05.01.2019
கடலுக்குள் பெண்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது, பிராமணர்கள் கடல் தாண்டி வெளிநாடு செல்லக்கூடாது, பெண்கள் விண்வெளிக்கு பயணிக்கக்கூடாது, இடுகாட்டிற்கு பெண்கள் முச்சந்தியைத் தாண்டி செல்லக்கூடாது,
பூப்பெய்த பெண்கள் அந்த மூன்று நாட்கள் கோயிலுக்குச் செல்லக்கூடாது, ஐயப்பன் கோயிலுக்கு அத்தகைய பெண்கள் எப்பொழுதும் மாலையிட்டு செல்லக்கூடாது இப்படியாக இந்து மதம் கட்டமைக்கும் ஐதீகம் நிறைய உண்டு. ஐதீகம் என்பதே நம்பிக்கைகுரிய ஒன்றுதான் மறுப்பதற்கில்லை.
மூன்று வாரத்திற்கு முன்பு THE HINDU நடுப்பக்கத்தில் அரபிக்கடலில்
மீன் பிடிக்கும் ஒரு மீனவப் பெண்ணைப் படம் பிடித்து இந்தியாவில் நடுக்கடலில் மீன் பிடிக்க உரிமைப் பெற்ற முதல் பெண் என்கிற குறிப்புடன் பேட்டி வெளியாகியிருந்தது. விண்வெளிக்குச் சென்று திரும்பி பெண்களின் பட்டியல் நிறைய உண்டு. இடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் வேறு வழியே இல்லாமல் அனுமதித்த நம்மால் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் முரண்பட்டிருக்கிறோம்.
இது குறித்து பத்திரிகைகள்
பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்
அவர்கள் வழிபட மாதங்கள் தனியே ஒதுக்கலாம்
சீசன் காலமான இந்நேரத்தில் பெண்களை இத்தனை அவசரமாக அனுமதித்திருக்க வேண்டியதில்லை
முல்லைப்பெரியாறு விஷயத்தில் உச்சநீதி மன்றத்தை மதிக்காத கேரள அரசு இதை மட்டும் இத்தனை அவசரத்தில் நடைமுறைப்படுத்த காரணம் என்ன என்பதாக பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதியிருக்கின்றன.
கோவில் விசயத்தில் மட்டுமல்ல எத்துறையிலும் பெண்களுக்கு சமத்துவம் நிலவ வேண்டும் என்பது என் விருப்பம்.
நேற்றைய தினம் மாலை முரசு என்கிற பத்திரிகை ' பிடிவாதம் பிடிக்கும் பினராயி அரசு ' என்கிற தலைப்பில் தலையங்கம் தீட்டியிருந்தது. அத்தலையங்கம் முல்லைப்பெரியாறு - சபரிமலை இவ்விரு பிரச்சனைகளையும் உச்சநீதி மன்ற தீர்ப்பையொட்டி அமுல்படுத்தும் வேகத்தை மையமாக வைத்து எழுதியிருந்தது.
இன்றைய தினகரன் இதழில் ' அரசே துணை போவதா? ' என்கிற தலைப்பில் தலையங்கம். அதில் சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டுவது ஆளும் அரசு போன்றும் ஆண்கள் மது, போதை பிரச்சனையிலிருந்து விடுபட ஐயப்பன் தரிசனமே வழி என்பதைப் போலவும் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் மீது காட்டு விலங்குகள் தாக்குதல் தொடுக்காமல் காப்பது ஐயப்பன் என்பதைப் போலவும் எழுதப்பட்ட தலையங்கத்தை வாசிக்கையில் நாத்திக - திராவிட - பகுத்தறிவு இயக்க குடும்ப வழி பத்திரிகைதானா இது என ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொள்ள தோன்றியது. 'சபரிமலையிலுள்ள விலங்குகள் கூட ஐயப்பன் என்கிற சொல்லுக்கு கட்டுப்பட்டு யாரையும் துன்புறுத்தியது கிடையாது...' என்கிற வரிகளெல்லாம் தினகரன் இதழுக்கு அழகா, பொருந்துமா , ஏற்குமா..? என்று புரியவில்லை. அத்தலையங்கத்தின் வழியே அதே கேள்வியை இப்படி கேட்கத் தோன்றுகிறது. ஐயப்பன் கோயிலுக்குக் கட்டுப்பட்டு விலங்குகளே பக்தர்களைத் துன்புறுத்தாத பொழுது பக்திப்பெருக்கால் அக்கோயிலுக்கு வரும் பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது சரியா?
கருத்துகள்
கருத்துரையிடுக