செவ்வாய், 19 ஏப்ரல், 2016

ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை

‘ என்ன வேலை பார்க்கிறாய் நீ...’
‘ பாடகனாக இருக்கேன்....’
 ‘ உன் தொழிலைக்கேட்கிறேன்....?’
‘ தொழிலைத்தான் சொல்கிறேன்....’
‘ பாடுறது ஒரு தொழில் கிடையாதே....’
‘ இருக்கலாம்.  நான் அதை முறைப்படுத்திச் செய்துகிட்ருக்கேன்...’
‘ எதையெல்லாம் பாடுவ...?’
‘ என்னெல்லாம் எழுதுறேனோ அதையெல்லாம் பாடுவேன்’
 ‘ நீ எழுதியது எதாவது இதழ்களில் வந்திருக்கிறதா....?’
‘ வந்ததில்லை....’
 ‘ பிறகு ஏன் எழுதுறே......?’
‘ பாடுவதற்காக எழுதுகிறேன்......’
‘ என்னெல்லாம் எழுதியிருக்கே.....?’
‘ பாட்டாளியைப்பற்றி எழுதிருக்கேன்... அவன் வாங்குகிற கூலி வீடு போய் சேராததைப்பற்றி எழுதிருக்கேன்....’
‘ பாட்டாளியை மட்டும்தான் எழுதுவே....ம்....?’
‘ அரசியல்வாதிகளையும் எழுதிருக்கேன்....’
‘ அவர்களைப்பற்றி எப்படி எழுதியிருக்கே..?’
‘ அவர்கள் செய்கிற ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவர்கள் நடத்துகிற சாதி அரசியல், மத அரசியல்,....இதெல்லாம் பற்றி எழுதியிருக்கேன்.....’
‘ எங்களப்பத்தி எழுதியிருக்கீயா....?
‘ ம்......’
‘ எப்ப.....?’
‘ சீர்காழியில ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு போலீஸ் அதிகாரியை நாலுபேர் நடு ரோட்டில் வெட்டிக்கொன்றாங்க. அப்ப போலீஸ்க்கென பாதுகாப்பு வேணும் அவங்களுக்கொரு சங்கம் வேணுமென எழுதியிருக்கேன்.....’
‘ எங்கே அதைப் பாடு...?.’
 ‘ சும்மா பாட முடியாது....’
‘ என்ன வேணும்....?’
‘  அடிச்சுப்பாட பறை வேணும்....’
 ‘ பறையெல்லாம் ஸ்டேசனுக்குள்ளே எடுத்துவர அனுமதியில்லை....’
‘ அப்ப என்னால் பாட முடியாது....’
‘ தாறேன்.... எங்க அதிகாரியப் புகழ்ந்து பாடுவீயா....?’
‘ அதிகாரி வர்க்கத்தப்பாடுகிறவன் இல்ல நான்....’
‘ பின்னே....?’
‘ பாட்டாளி வர்க்கத்தப்பாடுகிறவன்...’
‘ அப்ப நீயொரு கம்யூனிஸ்ட்....?’
‘ நீங்க  என்ன கேப்டலிஸ்ட்டா.....?’
‘ என்னக் கிண்டலா...? கேள்விக்கேட்கிறவன் நான், நீ இல்ல.....’
‘ உங்க கேள்வியில நான் கம்யூனிஸ்ட்வாதியா முதலாளித்துவவாதியாயென இருக்க வேண்டியதில்ல.....’
‘ இன்னைக்கு சனிக்கிழமை. திங்கள், செவ்வாய் லீவு. புதன் கிழமைதான் உன்ன கோர்ட்ல ஒப்படைக்க முடியும்....தெரியும்ல....?’
‘ புதன் கிழமை வரைக்கும் நான் பாதுகாப்போட இருந்தாதான் அதுவும் முடியும். அது உங்களுக்குத் தெரியும்ல....?’
‘ கேட்கிறக்கேள்விக்கு முறையாகப் பதில் சொல்வது உனக்கு நல்லது....’
‘ நமக்கு நல்லது.....’
‘ யாரெல்லாம் உன் தொடர்புல இருக்காங்க.....?’
‘ மக்கள்....’
‘ மக்களைக்கேட்கல.... கட்சிகளைக் கேட்கிறேன்.....?’
‘  மக்களுக்காக குரல் கொடுக்கிற கட்சிகளெல்லாம்....’
‘ அதுதான் எததெனக் கேட்கிறேன்.....?’
‘ தெரிஞ்சுக்கிட்டு ஏன் கேட்கணுங்கிறேன்...’
‘ இதுக்கு முன்னாடி யாரையும் நான் இப்படி பொறுமையா விசாரிச்சதில்ல....’
‘ விசாரணை எனக்கு ஒன்னும் புதிதில்ல.....’
‘ நான் போலீஸ்காரன் ’
‘ நான்  கலைஞன்.....’
‘  பணத்துக்காக பாடுறவன் நீ இப்படித்தான் பேசுவே....?’
‘ பணத்துக்காக  உங்களைப்போல நடிக்கத்தான் முடியும். பாட முடியாது....’
‘ உன்னை இயக்குறது யாருனு சொல்லு. இப்பவே விட்டுறுறேன்.....’
‘ அதான் சொன்னேனே.... மக்கள்னு....’
‘ அரசியல்வாதி மாதிரி பேசுறே...’
‘ அவ்ளோ அசிங்கமாவாப் பேசுறேன்.....?’
‘ அதிகமாகப் பேசுறேங்கிறேன்.....’
‘ இதுவே அதிகமானால் இனி நான் பேசப்போறதில்லை.....’
‘ பேசமாட்டேனு சொல்றமாதிரி எழுதமாட்டேனும் சொல்லு’
‘ அது என்னால முடியாது...’
‘ இனி நீ எழுதக்கூடாது’
‘ ஒரு வாரம் சாப்பிடாம இருக்கச்சொல்லுங்க  இருக்கேன். ஆனா ஒரு நிமிசம் என்னால எழுதாம இருக்க முடியாது....’
‘ சரி... பாட மாட்டேனு சொல்லு.....’
‘  பாட்டு என் சுவாசம்’
‘ உன்னால பாடாம , எழுதாம இருக்க முடியாது....ம்.....?’
‘ பாடவும், எழுத்தவுமில்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது’
 ‘எவ்வளவு காலமாக நீ பாடிக்கிட்டிருக்கே....?’
‘ ரொம்பக்காலமாக....’
‘ சரியாகக் கேட்கிறேன்....’
‘ விபரம் தெரிந்ததிலிருந்து.....’
‘ எப்ப உனக்கு விபரம் தெரிந்தது....?’
‘ நான் படிச்ச படிப்பு எனக்கு சோறு போடப்போறதில்ல என தெரிந்ததிலிருந்து...’
‘ என்ன படிச்சிருக்கே....’
‘ தமிழ் பி. ஹச். டி. ’
‘ புரியல....’
‘ முனைவர் அதாவது டாக்டரேட்....’
‘ படிச்சப்படிப்புக்கு வேலைத் தேடியிருக்கலாமே.....?’
‘ தேடினேன்....படிக்காதவன் நடத்துற காலேஜ்ல என்னோட படிப்ப நான்  அடமானம் வைக்க விரும்பல.....’
‘ நீ பாட்டு எழுத, பாட யார் காரணம்.....?’
‘ உங்களைப்போன்றவங்க...’
‘ அப்படின்னா....?’
‘ அதிகாரம் படைச்சவங்க.....’
‘ டாக்டரேட் படிச்ச நீ இப்படி போலீஸ்க்கிட்ட பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு....?’
‘ ஒரு பாடலைப்பாடினேன் என்பதற்காக ஒரு கொலைக்கைதியைப்போல, ஊழல்வாதியைப்போல, அரசுப்பணத்த கையாடல் செய்தவனைப்போல விசாரிக்கிறது நல்லாத்தான் இல்லை...’
‘ நீ இவ்ளோ படிச்சிட்டு கூத்தாடிப்போல நடந்துக்கிட்டேனா, உன் குடும்பத்தில இருக்கிறவங்க எப்படி சாப்பிடுவாங்க....?’
‘ உழைச்சி ’
‘ அப்ப நாங்க உழைக்காமச் சாப்பிடுறோமெனச் சொல்கிறாயா.....?’
