புதன், 24 மே, 2017

நூல் பரிசுப்போட்டி

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 59-ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்தும் நூல்களுக்கான பரிசுப் போட்டி 2015, 2016 ஆம் ஆண்டுகளில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், மொழியாக்கம் ஆகிய துறைகளில் வெளியான முதல் பதிப்பு நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ரூ 5000 பரிசளிக்கப்படும். எழுத்தாளர் முகவரி, கைப்பேசி எண், தன்முகவரியிட்ட இரண்டு அஞ்சலட்டைகள் அனுப்ப வேண்டும். நூலில் ஏதும் எழுதுதல் கூடாது. ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டாம். முடிவு நாள் : 15-07-2017 அனுப்பவேண்டிய முகவரி: தலைவர், மணிமேகலை மன்றம், 146/1 குறிஞ்சித்தெரு, பி.எஸ்.கே. நகர் அஞ்சல், இராஜபாளையம் 626 108 பேசி : 99444 15322

இலக்கியப்போட்ட2017

சனி, 13 மே, 2017

தேவைதானா தேக்கம்..?

ஆண்டன் செகாவ் எழுதிய ஒரு சிறுகதை ' தும்மல் '. ஒரு தொழிலாளி நாடகக் கொட்டகையில் நாடகம் பார்ப்பார். எதேச்சையாக தும்மல் வந்து விடும். தும்மலின் ஒரு துளி அவர் வேலை பார்க்கும் பெரிய அதிகாரியின் மீது தெறித்து விழுந்து விடும். எச்சில் தெறித்திருப்பது அதிகாரி எனத் தெரிந்ததும் தொழிலாளிக்கு பயம் தொற்றிக்கொள்ளும். அதிகாரியிடம் மன்னிப்பு கேட்பார் தொழிலாளி. அதிகாரி முகத்தைக் கோபமாக வைத்துகொண்டு ஆமோதிப்பார். அதிகாரி மீதான பயம் அவரை விட்டு போகாது. அதிகாரியை பார்க்கும் இடமெல்லாம் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்பார். அதிகாரி தலையாட்ட மட்டும் செய்வார். தன்னை இன்னும் அதிகாரி முழுமையாக மன்னிக்கவில்லை என நினைத்து கொண்டு அத்தொழிலாளி அர்த்த ராத்திரியில் தூக்கம் வராமல் தவித்து அதிகாரியின் வீட்டு கதவைத் தட்டி மன்னிப்பு கேட்பார். அதிகாரியின் கோபத்தால் அத்தொழிலாளியின் வேலை பறிபோகும். இக்கதையை வாசிக்கும் பொழுதெல்லாம் எனக்கு பதினைந்து இருபது வருடங்களுக்கு முந்தைய பள்ளிக்கல்வி முறை நினைவிற்கு வரும். தும்மல் கதையில் இடம்பெற்றுள்ள அதிகாரி பாத்திரத்தில் ஆசிரியரையும் தொழிலாளி இடத்தில் மாணவனையும் பொருத்திப் பார்க்கத் தோன்றும். ஆசிரியர்களுக்கு வணக்கம் வைத்து திரும்ப வணக்கம் கிடைக்காத பொழுது மாணவர்களின் நிலை தும்மல் கதையில் தொழிலாளி படும்பாடுதான். இருபது வருடத்திற்கு முந்தைய பள்ளிக்கல்வி அப்படியாகத்தான் இருந்தது. ஆசிரியர்களுக்கு தினம் தோறும் வணக்கம் வைக்கப்படாத பலர் நன்றாகப் படித்தும் திட்டமிட்டு அதே வகுப்பில் தேக்கப்பட்டிருக்கிறார்கள். பல மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு பல தடவை வழியே வந்து வணக்கம் வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக யாரேனும் ஒரு வகுப்பாசிரியர் வீட்டில் எடுபிடி ஆளாக இருந்திருக்கிறார்கள். எனக்கு இது நாள் வரைக்கும் விடை தெரியாத கேள்வியொன்று இருக்கிறது. ' என்னுடன் படித்து தற்போது கொத்தனாராக இருக்கும் முருகேசன் எப்படி எட்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றான்...? தற்போது மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் வேலுமுத்து ஏன் எட்டாம் வகுப்பில் தேக்கம் அடைந்தான்..? ' நான் படித்தது ஓர் அரசுப் பள்ளி. கிராமத்து மாணவனாகிய நான் தினமும் பேருந்தில்தான் பள்ளிக்கு சென்று வருவேன். அப்பொழுது அனைவரும் தேர்ச்சி என்கிற திட்டமோ , சட்டமோ கிடையாது. ஒரு வகுப்பில் எண்பது சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள். இது எட்டாம் வகுப்பு வரைக்கும் தான். ஒன்பதாம் வகுப்பில் முப்பது சதவீதம் பேர் அதே வகுப்பில் வடிகட்டப்படுவார்கள். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இல்லையா. தேர்ச்சி சதவீதம் உயர்த்திக் காட்ட வேண்டும் அல்லவா! . அப்பொழுதும் எட்டாம் வகுப்பில் ஐந்து பாடங்கள்தான் இருந்தன. ஐந்து பாடங்களுக்கும் நான்கு ஆசிரியர்கள். கணக்கு ஆசிரியர் சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாகக் கவனித்துகொள்வார். கவனித்துக்கொள்வார் என்றால் நீங்கள் நினைப்பதைப் போல அதிக சிரத்தை எடுத்து பாடம் நடத்துவார் என்பது அல்ல. சித்தியிடம் வளரும் ஒரு குழந்தையைப் போலதான் சமூக அறிவியல் பாடம் நடந்தேறும். வகுப்பிலுள்ள மொத்த மாணவர்களில் குறிப்பிட்ட பத்து பேர் மட்டும் ஒவ்வொருத்தராக எழுந்து வாசிப்பார்கள். எங்களுக்கு வகுப்பெடுத்த நான்கு ஆசிரியர்களில் நான்கு பேருமே தனிப்பயிற்சி எடுப்பவர்கள். அதாவது டியூஷன். நான்கு ஆசிரியர்களிடமும் ஆளுக்கு பத்து பேராக டியூஷன் செல்வார்கள். என் வகுப்பில் இருந்த மொத்தம் ஐம்பது பேரில் பத்து பேரைத்தவிர மற்றவர்கள் யாரோ ஒருவரிடம் டியூஷன் செல்பவர்களாக இருந்தார்கள். நான் டியூஷன் செல்லவில்லை. செல்ல முடியாமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதற்காரணம் டியூஷன் பீஸ். மற்றொரு காரணம் அவர்கள் பள்ளியில் எப்படி பாடம் எடுப்பார்களோ அப்படித்தான் டியூஷனிலும் பாடம் எடுப்பார்கள் என நான் தெரிந்து வைத்திருந்தது. எனக்கு டியூஷன் மீது பெரிய அளவில் விருப்பம் இல்லை என்றாலும் கூட டியூஷன் போகவில்லையே என்கிற பயம் எனக்குள் இருந்துகோண்டே இருந்தது. அதற்கு காரணம் கணக்கு ஆசிரியர். அவர் வகுப்பிற்கு வருவார். டியூஷன் போகாத மாணவர்கள் யார்யாரென்று அவருக்குத் தெரியும். அவர்களை எழுப்பிக் கேட்பார்.அவர்களில் நானும் ஒருத்தனாக இருப்பேன். ' போன வருஷம் நீ எத்தனாம் வகுப்பு படித்தாய்....?'. நான் சொல்வேன் ' ஏழாம் வகுப்பு சார்'.' இந்த வருஷம் எட்டாம் வகுப்பு சார்'.' அடுத்த வருஷம்...?' நான் தயக்கத்தோடு சொல்லுவேன் ' ஒன்பதாம் வகுப்பு சார்...'. கணக்கு ஆசிரியர் சொல்வார் ' நான் பாஸ் போட்டால்தானே....' ' ஆமாம் சார் '. ' நான் பாஸ் போடவேண்டுமென்றால் நீ என்ன செய்ய வேணும்..?'. ' டியூஷனுக்கு வரணும் சார்'. இப்படித்தான் அவருடைய மிரட்டலும் வகுப்பும் இருந்தது. வருகைப்பதிவேட்டில் எனக்கு முன்னாலிருக்கும் முருகேசன் தேர்ச்சி பெற்றது இப்படித்தான். அவன் படிப்பில்தான் படுமோசம். ஆனால் அன்றைக்கே அவன் ஆசிரியர்களின் உளவியலை தெரிந்து வைத்தனாக இருந்திருக்கிறான். யார் பொல்லாப்பும் தனக்கு வேண்டாமென்று அவன் நான்கு ஆசிரியர்களிடமும் டியூஷன் சென்றவன். ஆகையால் அவன் தேர்ச்சி பெற்றான். வேலுமுத்து டியூஷன் போகாததால் எட்டாம் வகுப்பில் தேக்கப்பட்டான். நான் எப்படி தேர்ச்சி பெற்றேன்..?. இந்த இடத்தில் உங்களுக்கு கேட்கத் தோன்றும். நான் கடைசி ஒரு மாதம் கணக்கு ஆசிரியரைப் பார்த்து டியூஷனுக்குச் சென்றிருந்தேன். நான் எந்த பள்ளியில் படித்தேனோ அதே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் ஆசிரியர் பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்தது. நான் படிக்கையில் இருந்த அதே டியூஷன் அரசியல்தான் அப்பொழுதும் இருந்தது. ஆண்டின் இறுதியில் தேர்வு முடிந்ததும் ஒவ்வொரு டியூஷன் ஆசிரியரிடமிருந்தும் தேர்ச்சி பெற வைக்க வேண்டி ஒரு நீண்ட பெயர் பட்டியல் என் வீடு தேடி வரும். நான் வேலைப்பார்த்த மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான தேர்வு முறைகளின் கீழ் மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். முதல் வருடம் மொத்த பள்ளி வேலை நாட்களில் எழுபது சதவீதம் பள்ளிக்கு வருகைத் தந்தவர்கள் மட்டும் தேர்ச்சி. இந்த முறையில் சராசரியாக படிப்பவர்கள் கூட அதே வகுப்பில் தேக்கப்பட்டார்கள். வாசிக்கவே தெரியாமல் ஆனால் தினமும் பள்ளிக்கு வந்தவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். மறுவருடத்தின் தேர்ச்சி முறை சற்று வித்தியாசமானது. வருகைப்பதிவை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஐந்து பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே ஐந்து பாடல்களிலும் தேர்ச்சிப் பெற்றவராகக் கருதி அவர்களை தேர்ச்சிப் பட்டியலில் சேர்க்க வேண்டும். மூன்றாமாண்டு தயாரித்த தேர்ச்சி பட்டியல் முற்றிலும் வேறுபட்டது. மொத்த மாணவர்களில் எண்பது விழுக்காடு மட்டுமே தேர்ச்சி. இவ்விதியின் கீழ் சிலர் வருகைப்பதிவைக் கருத்தில் கொண்டார்கள். சிலர் மதிப்பெண்களை எடுத்துகொண்டார்கள். எந்த விதியின் கீழ் தேர்ச்சி பட்டியல் தயாரித்தாலும் மாணவர்களின் மீதான விருப்பு வெறுப்பு பிரதானமாக ஆசிரியர்களின் அப்போதைய மனநிலையும் டியூஷனும் பிடிக்கவே செய்தன. இன்று புதிய கல்விக்கொள்கையில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் அனைவரும் தேர்ச்சி கிடையாது என்கிற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரவேற்க வேண்டிய ஒரு நல்ல திட்டம்தான். தேர்தலும் தேர்ச்சியும் அவசியம்தான். ஆனால் யாருக்கு அது பயனளிக்கும் என்பதை நினைக்கையில் தான் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ####

