திங்கள், 27 மார்ச், 2017

நூல் போட்டி
2015 2016 ஆண்டுகளில் வெளியான இரண்டு நூல்கள்.
கடைசி தேதி ஏப்ரல் 30

வெள்ளி, 24 மார்ச், 2017

தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் தேர்ந்த சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு நூலகத்தின் வாயிலாகக் கிடைத்தது. இக்கதைகளை மொழிப்பெயர்த்திருப்பவர் சேஷநாராயணா.
இத்தொகுப்பில் ' தர்ம சேவகன் பிட்ஸ் ஸ்டீபன் ' என்றொரு சிறுகதை. மனுநீதி சோழன் தன் மகனை தேர்க்காலிலிட்டு ஏற்றி நீதியை நிலை நாட்டியதைப்போன்ற கதைக்களத்தைக் கொண்ட கதையாக அக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
ஐயர்லாண்டில் கியால்வே என்பது ஒரு நகரம். நானூறு வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் லிஞ்சுபிட்ஸ் ஸ்டீபன் நகரச் சபை தலைவராக இருந்தான். அவருடைய ஒரே மகன் ஸ்பெயின் நண்பரின் மகனிடம் நண்பனாகிறான். இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். இருவருக்கும் பெண்ணை அடைவதில் போட்டி வருகிறது. பெண் ஸ்பெயின் இளைஞனை பெரிதும் விரும்புகிறாள். என் நாட்டுப் பெண் எனக்கே உரிமையென ஸ்பெயின் இளைஞனைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான். கொலை விசாரணை நகரச் சபை தலைவரிடம் விசாரணைக்கு வருகிறது. மகனுக்கு மரணத்தண்டனை விதிக்கிறார். மரணத்தண்டனையை நிறைவேற்ற பணியாளர்கள் முன் வர மறுக்கிறார்கள். அந்நிய இளைஞனுக்காக நம் நாட்டு குடிமகனுக்கு  ஏன் தண்டனை கொடுக்க வேண்டும் ...மன்னித்து விட்டுவிடலாம் என்கிறார்கள். நகரச் சபைத் தலைவர் மறுக்கிறார்.
இது அடுத்தவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடுமென்று தன் மகனுக்கான  தூக்குத் தண்டனையை  தந்தையே நிறைவேற்றுகிறார்.
இச்சம்பவம் நம் மனுநீதி சோழனுடன் ஒத்துப்போகிறது இல்லையா!

புதன், 22 மார்ச், 2017

நான் வாசித்த மொழிப்பெயர்ப்பு கதைத்தொகுப்புகளில் மிக முக்கியமானத் தொகுப்பாக 'உலக கிளாசிக் கதைகள்' என்கிறத் தொகுப்பைத்தான் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
ஓ.ஹென்றியின் The gift of the magic
 ஹொராசியோ கிரோகாவின் Three letters and a footnote
லியோ டால்ஸ்டாயின் How much land does a man need?
ஹெர்பர்ட் கோல்ட் ஸ்டோனின் Virtuoso
காப்ரியல் கார்சியா மார்க்கேஸின் One of these days
ஆஸ்கர் ஒயில்டின் The devoted friend
நடின் கோர்டிமரின் Once upon a time
முல்க் ராஜ் ஆனந்தின் The lost child
எட்கர் ஆலன் போவின் The tell tale heart
 லாங்ஸ்டன் ஹியூஸின் Thank you ,M'  am
ஃப்ரான்ஸ் காஃப்காவின் A country doctor
கி டு மாப்பாசானின் The necklace
மெக் முண்டெலின் Small change
நிஜாம் கஞ்சவியின் Lamlash Manuel
கரெல் சப்பெகின்The shirts
கதைகளின் தொகுப்பாக  இந்நூல்  வெளிவந்திருக்கிறது.
புதிய வாழ்வியல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல் 2014 ஆம் ஆண்டின் சிறந்த வெளியீடு.

மேற்காணும் கதைகளை பலரும் மொழிப்பெயர்த்திருந்தாலும் அ.ஜெனி டாலியின் மொழிப்பெயர்ப்பு தமிழ்க்கதைகளைப்போல காட்சியமைப்பைத் தருகிறது. மிகச்சிறந்த கதைகளை உள்ளடக்கிய மிகச்சிறந்த மொழிப்பெயர்ப்பில் சிறந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல் வாசிக்க, பரிசளிக்க உகந்த நூல்.
நூலின் விலை 125
புதிய வாழ்வியல் பதிப்பகம்
தொடர்புக்கு 044 4202076
7299924062

செவ்வாய், 21 மார்ச், 2017

மருதாணிக் கவிதைகள் - சின்னவள்

என் வீட்டில் பெரியவள் , சின்னவள் என்று இருவர் இல்லை. மீரா.செல்வக்குமாரின் ' சின்னவள்  ' என்கிற கவிதைத் தொகுப்பை வாசித்ததும் என் மனைவியை பெரியவளாக்கி என் மகளை சின்னவளாக்கிக்கொண்டேன்.
சிப்பியின் வாயிற்குள் விழும் மழைத்துளி முத்தாகிவிடுவதைப் போல இந்நூலினை வாசிக்கையில் என்னையும் அறியாமல் என் மனைவியும்  மகளும் அவ்வாறு ஆகிவிட்டிருந்தார்கள்.

இந்நூல் கவிஞரின் முதல் நூல். முதல் நூலுக்குரிய  தடுமாற்றம் இருக்கவே செய்கிறது. நூலில் அணிந்துரை என்கிற அணிகலன்  இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு அணிகலன்  இல்லாத  கழுத்துதான்  அழகாக இருக்கும். அந்த வகையில் இந்நூலிற்கு அணிந்துரை என்கிற அணிகலன் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் என்னுரை இல்லாத தொகுப்பு என்பது திருகாணி இல்லாத தோடு இல்லையா! இந்தச் சுட்டிக்காட்டலை கவிஞர் ஏற்க மறுக்கக்கூடும். ஒரு வேளை மறுத்தால் சின்னவளிடம் திருத்தொண்டனாக அடிப்பணிவதைத்தவிர வேறு வழித் தெரியவில்லை எனக்கு.

சின்னவள் கவிதைகளை வாசிக்கையில் பெரியவள்களுக்கு பொறாமை வரவேச் செய்யும். அப்படியான ஈரம் கவிதைகளில். ஒவ்வொரு கவிதையும் மருதாணியைப்போல மனதில் ஒட்டிக்கொள்கிறது.

உயிராடை என்றொரு கவிதை.

கால்ச் சட்டைகள்
எதுவும்
மிஞ்சுவதில்லை
எனக்கு...

மேல்ச் சட்டைகள் சிலவும்
அபகரிக்கப்பட்டிருக்கிறது
சின்னவளால்...

நேற்றைய
ஒரு வெளியூர்
பயணத்தின் இடையே
என்ன உடை
வேண்டுமென்றேன் ...

எனக்கொன்றும்
வேண்டாம்....
நல்லதாய்
உனக்கு
எடுத்துக்கொள்
என்கிறாள்.

இக்கவிதையை வாசிக்கையில் தாத்தா கால்ச்சட்டையை உடுத்திக்கொண்டு பள்ளிச்சென்ற நினைவு எனக்குள் தொட்டில் ஆட்டியது. ஏதேனும் புதுச்சட்டை எடுத்தாயா..எனக்கேட்கும் என் அப்பா நான் 'ஆம் ' என்றதும்  என் பழைய சட்டையில்  ஒன்றை எடுத்துச்செல்லும் நிஜம்; மனதிற்குள் பசபசத்தது. கவிஞர் சின்னவளுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் ஆடை உயிராடை. அதே ஆடை வாசகனுக்கும் எனக்கும்  உறவு ஆடையாகிறது.

இன்னொரு கவிதை மதிப்'பெண்'ணை பெண்ணாக உருவகப்படுத்தி மதிப்பெண்கள் பாடாய் படுத்தும் பாட்டை பாடி நிற்கிறது.

சின்னவள்
ஒருபோதும் காட்டியதில்லை
மதிப்பெண் பட்டியலை

என்ன பிரிவென்பதும்
தெரியாதெனக்கு

அவள் அம்மாவினால்
அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்

மெல்லச் சொல்லிவிட்டுப்
போகிறேன்

இனி என்னிடம் வா...
எத்தனை கையெழுத்து வேண்டும்..?

  இக்கவிதை கவிஞரை அடையாளப்படுத்தக்கூடிய கவிதையாக இருக்கிறது.


அப்பூதி அடிகள் குறித்து ஒரு கவிதை மெக்காலே கல்விமுறையினூடே மனனக்கல்வியை விமர்சிப்பதாக இருக்கிறது. அதன்வழியே அவரது  கரங்கள் சின்னவளிடம்  திருத்தொண்டனாகிறது.

 அப்பூதிகளிடம் கவிஞர் முரண்பட்டு நிற்கிறார். ஆனாலும் தொகுப்பின் வழியே  கவிஞரை அப்பூதி அடிகளாகவே பார்க்கத்தோன்றுகிறது. இருவருக்கான ஒற்றை  முரண் அப்பூதி அடிகள் தான் பெற்ற,  பார்த்த  , பயன்படுத்தும் அத்தனையையும் திருநாவுக்கரசராகப் பாவித்தார். ஆனால் கவிஞர் சின்னவளாகப் பார்க்கிறார்.

சின்னவள் கவிஞரின் முதல் குழந்தை . வாசகர்களின் இன்னொரு  தாய்.
   




.

சனி, 18 மார்ச், 2017

நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

சுஜாதா விருது - நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
உயர்மை பதிப்பகமும் - சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருதிற்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
 சிறுகதை,கவிதை, நாவல், கட்டுரை நூல்கள்  4 படிகள் அனுப்பப்பட வேண்டும். இது தவிர சிற்றிதழ் பிரிவிலும் பரிசு உண்டு.
ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசு.
கடைசி தேதி மார்ச் - 25
நூல்கள் அனுப்பவேண்டிய முகவரி
சுஜாதா விருதுகள்
உயிர்மை
11 / 29 , சுப்ரமணியம் தெரு
அபிராமபுரம்,
சென்னை - 600018.
நன்றி - உயிர்மை மற்றும்  திஇந்து



வெள்ளி, 17 மார்ச், 2017

அகநி வெளியீட்டில் மிகச்சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது மு.ஆனந்தன் அவர்களின் ' யுகங்களின் புளிப்பு நாவுகள்' என்கிற கவிதைத் தொகுப்பு. உதயசங்கர் மற்றும் அமிர்தம் சூர்யா  இருவரும் கவிதைகளுக்கு நெற்றிப்பொட்டு வைத்திருக்கிறார்கள். கவிதை என்பதற்கு அமிர்தம் சூர்யா கொடுத்திருக்கும் முன்னுரை அலாதியானது.
  அத்தனையும் நவீனக் கவிதைகள்.தேர்ந்த நடை. துள்ளல் எழுத்து. நளினத்தில் தொட்டு எடுத்த  நவயுகக்கவிதைகள்.

அரிதாரங்கள் பூசி
வெள்ளையும் சொள்ளையுமாய்த் திரிகிறது பகல்
அரணாக்கொடியையும் உதிர்த்து
அம்மணக்கட்டையாய் கிடக்கிறது இரவு
என்னதான் வெளிச்சத்தைப் பீய்ச்சியடித்தாலும்
நிழலாய் பின் தொடர்கிறது இருள்

என்கிற கவிதை இருளும் இருண்மையும் மடமையும் தொய்த்த வாழ்வின் அவயங்களைப் பேசுகிறது.
இக்கவிதையில் பகல் பகல்ல. இரவு இரவும் அல்ல. பகல் பிச்சைக்காசாக நீட்டும் ஓட்டுக்குப் பணம் என்றால் இரவு பிச்சைக்காரர்களாகிப்போகும் தடித்த வறுமை.
பகல் நிவாரணம் என்றால் இரவு தொடரும் பலாத்காரம்.


இப்படியாக பல பத்து கவிதைகள்.
யுகங்களின் புளிப்பு நாவுகள் என்கிற கவிதை புளித்த வாழ்வின் சுவடு.
பகலை மொண்டுக் குடித்த குடும்பம்
இருளைச் சொரண்டித் திங்கும்

இரு வரிகள் ஏக்கம் சூழ்ந்த வாழ்வின் இரு வேறு மேடு பள்ளங்களை அடையாளப்படுத்துகிறது.

உறிகளில் தொங்கும் உறக்கம்
உறை மோகித்தூடுருவும் பால்

என்கிற வரிகள் புளிப்பையும் இனிக்க வைக்கிறது.

தசாப்தப் பாலின் சூலகத்தில்
சதாப்த மோர் கருத்தரித்துள்ளது

என்கிற வரிகள் பால் , தயிர் ,  மோர்களின் மொட்டு அவிழ்ப்புகளை நினைவூட்டி மணத்தை நுகர வைக்கிறது. 

உறை மோரின் நீர்மையில்
ஊடுபாவிக் கிடக்கும்
யுகங்களின் புளிப்பு நாவுகள்  போல

வாசகனின் மன ஆழத்திற்குள் மோர்த்துளி சந்ததிகளின் விந்தணுக்களாக மொட்டு அவிழ்க்கிறார் மு. ஆனந்தன்.

அகநியின் நூல் கட்டமைப்பு ஆரணி பட்டு உடுத்திய தோற்றப்பொலிவைக்  கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
இவ்வாழ்த்துகள் மு. ஆனந்திற்கு மட்டுமானதில்ல.



திங்கள், 13 மார்ச், 2017

இதுநாள் வரைக்கும் இல்லாத சிறுகதை வாசகர்களுக்கு ஒரு போட்டி.  இப்போட்டி நல்ல சிறுகதைகளை தேடவும் அதை சக வாசகர்களை நோக்கி நகர்த்தவும்  செய்யும்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

பெஅ வாசகர் வட்டம்

அந்த இருட்டறையில் அவன் அம்மணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். இடுப்பு வரைக்குமான உடம்பு நேர்க்கோட்டிலும் மேலுடம்பு முன்பக்கமாக வளைந்து , முதுகு மேலும் கூன் விழுந்து போயிருந்தது. அவனுடைய தலை  விளைந்த நெற்கதிரின் குனிவைப்போலிருந்தது.
கால்களை அவன் அப்படியும் இப்படியுமாக எடுத்து வைத்தான். தொடைகளை முன்பக்கமாக வளைத்து அந்தரங்க உறுப்பை மறைக்க முயற்சித்தான். அவனுடைய இரு பக்கத் தொடை சப்பைகளும் உள்ளூரக் குழி விழுந்துபோயிருந்தன. வயிறு சுருக்கம் விழுந்துபோய் விலா எலும்புகள் அகடு, முகடுகளாக இருந்தன.  
அந்தரங்க உறுப்பை மறைத்தாக வேண்டிய இரண்டு கைகளும் பின்பக்கம் ஒரு நீளக் கத்தல் துணியைக்கொண்டு இறுகக்கட்டப்பட்டிருந்தன. மொத்தத் துணியும் கைகளில் இறுக சுற்றப்பட்டிருந்ததால் அது பார்க்க பிரிமணைப் போலத் தெரிந்தன. அவனுடையக் கண்கள் ஒரு காவித்துண்டால் இறுகக்கட்டப்பட்டு பிடறிப்பக்கம் ஆட்டுக்கால் முடிச்சிட்டிருந்தார்கள். இரண்டு முடிச்சுகள் போக மீதத்துணி பூனை வாலினைப்போன்று தொங்கிக்கொண்டிருந்தது.
ஒரு கல்லூரி மாணவனுக்குரிய மிடுக்கும், துடிப்பும் அவனிடமிருந்தது. நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஒரு படிக் கீழான குடும்பத்தைச் சார்ந்தவனாகத் தெரிந்தான். தினக்கூலி அல்லது வார சம்பளங்களில் வயிற்றைக் கழுவி ஊற்றும் வறுமை அவனது முகத்தில் தெரிந்தது.
அவன் பார்க்க அப்பாவியாக இருந்தான். வரும் வழியிலோ அல்லது ஒரு கூட்டத்திலிருந்தோ அவனை மட்டும் தனியாகக் கடத்தி வாய்ப்பொத்தி, கண்களைக்கட்டி தூக்கி வரப்பட்டவனைப்போலத் தெரிந்தான். அவன் உடுத்தியிருந்த ஆடை அவசரக்கதியில் கழட்டி உருவப்பட்டு தூரத்தில் தூக்கி எறியப்பட்டிருந்தது. கீழாடை கறுப்பும் சாம்பலும் இரண்டறக் கலந்த ஜீன்ஸாக இருந்தது. ஜட்டி வெளிர் மஞ்சள் நிறத்திலும் ஜட்டியின் தொடை விளம்புகளில் கார்பன் துணுக்கு படிகம் போல அழுக்குப்படிந்துபோயிருந்தது. மேலாடை சிவப்பு நிறத்தினாலான பனியனாக இருந்தது. அதில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரே-வின் முகங்கள் பதிக்கப்படவில்லை என்றாலும் பனியனின் அடர் சிவப்பு பார்க்க கம்யூனிஸ்ட்க்குரிய மச்சம் அல்லது தழும்பாகத் தெரிந்தது. அவன் ஒரு மூத்திரச்சந்தினையொட்டிய ஒரு இருண்ட அறைக்குள் நிற்க வைக்கப்பட்டிருந்தான். மூத்திரம், பீ , எலி செத்த வாடைகள் மூக்கைத்துளைத்தன. அத்துடன் ஒரு துரு நாற்றம் நுரையீரலைப் பிசைந்தெடுத்தது. அந்த நாற்றத்திற்கிடையில் பெரும் முயற்சி எடுத்து மூச்சொரிந்தவனாக அவன் இருந்தான். அவனுடைய கால்கள் தொடை வரைக்கும் தடதடத்தப்படி இருந்தன. அவனுடைய நாசியிலிருந்து கக்கிய மூச்சு அனல் மூச்சாக இருந்தது. அவனது நெஞ்சுக்குழியும் வயிறும், மார்பும் மேலே ஏறி இறங்கின.
அவனைச்சுற்றி பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அத்தனைப்பேர் கைகளிலும் கணுக்களுடன் கூடிய உருட்டுக்கட்டை இருந்தன. தலையில் காவித் துண்டை இறுகக்கட்டி முடிச்சை வலது பக்கக் காதுக்கு அருகில் சற்று மேலே முடிச்சிட்டிருந்தார்கள். முடிந்தது போக மிச்சத்துணி குரங்கு வாலினைப்போலத் தொங்கிக்கொண்டிருந்தது.
அவர்கள் பார்க்க ஆக்ரோஜமாகவும், விகற்பமாகவும் தெரிந்தார்கள். ஒரு வேட்டை நாய்க்குரிய பசி அவர்களின் நாசியின் நுனியில் இருந்தது. அவர்கள் உருட்டுக்கட்டையை உள்ளங்கையில் தாங்கி சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவன் அவனது முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தான். தண்ணீர் அவனது முகத்தில் தெறித்ததும் அவன் திடுக்கிட்டான். தலையை நாலாபுறமும் சிலுப்பி தண்ணீரிலிருந்து விலகிக்கொள்ள தலையைச் சுழற்றினான். இரண்டு பேர் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையை கட்டப்பட்டிருந்த கைகளுக்குள் திணித்தார்கள். அவன் மொத்தப்பலத்தையும் கொடுத்து விசும்பினான். உடம்பை நாலாபுறமும் திருப்பி எம்பிக்குதித்தான். ஒருவன்  அவனது கையை இறுகப்பிடித்துக் கொள்ள மற்றொருவன் கட்டையை அவனது கைக்குள் திணித்து பிட்டத்திற்கும் முதுகிற்குமிடையில் நேராக நிறுத்தி பிட்டத்து முனையை வெளிப்புறமாக இழுத்தார்கள். அவனுக்குள் வலி எடுத்திருக்க வேணும்.  ஆனாலும் அவன் ஒரு சலனமுமில்லாமல் வெறுமென நின்றுகொண்டிருந்தான்.
ஒருவன் அவனது தலை முடியை இறுகப்பிடித்து தலையைப்பின்பக்கமாக இழுத்தான். தலை பின்னோக்கியும், நெஞ்சுடன் கூடிய வயிறு முன்பக்கத்திற்கும் சென்றது. அம்பு சொறுகப்படாத வில் வடிவத்திற்கு அவனுடைய மொத்த மேனியும் வந்திருந்தது.
ஒருவன் முகத்தில் தண்ணீர் அடித்தபடியே இருந்தான். ஒருவன் விரல்களைச் சுருட்டி, மடக்கி கட்டை விரலை விரல்களுக்குள் நுழைத்து முகத்தில் ஓங்கி  ஒரு குத்திட்டான். ஒரே குத்தில் அவனுடைய தாவங்கொட்டை மேல்நோக்கிப்போனது. அவனது பற்களின் வழியே இரத்தம் ஒழுகி வாயின் இரு பக்கம் விளிம்புகளில் வழிந்துக்கொண்டிருந்தது. அவன் நாவினால் வழியும் இரத்தத்தை வாங்கி எச்சிலோடு எச்சலாக இரத்தத்தைத் தொண்டைக்குள் இறக்கிக்கொண்டான். அவனது தொண்டை முடிச்சு மேலே கீழே ஏறி இறங்கியது.
ஒருவன் அவனது கன்னத்தைக்  கை விரல்களால் இறுகப்பற்றினான். கட்டை மற்றும் நடு விரல்களால் கன்னங்களை அழுத்தினான். அவனது வாய் ‘ ஆ....’வெனத்திறந்தது. நாக்கு மேல், கீழ் அன்னத்திற்கிடையே நீண்டுக்கிடந்தது. மேல் அன்னக் கடைப்பற்களில் ஒன்று ஆட்டம் கண்டு அதில் இரத்தம் வழிந்து நாக்கில் திவாலையாக விழுந்து எச்சிலோடு எச்சிலாக கலந்து நுனி நாக்கின் வழியே கீழ் அன்னத்திற்குள் விழுந்தது.
‘ சொல்லுடா.... பாரத் மாதா கி ஜே’ கண்களில் தீப்பறக்க, உதடுகள் படபடக்க, நாசியில் கோபத்தின் உச்சம் தெறிக்க அவன் அடித்தொண்டை அதிரக்கத்தினான்.
அவன் அதனை காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. வலியை, ரணத்தை மெல்ல உள்வாங்கி மண்டைக்குள் உட்கிரகித்தான்.
‘ பாரத் மாதா கி ஜே’
அவன் சொல்லவில்லை. அவனுடையக் கண்கள் கட்டப்பட்டிருந்ததால் அவனைச்சுற்றி எத்தனைப்பேர் நிற்கிறார்கள் என அவனால் கணிக்க முடியவில்லை. ஏன் அடிக்கிறார்கள்....எத்தனைப்பேர் அடிக்கிறார்கள்.... எந்த இடத்தில் நிறுத்தி அடிக்கிறார்கள்.... எவ்வளவு நேரம் அடிப்பார்கள்....எனத் தெரியாமலும் தெரிந்துக்கொள்ள முடியாமலும் அவன் நின்று கொண்டிருந்தான். எலும்பு போர்த்திய உடம்பானாலும் திடகாத்திரமாகவே அவன் நின்றுகொண்டிருந்தான். பட்ட மரத்தின் திடகாத்திரமாக அவனுடைய உடம்பு இருந்தது. அவனுடைய உதடுகள் சிறகு அறுபட்ட பட்டாம்பூச்சியின் இறக்கையைப்போல பரிதவித்தன. இதயம் ‘திடும்....திடும்...’ என அடித்துகொண்டது. என்னத்தையோ சொல்லி அவனுக்குள் முணுமுணுத்தபடி இருந்தான். தலையை பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு தலையை முன்பக்கமாக இழுத்தான். மற்றொருவன் அவனது பிடறியை ஒரு கையால் பிடித்துகொண்டு மறு கையால் அவனது முகத்தில் ‘ நொங்’ கென்று ஒரு குத்திட்டான். அவன் வலிப்பொறுக்க முடியாமல் ‘ பெஅ.......’வெனக் கத்தினான்.
முதலில் குத்தியவன் அடுத்து குத்தியவனைப்பார்த்து சொன்னான் ‘ நான் சொன்னேன் இல்லையா.......இவன் பெரியார் அம்பேத்கார் வட்டத்தைச் சேர்ந்தவன்னு. பார்த்தீயா...பெஅ...எனக் கத்துறான்....‘ என்றவாறு  அவன் மற்றவர்களை வெறிநாய்க்குரிய கொலை வெறியுடன் பார்த்தான். அத்தனைப்பேரும் அவனுடைய கண்டுப்பிடிப்பை பெரிதாக மெச்சி ஆமோதித்தார்கள். ஒருவன் மட்டும் பார்வையால் மறுத்தான். ‘ நீ வா...இவனைப்பிடி... நானொரு குத்து விட்டுப்பார்க்கிறேன் ’ என்றவாறு அவன் முன் பக்கமாக வந்தான். விரல்களை மடக்கி கண் கட்டப்பட்டிருந்தவனின் முகத்தில் ஓங்கி பலம் கொண்ட மட்டும் ஒரு குத்திட்டான்.
‘ நங்’
‘ பெஅ....’
‘ நங்’
‘ பெஅ...’.
  அவன் அப்படி அலற, அலற,... மற்றவர்களின் முகம் கோபத்தால் சிவந்தது. ஒருவன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால்  இரத்தம் ஒழுக நின்றுக்கொண்டிருந்தவனின் வயிற்றில் ஓர் அடி வைத்தான்.
‘ பெஅ...’
இன்னொருத்தன் அவனது தொடையைக்கடித்தான்.
‘ பெஅ...’
இன்னொருவன் நாலாபுறமும் எதையோத் தேடி ஒரு குச்சியை எடுத்து வந்து அவனுடைய விரல்களுக்கிடையில்  நுழைத்து ‘ சொல்....பாரத் மாதா கி ஜே...’ என்றவாறு பற்களைக்கடித்துகொண்டு வலு உள்ளமட்டும் நெறித்தான். அவன் வலிப்பொறுக்க முடியாமல் ‘ பெஅ...’எனக் கத்தினான்.
முகத்தில் ஒரு குத்து. விழுந்தது.
‘பெஅ...’
கன்னத்தில் ஒரு அறை.
‘பெஅ...’
அவனைச்சுற்றி நின்றுக்கொண்டிருந்த கும்பல் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள். கோபத்தால் முகம் சிவந்தார்கள். உருட்டுக்கட்டையால் கால் விரல்களில் ‘நங்’கென்று  வைத்தார்கள்.
‘ பெஅ...’ என அவன் வாயிலிருந்து எச்சிலும் இரத்தமும் ஒழுகக் கதறினான்.
ஒருவன் அவனது குரல் வளையில் கையைக்கொடுத்து ஒரே வீச்சில் தள்ளிக்கொண்டு சுவற்றின் மீது முட்டினான். ‘ சொல்லுடா....பாரத் மாதா கி ஜே’
அவனது கண்களில் இறுகக்கட்டப்பட்டிருந்த காவித்துணி நனைந்து கண்ணீர் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்தது. ‘ ஈனப்பயலே...உனக்கு பெஅ வாசகர் வட்டம் ஒரு கேடு....! ம்....உங்க வட்டத்தில எத்தனைப்பேரடா இருக்கீங்க.....? எவன்டா தலைவரு....நீ என்னப்பொறுப்புல இருக்கே......?’ என்றபடி அவன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாவங்கொட்டையில் ஓர் இடி இடித்தான். வாயிலிருந்து ரத்தம் வழிய அவன் ‘ பெஅ...’ என அலறிட்டான்.
‘ பெஅ....எனச் சொல்லாதே....’
‘பெஅ...’
‘ சொல்லாதே...’
‘ பெஅ...’
‘ சொல்லாதே...’
‘ பெஅ....’
‘ சொல்லாதே....’
‘ பெஅ...’
ஒவ்வொரு   ‘சொல்லாதே...’விற்கும் ஒவ்வொரு அடி விழுந்தது. அவன் ஒவ்வொரு அடியையும் வாங்கிக்கொண்டு ‘ பெஅ..பெஅ...பெஅ....பெஅ.....’ எனத் தொண்டை நாண் அறுகக் கத்தினான்.
அவனை ஐந்து பேர் இறுகப்பிடித்துகொண்டிருந்தார்கள். மொத்தப்பலத்தையும் கொடுத்து அவன் விசும்பினான். ‘மாக்’கென்று குதித்தான். இரண்டொரு  முறை மேலும் கீழுமாகக்குதித்து தரையில் குப்புற விழுந்தான். அவனது கால்கள் இரண்டும் மேலே தூக்கிக்கொண்டிருந்தன. ஒரு காலினை ஒருவனும் மற்றொரு காலினை இன்னொருத்தனும் முரடடுத்தனமாகப் பிடித்தார்கள். பலம் கொண்ட மட்டும் கணுக்காலைப்பிடித்து நெறித்து வளைத்து ஒடித்தார்கள். அவன் ‘ பெஅ.....’ வென அலறினான்.
‘ பாரத் மாதா கி ஜே’
‘ பாரத் மாதா கி ஜே’
‘ பாரத் மாதா கி ஜே’
மரம் முறிவதைப்போல அவனது கணுக்கால்கள் முறிந்தன. ஒவ்வொரு முறிவின் போதும் அழுகை விம்பிட அவன் அலறினான்.
‘ பெஅ...
பெஅ....
பெஅ...’
அவனது கால்களை முறித்துகொண்டிருந்தவர்கள் அவர்களது கைகள் வலிக்க அவனை அப்படியே கிடத்திவிட்டு நாலடித்தூரம் தள்ளிநின்றார்கள். பிறந்த மேனியில் குப்புறக்கிடந்தவன் பிட்டத்தை முறுக்கிக்கொடுத்தான். இரண்டு பிட்டங்களும் திராவிடக்காளையின் திமிலைப்போல குலுங்கி ஆட்டம் கண்டன. ஒருவன் அந்தப்பிட்டத்தில் தண்ணீர் ஊற்றினான். இன்னொருத்தன் குனிந்து அவனது காதருகேச் சென்று  ‘ இனி பெஅ வாசகர் வட்டத்திற்குப் போக மாட்டேனுச்சொல்லு....’ என்றவாறு அவனது காதிற்குள் முழங்கினான்.
அவன் ஒரு அசைவுமில்லாமல் அப்படியே படுத்துக்கிடந்தான். ஒருவன் கையில் வைத்திருந்தத் தடியால் திமில் போலிருந்த பிட்டத்தில் ஓங்கி ஓர் அடி வைத்தான். அப்பொழுதும் அவன் ‘பெஅ...’ என்றான். விழுந்த அடியில் பிட்டங்கள் சேவல் கொண்டை அளவிற்கு சிவந்து போயிருந்தது. வலியால் உடம்பைக்குலுக்கி இடது வலதாக உருண்டான். கண்களை இறுகக் கட்டியிருந்த துணி மெல்ல அவிழ்ந்துகொண்டு வந்தது. ஒருவன் அவனது தலையை ஓங்கி மிதித்தான். இடதுப் பக்கமாக அவனது தலை சாய்ந்திருக்க அவனது கடவாய் வழியே இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. ஒருவன் அவிழ்ந்தத் துணியை இறுகக்கட்டினான். அவனைச்சுற்றிருந்தவர்கள் அவனிடமிருந்து விலகி நின்றார்கள். குப்புறப்படுத்திருந்த அவன் பின்னால் இறுகக்கட்டப்பட்டிருந்த கையை மெல்ல அசைத்து தரையில் ஊன்றி எழுந்திருக்க முயற்சித்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. கால்களும், கைகளும் தடதடத்தன. தொடையில், பிட்டத்தில் முழங்கால்களில் ரத்தம் சொட்ட தசைகள் கிழிந்துத் தொங்கின.
அவன்  மெல்ல தன்னைப் புரட்டிக்கொடுத்தான். முதுகைத் தரையில் சாய்த்து கால்களை ஒன்றுப்பின் ஒன்றாக மடக்கி  இடதுப்பக்கமாகத்திரும்பி முதுகை சற்று எம்பிக்கொடுத்து முழங்காலிட்டான். இரு கைகளையும் தரையில் ஊன்றிருந்தவன் ஒரு கையை மெல்ல எடுத்து ஊன்றி மறு கையை முழங்காலுக்குக் கொடுத்து தத்தி, தத்தி மெல்ல எழுந்தான். அவனது கண்களில் கண்ணீர் சன்னமாக இறங்கிக்கொண்டிருந்தது. வாயிலிருந்து வழிந்த ரத்தம் மார்பில் தெறித்து வயிற்றில் வழிந்து  தொடை வழியே தரையில் விழுந்துத் தெறித்தது.
கையில் உருட்டுக்கட்டை வைத்திருந்த ஒருவன் கட்டையை கீழே கடாசி விட்டு  பிடறி மயிற்றை பற்றி முன்பக்கமாகத் தள்ளி ‘ இனி நீ... பெஅ வட்டத்திற்கு போவீயாடா....’ என்றவாறு சுவர் வரைக்குமாகத் தள்ளிக்கொண்டுப்போய் சுவற்றில் ‘மட்...மட்..மட்...மட்...மட்.....மட்..’டென முட்டினான். ஒவ்வொரு முட்டின் போதும் அவன் ‘பெஅ.....

பெஅ...
பெஅ...
பெஅ...
பெஅ.....
பெஅ....’ என்றவாறு அவன் அலறினான். உடம்பைக்குலுக்கி வெதும்பினான். அவனைச்சூழ்ந்து நின்ற கும்பலின் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டை அவர்களின் பிடியிலிருந்து கீழே விழுந்தது. இன்னும் எவ்வளவோ அடியை வாங்குமளவிற்கு அவனிடம் வலு இருந்தாலும் அவனை இதற்கு மேலும் அடிக்க அவர்கள் திராணியற்று நின்றார்கள். அவர்களின் மொத்த உடம்பும் வியர்த்துக்கொட்டியிருந்தது. கீச், மூச்...வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
புறங்கைகளால் வியர்வையைத் துடைத்தெடுத்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள். மெல்ல முணுமுணுத்துகொண்டார்கள்.
ஒருவன் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்தான். மற்றவர்கள் அவனை  பிறந்த மேனியுடன் தூக்கினார்கள். உருட்டுக்கட்டையை அள்ளினார்கள். அவர்கள் சற்று முன் வந்திருந்த ஆட்டோவில் முதலில் உருட்டுக்கட்டைகளை அடுக்கினார்கள். அதன் மேல் அவனைக் கிடத்தினார்கள்.
ஆட்டோ வந்திருந்தப் பாதையில் பயணித்தது. அந்த மத்தியப் பல்கலைக்கழகம் சுற்றுச்சுவரையொட்டிய ஒரு குறுகலான பாதைக்குள் நுழைந்தது..
ஓரிடத்தில் ‘ பெஅ வாசகர் வட்டம்’ என்றொரு ஒரு பதாகை இருந்தது. அந்த இடத்தில் ஆட்டோ ஓரிரு நொடிகள் நின்றது. ஒருவன் பொதி மூட்டையைப்போலக் கிடந்தவன் மீது ஒரு உதை விட்டான். இரத்தமும் சகதியுமான அவன் ஆட்டோவிலிருந்து விழுந்து உருண்டான்.
‘ பாரத் மாதா கி ஜே...’ என்றதும் ஆட்டோ புழுதியை வாறி தன் தலையில் கொட்டிக்கொண்டு அந்த மங்கியப் பொழுதிற்குள் போய் மறைந்தது.
தெருவோர மக்கள் ஓடிவந்தார்கள். பிறந்த மேனியாகக் கிடந்த அவனைத் தூக்கினார்கள். கைக்கட்டு, கண் கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். அவனது மேனியெங்கினும் ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்ததைத் துடைத்தார்கள். முகம் வீங்கி, விழிகள் பிதுங்கிக்கொண்டிருந்ததில் அவன் யாரென அவர்களால் கண்டறிய முடியவில்லை.
அவன் தடுமாற்றத்துடன் மெல்ல எழுந்தான். கைகளை அந்தரங்க உறுப்பிற்குக் கொடுத்து கூனிக்குறுகி நின்றான்.
. ‘ தம்பி...நீ யாரு....?, நீ என்னே செய்தாய்...? உன்னை யார் அடிச்சது....?, எங்கே வைத்து அடிச்சாங்க.....?’
அவன் அந்தரங்கத்திலிருந்து கைகளை எடுத்து நாலாபுறமும் அசைத்து அவனுடைய மொழியில் விளக்கத்தொடங்கினான்.
‘ பெஅ.....
பெஅ......
பெ... பெ...பெ...
அ... அ.... அ....
பெஅ ’.

வியாழன், 9 மார்ச், 2017

சிறுகதைப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி

முதல் பரிசு ₹ 6000
இரண்டாம் பரிசு ₹ 4000
மூன்றாம் பரிசு ₹ 2000
ஆறுதல் பரிசு மூன்று பேருக்கு ₹ 1000
கடைசி தேதி ஏப்ரல் 30
முகவரி
முனைவர் இரா. செல்வி
C/O  திருமதி ரேணுகா நாகராஜ்
55, திரு.வி.க வீதி
ஹோல் காலேஜ்
பீளமேடு
கோவை 641014
r.selvi1957@gmail.com

செவ்வாய், 7 மார்ச், 2017

விக்கிபீடியா நடத்திய விக்கி கோப்பை போட்டியில் மூன்றாமிடம் பெற்றிருக்கும் கட்டுரையாளன்  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம்  அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

சனி, 4 மார்ச், 2017

தூயன் - முகம்
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வயது 30. இவர் சிறுகதை எழுதத் தொடங்கி மூன்று வருடங்கள்தான் ஆகிறது. இவரது முன்மாதிரியான எழுத்தாளராக அசோகமித்ரனை கைக்காட்டுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இருமுகம். இந்நூலனை அவர் ‘ ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் ’ செய்திருக்கிறார்.
இவரது கதை பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும்படியாக இருக்கிறது.
‘ முகம்’ என்கிற கதை மிக முக்கியமானது. பன்றி வளர்ப்பவர்களின் குடும்பங்களை மிக அருகிலிருந்து பார்த்து, கவனித்து, உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் கதையாக இருக்கிறது. பன்றி வளர்ப்பவர்களிடம் அவர் தோழமைக் கொண்டிருப்பதும், நெருங்கிப் பழகுவதும், பன்றி வளர்க்கும் இடம், அடைக்கும் இடம் இவற்றை அத்தனை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். கதையில் பன்றியால் கதாப்பாத்திரத்தின் குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட வீட்டிற்கு வரும் பன்றிகளை ரகசியமாகப் பிடித்து கழுத்தை அறுத்து கொன்றுப்புதைக்கிறார். பன்றியை அவர் அவ்வாறு கொன்றுப் புதைப்பதற்கு அக்கதைப்பாத்திரம் நியாயமான காரணத்தையும் வலுவான உட்கிடக்கையும் கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் கதாபாத்திரம் பன்றி வளர்ப்பவள் ஒருத்தியின் மீது காதல் பிறக்கிறது. ஒரு நாள் காதல் மயக்கத்தில் அவளைப் புணர்ந்ததற்குப் பிறகு அவன் கொன்றுப் புதைத்த பன்றிகளைப் பற்றிச் சொல்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியுறும் காதலி அவனிடமிருந்து சட்டென விலகுகிறாள். இதற்கு பிறகு ஓரிரு பத்தியில் கதை உக்கிரமானதாக முடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பன்றி வளர்ப்பவர்களால் மர்ம உறுப்பில் உதைக்கப்பட்டு கதாப்பாத்திரம் கொல்லப்படுகிறான்.
இக்கதை விளிம்பு வாழ் மக்களின் பிரச்சனைகளை பேசுவதுடன் தான் வளர்க்கும் இனம் தன் காதலனால் அழிவதைக் கேள்விப்பட்டதும் காதலனிடமிருந்து அவள் தூரம் விலகுவது அவளது வாழ்வியல் சூழலை மிகச் சரியாகக் காட்டி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் சிறுகதை இளம் எழுத்தாளர்களில் மிகவும் கவனிக்கும் படியான எழுத்தாளராக பரிணமிக்கும் தூயன் அடுத்தடுத்த படைப்புகளால் அவர் வேறொரு தளத்திற்கு செல்வது உறுதி.
இவருடைய மற்றக் கதைகளைக் கவனிக்கையில் சொற்களஞ்சியம் பெருகி தழம்புகிறது. அவ்வளவாக யாரும் பயன்படுத்தாத சில சொற்களை பயன்படுத்துவது ஆரோக்கியமனதாக இருக்கிறது. தனக்குத் தெரிந்ததை அவ்வளவு நேர்த்தியாக, அழகாக பக்கங்கள் என்கிற வரம்பிற்குள் சிக்கிக்கொள்ளாமல் பரந்து எழுதும் எழுத்தாளராக இருக்கிறார். அதே நேரம் இவர் வழக்கமாக இளம் எழுத்தாளர்களிடம் காணப்படும் யாருக்காக எழுதுகிறோம்...என்கிற தடுமாற்றம் இவருக்கும் இருக்கவே செய்கிறது. இத்தகையத் தடுமாற்றம் சில படைப்புகளின் வழியில், அதன் மீதான விமர்சனங்களால், அவரையும் அவற்றையும் அடையாளப்படுத்தவே செய்யும்.

வியாழன், 2 மார்ச், 2017

கலைச்செல்வி -  நெனப்பு
 இன்றைய சிறுகதை ஊடகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக கால் ஊன்றிருக்கும் எழுத்தாளர் இவர். இவர் பெண்பால் எழுத்தாளர்கள் பெண்ணிய வாழ்வியல் கூறுகளை மட்டுமே ஆழ , அகலத்துடன் எழுதுவார்கள் என்கிற சூத்திரப் பின்னலை கத்தரிக்கும் படியான எழுத்து இவருடையது. எல்லாருக்குள்ளும் இருக்கும் பசியைப் போல எல்லாருக்குமான எழுத்து இவருடையது. மனிதர்கள் சந்திக்கும் அத்தனை உணர்வுகளையும் இவரது கதைகள் உரக்கப் பேசக்கூடியது. இவரது சமீப சிறுகதைத் தொகுப்பு ‘ இரவு’. அதிலொரு கதை நெனப்பு.
 அண்ணன் தங்கை இருவருக்கிடையில் படரும் பாசம், இடையில் மெல்லிய விரிசல், இருவரின் தரப்பிலும் ஆழப்படியும் ஏக்கம், ஏதேனும் ஒரு தருணத்தில் இருவரும் ஒன்று சேர மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் இக்கதை தன் பரப்பை விரித்துச்செல்லும். இக்கதையை வாசிக்கையில் அவரவர் உடன்பிறப்புகள் ஒரு கணம் நினைவிற்கு வந்து ஆழ்மனதை தரைத்தட்டவே செய்யும்.
 இக்கதையை வாசிக்கையில் எனக்கு கிழக்குச்சீமை திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு பாடல்வரி நினைவிற்கு வந்தது. ‘ அணில் வால் மீசைக்கொண்ட அண்ணன் உன்னை விட்டு ; புலி வால் மீசைக்கொண்ட புருசனோட போய் வரவா....’ என்கிற வரிதான் அது.
 இக்கதையின் கருவும் ஏறக்குறைய அதேதான். அண்ணன் இலகுவானவராக இருக்கிறார். புருசன் வழக்கம் போல மீசை முறுக்கி. அவளது பிறந்த வீட்டில் குடும்ப நிகழ்வில் பந்தி நடைபெறுகிறது. ‘ விருந்துன்னா விருந்தாடிவளுக்கு கொண்டாட்டம்தேன்....’ என அண்ணியார் சொல்லிவிடுகிறார். இச்செய்தி அவரது காதில் விழுந்து விட துண்டை உதறி தோளில் கிடத்திக்கொண்டு கிளம்பி விடுகிறார். ஆண்களுக்கு கோபம் வரும் நேரமே ‘ சாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தானே...’ இதற்கு மேல் இங்கு இருந்து விருந்து சாப்பிடுவது மரியாதை இல்லையென மகளை அழைத்துகொண்டு மனைவியிடம் ‘ வாரதுன்னா வா....ணொண்ணந்தேன் வேணுமின்னா அங்கிட்டு இருந்துக்க....’ எனக் கிளம்பி விடுகிறார்.
 மனைவி புருசனுடன் ஓடி வருகிறாள். மனைவி மரகதம். அண்ணன் துரைராசு. புருசன் சின்னய்யா. இவர்களைச் சுற்றும் சிலந்தி வலைச்சுற்றும் இக்கதை ஒரு புள்ளியில் குடும்பம் இணைந்து சுபம் பெறுகிறது.
 இக்கதையின் சிறப்பு பெண் அவஸ்தைகளை சொல்லிருக்கும் இடங்கள்தான். இத்தகைய கதைகளில் பெண் வலிகளைச் சொல்கையில் செயற்கைத்தனம்
தலைத்தூக்கச்செய்யும். ஆனால் இவர் பெண் வலியுடன் அண்ணனின் நகர்வை இடம்பெறச் செய்து கதைக்கு உயிரூட்டிருக்கிறார். எழுத்தின் உயிர் அதை வாசிக்கும் ஆண்களையும் உணர வைத்துவிடுகிறது.
 மரகதத்துக்கு மாதாந்திர ஒதுக்கம். சற்று அதிகமாகவே வலி தரும் விஷயம். ‘ பொட்டப்புள்ள இதுக்கலெ்லாம் ஆ...ஊன்னு கெடந்தா நாளக்கு பெரசவ வலிய எப்படி பொறுப்ப...?’  என அவள் அம்மா கண்டிக்கும் இடமும்
 ‘ இந்தாடீ....கக்கூசுக்கு போய்ட்டு தண்ணீ ஊத்தாமயே வந்துட்டீயா....?’  ‘ எங்கிட்ட சொல்லி தொலைச்சிருந்தா நானாது ஊத்தி வுட்டுருப்பன்ல்ல...ஒங்கண்ணங்காரன் கக்கூசுக்கு போனவன் இதென்னாமா ஒரே ரத்தமா கெடக்குன்னு பதறிக்கிட்டு ஒடியாந்தான்....என்னான்னு சொல்ல சொல்ற...?’ என அம்மா கிசுகிசுப்பும் கதையின் ஓட்டத்தில் மையம் கொண்டு அழுத்தம் கொடுக்கின்றன. இக்கதையின் மைய கருவோட்டம் இதுதான்.
 அண்ணி - நாத்தனார் உறவு முறை புனிதமானது. பல நாத்தனார்களுக்கு அக்கொடுப்பினை கிடைப்பதே இல்லை. ஆனால் இக்கதையில் இருவருக்குமிடையேயான பந்தம் பசபசக்கிறது. ஏக்கத்தைத் திணிக்கிறது.
 பொதுவாக பெண் எழுத்தாளர்கள் தன் வலியை மட்டுமே எழுதிச்செல்வார்கள் என்கிற பாதி உண்மைக்கலந்த நிதர்சனத்தை அவர் முதல் தொகுப்பிலேயே கடந்துவிட்டாலும் சமீப இவரது எழுத்துகள் யாவும் உயிரின் வலிகளைப் பேசுவதாகவும் உணர வைப்பதாகவும் இருந்து வருகிறது. கலைச்செல்வி இளம் எழுத்தாளர்கள் வரம்பிற்குள் இவர் வயது இடம் பெறாது என்றாலும் எழுதத் தொடங்கியக் காலத்தைக் கணக்கிடுகையில் இவரது எழுத்து கல்லூரி வயதொத்த இளமையானது. அதே நேரம் தாய்மைக்கொள்ளும் முதிர்ச்சியானது.