சனி, 10 நவம்பர், 2018

சதுரங்க ராணி

சிறுகதை
ஏழாவது நகர்வில் சித்தி அவளது ராணியை இழந்துவிட்டிருந்தாள். இந்த நகர்விற்கு முந்தைய நகர்வில் என் கறுப்புக்குதிரை, கோட்டை, மந்திரி , சிப்பாய்கள் சித்தியின் வெள்ளை ராணியைச்சுற்றி வட்டம் கட்டியிருந்தும் சித்தி, அவளது வெள்ளை ராணியைக் கண்டுகொள்ளாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. இராணியைப் பறிக்கொடுக்க விளையாடிய விளையாட்டைப்போலதான் சித்தி அவளது காய்களை நகர்த்திக்கொண்டிருந்தாள்.


சித்தி அவளது இராணியைப் பறிக்கொடுத்தது என்னுடைய கறுப்பு சிப்பாயிடம். ஆட்டத்தில் தேர்ந்த சித்தி அதிக புள்ளிகள் கொண்ட இராணியை ஒரு சிப்பாயிடம் பறிக்கொடுத்ததை நினைத்து சித்தி கவலையோ, அவமானமோ அடையவில்லை. ஒரு சிப்பாயை வேண்டுமென்றே ஒரு கோட்டையிடம் பறிக்கொடுத்து அந்தக் கோட்டையை ஒரு சிப்பாய் கொண்டு பறிக்கும் சாதூரிய நகர்த்தலின் போது இருக்கும் ஒரு எதார்த்தமான மகிழ்ச்சியில்தான் சித்தி இருந்துகொண்டிருந்தாள். சித்தியின் நமட்டுச்சிரிப்பு எனக்கு வியப்பளித்தது. அவள் ஒடுங்கிய சம்மனத்துடன் முகவாய்க்கட்டைக்கு இடது கையைக் கொடுத்து  நெற்றியைச் சுழித்தவாறு அவள் மொத்த சதுரங்க காய்களையும் பார்த்தவிதம் ‘ இப்ப பார்...உன் காய்களை நான் என்னச் செய்கிறேன் என்று....’ என மிரட்டுவதைப்போலிருந்தது.


சித்தி எத்தனையோ பேரிடம் சதுரங்கம் விளையாடியிருக்கிறாள். விலா மடிப்புத் தேர், ஆண்டர்சன் திறப்பு, ஓயாமல் முற்றுகை என்கிற சதுரங்கத்தின் அத்தனை உத்திகளும் அவளுக்கு அத்துபடி. ராஜாவை எட்டாவது வரிசை வரைக்கும் கொண்டுச் சென்று எதிராளிக்கு செக் வைக்குமளவிற்கு ஆட்ட நுணுக்கத்தை அவள் கற்றிருந்தாள். ஒரு கோட்டை,  ஒரு ராணி அவளிடம் இருந்தால் போதும். எதிராளியின் மொத்த நகர்வுகளையும் அவளது நகர்விற்கும் கீழ் கொண்டுவந்துவிடுவாள். அத்தகைய சித்தி இராணியை ஆட்டத்தின் தொடக்கத்தில் பறிக்கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது.


சித்தி எப்பொழுதும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருப்பதில்லை. அவள் யாரோ ஒருவரை இயக்க மட்டும் செய்வாள். இப்பொழுது அவளால் சதுரங்கம் விளையாடாமல் இருக்க முடிவதில்லை. யாரேனும் ஒருவரை அழைத்துவைத்துகொண்டு சதுரங்கம் விளையாடுவாள். யாரேனும் வரவில்லை என்றால் இருக்கிறதே இருக்கு மடிக்கணினி.