‘ நான் சொல்கிற பதில்ல அப்படியொரு அர்த்தம் பொதிந்திருக்குனா அதற்கு நான் பொறுப்பல்ல...’
‘ அரசாங்கத்த விமர்ச்சிக்கிற உரிமை உனக்கு யார் கொடுத்தது....?’
‘ அரசாங்கத்தை விமர்ச்சிக்கக்கூடாதுங்கிற கடிவாளத்த எனக்கு யார் போட்டது....?’
‘ போலீஸ்க்காரன் நான்... நீ இல்ல....’
‘ என் தரப்பு நியாயத்த சொல்ல வேண்டியவன் நான். நீங்க இல்ல....’
‘ என்ன நீ சொல்ல வாறே....?’
‘ சுவர்தாண்டி அர்த்தராத்திரியிலே என்னை ஏன் கைது செய்திருக்கீங்க....’
‘ அரசாங்கத்தைக் கேலி செய்திருக்கே ....’
‘ எந்த வகையில செய்திருக்கேன்....?’
‘ சொல்லட்டுமா....?’
‘ அதைத்தான் கேட்கிறேன்....’
‘ அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்னு பாடியிருக்கே....’
‘ பண்ணியவங்களைப் பாடியிருக்கேன்....’
‘ மதுபான ஆட்சி எனக் கேலி செய்திருக்கே....?’
‘ கேலி மட்டும்தான் செய்திருக்கேன்....’
‘ மதுவைச் சீண்டிருக்கே....’
‘ சீண்டதான் செய்திருக்கேன். குடிக்கவில்லையே.....’
‘ கொச்சை மொழியில் பாடியது பெருந்தவறு....’
‘ அது கொச்சை மொழியில்ல. அது வட்டார மொழி என தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் தவறு....’
‘ வட்டார மொழியில் நீ பாடியிருக்கக்கூடாது....’
‘ பீப்’ மொழியிலதான் நான் பாடியிருக்கக்கூடாது....’
‘ இது எல்லாத்தையும் விட இன்னொன்று நீ செய்திருக்கே.....’
‘ என்ன செய்திருக்கேன்....?’
‘ பொது மக்களோட அமைதியக் கெடுத்திருக்கே....’
‘ ஹக்......’
‘ இப்ப நீ என்ன செய்தே....?’
‘ சிரிச்சேன்...’
‘  போலீஸ்க்காரன் கோபம் என்னனு தெரியும்ல....?’
‘ தெரியும்...’
‘ என்னத் தெரியும்.....?’
‘ அது பாட்டாளிகள் படும் கோபத்தில பாதிக்கூட கிடையாதெனத் தெரியும்..’
‘ உண்மையைச் சொல்லிவிடு. உன்னை இயக்குறது யாரு....?’
‘ மக்கள் ’
‘ இப்படி நீ பேசினா...கோர்ட்ல ஜாமீன்கூட கிடைக்காது...’
‘ அப்படி கிடைக்காமப்போறது நல்லதுனு நினைக்கிறவன் நான்....’
‘ சிறை வாழ்க்கை எப்படி பட்டதுனு உனக்குத் தெரியாது...’
‘ பாட்டு எழுத, பாட இதுதான் தகுந்த இடமென உங்களுக்குத் தெரியாது....’
 ‘ உன்னை நான் வேற வழியில் விசாரிக்கிறேன்.....’
‘ சட்டத்திற்கு உட்பட்டே விசாரிங்க....’
‘ உன்ன கோர்ட்ல ஒப்படைக்கிற வரைக்கும் நீ லாக்கப்லதான் இருக்கப்போறே.....’
‘ இருக்கேன் ’
‘ நேரத்துக்கு சாப்பாடு தரமாட்டேன்.....’
‘ வேண்டியதில்லை.....’
‘ டார்ச்சர் படுத்துவேன்....?’
‘ பரவாயில்லை’
‘ உன் குடும்பத்தார்களை சந்திக்க விடமாட்டேன்’
‘ தேவையில்லை...’
‘ எதுவுமே வேண்டாமெனச் சொல்றீயா......?’
‘ வேணுமெனச் சொல்றேன்.....’
‘ என்ன வேணும்.....?’
‘ என்னோட பறை வேணும் ’