செவ்வாய், 2 மே, 2017

22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள்

22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள் நூல்கள் வரவேற்கப்படுகின்றன. Google+ Calendar Web more Primary Fwd: தமிழ்ப்பேராய விருதுகள் - 2017 V Venugopalan SV to 31 minutes agoDetails அன்பானவர்களுக்கு படைப்புகளுக்கான விருது குறித்த மெயிலை யாரோ அன்பர் அனுப்பியிருந்தார்- forward செய்துள்ளேன், பார்க்கவும். இணையதள முகவரி இங்கே: http://www.srmuniv.ac.in/sites/default/files/2016/tp_awards2017.pdf எஸ் வி வி பேரன்புடையீர், வணக்கம். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக அரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. அதன் பணிகளில் ஒன்றாக ரூ. 22,00,000 மதிப்பிலான 12 தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யூ. மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது, ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது அல்லது முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, புலம்பெயர்ந்த படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது, அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது ஆகிய விருதுகளுக்குத் தலா ரூ. 1,50,000 விருதுத்தொகையாக வழங்கப்படும். சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதுக்கு ரூ. 1,00,000 வழங்கப்படும். தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுக்கு விருதுத்தொகை ரூ. 2,00,000 ஆகும். இத்தொகை மூன்று அமைப்புகளுக்குப் பகிர்ந்து வழங்கப்படும். மேற்கண்ட விருதுகளுடன் சிறந்த தமிழறிஞருக்கான பரிதிமாற் கலைஞர் விருது ரூ. 2,00,000 வழங்கப்படும். தமிழ்ப்பேரறிஞர், வாழ்நாள் சாதனையாளருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ரூ. 5,00,000 வழங்கப்படும். விருதுக்காக விண்ணப்பிப்போர், 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் முதல் பதிப்பாக வெளிவந்த நூல்களின் 5 படிகளை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களும் நூல்களும் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 15.05.17. அனுப்ப வேண்டிய முகவரி- செயலர், தமிழ்ப்பேராயம், #17, நான்காம் தளம், பல்கலைக்கழகக் கட்டடம், SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203 தொலைபேசி எண்- 044 - 27417375/76 மேலும் விவரங்களை www.srmuniv.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். செயலர் தமிழ்ப்பேராயம்
நன்றி எஸ்.வி.வேணுகோபால்