“ வணக்கங்கய்யா.........
”
“... ம்...ம் ”
‘ ம்....ம்....’ சுந்தரியின் செவிப்பறைக்குள் எண்ணுமையாக ஒலித்தது.
ஒலிக்க மட்டுமா செய்தது...? சுயமரியாதையை ‘டர்.....’ரென ஒரு கிழி கிழிக்கவும் செய்தது.
‘எண்ணுமை’ சுந்தரி பள்ளியில் படித்தக்காலத்தில் பிடித்த இலக்கணமாக
இருந்ததோ என்னவோ ஆனால் அவளுக்கு அது புரிந்த இலக்கணம். பகுபத உறுப்பிலக்கணம், வியங்கோள்
வினைமுற்று, ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம், வினையெச்சம்,...இலக்கணங்களெல்லாம் பத்தாம்
வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு எழுதிய அடுத்த வினாடியே மறந்துப்போக எஞ்சி நிற்பது இந்த ‘எண்ணுமை’ மட்டும்தான்!
வயலு‘ம்’ வாழ்வு‘ம்’ , அல்லு‘ம்’ பகலு‘ம்’ , வெற்றியு‘ம்’ தோல்வியு‘ம்‘.....இப்படியாக
இரண்டு முறை ‘ம்’ வந்தால் அதற்கு எண்ணுமை என்று
பெயர். “ என்னங்கடி.... நா நடத்துறது புரியுதா...?” கேட்டிருந்தார் தமிழாசிரியர் விஜயலெட்சுமி.
“ புரிகிறது அம்மா”
“ என்னங்கடி புரியுது...?”
“ இரண்டு முறை ‘ம்’ வந்தால் அது எண்ணுமை” - சுந்தரி சொன்னதும் ஆசிரியர் அவளது கையைப்பிடித்து குலுக்கு
குலுக்கென குலுக்கி எடுத்துவிட்டார். அதுபோதாதென்று மாணவிகளின் பலத்தக் கைத்தட்டல்
வேறு. அவளது மனதிற்குள் இரண்டாம் வேற்றுமைத்தொகை ‘ஐ’ துளிர்விட்டது. இதற்கும்பிறகும்
எண்ணுமை மறந்துப்போக அவள் என்ன பிரணவ மந்திரத்தை மறந்த பிரம்மனா....?
எண்ணுமையும், முற்றுமையும் ஒரு கரு இரட்டையர்கள். ஒன்றுக்கொன்று
தொடர்புடைய தமிழ் இலக்கணங்கள்.
ஒரு ‘ம்’ வந்தால் முற்றுமை. உதாரணம் வணக்கம். இரண்டு முறை ‘ம்’ வந்தால் எண்ணுமை. நீயும் நானும்.
‘வணக்கம்’
தமிழ்ச்சொற்களில் மரியாதைக்குரியச் சொல் அது. என்னதான் குட்
மார்னிங்,
ஈவினிங், நைட் ....எனச்சொன்னாலும் ‘வணக்கம்’ இதிலிருக்கின்ற உயிர், பசை மற்றதில் வருமா....?
‘ வணக்கம்....முக்கியச்செய்திகள்.....’
அகில இந்திய வானொலியில், உங்கள், எங்கள் தொலைக்காட்சி செய்திகளில் கேட்கும் போது எத்தனை
மரியாதை அவர்களின் மீது ஏற்படுகிறது. அந்த வணக்கம் என்கிற ஐந்து எழுத்துடன் அய்யா என்கிற பிரிதிப்பெயர்ச்சொல்லையும் சேர்த்து அழகாக, பவ்வியமாக
ஒரு கடைநிலை ஊழியருக்கு இருந்தாக வேண்டிய பணிவுடன் சொல்லிருந்தாள் அவள்.
“ வணக்கம் அய்யா”
நீலகண்டர் அவளுக்கு பதில் ‘வணக்கம்’ வைத்திருக்க வேணும். அதையும்
சிரித்து சொல்லிருக்க வேணும். அது என்னதாம் “....ம்...ம்...?”.
