சனி, 10 செப்டம்பர், 2016

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங்

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங் - நூல் விமர்சனம்
       என்.சி.பி.எச் வெளியீடு. நான்காம் பதிப்பு. விலை ரூபாய் எழுபது.
       ‘விஞ்ஞானம் - நேற்று - இன்று - நாளை ’ பதினேழு கட்டுரைகள் உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கிறது. அறிவியல், வரலாறு இரண்டையும் கலந்து தொகுக்கப்பட்ட தொகுப்பினை வாசிக்க நம்மை விண்வெளிக்குள் அழைத்துச்சென்று பால்வெளித் திரளுக்குள் ஒரு புள்ளியாக கரைத்துவிடுகிறது.
       சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள கேலக்ஸி ஆண்ட்ராமீடா என்கிற பால்வெளித்திரள், நம்முடைய பால்வெளி ஸ்பைரல் கேலக்ஸ், சந்திரனிலிருந்து பார்த்தால் பூமி எப்படித் தெரியும், மனிதனின் மூதாதையர் குரங்கு தானா...? மீனிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறதா...? காற்றிலுள்ள ஹைட்ரஜனைப்பிரித்தெடுத்து எரிபொருள் தயாரிக்க முடியுமா...? ஒரு வேளை தயாரித்தால் ஒரு டீ ஸ்பூன் அளவிலான பெட்ரோலுக்கு ஈடாக எவ்வளவு ஹைட்ரஜன் தேவைப்படும், குரோமோசோம்களின் உருவாக்கம், ஏப் வகை குரங்கிற்கும் மனதினுக்கும் உள்ள தொடர்பு பல அறிவியல் புதிர்களை விடுத்து அவிழ்த்திருக்கிறது.
       ஒரு பக்கம் சகாரா பாலைவனம், இன்னொரு துருவத்தில் அண்ட்ராட்டிகா பனி இவை இரண்டும் மொத்தப்பூமியின் வெப்ப சமநிலையை ஈடு செய்கிறது. அயல் கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வேற்றுக்கிரவாசிகள் வந்துப்போனதாகச் சொல்கிறார்களே உண்மைதானா...? அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா...? ஒரு செயற்கைக்கோளினைக் கொண்டு இரவை பகலாக்க முடியுமா....கடல்நீரை குடிநீராக்கினால் கடல் மட்டும் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியுமா...? என நீளும் கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு புதிர்கள் முடிந்தும் அவிழ்ந்தும் கிடக்கின்றன.
       இக்கட்டுரையின் தொகுப்பை மாணவர்களுக்குரிய நூலாகக்  கொண்டு வந்திருக்கலாம். மூளை நரம்பு மண்டலம் நியூரான் செல்களால் ஆனது என்பதை நியூட்ரான் செல் என உள்ளதை திருத்தியிருக்கலாம். அடுத்தப் பதிப்பில் இத்தவறு திருத்தப்படும் என நம்புகிறேன்.
       தமிழ் உத்தம் சிங்கின் பரந்த வாசிப்பும், எதையும் அறிவியலாகப் பார்க்கும்  பார்வையும், இக்கட்டுரைகளில் கொட்டிக்கிடக்கிறது. உண்மைகளால் ஆன ஒரு திறந்த பெட்டகம் ‘ விஞ்ஞானம் நேற்று  - இன்று - நாளை’. அனைவரும் வாசித்தாக வேண்டிய ஓர் அறிவியல் தொகுப்பு. தமிழ் உத்தம் சிங் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
        



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக