புதன், 29 ஆகஸ்ட், 2018

சத்ரபதி தாஜ்மகால்

சிறுகதை 

வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக வகுப்பறையின் கதவை இறுக அடைத்துகொண்டேன். மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். இத்தகைய இறுக அடைத்தல் எனக்குத் தேவையென இருந்தது. அருகாமை வகுப்புகளின் இரைச்சலிலிருந்து என் வகுப்பு மீளவும், என் சரித்திரப் போதனை அடுத்த வகுப்பிற்குக் கேட்காமல் இருக்கவும் இந்த கதவடைத்தலும் தாழ்ப்பாழ்கள் இடுதலும் எனக்கு தேவைப்பட்டிருந்தது.

நான் எந்த வகுப்பையும், எந்தப் பாடவேளையையும் யோகா இல்லாமல் தொடங்குவதில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் என் வகுப்பு மாணவர்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கும், நூறு சதம் தேர்ச்சி பெறுவதற்கும் காரணம் இந்த யோகாதான். நான் என்றேனும் ஒரு நாள் பாடம் நடத்தாமல் கூட இருந்துவிடுவதுண்டு. ஆனால் யோகா வகுப்பு நடத்தாமல்  இருந்ததில்லை. நான், என் வகுப்பிற்குள் நுழைகையில் என் வகுப்பு மாணவர்கள் தாமாகவே முன் வந்து யோகா செய்யத் தொடங்கிவிடுவார்கள். யோகாவிற்கு நான் ஒதுக்கும் நேரம் ஐந்து நிமிடங்கள். அவ்வளவே! யோகா முடிந்ததும் அடுத்து தேச நல உறுதிமொழி. நான் கண்கள் திறந்துவைத்துகொண்டு சொல்வதை மாணவர்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்வார்கள்.
‘ மாணவர்களாகிய நாங்கள்...’
‘ தேச நலனைக் கருத்தில் கொண்டு..’
‘ ஆசிரியர் சொல்லித்தரும் சரித்திரப் பாடத்தை கூர்ந்துக் கவனித்து...’
‘ அவருக்கு எந்தவொரு இடையூறும் கொடுக்காமல்...’
‘ சரித்திரத்தை ஏற்போம்...’
மாணவர்கள் கையை நெஞ்சில் வைத்தபடி சொல்லி முடித்ததும் கை, கால்களை உதறிக்கொண்டு எழுந்துவிடுவார்கள். அவர்கள் அவரவர் இருக்கையில் உட்கார இரண்டொரு நிமிடங்கள் பிடிக்கும். அதன்பிறகே நான் சரித்திரப் பாடத்தைத் தொடங்கிவேன். அன்றைய தினம் அப்படியாகத்தான் பாடத்தைத் தொடங்கியிருந்தேன்.


கடந்த வாரம் சரித்திரப் பாடத்திட்டத்தின் வழியே அகிலஇந்திய சுற்றுலா சென்று திரும்பியிருந்தோம். இந்தியாவின் மிக முக்கியமான இடங்களை நேரில் கண்டு திரும்பியதற்குப்பிறகு நான் எடுக்கும் முதல் சரித்திரப் பாடம் இது என்பதால் மாணவர்களுக்கு என் பாடத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. சரித்திர
ஆசிரியர் இன்றைய வகுப்பில் என்ன நடத்தப்போகிறார்...? சரித்திர வகுப்பில் இடம் பெறக்கூடிய சரித்திர நாயகன் யார்... என்கிற ஆவல் அவர்களிடம் கூடிவிட்டிருந்தது. 
நான் அன்றையத் தினம் வகுப்பை சுற்றுலா சென்று பார்த்து திரும்பியதிலிருந்து தொடங்கியிருந்தேன். ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து கரும்பலகையில் தடித்த எழுத்துகளால் எழுதினேன்.

 ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’

நாள், தினம், வகுப்பு, வருகை, பதிவு...என எதுவும் எழுதப்படாமல் இருந்த வகுப்பறையின் கறுப்பு நெற்றியில் இதை எழுதியதும் மாணவர்களின் மத்தியில் சலசலப்பானது. மாணவர்கள் ஒருவரையொருவர் திரும்பிப்பார்த்துகொண்டனர். சத்ரபதி சிவாஜி என்பதை சற்று பெரிய, தடித்த எழுத்துகளால் எழுதி அதை அலங்கரிக்கத் தக்கதாக மாற்றினேன். சத்ரபதி சிவாஜிக்கும் கீழ் அடிக்கோடிட்டு அதன் மேல் இரட்டை மேற்கோள் குறியிட்டேன்.

‘ இன்றைக்கு நான் நடத்தப்போகிற பாடம் மாவீரன் சத்ரபதி சிவாஜி...’ என்றதும் மாணவர்கள் அதை பின்தொடர்ந்து சொல்லத்தொடங்கினார்கள். ஒவ்வொரு மாணவனாக எழுந்து கரும்பலகையில் தடித்த எழுத்துகளால் எழுதியிருந்த ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’ என்பதை வாசிக்கச் சொன்னேன். அவர்கள்எழுந்து கையை இறுகக் கட்டிக்கொண்டு அதை வாசித்தார்கள்.

ஒரு மாணவன் கையைத் தூக்கினான். எழுந்து நிற்கவும் செய்தான். ‘ என்ன...?’ என்றவாறு அவனை நான் நிமிர்ந்து பார்த்தேன். 

‘ குரு..நீங்கள் எழுதியதில் பிழை இருக்கிறது...’ என்றான். 

எனக்கு வந்ததே கோபம்! இதுநாள் வரைக்கும் என் வகுப்பில் வந்திராத எதிர்வினை அன்றைய தின வகுப்பில் வந்திருந்தது. நான் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக அது இருந்தது. நான் கேட்டேன் ‘ எழுத்துப் பிழையா, சொற்பிழையா, பொருள் பிழையா...?’

அவன் சொன்னான் ‘ சரித்திரப்பிழை’

என் பாடத்தில் பிழைக் கண்டுப்பிடித்துவிட்ட கொண்டாட்டத்தில் அவன் இருந்தான். அந்த வகுப்பின் கடைசி இருக்கையில் அவன் உட்கார்ந்தவனாக இருந்தான். அவன் அப்படிச் சொன்னதும் மற்ற மாணவர்கள் என்னை ஒருவிதமான பார்வையில் பார்க்கத் தொடங்கினார்கள். நான் அவனிடம் கேட்டேன். ‘ என்ன பிழை...? எங்கே சுட்டிக்காட்டு பார்க்கலாம்....?’. 
அவன் சொன்னான். ‘ வசந்த மாளிகையைக் கட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி என இருக்க வேண்டும்’.

அவன் அப்படிச் சொன்னதும் மற்ற மாணவர்கள் ‘கொல்’லெனச் சிரித்தார்கள். என் வகுப்பில் நான் யாரையும் சிரிக்க அனுமதிப்பதில்லை. சரித்திரப்பாடத்தில் போருக்கும், படையெடுப்பிற்கும்தான் இடம். சிரிப்புக்கு ஏது இடம்...? நான் என் ஆட்காட்டி விரலை உதட்டிற்குக் கொண்டுச்சென்று ‘உஷ்!’ என்றவாறு அவர்களின் சிரிப்பை மிரட்டலில் குவித்தேன். அப்படியும் அவர்கள் சிரிக்கவே செய்தார்கள். என் கையிலிருந்த பிரம்புக்கம்பின் வழியே அவர்களை அமைதிக்கு கொண்டு வந்திருந்தேன். 
 
‘நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். ஆக்ரா யமுனை ஆற்றாங்கரையில் இருக்கும் தாஜ்மகாலைத்தான் சொல்கிறேன். அதைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி. அதைத்தான் கரும்பலகையில் எழுதியிருக்கிறேன் ’ என்றேன். மாணவர்கள் என்னையும் கேள்விக்கேட்ட மாணவனையும் மாறிமாறி பார்த்தார்கள். 
நான் கையில் வைத்திருந்த பிரம்புக் கம்பை கரும்பலகைக்கு கொண்டுச்சென்று எழுத்துகளைச் சொல்லி வாசித்துக்
காட்டினேன். ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’

வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவர்களும் அதைப் பின்தொடர்ந்து சொல்பவர்களாக இருந்தார்கள். கேள்விக் கேட்ட அந்த ஒரு மாணவன் மட்டும் என்னை பின்தொடர்ந்து சொல்லாமல் வெறுமென நின்றுகொண்டிருந்தான்.

‘ குரு...எனக்கொரு சந்தேகம்..’ என்றவாறு அவன் திரும்பவும் கைத்தூக்கினான். 

‘ என்ன சந்தேகம்...?’ என்றேன்.

‘ நேற்றைக்கு வரைக்கும் தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான்.. இன்றைக்கு எப்படி அது சத்ரபதி சிவாஜி ஆனது...?’

மாணவர்கள் அவனது கேள்வியில் அர்த்தம் பொதிந்திருப்பதைப் போல பார்த்தார்கள். என் கட்டமைத்திருந்த வகுப்பின் மொத்த அமைதியும் அந்த ஒரு கணத்தில் நொறுங்கிவிட்டிருந்தது. மாணவர்களின் மொத்தப் பார்வையும் என்னிடமிருந்து விலகி அவன் பக்கமாகத் திரும்பியது. நான் அவனை என் அருகினில் அழைத்தேன். ஒரு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச பயமுமில்லாமல் அவன் என் அருகே வந்து நின்றான். கையைக் கட்டச் சொன்னேன். இறுகக் கட்டினான். அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்தது. அக்கேள்வியின் வழியே தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான் என அவன் வாயால் அவனே சொல்ல வைக்க வேண்டியிருந்தது. அவனுக்கான கேள்விகளுடன் என் சரித்திர பாடத்தைத் தொடர்ந்தேன்.

‘ தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் இல்லையா....?’

‘ ஆமாம்..குரு....’

‘ தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளியில் ஒரு சிலை இருக்கிறது இல்லையா...?’

‘ ஆமாம்...குரு. இருக்கிறது.’
‘ யாருடைய சிலை அது...?’

‘ இராசராச சோழன் சிலை '

‘ அவருடைய சிலையை ஏன் அங்கு நிறுத்தியிருக்கிறார்கள்...?’

‘ தஞ்சாவூர் பெரிய கோவில் அவரால் கட்டப்பட்டது '

‘ யாரால் கட்டப்பட்டது...?’

‘ இராசராச சோழனால்...’
‘ சரியாகச் சொன்னாய்...! அடுத்து, முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றிருந்தோம். இல்லையா...?’

‘ ஆமாம்..குரு...’

‘ அணைக்கு வெளியே ஒரு சிலை இருந்ததா...?’

‘ ஆம் இருந்தது குரு’

‘ யாருடைய சிலை அது...?’

‘ பென்னி குயிக் சிலை...’

‘ முல்லை பெரியாறு அணையைக் கட்டியது யார்...?’

‘ அவர்தான் குரு..’

‘ அந்த அணையைக் கட்டியது அவர் என்பதால் அவருடையச் சிலை அங்கே நிறுவப்பட்டிருக்கிறது...’
‘ ஆமாம் குரு...’

‘ அடுத்து நாம் புதுக்கோட்டை கோர்ட் வளாகத்திற்கு சென்றோம் இல்லையா...?’

‘ சென்றோம் குரு...’

‘ வெளியே யாருடைய சிலை இருந்தது..?’

‘விஜய ரெகுநாத தொண்டைமான் சிலை  ’

‘ அக்கோட்டையைக் கட்டியது யார்...?’

‘ அவர்தான் குரு...’

‘ அடுத்து கல்லணைக்குச்  சென்றோம்...’

‘ சென்றோம் குரு...’

‘ வெளியில் கரிகாலன் சோழன் சிலை இருந்தது’

‘ இருந்தது குரு...’

‘ கல்லணையைக் கட்டியவர் கரிகாலன் சோழன்...’

‘ நிச்சயமாக குரு..’

‘ அடுத்து நாம் எங்கே சென்றோம்...?’

‘ டெல்லிக்கு சென்றோம் ...’

‘இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு யாருடைய ஆட்சிக்காலத்தில் மாற்றப்பட்டது?’
‘ வெல்லிங்டன் காலத்தில் குரு’
‘ அதற்கான அடிக்கல் நாட்டும் விழா டெல்லியில் எங்கே நடந்தேறியது..?’

‘ கொரோனஷன் பார்க்கில் குரு...’
‘அந்த பார்க்கில் யாருடைய சிலை இருக்கிறது...?’

‘ வெல்லிங்டன் சிலை குரு’

‘ அடுத்து நாம் எங்கே சென்றோம்....?’
‘ தாஜ்மகால்...’

‘ தாஜ்மகாலுக்கு வெளியே யாருடைய சிலை இருக்கிறது...?’

‘ சத்ரபதி சிவாஜி’
‘ அப்படியானால் தாஜ்மகாலைக் கட்டியது யார்...?’

என் கேள்விகளால் அவன் மட்டுமல்ல. பலரும் மிரண்டு போயிருந்தார்கள். அத்தனை நேரம் அவன் பக்கமாக இருந்த மாணவர்கள் என் பக்கத்திற்கு வந்திருந்தார்கள். என்  கடைசிக்கு கேள்விக்கு என் வகுப்பில் குற்றம் கண்டுப்பிடித்தவனால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் கையறு நிலையில் ஆயுதத்தை இழந்து சத்ரபதி சிவாஜி முன் ஔரங்கசிப் நின்றதைப்போல நின்றுகொண்டிருந்தான். அவனது நிலையைப் பார்த்து மாணவர்கள் கைக்கொட்டி சிரிப்பதாக இருந்தார்கள். நானும் அவனைப் பார்த்து சிரிக்கவே செய்தேன். அவன் எந்தவொரு சலனமுமில்லாமல் நின்றுகொண்டிருந்தான். நான் அதேக் கேள்வியை பிற மாணவர்களைப் பார்த்து கேட்டேன். ‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்...?’ அவர்கள் ஒரு சேரச் சொன்னார்கள். ‘சத்ரபதி சிவாஜி’

நான், கேள்விக்கேட்ட மாணவனின் முகவாய்கட்டையை உயர்த்தி விழிகளால் கேட்டேன். ‘ இப்ப என்னச் சொல்கிறாய்...தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதானே...?’ அவன் என்னை ஒரு கணம் துலாவிப்பார்த்தான். ‘ அப்படியானால் ஸ்ரீரங்கம் கோபுரத்திற்கு முன்னால் ஈ.வெ.ரா பெரியார் சிலை இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோயிலைக் கட்டியது அவரா குரு....?’

அவன் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு ஒன்றும் நடக்காததைப்போல நின்றுகொண்டிருந்தான். மாணவர்கள் நம் சரித்திர ஆசிரியரைப் பார்த்து இப்படியொரு கேள்வி கேட்டுவிட்டானே என்பதைப்போல பார்த்தார்கள். ஒன்றிரண்டு பேர் சிரிக்கச் செய்தார்கள். எனக்கு கோபம்தான் வந்தது. சரித்திரத்தில் கையை வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது...! நான் அவனது காதைப் பிடித்து திருகியவாறு  கேட்டேன். ‘ அடேய்....எதைக் கொண்டுபோய் எதனுடன் முடிச்சிப்போடுகிறாய்....நான் சொல்வது டெல்லி, டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியை...’ 

‘ இந்திய பாராளுமன்றத்திற்கு முன் காந்தியும், அம்பேத்கரும் சிலையாக நிற்கிறார்கள். அப்படியானால் பாராளுமன்றத்தைக் கட்டியது காந்தியும் அம்பேத்கரருமா குரு....?’

அவன் ஒரு பயமுமில்லாமல் இக்கேள்விகளைக் கேட்டிருந்தான். எனக்கு வந்திருந்த கோபத்திற்கு அவனது வாயைப் பிடித்து ஊசி நூலால் தைத்திருக்க வேண்டும். அவனது தலையில் ‘நங்’கென்று ஒரு கொட்டு வைத்தேன். ‘ என்ன சொல்ல வருகிறாய் நீ....?’

‘ குரு, எனக்கு நன்றாகத் தெரியும். நான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். பல சரித்திரக் கதைகள் கேட்டிருக்கிறேன். யமுனா ஆற்றாங்கரை தரிசு நிலத்தில் தன் காதலி மும்தாஜ் 
நினைவாக ஷாஜகானால் கட்டப்பட்டதுதான் தாஜ்மகால். அதை கட்டியவர்  சத்ரபதி சிவாஜியாக இருக்க வாய்ப்பில்லை. '

அவன் அதைச் சொல்லிவிட்டு என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான் என்  கருத்திலிருந்து  விலகப்போவதில்லை என்பதைப்போல அவன் நின்றுகொண்டிருந்தான். 

‘  இல்லை...! நான் சரித்திர ஆசிரியர். நான் சரித்திர பாடத்திற்காக தங்கப்பதக்கம் பெற்றவன். நான் சொல்வதில் ஒரு தவறும் இருக்க முடியாது. நான் சொல்வதை ஒப்புக்கொள். தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான்...’

‘ நிரூபியுங்கள்...’ என்பதைப் போல அவன்  கைகளைக் கட்டிக்கொண்டு அதே இடத்தில் உட்கார்ந்தான். 

‘ நிரூபித்தால்...?’ நான் கேட்டிருந்தேன்.

‘ ஏற்றுக்கொள்கிறேன்...’

‘ என்னவென்று..?’

‘ தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான் என்று...’

‘ திரும்பவும் அதேயேதானே சொல்கிறாய்...’

‘ உங்களால் நிரூபிக்க முடியாது...’

‘ நிரூபித்துகாட்டுகிறேன் பார்....’ என்றவாறு நான் வகுப்பை விட்டு வெளியேறினேன். 

நான் வகுப்பறையை விட்டு வெளியேறியதற்கு பிறகு அவர்கள் என்னப் பேசிக்கொள்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். கேள்விக்கேட்டவன் ஓர் அச்சமுமில்லாமல் உட்கார்ந்திருந்தான். மற்ற மாணவர்கள் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். ‘ டேய் இப்பவெல்லாம் அனைவரும் தேர்ச்சி என்பது கிடையாது. தேவையில்லாமல் நீ சரித்திர ஆசிரியரிடம் முரண்டுப்பிடித்துகொண்டிருக்கிறாய். நீ இந்த வருடம் இதே வகுப்பில் தேங்கத்தான் போகிறாய்...உன் நன்மைக்காகச் சொல்றோம். அவரிடம் முரண்டுப்பிடிக்காதே. அவர் சொல்வதை ஏற்றுக்கொள். அவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும். ஒவ்வொரு வருடமும் அவரது பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வைத்துகொண்டிருக்கிறார். நூறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கிறார். அவர் நினைத்தால் யாரையும் தேர்ச்சி பெறவும், இதே வகுப்பில் தேக்கவும் முடியும். உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். அவரிடம் மன்னிப்பு கேள். அவர் வந்ததும் தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான் என்று ஒப்புக்கொள்.....’  

நான் ஐந்து மாணவர்களுடன் வகுப்பிற்குள் நுழைந்தேன். 

வகுப்பு பழையபடி அமைதிக்கு வந்திருந்தது. கதவுகளை இறுக அடைத்து மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். மாணவர்கள் பெஞ்சின் விளிம்பிற்கு வந்திருந்தார்கள். நான் வெளி வகுப்பிலிருந்து  அழைத்து வந்திருந்த ஐந்து மாணவர்களை என்  வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். 

 'இவர்கள் ஐந்து பேரும் என் முந்நாள் மாணவர்கள். இவர்கள் கடந்த வருடங்களில் நூற்றுக்கு நூறும், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள். இவர்களை வைத்துதான் நான் தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என் நிரூபிக்க இருக்கிறேன்...’
மாணவர்கள் என் நிரூபணத்தை ஆமோதிப்பதைப்போல பெரிதாக தலையாட்டினார்கள். அவன் மட்டும் என்னிடமிருந்து பார்வையை எடுத்து அவர்களின் மீது குவிக்கத் தொடங்கினான். 

‘ நிரூபிக்கலாமா....?’ அவனைப்பார்த்து கேட்டேன்.

‘ ஆம்...’ என்றான்.

நான் அழைத்து வந்திருந்த மாணவர்களிடம் அதே கேள்வியைக்  கேட்டேன். ‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்.....?’. அவர்கள் சற்றும் யோசிக்காமல் ஒரு சேரப் பதில் சொன்னார்கள். ‘ சத்ரபதி சிவாஜி’
‘ இப்ப என்னச் சொல்கிறாய். ஏற்றுக்கொள்கிறாய் தானே..?

அவன் அப்பொழுதும் சிவாஜியை ஏற்றுக்கொள்ளாதவனைப்போல நின்றுகொண்டிருந்தான். கரும்பலகையை சுத்தமாக அழித்து அதில் ‘தாஜ்மகாலைக் கட்டியவர்’ என எழுதி அதற்கும் அருகில் கோடிட்ட இடத்தை நிரப்பும் கோட்டை இட்டிருந்தேன். அவன் என் அருகினில் வந்தான். அவனிடம் சுண்ணாம்புக் கட்டியைக் கொடுத்தேன். அவன் அதை வாங்கினான். ‘ கோடிட்ட இடத்தில் நிரப்பு’ என்றேன். அவன் மெல்ல கரும்பலகைக்கு அருகில் சென்றான். ஒரு பதிலும் எழுதாமல் நின்றுகொண்டிருந்தான். என் கையில் பிரம்பு இருந்தது. அதனால் அவனுடைய முகவாய்க்கட்டையை உயர்த்தி அதற்கானப் பதிலை சத்ரபதி சிவாஜி என்று எழுது என்றேன். அவன் அதில் ஷாஜகான் என்றே எழுதினான். 
எனக்கு வந்தக் கோபத்தில் அவனை முட்டிக்கால் போடச்சொல்லி நான்கு அடிகள் கொடுத்தேன். என்னை அவன் இத்தனைப் பேருக்கும் முன்னால் அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தேன். அவனுடைய பெற்றோரை வரச்சொல்லி இவன் எதற்கும் இலாயக்கு அற்றவன் . ஆசிரியரை மதிக்கத் தெரியாதவன். நான் சொல்லிக்கொடுக்கும் எதையும் காதுக்கொடுத்து கேட்க மாட்டேங்கிறான். அவன் போக்கில் தான்தோன்றித் தனமாகச் செயல்படுகிறான். இவன் கலகக்காரன். தேசப்பற்று அற்றவன். தேசத்தின் துரோகி. இவனை இப்பள்ளியில் வைத்திருந்தால் இப்பள்ளி விலங்காது. வீட்டில் வைத்திருந்தால் வீடு விடியாது. இவனை வைத்துகொண்டு எப்படியாம் நாட்டை நல்லரசாகவும், வல்லரசாகவும் மாற்றுவது...இவனது மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு இப்பொழுதே இப்பவே இந்த வினாடியே இந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள்...என்றவாறு அவனது மாற்றுச்சான்றிதழை எடுத்து இவன் ஒழுங்கீனவன் என்று பச்சை மையில் எழுதி அவனது முகத்தில் எறிந்தேன். 

அவனது பெற்றோர்கள் அவனுக்காக கண்ணீர் சொரிந்து மன்னிப்புக் கேட்டார்கள். எங்களுக்காக அவனை இந்த ஒரு முறை மட்டும் மன்னியுங்கள் என்றார்கள். அவனை மன்னித்தேன். ‘இனி நான் சொல்வதைக் கேட்டு ஒழுங்காகப் படிக்க வேண்டும்...’ என்றவாறு அவனைக் கண்டித்து திரும்பவும் வகுப்பில் சேர்த்துகொண்டேன்.
மறுநாள் வகுப்பிற்கு சென்றேன். 
தேர்வு நடத்தினேன். சரித்திர
வகுப்பில் நான் நடத்தியது ஒரே ஒரு செய்திதான். அந்த ஒன்றை மட்டும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது வகைக் கேள்வியாகக் கேட்டிருந்தேன். 

‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்....?’

1. சிவாஜி
 2. சத்ரபதி சிவாஜி 
3. மராட்டிய வீரன் சிவாஜி 
4. சிவாஜி ராஜே போஸ்லே

வகுப்பின் அத்தனை மாணவர்களும் நான்கில் ஒரு விடையைத் தேர்வு செய்திருந்தார்கள். அவன் ஒருவன் மட்டும் 5 என்கிற எண்ணுருடன் ‘ஷாஜகான்’ என்று எழுதியிருந்தான்.

நன்றி - தளம் ஆகஸ்ட் 2018

2018 இல் நான்

சிறந்த எழுத்தாளர் விருது



 29 ஆவது ஆண்டாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் பாரம்பரியமிக்க  புத்தகக் கண்காட்சி நெய்வேலியில் நடந்துவருகிறது. இக்கண்காட்சியில்  ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் , பதிப்பாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்குவது வழக்கம். அவ்வகையில்  இவ்வாண்டு  முத்தன் பள்ளம் நாவலாசிரியர் அண்டனூர் சுரா அவர்கள் சிறந்த எழுத்தாளராகத் தேர்வு செய்யப்பட்டு  அவருக்கு விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது. 




18.08.2017









சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.எ அரங்கில் நடைபெறும் புத்தகக் கணகாட்சியில்   பாரதி புத்தகலாயம் அரங்கில் அண்டனூர் சுராவின் கொங்கை நாவல் வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை  நடிகரும் முற்போக்கு செயற்பாட்டாளருமான தோழர் ரோகிணி வெளியிட  , மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் க.சு.சங்கீதா பெற்றுகொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை கவிஞர் ஆர்.நீலா, வெய்யில், மு.கீதா, விஜயலெட்சுமி, உமா மோகன் , மனுஷி, பெருமாள் ஆச்சி, வடுவூர் சிவ. முரளி எனப் பலரும் பெற்றுகொண்டார்கள்.

நூல் குறித்து உரையாற்றிய பேராசிரியர் க.சு.சங்கீதா , நாவலின் தலைப்பே அதிரும்படியாக இருக்கிறது,  இந்நாவல் குறித்து இரு விதமாக விமர்சனம் வர வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் கொங்கை குறித்து பேச வேண்டிய காலத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என உரையாற்றினார்.  இவரைத் தொடர்ந்து பேசிய கவிஞர் மு.கீதா, நாவல் வாசிக்க இலகுமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பெண்சார் பார்வையில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றார். ஆர்.நீலா,  குட்டி ரேவதி எழுதிய முலைகள் நூல் குறித்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் தற்போது கொங்கை வெளிவந்துள்ளது என்றார். வெய்யில், முலை என்று நாவலுக்கு பெயர் வைக்கப்பட்டு கொங்கை என மாற்றியதைச் சுட்டிக்காட்டினார். இந்நாவல் ஆவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றார். இந்நாவலை வெளியிட்ட ரோகிணி அவர்கள் , ' இதுபோன்ற விடயங்கள் பேசப்பட வேண்டிய ஒன்று. ஆண்களின் பார்வையில் கொங்கை என்பது மட்டுமல்ல, பெண்களின் பார்வையில் கொங்கை  எப்படியாக இருக்கிறது என்பதையும் இந்நாவலை வாசித்து தெரிந்துக்கொள்ள  முடியும் ' என்றார். இறுதியாக , ஏற்புரையாற்றிய நூலாசிரியர் அண்டனூர் சுரா , கொங்கை , முலை இரண்டும் ஒன்றைக் குறிக்கும் ஒத்தச் சொல் என்றாலும் வர்க்க வேறுபாடும், அதன் பொருளும் , பார்க்கும் பார்வையால் வித்தியாசம் அடைகிறது என்றவர், இந்நாவல் குறித்து பெண்களின் விமர்சனங்களை பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார். வெளியிட்ட  அன்றைய தினம் முதலே  பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்நாவல் கி.பி அரவிந்தன் நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய  குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



நவம்பர் ஞானம் இதழில் - சிறுகதைப்போட்டி முடிவு அறிவிப்பு - வீழ்வேனொன்றோ நினைத்தாய்? என்கிற எனது சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றது.







