செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மன்னராட்சிக் கோரிய மீன்கள்


மீன்கள், ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தன. குட்டிகள், வளரினங்கள், முட்டையிடும் மீன்கள் யாவும் தலைமையின் மீது அதிருப்தி கொண்டன.
அக்கிணற்றில் மிகச்சிறிய மீனான நெத்திலி முதல் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக் கெண்டை,...என இருபதுக்கும் மேற்பட்ட மீனினங்கள் வாழ்ந்து வந்தன. அம்மீனினத்தில் பெரிய இனமாக புல் கெண்டை இருந்தது. அம்மீன் கூட்டத்திற்கு தலைவனாக இருந்தது. அம்மீனிற்கு எதிராகத்தான் மற்ற மீனினங்கள் தன் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தன. சிறு, பெரும் அலைகளை உருவாக்கி கிணற்றைக் கொந்தளிக்க வைத்தன. சிறிய மீன்கள் வாயை ‘ஆ...’வெனத் திறந்து வானத்தைப் பார்த்து செத்ததைப்போல காட்டி தன் அதிருப்திகளைக் காட்டின. நடுத்தர மீன்கள் வால் துடிப்புகளால் தண்ணீரை அடித்தும் பெரிய மீன்கள் தாவிக்குதிப்பதுமாக இருந்தன.
இக்கூட்டத்திற்கு தலைவனாக இருக்கின்ற புல் கெண்டை கிணற்றின் அடியில் உயிர் வாழக்கூடியது. கிணற்றின் சகதிக்குள், துடிப்புகளைப் புதைத்து ஓய்வு எடுப்பவை. சகதி தரும் குளுமையும் அதன் கொழகொழுப்பும் அதற்கு இனிமைாக இருப்பவை. அம்மீன் தன் பிள்ளைக்குஞ்சுகளுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தன. ஒரு நாளைக்கு ஓரிரு முறை மட்டும் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்து தன் மற்ற மீன்கள் எப்படி இருக்கின்றன எனப் பார்வை பார்த்துவிட்டு செல்லும். அவ்வளவேதான்! அதன் ஆட்சியும் அதிகாரமும்...
கிணற்றில் தண்ணீர் இருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டு வருவதைப்பற்றி தலைமை மீன் அக்கறைக்கொள்ளாமல் இருந்தது. இரையில்லாமல் குட்டி மீன்கள் செத்துக்கொண்டு வருவதையும் பெரிய மீன்கள் பசி பொறுக்க முடியாமல் சிறிய மீன்களைத் தின்று கொண்டிருப்பதையும் தலைமை மீன் அறிந்து வைத்திருக்க வில்லை.
அக்கிணற்றில் வசித்த மீன்களில் உயர்குடி மீனாக விரால் இருந்தது. அம்மீன் கிணற்றின் மேல் மட்டத்திற்கும் தரைக்குமாகச் சென்று வரும் மீன் அது. தரை மட்டத்திலிருருக்கும் குளிர்ச்சியும், மேல் மட்டத்திலிருக்கும் இதமான வெப்பமும் அதற்குத்தேவை என்பதால் அம்மீன் கீழ் நோக்கிச் செல்வதும் பிறகு மேலே வருவதுமாக இருந்தது. அவ்வாறு சென்று திரும்பும் பொழுது அது எடுத்துகொள்ளும் கால விரயத்தை வைத்து பார்க்கையில் கிணற்றின் நீர் மட்டம் குறைந்திருப்பது அதற்குத் தெரிய வந்தது.. ஒரு நாளைக்கு முப்பது தடவை மட்டும் கிணற்றின் தரைக்கும் வாய்க்குமாக போய்த்திரும்ப முடிந்த அம்மீனால் இப்பொழுதெல்லாம் ஐம்பது தடைவைக்கு மேல் சென்று திரும்ப முடிவதை வைத்து அதிர்ச்சி அடைந்தது. தன் இனம் சந்திக்கப்போகும் பேரழிவை மற்ற மீன்களுக்கு தெரியப்படுத்த அவசரக்கூட்டம் கூட்டியது.
‘மீன்களே.....நாம் நமக்கான இரையை மட்டும் இழந்து வரவில்லை. நாளுக்கு நாள் நாம் உயிர் வாழத் தேவையான தண்ணீரையும் இழந்து வருகிறோம்....’ எனச் சொன்னதும் மற்ற மீன்கள் நடக்க இருக்கும் பேரழிவை நினைத்து பெரிதாக வாயைத் திறந்து திகைத்தது.
‘ ஒரு காலத்தில் நாம் வசிக்கக்கூடிய இக்கிணற்றில் வாய் வரைக்கும் தண்ணீர் இருந்திருக்கிறது...’ என்றது ஒரு மீன்.
‘ காக்கைக் குருவிகள் கிணற்றின் கட்டையில் உட்கார்ந்துகொண்டு தலையை நீட்டி தண்ணீர் குடித்திருக்கிறது...’ என்றது இன்னொரு மீன்.
‘ கிணற்றைச் சுற்றிலும் மீன்கொத்திகளும், கொக்குகளும், காக்கைகளும் நம்மை உணவாக்கிக்கொள்ள ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது. நம் மூதாதையர்களில் பலர் பறவைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள்....’
ஒரு மீன் சினத்தால் கொதித்தது. ‘ என்னச் சொல்கிறாய்....!’
‘ நம் மூதாதையர்கள் இரையானதைப்போல அவர்களும் நமக்கு இரையாகி இருக்கிறார்கள்....’
‘ என்னச் சொல்கிறாய்....’
‘ஆமாம்...ஒரு ஆடு தண்ணீர் குடிக்க கிணற்றிற்குள் தலையை நீட்டப்போய் அந்த ஆடு தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது. அது செத்து அழுகி மிதந்திருக்கிறது. அழுகிப்போன அவ்வாடு நம் தாத்தா, பாட்டிகளுக்கு இரையாகியிருக்கிறது. நம் மூதாதையர்கள் வயிறு முட்டத் தின்று பெருத்திருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க வீசிய வளையை அறுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று...?’ அழுவதைப்போல பேசி நிறுத்தியது விரால் மீன்.
விரால் மீனின் பேச்சைக் கேட்டதும் மற்ற மீன்கள் துள்ளிக்குதித்தன. துடிப்புகளால் வயிற்றில் அடித்துகொண்டன.
‘ இதைப்பற்றியெல்லாம் நம் தலைமை கவலைப்பட்டிருக்கிறதா. இல்லையே...’ ஒரு மீன்.
‘ எவ்வளவு நம்பிக்கையில் புல் கெண்டை மீனை தலைவனாகத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அம்மீன் நம்மீது ஒரு அக்கறையுமில்லாமல் எப்படி அதனால் சகதிக்குள் உல்லாச வாழ்க்கை வாழ முடிகிறது. ஜனநாயகத்தை நம்பி இனி பயனில்லை....’
‘ஆமாம்...ஜனநாயகம் தோற்றுவிட்டது’
‘ வேண்டாம்...வேண்டாம்....ஜனநாயகம் வேண்டாம்....’
‘ மாட்டோம்...மாட்டோம்....புல் கெண்டை மீனை தலைவனாக ஏற்ற மாட்டோம்...’
மீனின் போர்க்குரலால் கிணறு குலுங்கியது. தண்ணீரை வாறி அடித்தது. கிணற்றுக்குள் நடக்கும் விந்தையைப் பார்த்து அவ்வழியே பறந்து சென்ற கொக்குகள் கிணற்றுக்குள்  எட்டிப்பார்த்தன.
‘ மீன்களே...என்ன பிரச்சனை. ஏன் உங்களுக்குள் இத்தனை போராட்டம்....?’ கொக்கு கேட்டது.
‘ எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை....’
‘ ஏன் இல்லை....’
‘ எங்கள் தலைவர் எங்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருக்கிறார். கிணற்றின் ஆழத்திற்குச் செல்பவர் எப்பொழுதாவதுதான் திரும்பி வருகிறார். எங்களுக்கு போதுமான அளவிற்கு இரை இல்லை. நாங்கள் சுற்றி வர இட வசதியில்லை. எங்கள் தேவைகளைப் பற்றி புல் கெண்டை ஒரு கவலையும் படவில்லை.....’
நெத்திலிப்பொடி சொன்னது. ‘ எங்கள் இனத்தில் பலரை நாங்கள் இழந்து தவிக்கிறோம்....’
‘ ஏன்...?’
‘ பெரிய மீன்களுக்கு எடுக்கும் பசிக்கு சிறிய மீன்களாகிய நாங்கள் இரையாகி விடுகிறோம்....’
‘ உங்கள் பிரச்சனைகளைக் கேட்க கவலையாக இருக்கிறதே...நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்....உங்களுக்கு உதவி செய்கிறேன்...’ என்றது கொக்கு.
‘ எங்களுக்கு ஜனநாயகத் தலைவர் வேண்டாம். மன்னர்தான் வேண்டும்....’ என்றது ஜிலேப்பி.
‘ ஆமாம்...மன்னன்தான் வேண்டும்...’ என ஜிலேப்பியின் கோரிக்கையை ஆதரித்தது கெளுத்தி.
‘ மன்னனே வேண்டும்...மன்னனே வேண்டும்.....’
மீன்களின் ஆர்ப்பாட்டத்தை கொக்கு காது கொடுத்துக்கேட்டது. பிறகு சொன்னது ‘ மன்னன் என்றால் வெளியிலிருந்துதான் வருவான் பரவாயில்லையா.....?’
மீன்கள் ஒற்றைக் குரலில் சொன்னது ‘ பராவாயில்லை....எங்களுக்கு மன்னன்தான் வேண்டும்...’
‘எனக்குத் தெரிந்து ஒரு மன்னன் இருக்கிறார். அவரை நான் அழைத்து வருகிறேன்...’ என்ற கொக்கு . பறந்து சென்றது.
மறுநாள் காலையில் நான்கு கொக்குகள் கிணற்றிற்கு வந்தன. அதன் கால்களில் மீன்களுக்கான மன்னன் இருந்தது.
‘ மீன்களே....’ கொக்கு அழைத்தது. மீன்கள் அனைத்தும் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்தன.
‘ உங்களுக்காக ஒரு மன்னனை அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்களை அரவணைத்து வைத்துகொள்வார். உங்களுக்குத் தேவையான அளவிற்கு பாதுகாப்பு அளிப்பார்....’ என்றவாறு நான்கு கொக்குகளும் நான்கு மூலையில் நின்றுகொண்டு மன்னனை கிணற்றுக்குள் தள்ளியது.
மன்னன் கிணற்றுக்குள் விழுந்ததும் நீரின் அதிர்வு பெரிய அளவில் இருந்தது. கிணறு ஒரு  குலுங்கு குலுங்கி நின்றது. மேலும் கீழுமாக அலை அடித்தது. மீன்கள் பயந்து விலகித் தெறித்தது. கிணற்றின் தரை மட்டத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த புல் கெண்டை தனக்கு எதிராக வந்திருக்கும் மன்னனை மேற்பரப்பிற்கு வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டது.
கொக்கு கிணற்றுக்குள் தள்ளிய மன்னன் வளை. அது கிணற்றுக்குள் பரந்து விரிந்திருந்தது. அதன் உடம்பு சல்லடையாக இருந்தது. அதன் மீது சிறிய , நடுத்தர மீன்கள் துள்ளிக்குதித்தன. தனக்கு பெரியப்பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு பெருமைக்கொண்டன. அதன் மீது எப்படி ஏறிக்குதித்தாலும், கடித்தாலும் மன்னனுக்கு கோபம் வராததைக் கண்டு பூரித்தன.
இத்தனைக் காலம் ஒற்றுமையாக வாழ்ந்த மீன்கள் புது மன்னன் வந்ததும் இரண்டு பிரிவுகளாயின. சில மீன்கள் மட்டும் மன்னனின் அரவணைப்பில் இருந்தன. மற்றவை மன்னனின் பரந்த வெளிக்கு கீழாக வாழத் தொடங்கின. மேல் மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் கீழ் மட்டத்திற்கும், கீழ் மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் மேல் மட்டத்திற்கும் பயணிக்க முடியாத நிலையானது.
‘ நாங்கள் இனத்தால் உயர்ந்தவர்கள். பாருங்கள் நாங்கள் கிணற்றின் ஆழத்தில் வாழ்கிறோம்...’ என்றது ஆழத்தில் வசித்த மீன்கள்.
‘ இல்லையில்லை....நாங்கள்தான் உயர்ந்தவர்கள். எங்களைப் பாருங்கள் மன்னர் அரவணைக்கிறார்....’ என்றது மேல் மட்ட மீன்கள்.
‘ நாங்களே பெரியவர்கள்...’
‘ இல்லையில்லை...நாங்களே உயர்வானவர்கள்....’
கிணறு மறுபடியும் குலுங்கியது. நீர் மட்டத்தில் அலை அடித்தது. தண்ணீர் நாலாபுறமும் தெறித்தது. கிணற்றில் நடக்கும் ஆரவாரத்தைப்பார்த்து தன் படை சூழ கொக்குகள் வந்தன. தலையை நீட்டி கிணற்றைப் பார்த்தன.
‘ ஆம்...எங்களுக்கு மன்னராட்சி பிடித்திருக்கிறது...’ என்றன மீன்கள்.
‘ ஏன் பிடித்திருக்கிறது....’ - கொக்கு.
‘ எங்கள் வாழிடம் எங்களோடும் அவர்கள் வாழிடம் அவர்களோடும் இருக்கிறதே....’ என்றது ஒரு வகை மீன்.
‘ எங்கள் இருவரில் யார் பெரியவன் என்றே தெரியவில்லை...அது ஒன்றுதான் குறை...’ என்றது இன்னொரு மீன்.
இரு மீன்களுக்கிடையில் சண்டை எழுந்தது. சண்டையைப் பார்த்ததும் கொக்கிற்கு கோபம் வந்தது.  அப்படியானால் நான் அழைத்து வந்து மன்னனை நானே திரும்ப அழைத்துகொள்கிறேன்...’ என்றவாறு மன்னனை மேலே இழுத்தது.
மன்னனைத் தழுவிக்கொண்டிருந்த மீன்கள் மேலே மேலே செல்வதைக்கொண்டு ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தன.  அதன் கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அத்தனையும் செத்து மடிந்தன.
கிணற்றுக்குள் இருந்த நெருக்கடி சற்று தளர்ந்தது என சில மீன்கள் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சந்தோசமடைந்தன. சில மீன்கள் மட்டும் தன் குஞ்சுகளை இழந்து தவித்தன.
ஓரிரு நாட்களுக்குப்பிறகு மறுபடியும் மீன்கள் ஒன்று கூடின. இனி நமக்குத் தேவை ‘ ஜனநாயக ஆட்சியா, மன்னராட்சியா...?’ எனக் கலந்து ஆலோசித்தன.
ஒரு மீன் சொன்னது. ‘ புல் கெண்டை போல ஜனநாயகத் தலைவன் வேண்டாம். வளையைப்போல மன்னனும் வேண்டாம்..’ என்றது.
‘ அப்படியானால் நாம் யாரை மன்னனாகத் தேர்ந்தெடுப்பதாம்...’ என மீன்கள் முழித்துகொண்டிருக்கையில் ஓர் உருவம் பெருத்த சத்தத்துடன் கிணற்றுக்குள் விழுந்தது. அவை விழுந்த அதிர்வு கிணறு முழுமைக்கும் இருந்தது. மீன்கள் நாலாபுறமும் தெறித்து விலகி ஓடின.
கிணற்றிற்குள் விழுந்த உருவம் மேல்மட்டத்திற்கும் தரை மட்டத்திற்குமாக சென்று திரும்பிக்கொண்டிருந்தது. ‘ ஆம்...நாம் நமக்கொரு மன்னர் கிடைத்துவிட்டார்....’ என மீன்கள் அவ்வுருவத்தைப்பார்த்து கொண்டாடின. ‘ நீங்கள்தான் எங்களை ஆள வேண்டும்..’ என அந்த உருவத்திடம் கோரிக்கை வைத்தன.
அக்கிணற்றிற்கு புதிதாக வந்திருக்கும் மன்னன் ‘ஆமை’. தன்னைச்சுற்றியிருந்த மீன்களை ஒரு பார்வைப் பார்த்த ஆமை ‘ சரி...உங்களை நான் ஆள்கிறேன்...’ என சம்மதம் தெரிவித்தது.
ஆமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தது. கை கால்களை நீட்டி, மடக்கி பேசி அசத்தியது. ‘ உங்களைப்போல நானும் இந்த தண்ணீரை நம்பித்தான் இருக்கிறேன்...’ என்றது. ‘ நான் உங்களில் ஒருவன்...’ என்றது. ஆமையின் பேச்சு மீன்களுக்கு ரொம்பவே பிடித்துபோய் விட்டது.
மீன்கள் ஆமையுடன் பேசுவதும் அதன் மீது ஏறிக்குதித்து விளையாடுவதுமான இருந்தன. ஆமை மீது ஏறிக்கொள்ளும் மீன்களை ஆமை எல்லா உலகத்திற்கும் அழைத்து சென்றது. இப்படியொரு மன்னனை இதற்கு முன் தாம் பார்த்ததில்லை என மீன்கள் பெருமை பேசிக்கொண்டன.
ஆமை தினம் தினம் மீன்களிடம் நலம் விசாரித்தது. அக்கிணற்றிருக்குள் அத்தனை மூலைகளுக்கும் சென்று இளப்பாறி வந்தது.  தான் பார்த்த மூலைகளின் சிறப்பை மீன்களுக்கு தன் பேச்சுத் திறமையால் சொல்லி
அசத்தியது.
மீன்களுக்கு தன் மன்னனை ரொம்பவே பிடித்துபோய் விட்டது. அப்படி பிடித்துப்போக இன்னொரு காரணமிருந்தது. ஒவ்வொரு நாளும்  மீன்களுக்குத் தேவையான உணவை ஆமை கொடுத்து வந்தது. ஆமை தினமும் தின்று செறித்து, வெளியாக்கும் மலம்தான் மீன்களுக்கான உணவு. ஆமையின் மலத்தைத் தின்று ருசி கண்ட மீன்கள் இனி ஆமை இல்லாமல் ஒரு நாளும்  உயிர் வாழ முடியாது என்கிற முடிவிற்கு வந்தன. ஆனால் ஆமை அதற்கான உணவை அதுவே தேடிக்கொண்டது. ஆமையின் உணவு மீன்களின் முட்டைகளாக இருந்தன.

நூல் விமர்சனம்

தமிழவனின் நாவல் இது. சரித்திரத்தில் படிந்த நிழல்கள். காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்.
 ஒரு புனைவு நாடு தொகிமொலா.அரசன் பச்சை ராஜன். ராணி பாக்கியத்தாய். இவர்களை மையமாகக் கொண்டு நாவல் நகர்கிறது. முழுக்கவும் புனைவு. நாடு அற்றவர்கள், மொழி அற்றவர்கள் , ஒருவனை நாடு அற்றவனாக மாற்ற முனையும் வன்மம், ரஷ்யா உடைந்ததற்கு பிறகு ஒரு நாட்டினரின் கீழ் வந்த ஐ.நா மன்றம் என அனைத்யையும் இந்நாவல் தொட்டுச்செல்கிறது. நூலகம் எரிப்பு , பண்பாட்டு அரசியலில் கால் வைப்பது என இந்ராவல் பேசாத பொருள் இல்லை. எதிரிகளின்', 'வம்சத்தை', வேரறுத்தல்' இம்மூன்று பதங்களும் நாவலில் கவனிக்கும் படியாக இருக்கிறது.
நாவல் முழுக்கவும் கிளைக்கதைகள். நாவலின் மையமான தொகிமொலா தமிழர்களின் நாடான இல்லாத ஒன்றை நினைவுப்படுத்துகிறது. நல்ல நாவல் எழுத்தாளரின் புனைவை புரிந்துக்கொள்ள முரண்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
'

வியாழன், 9 பிப்ரவரி, 2017

சவப்பெட்டி

காக்கை பிப்ரவரி  இதழில் பிரசுரமாகியிருக்கும் சிறுகதை
அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு இரு வேறு செய்திகள் எனக்கு வந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானச் செய்தி அப்பாவின் ஆரம்பக்கால உதவியாளர் சேதுராமன் சொன்னச் செய்தியாக இருந்தது. அப்பா மீது வைத்திருந்த நன்மதிப்பின் பேரில் அவர் அந்த செய்தியைச் சொல்லியிருந்தார். அச்செய்தியைச் சொல்கையில் அவருடைய நா தழதழத்ததை விடவும் அச்செய்தியை உள்வாங்கிய என் ஒற்றைச் செவி நடுங்கிற்று. அவர் ஒரு கெஞ்சிய முன் கோரிக்கையுடன் அச்செய்தியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். விக்கல் எடுப்பதைப்போன்று வார்த்தைகளை உருட்டினார். ‘ தம்பி நான் சொன்னேனு மட்டும் யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நான் உயிரோடு இருக்க முடியாது. உன் அப்பா ஆஸ்பஸ்திரியில சேர்த்த மறுநாளே இறந்திட்டார்ப்பா. அதற்குப்பிறகும் உன் அண்ணன்கள் உன் அப்பாவிற்கு வைத்தியம் பார்த்திக்கிட்டிருக்கான்க. உனக்கு எதிராக என்னவோ சூழ்ச்சி நடக்குதப்பா....’ இதை அவர் சொல்லி முடிக்கையில் அவரது வார்த்தைகள் எனக்குள் கனத்தன.
அப்பா இறந்துவிட்டார் என்கிற செய்தியை விடவும் இறந்ததற்கு பிறகும் உன் அண்ணன்கள்  வைத்தியம் பார்க்கிறான்க....என்கிற செய்திதான் என்னை பெரிதும் உலுக்கியது.
துக்கத்திற்குள் ஏமாற்றம் நுழைந்து அரித்தது. அப்பா இருக்கின்ற திருச்சிக்கும் நான் இருக்கிற லண்டனுக்கும் இடையில் மூன்று நீரோட்டக் கடல் இருக்கிறது. ஒரு நாள் முழுக்கவும் பறந்து தரையைத் தொட வேண்டிய விமானத்தூரத்தை என் நினைவுகள் லண்டனுக்கும் திருச்சிக்கும் இடையில் செல்வதும் திரும்புவதுமாக இருந்தது. இரத்தவோட்டம் கடலடி வெப்ப நீரோட்டத்தைப்போல ஓடிக்கொண்டிருந்தது .
நான் அணைத்து வைத்திருந்த அலைபேசியை எடுத்து அண்ணன்களுக்கு அழைப்பு விடுத்தேன். சேதுராமன் சற்று நேரத்திற்கு முன் சொல்லி வைத்த செய்தி உண்மையாக இருந்துவிடக்கூடாது என்கிற உள் வேண்டுதலுடன் என் அழைப்பு நீண்டுகொண்டிருந்தது. ஒன்றிரண்டு அழைப்புகளுக்கு பிறகு அக்காள் குரல் என் செவியில் விழுந்தது. அழைப்பை எடுத்ததும் அவள் பேசிவிடவில்லை. அவளது அமைதியுடன் கூடிய சுவாசக்காற்று என் காதிற்குள் தகித்தது. அவளது அமைதியும் இழுத்துவிடும் சுவாசமும்  என்னை கலவரப்படுத்தின. சேதுராமன் சொன்னச் செய்தி உண்மைதானோ....? அப்பா இறந்துதான் விட்டாரோ...? கேள்விகள் எனக்குள் கொம்பு முளைத்து தலையைச் சிலுப்பின.
‘ அக்கா... அப்பா எப்படி இருக்கார்...?’
‘ இம்.....நல்லா இருக்கார்....’
என் சிந்தனை முள் ஒரு புள்ளியில் நின்றது. பிறகு அப்படியும் இப்படியுமாக அசைந்தது. பிறகு ஓடத்தொடங்கியது. ‘ அக்கா... உண்மையைச் சொல். அப்பா எப்படியிருக்கார்....அவருக்கிட்ட நான் பேச வேணும்...’
‘ அப்பா நல்லா இருக்கார். ஆனால் அவருக்கிட்ட இப்போதைக்கு பேச முடியாது...’
‘ ஏன்....?’
‘ நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்...’
‘ அப்பா கூட யார் இருக்கா...?’
‘ யாருமில்ல...’
‘ உதவிக்கு..!’
‘ நர்ஸ்க பார்த்துக்கிறாங்க...’
‘ சாப்பாடு கொடுக்கிறது....பணிவிடை செய்றதெல்லாம்...?’
‘ நர்ஸ்க தான்....’
‘ அப்பாவை நீ பார்த்தீயா...?’
‘ பார்த்து ஒரு மாதக்காலம் ஆச்சுப்பா...’
‘ ஏன் அவ்ளோ நாளாச்சு....!’
‘ நர்ஸ்ங்க யாரையும் உள்ளே விட மாட்டேங்கிறாங்களே. ’
‘ அப்பாக்கிட்ட யாருமே இல்லையா...?’
‘ பெரிய அண்ணன் மட்டும் இருக்கு...’
அக்காள் சொல்லும் எதையும் என்னால் நம்ப முடியவில்லை. இத்தனை நாள் சொன்ன அதே பதில்களைத் தான் அப்பொழுதும் சொன்னாள். முந்தைய பதில்களுக்கு இல்லாத கனம் இப்பொழுது இருந்தது.
‘ அக்கா....எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போலிருக்கு....அப்பாவை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வை..’
‘ நர்ஸ்கள் தான் யாரையும் உள்ளே விட மாட்டேங்கிறாங்களே....பிறகு எப்படியாம் போட்டோ எடுக்கிறது...?’
‘ நர்ஸ்க்கிட்ட சொல்லி எடுக்கச்சொல்லு...’
‘ நர்ஸ்க்கிட்ட என்னக் கேட்க முடியுது. எரிந்து விழுறாங்க....’
அக்காவின் பதில்கள் என்னை பயமுறுத்தின. என்னால் ஓரிடத்தில் இருப்புக்கொள்ள முடியவில்லை. அப்பா உண்மையாகவே இறந்துதான் விட்டாரோ...மூன்று பேரும் சேர்ந்து அப்பாவின் மரணத்தை மூடி மறைக்கிறார்களோ....என் சிந்தனை ஓட்டம் புருவங்களுக்கிடையில் குவிந்து மனதில் கனத்தது.
அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு எத்தனை அழைப்புகள் எனக்கு. ‘ அப்பா தேறிவிட்டார்...’
‘அப்பாவைப் பற்றி இனி கவலையில்லை...’
‘ பணம் அனுப்பி வை ’
‘ போதாது’
‘ இந்த நம்பருக்கு அனுப்பு’
‘ இன்னும் கொஞ்சம் அனுப்பு...’
இப்படியாக எத்தனையோ அழைப்பு, கெஞ்சல்கள், கோரிக்கைகள்.
ஒவ்வொரு முறை நான் பணம் அனுப்பும் பொழுதும் நம்பிக்கைக்குரியவர்களிடம் விசாரித்தப் பிறகுதான் அனுப்பி வைத்தேன். ஒரு உறவினர் இப்படி சொன்னார் ‘ உன் அப்பா சுகமாக இருக்கார்’
‘ நீங்க அப்பாவைப் பார்த்தீங்களா...?’
‘ பார்க்க முடியலை. டாக்டர் சொன்னார்....’
ஒன்றுவிட்ட உறவு அத்தையிடம் விசாரித்தேன். ‘ நல்ல இருக்கார்ப்பா...’
‘ பார்த்தீங்களா...?’
‘ இல்லையேப்பா...நான் ஆப்பிள் அது, இதென நிறைய வாங்கிக்கிட்டு போனேன். அத்தனையையும் வாங்கிக்கிட்டு என்னை வெளியே அனுப்பிட்டாங்க...’
அடுத்து என்னுடன் படித்த சிதம்பரம், முத்து, வேலக்கண்ணு எனப் பலரிடமும் அப்பாவைப்பற்றி விசாரித்து பார்த்துவிட்டேன். அத்தனைப்பேரிடமிருந்து ஒரே பதில்தான் வந்தது.. ‘ நல்லா இருக்கிறார்..ஆனால் நான் பார்க்கலை...’
அப்பாவிற்கு போட்டியாக தொழில் செய்தவர்களெல்லாம் அப்பாவை பார்க்க வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை. தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் வாசலோடு நின்று திரும்புவதைப்போல அவர்கள் நின்று திரும்பி சென்றிருக்கிறார்கள். நான் பெரிய அண்ணன் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன். பெரிய அண்ணன் எதோ ஒரு நாளுக்கு பிறகு பேச்சை முற்றிலும் நிறுத்தியிருந்தார். அவருக்கு எப்பொழுது அழைப்பு விடுத்தாலும் அக்காள்தான் எடுத்து பேசுபவளாக இருந்தாள். அக்காள் மீது எனக்கு கோபம் வந்தது. அதுநாள் வரைக்கும் காட்டாத உச்சப்பட்சக் கோபத்தைக் அவள் மீது காட்டினேன். ‘ அப்பாவிற்கு என்ன பிரச்சனை. டாக்டர் என்னச் சொல்கிறார்...?’
‘ காய்ச்சல்தானாம்...’
‘ இப்ப எப்படி இருக்கார்..?’
‘ நல்லா இருக்கார்...’
‘ எப்ப டிஸ்ஜார்ஜ்....?’
‘ ஒரு வாரமாகுமாம்....’
‘ ஏன் அவ்ளோ நாள்...?’
‘ வைரஸ் காய்ச்சலாம். தொற்றுமாம். அதனால் ஓய்வில் இருக்கணும்ங்கிறார்....’.
இப்படியாக என்னக் கேள்விக் கேட்டாலும் நான் நம்பத் தகுந்த தகவலையே சொல்லிக்கொண்ட வந்தவள்; ஒரு நாள் நடுநிசியில் அழைத்து அழுகைக்கு இடையில் ‘ தம்பி...அப்பா  நம்மள விட்டுட்டு போயிட்டாருடா....’ என்றதும் சேதுராமன் சொன்ன அந்த ரகசியம்தான் என் முன் வந்து நின்றது.
நேற்றைக்கு இதே அக்காள்தான் சொன்னாள். ‘ நன்றாக இருக்கிறார், செய்தித்தாள் வாசிக்கிறார், சாப்பிடுகிறார், எல்லாரையும் நலம் விசாரிக்கார்,...’ ஆனால் இப்பொழுது சொல்கிறாள் ‘ அப்பா இறந்திட்டார்....’
நான் அக்காவிடம் கேட்டேன். ‘ நேற்றைக்கு வரைக்கும் நல்லா இருக்கார்னு சொன்னீயேக்கா....?’
‘ இருந்தார்....திடீர் அட்டாக். போயிட்டார்ப்பா...’அவள் குலுங்கி அழுதது என்னை குலுக்கியது. என் உதடுகள் தடித்தன. அலைபேசியை காதிலிருந்து எடுக்காமல் உறைய நின்று போனேன்.
அப்பா என்னுடன் லண்டனில் இருந்த காலம் வரைக்கும் அவருக்கு ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை. ஒரு மாத்திரையால் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் நிலையில் தான் அவரது உடல்நிலை இருந்தது. நன்றாக நடந்தார். சிரித்தார். பேசினார். லண்டனில் இருந்தவாரே சொந்த நாட்டில் நடக்கும் வியாபாரத்தைக் கவனித்துகொண்டார். அவரது நடை உடை பேச்சு இவற்றை வைத்துப்பார்க்கையில் இப்போதைக்கு அவரை எந்தவொரு நோயும் அவ்வளவு எளிதில் நெருங்கிவிடாத நிலையில்தான் இருந்துவந்தார். திருச்சிக்கு சென்றதும் திடீர் நோய்த்தொற்றும் அதன் வழி மரணமும் என்னை பெருதும் முடக்கியது.
அப்பா பெயரில் எவ்வளவு சொத்து இருக்கிறது! அவரது வங்கிக் கணக்கில் பல கோடிகள் புரண்டும், இருந்தும் அப்பாவைக் காப்பாற்ற முடியாத ஏமாற்றம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. அப்பாவிற்கு தெரிந்து எத்தனை நண்பர்கள், எத்தனை மருத்துவர்கள்.....இத்தனைப் பேர் இருந்தும் அவர்களில் யாரேனும் ஒருத்தரை வர வழைத்து சிகிச்சைக் கொடுக்க முடியவில்லையே என்கிற கவலை எனக்குள் குறுகுறுத்தது.
அப்பாவின் மரணத்தில் என்னவோ ஒரு மர்மம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. அப்பா உயிருடன் இருந்திருந்தால் இத்தனை நாட்களில் எத்தனையோ முறை என்னிடம் அவர் பேசியிருக்கச் செய்வார். என்னைப் பார்த்தாக வேண்டுமென அடம் பிடித்திருப்பார். என்னை வரவழைத்திருப்பார்.
அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு மூன்று மக்கள். இரண்டு அண்ணன்கள், ஒரு அக்காள். இரண்டாம் மனைவிக்கு ஒரே மகன் நான். முதல் மனைவியின் மக்களை விடவும் என் மீதுதான் அவருக்கு பற்றுதலும், பாசமும் இருந்தது. எனக்கு பிறகு நீதான் என் தொழிலை எடுத்து நடத்த வேண்டுமென பல விருந்து உபசரிப்புகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தொடக்கத்தில் அவரது தொழில் தொடர்ந்து நஷ்டத்தில் மூழ்கி வந்திருக்கிறது. நான் பிறந்ததற்கு பிறகுதான் அவரது தொழில் ஏறுமுகமானது. ஆகையால் தொழிற்வாரிசாக என்னை தொடர்ந்து உச்சரிப்பவராக இருந்தார். அவர் சங்கத் தலைவராக தேர்வானதும் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதும் என் பிறப்பிற்கு பிறகுதான்.
நான் அலைபேசிக்கு  பெரிய அண்ணன் வந்திருந்தார். நான் தொடுத்ததும் சொன்னேன் ‘ அண்ணா... மருத்துவமனை மீது வழக்கு தொடுக்கலாம்...’
‘ இத்தனை நாள் சிரத்தை எடுத்து அப்பாவிற்கு வைத்தியம் பார்த்ததற்காகவா....?’
அண்ணனின் பதிலொற்றியக் கேள்வி என்னை எச்சரித்தது. அவரே கேள்விகள் கேட்டார். பதிலையும் சொல்லிகொண்டார். நான் பேசுவதாக இருந்த அத்தனை சொற்களையும் மாத்திரை விழுங்குவதைப்போல விழுங்கிக்கொண்டேன்.
என் நண்பர்களில் பலரும் என் தொடர்புக்கு வந்தார்கள். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் என்னை பயமூட்டியது. ‘ உன் அப்பா என்னக்காரியம் செய்துவிட்டு செத்துப்போயிருக்கார் தெரியுமா...?’
‘ என்னச் செய்திருக்கார்....?’
‘ மொத்த சொத்துகளையும் மூத்த  தாரத்து பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு செத்துப்போயிருக்கார்...’
நான் லண்டனில் இருந்தபடியே ஒரு வழக்கறிஞரைப் பிடித்தேன். அவர் பிரபலமானவர். அவர் சற்று நேரத்திற்குள் என் தொடர்புக்கு வந்தார்.‘ பெரிய வீடு பெரிய மகன் பெயருக்கும் மற்ற இரண்டு வீடுகளும் சின்ன மகன், மகள் பெயருக்கும் எழுதப்பட்டிருக்கிறது’
‘ வங்கி இருப்பு..?’.
‘ மகள் பெயருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது...’
‘ நிலங்கள்...?’
‘ மொத்த நிலங்களும் முதல் மனைவியின் பி்ள்ளைகளுக்கே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது...’
‘ தொழிற் வாரிசு....?’
‘ அதைப்பற்றி ஒரு தகவலும் இல்லை...’
‘ என் அப்பாவா அப்படி எழுதியிருக்கார்....’
‘ ஆமாம்...’
‘ அப்பா பெயரில் அந்த உயில் இருக்கிறதா....?’
‘ ஆமாம் அவர் பெயரில்தான் எழுதப்பட்டிருக்கிறது...’
‘ கையெழுத்து போட்டிருக்கிறாரா....?’
‘ இல்லை. ரேகை வைத்திருக்கிறார்....’
‘ ரேகை செல்லுமா....?’
‘ சிகிச்சை எடுத்துகொண்டலவ்வா எழுதியிருக்கிறார். செல்லும்....’
இத்தனையையும் சொல்லிக்கொண்டு வந்த வழக்கறிஞர் கடைசியாகச் சொன்ன தகவல்தான் எனக்குள் கலவரம் மூட்டியது.
‘ ஒரு ரகசியச் செய்தி. உண்மையோ பொய்யோ.... உன் அப்பா சடலத்திற்கு மலர் மாலை வைத்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.....’
‘ என்ன...?’
‘ உன் அப்பாவின் இரண்டு கைகளில் ஒரு கை இல்லையாம்.....’
என் பாதம் என்னை நழுவிக்கொண்டு செல்வதைப்போலிருந்தது. ‘ என்னச் சொல்றீங்க. ஒரு கை இல்லையா...!’
‘ ஆமாம். வலது கை....’
‘ நீங்க பார்த்தீர்களா....?’
‘ யாரும் அவரது உடலுக்கருகில் செல்ல முடியவில்லை...’
‘ விரல்கள் கட்டப்பட்டிருக்கணுமே....’
‘ மேலே வேட்டி போர்த்தப்பட்டுள்ளது....’
எனக்கு தலைச்சுற்றியது. அப்பாவிற்கு நிகழ்ந்திருக்கும் அகோர மரணத்தை நினைக்கையில் என் இரத்தம் கொதித்தது. சுவற்றில் முட்டிக்கொள்ளணும் போலிருந்தது. என் உதவியாளன் ஓடி வந்தான். அப்பா மரணத்தின் மீது இருக்கும் மர்மத்தை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அக்காவிடம் தொடர்பு கொண்டேன்.
‘ அக்காள்...நான் வந்ததும் அப்பாவை அடக்கம் செய்யலாம்....’
‘ டிக்கெட் கிடைச்சிருச்சா....?’
‘ ம்...கிடைச்சிருச்சு....’
‘ வந்து சேர எத்தனை நாளாகும்....?’
‘ நான்கு நாளாகும்....’
‘ அவ்ளோ நாள் வரைக்கும் வைத்திருக்க முடியாது....’ அக்காவின் பதில் திடமாக இருந்தது. எனக்கு அவள் மீது கோபம் வந்தது. ‘ இத்தனை நாட்கள் வைத்திருந்தீர்கள். இன்னும் நான்கு நாளைக்கு எனக்காக வைத்திருக்க முடியாதா...?’
‘ என்னப் பேசுறாய் நீ....!’
‘ எல்லாம் எனக்குத் தெரியும். நான் வரும் வரைக்கும் நீங்கள் அப்பாவை அடக்கம் செய்யாமல் வைத்திருக்கத்தான் வேணும்.....’
‘ முடியாது. அடக்கம் செய்வதற்கான எல்லா வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கிறது’
‘ விடமாட்டேன்....’
‘ உன்னால் முடிந்ததைச் செய்துகொள்....’
தொடர்பு துண்டித்துகொண்டது. நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அலுவலகத்தின் நான்கு சுவர்களும் என்னை வெறிக்கப்பார்ப்பதைப்போலிருந்தன.
அங்கு இருந்தபடியே சில சட்ட நடவடிக்கைகளில் இறங்கினேன். அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தன. ஒரு மணி நேரத்திற்கு முன் என் வழக்கறிஞராக இருந்தவர் சற்று நேரத்திற்கு பிறகு விலை போயிருந்தார். இணைய வழி புகார் முதலில் ஏற்கப்பட்டு பிறகு நிராகரிக்கப்பட்டது. எனக்காக நேராகச் சென்று புகார் மனு கொடுக்கத் தயாரானவர்கள் சில மணிக்கு பிறகு பின்வாங்கிவிட்டார்கள். என்னுடன் தொடர்பில் இருந்த பலரும் என் அலைபேசி தொடர்பை துண்டித்துகொண்டார்கள். பலர் அவர்களது அலைபேசியை சில நாட்களுக்கு அணைத்து வைத்தார்கள். நான் வீட்டிற்கு சென்று சட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய ஒன்றைத் தவிர மற்ற அணைத்து வழிகளும் நிரந்தரமாக அடைக்கப்பட்டிருந்தன.
நான் நாடு திரும்புதலை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. லண்டனிலிருந்து சென்னைக்கு திரும்பியதும் நண்பர்களின் உதவியோடு சில நபர்களை கூட அழைத்துகொண்டு வந்தேன். எனக்குள் இரண்டு விதமான சிந்தனை ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நேராக வீட்டிற்கு செல்வதா, இல்லை அப்பாவை அடக்கம் செய்த இடத்திற்கு செல்வதா....? வீட்டிற்கு சென்றால் என்னவெல்லாம் நடக்கும்....? என்னால் வீட்டிற்குள் நுழைய முடியுமா...? அனுமதிப்பார்களா.....? அக்காள் என்னை கட்டிப்பிடித்து அழுவாளா...? அவள் அழுவதை நான் தடுக்க வேண்டுமா....? தடுக்க முடியுமா....?
ஊர் பங்காளிகள், உறவினர்கள் யார் பக்கம் நிற்பார்கள்...? நான் புகார் கொடுத்தால் யாரேனும் இரண்டு பேர் எனக்கு பக்கபலத்திற்கு வருவார்களா...? அப்பா கை பற்றிய விடயத்தைச் சொன்னால் என் புகார் ஏற்கப்படுமா...? சாட்சிக்கு ஒருவரேனும் கிடைப்பானா...? அவர்களை வைத்துகொண்டு மூன்று பேர்களை என்னால் எதிர்க்க முடியுமா...? சட்டம் என் பக்கமாகத் திரும்புமா...? குறுகிய காலத்திற்குள் மர்மத்தை உடைத்துவிட முடியுமா...? நிஜமாகவே அப்பாவின் இரண்டு கைகளில் ஒரு கை வெட்டி எடுக்கப்பட்டது உண்மைதானா...? அதை நம்பலாமா....? ஒரு வேளை நான் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வீண் என்றாகி விட்டால்....!
நான் திருச்சியை நெருங்கையில் இரவு ஒரு மணியை நெருங்கியிருந்தது. இந்நேரத்தில் வீட்டிற்கு செல்வதை விடவும் அப்பாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்வதே துரிதமென இருந்தது.
என் கூட வருகின்ற மூன்று பேருடன் ஊருக்குத் தெரியாமல் சுற்றி வளைத்து அப்பாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றேன். அவ்விடத்திற்கு செல்கையில் மணி மூன்று ஆகியிருந்தது. விடிவதற்குள் புதைக்குழியைத் தோண்டி எடுத்து சவப்பெட்டியை வெளியில் எடுத்து பிரித்து அப்பாவின் கையைப் பற்றிய ரகசியத்தை ஊர்ஜிதப்படுத்திவிட வேண்டும் என்கிற வேட்கையுடன் கையோடு கொண்டு வந்திருந்த மண்வெட்டியால் வெட்டிக் கொத்தினேன்.
ஒரு பக்கம் நரி ஊளையிடும் அரவம் எனக்குள் கலவரப்படுத்தியது. இன்னொரு பக்கம் நாய்களின் குரைப்பு. நான் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. உடம்பில் வியர்வைகள் சொற்றிட மேட்டைக் கறைத்து புதைக்குழியைத் தோண்டினேன்.

பொழுது மெல்ல விடிந்துகொண்டு வந்தது. பொழுதின் வெளிச்சத்தில் சவப்பெட்டி தெரிந்தது. நான்கு பேரும் சேர்ந்து சவப்பெட்டியை மெல்லத் தூக்கினோம். சவப்பெட்டி மேலே வருவதும் வழுக்கிக்கொண்டு கீழே செல்வதுமாக இருந்தது. பொழுது முழுவதுமாக விடிகையில் சவப்பெட்டி என் பிடிக்கு வந்திருந்தது.
சவப்பெட்டி தரையில் வைத்து சவப்பெட்டி மேலிருந்த மண்ணை தட்டி விட்டேன். முகத்தில் வழிந்த வியர்வைகளை புறங்கையால் துடைத்துகொண்டு வேகமாக மூடியைத் திறந்தேன். சவப்பெட்டிக்குள் அப்பா இல்லை. பதிலாக மூன்று பெருச்சாளிகள் இருந்தன.
- அண்டனூர

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சிறுகதைப்போட்டி

சென்னை புரோபஸ் கிளப் கலைமகள்  இணைந்து நடித்தும் சிறுகதைப் போட்டி -2017
பரிசுகள்
10000,5000,3000
மூத்தக் குடிமக்களின் பிரச்சினைகளையொட்டி கதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
கடைசி தேதி மே 1 2017
முகவரி
கலைமகள் காரியாலயம்
1,சமஸ்கிருத கல்லூரித் தெரு
மயிலாப்பூர்
சென்னை 600004


ஒரு இலட்சம் பரிசு

சிறந்த நூல்களுக்கு ஒரு இலட்சம் பரிசு
மரபுக்கவிதை, புதுக்கவிதை,கட்டுரை , சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம்
3 படிகள் அனுப்ப வேண்டும்.
2016 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் மட்டும்.
கடைசி தேதி ஏப்ரல் 10 2017.
கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
420  E , மலர் காலனி
அண்ணாநகர்
சென்னை 600040

திங்கள், 6 பிப்ரவரி, 2017

தமிழ்க் கவிதை நூல்களுக்கான போட்டி
இரு படிகள்
கடைசித்தேதி - பிப்ரவரி  10
கவிஞர் பே.இராஜேந்திரன்
தபால் பெட்டி எண் 103
பாளையங்கோட்டை
திருநெல்வேலி  627002

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

மில்லி கிராம் மாத்திரை

மனித மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையொன்று தன்னிடம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் வாசலில் நின்றுகொண்டிருந்தார். மலச்சிக்கலும், வாயுத்தொல்லையும் நீண்ட நாட்கொண்டு எனக்கு இருந்து வருவதை யாரோ ஒருவர் அவரிடம் சொல்லிருக்க வேணும். அல்லது நான் நடக்கையில் , உட்கார்ந்து எழுந்திருக்கையில் என் பின் வாசல் வழியே காற்று உடைபடுவதை அவர் கவனித்திருக்க வேணும். அல்லது ஏதோ ஒரு பொதுயிடத்தில் அவரது நாசியை அடைக்கும் படியாக என்னுடைய கரியமில வாயு வெளியேறியிருக்க வேணும்....

மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தவர் முகத்தை ‘உம்’மென வைத்திருந்தார். இந்தக்காலத்திலும் இப்படியொரு மாத்திரை இருக்கிறதென்று தெரியாமல் ஏன்தான் வீதியெங்கும் மலத்தைக் கழித்து தெருக்களை நாறடித்து வைத்திருக்கிறீர்களோ.... எனச் சமூகத்தை நினைத்து கோபப்படும் மனிதராகத் தெரிந்தார். சண்டைக்கலை நடிகர் ஜெட்லியின் முகவெட்டும் உடல்வாகும் அவரிடமிருந்தது. சிவந்த உடம்பு, மீசை மழிக்கப்பட்ட உதடுகள். இமையும் புருவங்களும் மழுங்கிப்போயிருந்தன.
தலையில் உயரமான தொப்பி அணிந்திருந்தார். ‘ பிசினஸ்...பிசினஸ்....ஒன்லி பிசினஸ்.....’ எனச்சொல்லிக்கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனி, ஔரங்கசீப்பிடம் வணிகம் பேசிய தொப்பியாக அது இருந்தது. கையில் தடித்த ஒரு புத்தகமிருந்தது. முதுகுப்புறத்தில் ஒரு நீண்டப்பை தொங்கிக்கிடந்தது. ஜீன்ஸ், பேண்ட், சர்ட், ஷு, டை....இத்யாதிகளால் பார்க்க அவர் ஒரு தேர்ந்த வியாபாரியைப் போலிருந்தார்.
திடகாத்திரமான உடல்வாகு அவருடையது. இந்த மாத்திரையை வாங்கிக்கொள்ளவில்லையென்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் என்னச் செய்கிறேன் பார்.....என மிரட்டும் தொனியில் என்னைப்பார்த்தார். வாசலில் நின்று கொண்டிருந்தவர் ஒருவர்தான் என்றாலும் அவருக்குள் நான்கு பேர்கள் ஒழிந்திருந்தார்கள். பல மொழிகள் பேசுவதில் தேர்ந்தவராக இருந்தார். ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், குஜராத்தி நான்கு மொழிகள் அவருடைய உதடுகளில் வளைந்து நெழிந்து ஓடியது. தமிழ் உச்சரிப்புகளில் திருநெல்வேலி நெடி இருந்தது.
அவர் என் மிக அருகினில் நெருங்கியிருந்தார். அவரிடமிருந்து ஒருவிதமான நறுமணம் கசியத்தொடங்கியது. இந்திய குடும்பங்களுக்கு பரீச்சையமான ப்பேர் அன்ட் லவ்லி, ட்ரீம் ப்ளெவர் - பான்ஸ் பவுடர், கோகுல் சாண்டல், க்ளினிக் ப்ளஸ்,.....போன்ற வாசணை போலில்லாமல் யாராலும் யூகித்துவிட முடியாத நறுமணமாக அவ்வாசணை இருந்தது. வாய்த்திறந்து பேசுகையில், மெல்லச் சிரிக்கையில் , ஒவ்வொரு செய்கைக்கும் ஒவ்வொரு வாசணை அவரிடமிருந்து கசிந்துகொண்டிருந்தது.
நான் அவரிடம் பேச்சுக்கொடுக்கவில்லை. தெரியாத்தனமாக ஒரு விளம்பரத்திற்கு மிஸ்டுகால் கொடுக்கப்போய் நான் பட்டப்பாடு போதும். தலையில் மயிர்கள் முளைத்தப்பாடில்லை. மொத்தமாக உதிர்ந்தப்பாடுமில்லை. அந்த  அனுபவம் என்னை மேலும் ‘உஷார்’ படுத்தியது.
வாசலில் நின்றிருந்தவர் பீப்பாய் கணக்கில் மாத்திரையைப்பற்றி அளந்துகொண்டிருந்தார். ‘ நீங்க...நினைக்கலாம்....மலமாவது....மணப்பதாவது.....?’ என்கிற கேள்வியைக் கேட்டுவிட்டு சிரித்துகொண்டிருந்தார். மலத்தைப்பற்றி பேசுகையில் நாணமாவது, மடமாவது..... நான் முகத்தை  ‘உம்’மென வைத்துகொண்டேன்.
‘ இங்கே...பாருங்க சார்.....தேன் இருக்கிது இல்லையா......தேன்.... அது தேனீயோட மலம்....ஆனால் மணக்குது பார்த்தீங்களா.....’
என் இமைகள் ‘படக்’கெனத் திறந்திருக்க வேணும். அதை அவர் கவனித்திற்க வேணும். நின்றுகொண்டிருந்தவர் என் அருகினில் வந்து உட்கார்ந்துகொண்டார். கீழேதான் உட்கார்ந்தார் என்றாலும் அவரது உட்காருதலில் வியாபாரத்தனம் இருந்தது. கையில் வைத்திருந்தப் புத்தகங்களைக் கீழே வைத்தார். முதுகில் சாய்ந்துகிடந்த பையை எடுத்து மடிக்குள் வைத்துகொண்டார். புத்தகத்தை விரல்களால் ‘சரசர...’வெனப் புரட்டினார். தாழம்பூ வாசணையைப்போல ஒருவித வாசணை அதற்குளிலிருந்து வந்தது. பையைத்திறக்கையில் இன்னொரு வாசணை வந்தது. ஒரு உறையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து மேலுறையைப் பிரித்து என்னிடம் நீட்டி நுகர்ந்துப்பார்க்கச் சொன்னார். நான் மலத்தை வாங்குவதைப்போல மாத்திரையை வாங்கி தயக்கத்துடன் நுகர்ந்துப்பார்த்தேன். அவரது உடம்பு, ஆடை, புத்தகத்திலிருந்து கசியும் நறுமணங்களின் கதம்பமாக அவ்வாசணை இருந்தது.
‘ எப்படி சார் இருக்கு வாசணை...?’
அவர் என்னக்கேள்வியைக்கேட்டாலும் பதில் எதுவும் சொல்லக்கூடாதென இருந்தேன். வியாபாரிகளை சந்தையை விட்டு விரட்டுவதற்கான ஒரு வழி அவர்களிடம் வாயை மூடிக்கொண்டு இருப்பது....
‘ மணக்குதா...இல்லையா.....?’
‘ இம்....’
‘தேனீ வயிற்றுக்குள் இருக்கும் ஒரு ஹார்மோனை எடுத்து அதிலிருந்து இந்த மாத்திரை தயாரிக்கப்பட்டிருக்கிறது....’
‘ ஊகூம்...’.
அவர் வாயினை என் காதிடத்திற்கு கொண்டு வந்து ஒரு முறை நாலாபுறமும் சுற்றிப்பார்த்துவிட்டு சொன்னார் . ‘ நீங்க விடும் டர்.....மணக்குமா சார்.....?’
‘ இம்....?’
‘ குசு....குசு.....மணக்குமானு கேட்கிறேன்.....’
‘ ஊகூம்.......’
‘ நாறுமில்ல.....?’
‘ இம்....’
‘ ஆனால் நான் விடுகிறது மணக்கும்....’ என்றவாறு பிட்டத்தை மெல்லத் தூக்கினார். அவர் தூக்குவதற்கும் அவருடைய மலப்புழை கிழிவதற்கும் சரியென இருந்தது. ‘ டர்..........ர்.’ கண்களை இறுக மூடிக்கொண்டு காற்றினை உள்ளே இழுத்து வெளியே விட்டார். சுவாசித்துப்பாருங்க....மணக்குது பார்த்தீங்களா.....?’
நான் நாசியை இறுகப்பிடித்துகொண்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து விரல்களை எடுத்தேன். ஒரு நறுமணம் என் நாசிக்குள் இறங்கி நுரையீரலை நிரப்புவதைப்போலிருந்தது. இதற்கு முன் எங்கேணும் உணர்ந்திட முடியாத நறுமணமாக அது இருந்தது.
‘ இப்ப என்னச் சொல்றீங்க....?’
நான் ஒன்றும் பேசவில்லை. ஒரு மைக்ரான் அளவிற்குக்கூட வாயைத் திறக்கவில்லை. அவர் கையில் வைத்திருந்த புத்தகத்தை மெல்ல விரித்தார். உயர் தரமான காகிதத்தினாலான புத்தகமாக அது இருந்தது. புத்தகம் முழுமைக்கும் கோட், சூட் அணிந்த சீமான், சீமாட்டிகள் அவருக்கே உரித்தான அதிகப்படியான சிரிப்பை உதிர்த்துகொண்டு கை குலுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்கள்.
‘ இப்ப என்னச் சொல்றீங்க.....?’
‘ நான் சொல்வதற்கு ஒன்றுமில்லையே...’ என்றேன்.
என்னை பேச வைத்துவிட்ட திருப்திக்கு அவர் வந்திருக்க வேணும். அவர் என்னை ஓர் இரையைப் பார்ப்பதைப்போலதான் பார்த்தார். ஒரு கையேட்டினை எடுத்து அதில் கட்டம் கட்டப்பட்டிருந்தச் செய்தியைக் காட்டினார். ஆங்கிலத்திலிருந்த அச்செய்தியை வாசித்தார். இன்னொரு ஏட்டில் அதே செய்தி ஹிந்தியில் பிரசுரமாகியிருந்தது. அதையும் வாசித்துக்காட்டினார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் இந்த மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதாக ஒரு செய்தி இருந்தது. ஒபாமா எப்பொழுதாவது அம்மாத்திரையை எடுத்துகொள்கிறார் என்றும் இருந்தது. கிளிண்டன் ஒரு முறை இந்தியாவின் வழியே பாகிஸ்தானிற்கு செல்கையில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷரப்பிற்கு இந்த மாத்திரையை கொடுத்ததாக இருந்த கட்டம் கட்டிய இன்னொரு செய்தியைக் காட்டினார். அச்செய்தியில் பில்கிளின்டன் முஷரப் இருவரும் கைக்குலுக்கிக்கொண்டிருந்தார்கள். இருவரின் கை குலுக்களுக்குள் இருந்த இடைவெளியில் தெரிவது இந்த மாத்திரைதான் என்றார். நான் இருவரின் முகங்களையும் அவர்களுக்கிடையேயான கைக்குலுக்களையும் பார்த்துகொண்டிருந்தேன். இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம் எழுந்தது. இந்தியாவில் இருக்கையில் இந்த மாத்திரையை நம் பிரதமருக்கு கொடுத்தாரா...இல்லையா....என்கிற சந்தேகம்தான் அது. எனக்குள் எழுந்தது நியாயமான சந்தேகம்தான் என்றாலும் அதை நான் கேட்க நினைக்கவில்லை. இப்படியொரு சந்தேகத்தைக் கேட்க வைப்பதன் மூலம் எனக்குள் அவர் எப்படியும் நுழைந்துவிடலாம் என அவர் நினைத்திருக்கலாம் இல்லையா....!  என் ஆட்காட்டி விரலை என் முகத்திற்கு நேராக நீட்டி என்னை நான் உஷார் படுத்திக்கொண்டேன்.
‘உலக கோடீஸ்வரன்களில் முதலிடம் யார் தெரியுங்களா....?’
‘ யார்....?’
‘பில்கேட்ஸ்...’
‘ இன்னும் அவர்தானா....?’
நான் அப்படிக்கேட்டதும் என்னை அவர் ஒரு ஏளனப் பார்வையில் பார்த்தார். வியாபாரத்தனமாக ஒரு சிரி சிரித்துகொண்டார்.
‘ அவர் ஒரு நாளைக்கு மூன்று வேலை இம்மாத்திரையை எடுத்துக்கொள்வதா’க பெருமைப்பூரித்தார். ‘இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஐ.நா சபையில் நடந்தேறும் முக்கியக் கூட்டங்களில்  உலகத் தலைவர்களுக்கு இம்மாத்திரை கொடுக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டினரின் கழிப்பறைகள் மணப்பதற்கு இதுதான் காரணம். இதே மாத்திரை சீனர்கள் கள்ளச்சந்தையில் இறக்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாத்திரைகள் இந்த அளவிற்கு மணத்தை கொடுப்பதில்லை...’
நான் மாத்திரையை வாங்கி தயாரித்த வருடம், தொழிற்சாலையின் பெயரைப் பார்த்தேன். மாத்திரை அட்டையில் காலாவதி நாட்களுக்கு இன்னும் ஒரு வருடக்காலமிருந்தது. மாத்திரையிலும் அதன் அட்டையிலும் அமெரிக்காவின் இறகு விரித்த கழுகு சின்னம் இருந்தது.
‘ செப்டிக் டேங்க் பக்கத்தில் இருக்கோ...’ நாசியை இறுகப்பொத்திக்கொண்டு துலாவினார்.
‘ இம்....’ என்றேன் நான்.
‘இவ்ளோ நாற்றத்தோடு எப்படி வசிக்கிறீங்க.....’ என்றவர் ‘இம்மாத்திரையைச் சாப்பிட்டுப் பாருங்க....அப்பறம் சொல்வீங்க.....’ என்றவாறு ஒன்றிரண்டு மாத்திரைகளைப் பிரித்தார்.
‘ ஒரு மாத்திரையைப் போட்டுப்பாருங்கள்....’ என்ற அவர் ஒரு மாத்திரையை எடுத்து கையை நீட்டச்சொல்லி உள்ளங்கையில் வைத்தார். மாத்திரை குழந்தைகள் கழிக்கும் மலத்தின் நிறத்தில் இருந்தது. மஞ்சளும் கறுப்பும் கலந்து ஒரு பிசிறுமில்லாது ஒரு முழு வட்டத்தில் இருந்தது. நான் அதை விழுங்கவும் முடியாமல் திருப்பக் கொடுக்கவும் முடியாமல் கையில் வைத்தபடி உட்கார்ந்திருந்தேன்.
‘ என்ன சார்...யோசனை....வாயில போட்டுக்கோங்க....’
‘ இந்த மாத்திரை எவ்வளவு....?’
‘ இந்த மாத்திரைக்கு நீங்க பணம் தரவேண்டியதில்லை...சாம்பிள்... தண்ணீ வேண்டியதில்ல. சப்பி சாப்பிற மாத்திரை. மாத்திரையோட ருசி எச்சில்ல கலந்து வயிற்றுல கலக்கணும்...அப்பத்தான்.....காலையில போகிற வெளிக்கு மணக்கும்.....’
எவ்வளவு நேரம்தான் நான் மாத்திரையை கையில் வைத்துகொண்டிருப்பது. மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டேன். பஞ்சு மிட்டாய் கரைவதைப்போல மாத்திரை எச்சிலில் கரைந்து இதுவரைக்குமில்லாத இனிப்பில் எச்சி்ல் தித்தித்தது. கற்கண்டின் சுவையைப் பத்தால் பெருக்குவதைப்போல் அதன் சுவை இருந்தது. அந்த மாத்திரை கரைந்து தொண்டைக்குள் இறங்கிய ஒரு மணி நேரத்திற்குப்பிறகும் எச்சில் இனித்துக்கொண்டே இருந்தது.
‘ நல்லா இருக்கே.....’
‘ அமெரிக்கா மாத்திரை. நல்லா இல்லாமல் இருக்குமா....’
‘ எவ்வளவு....?’
‘ ஒரு மாத்திரை நூறு ரூபாய்...’
‘ ஒரு மாத்திரையா....!’
‘ அமெரிக்க மாத்திரை சார்.....வாட், மதிப்புக்கூட்டு வரி,இறக்குமதி வரி....னு ஏகப்பட்ட வரிகள் இம்மாத்திரை மேல் இருக்கு சார்....’
‘ உங்களுக்கு எத்தனை வேணும் சார்....’
‘ வேணாம்.....சும்மா கேட்டேன்.....’
ஓர் அமெரிக்கன் ஆப்பிரிக்கனை இப்படித்தான் ஏளனமாகப் பார்ப்பான் எனும் படியாக ஒரு பார்வைப் பார்த்தார்.
‘ நம்மூர் ஜனங்கள் ஒன்ன மட்டும் புரிஞ்சிக்கிற மாட்டேங்கிறாங்களே ஏன் சார்.....?’
‘ என்ன புரிஞ்சிக்கிற மாட்டேங்கிறாங்க....?’
‘ வியாதிக்கு மருந்து சாப்பிடுற நம்ம ஜனங்க வருமுன் காக்கும் மாத்திரையைக் கொடுத்தால் சாப்பிட மாட்டேங்கிறாங்களே...?’
அவர் என்னைப் பார்த்துகொண்டு கண்களைக் கூட சிமிட்டாமல் கேட்டிருந்த தொனி என் அடிவயிற்றைக் கலக்கியது. ‘ எனக்கு வியாதி எதுவும்  தொற்றியிருக்கா என்ன...?’ - கேட்டேன்.
‘ பின்னே இல்லையா....?’ என்றவாறு அவர் ஒரு அப்பாவித் தனமாகப் பார்த்தார்.
‘ என்ன வியாதி...’ என்றேன்.
‘ உங்க வீட்டு செப்டிக் டேங்க் நாற்றத்தைச் சுவாசிக்கிறப்பதான் தெரியுதே....நீங்க வியாதியில பூத்து,காய்த்து, காய் கனி கொடுக்கும் மரமென......’
நான் என் சுயமரியாதைக்கு இழுக்கு வந்துவிட்டதைப்போல உணர்ந்தேன்.
‘ நீங்க .....எங்கே சார் ஒர்க் பண்றீங்க....?’
‘ வெளியுறவுத் துறையில......’
‘ ஆபிஸர் கேடர்....?’
‘ இம்...’
‘ மீட்டிங்க்ல இருக்கிறப்ப டர்....வந்துச்சினா என்ன செய்வீங்க.....?’
அவருடையக் கேள்வி மிக முக்கியமானக் கேள்வியாக எனப்பட்டது. ஆனால் என்னப்பதில் சொல்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.
‘ பார்த்தீங்களா....உங்களுக்கிட்ட பதில் இல்ல....இந்த மாத்திரையை சாப்பிட்டீங்கனு வச்சிக்கோங்க. நீங்க எப்ப வேணுமானாலும் டர்...ர் விடலாம்.....’
நான் ஆடாமல் அசையாமல் அவரையே பார்த்துகொண்டிருந்தேன்.
‘ மணக்கும் சார்....உங்களுக்கும் கீழ் வேலைப்பார்க்கிறவங்க ரொம்பப் பெருமையா நினைப்பாங்க சார்....’
‘ டர்...நாறத்தானே வேணும்....’
‘ ஏன் நாறணுங்கிறேன்....? ஏன் சார் நாறணும்.....சட்டம் எதுவும் அப்படிச் சொல்லுதா....? இந்தியாவில நூறு விஐபிகள் இந்த மாத்திரையைச் சாப்பிடுறாங்க. அவங்கதான் அமெரிக்காவுக்கு போறதும் வாறதுமா இருக்காங்க....அவங்க விடுகிற டர்....பேழுற மலம் நாறாதப்ப நம்ம மலம், டர்...மட்டும் ஏன் நாறணுங்கிறேன்... ஏன் சார் நாறணும்.....?’
‘ இந்த மாத்திரைய யாரெல்லாம் எடுத்துக்கிறாங்க....?’
‘ வட இந்திய ஹீரோ, ஹீரோயின்ஸ், சென்ட்ரல் மினிஸ்டர் கொஞ்சப் பேர்....அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமா....வியாபார நோக்கமா....போறவங்க, வாறவங்க.....’ என்றவர் கையில் வைத்திருந்த செய்தித்தாளினை எடுத்து காட்டினார். எனக்கு வியப்பாக இருந்தது. நடிகர், நடிகைகளுடன் நெருக்கமாக நின்று கைக்குலுக்கியபடி அந்த மாத்திரை வியாபாரி நின்றுகொண்டிருந்தார். அவர் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து அலைபேசியை எடுத்தார். யூடியூப்பைத் திறந்தார். ஒரு நடிகை ஹிந்தியில் கால், கை, தொடை, பிட்டத்தை ஆட்டியப்படி சிலாகித்துகொண்டிருந்தார்.
அவருடைய முக நூலைத்திறந்துக்காட்டினார். முகநூலின் முகப்பு அம்மாத்திரையின் விளம்பரமாக இருந்தது. தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்களில் நடிக்கும் பலரும் அவரது முகநூலில் வரிசைக்கட்டி நின்றார்கள். ப்ளாக்கைக் காட்டினார். ட்வீட்டர், வாட்ஸ்அப்,...என பலவற்றிலும் அவருடைய சிரித்த முகம் இருந்தது. பலரும் அவரிடம் மாத்திரைக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள்..
அவர் அலைபேசியைக் காட்டிக்கொண்டிருக்கையில் எனக்கு ‘டர்...’ வந்தது. என்னுடைய ‘டர்....’ அவருடைய ‘டர்...’ரைப்போல மணத்திருக்கவில்லை.
‘ பார்த்தீங்களா சார்.....இப்படி நாறலாமா.....?’
அவர் என்னைப்பார்த்து அப்படி கேலியாகக்கேட்டதும் ‘ பத்து மாத்திரை கொடுங்கள்....’ என்றேன்.
‘ பத்து வராது சார்....வாங்கினால் எட்டு....பதினாறு....இருபத்து நான்கு, முப்பத்திரண்டு....’
‘ எட்டு தாங்க....’
‘ என்ன சார் நீங்க....பதினாறாக வாங்கிக்கிறுங்க....’
‘ அவ்ளோ பணம் இல்லையே ’
‘ டிஸ்கவுன்ட்ல தாறேன் சார்....’
மாத்திரைகளை ஒரு அழகான  அட்டைப்பெட்டியில் வைத்துக்கொடுத்தார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டார். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச்சொன்னார். என் முகவரியை வாங்கிக்கொண்டார். ஆதார் எண், வங்கிக்கணக்கு எண்களைக் குறித்துக்கொண்டார்.
மாதம் பிறந்தால் சரியாக ஒன்றாம் தேதியில் கிடைக்கும் படியாக  எஸ்.டி கொரியரில் மாத்திரைகளை அனுப்பி வைத்துவிடுகிறார். நல்ல மனிதர். ஒன்றிரண்டு மாத்திரை கூடவே வைத்து அனுப்புகிறார். நான் மாத்திரை சாப்பிடுகிற விடயம் என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
வீட்டில் என் மனைவி, மகள், மகன் உட்பட பலரும் என் மலத்தைப்பற்றிதான் பேசிக்கொள்கிறார்கள். ‘மலம் மணக்க என்னதான் சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்கிறீர்கள்....?’ எனக் கேட்டு பலரும் என்னை நச்சரிக்கிறார்கள்.
ஒரு நாள் இப்படித்தான் வாசலில் தனியாக உட்கார்ந்திருந்தேன். தானொரு மாத்திரை வியாபாரி என சொல்லிக்கொண்டு ஒருத்தன் வாசலில்  நின்றுகொண்டிருந்தான். குடுகுடுப்புக்காரனைப்போல அவன் தான் கொண்டு வந்திருக்கும் மாத்திரையைப் பற்றி விளக்கத் தொடங்கினான். இப்பொழுது இந்தியாவில் குறிப்பாக மேல்த்தட்டு மக்களை ஒரு புதுநோய் ஒன்று ஆட்டிப்படைக்கிறது. அந்நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாமல் விட்டால் மற்றவர்கள் முகம் சுழிக்கும்படியான நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடும். அதுவொரு மனநோய். அதற்கான மாத்திரைதான் என்னிடம் இருக்கிறது என்பதாக ஆங்கிலத்தில் அளந்து கொண்டிருந்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. அவனாகவே மாத்திரையின் கம்பெனி, அக்மார்க் சான்று , கண்டுப்பிடித்த மருத்துவ விஞ்ஞானிகளின் பெயர்களைச் சொல்லி இம்மாத்திரையை சாப்பிட்டால் மட்டுமே அந்நோயிலிருந்து குணமடைய முடியும் என சிலாகித்தான்.
நான் பொறுமையிழந்துபோய் கேட்டேன். என்ன நோய் அது...? எதற்கான மாத்திரை உன்னிடம் இருக்கிறது...?’ என்றேன். ‘ இம்...அப்படிக்கேளுங்க...’ என்றவன் மெல்ல என் காதினை நோக்கிக் குனிந்தான். ‘ இப்ப கொஞ்ச நாளாக மேட்டுக்குடி மக்களை ஒரு நோய் ஆட்டிப்படைச்சிக்கிட்டிருக்கு. அந்த நோயால் பீடிக்கப்பட்டவங்க அவரவர் கழிக்கிற மலத்தை ஒரு குச்சியில எடுத்து நுகர்ந்து பார்க்கச் செய்வாங்க...இது ஒருவிதமான மனநோய். இந்த நோயைக் கண்டுக்கொள்ளாமல் விட்டவங்க குடும்பத்தை விட்டே தள்ளி வைக்கப்பட்டிருக்காங்க. மூக்கிற்கு போகிற மலத்த வாய்க்கு கொண்டுப்போனால் வீட்டோட வச்சிருப்பாங்களா என்ன...! ’ என்றவாறு ஒரு சிரி சிரித்தான். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

‘ உங்களுக்கு எதுவும் அதுமாதிரியானப் பிரச்சனை இருக்குதுங்களா...?’ என்றவாறு அவன் என் அருகில் நெருங்கி உட்கார்ந்தான். நான் அவன் கையில் வைத்திருந்த மாத்திரையை வாங்கி அது அமெரிக்க மாத்திரைதானா...என உறுதிப்படுத்தத் தொடங்கினேன்.