வியாழன், 8 செப்டம்பர், 2016

நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து

காக்கை இதழ் - செப்டம்பர் - நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து கட்டுரை வாசித்தேன்.
       இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து இதுநாள் வரை நான் வாசித்த கட்டுரைகளில் ஆகச்சிறந்த கட்டுரையாக அக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அக்கட்டுரை சொல்ல வந்திருப்பது ஆசிரியர் தினம் நல்வாழ்த்துகள். ஆனால் அத்தனை இலகுவாக, மாணவர்களின் மெட்ரிக், நீட்டல், நிறுத்தல் அளவைகளுடன், சவ்வூடு பரவலாக ஆசிரியர்களின் மனதிற்குள் நுழைந்து வேதி வினை நிகழ்த்திருக்கிறது. இத்தகைய நல்லக்கட்டுரை ஆசிரியர்களைத் தாண்டி எத்தனைப்பேருக்கு புரியமெனத் தெரியவில்லை. என் கவலை அதுவல்ல. நம் ஆசிரியர்களில் எத்தனைப்பேர் இதை வாசிக்கப் போகிறார்கள்....?
       கட்டுரையை கீழ்க்காணும் வாசகங்கள் அழகூட்டுகிறது.
       பொருட்களைக் கையாளும்போது உணர்வு ஒரு துருவத்தில்தான் செயல்படுகிறது. மனிதர்களைக் கையாளும் போது இருபுறமும் உணர்வு ஏற்படுகிறது.
       ஆசிரியர்களாகிய நீங்கள் தவறு செய்தால் பதின்பருவ நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும். நீங்கள் காமம், வெகுளி, மயக்கம் கொள்வதால் உங்களுக்கு போதித்த ஆசிரியச் சான்றோர்களின் நாமம் கெடும்.
       நடுநிலைக் கரைசலாக இருக்க வேண்டிய உங்களின் வேதிச் சமநிலை குலைந்ததால் ஏற்பட்ட இடமாறு தோற்றப்பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
       நீங்கள் குடல்வாலோ, பித்தப்பையோ அல்ல. மனித சாரத்தின் நாடி நரம்புகள்.
       குழந்தைகள் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவைகள் அல்ல. அவர்கள் படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியிருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவரின் அசைவையும் துல்லியமாகக் கணிக்கும் இயற்பியல் தாரசுகள்.
       உங்கள் அறிவுக்கும் வயதுக்கும் எள்ளளவும் இணையானவர் இல்லை குழந்தைகள். அவர்களிடம் தோற்றுப்போவதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது.
       தகு பின்னம், தகா பின்னங்களாக வந்து சேரும் அவர்களை முழுக்களாக மாற்றுவதே ஆசிரிய மகிமை.
       உங்கள் அட்ச ரேகை, தீர்க்க ரேகைத் துருவங்களின் நிலப்படம்தான் குழந்தைகளின் ஆயுள் ரேகையைத் தீர்மானிக்கிறது
       இப்படியாக நவீன நன்னெறியுடன் நீளும் கட்டுரை இவ்வாறு முடிகிறது...‘ எவ்வழி  நல்லவர் எம் ஆசிரியர், அவ்வழி நல்லை வாழிய நிலனே....’ இதைவிடவும் சிறப்புற ஆசிரியரை வாயுறை வாழ்த்திட இன்னொருவர் வேண்டுமா என்ன...!

       எழுத்தாளர் நா. அருள்முருகன் அவர்களையும், இக்கட்டுரையை பிரசுரம் செய்திருக்கும் காக்கை இதழையும் இப்பொழுதே நன்றிப்பாராட்டுவதை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக