புதன், 28 ஜூன், 2017

கட்டுரை நீட் - வெளியேற்றும் தேர்வு

அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் டிஷ் எழுதிய சிறுகதை இது. ‘ஸ்பீக் ஈஸி ’ ஒரு தேசத்தின் அதிபர் பிடிக்காதவர்களையும், பிடிக்காத விதிகளையும் கழற்றிவிடலாம் என நினைக்கிறார். அதற்காக அவர் சட்ட விதிகளைத் திருத்தம் செய்கிறார். அவர் செய்யும் சட்டத் திருத்தம் இவ்வாறு இருக்கிறது. ‘ பொது இடத்தில் நின்றுகொண்டு யாரும் யாருடனும் பேசிக்கொள்ளக்கூடாது. மீறி பேசுவதாக இருந்தால் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம்’. 

இக்கதையை சமீப ஒரு நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். பொது இடம் என்பது நாடாளுமன்றம். அவரவர் அறை என்பது சட்டமன்றம். சட்டமன்றத்தில் உட்கார்ந்தவாறு பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காததன் விளைவு இந்த வருடம் நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. 

சட்ட மாமேதை அம்பேத்கரிடம் கேட்டார்கள். ‘ சட்டமன்றம் பெரியதா , நாடாளுமன்றம் பெரியதா...?’. அம்பேத்கர் சொன்னார். ‘ தற்போது இருக்கும் சட்ட விதிகளின் படி சட்டமன்றமே பெரியது. மாநிலங்கள் அவர்களுக்கான உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வரைக்கும் சட்டமன்றமே பெரியதாக இருக்கும்.’ கல்வி , மாநிலப்பட்டியிலில் இருந்த காலம் வரைக்கும் மாநிலத்தின் கை ஓங்கியிருந்தது. அதை பொதுப்பட்டியலுக்கு விட்டுக்கொடுத்ததன் பிறகு கடைசி ஒரு கோழிக்குஞ்சையும் காக்கைக்கு கொடுத்துவிட்டு பரிதவிக்கும் பெட்டையைப் போலாகிவிட்டது. 

நீட்தேர்வு தமிழ்நாட்டில் நடக்குமா....?நடக்காதா...? என்கிற கேள்வி இந்த முறை பெரியதாக எழவில்லை.  ஜெயலலிதா இருந்த நாட்கள் வரைக்கும் அக்கேள்வியைக் கேட்பதில் நியாயமிருந்தது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்விற்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு போராடுவார்கள்  என எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் அவர்கள் முதலில் இந்திக்கு எதிராகப் போராடுவதா...இல்லை நீட் தேர்விற்கு எதிராகப்  போராடுவதா...என குழப்பத்தில் ஆழ்ந்துபோனார்கள். நாளை வெளிவர இருக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவாக இருக்கும் என மாநில அரசு அறிவித்ததும் அதுநாள் வரைக்கும் தலைக்கு மேல் தொங்கிய கத்தியை மறந்துவிட்டு  கை விலங்கு உடைக்கப்பட்டதற்காக நாம்  கொண்டாடத் தொடங்கிவிட்டோம். 
ரேங்க் பட்டியல் தடை, நீட் தேர்வு நடைமுறை இரண்டையும் ஒப்பீட்டு பார்க்க வேண்டியதில்லை. நடப்பு ஆண்டின் மிகச்சிறந்த சீர்த்திருத்தங்களில் ஒன்று ரேங்க் பட்டியல் தடை .  நீட் தேர்வு ரேங்க் பட்டியல் மிக விரைவில் வர இருக்கையில் அதற்கு முன்பாக இன்னொரு ரேங்க் பட்டியில் தேவையில்லை என மாநில அரசு நினைத்திருக்கலாம். இரண்டு ரேங்க் பட்டியல் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் இல்லையா!

நீட் தேர்வை விடவும் ரேங்க் பட்டியல்தான் இத்தனை ஆண்டுகள் அரசுப்பள்ளிகளை அச்சுறுத்திய பெரும் பூதமாக இருந்து வந்திருக்கிறது . நீட் தேர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு. அடுத்து அமைகின்ற மத்திய அரசிற்கு மாநில கட்சிகள் நெருக்கடி கொடுப்பதன் வாயிலாக அதை களையவோ, திருத்தவோ அல்லது மாநில அரசிற்கான உரிமையாக அதைத்  தக்க வைத்துகொள்ளவோ முடியும்.  மேலும் எதிர்காலத்தில் இந்திய முழுமைக்கும் ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடத்துவதில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது. இதனால் நீட் தேர்வு தடைபட வாய்ப்பும் உண்டு. இந்திய பொதுத்தேர்தல் ஆறு, ஏழு கட்டங்களாக நடக்கையில் நீட் தேர்வை எப்படி இந்திய முழுமைக்கும் ஒரே நேரத்தில் நடத்திட முடியும்....? அது நடைமுறை சிக்கல்கள் நிறைய கொண்ட ஒரு சவாலான முயற்சியே. 

நீட் தேர்வில் மிகச்சரியாக பத்து மணிக்கு தொடங்குவதாக வைத்துகொள்வோம். அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் பத்து மணிக்கும் குஜராத் மாநிலத்தின் பத்து மணிக்கும் இடைப்பட்ட  நேர வித்தியாசம் ஐந்து நிமிடங்கள். அதாவது , நீட் தேர்வு வினாத்தாள் தேர்வு தொடங்கிய உடன் வாட்ச் அப்பில் வெளியாவதாக வைத்துகொண்டால் குஜராத் மாணவருக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே அக்கேள்வித்தாள் கிடைத்துவிட வாய்ப்புண்டு. அதாவது பூமியின் சூழற்சியை விடவும், தொழிற்நுட்ப சுழற்சி விரைவானது. பத்தாம் வகுப்பு மாணவர்கள்  பொதுத் தேர்வு எழுதுகையில் மாடிகளில் ஏறி சன்னல் வழியே புத்தகம் கொடுத்த பீகார் மாநிலத்திற்கும் , தேர்வுகளை எந்தச்சந்தேகத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றாக நடத்தும் கேரளத்திற்கும், எந்த நேரத்திலும் தேர்வு தடைபட வாய்ப்புண்டான சட்டீஸ்கர் மாநிலத்திற்கும், மாநிலத்தில் உள்நாட்டு கலவரம் இல்லாத நாட்களில் மட்டுமே தேர்வு நடைபெறும் சாத்தியக்கூறுகள் கொண்ட காஷ்மீர் மாநிலத்திற்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தேர்வு நடத்த முடியும் என்பது இந்தியாவை ஒரே நாளில் ‘நீட்’டல் அளவையில் அளப்பதற்கு ஒப்பானது. 

நீட் தேர்வு தமிழகத்தில் கூடாது என்கிற உரிமைக்குரல் நியாயமானது. அதே நேரம் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதில் வெற்றியாளராக நீந்திவரும் கற்பித்தல், மற்றும் பாடத்திட்டத்தை நம் மாநில அரசு கொண்டிருக்க வேண்டும் என்பது இனி வரும் காலங்களில் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.  மத்திய அரசு இந்த ஆண்டு திடீரென நடைமுறைப் படுத்தியிருக்கும் நீட் தேர்வு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்திருக்கவில்லை. இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை இடங்களை அபகரிக்கும் ஒரு வெளிப்படையான அணுகலாகவே இதைப் பார்க்க முடிகிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு தொடங்கியது இல்லை. சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே மருத்துவ கல்வி எல்லோருக்குமான கல்வியாக இருந்திருக்கவில்லை. 
ஆங்கில பழமொழி ஒன்று உண்டு. ‘ புது விளையாட்டு ஒன்றினை கண்டுப்பிடிக்கும் ஒருவன் வெற்றிப்பெறுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் வைத்துகொண்டே அதை அவன் உருவாக்குவான்..’ அவ்வாசகத்தின் படிதான் அன்றைய ஐ.சி.எஸ் தேர்வு , மருத்துவத் தேர்வும் நடந்தது. இன்றைக்கு நீட் தேர்வு அப்படியாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது.
இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டத்தின் அடிப்படையில் 1830 ஆண்டு அலோபதி மருத்துவ பயற்சி கொண்டுவரப்பட்டது. அதன் பொருட்டு 1831 ஆம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜும் தொடங்கப்பட்டது. இக்காலேஜில் பயிற்சிப் பெற்றவர்கள் மேல் நாட்டவரும், பிரிட்டிஷ்காரர்களுமாக இருந்தார்கள். அடுத்தடுத்து இந்தியாவில் பல மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட இந்தியர்களுக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டிருந்தது. அவ்வாய்ப்பை பிராமணர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். அதற்காக அவர்கள் ஒரு புது விதியொன்றை திணித்தார்கள். அவ்விதி ‘அலோபதி மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்’. 
 
அலோபதி மருத்துவம் இந்தியாவில் காலூன்றும் வரைக்கும் மருத்துவம் என்பது ஆதி மருத்துவ குடிகளால் பார்க்கப்பட்டு வந்தது. அதாவது இன்றைக்கு நாவிதர்களாக இருப்பவர்களின் குலத் தொழிலாக அது இருந்தது. மருத்துவத்தை குலத்தொழிலாகப் பார்த்துவந்தவர்கள் ஒரு கட்டத்தில் அவர்களும், அவர்களைப்போல கை வைத்தியம், அகத்தியர் வைத்தியம், நாட்டு வைத்தியம்,..பார்த்துகொண்டிருந்த பலரும் அலோபதி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க போட்டியிட்டார்கள். அவர்களின் போட்டியை சமாளிக்க அன்றைய பிராமணர்களால் கொண்டுவரப்பட்ட விதிதான் மருத்துவம் படிக்க  சமஸ்கிருதம்  தெரிந்திருக்க வேண்டும் என்பது. அவ்விதியின் படி நீதிக்கட்சி ஆட்சி வரும்காலம் வரைக்கும் சுமாராக தொண்ணூறு ஆண்டுகள் பிராமணர்களே மருத்துவம் படித்து வந்தார்கள். 
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் 1923 - ஆம் ஆண்டு பனகல் அரசர்  முதலமைச்சராக உட்கார்ந்ததும் மெட்ராஸ் யுனிவர்சிட்டி சட்டம் - 1923 என்கிற சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி ‘ மருத்துவம் என்பது அறிவியல் பூர்வமானது. இதற்கும் சமஸ்கிருதத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. பிராமணரல்லதோர் மருத்துவ கல்வி படிக்க தடுக்கும் இந்த சமஸ்கிருதம் புகுத்தல் அடியோடு நீக்கப்படுகிறது என பிராமணர்களின் எதிர்ப்பையும் மீறி பனகல் அரசர்  சட்டத் திருத்தம் செய்தார். இச்சட்டத்திருத்தம் நீதிக்கட்சியால் செய்யப்பட்ட மிக முக்கியமான சட்டத்திருத்தம் ஆகும். 
மருத்துவம் படித்த மருத்துவர்களை விடவும் ஆதி மருத்துவர்களின் கை வைத்தியமே அன்றைக்கு மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. பிராமண மற்றும் பிராமணரல்லாத அலோபதி மருத்துவம் உயர் ஜாதிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கும் வேலையைச் செய்திருந்தார்கள். ஆனால் பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட குடிகள் ஆதி மருத்துவர்களை நாடிச் சென்றுகொண்டிருந்தனர். ஆதி மருத்துவர்கள் தமிழ் மருத்துவ முறையைக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் அலோபதியில் அறுவைச் சிகிச்சை வருவதற்கு முன்பே அறுவைச்சிகிச்சை மருத்துவத்தில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். மூக்கு , காது, வாய் அறுபட்டு வந்தவர்களின் உறுப்புகளை எடுத்து உரிய இடத்தில் வைத்து ஒட்டும் மருத்துவ அறிவு அவர்களிடம் இருந்தது. 
ஆதி மருத்துவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையைக் கொண்டிருந்தார்கள். உடல் உபாதைகளுக்கும், உணவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அவர்களின் வாதம். ஆனால் அன்றைக்கு தென் இந்தியாவில் கால் ஊன்றிக்கொண்டிருந்த சைவர்கள் உடல் உபாதைகளுக்கு காரணம் கடவுள்தான் என்றிருந்தார்கள். ஒருவருக்கு உடல்நலம் குறைவு என்றால் ஆதி மருத்துவர்கள் கசாயம், மூலிகை, நாட்டு மருத்துகளால் குணப்படுத்தும் வேலையைச் செய்திருந்தார்கள். ஆனால் சைவர்கள் தேவராம், திருவாசகம் பதிகம் பாடி நோயிலிருந்து நோயாளியை மீட்டெடுக்கும் வேலையைச் செய்திருந்தார்கள். இருவருக்கிடையிலும் காலப்போக்கில் பகை வளரத் தொடங்கியது. 
இதற்கிடையில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் வேதாரண்யத்தில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது மதுரையை ஆண்ட கூன்பாண்டினை வெப்பு நோய் கண்டது. வெப்பு நோய் என்பது உடம்பில் தானே தீப்பிடித்து எரிவதைப் போன்ற நோய் அது. இந்நோய் இன்றைக்கும் இருக்கிறது. சமீபத்தில் என் உறவினர் ஒருவர் திடீரென்று கால்கள் தீப்பிடித்து எரிவதைப்போன்றிருக்கிறது எனத் துடித்தார். அவரைத் தூக்கிக்கொண்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு ஓடினோம். வலது கால் பாதத்திலிருந்து மேல் நோக்கி கறுத்துகொண்டு வந்தது. மருத்துவர்களுக்கு நோயின் தன்மைப்பற்றி புரிந்திருக்கவில்லை. காலையில் கணுக்கால் வரைக்கும் இருந்த கறுப்பு, மதியம் முழங்கால் வரைக்கும் வளர்ந்திருந்தது. மருத்துவர்கள் கூடி விவாதித்து தொடையோடு காலை வெட்டி எறிந்துவிட்டார்கள். திரும்பவும் தொடைப்பகுதி கறுத்துகொண்டு மேலே வந்தது. அவரைத் தூக்கிக்கொண்டு சென்னை புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனைக்கு ஓடினோம். அவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்றால் இவரைப் போல பலரும் ஒரு கால், இரு கால்களை இழந்து பரிதாபமாக கட்டிலில் கிடந்தார்கள். என் உறவினரின் தொடையை இன்னும் சற்று மேலே அறுத்து இனி கவலைப்படுவதற்கு ஒன்றில்லை என வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள் . 

ஒரு மருத்துவர் சொன்னார் ‘ இது ஒரு வகை இரத்தம் அடைப்பால் வரும் உடல் வெப்பம் நோய்.  புகைப்பிடிப்பு, மது அறுந்துவதால் வருகிறது. இதுவே இதயத்தில் வந்தால் உயிர் போய்விடும். காலில் வந்திருப்பதால்  பிழைக்க வைத்துவிட்டோம்....’ . அந்நோயினால் இரண்டு கால்களையும் இழந்திருந்தவர் சொன்னார் ‘ இது வெப்பு நோய், கூன்பாண்டியனுக்கு வந்தது. அவர் திருஞான சம்பந்தர் காலில் விழுந்து திருநீறு பூசிக்கொண்டதும் அந்நோய் அவரை விடுத்து சென்றுவிட்டது. அதுவே எனக்கு திருநீறு பூசியும் கால்களை எடுக்க வேண்டாகி விட்டது’ என்றவாறு அவர் அந்த வலியிலும் சிரிக்கச் செய்தார். 
கூன்பாண்டியனுக்கு வந்திருந்த வெப்பு நோய் திருஞானசம்பந்தர் விட்ட சாபத்தால் வந்தது என்கிறது பெரியபுராணம். புராணத்தின் படி திருஞானசம்பந்தர் பாண்டியன் நாட்டிற்கு வருகைத்தருகிறார். கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்கரசி சைவத்தின் மீது பற்றுடையவராக இருக்கிறார். ஆனால் கூன்பாண்டியன் சமணம் சமயத்தைச் சார்ந்தவர். திருஞானசம்பந்தர் என்கிற சிறுவன் மதுரைக்குள் வந்ததும் சமணர்கள் ‘அவனை கண்களால் பார்ப்பதே கூடாது’ என எச்சரிக்கை செய்கிறார்கள். அச்சிறுவன் தங்கியிருந்த அறைக்கு இரவில் தீ வைக்கிறார்கள். அத்தீ அச்சிறுவனை ஒன்றும் செய்யவில்லை. விடிந்து பார்க்கிறான் திருஞானசம்பந்தர். தன் அறைக்கு தீ வைத்த கோபத்தில் கூன்பாண்டியன் மீது சாபம் விடுகிறார். அதுதான் கூன்பாண்டியனின் வெப்பு நோய். 
இதற்கு முன்பு அப்பருக்கும் இதே வெப்பு நோய் இருந்திருக்கிறது. அவருக்கு யார் சாபம் விட்டதென்று புராணத்தில் குறிப்பு இல்லை. அப்பர் வெப்பு நோயைத் தணித்துக்கொள்ள திலகவதியார் கால் விழுந்து புரண்டு திருநீறு பூசிக்கொள்கிறார். அவரது வெப்பு நோய் தணி்ந்துவிடுகிறது. அப்பரின் தணிப்பைச் சொல்லி மங்கையர்கரசி தன் கணவனை திருஞானசம்பந்தரிடம் அழைத்துசென்று திருநீறு பூசி வெப்பு நோயிலிருந்து மீள்கிறார். இதன் பிறகு கூன்பாண்டியன் சைவ மதத்தில் சேர்க்கிறார். அவருடன் சேர்ந்து சைவ மதம் தழுவாத சமணர்களை சைவர்கள் கழுவேற்றிக் கொன்றார்கள் என்கிறது பெரியபுராணம். 
இக்கோரச்சம்பவம் ஆதாரம் அற்றது எனச் சொல்பவர்களும் உண்டு. ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கழுவேற்றிக்கொன்ற செய்தி ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது. கழுவேற்று மரங்கள் இராமநாதபுரம் உட்பட பல இடங்களில் வழிப்பாட்டு அடையாளமாகியிருக்கிறது. புராணக்கதை இவ்வாறு இருக்க ஆதி மருத்துவர்களின் வாய்வழிக்கதைகளும், போராட்ட களமும் வேறொரு கதையைச் சொல்லிச் செல்கிறது. 
ஆதி மருத்துவர்களே சமணர்கள். இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள். கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் வருகிறது. பாண்டியன் சிகிச்சைப் பெற்றுக்கொள்ள சைவர்களிடம் செல்கிறான் . சைவர்கள் திருமந்திரம் பாடுகிறார்கள். நோய் தணியவில்லை. பிறகு அவன் சமணர்களிடம் செல்கிறான். அவர்களின் மூலிகை மருத்துவத்தால் பாண்டியன் குணமாகிறான். சமணர்களின் மருத்துவ அறிவு சைவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. அவர்களை கழுவேற்றிக்கொள்கிறார்கள். கூன்பாண்டியனை மன்னித்து சைவத்தில்  சேர்த்துகொள்கிறார்கள். அன்றைக்கு கழுவேற்றப்பட்ட சமணர்கள் ஆதி மருத்துவர்கள். 

இது நடந்ததாக கூறப்படுவது ஏழாம் நூற்றாண்டு. இதற்கு பிறகும் ஆதி மருத்துவர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் உடம்பில் காயம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் அந்த இடத்திலிருக்கும் முடியை மழித்து மருந்துவிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மருத்துவத்தை மற்றக்குடிகள் மெல்லக் கற்றிருந்த போதிலும் உடல் காயம் ஏற்பட்ட இடத்திலிருக்கும் முடியை மழிக்க அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆதி மருத்துவர்களை அழைத்து முடிகளை மழிக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிறகு அதுவே அவர்களின் தொழிலாகியிருக்கிறது. 
இன்றைக்கு ஆதிமருத்துவர்கள் அம்பட்டர், நாவிதர், நாசுவர், பரியாரி, பண்டுவர், பண்டிதர், குடிமகன், பார்பர்....என பல பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ' மருத்துவர் சாதி' எனச் சாதி  சான்றிதழ் பெற அவர்கள் நடத்திய போராட்டம் மிக நீண்டது. 

சைவர்களின் மந்திரங்கள் ஆதி மருத்துவர்களின் மருத்துவத்திற்கு முன் தோற்றுப்போயிருக்கிறது. ஆகவே அவர்களின் முகத்தில் விழிப்பதற்கும் அவர்களை கழுவேற்றிக் கொன்ற குற்ற உணர்வாலும் அவர்களை பார்த்தாலே தம் குடிகளுக்கு ஆகாது என முடிவு செய்தவர்கள் ஆதி மருத்துவர்களை நாவிதர்களாகவும் தாழ்க்குடிகளாகவும் அறிவித்தார்கள். இன்றைக்கும் ஆதி மருத்துவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லப்படுகிற சவரத் தொழிலாளர் குடிகளும் சைவ வழி பிராமணர்களும் ஒரே ஊரில் இருப்பதில்லை . 

இச்சம்பவத்திற்கும் நீட் தேர்விற்கும் என்னத் தொடர்பு இருக்கப்போகிறது...? என மேலோட்டமாக நினைத்துவிடமுடியாது. மநு தர்மத்தின்படி சாதிக்கட்டமைப்பு எப்படி முக்கோணமானதாக இருக்கிறதோ அப்படியாகவே அறிவுசார் உலகமும் இருக்கிறது.  அறிவுசார் உலகத்தில் மருத்துவர்களே உச்சம். மாதா, பிதா, குரு, மருத்துவர்  என்பது  நவீன தத்துவம். சாதி கட்டமைப்பில் உச்சத்தில் இருக்கும் ஒருவர் அறிவு சார் உலகின் உச்சமென இருக்கும் மருத்துவத் துறையை எட்டுவதன் மூலமே அவரவர் கட்டி வைத்திருக்கும்  சமூக கட்டமைப்பை தக்க வைத்துகொள்ள முடியும். இதன்பொருட்டுதான் ஆயிரத்து எண்ணூற்று முப்பதுகளில் பிராமணர்கள் மட்டும் அலோபதி மருத்துவம் படிக்க வாய்ப்பாக சமஸ்கிருதம் மொழியை வைத்திருந்தார்கள். 

இன்றைக்கு  தேர்வை அப்படியாக பார்க்க வேண்டியதில்லை. ஆனால்' நீட் ' தேர்வின் போக்கு  கால ஓட்டத்தில் இந்தியில் வந்தே நிற்கும். உதாரணமாக இன்றைக்கு ஆங்கிலம் , தமிழ் இரு மொழி வினாத்தாளில் மொழிப்பெயர்ப்பில் குளறுபடிகள் ஏற்படுகையில் ஆங்கில வழிக் கேள்வியே பிரதானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்படியாக இந்தி மாறலாம். அட்டவணைப் பிரிவினர் அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டைத் தாண்டி பொதுப் பிரிவில் கூடுதல் இடங்களைப் பிடிப்பார்களேயானால் அவர்களின்  இட ஒதுக்கீடு முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்புண்டு.  இப்பொழுது முதுகலை மருத்துவ படிப்பிற்கு இட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது.  இதையும் தாண்டி அட்டவணைப் பிரிவினர் நீட் தேர்வில்  பெரும்பான்மை இடங்களைப் பிடித்தால் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுத முடியும் என அறிவிப்பு வரவேச் செய்யும்.
          
மருத்துவ துறையில் பிரசித்தி பெற்ற வாசகம் ஒன்றுண்டு 'எல்லா உடலும் போதுமான அளவிற்கு எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கிறது'. அந்த எதிர்ப்பு சக்தியைக் கொண்டு நாம் நோயை மட்டுமே விரட்ட வேண்டுமா என்ன..!

அணிந்துரை

ஜன்னல் - பொன்.குலேந்திரன் (கனடா) நூலிற்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை 

ஜன்னல்  வழியே உலகைக் கதைத்தல்


'ஜன்னல் வழியே வெளியைப் பார்ப்பதுதான் சிறுகதை'  என்கிறார் எச். ஜி.வெல்ஸ். ஜன்னலின் வழியே எவ்வளவுதான்பார்த்துவிட முடியும்...? அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொருத்தது. ஒரு சராசரி பார்வையாளனால்  கூப்பிடும்  தூரம் வரைக்கும் பார்க்கலாம்.  இன்னும் கொஞ்சம் துருவிப்பார்த்தால் கூப்பிடும் தூரத்தைத் தாண்டி  நம்மையும்  அறியாமல் குவியும் ஏதேனும் ஓர்  ஒற்றைப் புள்ளி வரைக்கும் பார்க்கலாம்.  அந்த ஒற்றைப் புள்ளி பால்வெளித் திரளின் இன்னொரு சூரிய குடும்பமாகக்கூட இருக்கலாம். ஜன்னல் வழியே விரிந்து  பாயும் நம் பார்வை  ஒரிடத்தில் குவியவேச் செய்யும். குவிய வேண்டிய பார்வை குவியாமல் விரிந்தே சென்றால்,  முழு உலகையும் ஜன்னல் வழியே கண்டுவிடலாம். அப்படியாகக் கண்ட உலகை' ஜன்னல்' சிறுகதைத் தொகுப்பின் வழியே  நம்மையும் காண வைக்கிறார் எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்கள்.

கனடா வாழ் எழுத்தாளர் பொன். குலேந்திரன் அவர்கள் எனக்கு பரீச்சையமானது அக்னிக்குஞ்சு இணைய இதழ் வழியே. அதில் அவரது 'விதி' என்கிற சிறுகதையை வாசித்து சக எழுத்தாளர்களுக்கிடையே இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச விதியை மீறி அக்கதையை நான் விமர்சனம் செய்திருந்தேன். வெறும் புகழ்பாடுதல் இல்லாத அந்த விமர்சனம்  எங்களை கண்டம் கடந்து நெருங்க வைத்தது.

புலம்பெயர்வு எழுத்தாளர்களின் எழுத்துகள் வலியானது. அவர்கள் விட்டுச்சென்ற மண், உயிர் வாழ பற்றிக் கொண்ட  மண் இரண்டையும்  வேறுபட்ட உராய்வு வெப்பத்துடன் கதையாக்கும் உத்தியால்  வாசகர்களின் மனம் கனக்கவே செய்யும். ஆனால் இவரது எழுத்து கனத்துடன் கூடிய மணத்தைக் கொடுக்கிறது. நீரால் பிரிந்து கிடக்கும் மனிதர்களை   கண்டங்களைக் கடந்து  கதாப்பாத்திரங்களால் துன்பம் மறந்த மெல்ல இழையோடும் இன்ப நூலால்  இணைக்கிறார்.

பதினெட்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் பதினெட்டு கதைகளும் முத்துக்கள். ஒரு கதையின் நீரோட்டம் இன்னொரு கதைக்குள் கசிந்திடவில்லை. ஒரு கதையின் பாத்திரம் இன்னொரு கதைக்குள் அசூசை கொடுக்கவில்லை. பாத்திரப் படைப்பை விடவும் கதையாக்கலின் செய்நேர்த்தி மெச்சும்படியாக இருக்கிறது.

முயற்சி என்கிற சிறுகதை துபாயில் வேலைப்பார்க்கும் ஒரு கேரள இளைஞனை பற்றிப் பேசுகிறது. அவன் கடும் முயற்சியில் ஒரு ரெஸ்டாரெண்டு தொடங்குகிறான். அக்கடைக்கு  பாலக்காடு ரெஸ்டாரெண்ட் எனப் பெயர் சூட்டுகிறான். இக்கதையின் பேசும்பொருள் தூரம் கடந்து கால் பதிக்கும் பாலக்காடு அல்ல. கால் பதிக்க அனுமதிக்கும் துபாய்.

அன்வர் பின் அகமது என்கிற கதை மொழி , மதம் , இனம் கடந்து இரட்சிக்க வைக்கிறது. இக்கதையின் பாத்திரம்  நாமாக இருக்கக்கூடாதா....என்கிற ஏக்கம் நம்மையும் அறியாமல் துளிர்விடச் செய்கிறது. கடை ஊழியனாக வேலைப்பார்க்கும் அவனுக்கு அவனது முதலாளி தன் மகளைத் திருமணம் முடித்து வைத்து அழகுப்பார்க்கிறார். சாதி,மதம்,ஏழை ,பணக்காரன், ஜோதிடம் , பொருத்தம்....என்கிற எந்தக் குறுக்கீடும் அவனது வாழ்தலில் இல்லை. இத்தகைய இல்லை சூழ்ந்த வாழ்க்கை கடல் தாண்டி கூடுவது ஆறுதல் தரும்படியாக இருக்கிறது.

பேய்வீட்டு மரைக்காயர் என்கிற சிறுகதை துப்பறியும் நாவல் அளவிற்கு இருக்கிறது. எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே என்கிற பழமொழிக்கு கொடுக்கும் விளக்கம் புதுமையானது. கதைக்குள் சோழர்களின் பாத்திரம் வருகிறது.அது கதைக்கு அடர்த்தியையும் விறுவிறுப்பையும் கொடுக்கிறது. இக்கதை நாவலாக வேண்டிய ஒன்று.

தெரு ஓவியன் கதை புலம்பெயர்ந்தவர்களின் கீற்றுக் கனவு. ஆப்பிரிக்க இளைஞனான அவனைப் பற்றிய சித்திரமும் அவனது ஓவிய வடிப்பும் ஓவியத்திற்குள் பொதிந்திருக்கும் ஏக்கமும் கதையின் முடிவும் அவன் தீட்டிய ஓவியத்திற்கும் வலிக்கவே செய்யும்.

ஆலமரத்து ஆவி என்கிற கதை பகலில் வாசிக்கையில்  அமாவாசையின்  நடுநிசி  அச்சத்தை மூட்டுகிறது. கதையை அவர் மூட நம்பிக்கையை நோக்கி நகர்த்திச்சென்று பிற்பகுதியில் பிரமாதப்படுத்திவிட்டார்.  கதையின் இடையில் வரும் மொனிக்கா பாத்திரம் மொத்த ஆலமரமாக மாறுகிறது. ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதிலும் கிளையிலும் பேய்கள் தொங்கும் காட்சியைத்தரும் இக்கதை பொடியா வீழ்வதில் சமநிலைப் பெறுகிறது. சபாஷ்...! போட வைக்கிறது.

இத்தொகுப்பின் தலைப்பிடப்பட்ட சிறுகதை மிக முக்கியமான சிறுகதை.
சென்னையில் அப்பலோ மருத்துவமனை போன்று கனடாவில் டிரிலியம் மருத்துவமனை. ஏழை,மத்தியவாழ்வர், பணக்காரர்கள் எனப் பலரும் மருத்துவ வசதி பெறும் மருத்துவமனையாக அது இருக்கிறது.

தோமஸ் , ஒலிவர் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். தோமஸ் புற்று நோயாளி. அவருக்கு  ஜன்னலோர படுக்கை கிடைக்கிறது. அவர் எழுத்தாளரும் கூட. அவர் ஜன்னல் வழியே இயற்கைக்காட்சிகளை வர்ணித்து ஓலிவர் உடன் பகிர்ந்து கொள்கிறார். ஓலிவர் தனக்கு ஜன்னலோர படுக்கை கிடைக்கவில்லையே  என ஏங்குகிறான்.

அன்றைய தினம் விடிந்து பார்க்கையில் தோமஸ் படுக்கை காலியாக இருக்கிறது. செவிலியிடம் விசாரிக்கையில் அவர் இரவு இறந்துவிட்டது தெரியவருகிறது. ஓலிவர் ஜன்னல் படுக்கைக்கு மாறுகிறான். ஜன்னல்  வழியே பார்கையில் சுவர் மட்டுமே தெரிகிறது.

தோமஸ் இயற்கைக்காட்சிகளை வர்ணித்து இருந்தாரே என செவிலியிடம் கேட்கிறான். செவிலி சொல்கிறார். தோமஸ்க்கு கண் தெரியாது. அவரொரு எழுத்தாளர் என்பதால் கற்பனையாக  சொல்லிருக்கலாம் என்கிறார்.மிகை அலங்காரத்துடன் எழுதப்படாத இக்கதை தொகுப்பிற்கு  சுகமான கனம்.

 இப்படியாக ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் கலைடாஸ்கோப்பின் பிம்பத்தை கொண்டு வந்து நிறுத்துகிறார்.

 பொன்.குலேந்திரன் கண்டம்  கடந்து வாழ்பவராக  இருக்கிறார். என் அருகில் அவர் வாழ்பவராக இருந்தால் அவரது கையை இறுகப் பிடித்து  குலுக்குபவனாக இருந்திருப்பேன்.

ஜன்னலைத் திறந்தால் காற்றுதான் வரும். இத்தொகுப்பைத் திறக்கையில் காற்றுடன் கூடிய உலக மணம் வருகிறது. திரை கடந்து இந்நூல் வாசிக்கப்பட எனது வாழ்த்துகள். 

வெள்ளி, 9 ஜூன், 2017

மிகத் துல்லியமானத் தாக்குதல்

மிகத் துல்லியத் தாக்குதல்         
       பச்சையும் சாம்பலுமான சீருடையை உடுத்திக்கொண்டு இமயமலையின் அடிவாரத்தில் தவழ்ந்து, மறைந்து தான் வைத்திருக்கும் உலகத் தரமானத் துப்பாக்கிக்கு எவனேனும் ஒருவன் தீவிரவாதி என்கிற பெயரில் இரையாகக் கிடைக்கமாட்டானா....என இந்திய இராணுவத்தினர் தேடுவதைப்போலதான் அன்ஸர் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான். எந்த மூலையிலிருந்தும் அழுகையாக, ஓலமாகக் கிடைத்தாலும் போதும் என்றளவில்தான் அவனது தேடல் இருந்தது.
       வாழ்கிறோம்...என்கிற பெயரில் ஒரு நாளைக்கு எப்படியேனும் பத்து முறையேனும் செத்துவிடும் எத்தனையோ காஷ்மீரிகளில் அவனும் ஒருவன். உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களில் ஒன்றாக அவனுடைய மாநிலம் இருக்கிறது. இந்தியாவின் மொத்த பனியும் அங்கேதான் கொட்டுகிறது. ஆனால் பனியினாலான நடுக்கத்தை விடவும் பயத்தினாலான நடுக்கமே அவனை பெரிதும் நடுக்கிக்கொண்டிருந்தது. இந்திய வரைபடத்தில்தான் அதன் பெயர் காஷ்மீர். ஆனால் அதன் வாசிகள் அழைப்பது என்னவோ பள்ளத்‘தாக்கு என்றுதான்.  
       அன்ஸரின் தாய் உறவு சர்வதேச எல்லை முள் வேலிக்கு அப்பால் இருக்கிறது. தந்தை உறவின் கீழ் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவன் வாழ்ந்துகொண்டிருந்தான். உலகின் ஏதேனும் ஒரு மூலையில் ஒரு புது ரகத் தோட்டா, துப்பாக்கி, பீரங்கி, ஆளில்லா இயங்கும் போர் விமானம், ராக்கெட் கண்டுப்பிடிக்கப்பட்டு சந்தைக்கு வராத நாட்களில் அவனுக்கான வாழ்க்கை அவனிடம் இருந்தது. மற்ற நாட்களில் முகுளத்தையும் நடுங்கச் செய்யும் நடுக்கம்தான்!
       ராஜஉரி, பூஞ்ச், குப்வாரா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவசரக்கால வாகனங்களுடன் , இராணுவ வாகனங்கள் மட்டும் சாலைகளில் இயங்கிக்கொண்டிருந்தன. சாலை முழுவதும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். முக்கத்திற்கு முக்கம், திருப்பம், பள்ளி வாசல், கோயில், கல்விச்சாலை, அங்கன்வாடி, அங்காடி,..என ஓரிடம் தவறாமல் இராணுவத்தினர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைத் தவிர பொது மக்களின் நடமாட்டம் அறவே அற்றிருந்தது. அவரவர் ஏதேனும் ஒரு மறைவிடத்தில் தொலைத்த அமைதியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து அன்ஸர் அவனுக்கான அமைதியைத் தேடிக்கொண்டிருந்தான்.
       அவனுக்கான அமைதி புது மனைவியிடத்திலிருந்தது. திருமணம் நடந்தேறிய அன்றையத் தினமே அவன் மூளையை மட்டும் வைத்துகொண்டு இதயத்தை மனைவியிடம்  கொடுத்துவிட்டிருந்தான். அந்த இதயத்தைதான் அவன் ஓரிடம் விடாமல் தேடிக்கொண்டிருந்தான். இதயத்தைத் தேடி இரத்தம் தமனி, சிரைக்குள் ஓடுவதைப்போல அவன் மனைவியைத் தேடி ஓடிக் கொண்டிருந்தான்.
       சர்வதேச எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள பூஞ்ச் மற்றும் ராஜஉரி மாவட்டங்களுக்கிடையில் ஒரு மலையின் அடிவாரத்தில் அவனுடைய ஊர், தெரு, வீடு இருக்கிறது. அவன் தேடுவதை ஒரு கனம் நிறுத்தி நின்று நிதானிப்பானேயானால் அவனது கிராமம் பூஞ்ச் மாவட்டத்தில் பாஞ்ச்கிரியான் எனத் தெரியவரும். அவனுக்கு ஏது நேரம்....அவனிடமிருந்த ஒவ்வொரு நொடியும் மனைவியைத் தேடிக் கண்டுப்பிடிப்பதிலேயே கழிந்துகொண்டிருந்தது.
       மனிதனுக்கு இரண்டு காதுகளின் அவசியம் காஷ்மீரிகளுக்கு தேவையென இருந்தது. ஒரு காது பாகிஸ்தானிற்கு. இன்னொன்று இந்தியாவிற்கு. ‘ வாழ்கிற நாள் வரைக்கும் இந்தியா என்கிறப் பெயரை உச்சரிக்கக்கூடாது...’ என்கிறது பாகிஸ்தான். ‘ சாகும் பொழுதும் பாகிஸ்தானை நினைக்கக்கூடாது...’ என்கிறது இந்தியா. இரண்டு காதுகளையும் ஏறாமல் இறங்காமல் பார்த்துகொண்டவர்கள் மட்டும் பள்ளத்தாக்கில் தப்பிப்பிழைத்துகொண்டிருந்தார்கள்.
.      அன்ஸர் தூங்கி இரண்டு வாரங்களாகி விட்டிருந்தன. மனைவியின் இதமான வெப்பம், குளிரை உடைக்கும் அவளது மூச்சுக்காற்று இல்லாமல் அவனால் தூங்கமுடியவில்லை. மனைவியைத் தொலைத்தத் துயரம் உச்சந்தலையைத் தொட்டு பாதங்களில் இறங்கியது. எப்படியேனும் மனைவியைத் தேடிக் கண்டுப்பிடித்திட வேணும் என்கிற வேட்கை மட்டும் தொண்டைக்கும் நெஞ்சிற்குமிடையில் உருண்டுக்கொண்டிருந்தது. நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவைப் பற்றியும், அது கொடுக்கும் எச்சரிக்கைப்பற்றியும் அவன் தெரிந்து வைத்திருக்கவில்லை. கிளை மறைவில் இலைகளுக்கிடையில் தொங்கும் ஆப்பிளைத் தேடுவதைப்போலதான் அவன் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான்.
       ‘ அன்ஸர்...இவள்தான் உன் மனைவி....நான் சொல்வதை நீ நம்பு..’ அவனுக்கு நெருக்கமானவர்கள் ஒரு பாஷ்மினா கம்பளி உடுத்தியவளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.‘இதோ...நீ அவளுக்கு வாங்கிக்கொடுத்த பர்தா, சால்வை... இவள்தான் உன் மனைவி....’ என்றவாறு உறவினர்கள் சிரத்தை எடுத்து விளக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களது விளக்கத்தை அவன் சட்டென உதாசீனப்படுத்தினான்.‘ இவள் என் மனைவியாக இருக்க முடியாது. என் மனைவி எதோ ஓரிடத்தில் ஒழிந்திருக்கிறாள்...அவளை நான் எப்படியேனும் தேடிக்கண்டுப்பிடிப்பேன்...’ என்றவன் அவர்களிடமிருந்து விலகி அவன் சந்தேகப்படுமிடங்களில் தேடிக்கொண்டிருந்தான்.  
       மட்டைப்பந்து விளையாடுகையில் இழுத்து அடிக்கப்பட்டப் பந்து பவுண்டரிக்கு வெளியே சிக்ஸர்களாக விழுவதைப்போலதான் பீரங்கிக்குண்டுகள் ஆங்காங்கே விழுந்துகொண்டிருந்தன. கிழக்கிலிருந்து மிகச்சரியாக இலக்கு நோக்கி சீறிப்பாயும் குண்டுகள் கில்லட், ஹுன்சா, நாகர்,ஸ்கர்டு  எல்லைக்குள் விழுந்து உயிரைக் கழுவிக்குடித்துகொண்டிருந்தன.
       காஷ்மீர், ஜம்மு இரண்டும் இரு வேறு நிலம். இது பள்ளம், அது மேடு. காஷ்மீரில் பனி பெய்தால் ஜம்முவில் வெயில் அடிக்கும். காஷ்மீரில் போர் என்றால் ஜம்முவில் ஓரளவேணும் அமைதி நிலைக்கொண்டிருக்கும். ஆனால் பாகிஸ்தான் இந்தியா மீது தொடுத்த உரி தாக்குதலுக்கு பிறகு இரு நிலங்களின் காதுகளிலும் எறும்பு புகுந்து அமைதியைத் தொலைத்திருந்தன.
       இந்திய இராணுவம் பாகிஸ்தான் நோக்கி விட்டெறிந்து மிர்பூரில் விழுந்து வெடிக்காதக் குண்டுகள் ராஜஉரிக்கு திரும்பி வந்தன. அதன் குலைநடுக்கம் பூஞ்ச் வரைக்கும் இருந்தன. பூஞ்ச் மக்கள் ராஜஉரிக்கு இடம்பெயர்ந்தார்கள். ராஜஉரியினர் பூஞ்ச்க்கும்,. ராம்கார் சம்பாவிற்கும், சம்பா மக்கள் ஜம்முவிற்கும் ஜம்முவினர் ராம்காருக்குமாக மூட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கடலின் அடியில் இடம்பெயரும் சுழற்சி நீரோட்டம்  பள்ளத்தாக்கு மக்களிடம் நடந்துகொண்டிருந்தது.
            அன்ஸர் தேடலில் இந்து , முஸ்லீம், புத்தம் பாகுபாடு பார்க்கவில்லை. சன்னி , ஷியா , குஜ்ஜார் என பிரிக்கவில்லை. அவன் ஒவ்வொரு தெரு, வீடாக நுழைந்து அவனுக்கானவளைத் தேடிக்கொண்டிருந்தான். ஹரிசிங் வம்சாவளிகள் அதிகம் வாழும் சிங் வாழ் பகுதிகளில் முதலில் தேடினான். ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் தட்டி அவன் கையில் வைத்திருக்கும் மனைவியின் புகைப்படத்தைக் காட்டி ‘ இவள் இங்கே எங்கேனும் ஒழிந்திருக்கிறாளா...?’ எனக் கேட்டான். ஒரு வீடு தவறாமல் கேட்டுக்கொண்டு வந்தவன் உலகின் அமைதி விரும்பிகள் எனச் சொல்லிக்கொள்ளும் புத்தப்பிட்சுகளின் வீட்டுக் கதவுகளை அவன் தட்டத் தயங்கவில்லை.
       குஜ்ஜார் இன மக்களுக்கு இஸ்லாமியர்களை அவ்வளவாகப் பிடிக்காது. அவர்கள் இந்திய நலன் விரும்பிகள். காஷ்மீரை கடைசியாக ஆண்ட ஹரிசிங் மன்னரின் அமைச்சர் பொறுப்புகள் அத்தனையையும் அனுபவித்தவர்கள். இன்றைக்கும் அவர்களது ஆதரவு இல்லாமல் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் குளிர் மற்றும் கோடைக்கால சட்டசபையை நடத்திட முடியாது. அவர்களின் கடைத்தெருக்கள், குடியிருப்பு , அலுவலகத் தெருக்களில் நுழைந்து மனைவியின் வயது, அடையாளங்களைச் சொல்லி மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான். குஜ்ஜார் வாழ் தெருக்களை முடித்து இந்து வாழ் குடியிருப்பிற்குள் நுழைந்தான். அதிலும் சைவம், வைணவம் என்கிற பாகுபாட்டுடன் கூடிய தெருக்களாக இருந்தது. அதற்குள்ளாகத் தேடினான்.
       அடுத்து அவன் இரண்டு குன்றுகளைக் கடந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியினர் அதிகம் வாழும் உதாம்பூர் மாவட்டத் தெருக்களுக்கள் நுழைந்தான். பல பள்ளங்களில் இறங்கி ஏறி ஒரு காலத்தில் ஹிஸ்ப் - உல்- முஜாஹிதீன் அமைப்பினர் அதிகமாக நடமாடிய வீதிகளில் துலாவினான். லஷ்கர் - இ- தொய்பாவினர் மறைந்திருந்த இடம் எனச் சொல்லிக்கொள்ளும் மலையின் அடிகார குடியிருப்புகளில் தேடினான். ஹர்கத் - உல்- அன்ஸர், ஜெய்ஷ் - இ- முகமது, ஹர்கத் - உல்- முஜாஹிதீன், முஸ்லீம் விடுதலைப்படை, தலிபான், அல் - ஃபத்தா, அல் - ஃபரன், டுக்தரன் - இ- முல்லத், அல் - ஜிஹாத், ஜமாய்த் - உல்- முஜாஹிதீன், அல் - பதர், அல் - பர்க்,  ஹிஸ்புல் மோமினின், தரிக் -இ- ஜிஹாத், ஹிஸ்புல்லா, ஐக்கிய ஜிகாத் குழு, ஹர்கத் -இ- ஜிகாத்- இ- இஸ்லாமி, இஸ்லாமிய முன்னணி, இக்வான் உல் முஸ்லிமீன், , காஷ்மீர் விடுதலை ஜிஹாத், ... என பிரிவினைவாதிகள் அவ்வபோது தலைத்தூக்கிய இடங்களிலெல்லாம் ஒரு பதட்டமுமில்லாமல் தேடினான்.
       வானம் விட்டுவிட்டு தூரிக்கொண்டிருந்தது. ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு மூதாட்டி செம்மறி கூட்டத்தை மேய்த்துகொண்டிருந்தாள். செம்மறிகள் ஒன்றோடொன்று முட்டி, மோதி விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு செம்மறியின் முதுகில் இரண்டு ஆட்காட்டிக்குருவிகள் உட்கார்ந்து கொண்டு தன் வாயிலிருந்த இரையை அதன் ஜோடிக்கு ஊட்டிக்கொண்டிருந்தது. இன்னொரு மரத்தில் இரண்டொரு குருவிகள் ஒன்றையொன்று கொத்தி கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்தன. அதனைப் பார்த்ததும் அவனுக்கு அவன் மனைவி ஞாபகத்திற்கு வந்தாள். மனைவி தோளில் கையைக் கிடத்திக்கொண்டு நடப்பதும், சிரித்து விளையாடுவதுமான நினைவுகள் அவனுக்கு வந்தன.
       அவன் செம்மறி மேய்த்துகொண்டிருந்த அந்த மூதாட்டியிடம் சென்றான். ‘ என் பெயர் அப்பாஸ் அன்ஸர்...இந்த படத்தில் இருப்பவள் என் மனைவி. பெயர் ஸர்மத் நிஷா. வயது இருபத்து ஐந்து. இருவரும் நிக்காஹ் செய்துகொண்டு ஒரு மாதமாகிறது. புகைப்படத்தில் இருப்பதை விடவும் அழகாக இருப்பாள். மேலுதட்டில் ஒரு மச்சமிருக்கும். சிரிக்கையில் கன்னங்களில் குழி விழும். அரபி பேசுவாள். உருது பேசுவாள்... இந்தி தேவையானளவிற்கு தெரியும்...இவளை எங்கேனும் பார்த்தீர்களா....?’ எனக் கேட்டான். அவள் தலை பர்தாவை ஒரு முறை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டு புகைப்படத்தைத் துலாவிப்பார்த்தாள். அவனைப் பார்த்தபடி உதட்டைப் பிதுக்கினாள்.
       அன்ஸர் மனம் போனப்போக்கில் நடந்தான். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு போக வேண்டிய வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாகனத்திற்கு முன்பும் ஒரு இராணுவன் துப்பாக்கி ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தான். அவர்களிடம் புகைப்படத்தைக் காட்டி கேட்டான். வானகங்களில் ஏறிக் குதித்து மனைவியைத் துலாவினான்.
       சன்னி முஸ்லீம் குடியிருப்பிற்குள் நுழைந்தான். முஜாஹிதீன் தெரு, லஷ்கர் வீதி, ஜிஹாத் குடியிருப்பு, பதர்வாசிகள் வாழும் பகுதி, பர்க் நிலம், ஃபத்தா குறுக்குச்சந்து, ஃபரன் சதுக்கம், மில்லத் தெரு,...என ஒவ்வொரு தெருவாகக் தேடிக்கொண்டு வந்தவன் ஷன்னி குடியிருப்பிற்குள் நுழைந்தான்.
       குஜ்ஜார், சன்னி , இந்து குடியிருப்புகளில் இருந்த பரபரப்பு ஷியா வாழ் பகுதியில் இல்லாமலிருந்தது. அவர்கள் காஷ்மீருக்கு விழுந்திருந்த தலையெழுத்தை நினைத்து முகத்தில் துக்கம் சூழ உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் வாசலில் நின்றுகொண்டு அவன் மனைவியின் பெயரைச் சொல்லி உரக்கக் கத்தினான். ‘ என் தங்கமே....ஸர்மத் நிஷா நீ எங்கேயடி இருக்கிறாய்....? என் அமைதியைப் பறித்துக்கொண்டு நீ எங்கேயடி போனாய்....? தயவுசெய்து என்னை நீ அலையவிடாதே... வெளியில் வா....’ என்றவாறு கண்ணீர் கம்பலையுடன் அவன் அடித்தொண்டையிலிருந்து எழுந்த பிரவாகத்தால் கூப்பிட்டான்.
       அவனால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அவனுக்கு மயக்கம் வருவதைப்போலிருந்தது. ஒரு மரத்தடியின் கீழ் படுத்தான். அவனுக்கு தூக்கம் வரவில்லை. அவனது மனவோட்டத்தில் மனைவி கூப்பிடும் தூரத்தில் எதொவொரு இடத்தில் அவள் இருக்க வேண்டும் என அவனது ஆழ்மனம் உறுத்தியது. தலையில் கவிழ்த்திருந்த குல்லாவை எடுத்து இடுப்பில் சொறுகிக்கொண்டு புரண்டுப் படுத்தான்.
       ஒரு இராணுவன் துப்பாக்கியை ஏந்தியபடி பூட்ஸ் காலால் அன்ஸரை உதைத்து எழுப்பினான். அவன் திடுக்கென விழித்தான். ‘ என் மனைவி கிடைத்திட்டாளா....?’ கண்களை அகல விரித்துக் கேட்டான். அந்த இராணுவன் அவனை ஒரு முறை முறைக்கப் பார்த்துவிட்டு ஓரடி தள்ளி நின்றான். அன்ஸர் எழுந்தான். தன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து கத்தையாக இந்திய கரன்சிகளை அள்ளினான். இராணுவன் முன் நீட்டினான். ‘ வைத்துக்கொள்ளுங்கள்....உங்களுக்கு என்  மனைவி இருக்குமிடம் தெரியும்....இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என் மனைவியை எனக்கு காட்டிக்கொடுங்கள்....’ என்றவாறு அவனிடம் கெஞ்சினான். அந்த இராணுவன் ஒன்றும் சொல்லாமல் துப்பாக்கியை ஒரு கணம் அவனது நாசிக்கு நேராக காட்டிவிட்டு பத்தடி தூரம் தள்ளிப்போய் நின்று ஒரு திசையைப் பார்த்து குறி வைத்தான்.
       அவன் படுத்திருந்த மரத்தடியையொட்டி பண்டிட் அதிகம் வாழும் தெரு இருந்தது. அதற்குள் நுழைந்தான். ஒவ்வொரு வாசலிலும் விசாரித்தான். பிறகு இராஜபத்திர வம்சத்தினர் வாழும் தெருக்களுக்குள் நுழைந்தான். பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பிற்குள் நுழைந்தான். அவர்கள் தந்த சில சப்பாத்திகளை வாங்கி மென்றான். தண்ணீர் குடித்தான். ஒன்றிரண்டு சப்பாத்திகளை வாங்கி அவன் உடுத்தியிருந்த அழுக்கு பைஜாமா பைக்குள் திணித்துகொண்டான்.
       எப்பொழும் பரபரப்பாக இருக்கும் தோடா மாவட்டத் தெருக்கள் வெறிசோடி இருந்தன. ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் அவசரகால வாகனமாக இயங்கிக்கொண்டிருந்தன. அவனது கண்களுக்கு தென்படும் வாகனத்தைத் தேக்கினான். நிற்காத வாகனத்தில் ஏறிக்குதித்தான். வாகனத்திற்குள் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு அத்தனை வேகத்தில் இயங்கும் வாகனத்திலிருந்து குதித்து ஏதேனும் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கையில் வைத்திருக்கும் புகைப்படத்தைக்காட்டி ‘ இவளை உங்களுக்கு தெரிந்திருக்கும். இவளை யாரேனும் பார்த்தீர்களா....?’ எனக் கேட்டான்.
       எப்படியேனும் தன் மனைவி தனக்கு கிடைத்துவிடுவாள் என்கிற நம்பிக்கை அவனுக்குள் வேர் விட்டிருந்தது. ஒவ்வொரு இடமாகத் தேடி திரும்பவும் அவன் அவனது மாவட்டத்திற்கு வந்தான். அவனது தெருவிற்குள் நுழைந்து அவனது வீட்டினை அடைந்தான். வீடு துப்பாக்கிக்குண்டுகளால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது. அவனது வீட்டின் சுவர்களை, கூரைகளை உலகத்தரத்தினலானத் தோட்டாக்களால் குடையப்பட்டிருந்தது. அவன் வீடு மட்டுமல்ல அந்தத் தெருவில் உள்ள இன்னும் சில வீடுகளும் பீரங்கி குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. நாய்கள் குரைத்தபடி இருந்தன.
       வீட்டிற்குள் நுழைந்து மேற்கூரையைப் பார்த்தான். மேற்க்கூரை கான்கிரீட் பட்டையாக விழுந்து கிடந்தன. சுவர்கள் வீட்டிற்குள் சரிந்து உடைந்து நொறுங்கி இருந்தன. மலை கற்களான வீடு அது. இமயமலை அடிவாரத்து சதுர வடிவிலான கற்கள். ஒவ்வொன்றாக எடுத்து அதற்குள் தன் மனைவி இருக்கிறாளா...எனத் தேடினான். கோழி அதற்கான இரையைத் தேடுவதைப்போலதான் அவன் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான்.
       அவனுக்கு வேண்டியப்பட்டவர்கள் இரண்டு பேர் ஓடி வந்தார்கள். மூச்சிறைக்க நின்றார்கள். ‘ அன்ஸர்...’ என்றார்கள். ‘ உன் மனைவி கிடைத்துவிட்டாள் ’ என்றார்கள். அவன் உதடுகள் விரிய சிரித்தான். மனைவி கிடைத்துவிட்டாள் என்கிற மகிழ்ச்சியில் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அவன் உடுத்தியிருந்த பைஜாமா உடை மேலே கீழே இழுத்துவிட்டுக்கொண்டான். முகத்தைத் துடைத்துகொண்டான். ஆடை கிழிந்திருப்பதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. தலையில் கவிழ்ந்திருந்த குல்லாவை அப்படியும் இப்படியுமாக நகர்த்தி சரி செய்துகொண்டான். அதே இடத்தில நின்றவாறு மகிழ்ச்சியின் பெருக்கில் குதித்தான். கைக்கொட்டிச் சிரித்தான். அவனது சட்டைப்பைக்குள் இருந்த சப்பாத்தித் துண்டுகளை எடுத்து பிய்த்து சுற்றி நின்றவர்களிடம் கொடுத்தான். இன்னொரு பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தான். கரன்சி நோட்டுகள் வந்தன. கொத்தாக அள்ளி வானத்தை நோக்கி விட்டெறிந்தான்.
       ‘ எங்கே என் தங்கம்....? என் அழகு....? ஸர்மத் நிஷா.....நிஷா....’ என்றவாறு நாலாபுறமும் ஓடினான்.
       தகவல் கொண்டு வந்திருந்த இரண்டு பேர் அவனை கைத்தாங்கலாகப் பிடித்துகொண்டு நடந்தார்கள்.  அவனை ஒரு மருத்துவமனைக்குள் அழைத்துசென்றார்கள். மருத்துவமனைக்கு உள்ளே வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் வைத்தி்ருந்த துப்பாக்கியை விலக்கி அக்காவலனை இளக்காரமாகப் பார்த்தான். ‘ எனக்கு என் மனைவி கிடைத்துவிட்டாள்...’ என்றவாறு சிரித்தான்.
       அவர்கள், அவனை மருத்துவமனையின் உள் கட்டிடத்திற்குள் அழைத்துச்சென்றார்கள். வடக்கு பக்கம் திரும்பி சாலையோர கட்டிடத்திற்கு வந்திருந்தார்கள். அது பிணக்கிடங்கு. அதற்குள் மூவரும் நுழைந்தார்கள். ஒன்று, இரண்டு, மூன்று சடலங்களைத் தாண்டி வெண் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு சடலத்தை அவனிடம் காட்டினார்கள். ‘ அன்ஸர்...இவன்தான் உன் மனைவி ...’
        அன்ஸர் அவன் அந்த உருவத்தை குறுகுறுவெனப் பார்த்தான். தொட்டான். உடம்பை குலுக்கி எழுப்பினான்.
       ‘ இதோ...நீ இவளுக்கு வாங்கிக்கொடுத்த தொங்கல்...சல்வர்....பாஷ்மினா கம்பளி....’
       அவன் அவற்றை வெறிக்கப்பார்த்தான். காலடி ஓரடி பின்னால் எடுத்துவைத்தான்.
       ‘ அன்ஸர்....இவள்தான் உன் மனைவி. நாங்கள் சொல்வதை நம்பு.. வீணாக உன் மனைவியைத் தேடி அலையாதே....’ அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அன்ஸர். அவர்களை முறைக்கப்பார்த்தான்.
       ‘ உனக்கு அவள் மீது சந்தேகம் வருகிறதா....?’
       ‘ ஆம்....’ என்றவாறு அன்ஸர் தலையாட்டினான்.
       ‘ ஒரு நிமிடம் இரு...’ இரண்டு பேரில் ஒருவன் வெளியில் ஓடி இரண்டு மருத்துவ அதிகாரிகளை அழைத்து வந்தான். அதிகாரிகள் ஸ்ரெட்சரில் இருந்த அந்தச் சடலத்தின் கட்டை விரலை எடுத்து அவர்கள் வைத்திருந்த கணினி கண்ணாடி வில்லையில் வைத்தார்கள். கண் முன்னே அவளது புகைப்படம் விரிந்தது.
       அன்ஸர் ‘ அய்....’ என்றவாறு புகைப்படத்தைப் பார்த்தான். முகம் பூரிக்கச் சிரித்தான். அதிகாரிகள் கேட்டார்கள். ‘இது உன் மனைவி தானே.....? ’ ‘ ஆம்....’ என்றான். ‘ அவளது ஆதார் எண் சரிதானே....?’  மனதிற்குள் சொல்லிப்பார்த்துகொண்டு சிரித்தான்.
       ‘ பெயர் ஸர்மத் நிஷா.’
       ‘ஆம்....’
       ‘கணவர் பெயர் அப்பாஸ் அன்ஸர்’.
       ‘ நான்தான்...நான் தான்....’
       ‘ வயது இருபத்து ஐந்து ’
       ‘ ஆமாம்....’
       ‘ அப்படியென்றால் இவள்தான் உன் மனைவி....இவளை தூக்கிக்கொண்டுபோய் உனக்கான இடத்தில் அடக்கம் செய்துகொள்.....’ மருத்துவ அதிகாரிகள் சொன்னார்கள்.
       அன்ஸர் ஒன்றும் பேசவில்லை. கணினி திரையிலிருந்து பார்வையை எடுத்து ஸ்ரெட்சரில் படுக்க வைத்திருந்த சடலத்தின் மீது  குவித்தான். கண்களை உருட்டித் திருட்டி பார்த்தான். நுகர்ந்து பார்த்தான். அவள் கனமழையில் நினைந்த சிவப்பு பூவைப்போல இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாள். அன்ஸர் சுற்றி நின்ற அத்தனைப் பேர்களையும் இளக்காரமாக ஒரு முறைப்பு முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

        ‘ அவள் என் மனைவியைப்போலிருக்கும் யாரோ ஒருத்தி. அவள் என் மனைவியாக இருந்தால் என்னைக் கண்டதும் துள்ளி எழுந்திருக்கல்லவா செய்திருப்பாள்...’ என்றவாறு அவன் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி தேடாத இடங்களில் தேடத் தொடங்கினான்.

ஒரு இலட்சம் ரூபாய் பரிசு

உலகலாவிய சிறுகதைப் போட்டி

மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறைத் தலைவருமான(பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு. மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றம் தமிழ் மொழிக்காகவும், பல்கலைக்கழகம், கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறன்களை மேன்மைப்படுத்தவும், மன்பதைக்காகவும் பல்வேறு அரும்பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றது. இந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி, இளம் தமிழ்ப் படைப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கிலும் பள்ளி, கல்லுரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலும் உலகம் தழுவிய நிலையில் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணரும் எண்ணத்திலும் உலகம் தழுவிய இச் சிறுகதைப்போட்டி நடத்தப்படுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சொ.சுப்பையா அவர்கள் தம் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தமிழ்ப் பணபாட்டு மையம் , திருக்குறள் இருக்கை ஆகியவற்றுடன் மலேசிய நாட்டில் இயங்கிவரும் மலேசியத் தமிழ் மணி மன்றம்;, மலேசியத் தமிழ்க் காப்பகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அழகப்பா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டதன் விளைவாக இத்தகு சிறப்பு மிகுந்த மலேசியத் தமிழ் மணி மன்றம் உலக அளவிலான சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்துகிறது. இதில் தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு. தமிழர்களின் வாழ்வியல் முறை, பண்பாடு அடையாளங்கள், தமிழரின் சாதனைகள், வீரவிளையாட்டுக்கள், தமிழரின் மருத்து முறைகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், திருவிழாக்கள்,வழிபாட்டு முறைகள் என வரிசைப்படுத்தப்பட்ட இன்னும் பல்வேறு பொருண்மையில் சிறுகதையின் கருவாக அல்லது உட்பொருளாக அமையலாம். சிறுகதை எழுத விருப்பமுள்ள படைப்பாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கிணங்க சிறுகதையை எழுதி ஏ4 தாளில் தட்டச்சு செய்து 4 பக்கங்களுக்கு மிகாமல், 12 அளவுள்ள ஒருங்குகுறி அல்லது பாமினி எழுத்துருவில் அல்லது பிற எழுத்துருவில் 1..5 இடைவெளியில் சிறுகதையைத் தருதல் வேண்டும். போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு வயது வரம்போ, எந்தவிதப் பதிவுக் கட்டணமோ இல்லை. குறிப்பாக ஒருவர் ஒரு சிறுகதை மட்டும் எழுத அனுமதிககப்படும். சிறுகதையின் முகப்புப் பகுதியில் தங்களின் முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞசல் முகவரியைத் மிக அவசியமாகக் குறிப்பிடவும். முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள் tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம். மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு). இரண்டாம் பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு). மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு). ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும் இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும். மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும். சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர் திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234; மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569; சிறுகதைப் போட்டிகளின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி தொடர்பு எண்: 09488616100. முனைவர் போ.சத்தியமூ

ஞாயிறு, 4 ஜூன், 2017

நூல் போட்டி

பரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சாலை நாகர்கோயில் -2 குமரி மாவட்டம் தொடர்புக்கு....9443225535 நன்றி - தமிழர் எழுச்சிக் குரல்