கணினியுடன் விளையாடிய சித்தி இரண்டு முறை கணினியைத் தோற்கடித்திருக்கிறாள். அத்தகையவள் இராணியை ஒரு கறுப்பு சிப்பாயுடன் பறிக்கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது. நான் இராணிக்கு அருகாமையில் என் சிப்பாயை கொண்டுபோய் வைக்கையில் சித்தி என் சிப்பாயை வெட்டியிருக்க வேண்டும். அல்லது இராணியை எடுத்து இதற்கு முன் அது இருந்த இடத்தில் அதை வைத்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் சித்தி ‘தொலையட்டும் சனியன்...’, என வேண்டுமென்றே விட்டுவிடுவதைப்போலதான் இராணியை விட்டிருந்தாள்.


நான் சித்தியிடம் கேட்டேன். ‘ சித்தி....உன் சிந்தனையெல்லாம் ஆட்டத்தில்தானே இருக்கிறது........?’
‘ ஆமாம்....’
‘ மிக முக்கியமான காய் ஒன்றே நீ இழக்கப்போகிறாய்....’ என்றேன். சித்தி என்னை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘ பார்க்கலாம்...’ என்றவாறு அவள் குதிரையை நகர்தினாள். குதிரை ‘ட’ வடிவில் முன்னோக்கி போகவேண்டியது. ஆனால் அது பின்னோக்கி சென்று கறுப்புக் கட்டத்திலிருந்து வெள்ளைக் கட்டத்திற்கு மாறியிருந்தது.


சித்தியின் ஆட்டம் வழக்கம் போலிருக்கவில்லை. அவளது ஆட்டத்தில் என்னவோ ஒரு சாணக்கியத் தனம் இருக்க வேண்டும் அல்லது விருப்பமில்லாமல் அவள் விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். மொத்த ஆட்டத்தையும் அவளது ஆளுமையின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற சிந்தனை மட்டும் அவளை இயக்கிக்கொண்டிருந்தது.


சித்தி வெள்ளைக் காய்களை கேட்டு வாங்கி அடுக்கியிருந்தாள். எனக்கு கறுப்பு. முதல் நகர்வை அவள்தான் நகர்த்த வேண்டும் என்பதால் அவள் வெள்ளை காய்களை கேட்டு வாங்கியிருந்தாள். ஆனால் நான்காவது நகர்வில் ஒரு சிப்பாய் கொண்டு இன்னொரு சிப்பாயை வெட்டியிருந்தேன். நான் வெட்டிய அடுத்த நகர்வில் சித்தி என் அமைச்சரை வெட்டியிருந்தாள். அமைச்சரை வெட்டத் தெரிந்த அவளுக்கு இராணியைக் காத்துக்கொள்ளத் தெரியாதது எனக்கு விநோதமாகப் பட்டது.


சித்தி இராணியைப் பறிக்கக்கொடுத்ததை நினைக்கையில் எனக்கு இறுக்கமாகவே இருந்தது. ஆனால் சித்தி சிரித்த முகமாகவே இருந்தாள். இராணியை இழந்துவிட்ட துக்கம் அவளது முகத்தில் மருந்திற்கும் இல்லை. இராணியைப் பறிக்கொடுத்ததன் பிறகு சதுரங்கத்தில் வேகம் இருக்க முடியுமா என்ன...? ஆனாலும் உன்னை நான் எப்படி விழுத்துகிறேன் பார்...என்பதைப்போல அவள்  இராஜாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினாள்.


நான் எப்பொழுது சதுரங்கம் விளையாடினாலும் ராஜா மீது கையை வைப்பதில்லை. இராஜாவை வலது அல்லது இடது பக்கம் நகர்த்தி கோட்டைக்கு இடையில் மறித்துக் கட்டவே செய்வேன். ஆனால் சித்தி ராஜாவை எந்தவொரு முன்னெச்சரிக்கையுமின்றி நகர்த்தினாள். அவள் நகர்த்த வேண்டியக் காய்கள்  இன்னும் எத்தனையோ இருக்க அவர் ராஜாவை நகர்த்தியதை வைத்து என்னால் ஒன்று புரிந்துகொள்ள முடிந்தது. அது அவளிடமிருக்கும் ஒரு சிப்பாயை எட்டாவது கட்டத்திற்கு கொண்டுச்சென்று அச்சிப்பாயை இராணியாக்க வேண்டும் என்கிற வெறித்தனம் மட்டும் அவளிடமிருந்தது. இந்த ஒன்றிற்காக அவள் மற்ற அத்தனைக் காய்களையும் இழக்கவும் தயாராக இருந்தாள்.