சுந்தரிக்கு தலைகால் புரியாமல் கோபம் வந்தது.பெருமூச்சு விடுகையில்
ஆயுத எழுத்து தொண்டைக்குள் வந்து சிக்கியது. ‘ ஃ ’ .
வெள்ளைக்காரன் ஆட்சியாக இருந்திருந்தால் ‘...ம்....ம்’ சொல்லியிருக்க
முடியுமா...? . துரைமார்கள் விட்டிருப்பார்களா....? ‘ம்’ என்றால் சிறைவாசம் என்கிற
எதோ ஒரு சட்டவிதியின் கீழ் கைது செய்து அந்தமான் செல்லுலார் சிறையில் அடைத்து ‘செக்’ சுற்ற வைத்திருப்பார்கள்.
சுந்தரி அந்த அலுவலகத்தின் துப்புரவு ஊழியர். தொகுப்பு ஊதியம்.
மாதம் ஆயிரத்து ஐநூறு.தினம் தினம் அலுவலகத்திற்கு வருவதில் அகரம் அவள். ஒரு கூடை, அதற்குள்
ஒரு தூர்வை. கைவீசம்மா.... கைவீசு....என நடந்து வருபவள். கூட்டல், கழித்தல், பெருக்கல்
, வகுத்தல் அத்தனையும் தூரிகையால் செய்யக்கூடியவள்.
மக்கும் குப்பை,
மக்காதக்குப்பை எனப்பிரிப்பதில் தொடங்கி கீழே கிடக்கும் தபால்களை எடுத்து மேசையின் மீது வைப்பது வரை எல்லாம்
அவள் செயல்தான். அதுமட்டுமா.. ஒட்டடை அடிக்க, தண்ணீர் எடுக்க, அலுவலர்களுக்கு தேநீர்
வாங்கி வர, பாத்திரத்தைக் கழுவ....என ‘அம்மாடி இவ்ளோ ஓடியாடி வேலை செய்றீயே, கொஞ்ச
நேரம் ஓய்வு எடுத்துக்கிறக்கூடாதா....’ எனப்பார்க்கிறவர்கள் இரக்கப்படுமளவிற்கு வேலைகளை
வரிந்துக்கட்டிக்கொண்டு செய்து முடிக்கும் இயந்திரப்பெண் அவள்.
நீலகண்டர் அறையில் மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. பழைய காலத்து
மின்விசிறி அது. கிரிச், கிரிச்...என இரட்டைக்கிளவியில் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தது.
இடையிடையே ஆந்தையின் முணங்களைப்போல ‘ம்....ம்’
சப்தம் வேறு.
‘ம்...ம்’ இதைக்கேட்டதும் அவளால் தொடர்ந்து கூட்டிப்பெருக்கி
சுத்தம் செய்ய முடியவில்லை. மனதிற்குள் ஓர் அசூசை. தாழ்வு மனப்பான்மையும், அவமானமும் கலந்தக்கிறக்கம்
அவளைப்பற்றியது. அப்படியே முழங்கால்களை மடக்கி
தரையில் உட்கார்ந்தவள் அறைகளைச் சுற்றுமுற்றுமாகப் பார்த்தாள்.
சுவற்றில் இந்தியத்தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
புகைப்படத்தி்ற்கு பின்னால் சிட்டுக்குருவிகளும் சிலந்திகளும் , கறையான்களும், பல்லிகளும்
இல்லறமே நல்லறமென குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன.
ஒரு புகைப்படத்திற்கும் கீழே ‘உண்மையும் உழைப்பும் தனி மனிதனின் அடையாளம் ’ என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. உண்மையையும் உழைப்பையும்...அதைப்படிக்கையில் மறுபடியும் அவளுக்கு ‘...ம்...ம்’ எண்ணுமை மண்டைக்குள் ஏறி உட்கார்ந்துக்கொண்டு மலைபடுகடாம்
ஒப்பித்தது. அவளால் அதற்கு மேல் கூட்டிப்பெருக்க முடியவில்லை. மாவு பிசைவதைப்போல மனதிற்குள்
ஒரு பிசைவு பிசைந்தது. அவளைச்சுற்றிலும் “ம்...ம்
” ஒலித்துக்கொண்டிருந்தது.
சுந்தரிக்கு ஐயவினா எழுந்தது. நீலகண்டர் நான் வைக்கும் வணக்கத்திற்கு
மட்டும்தான் “..ம்...ம் ” என்கிறாரா...? இல்லை இந்த அலுவலகத்தில் பணியாற்றும் எல்லா அலுவலருக்கும்
அந்த புளித்துப்போன மரியாதைதானா.....? ”. இதை என்னவென்று பார்த்து விட வேண்டும்! முந்தாணையை எடுத்து இடுப்பில் சொறுகிக்கொண்டு திருப்புதல் தேர்வுக்கு இறங்கினாள் அவள்.
நீலகண்டர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு கால்களை மெல்ல
ஆட்டிக்கொண்டு கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். சித்ரா அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
உச்சி வகிட்டில் பெரிய குங்குமப்பொட்டு வைத்திருந்தார். அ1 எழுத்தர் அவர்.
அவர் தலைமை அறைக்குள் நுழைந்ததும் நீலகண்டரைப்பார்த்து சொன்னார். ‘‘வணக்கம் அய்யா”
நீலகண்டர் கோப்பிலிருந்து பார்வையை எடுத்து நிமிர்ந்துப்பார்த்தார்.
உயிர்நெடில் ‘ஐ’யை உச்சரிக்கும் அளவிற்கு சிரித்தவர் “ வணக்கம் சித்ரா ” என்றார்.
சுந்தரியின் மண்டைக்குள்
‘கிண்ண்’ணென இருந்தது.
“ அய்யா... எப்படி இருக்கீங்க.
வீட்டில எப்படி இருக்காங்க....? ”
“ ஒரு கவலையுமில்ல. எல்லாரும் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே..?
உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்...?”
“ நல்லா இருக்கார்’’
சித்ரா விடைபெறலானார்.
அடுத்து ரகுராமன். அவர் ஆ2 எழுத்தர். ரகுராமன் பின்பக்க முடியை சீப்பால் ஒடுக்கிக்கொண்டு
முன் வழுக்கையை கைக்குட்டையால் துடைத்துவாறு நீலகண்டர் அறைக்குள் நுழைந்தார்.
“ வணக்கங்கய்யா”
“ வணக்கம் ரகுராமன்”
அவரது தலை அதற்குள்
மேல் நிமிர்ந்திருக்கவில்லை. ஒற்றைச்சுழி எழுத்தைப்போல குனிந்துகொண்டது.
“ அய்யா நாளைக்கு
ஒரு நாள் விடுப்பு வேணும்”
“ ஏன் ரகுராமன்...?”
“ பையன் வெளிநாடு
போறான். வழி அனுப்பி வைக்கணும்.”
“ யாருடைய விடுப்பை
எடுக்குறீங்க...?
உங்க விடுப்பைத்தானே....தாராளமாக எடுத்துகொள்ளுங்கள்....’ உயர்அதிகாரிகளுக்கென்று ஒரு
முகம் இருக்கிறது. அந்த முகத்தைக்காட்டியவாறு இருந்தார் அவர்.
“ நன்றிங்க அய்யா....”
‘ பரவாயில்லை....’
போனவாரம் நான்
ஒரே ஒரு நாள் விடுப்பு கேட்டேனே...இப்படி அனுசரணையான பதில் வரவேயில்லை.. எத்தனைக்கேள்விகள்
கேட்டார். பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்கும் வகை கேள்விகளாக அல்லவா கேட்டார்.
அத்தனைக் கேள்விகளையும் கேட்டு கடைசியில் குற்றியலுகரத்தில் பதில் சொன்னார் “கிடையாது”
. அதை நினைக்க நினைக்க அவளது மனதிற்குள் கண்ணகி வைத்த மதுரைத்தீ தகதக...வென எரிந்தது.
அடுத்ததாக உதவி
அதிகாரி கிருஷ்ணன். வரும்பொழுதே அலைபேசியில் உள்ளூர் அரசியல் பேசிக்கொண்டு வந்தார்.
அறைக்குள் நுழைந்ததும் அலைபேசியை ‘உஷ்’ நிலைக்கு மாற்றிவிட்டு தலைமை முன் பவ்வியமாக நின்றார்.
“ வணக்கங்கய்யா”
“ வணக்கம் கிருஷ்ணன்”
மனிரத்தினம் திரைபட
வசனம் அளவிற்கு அந்த உரையாடல் இருந்தது. அவ்வளவேதான்! கிருஷ்ணன் அவரது இடத்தை நோக்கி
நடக்கலானார். வழியில் நிறைய அலுவலர்கள் உட்கார்ந்து கோப்பில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி அழைத்தார்.
“ சித்ராம்மா வணக்கம்”
“ வணக்கங்கண்ணா”
“ ரகுராமன் அய்யா
வணக்கம்”
“ வணக்கம் அய்யா
”
“.......”
“ சுந்தரி.....”
தனக்கொரு வணக்கம்
கிடைக்கப்போகிறது என்கிற வேட்கையுடன் வேகமாக திரும்பினாள் சுந்தரி.
“ நேற்றைக்கு காலையில
என் அறையைக் கூட்டினது யார்...?”
கேள்வி , பாம்பின் தலையைப்போல
தொடுக்கி நின்றது. எல்லோருக்கும் வைத்த வணக்கம் எனக்கு ஏன் இல்லை.....?
‘ என்ன யோசனை கேட்கிறேன்ல....?’
சுந்தரி திடுக்கிட்டாள்.
“ நான்தான்க..”
“ கூட்டுறப்ப கீழே
ஒரு மஞ்சள் உறை கிடந்ததா...?”
“ இல்லைங்களே....”
“ எதுக்கும் இனி
நல்லாப் பார்த்துக் கூட்டு ”
கட்டளை வாக்கியம்
முகத்தில் ‘ சப்’பென அறைந்திருந்தது.
“ சரிங்க” பதிலுக்கு அவள் வியங்கோல் வினைமுற்று.
கிருஷ்ணன் அவருடைய அறைக்குள் சென்றார். தினக்காட்டி தாளைக்கிழித்து
அதை மேசைக்கு கீழுள்ள குப்பைத்தொட்டிக்குள்
விட்டெறிந்தார். தன்னுடைய கைக்குட்டையால் நாற்காலியைத்துடைத்து உட்கார்ந்தார். கோப்புகளை
அடுக்கினார்.
“ அய்யா.....” என்றவாறு
அவரது அறைக்குள் நுழைந்தாள் சுந்தரி.
“ ம்” என்றவாறு கிருஷ்ணன் மெல்ல நிமிர்ந்தார்.
“ வணக்கம் ”
“ ம்...ம்....
”
அலுவலகக்குப்பைகளைக்
கூட்டிப்பெருக்கும் எனக்கும் இந்த வணக்கத்தி்ற்கும் ரொம்பத்தூரமோ....? மனதிற்குள் சமாதானமடையாத
கிறக்கம் அவளை ஆட்கொண்டது. அவளுக்குள் யாரோ ஒருவர் உட்கார்ந்துக்கொண்டு கைத்தட்டி கேலியாகச் சிரிப்பதைப்போல இருந்தது. அலுவலகத்திற்குள்
நேர்வெட்டு, குறுக்குவெட்டில் நடந்தாள்.
“வ,ண,க்,க,ம்.....” இந்த ஐந்து எழுத்து மரியாதைக்கு கிடைக்கும்
பதில் மரியாதையைப் பாருங்கள். ‘ம்...ம்....’.
அதுவும் நான் உச்சரித்ததிலிருந்து கடைசி எழுத்தை
உருவி பிச்சையாக போடுவதைப்போல. கறையான் அரிப்பதை விடவும் ஆழ்மனதை சுயமரியாதை அரித்தது.
நானும் எல்லாரையும் போல ஓர் ஊழியர்தானே....கடைநிலை ஊழியராகவே இருந்திட்டுப்போகிறேன்...இந்த
அலுவலகத்தில் பணியாற்றுபவள்தானே....வணக்கம் வைத்தால் அது என்னதாம் ‘ம்...ம்....?’
