் நாள் கல்லூரிக்கு புத்தாடை அணிந்து வருவதில்லை. இருப்பினும் எப்பொழுது கல்லூரி திறந்து மறுநாள் வகுப்பு வரும் , எப்பொழுது தான் எடுத்து வைத்திருக்கும் லெக்கிங்ஸை உடுத்திக்கொண்டு சக தோழிகளின் புருவத்தை உயர்த்துவது,....என நாட்காட்டியையும் கடிகாரத்தையும் பார்த்தவளாக இருந்தாள்.
       ல்லூரி வேலை நாள் வந்திருந்தது. 
       முதல் நாள். மதியம் உணவு இடைவேளையின் போது கண்மணி தன் தோழிகளுடன் படை சூழ உட்கார்ந்திருந்தாள். அவள் எடுத்திருந்த லெக்கிங்ஸ் பற்றி நீட்டி மடக்கி அலாவிக்கொண்டிருந்தாள். அதன் இலகுவையும், அதன் விலையையும், அதை உடுத்துவதால் ஏற்படும் சுகத்தையும் உயர்வுநவிற்சி அணியில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
       இனி நான் அணியப்போகும் உடை லெக்கிங்ஸ்தான் என்றும், பெண்களுக்கு ஏற்ற உடை அதுதான் என்றும் ஒரு கோட்பாட்டினை விளக்குவதைப்போல் சொல்லிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கான உடையை பெண்கள்தான் தீர்மானிக்க வேணும். ஆண்கள் அல்ல....என உரிமைக்குரல் எழுப்பினாள். அவள் ஒரு பட்டிமன்றத்திலேயோ, நல்லாப் பேசுங்க நல்லதையே பேசுங்க.... நிகழ்ச்சியில் பேசுவதைப்போலதான் பேசிக்கொண்டிருந்தாள்.
       அகவிடகம் நிகழ்ச்சியில் பேசும் கம்பீரமும் தொனிப்பும் அவளது பேச்சில் இருந்தது. சுடிதார் உடைக்கு இப்படித்தான் ஆண்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிறகு என்ன ஆனது..... அவர்களின் பாட்டிமார்களுக்குக்கூட சுடிதார் எடுத்துகொடுத்தார்கள். அப்படித்தான் லெக்கிங்ஸ் உடைக்கு எதிர்ப்பு இருக்கிறது. காலப்போக்கில் பார்..... ஆண்களே அதை அணியத்தொடங்கிவிடுவார்கள்....’ என்றதும் அவளைச் சூழ்ந்திருந்த தோழிகள் ‘ குபீர்....’ எனச் சிரித்தார்கள்.
       மதியப் பாடவேளை தொடங்கியிருந்தது.
       வகுப்புகள் தோறும் சுற்றறிக்கை வந்தது. மெக்கானிக் சயின்ஸ் பேராசிரியர் நிர்மலா மேடம் சுற்றறிக்கையை வாங்கி மனதிற்குள் படித்தார். நெற்றியைச் சுழித்தார். பிறகு வகுப்பில் உரக்கப்பேசும் கண்மணியை அழைத்து சுற்றறிக்கையை வாசிக்கச்சொன்னார்.
       சுற்றறிக்கையை வாங்கி  முதலில் மனதிற்குள்  படித்தாள் கண்மணி.  படிக்கையில் அவளது உதடுகள் நீள்வாக்கில் நெழிந்தன.
       ‘ கண்மணி.....’
       ‘ மேம்....’
       ‘ சத்தமாக வாசி....’
       ஒரு கணம் நிர்மலா மேடத்தை நிமிர்ந்து பார்த்தவள் செயற்கையாக ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு உரக்க வாசிக்கத்தொடங்கினாள்.
       ‘ மாணவிகளின் கவனத்திற்கு........
       கல்லூரியின் நடத்தை விதி, மாணவிகளின் ஒழுக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் ஆடைகளை கல்லூரி வளாகத்திற்குள்ளும், விடுதியிலும் உடுத்தத் தடை விதிக்கப்படுகிறது.                   லெக்கிங்ஸ்,
        இறுக்கமான பேன்ட்,
        சட்டை, குட்டை குர்த்தா,
        உயர குதிகால் செருப்பு,
        வலைப்பின்னல் வேலைப்பாடு கொண்ட ஆடை,
        பெரிய கைக்கடிகாரம் போன்றவைகளுக்கு  தடை விதிக்கப்படுகிறது.
       இதை படித்ததும் வகுப்பறையில் ‘ குபீர்....’ என சிரிப்பொலி எழுந்தது. திடீர் சிரிப்பைக் கேட்டதும் நிர்மலா மேடம் ‘திக்’   என்றாகிப்போனார்.  
       ‘ஏன்டி.... சிரிக்கிறீங்க....’ -  நிர்மலா மேடம் கேட்டிருந்தார்.
       சிரிப்பு உதடுகள், பற்கள், வாயில் உடைய காந்திமதி சொன்னாள் ‘ மேம்.... கண்மணி காலேஜிக்கு உடுத்தி வர பத்து பதினைஞ்சு லெக்கிங்ஸ் எடுத்து வச்சிருக்காளாம்.......’  சொல்லி முடித்து ‘ கொல்’ லென வெடித்தாள்.
       ‘ இன்னொரு வேடிக்கை என்ன தெரியுங்களாம் மேம்.....’
       ‘ என்ன....?’
       ‘ உங்களுக்கொன்னு எடுத்து வச்சிருக்காளாம்.....’
       இப்படிச்சொன்னதும் மொத்த வகுப்பறையும் ‘ குபீர்....’ என வெடித்தது.
       ‘ ஏய்...ஏய்...எனக்கு ஒன்னு எடுத்துத்தாடி....’
       ‘ எனக்கு ஒன்னு...’
       ‘ எனக்கும் ஒன்னு....’
       ‘ எனக்கும்டி....’
       மொத்தப்பேரும் அவளைச்சூழ்ந்து நீட்டி, மடக்கி கேலி செய்தார்கள். அவளுக்கு அழுகை, அழுகையாக வந்தது.
       ‘ கண்மணி....’
       ‘ மேம்....’
       ‘ நெசமா....?’
       ‘ என்ன மேம்....’
       ‘ எனக்கொன்னு வாங்கிருக்கியா....?’
        ‘ஆம்...’ என்றவாறு நீள்வாக்கில் தலையாட்டியவள் பிறகு ‘ இல்லை...’ என  குறுக்குவாக்கில் ஆட்டினாள்.
       அன்றைத்தினம் முழுமையும் கேலிக்கை பொருளாகவே கண்மணி பார்க்கப்பட்டாள். அவளுக்கு ‘ லெக்கிங்ஸ்’ என  பட்டப்பெயர் சூட்டுமளவிற்கு அவள் உதைத்து விளையாடப்பட்டாள்.
       அன்றையத்தினமே   மொத்த மாணவிகளும்  மீட்டிங் அறைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.  முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவிகள்,...என தனித்தனியே உட்கார வைக்கப்பட்டார்கள். இது தவிர,
       விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகள்,....
       தினமும் பேருந்தில் சென்று வரும் மாணவிகள்....
       கல்லூரி பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் என பல பிரிவுகளாக பிரித்து உட்கார வைக்கப்பட்டார்கள்.
       முந்தைய செமஸ்டர்க்குள் கட்டிருக்க வேண்டிய கட்டணங்கள் கட்டாதவர்களின் பெயர்கள் உரக்க பெயர் சொல்லி அழைக்கப்பட்டார்கள். அவர்கள் வெளியே நிற்க வைக்கப்பட்டார்கள். அவர்களில் கண்மணி முதல் நபராக நின்றாள். எல்லோரும் தலையை குனிந்துகொண்டு நிற்க அவள் மட்டும் தலையை நிமிர்த்துக்கொண்டிருந்தாள். கல்லூரி தாளாளர் அடிக்குரலில் பேசினார். பேசவாச் செய்தார்.... மிரட்டினார்.
       ‘ இந்தாப்பாருங்க..... உங்கள நம்பி நான் காலேஜ் நடத்தில..... எங்க காலேஜ நம்பியும் நீங்க படிக்கல. காலேஜ்ல டிசிப்பிளின் முக்கியம். அதை விட ஆடைக்கட்டுபாடு முக்கியம். லெக்கிங்ஸ் அணிவது, குதிகால செருப்பு அணிவது, தலை வாறாம காலேஜ் காம்பஸ்க்குள்ள வாறது, தலை முடியில பெயிண்ட் அடிச்சிக்கிட்டு வாறது,... இதெல்லாம் கூடாது.
       இது ஒன்னும் சாதாரண காலேஜ் இல்ல. இந்தியாவின் டாப் டென் காலேஜ்ல ஒன்னு. நம்ம தமிழ்நாட்டுல நம்பர் ஒன் காலேஜ். ஒழுக்கத்திற்கும், டிசிப்பிலினுக்கும் பெயர்ப்போன காலேஜ். காலேஜ்ல ஆடை கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்க காலேஜ்க்கு கட்ட வேண்டிய ஃபீஸ்.
       யார் , யார்,...எவ்வளவு ஃபீஸ் கட்டணுமென  உங்களுக்குத் தெரியும். தெரியாதவங்க அவங்க அவங்க வகுப்பில ஒட்டியிருக்கிறப் பட்டியலைப் பார்த்து தெரிஞ்சிக்கிறுங்க. என்ன புரியுதா.....? பீஸ் கட்டுனாத்தான் கிளாஸ்க்கு அனுமதிக்கப்படுவீங்க. ரெண்டே ரெண்டு நாள்தான் அவகாசம். அதுக்குள்ள கட்டிரணும்.... இல்ல உங்க சர்ட்டிபிகேட்ட வாங்கிக்கிட்டு கட்டணம் வசூலிக்காத காலேஜு எங்கேயாவது இருந்தால் அங்கேப்போய் படிச்சிக்கிறுங்க. புரியுமென நினைக்கிறேன்......’
       சில மாணவிகள் பெரிதாக தலையாட்டி வைத்தார்கள். சிலர் ‘ உம்’மென உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் சிலர் ‘ கிசு கிசு’த்தார்கள். ஒவ்வொருவராக வெளியேறி வகுப்பறைக்கு வெளியே ஒட்டியிருந்த பட்டியலில் மொய்த்தார்கள். முணுமுணுத்தார்கள்....
       கண்மணிதான் முதலில் உரக்கக்கேட்டாள். ‘ மேம்..... என்னக் கொடுமை மேம் இது.....’
       ‘ எது.....?’
       ‘ நான் கட்டவேண்டிய ஃபிஸ் ஐயாயிரம். ஆனா பத்தாயிரமென இருக்கு மேம்....’
       ‘ எனக்கும் அப்படித்தான் மேம்....இருக்கு....’
       ‘ எனக்கும் மேம்...’
       ‘ எனக்குந்தான் மேம்......’
       வகுப்பறைக்கு உள்ளே வெளியே ஒரே சலசலப்பு.
       னி ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை கல்லூரி தொடங்கியிருந்தது. எந்நாளும் இல்லாத அளவிற்கு கல்லூரி ஒரே களேபரமாக இருந்தது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்கள். அவர்களின் முகத்தில் கலவரமும் கோபமும் தொற்றியிருந்தன.
       வெளிமாநிலம் சென்றிருந்த தாளாளர் விரைந்து கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டார். கல்லூரி முதல்வர் பேராசிரியர், விரிவுரையாளர்களை வைத்து அவசரக்கூட்டம் கூட்டினார். தினசரி நிரூபர்கள், தொலைக்காட்சிக்கு செய்தி சேகரிப்பவர்கள்,....என பலரும் கல்லூரிக்குள் மொய்த்தார்கள்.
       அன்றைய தினம் இரவு தொலைக்காட்சிகள் கல்வியாளர்களைக்கொண்டு வட்ட மேசை விவாதங்கள் நடத்தின. விடிந்ததும் ஒன்றிரண்டு தினசரிகள் அச்செய்தியை தலைப்புச்செய்தியாக பிரசுரம் செய்திருந்தன.
       ‘கட்டணக் கொல்லையைக் கண்டித்து கல்லூரி மாணவிகள்  லெக்கிங்ஸ் போராட்டம்......’


திங்கள், 4 ஜனவரி, 2016

லாங்கர்கான் திட்டுகள்

 டாக்ட....டாக்ட...இங்க வாங்க....இந்தப்பய சாப்பிட மாட்டேங்கிறா. இவன் குண்டில ரெண்டு ஊசிப்போடுங்க...’
உதடு வரைக்கும் முட்டிக்கொண்டு வந்த அழுகையை சட்டென நிறுத்தி தொண்டைக்குள் மெல்ல இறக்கிக்கொண்டான் இராகுல். ஒரு தேம்பல் இல்லை, சிணுங்கல் இல்லை. நீரில் கரையும் ‘விட்டமின் சி’  போல மெல்ல கண்ணீரில் கரையத்தொடங்கினான்.
பார்த்தியா....பார்த்தியா..... டாக்ட வாராங்க.... வந்தா கையில, கால்ல ஊசிப்போடுவாங்க.   இதெ....இதெ....மட்டும் வாங்கிக்க......எங்கே...எங்கே...ஆ....ஆ....’ என்றவாறு இட்லித்துண்டை வாயருகே கொண்டுச்சென்றாள் அஞ்சலை.
அவனது கேரட் உதடுகள் பரிதவித்தன. வெம்பின.
‘ டாக்ட...போயிடுங்க.....ஏ புள்ள சாப்பிடுறான்...’
அவள் கையை அசைத்து கோழியை,பூச்சாண்டியை விரட்டுவதைப்போல டாக்டரை விரட்டினாள். எங்க...எங்க....இன்னொரு வாய்........ஆ....அம்புட்டுதான்....’
‘ஆ.....’அவன் பெரிதாக வாயைப்பிளந்தான்.  அரை பிடி இட்லி. கொஞ்சம் சட்னி. தொட்டுத்தொட்டு பிசைந்து குழைத்து அவனது வாயிற்குள் ஒரே  அமுக்கு.
அபுக்...அபுக்....’ என மென்றான் அவன். கண்ணீர் திவாலைகள் தாரையாக ஒழுகி எச்சிலுடன் கலந்து தொண்டைக்குள் இறங்கிக்கொண்டிருந்தன.
 ‘ நல்லப்பிள்ள....தங்கப்பிள்ள....முழுங்கிடு....இம்...இம்.....தொண்டையை மெல்லத் தடவிவிட்டாள்.   இரண்டு மிடறுகள் தண்ணீர் கொடுத்தாள். வாறி அணைத்தாள். கொஞ்சினாள்.
இராகுல், எப்பொழுதும் அடம் பிடித்து சாப்பிடுபவன் அல்ல. அவன் சாப்பாட்டு பிரியன். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தால் பூனை சாப்பிடுவதைப்போல ஓர் அரவமுமில்லாமல் சாப்பிட்டு முடிப்பவன். இன்னும்....இன்னும்.....எனக் கேட்கக்கூடியவன்.
நூடுல்ஸ், மேகி, பாப்கார்ன்,...போன்ற எண்ணையில் வறுத்தது, பொரித்தது, சுட்டது வகை உணவுகள்தான் அவனுக்குப்பிடிக்கும். நீராவியில் வேகும் வகை உணவுகள் அவனைப்பொறுத்த வரைக்கும் ச்சீச்சீ....வகை உணவுகள்தான்.
துரித வகை உணவை அள்ளி ஒரு தட்டில் கொட்டி அவன் கையில் ஒரு கரண்டியைக் கொடுத்துவிட்டால் போதும்.....மண்புழுவை மீன் தின்பதைப்போல ‘ அவுக்...அவுக்....’கென மொத்த உணவையும் தின்று முடித்துவிட்டு ‘ இன்னும்...வேணும்....இன்னும் வேணும்....’ என கேட்பவன் அவன். 