என்னைத் தவிர குடும்பத்தில் அத்தனைப்பேருக்கும் சதுரங்கம் சொல்லிக்கொடுத்தது சித்திதான். சித்தி சித்தப்பாவிற்கு மனைவியாக திருமணம் முடித்துகொண்டு வருவதற்க முன்பாகவே நான் சதுரங்கம் விளையாடுபவனாக இருந்தேன். ராஜாவை கோட்டைக்குள் மறித்துகட்டுதல், ஓபன் டெக்லர், பேட் டச், தேர் நடை, முதல் நகர்வில் ஒவ்வொரு சிப்பாயையும் இரண்டு கட்டங்கள் நகர்த்தலாம், ராஜாவை தொட்டு ஆடும் அதே விரல்களில்தான் கோட்டையை நகர்த்த வேண்டும்....இது போன்ற நுணுக்கங்களை எனக்குச் சொல்லிக்கொடுத்தது சித்திதான்.


எங்கள் குடும்பத்திற்கு சித்தி மறுமகளாக, சித்தியாக, சித்தப்பாவிற்கு மனைவியாக வந்ததன் பிறகு நான் யாருடன் விளையாடினாலும் சித்தி எனக்கு எதிராக நின்று எதிராளிக்கு சொல்லிக்கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள். எதையும் சத்தமாகச் சொல்லிக்கொடுக்க மாட்டாள். எதிராளியின் காதிற்குள் கிசு, கிசுப்பாள். அவளது கைக்காட்டலில் நகரும் காய்கள் எனக்கு பல நேரங்களில் சவால்களாக இருந்திருக்கின்றன. பல நேரங்களில் என்னை தோற்கடித்திருக்கின்றன.


ஒரு முறை நானும் சித்தப்பாவும் விளையாடுகையில் சித்தப்பாவின் ராஜா, இரண்டு சிப்பாய்களைத் தவிர மற்ற அனைத்து காய்களையும் நான் வெட்டியிருந்தேன். அதற்குப்பிறகு சித்தப்பாவுடன் கலந்துகொண்ட சித்தி என்னிடமிருந்த இரண்டு மந்திரிகள், ஒரு குதிரை உட்பட நான்கு சிப்பாய்களையும் வெட்டி என் ராஜாவிற்கு ‘ செக்’ வைத்தது அதுநாள் வரைக்கும் நான் விளையாடிய விளையாட்டில் மிக மோசமான விளையாட்டிற்கு அது வழி வகுத்தது. சதுரங்க விளையாடுபவர்கள் மத்தியில் அவள் சின்னராணியாகிப்போனாள். சின்ன ராணி என்று அவளை என் குடும்பத்தார்கள் அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்படி அழைக்காதவர்களின் மீது அவள் தன் வன்மத்தைக் காட்டினாள். எனக்கு அவள் எப்பொழுதும் நகர்வுகள் பற்றிச் சொல்லிக்கொடுத்ததில்லை. அவளுக்கு போட்டியாகத் தெரியும் யாருக்கும் அவள் ஆட்டத்தின் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்ததில்லை.

இன்றைய ஆட்டத்தில் அவளது முதல் காய் நகர்த்தல் சிப்பாயாக இல்லாமல் குதிரையை மூன்று கட்டங்கள் தாண்டி ஒரு சிப்பாய்க்கு முன் வைப்பதாக இருந்தது. இத்தொடக்கம் அவசரக்கால ஆட்டத்திற்கு வழி வகுக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஆட்டம் ஆடி முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நகர்த்தும் ஆட்ட உத்தி இது. இந்த நகர்த்தலுக்கு பிரகடனம் என்று பெயர். ‘முடிந்தால் என்னை வீழ்த்திப்பார்’ என சொல்லாமல் சொல்லும் சவாலான நகர்த்தல் அது. எதிராளியை படு உஷார் படுத்தவோ அல்லது மிரட்டும் படியான காய் நகர்த்தல் அது. சித்தியின் இந்நகர்த்தல் எனக்கு வியப்பு அளித்தது.  விஸ்வநாதன் ஆனந்த் கடைசியாக உலக சதுரங்கப்போட்டியில் இப்படித்தான் அவரது ஆட்டத்தைத் தொடங்கியிருந்தார். போட்டியின் முடிவில் அவர் சாம்பியன் பட்டத்தை இழந்த போது அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இப்படியொரு ஆட்டத்தை தொடங்குவதைப் பற்றியதாகவே இருந்தது. அவர் தோற்ற ஆட்டத்தையே சித்தியும் தொடங்கியிருந்தாள். அவர் ஆடத் தொடங்கிய ஏழாவது நகர்வில் நான் நினைத்தபடியே அவளது இராணியை  என்னிடம் பறிக்கொடுத்திருந்தாள்


‘ ஏன் வெட்டினாய், எப்படி வெட்டினாய்..., அடடா கவனிக்காமல் விட்டுவிட்டேனே...இல்லை இல்லை....முந்தைய ஆட்டத்தை நான் திரும்பப்பெறுகிறேன்...’ இதுபோன்ற எந்தவொரு எதிர்வினையும் அவளிடமிருந்து வந்திருக்கவில்லை. ஒரே ஒரு அசட்டு சிரிப்புதான். ‘தொலையட்டும்...இந்த இராணி....’ என்கிற மாதிரியான முகவெட்டு அவளிடமிருந்தது.


அவளது ஒரு ராணியுடன் ஒரு குதிரையும் ஒரு மந்திரியும் என் வசம் வந்தி்ருந்தன.  சித்தி அடுத்து எதை நகர்த்தப்போகிறார் எனக் கூர்ந்து கவனித்தேன். அவளுடைய ஒரு கோட்டைக்கு நேராக என்னுடைய ஒரு கோட்டை இருந்தது. அதை அவள் வெட்டியிருக்க வேண்டும். ஆனால் அவள் ஒரு சிப்பாயை எடுத்து ஒரு கட்டம் முன் நகர்த்தினாள்.


நான் என் மந்திரியை குறுக்குவாக்கில் நகர்த்தினேன். அவள் இராணியாக்க நினைக்கும் சிப்பாய் காய் என் மந்திரியால் வெட்டப்படாமல் இருக்க குதிரையை மூன்று கட்டங்கள் தள்ளி நகர்த்தினாள்.


சதுரங்கள் விளையாடுகையில் ஒன்றை மனதில் நிறுத்திக்கொண்டு காய்களை நகர்த்தவேண்டும். எதிரணியின் காய்களை வெட்டுவதை விடவும் தன் காய்களை எதிராளியால் வெட்டப்படாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. அதுவே சதுரங்க ஆட்டத்தின் மிக முக்கியமான கருத்தில் கொள்ள வேண்டிய விதி. இது எனக்கு யாரோ சொன்னதல்ல. சித்தி சொன்னதுதான்! ஆனால் அன்றைய தினம் ஆட்டத்தில் சித்தி அப்படியாகத்தான் விளையாடினால் என்றாலும் அவளது மொத்தப்பார்வையும் அந்த ஒரு சிப்பாய் மீதே இருந்தது.