உடுத்தியிருந்த
சேலையை அப்படியும் இப்படியுமாக எடுத்து விட்டுக்கொண்டாள். முகத்தைக் கழுவி வாசனை அடித்துக்கொண்டாள்.
கணுக்காலுக்கு மேல் தூக்கிக்கொண்டிருந்த சேலையை இறக்கிவிட்டுக்கொண்டாள். மறுபடியும்
அவள் தலைமை நீலகண்டர் முன் போய் நின்றாள். ஒன்று போல நிமிர்ந்து நின்றாள்.
‘ அய்யா...வணக்கம்’
கும்பிட்டு பழகிய அவளது கைகள் சக
ஊழியர்களைப்போல கையை நீட்டி மடக்கி நெற்றியில் வைத்தபடி அதைச்சொல்லிருந்தாள்.
நீலகண்டர் நிமிர்ந்துப்பார்த்தார். மெல்லியதாகச்சிரித்தார்.
அவ்வளவேதான்! அரைமாத்திரை அளவிற்குள் இத்தனையும் நடந்தேறியது.
அவள் விடுவதாக இல்லை.
‘ அய்யா... வணக்கம்’
நீலகண்டர் கோப்பை மூடினார். மேசையிலிருந்த எடைக்கல்லை சுற்றிவிட்டார்.
“ என்ன சுந்தரி என்றைக்குமில்லாம..... செலவுக்கு பணம் எதுவும்
வேணுமா.....?”
“ வேண்டாங்கய்யா ”
“ நாளைக்கு விடுப்பு
வேணுமா....?”
“ இல்லங்கங்கய்யா”
“ பின்னே.....?”
“ வணக்கங்கய்யா”
“ ...ம்...ம்...”
கயிறு அறுந்து வாளி ‘தொபுக்’கென்று கிணற்றுக்குள்
விழுவதைப்போல விழுந்தாள் அவள். அவள் சந்தித்திருக்கும்
அதிகப்பட்ச அவமான உச்சமாக அதை உணர்ந்தாள்.
கடைநிலை பணியாளரிடம்
உயர் அதிகாரிகள் இப்படிதான் நடந்துக்கொள்வார்களா...? இதை சந்திப்பிழையைப்போல கண்டும்
காணாமல் விட்டுவிட வேண்டுமா...? இந்த ‘ம்’ வாங்குவதற்காகதான் நான் தினம்தினம் வலிய
வந்து இவர்களுக்கு வணக்கம் சொல்கிறேன்.
மாட்டேன்.... இனி
நான் மாட்டேன்.....இதை நான் இத்துடன் விடப்போவதில்லை.... கால்களால் நடந்தவள் தலையால்
நடக்கலானாள்.
‘என்ன செய்யலாம்....?
’ தலை பலவற்றைச் சுரந்தது. அதில் ஒன்றை கண்
முன் கொண்டு வந்து மெச்சிக்கொண்டாள். அவளுக்கு அவளே கைக்குலுக்கிக்கொண்டாள்.
அவளது கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டது. ஓர் அறைக்குள் ஓடினாள். ஒரு துண்டுச்சீட்டை எடுத்தாள். அவள் மனதிற்குள்
தோன்றியதை ஆங்கிலத்தில் எழுதினாள். தலைமை அலுவலர் நீலகண்டன் முன் கொண்டு போய் நின்றாள்.
‘ அய்யா....இதில்
என்ன எழுதியிருக்கிறதென வாசித்து சொல்ல முடியுங்களா....’
கோப்பையும் அவளையும் மாறிமாறிப்பார்த்தவர் அதை
வாங்கினார். மனதிற்குள் படித்தார். பிறகு அவளுக்கு கேட்கும்படியாக வாசித்தார்.
“ வணக்கம் சுந்தரி’
அவளுக்கு இதமாக இருந்தது. அளபெடையில் சிரித்தாள்.
‘ என்னங்கய்யா.....?’
‘ வணக்கம் சுந்தரி...’
அவளுக்குள் துப்பாய தூஉம் மழை பெய்யத் தொடங்கியது.
அருமை
பதிலளிநீக்குசுந்தரி சொன்னாள் ஒரு சேதி.
பதிலளிநீக்கு