இன்று அவன் அம்மா ஊட்டுவது நீராவியில் வேக வைத்த உணவு. இட்லி.  தண்ணீர் தெளித்து பூ போல எடுத்து ஒரு தட்டில் வைத்து அதில் சட்னி , சாம்பார் சேர்த்து குழைத்து அவள் மகனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
டாக்டர் என்றால் இராகுலுக்கு செம பயம். எந்த டாக்டரைப்பார்த்து பயப்படுகிறான்....? அவனது கற்பனைக்கு வந்து நிற்கின்ற அந்த டாக்டர் யார்..... என்று அவனுக்கும் தெரியாது. நிறம், உருவம்  தெரியாத அந்த டாக்டர் யாராக இருக்கும்...? யாராக இருந்தால் என்ன...? ஒவ்வொரு குழந்தைக்கும் சோறூட்ட, தூங்க வைக்க நிலாவோ, பூனையோ,பூச்சாண்டியோ தேவைப்படுவதைப்போல இராகுலுக்கு டாக்டர்
மருத்துவம் படித்து , சமூகப் பணியாற்றி, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் இந்த டாக்டரை இப்படி பூச்சாண்டியாகக் காட்டிவிட்டோமே.....என நினைக்கையில் சிரிப்புடன் கொஞ்சம் மனவருத்தம் இறுக்கவே செய்யும். என்ன செய்ய.....பிள்ளைகளுக்கு பயம் காட்ட, சோறு ஊட்ட, தூங்க வைக்க இப்படியான பெயர், ஊர் தெரியாத ஓர்  உருவம் தேவைப்படுகிறதே...
இராகுலுக்கு மட்டுமல்ல. அஞ்சலைக்கும் டாக்டர் என்றால் பயம்தான். இருவரும் பயப்படுவது டாக்டரை நினைத்து அல்ல. அவர் செலுத்தும்  ஊசியை நினைத்துதான்.
இராகுலுக்கு அடிக்கடி சுரம் வரும்தலைச்சுற்றல் வரும். வாந்தி வரும். மகனைத்தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வாள். கால் கடுக்க நிற்பாள். டாக்டரை சந்திப்பாள். அத்தோடு சரி. ஊசி அறைப்பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டாள்.
இந்தாப்பாரும்மா.... இது சீசன் சுரம். ஊசிப்போடலன்னா குணமாகாதுசெவிலியர்கள்   அவளை கடிந்துக்கொள்வார்கள்.
பிள்ளைக்கு வலிக்கும் சிஸ்டர்....’
வலிக்காத ஊசி எங்கே இருக்கு...’
வேண்டாம் சிஸ்டர்....அவன் பொறுக்க மாட்டான்.’
‘  மருந்து எடுத்தாச்சு. இதை என்னச்செய்றதாம்...?’
‘  எனக்குனாப் போடுங்க...’
எந்த உலகத்தில நீ இருக்கியோ...’ செவிலியர்கள் தலையில் தலையில் அடித்துக்கொள்வார்கள்.
 இராகுல் என்றைக்கு டாக்டரையும், செவிலியர்களையும், ஊசியையும் அடையாளம் கண்டு அழ ஆரம்பித்தானோ.... அதற்குப்பிறகு அவள் ஊசிப்போட்டுக்கொள்ள மகனை அனுமதித்ததே இல்லை. கடைசி கடைசியாக மகனுக்கு  தர்மாஸ்பத்திரியில் ஒன்றரை வயதில் டிடிடி ஊசி போட்டதோடு சரி
பூமிக்கு நிலவு போல அஞ்சலைக்கு ஒரே பிள்ளை  இராகுல். படுச்சுட்டி. எந்த விளையாட்டு விளையாடினாலும் பட்டாசு திரியாட்டம் குதிப்பவன்.  அவன் விளையாடுகையில் கேலியும் கொக்கறிப்புகளும் உச்சத்தில் இருக்கும். எப்பொழுதும் சிரித்துக்கொண்டும், அடுத்தவர்களை கேலிக்கிண்டல் செய்துக்கொண்டும் இரை பொறுக்கும் கோழிகளின் சிறகு பரிதவிக்கும் பரபரப்பில் இருப்பவன்.
இரண்டு நாட்களாக சுகமில்லை. அவ்வபோது வந்துவிட்டுப்போகும் சுகமும், வாந்தி, மயக்கமும் அவனை விட்டு போவேனா....என்கிறது. சாப்பிட மாட்டேங்கிறான். சாப்பிட்டதும் வாந்தி எடுத்துவிடுகிறான். உடம்பு இழைத்துகொண்டே வருகிறது. கீச்,மூச் வாங்குகிறது. திடுக்...திடுக்....கென முழிக்கிறான். பாயோடு பாயாக மூத்திரம் கழிக்கிறான். அவனால் அழ முடியவில்லை.
டாக்ட.... டாக்ட...இங்க வாங்க .... சாப்பிட மாட்டேங்கிறான். குண்டில ரெண்டு ஊசிப்போடுங்க.....’
டாக்டர் என்றாலே பயப்படுபவன் வெறுமென மடியில் உட்கார்ந்திருந்தான். ஒரு சிணுங்கல் இல்லை. ஒரு மறுப்பு இல்லை....
ஒரு வாரமாகவே அவனுக்கு சுகமில்லை. கேலி இல்லை. கிண்டல் இல்லை. ஒரு கோரைப்பாயின் மேல் சேலையை விரித்து அதன் மீது படுக்க வைக்கப்பட்டிருக்கிறான். வயிறு முதுகுத்தண்டோடு ஒட்டிப்போய் கிடக்கிறது. கண்கள் முட்டையின் வெள்ளைக்கருவாக இருக்கிறது.
அவனுடைய நெற்றியில் , மார்பில், வயிற்றில், முதுகில் முத்து முத்தாக வியர்வைத்துளிகள். முந்தானையால்  அதைத் தொட்டு எடுத்தாள் அஞ்சலை.
கொய்ங்.....’
கொசுப்படை வேறு செங்கிஸ்கான் படையெடுப்பாக அவனை மொய்த்தது.  மின்விசிறிடர், டுர், டக், டுக்என்றவாறு  சுற்றிக்கொண்டிருந்தது. அதனால் வியர்வையைத் துடைக்க முடியாத பொழுது கொசுப்படையை விரட்டவா முடியும்! கொசுக்கடியால் கால் விரல்களை அசைத்தபடி புரண்டுப்படுப்பதும், புரியாத மொழியில் உழறுவதுமாக இருந்தான் இராகுல். கதவு அடைக்கப்பட்ட வீடு வெக்கையும் புழுக்கமுமாக இருந்தது. மகனைத்தூக்கி தோளில் கிடத்திக்கொண்டு வீட்டிற்குள் நீள்வாக்கில் நடக்கத்தொடங்கினாள்.
நேற்றையத்தினத்தை விடவும் இன்றையத்தினம் மேலும் சொடுங்கிப்போயிருந்தான். முந்தாநேற்று பறித்த முளைக்கீரை தண்டைப்போல துவண்டிருந்தான். இரண்டு கைகளையும் கால்ச்சட்டைக்குள் நுழைத்துக்கொண்டு  அட்டைப்பூச்சியைப்போல சுருண்டுப் படுத்திருந்தான். முதுகுத்தண்டு எலும்புகள் ஆட்டுக்கால் முடிச்சைப்போல முட்டிக்கொண்டிருந்தன. இரண்டு கால்களும் பிட்டத்தோடு ஒடுங்கிப்போயிருந்தன.
கொஞ்ச நேரம் திண்ணையில குந்திருக்க  மாட்டான். அவிழ்த்து விட்டகாங்கேயம்வகை காளையைப்போல ஓடித்திரிவான். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால் புத்தகத்தை  எடுத்துப்புரட்ட மாட்டான். எழுத மாட்டான்.... எந்நேரமும் விளையாட்டு , விளையாட்டு, விளையாட்டுதான்... மகனது நினைவுப்பேழை அவளது கண் முன்னே நிழலாடியது.
இராகுலு”-
அம்மா....?”
ஸ்கூல்ல கொடுத்த வீட்டுப்பாடத்த முடிச்சிட்டியா..?”
“ ...ம். முடிச்சிட்டேனே
என்ன  கொடுத்தாங்க...?”
ஒன்னு ரெண்டு படிச்சிட்டு வரச்சொன்னாங்க
எங்கே சொல்லு?”
மாடி மாடி ஒன்னு. மத்தாப்பு ரெண்டு, சோளப்பொறி மூணு,........”
இப்படிதான் எதைக்கேட்டாலும் அதிலொரு கேலியும் ,குறும்புத்தனமுமாகப் பதில் சொல்வான்.  என்னவாகி விட்டது அவனுக்கு....?  விளையாட மாட்டேங்கிறான், படிக்க மாட்டேங்கிறான், பள்ளிக்கு போக மாட்டேங்கிறான்.....எந்நேரமும் படுத்தப் படுக்கைதான்!
மகனைப்பற்றி நினைக்கையில் அஞ்சலைக்கு கண்கள் உடைய கண்ணீர் வழிந்தது. உதடுகள் வறண்டு பரிதவித்தன. மகனை உற்றுப்பார்த்தாள். அவனது மோவாய் ஒடுங்கிப்போயிருந்தது. தடித்துத்தொங்கிய கண் மடல்கள். மேல்வயிறு குழி விழுந்து,அடி வயிறு பந்து போல பருத்துப்போயிருந்தது. பல்லாங்குழி புளியங்கொட்டைகளைப்போல குழிக்குள்ளாக கிடந்தன கருவிழிகள். உடம்பெங்கும் கொசுவம் மாதிரியானச் சுருக்கம். கையைப்பிடித்து உள்ளங்கையை உற்றுப்பார்த்தாள். கைகள்  இரத்த ஓட்டமின்றி  தேரையின்  அடிவயிற்றைப்போல வெளீரென  இருந்தன.  
 அவன் நன்றாகச் சாப்பிட்டு இரண்டு வாரங்களாகிவிட்டது.  பச்சத்தண்ணி மட்டும்தான் வேணுங்கிறான். நாக்கு அடிக்கடி வறண்டு போகிறது என்கிறான்.
இராகுல்...” அழைப்பில் தாய்மை கனிந்திருந்தது.
ம்மா...!”
செல்லம்ல.  எழுந்திரிடிம்மா
மகனை உசுப்பி தலைக்கு போர்வையைக்கொடுத்து கால்களை நீட்டி குந்த வைத்தாள்.  அவனால் குந்தியிருக்க முடியவில்லை. அவனது இமையை விலக்கி விழியை உற்றுப்பார்த்தாள். விழித்திரையின் நரம்புகள்  வெளிர்த்துப்போயிருந்தன. கைகள் நடுங்கின. கால்கள் சடசடத்தன.
இராகுல்....”
அவன் அம்மாவை நிமிர்ந்து மட்டும் பார்த்தான். நாசிகள் விடைத்தன. அழ வேண்டும் போல இருந்தது. அழவும் தெம்பு வேண்டுமே!
மகனை குறுகுறுவெனப் பார்த்தாள் அஞ்சலை.  முந்தானையை எடுத்து மகன் முகத்தை துடைத்து விட்டாள். பெத்த வயிறு பதறியது. கர்ப்ப பைக்குள் ஏதோ ஒன்றுசுருக்கென தைப்பதைப்போலிருந்தது.
இராகுலு.... ஆஸ்பத்திரிக்கு போவோமா...?’
வேண்டாம்மா...’
ஏன்டிம்மா....?’
ஊசிப்போடுவாங்க....’
