செவ்வாய், 19 டிசம்பர், 2017

கட்டுரை


                முன்னத்தி ஏருக்கோர் அஞ்சலி
-----------------------------------------------------------------------------------------
பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தேறிய சம்பவம் இது. நான், நூலகத்திற்கு தொடர்ந்து செல்லத் தொடங்கிய காலம் அது. நூலகத்தில் ஆனந்த விகடன் இதழ் இருந்தது. அதில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதையொன்று பிரசுரமாகியிருந்தது. அடுத்து கல்கி இதழைப்பிரித்தேன். அதிலும் அவரது கதை இருந்தது. அடுத்ததாக என் கவனம் குமுதத்தின் பால் சென்றது. அதில் பிரசுரமாகியிருந்த கதையும் அவருடைய கதையாகவே இருந்தது.
       முந்தைய வாரம் குமுதம் இதழில் புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை வாசித்திருந்தேன். அதற்கும் இந்த வாரம் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதை மூன்று இதழ்களில் பிரசுரமாகியிருந்ததற்கும் நான் விபரீதமாக யோசித்தேன். இக்கதைகள் மூன்றும் மேலாண்மை பொன்னுசாமியின் நினைவுச்சிறுகதைகள் என்று.
       மூன்று கதைகளை வாசித்ததும் மேலாண்மை பொன்னுசாமியின் குடும்பத்தார்களிடம் பேசலாமென்று அழைப்பு விடுத்தேன். அவருடைய அலைப்பேசி எண்ணை நூலகத்திலிருந்து கிடைக்கப்பெற்றேன். எதிர்க்குரல் மெல்லியக் குரலாக ‘ நான் மேலாண்மை பொன்னுச்சாமி பேசுறேன்.....’ என்பதாக ஒலித்தது.
       அய்யோ! இவர் இறந்து விட்டார் என்றல்லவா நினைத்துவிட்டேன் என்பதாக அதிர்ச்சிக்கு உள்ளான நான் அவரிடம் சற்றும் யோசிக்காமல் கேட்டுவைத்துவிட்டேன்..‘ நீங்க இன்னும் உயிரோடுதான் இருக்கீங்களா...?’ என்று. அவரிடமிருந்து பெரும் மூச்சு மட்டுமே வந்திருந்தது. தடித்த உச்சரிப்பில் கேட்டார் ‘ நீங்க யார்...?’
       ‘ நான் புதுக்கோட்டை சிறுகதை வாசகன். நீங்க மேலாண்மை பொன்னுச்சாமி தானே...?’
       ‘ ஆமாம்...’
       ‘ இந்த வாரம் ஆனந்த விகடன், குமுதம், கல்கியில் கதைகள் வந்திருக்கிறதே அது உங்கள் கதை தானே...?’
       ‘ ஆமாம்...!’
       ‘ மன்னிக்க வேணும். கடந்த வாரம் குமுதத்தில் புதுமைப்பித்தன் நினைவுச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதைத் தொடர்ந்து  இந்த வாரம் உங்கள் கதை வந்ததும் நினைவுச்சிறுகதை என்று நினைத்து விட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்...’ என்றேன்.
       அவர் ஒரு எதிர்வினையாற்றலுமில்லாமல் அலைபேசியை அணைத்து வைத்தார். அவரிடம் அப்படியாகக் கேட்டக் குற்றவுணர்வு அவரது படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கவும், அவரிடம் உரையாடவும் செய்தது.
       தமிழகத்திலிருந்து வெளியான அத்தனை இதழ்களிலும் அவரது கதைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்திருக்கிறது. காலச்சுவடு என்கிற ஒரு இதழைத் தவிர. தானொரு கம்யூனிஸ்ட் எழுத்தாளரென அறிவித்துக்கொண்ட ஒருவரின் எழுத்தை தமிழகத்திலிருந்து வெளிவரும் அத்தனை இதழ்களும் கொண்டாடியது என்றால் அது மேலாண்மை பொன்னுசாமியின் எழுத்தை மட்டும்தான். அவரை  விடவும் வலுவானக் கருக்களை எடுத்துகொண்டு கதையாக்கிய எழுத்தாளர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருந்தாலும் போட்டிக் கதைகளின் வழியே பட்டித் தொட்டியெங்கும் தன்னை கவனிக்கும் படியாகச் செய்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி.       அவர் கலந்து கொண்டு பரிசு பெறாத போட்டிகளே இல்லை என்று சொல்லலாம். அதைத் தாண்டியும் அவரது கதைகள் வாசகர்களிடம் ஆணிவேர் விடுமளவிற்கு அவரது எழுத்தில் மண்ணும், ஈரமும் இருந்தது. மானாவாரிப்பூ, சிபிகள், மானடப்பிரவாகம்....என தொகுப்புகளை வாசித்து அவரிடம் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன்.
       அவரது சிறுகதைகளில் எனக்கு பிடித்தக் கதை ரோஜாக்னி, அரும்பு, இரண்டையும் சொல்லலாம். ரோஜாக்னி இறந்து போன மாட்டை அறுத்து தின்னும் மக்களைப் பற்றியக் கதை. இக்கதையில் மாடு வெட்டப்படும் காட்சியும், அக்கறியைச் சமைத்து தின்னும் காட்சியும் கண் முன்னை விரிந்து நிற்கும். அவரது கதையிலிருந்து மனதை விட்டு நீங்காத கதாப்பாத்திரம் என்றால் அவள் ‘செல்லி’.
       அரும்பு என்கிற கதையில் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்குப்போகும் ஒரு சிறுமிதான் செல்லி. சிறுமிகள் இனி வேலைக்கு வரக்கூடாது என்றும் அதிகாரிகள் இப்பொழுதெல்லாம் தொழிற்சாலைகளைக் கண்காணிக்கிறார்கள் என்றும் தொழிற்சாலை நிர்வாகம் சொல்லிவிட அவரது குடும்பம் தவியாய் தவிக்கும். செல்லி வேலைக்குச் சென்றால் மட்டும்தான் குடும்பம் பசியாற முடியும். கதையின் கடைசிப் பத்தி இவ்வாறு பேசும்.
       ‘ என்ன செல்லி , வேலைக்கு வரலியா?’
       ‘ வாரேன்’ உயிரில்லாமல் முனங்கினாள்.
       ‘ தாவணி?’
       ‘ மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும்’ சத்தமில்லாத தெருவில் , சத்தமில்லாமல் நடந்தனர்.
       இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்சின் ஹாரன்.
       ஒரு பிரேதத்தைப்போல....அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது, அந்த அரும்பு.

       இக்கதையை வாசிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கவே செய்யும். தாவணி என்பது பூப்பெய்ததற்கு பின் அணியக் கூடிய ஆடை என்று. ஆனால் குடும்பத்தின் வறுமை பூப்படைவதற்கு முன்பாக அவ்வாடையை அணிவித்திருக்கும்.
       மேலாண்மை பொன்னுச்சாமி முதலில் ஜெயகாந்தன் கதைகளைத் தொடர்ந்து வாசித்து வந்ததாகவும் அவரைப்போலவே முதலில் கதைகள் எழுதியதாகவும் பிறகு அப்படியான நடைப்போக்கு தனக்கான அடையாளத்தைத் தராது என்று உணர்ந்த நான் இன்னும் சற்று எளிய நடைக்கு மாற்றிக்கொண்டதை அவர்  பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
       மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் பாமர மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் எழுத்தாளர்கள் மத்தியில் சில விமர்சனங்களைச் சந்திக்கவே செய்தன. அவர் ஒரு முறை கி.ரா வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் எழுத்தாளர் அம்பையைச் சந்திக்க நேரிட்டது. அம்பை சொன்னாராம் ‘ மேலாண்மை பொன்னுச்சாமி என்ன நீங்கள் கதை எழுதுகிறீர்கள். உங்கள் கதை எனக்கு பிடிப்பதே இல்லை. உங்கள் கதைகளில் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருக்கிறது. ஆனால் உங்கக் கதையைத்தான் பத்தரிக்கைகள் கொண்டாடுகின்றன. எனக்கு அதில் உடன்பாடே இல்லை...’ என்று அலுத்துக்கொண்ட அவர் கொஞ்சத் தூரம் சென்று திரும்பி வந்தவர் ‘ ஆனாலும் பொன்னுச்சாமி என் அம்மாவிற்கு பிடிப்பது என்னவோ உங்கக்கதைதான்...’ என்றார். ஒரு சிறுகதை எழுத்தாளர் பார்வையில் ஒரு விதமாகவும், வாசகர்கள் மத்தியில் வேறொரு விதமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு எழுத்தாளர் வாசகரின் மனநிலையைக் கருத்தில் கொண்டே கதையாக்கம் செய்ய வேண்டும் என்றார்.
       அவர் சிறுகதைக் குறித்து அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்றுண்டு . ‘ சிறுகதை, வடிவத்தால் அடையாளப்பட்டு , உள்ளடக்கத்து நேர்மையால் அர்த்தப்பட்டு அழகாகும். கவிதையில்லாத - நாவலல்லாத - கட்டுரையல்லாத  வடிவத்தில் சிறுகதைக்குரிய வடிவத்தில் இருக்க வேண்டும்’.  சின்னதாக இருப்பதால் அல்ல சிறுகதை. சிறுகதை, ஐம்பத்து மூன்று பக்கம் கொண்ட ஆறாவது வார்டு என்ற ஆண்டன் செகாவ் எழுதிய படைப்பும் சிறுகதைதான். இரண்டரைப் பக்கம் மட்டுமே கொண்ட புதுமைப்பித்தனின் பொன்னகரமும் சிறுகதைதான் என்பார். அவருடன்  உரையாடுகையில் அடிக்கடி ஆறு கதைகளைச் சொல்லி என்னை அக்கதைகளை வாசிக்கத் தூண்டுவார். அக்கதைகள் ஆண்டன் செகாவ் எழுதிய ஆறாவது வார்டு, பச்சோந்தி, ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேஷம், புதுமைப்பித்தனின் பொன்னகரம், கு.அழகிரிசாமியின் திரிபுரம், கந்தர்வனின் துண்டு போன்றக் கதைகள். அவரது தொகுப்புகள் பற்றிக்கூறுகையில், அவரது முதல் தொகுப்பு மானுடம் வெல்லும். அதைப்பற்றி இதுவரை யாரும் பாராட்டிச் சொன்னதில்லை. அது ஒரு தோல்வியான தொகுப்பாகவே அமைந்திருந்தது. புதுக்கோட்டை மீரா பதிப்பகம் வெளியிட்ட ‘ சிபிகள்’ தொகுப்புதான் தமிழிலக்கியத்தில் பரிசீலிக்கப்பட்டது.  
       ஒரு முறை அவரது கதையொன்று கருக்கல் விடியும் இதழிலும் அதேக் கதை உயிர் எழுத்து இதழிலும் பிரசுரமாகியிருந்தது. ஒரே கதை இரண்டு இதழ்களில் பிரசுரமானச் செய்தியைச் சொல்லி அவருடன் தொடர்புகொண்டேன். அதை அவர் குற்றவுணர்வாகக் கருதினார். என் இத்தனை ஆண்டுகால இலக்கியப் பயணத்தில் இப்படியான நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை எனச் சொல்லி பெரிதும் வருந்தினார். அதற்காக வருத்தக்கடிதம் உயிர்எழுத்து இதழுக்கு எழுதப் போவதாக சொன்னார். அடுத்த மாத இதழில் அக்கடிதம் உயிர் எழுத்து இதழில் வெளியானது. அதற்குப்பிறகு மேலாண்மை பொன்னுச்சாமியின் கதை உயிர் எழுத்து இதழில் பிரசுரமாகவில்லை என்றே நினைக்கிறேன்.
       ‘ ஓர் எழுத்தாளருக்கு கற்பு மிக முக்கியம். தன் கணவன் வெறொரு பெண்ணை ஏறெடுத்துப்பார்க்கக் கூடாது என்கிற எதிர்ப்பார்ப்பு மனைவிக்கு இருப்பதைப்போல பத்திரிகையாசிரியர்களும் இருக்கவே செய்யும். அதை என்ன விலைக்கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும். ஒரு முறை அக்கற்பு நெறி தவறினால் அதன் பிறகு நம் கதைகளைப் பிரசுரம் செய்ய பத்திரிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவார்கள்’ என்றார்.
       அவரை நான் கடைசி வரைக்கும் நேரில் சந்தித்ததில்லை. மன்னார்குடியில் கடைசியாக அவருக்கு பெரிய அளவில் பாராட்டு விழா நடந்தேறியது. அதுவே அவருக்கு எடுக்கப்பட்ட கடைசி விழா என்று நினைக்கிறேன். ஒரு வாசகன் - எழுத்தாளன் போன்ற எனக்கும் அவருக்குமான அலைபேசி தொடர்பு பிறகு தந்தைக்கும் - பிள்ளைக்குமான நெருக்கமாக மலர்ந்தது. அந்த உறவுதான் எனது மொத்தக்கதைகளையும் தொகுத்து அவரது வாசிப்பிற்கு அனுப்பி வைக்கத் தூண்டியது. வெறும் வாசிப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்ட அத்தொகுப்பிற்கு அவர் அன்பில் ஓர் அணிந்துரை தந்து என்னை வியப்பில் ஆழ்த்தியதுடன், எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மழைக்குப் பிறகான பொழுது’ பரவலாக கவனிக்கும் படியாகவும் செய்தது. நான் தொடர்ந்து எழுதுவதற்கு உத்வேகமாக இருப்பவரும் அவர்தான். என் எழுத்தின் பிதா என்று அவரை நான் சொல்லிக்கொள்கிறேன். அவரது எழுத்து அவரின் மீதான நினைவுகளை விடவும் கனமானது. உண்மையானது. ஈரமிக்கது.
                                                                  

2 கருத்துகள்:

  1. நெகிழ்ச்சியான அஞ்சலி. மேலாண்மை பொன்னுசாமி எழுத்து குறித்த பல தகவல்களை அறியமுடிந்தது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு