ஞாயிறு, 25 மார்ச், 2018

அனல் காற்று

நாவல் - அனல்காற்று @ஜெயமோகன்

பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக தான் எழுதிய கதை இது என்பதாக முன்னுரை பேசுகிறது. ஒரு வேளை எடுத்திருந்தால் படம் நன்றாக ஓடவும் செய்திருக்கும்.

இந்நாவலை வாசித்ததும் எனக்கு அவள் அப்படித்தான் என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. அப்படத்தின் சிறப்பாக நான் பார்ப்பது திரைபடத்தின் உரையாடல். படம் முழுக்கவும் கதாநாயகி பேசிக்கொண்டிருப்பாள். அப்படியாகவே இந்நாவல் முழுக்கவும் அருண் ,  தன்னை விட்டு பிரிந்து சென்ற சுசியை நினைத்து மருத்துவமனையில் தனக்குத்தானே பேசுவதுதான் கதை.

தன்னை விரும்பும் சுசியிடம் தான் விரும்பும் சந்திரா குறித்து பேசுகிறான் அருண். சநதிரா , விதவைப்பெண். அவளுக்கும் அவனுக்குமான நெருக்கத்தை அப்படியே
படமாக்கியிருந்தால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இதுதவிர fuck , boobs வார்த்தைகள் வேறு.

நாவலின் ஓரிடத்தில் தாய்க்கும் ஜோ என்கிற கதாப்பாத்திரத்திற்கும் இடையேயான நெருக்கத்தையும் பேசுகிறது.

உரையாடல்கள் அருமை. சில இடங்கள் காதலையும் , காமத்தையும் , தத்துவத்தையும் பேசுகிறது.

நாவலின் முடிவு நாடகத்தனம். சந்திரா அருணிடமிருந்து சட்டென விலகுவதும்  சுசி அருணுடன் சேர்ந்துவாழ விட்டுக்கொடுப்பதுமான காட்சி வெள்ளைத்திரைக்குத் தேவைதானே.

அனல் காற்று அருண் , சந்திரா இவர்களுக்கிடையேயான நெருக்கத்தின் போது மட்டுமா, வாசகன் வாசிக்கையில் யாரையேனும் சந்திரவாக நினைத்துகொண்டு வாசிக்கையில் அவர்களுக்குள்ளும் அடிக்கவே செய்யும்.

நாவலில் சமூகப்பிரச்சனை என்று ஒன்றுமில்லை. அதே நேரம் காமம் சுரக்கையில்  இருக்கின்ற பிரச்சனைகளை நன்றாகவேச் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.

ஞாயிறு, 18 மார்ச், 2018

இந்திய சிறந்த சிறுகதை - 7

இந்திய சிறந்த சிறுகதை - 7

இரண்டு புத்தகங்க

மலையாளம் - அசோகன் சருவில்.

ஒரு திருடன் திருடுவதற்கு ஒரு வீட்டைத் தேர்வு செய்கிறான். முன்னோட்டமாக அவ்வீட்டிற்குச் செல்கிறான். ஒரு பாட்டியும் தாத்தாவும் இருக்கிறார்கள். பாட்டியின் காதில் இரண்டு பெரிய நகைகள்.

' நீ யாரப்பா ...? ' வளைந்து குனிந்து கண்களுக்கு கைக்கொடுத்து கேட்கிறாள்.

' நான் யாரெனச் சொல்லும் பார்க்கலாம்...'

யோசிக்கிறாள். ' திருச்சபையிலிருந்து பாதிரியார் அனுப்பினாரா..?'

'ம்...'

' என்னால நடக்க முடியல... எப்படியாம் நான் திருச்சபைக்கு போறது. கூப்பிட்டு கூப்பிட்டு விடுகிறார்.  எனக்கொரு உதவி செய்யேன்...'

' என்ன உதவி...?'

' இந்த பைபிள் அவர் கொடுத்தது. அவர்கிட்டேயே கொடுத்திடு...'

வாங்கிக்கொள்கிறான். அடுத்து அதே வீட்டில் தாத்தா நடக்க முடியாமலிருக்கிறார். அவரிடம் செல்கிறான்.

' யாரப்பா நீ...?'

' கண்டுப்பிடிங்க பார்க்கலாம்...'

' வாலிப சங்கத்து பையனா நீ...?'

'ம்..'

' கட்சி நல்லா போய்க்கிட்டிருக்கா...?'

'ம்...'

' என்னால இப்ப கட்சியப்பத்தி யோசிக்க முடியுறதில்ல. கட்சியைப் பத்தி பலராமன் எழுதின புத்தகத்த வாசிச்சேன். இப்ப கண்ணு தெரிய மாட்டேங்குது. எனக்கொரு உதவி செய்றீயா...?'

' ம்...'

' இந்தப் புத்தகத்த பலராமனுக்கிட்ட கொடுத்திடு. அவர் வேறு யார்க்கிட்டேயும் கொடுத்து வாசிக்கச் சொல்வாரு....'

இரண்டையும் வாங்கிக்கொண்டு மதுபானக்கடைக்குச் செல்கிறான். மது அருந்துகிறான். அவனுக்கு ஒரு பெண் உதவித் தேவைப்படுகிறாள். வாடிக்கையான ஒரு பெண் கிடைக்கிறாள். அவளை அழைத்துகொண்டு மறைவான இடத்திற்கு செல்கிறாள். அவளிடம் இந்த இரண்டு புத்தகங்களையும் கொடுத்து நடந்த சம்பவங்களைச் சொல்கிறான்.

அவள் கண்கள் கலங்க கேட்கிறாள் ' அப்ப நாளைக்கு நீ அவங்கள கொன்னுடுவல்ல...?'

அவனிடம் ஒரு பதிலும் இல்லை.