புதன், 1 ஆகஸ்ட், 2018

சிறுகதை - வீட்டில் யாருமில்லை

தான்  தங்கியிருக்கும் ஓட்டலின் கீழ்த்தளத்தில் நடிகை சுஷ்மிதா தங்கியிருக்கிறச் செய்தியை தன் அதீதமான மோப்பச் சக்தியால் கண்டறிந்தார் அமைச்சர் சுந்தரலிங்கம்.
அவர், எந்த ஓட்டலுக்குச் சென்றாலும் இங்கு யார், யாரெல்லாம் தங்கியிருக்கிறார்கள் என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக கண்டுப்பிடித்துவிடும் அசாத்திய திறமைமிக்கவர். அன்றைய தினம் நட்சத்திர ஓட்டல் இருந்த படபடப்பு, சுறுசுறுப்பு,,. இதை வைத்துப் பார்க்கையில் ஒரு நடிகர் அல்லது நடிகை இவர்களில் யாரேனும் ஒருவர்தான்  தங்கியிருக்க வேண்டும் என்பதாக ஊகித்தார். அவரது ஊகத்தின் படியே திரைத்துறையைச் சார்ந்தவர்களின் நடமாட்டம் ஓட்டலில் அதிகமாக இருந்தது. ஒரு இளைஞனைக் கூப்பிட்டு கேட்டார் ‘ தம்பி , பக்கத்தில் படம் சூட்டிங்க் எதுவும் நடக்குதா..?’
‘ இம்...’ என்றவாறு அவன் பூரித்தான்.
 ‘ ஹீரோ, ஹீரோயின்...?’
‘ வினோத், சுஷ்மிதா’
சுந்தரலிங்கம் இருவரையும் மனதிற்குள் ஓடவிட்டு பார்த்தார். சுஷ்மிதா சினிமா துறையில் உச்சத்தில் இருக்கின்ற நடிகை. அதை நினைக்கையில் அவருக்கு பெருமிதமாக இருந்தது. நேராக அவர் வரவேற்பு அறைக்குச் சென்று தானொரு அமைச்சர் என்பதைக் காட்டிக்கொள்ளாதவராகக் கேட்டார்‘ ஹீரோயின் சுஷ்மிதாவிற்கு எல்லா வசதியும் செய்து கொடுத்திருக்கிறீங்களா...?’
‘ ஆம், கொடுத்திருக்கோம் சார்...’
‘ கீழ்த்தளத்தில்தானே ரூம்...?’
‘ ஆமாம் சார்...ரூம் நம்பர் 107...’
பலே! சிரித்துகொண்டார் சுந்தரலிங்கம்.
அவர் அமைச்சராகிய நாட்கள் கொண்டே அவருக்கொரு கனவு இருந்து வந்தது. யாரேனும் ஒரு நடிகையுடன் நெருங்கிப்பழகி சினேகம் கொள்ள வேண்டும் என்று. அக்கனவை சுஷ்மிதா வாயிலாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார்.
அமைச்சர் தன்  உதவியாளரை அழைத்து கீழ்த்தளத்தில் தங்கியிருக்கும் நடிகையின் பெயரைச் சொல்லி அவரை நான் சந்திக்க வேணும் என்றார். அதைச் சொல்கையில் அவரது முகத்தில் வெட்கம் வழிந்தது.
‘ ஏற்பாடு செய்கிறேன் சார்’ என்றார் உதவியாளர்.
‘ எப்படி...?’
உதவியாளர் நெற்றியைச் சுழித்து நாசியும் கண் புருவமும் கூடுவாயில் விரல்களைக் கொடுத்து நீவி விட்டபடி ‘ ஆம், ஒரு ஐடியா இருக்கு சார்’ என்றார்.
‘ என்ன ஐடியா...?’
‘ நீங்க அவங்கக்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கணும்...?’
அமைச்சருக்கு கோபம் வந்தது. ‘ நான் பச்சை மையில கையெழுத்து போடுறவன். என்னை போயி ஆட்டோகிராப் வாங்கச் சொல்றே...?’
உதவியாளரின் ஐடியா உடைந்து சுக்கு நூறானது. அவர் வெறுமெனத் தலையைச் சொறிந்தபடி நின்றார்.
‘ இப்படி செய்தால் என்ன...?’தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டார் அமைச்சர்.
‘ எப்படி சார்...?’
‘ என்னையும், நான் பார்க்கிற இலாகாவையும் சொல்லி நான் சந்திக்க விரும்புகிற செய்தியை அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லி அழைச்சிக்கிட்டு வாயேன்...’
‘ ஒரு வேளை மாட்டேனு சொல்லிட்டா, தலைக்குனிவு உங்களுக்கில்ல, நீங்க வகிக்கிறத் துறைக்கு சார்...’
‘ எப்படிய்யா அந்தப் பொண்ணு அப்படிச் சொல்லும். நான் அமைச்சர்ய்யா...’
‘ அந்தப் பொண்ணு மட்டும் என்னவாம்., இன்றைக்கு அந்தப்பொண்ணு சினிமா இன்டஸ்ட்ரீல உச்சம்...’


‘ கலைமாமணி விருது வாங்கித்தாறேனு சொல்லி அழைச்சிக்கிட்டு வாய்யா...’
‘ அதை வாங்கிக்கொடுக்க ஆயிரம் பேரு இருக்காங்க...’
அமைச்சரால் வேறெதையும் யோசிக்க முடியவில்லை. பற்களால் உதடுகளை நீவி, முன் வழுக்கையை கைக்குட்டையால் துடைத்துகொண்டார்.
‘நீங்க அந்த பொண்ணுக்கிட்ட ஆட்டோகிராப் வாங்க ஒரு துண்டுச்சீட்ட நீட்டுறதுல்ல எவ்வளவு குறைஞ்சிடப்போறீங்க சார்...’
 ‘சரி, அப்படியேச் செய்யலாம்...’ என்றவாறு அமைச்சர் ஒரு வழிக்கு வந்தார்.
உதவியாளர் கோப்புகளை அடுக்கி ஓரிடத்தில் வைத்துவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில் நடந்தார்.
‘ ஒன் மினிட் சின்னத்துரை. நான் அந்தப்பொண்ணுக்கிட்ட தனியாகப் பேசணும்..’
‘ தனியானா...?’
‘ கதவைச் சாத்திக்கிட்டு, சன்னல சாத்திக்கிட்டு அப்படியெல்லாம் இல்ல. தனியா பேசணும். நான் பேசிக்கிட்டு இருக்கிறது வெளியே தெரிந்தாலும் பரவாயில்ல. ஆனால் நான் பேசுறது வேற யாருக்கும் கேட்கக்கூடாது....’
அறையை விட்டு வெளியேறினார் உதவியாளர். திரும்பி வருகையில் அவரிடம் ஒரு சம்மதக்கடிதமிருந்தது.

@@@
அமைச்சர் - சுஸ்மிதா இருவரின் சந்திப்பும் அந்நட்சத்திர விடுதியின் விருந்தினர் அறையில் வெகு அமைதியாக நடந்துகொண்டிருந்தது.
சுஸ்மிதா ஓரளவு உடம்பை மறைக்கும்படியான உடையில் இருந்தார். உடை நீண்டிருக்க வேண்டிய இடத்தில் சற்று குறுகியும், குறுக வேண்டிய இடத்தில் நீண்டுமிருந்தது. கால் மேல் கால் கிடத்திக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து நெற்றியில் விழும் குதிரை வால் முடிகளை விரல்களால் கோதி பின் பக்கமாக எடுத்துவிட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அமைச்சர் தன் பேச்சின் ஊடே நடிகையின் முகத்தை, கண்களை , உதட்டை, முகவாய் கட்டையை, கழுத்தை,...என இறங்கு வரிசையில் பார்த்துகொண்டு வந்தார்.
திரையில் தெரிவதைப்போல அத்தனை அழகாக அவர் இருந்திருக்கவில்லை. ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கும்படியான அழகில் அவர் இருந்தார்.
‘ எதாவது சாப்பிடுறீங்களா...?’ அமைச்சர் கேட்டார்.


‘ என்ன சாப்பிடலாம்...?’
‘ நீங்க சொல்லுங்க...’
‘ காஃபி சாப்பிடலாமே...?’
அமைச்சர் எழுந்து ‘ ரெண்டு காஃபி. நல்லா இருக்கணும். தாமதமானாலும் பரவாயில்லை....’ என்றார்.
அவர் காஃபியை தாமதமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அப்படிச் சொல்லியிருந்தார்.
அமைச்சர் முன்னே விடவும் நடிகையுடன் நெருங்கி உட்கார்ந்திருந்தார். அவரது மினிஸ்டர் வேட்டி நடிகையின் முழங்கால்களை மெல்ல உரசிக்கொண்டிருந்தது. பேச்சுக்கிடையில் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து தனது அலைபேசி எண்ணை எழுதி நடிகையுடன் நீட்டினார்.
‘ என்னது...?’
‘ என்னோட பர்சனல் நம்பர்...’
‘ எனக்குத் தாறீங்க...’
‘ எப்ப எந்த உதவி தேவைப்பட்டாலும் எனக்கு கால் பண்ணுங்க...’
நடிகை சிரித்தார். ‘ தேங்க்ஸ்’ என்றார்.
‘ ஏன் சிரிக்கிறீங்க...?’
நடிகை அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘ மினிஸ்டர்க்கிட்ட இப்படியெல்லாம் உதவிக்கேட்க முடியுமா...?’
‘ முடியாதுதான். ஆனா நீங்க என்கிட்ட கேட்கலாம்...’
நெற்றியில் கவிழ்ந்து கிடந்த பூனை முடிகளை நெற்றியில் தழுவி எடுத்து கோதிவிட்டபடி இருந்தார்.
‘ எனக்கொரு மிஸ்டுகால் கொடுங்க பார்க்கலாம்...’
அவரது மிளகாய்ப்பிஞ்சு விரல்கள் அலைபேசி எண்களில் ஊர்ந்தன.
 ‘ நான், உங்கக்கிட்ட ஒரு நாளு முழுக்கவும் பேசிக்கிட்டே இருக்கணும் போலிருக்கு...’ எனச் சொன்ன அமைச்சர் தன் கண்களால் ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க...என்பதைப்போல பார்த்தார்.
‘ நைஸ்...பார்க்கலாம்....’
‘ உங்க வீட்ல அந்த சந்திப்ப வச்சிக்கலாமா...?’
 நடிகையால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை
‘ சொந்த வீட்லதானே இருக்குறீங்க...?’
‘ இல்லை...’
‘ நான்னா உங்களுக்கொரு வீடு வாங்கித்தரட்டா...’
நடிகை பேரதிர்ச்சியில் பெரிதென வாயைத் திறந்தார். ‘ பரவாயில்லைங்க,...’ என்றவாறு எழுந்திருக்கையில் ஆவிப்பறக்க காஃபி வந்திருந்தது.
நடிகையின் சந்திப்பிற்கு பிறகு அமைச்சரின் ஓட்டங்கள் வட்டமாகியது. வட்டத்தின் மையமாக நடிகை சுஸ்மிதா இருந்தார். அமைச்சர் அடிக்கடி அலைபேசியில் துழாவுவதும், குறுஞ்செய்தி அனுப்புவதுமாக இருந்தார்.
நடிகை தன் வாயால் தன்னை வீட்டிற்கு அழைக்க எத்தகைய வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேடி குறுஞ்செய்தி அனுப்புவதாக இருந்தார். நடிகை பதிலுக்கு ‘ விரைவில்...’ எனப் பதில் அனுப்பி அவரைச் சாந்தப்படுத்துவதாக இருந்தார்.
பார்க்கலாம், விரைவில், அடுத்த வாரம், இந்த வாரம், என சொல்லிக்கொண்டு வந்த சுஷ்மிதா ஒரு நாள் ஞாயிறு தினத்தன்று மதியம் பனிரெண்டு மணிக்கு தன் வீட்டு முகவரியைக் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மிகச் சரியாக வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
அன்றைய தினம் அமைச்சரின் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டது. விரல்கள் ஹார்மோனியம் வாசித்தன. குறிப்பிட்ட நேரத்திற்கு தனியாளாக காரில் நடிகையின் வீட்டிற்குச் சென்றார்.
நடிகையின் வீடு குட்டி பங்களா அளவிற்கு இருந்தது. காரை ஓட்டிச்சென்ற அவர் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி வீட்டை ஏறிட்டுப்பார்த்தார். நடிகை பால்கனியில் அள்ளி முடிந்த சிகை அலங்காரத்தோடு, பாதி உடம்பு வெளியே தெரியும்படியான சேலையில் நின்று கையை நீட்டி அமைச்சரின் வருகைக்கு புன்னகைப்பூ காட்டினார்.
அமைச்சர் நீ அங்கேயே இரு. நான் வந்து விடுகிறேன்...என்பதைப்போல ஓடினார். வீட்டிற்குள் நடிகையுடன் இரண்டு பெண்கள் பவனி வந்தார்கள். அவர்களைப் பார்த்து ஒரு கும்பிடுப்போட்ட அமைச்சர் நடிகையை சற்று உரசியப்படி ‘ இவர்களெல்லாம் யார்...’ என்பதைப்போல கண்களால் கேட்டார். நடிகை தன் நடிக்கும் கண்களால் ‘ இவர் என்னோட அம்மா, அவர் என் பணிப்பெண்...’ என்றார்.
மதிய உணவு தயாரானது. அவருக்கான விருந்தை நடிகையே பரிமாறினார். போதும் என்கிற சொல்கிற வாக்கில் அவரது மணிக்கட்டைத் தொடுவதும், ஒரு காலால் அவரது கணுக்கால்களை உரசுவதுமாக இருந்தார். அப்பொழுது அவள் சிரித்த சிரிப்பும், வெட்கமும் அப்போதைக்கு போதுமென இருந்தது. தான் நினைத்து வந்திருந்த வேலை கை கூடாதப் பொழுது இதற்கு மேலும் என்ன வேலை,.. என்பதைப்போல அமைச்சர் அப்பங்களாவை விட்டு வெளியேறினார்.
அமைச்சர் காரைத் திருப்புகையில் சுஷ்மிதாவை ஒரு பார்வைப் பார்த்தார். ‘ என்னை நீ ஏமாற்றி விட்டாய்...’ என்பதைப்போல அப்பார்வை இருந்தது. அவரால் காரை இலகுவாக இயக்க முடியவில்லை. இரண்டொரு திருப்பம் சென்று காரை நிறுத்தி நடிகைக்கு அழைப்பு விடுத்தார்.
‘ சுஷ்மிதா...’
‘ இம்....போயிட்டீங்களா...?’
‘ என்ன விளையாடுகிறாயா...?’
‘ என்னச் சொல்றீங்கனு புரியவில்லைங்க...’
‘ வரச்சொன்னேனு வந்தேன். ஆனால் பங்களாவில் யார் யாரோ இருக்கிறார்கள்....’ வார்த்தைகளைத் தொண்டைக்குள் விழுங்கினார்.
‘ சாரிங்க, அம்மாவும், கெல்பரும் வெளியில கிளம்புனாங்க. பிறகு என்ன நினைச்சாங்களோ தெரியல, நாளைக்குப்போகலாமென இருந்திட்டாங்க. அதான்..’ வார்த்தைகளை தொண்டைக்குள் அடைத்தார் சுஷ்மிதா.
 ‘ நான் உன்கிட்ட வெட்கத்த விட்டு ஒன்று கேட்கிறேன்... கேட்கவா...?’
‘ இம்..கேளுங்க...’
‘ அடுத்த முறை வீட்டுக்கு வருகிறப்ப, வீட்ல யாரும் இருக்கக்கூடாது...’
சுஷ்மிதா ‘ இவ்வளவுதானே,...’ என்றவாறு ஒரு சிரிப்பு சிரித்தார்.
‘நம்பலாமா...?’
‘  சுயர்..’
அமைச்சர் ஆசுவாசமானார். ‘ எப்ப வர...?’
‘ நானே சொல்கிறேனே...’
அதன்பிறகு அமைச்சர் ஒரு நாளைக்கு பத்து முறையென நடிகையுடன் தொடர்பு கொள்பவராக இருந்தார்.
இன்னொரு நாள் இரவு பனிரெண்டு மணிவாக்கில் சுந்தரலிங்கத்திற்கு திடீர் அழைப்பு வந்தது. அழைத்தவர் நடிகை சுஷ்மிதாதான். அழைப்பை எடுத்து காதினில் வைத்துக்கொண்ட அமைச்சர் ‘ சுஷ்மிதா வரட்டா...?’ என ஆவல் பொங்கக் கேட்டார்.
‘ இம்...வாங்க...’
அமைச்சர் துள்ளிக் குதித்தார். ‘ வீட்ல யாரும் இல்லையே...’
‘ இல்ல வாங்க...’

முடிவு - 1
அமைச்சர் காரை எடுத்துக்கொண்டு நடிகையின் பங்களாவை நோக்கி விரைந்தார். சுஷ்மிதா சொன்னதைப்போலவே பங்களாவில் யாரும் இருந்திருக்கவில்லை. பங்களா இறுகப் பூட்டி முகப்பில் ‘வாடகைக்கு’ என்கிற அறிவிப்பு தொங்கிக்கிடந்தது.
முடிவு - 2
அமைச்சர் காரை எடுத்துக்கொண்டு நடிகையின் பங்களாவை நோக்கி விரைந்தார். சற்று நேரத்தில் உலகத் தமிழ் தொலைக்காட்சிகள், ‘ சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் சொகுசு விடுதியிலிருந்து தப்பித்து அணி மாறி தப்பி ஓட்டம்’ என்கிற வரிச் செய்தியை ஓட விட்டிருந்தது.
முடிவு - 3
அமைச்சர் காரை எடுத்துக்கொண்டு நடிகையின் பங்களாவை நோக்கி விரைந்தார். இப்படியாகத்தான் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நாளன்று அவர் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தொலைந்து போயிருந்தார்.


நன்றி - தி இந்து காமதேனு ஆகஸ்ட் 5, 2018