நான் அந்தவொரு சிப்பாயை எப்படியேனும் வெட்டிவிட வேண்டும் என்கிற கோணத்தில் யோசித்தேன். சித்தியின் ஆட்டம் மிக நேர்த்தியாக இருந்தது. அந்த ஒரு சிப்பாயைச்சுற்றி நான் நிறையக் காய்களை வைத்திருந்தேன். அத்தனைக் காய்களையும் வெட்டிக்கொண்டு ஆறாவது கட்டத்தை நோக்கி சிப்பாயைக் கொண்டு வந்திருந்தாள். இன்னும் இரண்டு நகர்வு நகர்த்தினால் போதும். ஒரு சிப்பாய் இராணியாகி விடும். அவளது இரண்டு கண் பார்வையும் அந்த ஒற்றை சிப்பாய் மீதே இருந்தது.  அச்சிப்பாய்க்கு காவலாக ராஜாவையும், ஒரு கோட்டையையும் நிறுத்தியிருந்தார். முன்னும் பின்னும் இரண்டு சிப்பாய்கள் இருந்தன. இது தவிர ஒரு மந்திரி, ஒரு குதிரை இருந்தன.


இந்த இடத்தில் என் ராஜாவிற்கு செக் வைக்கும்படியான ஒரு வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது. ஆனால் சித்தி அதைக் கவனிக்கவில்லை. அவள், அவளுடைய கோட்டையை எடுத்து இரண்டொரு கட்டங்கள் கிடைமட்டமாக நகர்த்தி பின் படுக்கைவாக்கில் அந்தவொரு சிப்பாய்க்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தினார்.


அவளது குதிரையை மூன்று கட்டங்கள் நகர்த்தி அல்லது மந்திரியை குறுக்கு வாக்கில் கொண்டு வந்து இரண்டு கட்டங்கள் தள்ளி நிறுத்தினால் போதும். எனக்கு ‘செக்’. அதற்கு பிறகு எனக்கு ஆட்டமில்லை.  ஆனால் சித்தி அப்படியொரு ஆட்டத்தை ஆடவில்லை. அவளது ஆட்டம் வேறொரு வகையினதாக இருந்தது. அவருடைய முகம் கடுகடுவென இருந்தது. எப்படியேனும் இந்த சிப்பாயை ராணியாக்கிவிட வேண்டும் என்கிற வேக வெட்டு மட்டும் அவளுடைய முகத்தில் இருந்தது. தரையை இரண்டொரு முறை அடித்து ‘ நான் வெல்வேன்...எனக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சியை வீழ்த்துவேன்....’ என சபதம் எடுத்துகொண்டாள். அப்பொழுது அவளுடைய முகத்தை பார்த்தி்ருக்க வேண்டுமே...அப்பப்பா...! இதுநாள் வரைக்குமில்லாத உக்கிர முகம் அது.

தன் வாழ்நாளில் இப்படியான உக்கிரமம்        ஒருவருக்கு ஒரு முறைதான் வரும். அன்றைய தினம் சித்திக்கு வந்திருந்தது. அந்த ஒரு சிப்பாய்க்காக மற்ற காய்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டு வந்தாள். அவரிடம் மிச்சமிருந்தது ஒரு சிப்பாய், ஒரு மந்திரி, ஒரு ராஜா அவ்வளவேதான்.


நான் என்னுடைய ஒரு மந்திரியை எடுத்து அந்த ஒரு சிப்பாயை வெட்டிவிட வேண்டும் என்கிற நோக்கில் வைத்தேன். நான் நகர்த்தியது மந்திரி. இந்த நகர்வு அவருக்கு கோபத்தை மூட்டியிருக்க வேண்டும். அவளுடைய மந்திரியைக் கொண்டு என் மந்திரியை வெட்டியிருந்தாள்.


நான் அடுத்த நகர்வில் கோட்டையை நகர்த்தியிருந்தேன். அடுத்த நகர்வில் அது அந்த ஒரு சிப்பாயை வெட்டும் படியாக அமையும் என்பதால் அவரது ராஜாவைக் கொண்டு என் குதிரையை வெட்டியிருந்தாள்.


ஆட்டத்தின் வேகம் சூடு பிடித்தது. சித்தப்பா, அண்ணன், அக்காள், என் அம்மா, அப்பா உட்பட பலரும் சித்தி பக்கம் உட்கார்ந்திருந்தார்கள். என்னை எப்படியேனும் தோற்கடித்திட வேண்டும் என்கிற வெறித்தனம் அவளைச் சுற்றியிருந்த அத்தனைப் பேர்களிடமும் இருந்தது. என்னைப் பெற்ற அம்மாவிற்கு கூட அத்தகைய வெறி இருந்தது. இக்குடும்பம் ஒரு சிலனமுமில்லாமல் நகர சித்தி வெற்றிப்பெற்றாக வேண்டும். இல்லையேல் அத்தனைப் பேரிடமும் அவளுடைய அகோர முகத்தைக் காட்டவே செய்வாள். அவளது இத்தகைய முகம் அடுத்த ஆட்டத்தில் அவள் வெற்றிப்பெறும் வரைக்கும் நீளும்.


நான் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்கு பின்னால் யாரும் நின்றிருக்க வில்லை. அத்தனைப்பேரும் சித்தியைச் சுற்றியே நின்று கொண்டிருந்தார்கள். இரு கண்களால் அறுபத்து நான்கு கட்டங்களையும் பார்த்துகொண்டிருந்தேன். நான் வெற்றிப்பெற பல வழிகள் இருந்தன. ஆனால் அதற்கு முன்னால் சித்தியின் அந்த ஒற்றை சிப்பாயை வெட்டிவிட வேண்டும் என்கிற உத்வேகம் மட்டும் எனக்கு இருந்தது. சித்தி, அந்த ஒற்றை சிப்பாயை மேலும் ஒரு கட்டம் முன்னோக்கி நகர்ந்தியிருந்தாள். இன்னும் ஒரே ஒரு கட்டம்தான். எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று என்னிடமிருக்கிற கோட்டையை வைத்து அந்த ஒற்றை சிப்பாயை வெட்டிவிட வேண்டும். மற்றொன்று என் சிப்பாயை மேலும் ஒரு கட்டம் முன் நகர்த்தி ‘ராஜாவிற்கு செக் வைக்க வேண்டும். இவ்விரண்டில் எதை செய்யலாம் என நீண்ட நேரம் யோசித்தவன் இரண்டில் எதை செய்யலாமென சித்தியின் முகத்தைப் பார்த்தேன். சித்தியின் மொத்தப் பார்வையும் அந்த ஒரு சிப்பாயை மட்டும் பார்த்தபடி இருந்தது. அவளுடைய முகம் பார்க்க முன்னே விடவும் விகாரமாக இருந்தது. அந்த ஒரு சிப்பாய்க்காக நான் எதையும் செய்வேன். என்ன விலைக்கொடுத்தேனும் இந்த சிப்பாயை நான் இராணியாக்கவே செய்வேன் என்கிற சவால் முகத்தால் முகத்து தசைகள் துடித்தன.


