புதன், 10 பிப்ரவரி, 2016

குருதியில் நனைந்தக் குருளைகள்

அவர்கள் பேசிக்கொள்ளும் அரவம் முன்னே விடவும் பலமாகக் கேட்கத் தொடங்கின. அவர்கள் ஊர்க்கதைப் பேசி, நாட்டு நடப்புகளைச் சுற்றி ‘ஜோஸ் மார்ட்டி’ எனும் போராளியை வட்டம் கட்டினார்கள். 
ஒருவன் சொன்னான் ‘ பிறந்தால் ஜோஸ் மார்ட்டி போல் பிறக்க வேண்டும்’
மற்றொருவன் ‘ அவர் அப்படி என்ன செய்து விட்டார்....?’
முதலானவன் இரண்டாவது நபர் மீது எரிந்து விழுந்தான். அடிக்கக் கையை ஓங்கினான்.‘ நல்லக்கேள்வி கேட்டாயடா நீ... அவரை மட்டும் இந்த சண்டாள ஸ்பானியர்கள் விட்டு வைத்திருந்தால் இன்றைக்கு அமெரிக்கர்கள் நம்மிடம் இப்படி வாலாட்டுவார்களா....? அமெரிக்கர்களின் வாலை அவன் ஒட்ட வெட்டியிருப்பான்.....’
     கரும்புத் தோகையால் வேயப்பட்ட குடிசைக்குள் இருந்தபடி அவர்கள் ஜோஸ் மார்ட்டி நிகழ்த்திய சாகசத்தை கர்ஜனையோடுப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் அவர்களது பேச்சு உரத்தக்குரலிலும் சில இடங்களில் நிறுத்தி மெல்லமாகவும் இருந்தது.
       அவர்கள் ஏஞ்சல் பண்ணையாரின் இரவு நேரக் காவலர்கள். ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றி  வைத்துகொண்டு கதைப்பேசுவதும், காடை, சிட்டுகளைப் பொறித்துத் தின்பதும், ஏப்பம் விடுவதும் , நாழிகைக்கு ஒரு முறை ஒருத்தரென பண்ணையைச் சுற்றி காவல்காக்கும் பொருட்டு வலம் வருவதுமாக இருந்தார்கள். அவர்கள் தினக்கூலி அடிமைகள் என்றாலும் ஸ்பானிய, பிரிட்டானிய, பிரெஞ்சு, அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தை நீள்வெட்டுக் கோணத்தில் பேசும் திறமையைக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சோர்வோ, தூக்கமோ வருகையில் ‘ஜோஸ் மார்ட்டி’ செய்த சாகசகங்களைப் பேசி அவர்களுக்குள் உணர்ச்சிகளை மீட்டுக்கொண்டார்கள்.  
       இரவு நேரக்காவலர்களின் குடிசையையொட்டி இன்னொரு குடிசை இருந்தது. அது கச்சிதமான, அடக்கத்துடன் கூடிய அழகானக் குடிசை. அதற்குள் லினா ரூஸ். அவளுடன் அவள் பெற்றெடுத்த மக்கள் இரண்டு மகள்கள்.
       லினா ரூஸ்  இடுப்பைப்பிடித்துகொண்டு பிரசவ வலியை, அதன் ரணத்தை, சூட்டை உள்வாங்கி குடிசைக்குள் நடந்தவளாக இருந்தாள். குடிசைக்கும் வெளியே மழையைப்போல் பனி பெய்துகொண்டிருந்தது. பனியால் அவளது மேனி சில்லிட்டிருந்தது.
அவளால் முதலில் எடுத்துவைத்த காலடியைப்போல் மறடியை எடுத்து வைக்க முடியவில்லை. தசைகளுக்குள் குண்டூசி முளைத்து ‘சுருக்’கெனத் தைத்ததைப்போலிருந்தது. உதட்டை மெல்லக் கடித்துகொண்டாள். வலது கையால் இடிப்பைத்தாங்கி இடது கையால் சுவற்றைப்பிடித்து மெல்ல, மெல்ல காலடிகள் எடுத்து வைத்து நடந்தாள். 
நடையில் சுமை இருந்தது. சுமையிலும் ஒரு சுகம் தெரிந்தது. நடந்தால் பிரசவம் இலகுவாகும். முதல் பிரசவம், மறு பிரசவத்தின் போது செவிலியர்கள் சொன்னது அவளது நினைவிற்கு வந்தது. இன்னும் கொஞ்ச நேரம் நடக்கலாமென நடந்தாள். அவளால் நடக்க முடியவில்லை. ஒரு கணம் நின்றாள். அவளால் நிற்க முடியவில்லை. ஒரு கையால் சுவரைத்தாங்கி மறுகையால் வயிற்றைப் பிடித்து கால்களை நீட்டி உட்கார்ந்தாள். மார்புக்கூடு ஏற, இறங்க மூச்சொரிந்தாள். தண்ணீர் தாகம் எடுத்தது. கால்களை நீட்டி மடக்கி பிட்டத்தை நகர்த்தி தண்ணீர்க்குவளையை நோக்கி நகர்ந்தாள். மெல்லக் குவளையைச் சாய்த்தாள். கையால் தண்ணீரை அள்ளி இரண்டு மிடறுகள் பருகினாள். தாகம் தணிவதைப்போலிருந்தது.
மெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து வெறும் நூற்று ஐம்பது கல்தூரத்தில் இருக்கிறது கியூபா. காற்றில் பறந்து முள்ளில் சிக்கிக்கொண்ட கைக்குட்டையைப்போல நெழிவும், சுழிவுமான நிலம். ஸ்பெயின் எனும் பருந்தின் கால்களில் சிக்கிண்டிருந்த அந்நிலம் கொஞ்சக்காலமாக  அமெரிக்கக் கழுகின் கால்களுக்குள் சிக்கிண்டு தவித்தது. கடலும், கடல் சார்ந்த தீவாக கியூபா இருந்தாலும் அதன் உக்கிர அலைகள் ஏகாதிபத்தியத்தால் ஆனவையாக இருந்தது..  
கியூபாவின் வடக்கு மாநிலம் ‘ஓரியண்ட்’. அம்மாநிலம் மூன்று பக்கம் நிலமும் ஒரு பக்கம் கடலும் சூழ்ந்து வளைகுடா போல் இருந்தது. நைப் வளைகுடா அது. கத்தியைப்போல கூர் நிலத்தைக் கொண்டிருந்ததால் அதற்கு அப்படியொரு பெயர். அந்த விளைகுடாவையொட்டியப் பகுதியில் தான் இருக்கிறது ஏஞ்சல் பண்ணையார்க்கு சொந்தமான பைரன் பண்ணை.
ண்ணையின் இரவு நேரக்காவலர்களின் சாகசப்பேச்சு சன்னமாக லினாரூஸ் காதிற்குள் விழுந்தவண்ணமிருந்தது. அவர்களின் பேச்சுக்குரலுக்கு ‘உம்...’ போட்டவாறு வலியை அவள் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். பிரசவ வலி அவளை பிளந்துத்தின்றது. அடி வயிறு தொடையை நோக்கி இறங்குவதைப்போலிருந்தது.
‘ யாரேனும் வாருங்களேன்.....’ என அவள் கத்தலாமென இருந்தாள். அதற்காக வாயைத்திறந்தாள். இந்த நடுநிசியில் என் கதறல் யாருக்கு கேட்டுவிடப்போகிறது. வந்தால் பக்கத்து குடிலிருந்து ஆடவர்கள் மூன்று பேரும் வந்தால்தான் உண்டு. ஆடவர்களை வைத்துகொண்டு பிள்ளைப்பெற முடியுமா.....? . அப்படியே பெற்றாலும் பண்ணையாரின் கௌரவம் என்னாவது....? . நான் என்ன பைரன் பண்ணையார் ஏஞ்சலின் அதிகாரப் பூர்வ மனைவியா....? இல்லையே!. நான் பண்ணையாரின் காதலி அல்லவா!. அவரே முன் வந்து ‘இவள் என் மனைவி ’ எனச் சொன்னால்தான் உண்டு. அவரால் அப்படி சொல்ல முடியுமா.....? அவருக்கென்று ஒரு மனைவியும், அவளுக்கென்று பிள்ளைகளும் இருக்கையில் என் வயிற்றிலிருந்து பிறந்திருக்கிற, பிறக்கப்போகிற குழந்தையைத் தன் மக்கள் என உரிமைக்கொண்டாடவாப் போகிறார்......? ஒரு வேளை இக்குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்தால் வருகிறாரோ என்னவோ......மனதிற்குள் பேசிக்கொண்டு வலியைத் தாங்கி குடிசைக்குள் வலம் வந்தவளாக இருந்தாள் லினா ரூஸ்.
அண்டைக் குடிசை காவலர்கள் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கியிருந்தார்கள்.
‘ அமெரிக்கர்களை நம் மண்ணை விட்டு விரட்டியடிக்க போர்ப்படை தேவையில்லை. ஜோஸ் மார்ட்டி எழுதிய பாடல் ஒன்று போதும்.’
ஒருவன் பெரிதாக வாயைத்திறந்தான். ‘ என்னச் சொல்கிறாய்.....ஜோஸ் மார்ட்டி கவிஞரா...?’
‘ கவிஞர் மட்டுமா....நல்ல பேச்சாளரும் கூட....’
ஒருவன் அவர் எழுதிய கவிதையின் ஒன்றை உணர்ச்சிப்பொங்கப்பாடினான். மற்றொருவன் அவனுடன் சேர்ந்து சுதி மீட்டினான்.
‘ ஸ்பானிய அரசாங்கத்திற்கு எதிராக முதலில் போராடியவர் அவர்தானேப்பா’
‘ அவருக்குப்பின்னால் கூடியவர்கள் கியூபா இளைஞர்கள் மட்டுமா....! உலகம் இல்லையா....’
‘ நாம் கியூபாவின் பூர்வீகக் குடிகள் எனப் புரிய வைத்தவர் அவர்தானே...’
‘ என்றைக்கு கொலம்பஸ் இந்த தேசத்தைக் கண்டுப்பிடுத்து ஸ்பெயின் நாட்டினரிடம் சொன்னானோ அதுத் தொட்டே கியூபா ஸ்பானியர்களுக்கு காலனியாகி விட்டது’
‘ என்னச்சொல்கிறாய்.....?’
‘ பின்னே இல்லையா....! கியூபாவில் விளைகிற கரும்பின் தோகை நமக்கு. சர்க்கரை அவனுக்கு. மண் நமக்கு. தாதுக்கள் அவனுக்கு,...’
‘ ஸ்பானியர்கள் நாயைப்பிடித்து அதுக்கொரு தொப்பியை வைத்து இங்கே அனுப்புவான். அந்த நாயை நாம் கவர்னராக ஏற்றுக்கொண்டு சலாம் போட வேண்டும்...’
ஒருவன் பேச்சை இடைமறித்து உரத்தக்குரலில் கேட்டான். ‘ சரி....ஜோஸ் மார்ட்டி அந்த ஸ்பானியர்களை எதிர்த்து என்ன செய்தார்....? அதைச்சொல்லேன்ப்பா....’
‘ கியூபா பூர்வீகக்குடிகளை  ஒன்றுத்திரட்டி விடுதலைப்போராட்டத்தைத் தொடங்கினார்’
‘ ஒரு கவிஞரை எப்படி மக்கள் நம்பினார்கள்.....?’
‘ நான்தான் முதலில் சொன்னேன் இல்லையா.... முதலில் அவரொரு போராளி. பிறகுதான் அவரொரு கவிஞன்....’
‘ அட!’
‘ ஸ்பானியர்கள் அவரது போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை அனுப்பியது.’
‘ என்ன ஆனது....?’
‘ அவரது போர் உத்தி்க்கு முன் இராணுவம் தவிடு பொடியாகிப்போனது....’
‘அப்படிச்சொல்லு! பிறகு....?’
‘ ஸ்பெயின், தன் ஆளுமைக்கு உட்பட்டு கியூபாவிற்கு சுயராஜ்ஜியம் அமைக்கிறேன் என அறிவித்தது...’
‘ அதற்கு ஜோஸ் மார்ட்டி என்னச்சொன்னார்....?’
‘ சுயராஜ்ஜியம் எங்களுக்கு அமைத்துகொள்ளத் தெரியும். நீங்கள் மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு வெளியேறுங்கடா... ஏகாதிப்பத்திய நாய்களா..... என்றார்’
‘ அடடா... அவருக்குத்தான் என்னவொரு தைரியம். அவர்கள் போனார்களா...?’
‘ போவார்கள்...போவார்கள்.... எப்படிப்போவார்கள்....’
‘ பிறகு....?’
‘ 1898 ஆம் ஆண்டு இரண்டு தரப்பினருக்கும் போர் தொடங்கியது’
‘ யார் பக்கம் வெற்றி...?’
‘ வெற்றியைக் கணிக்க முடியவில்லை’
‘ என்ன ஆனது....?’
‘ ஸ்பானிய அரசாங்கம் சமரசப்பேச்சு நடத்தலாமென ஜோஸ் மார்ட்டிக்கு அழைப்பு விடுத்தது’
‘ என்னப்பா சொல்கிறாய்! இதில் என்னவோ சூழ்ச்சி இருப்பதைப்போலிருக்கிறதே... ?’
‘ சரியாகச்சொன்னாய்....ஜோஸ் மார்ட்டியை வியூகத்தால் கைது செய்து நாடு கடத்தி விட்டார்கள்’
‘ அய்யகோ!’
‘ அவர் என்ன சாதாரணப்பட்டவரா.....நாடு கடத்தப்பட்டவர் சிறையில் இருந்தவாரு கியூபாவை சுதந்திரம் பெற்ற குடியரசாகப் பிரகடனப்படுத்தினார்.....’
‘ அடடே......அடடே......’ என்றவாறு ஒருவன்  எம்பிக்குதித்தான்.
 ‘ பிறகு என்ன ஆனது. மிச்சத்தையும் சொல்லி விடேன்....?’
‘ சிங்கத்தைச் சிறையில் தள்ள முடியுமா... காற்றுக்கே வேலியா....சிறையிலிருந்தவர் தப்பித்து தாய்நாடு திரும்பினார்’
‘ திரும்பி....?’
‘ ஸ்பானிய இராணுவத்துடன் கொரில்லா போர் நடத்தினார்’
‘ இந்த முறை ஜோஸ் மார்ட்டி வெற்றிப்பெற்றிருப்பாரே....?’
‘ முடியவில்லை....’
‘ இச்! என்னச்சொல்கிறாய்...?’
‘ இந்த முறை ஜோஸ் மார்ட்டியுடன் ஸ்பெயின் மட்டும் மோதவில்லை. அந்த நாட்டுடன் கைக்கோர்த்து கொண்டு அமெரிக்காவும் வந்தது’
‘ அமெரிக்கா ஏன் வர வேணும்....?’
‘ மண்ணாசை யாரை விட்டது....பூர்வீகக் குடிகளுடனானப் போரில் வென்றால் கியூபா பாதி  எனக்கு  வேண்டும் என அமெரிக்கா பங்கு பேசியது’
‘ நினைத்தேன்...’
‘ அமெரிக்காவின் சூழ்ச்சித் தெரியாமல் ஸ்பெயின் அதற்கு சம்மதித்து விட்டது. பிறகு ஸ்பானியர்களை விரட்டி அடித்துவிட்டு நம்மை அமெரிக்கா ஆண்டுகொண்டிருக்கிறது. பார்த்தாயா அவர்களின் ஆட்டத்தை....’ என்றவன்  கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
‘ அடுத்து சொல்லேன்ப்பா....ஜோஸ் மார்ட்டி என்ன ஆனார்....?’
‘இரு நாட்டு இராணுவத்தையும் ஜோஸ் மார்ட்டியால் எதிர்கொள்ள முடியவில்லை.’
       ‘ கைது செய்திட்டார்களோ..?’
‘அவரையும், அவரது படையையும் தோட்டாக்களை தீரும் வரை சுட்டுத்தள்ளிவிட்டார்கள்...’
‘ என் இரத்தம் கொதிக்கிறதப்பா.....என்ன சொல்கிறாய்....!’
‘ நடந்ததைச் சொல்கிறேன். அந்தப்போரில் இறந்துபோன கியூபா வீரர்கள் எத்தனைப்பேர் தெரியுமா....?’
‘ எவ்வளவு பேர்....?’
‘ இரண்டு இலட்சம்....’ என்றவாறு ஒருவன் அழுத அழுகையின் அழுகுரல் மகப்பேறுக்காக தவித்துக்கொண்டிருந்த லினாரூஸ்வின் காதைக்குடைந்தது. அவனது கதறல் அவளது பிரசவ வலியை விடவும் உக்கிரமாக இருந்தது. 
 இன்னொருத்தன் அந்த நடுநிசியிலும் அடித்தொண்டை அதிரக் கத்தினான். ‘அமெரிக்கர்களை நாம் சும்மா விடப்போவதில்லை’
‘ கொஞ்சம் மெதுவாகப் பேசேன்....நாம் ஒன்றும் கியூபா தேசத்து சிப்பாய்கள் அல்ல. அமெரிக்கர்களின் அடிமைகள். நம்மால் அமெரிக்கர்களை என்ன செய்திட முடியும்..ம்.....?.’
மற்றொருவன் அந்தப் பின்னிரவு என்று கூடப் பாராமல் தரையை ஓங்கி அறைந்தவாறு கத்தினான் ‘ அவன்களை ஓடோட விரட்ட ஒருவன் பிறந்து வருவான்டா....நிச்சயம் வருவான்.......’
லினாரூஸ் தொடைகளுக்கிடையில் இரத்தமும் சகதியுமாக ஒரு குழந்தை பிறந்து ‘வீ....ல்’ என பீறிட்டது .
1926 ஆகஸ்ட் பதிமூன்று. அதிகாலை இரண்டு மணி.
குழந்தையைச்சுற்றிலும் தினக்கூலிகள், செவிலியர்கள், ஆடவர்கள் எனப் பலரும் சூழ்ந்து நின்றார்கள். பிறந்திருப்பது ஆண் குழந்தை என்கிற செய்தி ஏஞ்சல் பண்ணையாரின் காதிற்கு சென்றிருந்தது. அவரும் வந்திருந்தார். மகனை அள்ளினார். கொஞ்சினார்.
‘இவன் என் மகன். என் பிள்ளை. என் ரத்தம். ‘ஜொஸ் மார்ட்டி’ இறக்கவில்லை. இதோ பிறந்திருக்கிறான். ஏஞ்சல் குழந்தையைக் கைகளில் வைத்துகொண்டு வானத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார். அவரைச் சூழ்ந்திருந்தத் தினக்கூலிகளுடன் உரக்கப் பேசினார்.
‘ நம் தேசத்தை  ஸ்பானிய - அமெரிக்க சட்டம் ஆள்கிறது. அச்சட்டத்தின் படி அடிமைகள் தன் பெயருக்குப்பின்னால் தன் மூதாதையர்களின் பெயரைச் சூட்டிக்கொள்ளக் கூடாது. அச்சட்டத்தை நான் இப்பொழுதே மீறுகிறேன். என் மூதாதையர் பெயரைச் சேர்த்தே இவனுக்கு நான் பெயர் சூட்டுகிறேன். ‘ஃபிடல் காஸ்ட்ரோ’

சனி, 6 பிப்ரவரி, 2016

போர் கலகமாகுமா....?

வீட்டுக்கொரு ஆண்மகன் நாட்டைக்காக்க புறப்படுக....’ என்றொரு நாடகம் ஒரு பள்ளி ஆண்டுவிழாவில் நடந்தது. ஒரு மாணவித்தாய் குழந்தையைப்பெற்று, வளர்த்து மன்னனையும், நாட்டையும் காக்க வீர வசனம் பேசி தன் மகனைப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தாள். அப்பொழுது பார்வையாளர் தரப்பிலிருந்து ஒரு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்தாள். ‘அவனை நீ அனுப்பாதேடியாத்தா....போனவருசம் இதே நாள்ல ஒரு மகனை அனுப்பி வச்சேல்ல.....அது போதாதாக்கும்....’. அவள் அப்படிச்சொன்னதும் ‘ குபீர்’ ரென எழுந்தச் சிரிப்பொலி  அடங்க நீண்ட நேரம் பிடித்தது.
       ‘ என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை நான் அறியேன்..... ஒரு வேளை அவன் தோன்றக்கூடும் போர்க்களத்தில்.....’ என பெண்பாற்புலவர் காவற்பெண்டு காட்டும் புறநானூற்று தாய் முகத்தில் உண்மையில் வீரம் செறிந்திருக்குமா....? மகன்களை போரில் சிரித்துகொண்டு பலிக்கொடுக்குமளவிற்கு தாய் என்ன வெறும் சடம்தானா....?. ‘அய்யோ.....! நான் கொடுத்த பால் எல்லாம் இப்படி இரத்தமாக ஓடுகிறதே....’ என ஒரு திரைப்படத்தாய் பேசும் வசனத்தைப்போல போர்க்களத்தாய் பேசியிருக்க மாட்டாளா....? பெத்த வயிறு பித்து இல்லையா!
       சரி, அந்தப் பெண்பாற்புலவரிடமே கேட்டுவிடுவோமே....‘ மன்னனுக்காகவும், அவனது ஆட்சிக்காகவும் அவள் தன் மகனைப் பறிக்கொடுத்தாள். அவளுக்காக அம்மன்னன் எதைக் கொடுத்தான்.....?. தன் ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்கை அவளுக்காக் கொடுத்திருப்பானா....? புகழ்ந்து பாடிய புலவனுக்காக எதையெல்லாமோ கொடுத்த அம்மன்னர்கள் போரில் தன் மகனை இழந்த புத்திரச்சோகத்தில் இருந்த தாய்க்கு அவள் இறக்கும் காலம் வரைக்கும் சோறூட்டிருப்பானா....?’ என்கிற கேள்விக்கு இலக்கியத்தில் பதில் இல்லை.
       ‘கலிங்கப்போரினை சந்தித்தான் அசோகன். மாண்டுக்கிடந்த சிப்பாய்களைக்கண்டு மனம் வருந்தி, திருந்தி போரினை அறவே வெறுத்தான்’ என்கிறது வரலாறு. அதுவா உண்மை.....? கலிங்கப்போருக்குப்பிறகு மீண்டும் படையெடுத்து எதிராளியை வதம் கொள்ள அவனிடம் சிப்பாய்கள் ஏது....என்பது அல்லவா உண்மை!
       மற்றொரு புறநானூற்றுப் பாடலைப்பாருங்கள். ஒரு தாயிடம் ஓடி வந்த ஒருவன்.‘ உன் மகன் போர்களத்தில் மாய்ந்துக்கிடக்கிறான்....’ என்கிறான். அவள் அதற்காகப் பதற்றமடையவில்லை. ‘ காயம் மார்பிலா , முதுகிலா....?’ என்கிறாள். அவன் ‘ முதுகில் ’ என்கிறான். அதைக்கேட்டதும் அவளுக்கு வந்ததேக் கோபம்.... ‘ என் மகன் கோழையா...அவன் என் வயிற்றில்தான் பிறந்தானா.....’ என கையில்    வேலோடு போர்க்களத்திற்குச் செல்கிறாள். மகன் மார்பில் வேல் பாய மாய்ந்துக்கிடக்கிறான். தாய் அகம் மகிழ்கிறாள். ‘ அடடே..... இவன் அல்லவா மகன்.... அவன் அப்பனைப்போலவே வீர மரணம் எய்திருக்கிறான். அவனை இறுமாப்போடு மார்பில் அணைத்து ‘ கருத்தறிய பொய்ச் சொன்ன கயவன் எங்கே..., அவன் நாக்கு எங்கே... என் வாள் இங்கே....’ என வீர வசனம் பேசுகிறாள் என்றது இலக்கியம். இது ஒருபுறமிருக்க வரலாறு வேறொரு விதமான கருத்தை பதிவு செய்துள்ளது.  
       சோழர்கள் பாண்டிய சிப்பாய்களை கைது செய்து அவர்களை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அவர்களது விழிகளை பிடுங்குகிறார்கள். ஒரு தாய் மறைவிடத்தில் மறைந்திருந்தவாறு தன் மகனின் விழிகள் பிடுங்கப்படுவதைப் பார்க்கிறாள். அவளால் புறநானூற்றுத் தாயைப்போல அகம் மகிழ முடியவில்லை. ‘ நீங்கள் ஆள வம்சமற்று போவீர்கள் ’ என சோழர்களுக்கு எதிராக சாபம் விடுகிறாள்.  
       ஒரு குமரி வீரப்பெண்மணியாக இருக்கலாம். ஆனால் தன் மகனை இழந்து நிற்கும் தாய் ஒருபோதும்  வீராங்கணையாக இருக்க முடியாது. ‘புத்திரன் மரணத்தை விடவும் ஒரு தாய்  வாழ்வில் வேறொரு கொடுமை உண்டோ!’
       கிரேக்க மொழி புராணம் இலியட். அகமெம்னன் , அக்கிலஸ் இருவரும் உடன் பிறந்தவர்கள். அக்கிலஸ் பாரிஸ் மன்னன் மீது போர்த்தொடுக்க அண்ணன் அகமெம்னன் உதவியை நாடுகிறான். அகமெம்னன் தன் தம்பிக்கு அறிவுரைச் சொல்கிறான் ‘ என் உடன்பிறப்பே.... ஒரு முறை நான் பாரிஸ் மன்னனிடம் பேசிப்பார்க்கட்டுமா....?’ அக்கிலஸ் துள்ளிக்குதிக்கிறான் ‘ சீச்சீ..... பேச்சுவார்த்தையா.... யாரிடம் யார்....?’. போர் தொடங்குகிறது. முடிவு....? முந்தையப்போரில் தோல்வியைத் தழுவியிருந்த பாரிஸ் இந்த முறை அக்கிலஸின் உயிரை பறித்துவிடுகிறான்.
       அமெரிக்கா - வியாட்நாம், அமெரிக்கா - கியூபா கடந்த நூறாண்டில் வெற்றித்தோல்வி தெரியாமல் முடிந்துப்போயிருந்த போர்கள் அவை. ஏன் அமெரிக்கா போரிலிருந்து திடீரென பின் வாங்கியது....? போரின் வெற்றிக்குப்பிறகு கிடைக்கப்போகும் இலாபத்துடன் ஒப்பிடுகையில் அதுவரைக்கும் அந்நாடு சந்தித்திருந்த இழப்பு அதிகமாக இருந்தது. கோலார் தங்கவயலில் கிடைக்கும் தங்கத்தை விடவும் அதனை வெட்டியெடுக்க ஆகும் செலவு அதிகம் என்பதைப்போல.....
       ஒரு போரின் போக்கினைத் தீர்மானிப்பது வெற்றியோ, இலாபமோ அல்ல, இழப்பீடுதான். அமெரிக்கா ஐ.எஸ் மீது தொடுக்கும் போருடன் ஒப்பிடுகையில் ஐ.எஸ் முதலாளித்துவ நாடுகளின் மீது தொடுக்கும் போருக்கு ஆகும் செலவு மிக, மிகக்குறைவு. ஓர் உதாரணத்தைப்பாருங்களேன். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தலிபான் தீவிரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்தினார்கள். இந்தியா பெரிய விலைக்கொடுத்து அவ்விமானத்தை மீட்டு வந்தது. இவ்விரு தரப்பில் தீவிரவாதிகளுடன் ஒப்பிடுகையில் அரசு தரப்பு இழப்பு மிக அதிகம் இல்லையா! அப்படித்தான். ஒரு பிரச்சனையைவிடவும் அதற்கான தீர்வு மிகக்குறைந்த பொருட்செலவில் கிடைத்திட வேண்டும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்று. தீவிரவாதம் முற்றிலுமாக அழிக்க முடியாமைக்கு இதுவொரு காரணம்.  
        முதல் உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தக் காலக்கட்டம் அது. ஜெர்மனியில் ஒரு வீதி நாடகம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறத்தொடங்கியிருந்தது. போரின் போக்கு, போரினைத் தலைமையேற்று நடத்தும் அரசன், நெருக்கடி, இளைஞர்களின் ஆவேசம், மக்களின் கோபம், தாயின் பரிதவிப்பு இத்தனையையும் ஒருங்கிணைய  அரங்கேற்றமான அந்த நாடகம் ‘மதர் கரேஜ்’ ( தாயின் நெஞ்சுரம்). இந்நாடகத்தை எழுதி அரங்கேற்றம் செய்தவர் ஜெர்மன் நாடகாசிரியர் பெர்த்தோல்டு பிரேஷ்டு.
       அந்த நாடகத்தின் சாராம்சம் இதுதான். ஓர் அரசன் போரினை முன் நின்று நடத்துகிறான். போர் ஒரு முடிவும் தெரியாமல் அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. போரினை முன்நின்று நடத்த ஆண் மகன்கள்  தொடர்ந்து தேவைப்படுகிறார்கள். மன்னன் மக்களிடம் ஒரு கருத்துரையைப் பரப்புகிறான். ‘ மக்கள் சுதந்திரமாக வாழ வகையிலானப் போர் இது. வருங்காலத்தில் இனி போர்களே இல்லாமல் செய்யும் உலகின்  கடைசிப்போர் இது.’ இந்த அறிவிப்புடன் போர்ப்படைக்கு ஆள்ளெடுப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு தாயும் குழந்தையைப் பெற்று எடுத்து வளர்த்து போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். ஒரு தாய் தான் பெற்ற நான்கு குழந்தைகளையும் போர்க்கு அனுப்பி நால்வரையும் இழந்து அனாதையாக தனித்து நிற்கிறாள். மகன்களது ஏக்கத்தின்பால் ஆழ்ந்து இறந்து விடுகிறாள். ‘ போர் யாருக்கானது......?’ என்கிற கேள்வியுடன் நாடகம் முடிகிறது.
       ‘போர் யாருக்கானது.....?’. முதல் உலகப்போரில் ஆங்கில இராணுவத்திற்கு ஆதரவாக போரில் குதித்து தன் இன்னுயிர்களை இழந்த வீரர்களுக்காக ஆண்ட ஏகாதிபத்திய அரசு தலைநகர் டெல்லியில் ஒரு நினைவு வாயிலை ( இந்தியா கேட்) எழுப்பியதைத் தவிர வேறென்ன செய்தது...?. இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இழந்த நம் சிப்பாய்களின் குடும்பத்தைப்பற்றி ஆட்சியாளர்கள் எப்பொழுதேனும் கவலைப்பட்டிருக்கிறார்களா....? . அவர்கள் வாரிசுகளின் கதி என்ன....?  
       ‘த டேல் ஆப் டூ சிட்டிஸ் ’ உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று . லண்டன், பாரிஸ் இவை இரண்டும் அந்த நாவலில் இடம்பெரும் முக்கிய நகரங்கள். பாரிஸ் நகரத்தினை வாசிக்கையில் ஒரு  சம்பவத்தை எதிர்க்கொள்ள நேரிடும். ஒரு பால்ய வயதுடையோன் போர்க்கைதி என்கிற சந்தேகத்தின் பேரில் மிகத்தாழ்ந்த கூரையுடைய ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டு ஐம்பது வருடத்திற்குப்பிறகு ஒருநாள் விடுவிக்கப்படுவான். முதுகு கூன் விழுந்துபோய்,  நீண்ட தாடி  வளர்ந்து, செம்பட்டைத் தட்டிப்போய்,... சிறையிலிருந்து வெளியே வருபவன்,  அரை நூற்றாண்டு கடந்து அவன்  வெளிச்சத்தைப்பார்க்கையில் அவனுக்குள் பயம் தொற்றிக்கொள்ளும். என்னவோ ஒரு பயங்கரம் நடக்கப்போகிறது என்று மீண்டும் அவன் அந்த இருட்டறைக்குள் நுழைந்துகொள்வான்.  இப்படியொரு பயத்தைதான் இன்றைய இளையத்தலைமுறைகள் எதிர்கொள்கிறார்கள். .
       ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் வெற்றியை நோக்கி நடைபோடுகையில் அவனது மீசையைப்போல வைத்துகொண்டு மிடுக்கு நடை நடந்தவர்கள் ஏராளம். சார்லி சாப்ளின் மட்டுமே ஹிட்லரைப்போல மீசை தறித்துகொண்டு அவனையும், அவன் மாதிரி மீசை கொண்ட அவர்களையும் கோமாளியாக கேலி செய்தான். ஒரு படத்தில் , போருக்குப்பிறகு வீரர்கள் துள்ளிக்குதித்து வெற்றியைக் கொண்டாடுவார்கள். சாப்ளின் அழுது கொண்டிருப்பார். அவரது அழுகை இறந்த வீரர்களுக்கானது. மக்களுக்கானது. ஜனநாயகத்திற்கானது.  
       தமிழ் இலக்கியத்தில் பரணியை கொண்டாடிய அளவிற்கு நாம் ஒப்பாரியை கொண்டாடவில்லை. பரணி மன்னனுக்கானது . ஒப்பாரி மக்களுக்கானது. டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ புதினத்தில் போர் பகுதிகளைப் படிக்கையில் இருக்கிற விறுவிறுப்பு அமைதிப்பகுதியைப் படிக்கையில் இல்லை என பலரும்  சொல்ல கேட்க முடிகிறது. அட....! சண்டைக்காட்சிகள் இல்லாத திரைப்படம் ஒரு படமா....? என்பதைப்போன்றது அது.
       விடுதலைப்புலிகள்  - சிங்களப்பேரின வாதம் இவர்களுக்கு இடையிலான பிரச்சனையை மனமுகந்து  மூன்று கட்ட பேச்சு வார்த்தைகளை நார்வே அரசாங்கம் நடத்தியது. கடைசிக்கட்ட பேச்சு வார்த்தையில் இவ்விரு குழுக்களும் பின்வாங்கின. முடிவு என்னவானது.....தன் மக்களில் பாதியை இழந்து  நிற்கிறது ஈழத்தமிழினம். ‘ 13வது சட்டத்திருத்தத்தை அமுல் படுத்தமாட்டேன் ’ எனக்கொக்கறித்த சிங்கள பேரின வாதம் உலக நாடுகளின் முன் மறுபடியும் அதே சட்டத்திருத்தத்தை எதிர் நோக்கி நிற்கிறது..
       இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா தலையிட வேண்டியதில்லை எனச்சொல்லும் நம் அரசு , சீனா - இந்தியாவிற்கு இடையிலான மக்மோகன்  எல்லைக்கோடு பிரச்சனையில் ஐ.நா பெருமன்றத்தைத் தலையிட கேட்டுக்கொள்கிறது. அரிஸ்டாட்டில் சொன்னார் இல்லையா ‘ பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும்’ என்று. பாகிஸ்தானைப் பொறுத்தவரைக்கும் இந்தியா பெரிய மீன். சீனாவிடம் ஒப்பிடுகையில் இந்தியா நெத்திலிப்பொடி.
       இது வரை இரண்டு உலகப்போர்கள் நடந்திருப்பதாக வரலாறு பேசுகிறது. அப்படியென்றால் அதற்குப்பிறகு நடந்திருக்கும் போர்களுக்கு என்னப்பெயராம்....?. கரையான் கட்டுகிற புற்றுக்குள் முதலில் கரையான் குடியேறும். அதனைத்தின்ன எறும்புகள், எலிகள் என ஊடுறுவும். பின் கருநாகம் நுழையும். இன்று உலக நாடுகளில் என்ன நிகழ்கிறது...? கருநாகம் இடத்தில் அமெரிக்காவைப் பார்க்க முடிகிறது. அமெரிக்கா ஈராக்கிற்குள் நுழைந்தப் பிறகுதானே ஐ.எஸ் தீவிரவாதம் தலைத்தூக்கி இருக்கிறது.
       இன்றைய உலகப்பிரச்சனையில் மிகப்பெரியப் பிரச்சனை சிரியா பிரச்சனைதான். இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை என்பது இரண்டு இன வாதப்பிரச்சனை. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் பிரச்சனைகள் கூட அப்படித்தான். ஆனால் சிரியாவில் சன்னி, ஷியா, கிறித்தவம், யூதம் என பல இனப்பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இன்றைய தீவிரவாதத்தின் குவியமாக அத்தேசம் திகழ்கிறது. அத்தேசத்தின் மீது முதலாளித்துவ நாடுகள் தாக்குதல் நடத்தினால் அவர்களின் ஊடுறுவல் மற்ற நாடுகளை நோக்கியே இருக்குமே தவிர அழிவிற்கு ஆட்படப்போவதில்லை.

       இன்றைய உலகத்தை ஆட்டி வைப்பவர்கள் இரண்டு பேர். அவர்கள் பொதுவுடைமைவாதிகள், முதலாளித்துவவாதிகள். பொதுவுடைமைவாதிகள்  கலகம் செய்பவர்கள். முதலாளித்துவாதிகள் போர் புரிபவர்கள். கலகம் பிறந்தால் ஒருவேளை வழிப்பிறக்கலாம். போர் புரிந்தால்.....?