மகனை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சினாள். ‘ஊசிப்போட  உன்ன நான்  விட்டுறுவேனா....?. தங்கத்துக்கு வலிக்காதா...? நீ துடிச்சிப்போயிட மாட்டீயா...?. என்னால அதை தாங்கிக்கொள்ள முடியுமா...? மாட்டேன்டிம்மா...மாட்டேன்.... எத்தனை ஊசி போடணுமனாலும் எனக்குப்போடுங்க. என் செல்லத்திற்குப் போட்டுடாதீங்கனு சொல்லிடுவேன்....ஆஸ்பத்திரிக்கு போவோம்..ம்.....போவோம்....’
 மெல்ல எழுந்திருக்க முயற்சித்தான் அவன். அவனால் எழுந்திருக்க முடியவில்லை
பார்த்தியா.....பார்த்தியா...எழுந்திருக்க முடியல. நீ பள்ளிக்கூடத்தி்ற்கு போகணுமெல. படிக்கணுமெல. படிச்சி பெரிய ஆபிஸரா வரணுமெல. வா... ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்திடுவோம். ஊசிப்போட மாட்டாங்க. உன்னோட ஊசிய நான் போட்டுக்கிறேன். போவோமா......?’
ம்
ம்... நல்லப்பிள்ள. கருத்துப்பிள்ள , தங்கப்பிள்ள...
மகனை அள்ளிக் கொஞ்சினாள். அவனது முடிகளை நீவி விட்டாள். மகனைத்தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள் .  முந்தானையால் மகனை மூடிக்கொண்டாள். வேகமாக மருத்துவமனைக்குச் சென்றாள்.
அரசு மருத்துவமனை அது. பேட்டரி தீர்ந்துப்போன பொம்மையைப்போல மெதுவாக இயங்கிக்கொண்டிருந்தது.  
மருத்தவர் முன் உட்கார வைக்கப்பட்டான் ராகுல். அவனது இமைகளை விலக்கிப்பார்த்தார். வயிற்றைச் சுண்டினார். பக்கம் பக்கமாக எழுதினார்.
பெரியக்கோயில்களுக்குப் போகிறவர்கள் கோயிலைச்சுற்றி இருக்கிற சிலைகளைக் கும்பிட கோயிலை ஒரு வலம் வருவதைப்போல  அவள் மகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனையை சுற்றி வலம் வந்தாள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு   சோதனைக்கு மகனைக்கிடத்தினாள்.   சோதனைகள் முடித்து டாக்டர் முன் இராகுல் உட்கார வைக்கப்பட்டான். டாக்டர் சோதனையின் முடிவுகளை வெறிக்கப்பார்த்துக்கொண்டிருந்தார்.
உடலின் வெப்பநிலையைக் கவனித்தார்.  புன்முறுவல் கொண்டு அதை டிக் அடித்தார். அடுத்து நாடித்துடிப்பை கணக்கிட்டார். அதை வட்டம் கட்டினார். சுவாசத்துடிப்பை எண்ணினார். அதில் அடிக்கோடிட்டார்.  இரத்த அழுத்தத்திற்கு அருகில் பெருக்கல் குறியிட்டு வட்டம் கட்டினார்.இரத்தம், சிறுநீர், மலம் சோதனைகளைப் பார்த்தார். இமைகளை ஏற்றி இறக்கினார்.
டாக்டர்... என் பிள்ளைக்கு என்ன டாக்டர்...? ’ பரிதவித்தாள் அஞ்சலை.
கவலைப்படுற மாதிரி ஒன்னுமில்ல. இதுக்கு ஊசி இருக்கு
 அவள் திடுக்கிட்டாள். ‘ ஊசி வேணா... வலி பொறுக்க மாட்டான் டாக்ட...’
‘ ஊசி நான் போடப்போறதில்ல. அவனாகவே போட்டுக்கணும்’
‘ எத்தனை நாளைக்கு டாக்டர்....?’
‘ தினமும் மூணு வேல.....’
‘ டாக்டர்....!’
 ‘ ம்.....இன்சுலின் பிராப்ளம். சர்க்கரை முத்திப்போயிருக்கு
டாக்டர்.....!’