அவளது அந்த ஒற்றைச்சிப்பாய் ஒரு கட்டம் முன் நகர்ந்தால் போதும் ஒரு சிப்பாய் இராணியாகிவிடும். இப்பவே அவளுடைய ஆட்டம் நடுங்கச் செய்யும் படியாக இருக்கிறது. அதில் சிப்பாய் இராணியாகிவிட்டால் அவ்வளவே தான்! இராணி எத்தனை கட்டம் வேண்டுமானாலும் பாயும். தாவும் , குதிக்கும். அவளது தேவையான அத்தனையையும் வளைக்கும். பதுக்கும். அவளது சிப்பாய் சிப்பாயாக இருக்கும் வரைக்கும்தான் எனக்கு வெற்றி. ஒருவேளை சிப்பாய் இராணியாக மாறிவிட்டால் எனக்காக வெற்றி வாய்ப்பு அஸ்தமனம்தான். நான் என் வெற்றி வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. நான் இரண்டில் ஒரு முடிவு எடுத்தேன். நான் ராணியாகப்போகும் அந்த ஒற்றை சிப்பாய் பற்றி கவலைப்படவில்லை. ஆட்டம் நீடித்தால் தானே சிப்பாய் இராணியாகும். பிறகு அது அதன் ஆட்டத்தைக் காட்டும். அதற்கு ஏன் இடம் கொடுப்பானேன். நான் என் சிப்பாயைக் கொண்டு வெள்ளை ராஜாவிற்கு ‘செக்’ வைத்தேன்.


சித்திக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த அத்தனைப் பேரும் நெற்றியைச் சுழித்தார்கள். சித்தியின் தோளினைப்பற்றி குலுக்கினார்கள். சித்தி ராஜாவை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு ராஜாவை முன் பின் நகர்த்த வேண்டும். அப்படி நகர்த்தினால் மட்டுமே சதுரங்க சாம்ராஜ்ஜியத்தை தன் வசம் வைத்துகொள்ள முடியும். அப்படி நகர்த்துவதற்கான காலிக்கட்டங்கள் அறவே இல்லாமல் இருந்தன. வலது பக்கமாக ஒரு கட்டம் நகர்த்தலாம். ஆனால் அதற்கு நேராக கோட்டை இருந்து. முன் பின் நகர்த்த வாய்ப்பில்லை. ஆட்டம் இத்துடன் முடிவுக்கு வந்திருந்தது. ஆனால் சித்தி ராஜாவைப்பற்றி சற்றும் கவலைப்படவில்லை. அவள் இராஜாவின் மீது சற்றும் அக்கறை இல்லாதவளாய் அந்த ஒற்றை சிப்பாயை மேலும் ஒரு கட்டம் நகர்த்தி நான் வெட்டி வைத்திருந்த வெள்ளை ராணியை எடுத்து எட்டாவது கட்டத்தில் வைத்து பெரிய அளவில் சிரித்தாள்.


சித்தியின் ஆட்டம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. இராஜாவிற்கு செக் வைத்ததன் பிறகு நீளும் ஆட்டத்தைப் பார்த்து என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. இறந்து போன இராஜாவை உயிர் இருப்பதாகச் சொல்லி அரியணையில் உட்கார வைத்து தன் சாம்ராஜ்ஜியத்தை நீடித்த ரோம் மகாராணி என் நினைவிற்கு வந்து போனாள். சித்தியைச் சுற்றி நின்ற பலரும் சித்தியைத் தூக்கி வைத்துகொண்டு ஆடினார்கள். அவளைக் கொண்டாடினார்கள். அவளது ஆட்டத்திறமையைப் பாராட்டி சின்னராணி எனப் பட்டம் சூட்டினார்கள்.


இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்....? சித்தியால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது...? அப்படியே கிடைத்தாலும் எத்தனைக் காலத்திற்கு கிடைக்கும்....? சித்தியின் தவறான ஆட்டத்தை ஏன் அவர்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை....? அவர்களின் மீது எனக்கு கோபம் வரவே செய்தது. சதுரங்கப் பலகையை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.


காலக்கழிவில் ஒன்று நடந்தேறியது. நான் கறுப்பு, வெள்ளை கட்டங்கள் கொண்ட சதுரங்க பலகையாகிவிட்டிருந்தேன். சித்தியும் அவளைச் சூழ்ந்தவர்களும் சதுரங்க காய்களாகியிருந்தார்கள்.


    - சங்கு 167 , அக்டோ 2018 - டிசம் 2018 இதழில் பிரசுரமானது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக