முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மச்சக்குட்டி

                           
  ‘அம்ம...செவிட்டி குட்டி ஈனப்போகுது....’
‘படக்..படக்’கென காவ்யாவின் கண்கள் அடித்துக்கொண்டன. ‘அய்..’ யென  ஒரு சிரிப்பு சிரித்துகொண்டாள். ‘மாக்..’ கென ஒரு குதி குதித்துகொண்டாள். தவளை தாவித்தண்ணீருக்குள் குதிப்பதைப்போன்ற  தடாகக்குதிப்பு அது.
அவள் குதித்தக்குதியில் பாவாடை அவிழ்ந்து நழுவிக்கொண்டு சென்றது. லாவகமாக அதை ஒரு கையால் பிடித்துகொண்டாள். மறுகையால் தொடையை அடித்துகொண்டாள். பந்து குதிப்பதைப்போல ஒரே இடத்தில் நின்றுகொண்டு குதித்தாள். அவளது குதியில் உருப்பட்டிகள் நாலாபுறமும் தெறித்து வெறித்து ஓடின ‘ கொர்...கொர்...’ என பெருமூச்சொரிந்து உறுமின.  
 ‘ அம்ம.....’ பார்வைக்கயிறு கொண்டு அம்மாவை இழுத்தாள். அவளது அழைப்பில் அத்தனை கெஞ்சல், பாசம், பிசிபிசிப்பு இருந்தது.   
       அவள் வீட்டில் எத்தனையோ பன்றிகளும், குட்டிகளும், கிடாக்களும் இருந்தாலும் அவளுக்குப்பிடித்தது செவிட்டிதான்.        காவ்யாவிற்கு உதவித்தொகையாக பள்ளிக்கூடத்தில் ‘ஐநூறு’ ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகையில் வாங்கியக் குட்டி இது. அவளின் நான்கு கால் சொத்து. நடமாடும் நிஜப்பிம்பம். நினைவில், கனவில் வாலை ஆட்டுவதும், தலையைச் சிலுப்புவதுமான உயிர் பொம்மை. காதுக்கேளாத குட்டி என்பதால் அதற்கு இப்படியொரு பெயர் ‘செவிட்டி’. யானையைப்போல கொழு, கொழுப்பு. மச்சங்களை வழித்து உருட்டித் திரட்டி கண் , காது, நாசி வைத்த அழகான கறுப்புப்பிண்டம்.
       ‘ அம்ம....சுருக்கா வாம்மா......’ அம்மாவை அவள் ‘வெடுக்’கென அழைத்தாள். பார்வையை வாசலின் ஊடே வீட்டிற்குள் நுழைத்தாள். அம்மாவிடமிருந்து ஓர் அரவமும் வரவில்லை.
       காவ்யா கீழேக் கிடந்த ஒரு ரொட்டித்துண்டை எடுத்துகொண்டு செவிட்டியிடம் ஓடினாள். இத்தனை நாள் வாலாட்டி பெருமூச்சொரிந்த செவிட்டி அவளைக்கண்டு சீறியது. அருகில் வந்தால் கடித்துக்குதறிவிடுவேன் என்பதைப்போல பற்களைக்காட்டி அகோர முகத்தைக்காட்டியது. ‘இச்’ என இருந்தது அவளுக்கு. அழுதுவிடணும் போலிருந்தது.
       ‘ நான் வளர்த்த செவிட்டி இது.  என்னையும் இது கடிக்குமா....? தலையால் முட்டுமா....?’ தொண்டைக்கும் நாசிக்குமிடையே ஏமாற்றம் திண்மமாக உறைந்து உருண்டது.
       ‘ அம்ம...செவிட்டி என்ன முட்ட வருதும்மா....’
       குடிசைக்குளிலிருந்து வெளியே ஓடி வந்தாள் போதும்பொண்ணு. நெற்றியில் விழுந்துக்கிடந்த தலைமுடிகளை  விலக்கி மகளைப் பார்த்தாள்.
       ‘ அம்ம....செவிட்டி குட்டி ஈனப்போகுதும்மா....’ இதை அவள் சொல்கையில் மயிலிறகு குட்டிப்போடுவதைப்போன்ற மகிழ்ச்சி பெருக்கு அப்பொழுது அவளுக்கு.
       ‘என்னடி சொல்றே....அதற்குளையுமா....குட்டி ஈனப்போகுது.....தலைச்சாங்குட்டியாச்சே.... எத்தனக்குட்டிக ஈனப்போகுதெனத் தெரியலையேடி......’ பற்களால் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு, அது அனுபவிக்கப்போகும் வலியின் ரணத்தை முகத்தில் ஏந்தியவாறு போதும்பொண்ணு செவிட்டியை நோக்கி ஓடிவந்தாள். கோழியின் பரபரப்பு அவளது பார்வையில் இருந்தது. அவளைச்சுற்றிலும் பன்றிகள் கூட்டமாக நிறைந்து நின்றன. ‘கொர்....கொர்.....’ என்றன.
       போதும்பொண்ணு நாலாபுறமும் துலாவி ஒரு குச்சியை எடுத்தாள். பன்றிக்கூட்டத்தை அலங்கப்புலங்க  அடித்து விரட்டினாள். பன்றிகள் இல்லாத வாசலில் பன்றி விட்டைகளாக இருந்தன. நெருப்பை மிதிப்பதைப்போல கால்களை மெல்ல எடுத்துவைத்து படலுக்குள் ஓடிவந்தாள். சேலையை முழங்காலுக்கு  மேலாகத் தூக்கிச்சொறுகிக்கொண்டாள்.
                செவிட்டி  பின்னங்கால்களை சம்மனமிட்டு , முன்னங்கால்களை உட்புறமாக மடக்கி வயிற்றிற்கு மெத்தைப்போல முட்டுக் கொடுத்து படுத்திருந்தது. போதும்பொண்ணைக் கண்டதும் கொர், கொர்..” என்றது.       போதும்பொண்ணு செவிட்டியின் அருகினில் சென்றாள். செவிட்டி தன் கோர முகத்தை விகாரமாகக் காட்டியது. அதன் தலையைத் தட்டிக்கொடுத்தாள். வயிற்றில் ‘ கிச்சுக்கீச்சு’ மூட்டினாள். அதன் வாலைத்தூக்கி   அரையைப் ( குறி) பார்த்தாள்அரை  குளிர்ச்சியாகவும், குட்டியை ஈன்று எடுக்குமளவிற்கு விலகியும் போயிருந்தது
                “ காவ்யா...வெளக்கெண்ணெய எடுத்துக்கிட்டு வா
                அவள் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடினாள்போதும்பொண்ணு  செவிட்டியின்   வயிற்றை  மெல்ல நீவிக்கொடுத்தாள். தலையையும் கழுத்தையும் தடவிக்கொடுத்தாள். “ உச்கொட்டிக்கொண்டாள். செவிட்டியின் தொடையைத் தட்டி  உசுப்பி எழுப்பினாள்.
             “ கொர், கொர்...” என்றது செவிட்டி .
                கையில் விளக்கெண்ணையை  தடவிக்கொண்டாள்.    அரைக்குள் ஆள்காட்டி விரல்களை நுழைத்தாள்.  வட்டமாக விரித்துக்கொடுத்தாள்.  நின்றுகொண்டிருந்த செவிட்டி படுத்துகொண்டது.
                “ காவ்யா........”
                “ அம்ம...
                “  ஓடிபோய்  கஞ்சியை கொஞ்சம் ஊத்திக்கிட்டு வா
                அவள்  ஓடினாள்நேற்றைய தினம் அன்னபூரணி ஓட்டலிலிருந்து கொண்டுவந்திருந்த இட்டலிக்கஞ்சியை ஒரு குடத்தில் முகர்ந்து வந்தாள்.
                “ என்ன செய்யணும்மா  ?”
                “  கஞ்சிக்குள்ள  இட்லி துண்டுக கெடக்கானு பாரு
             குடத்திற்குள் உற்றுப்பார்த்தாள்கஞ்சியிலிருந்து   புளித்துப்போன  வாசனை கிளம்பியதுஅவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.   கெடக்கும்மா
             “ அள்ளி வாய்க்கிட்ட வை
                காவ்யா தொட்டிக்குள் இடது கையை அலாவி ஊறிப்புளித்துப்போயிருந்த இட்லியை அள்ளி செவிட்டி வாயிடத்தில் வைத்தாள். படுத்திருந்த செவிட்டி மெல்ல எழுந்தது.  
                போதும்பொண்ணு செவிட்டியின் பின்னங்கால்களை விலக்கி வைத்தாள். அடி வயிற்றை எம்பிக்கொடுத்தாள்.                 ஒரு குட்டியின் தலை வெளியே எட்டிப்பார்த்தது. அதைப்பார்த்ததும் காவ்யாவின் முகம் சட்டென மலர்ந்தது. பிறை அளவிற்கு சிரித்தாள். ‘ மாக்’கெனக் குதித்தாள். கண்களை மூடி செவிட்டி அனுபவிக்கும் வலியை  உள்ளுக்குள் ஏந்தினாள்.
       ‘வலியை பொறுத்துக்கடி கண்ணு. இன்னையிலிருந்து மூனு நாளைக்கு நீ மேய போக வேணாம்.   பட்டிக்குள்ளேயே கிடநான் ஒனக்கு ஓட்டலுக்கு போயி இல சோத்துகள அள்ளிக்கிட்டு வந்து தாறேன். ம்......’ சொல்லிக்கொண்டாள். அவளுடைய உதடுகள் ‘மெல்ல...மெல்ல....’ என உச்சரித்தப்படி இருந்தன.
                 முதல் குட்டி  ‘பொத்தென தரையில்  விழுந்தது.
                ‘ அய்....’ அவளுடைய முகம் பட்டாசு போல சிரித்தது.
        அடுத்தடுத்து மூன்று குட்டிகள் விழுந்தன. காவ்யாவின் முகம் பூரித்தது. மகிழ்ச்சியின் பெருக்கில் பொங்கியது.
       செவிட்டியின் வாலிடத்தில் நஞ்சுக்கொடி தொங்கியது. குட்டிகள் கிடந்த பக்கமாகத் தாய்ப்பன்றி  திரும்பியது.  குட்டியை நுகர்ந்து பார்த்தது.     ‘ அம்ம...அம்ம... குட்டிக காதில ஊதும்மா....’
       போதும்பொண்ணு சிரித்தாள். மகளின் மூக்கு நுனியை அள்ளிக் கொஞ்சினாள். குட்டிகளின் காதுகளில் ஊதினாள்.  ‘ நீ வளர்ந்து காவ்யாவிற்கு நிறைய காசுகளக் கொடுக்கணும்...’ குட்டிகளின் காதிற்குள் கிசு,கிசுத்தாள். வாயை இரண்டு விரல்களால் அழுத்தி ‘ ஆ...’ என அகற்றி வாயிற்குள் விரல்களை விட்டு சளியை வழித்து அள்ளினாள்.  பாதக்கொழம்புகளில் சுண்டினாள்.    
                ‘ அம்ம... குட்டிக காதில நல்லா ஊதும்மா...தாயப்போல குட்டியும் செவிட்டியாகிடப்போகுது......’
       ‘ நல்ல ஊதிட்டேன்... வேணுமெனா நீ  ஒருக்கா ஊதிக்கோ.....’
       காவ்யா ‘ அய்..’ யெனச் சிரித்தாள். முழங்காலிட்டு குனிந்து குட்டிகளின் காதுகளில் ‘ பொஸ்...பொஸ்.....’ என ஊதினாள்.
        “எத்தன பெட்ட....? எத்தன கிடாம்மா.....?’
       அவளது கண்களில் ஆர்வமும்,ஆவலும் மின்னின. எதிர்ப்பார்ப்பு குவிந்தன.
                போதும்பொண்ணு குட்டிகளின் வாலினைத் தூக்கிப்பார்த்தாள். ‘ மூனு கிடா.   ரெண்டு பெட்ட’
                 அப்ப...ஒரு கிடாக்குட்டியை கோயிலுக்கு எசவு விடுவோம்மா
                போதும்பொண்ணு சிரித்தாள். மகளை மார்போடு அணைத்தாள்.  மகளின் வேண்டலுக்கு  சம்மதம் தெரிவித்தாள்.   காவ்யாவின்   முகத்தில் சந்தோசம் பீறிட்டது. எம்பிக்குதித்தாள். கலகலவெனச் சிரித்தாள். அவள் சிரிப்பில் முப்பத்திரண்டு பற்களும்  சிரித்தன.
                                                              & & &
       காவ்யா வீட்டு வாசலில் இரண்டு வியாபாரிகள் நின்றுகொண்டிருந்தார்கள்.
       அவள் பட்டிக்குளிலிருந்த அத்தனை உருப்படிகளும் மொத்தமாக விலை பேசப்பட்டிருந்தன.  நெட்டையும் குட்டையுமாக மொத்தம் இருபத்திரெண்டு உருப்படிகள். மூன்று தாய்கள். ஐந்து கிடாக்கள். பத்து பெட்டைகள். நான்கு குட்டிகள்....அவசரம் அவசரமாக பேசி முடித்திருந்த விலையாக அவ்விலை இருந்தது. செவிட்டியும், அது ஈன்றெடுத்த குட்டிகளும் வயிற்றிலடிக்கும் படியான விலைக்கு விலைபோயிருந்தன.
       காவ்யா முருங்கைப்போத்தைப்போல மனமுறிந்து போயிருந்தாள். அவளுடைய செல்லம் செவிட்டியும் அதன் குட்டிகளும் கை நழுவிப்போவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்ணீர் கம்பலையுடன் பரிதாபத்துடன் நின்றாள். வாசலுக்கும் திண்ணைக்குமாக கால் கைகளை உதைத்துகொண்டு உருண்டாள்.
       ‘ஏ செவிட்டிய விற்காத....ஏ செவிட்டிய விற்காத.....’ அவளுடைய உதடுகள் கெஞ்சியவண்ணமிருந்தன. அவளது அழுகை, கெஞ்சல் அவளது அப்பா சங்கிலிமுத்து கண்களில் ஈரத்தைத் துளிர்க்க வைத்திருந்தது. போதும்பொண்ணு முந்தாணையைச் சுருட்டி வாயிற்குள் திணித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
       காவ்யா தலை முழுவதும் மண். கன்னங்களில் தாரையாக ஒழுகிய கண்ணீர் பிசுபிசுத்துப்போயிருந்தது. ‘ எனக்கு ஏ செவிட்டி வேணும்....’
       மகளை வாறி அள்ளினாள் போதும்பொண்ணு. தோளில் கிடத்திக்கொண்டு ஒட்டிக்கிடந்த மண், தூசிகளைத் தட்டிவிட்டாள். காவ்யா கால் கைகளை உதறியவாறு உடம்பை வளைத்துத் துள்ளினாள்.
       ‘ எனக்கு ஏ செவிட்டி வேணும்......செவிட்டி வேணும்.....’
       ‘ பன்றிகள வளர்க்கக் கூடாதாம்மா.... பஞ்சாயத்தில சொல்லிட்டாங்க.....புரிஞ்சிக்கோம்மா....ஏ செல்லம்ல.....ஏ தங்கம்ல......’
       காவ்யா எதையும் காதினிலும் வாங்கிக்கொள்வதாக இல்லை. அவள் சொன்னதையே கிளிப்பிள்ளையைப்போல சொல்லிக்கொண்டிருந்தாள்.‘ எனக்கு ஏ செவிட்டி வேணும்.....எனக்கு ஏ செவிட்டி வேணும்....’ அவளது கண்களில் கண்ணீர் தெப்பமாக நிறைந்து உடைந்து வழிந்தது. உதடுகளால் வெம்பினாள்.
ரு வாரமாக பஞ்சாயத்து ஆபீஸில் பன்றிகள் பற்றிதான் பேச்சு. பன்றிகளால் பன்றிக்காய்ச்சல் வருதாம். யானைக்கால் வருதாம். மூளைக்காய்ச்சல் வருதாம்....
தண்டோரா போட்டாகி விட்டது. நோட்டீஸ் அடித்து தெருவெங்கும் ஒட்டியாகி விட்டது.
‘ ஊருக்குள் பன்றிகள் வளர்க்கத் தடை
மீறி வளர்த்தால் தண்டனையும் அபராதமும்....’
சங்கிலிமுத்து, போதும்பொண்ணு மனமுடைந்து உட்கார்ந்துவிட்டார்கள். வாயிற்குள் விரலை விட்டு தின்னும் சோற்றை அள்ளும்படியான நடவடிக்கையாக அது இருந்தது. என்ன செய்வது.....? ஏது செய்வது....? விரல்களைப் பிசைந்து கொண்டு சங்கத்தலைவரை பார்ப்பதும், சங்கத்தைக்கூட்டுவதும் கெஞ்சுவதுமாக இருந்தார்கள்.
ஒரு நாள் பஞ்சாயத்து தலைவரை வீடு வரைக்கும் சென்று பார்த்து காலில் விழுந்துவிட்டு வந்தார் சங்கிலி முத்து. இன்னொரு நாள் கண்ணீரை மொத்தமாக வழிய விட்டு கூப்பியக் கையுடன் நின்றாள் போதும்பொண்ணு.
‘ போதும்பொண்ணு.....’
‘ சொல்லுங்க அய்யா....?’
‘ நாளைக்குள்ள எல்லா பன்னியையும் வித்துப்பிடணும். என்ன சொல்றே....?’
‘ இப்படி திடுத்திப்பெனச் சொன்னால் எப்படிங்க.....?’
‘ ஒரு மாசமாக சொல்லிக்கிட்டு தானே வாறேன்....’
போதும்பொண்ணு என்ன பேசுவது என்று தெரியாமல் விரலைப் பிசைந்துகொண்டு நின்றாள்.  
                ‘ என்ன ஒரு சத்தத்தையும் காணோம்....’
 ‘ பன்னி வளர்க்கிறது எங்க குலத் தொழிலுங்க.அதை  நாங்க வளர்த்தே தீருவோம்ங்க.....’
                ‘ ஆத்தா.... நத்தத்திலே நாய் பெருத்தமாதிரி பன்னி பெருத்துக்கிடக்கு. தெருவே பொதுக்கழிவறையாகிக்கிடக்கு தெரியுதுல..... பன்னி வளக்குறது ஒங்க தொழிலா இருக்கலாம். ஏன்... பன்னி ஒங்க தெய்வமாக் கூட இருக்கலாம். பஞ்சாயத்து தீர்மானம் போட்டு வளர்க்கலாமெனச் சொன்னால்தான் வளர்க்கலாம். கூடாதுனா கூடாதுதான்....பஞ்சாயத்து தலைவர் வார்த்தைகளை நெருப்பாக உமிழ்ந்தார்.
பன்னி வளக்கக்கூடாதா...? இல்ல வளக்கிற பன்னி  தெருவுல நடமாடக்கூடாதா...?’
நடமாடக்கூடாது’
 மீறி நடமாடுனா ?’
பன்னிய சுட்டுப்பிடிப்போம். அந்தக் கூலிய நீந்தான் தரணும்.....’
சங்கிலிமுத்து மிரண்டுபோயிருந்தார். போதும்பொண்ணுதான் அவளுக்குத் தெரிந்த நடைமுறை சட்டத்தை எடுத்து வீசினாள். இது எந்த ஊர் நியாமுங்க....நீங்க  ஆடு வளர்க்கலாம், மாடு வளர்க்கலாம், கோழி வளர்க்கலாம், குதிர வளர்க்கலாம்.  நாங்க பன்னி வளர்த்தா மட்டும் அபராதம் போடுறீங்க... உங்க சட்டம் கடவுளுக்கு அடுக்குமா....?’
போதும்பொண்ணு அப்படி கேட்டதும் ஒருத்தனுக்கு மீசை துடித்தது. மக்களுக்கு சீக்க வருதுல, யானைக்காலு நோயீ வருதுல...’
நாங்க   பன்னி வளர்க்கிறதனாலே சீக்கு வருதா...? மக்க கண்டத தின்னு போற வழி, வாற வழில பேண்டு வக்கிறதனால சீக்கு வருதா?’
ஒருத்தன் நாற்காலியை விட்டு சட்டென எழுந்தான். போதும்பொண்ணை அடிக்கப் பாய்ந்தான்.
உங்க பாய்ச்சல வேற ஆளுக்கிட்ட காட்டுங்க. நீங்க வீடு வாசல சுத்தாம வச்சிருந்தா நாங்க ஏன்க பன்னி வளர்க்கப்போறோம். ம்......?’
ஏய்... சங்கிலிமுத்து என்ன உன் பொஞ்சாதி பெரிசா நூல் பிடிச்சு பேசுறா ?’   ஊராட்சி மன்றத் தலைவர் மிரட்டும் தொனியில் கேட்டார்.
 ‘எங்களுக்கு பன்னிதானேங்க வருமானம். அதயும் வளர்க்கக்கூடாதுனு சொன்னா எப்படிங்க?’
அட வளர்க்கக்கூடாதுனு நானே சொல்றேன். பஞ்சாயத்து தீர்மானம் சொல்லுது’
                சங்கிலிமுத்து போதும்பொண்ணு இருவரும் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப்போல தலையைக் கீழே தொங்கவிட்டுகொண்டு நடக்கலானார்கள்.                                         $ $ $
                காவ்யா திண்ணையில் மனம் உடைந்துபோய் உட்கார்ந்திருந்தாள். பள்ளிக்கூடம் போகையில் நின்றிருந்த அத்தனை பன்றிகளும் பள்ளி முடிந்து திரும்பி வருகையில் இல்லை. ஏமாற்றம் நெஞ்சுக்குழியை முட்டியது. தொண்டை விக்கி விக்கி அடைத்தது. அவள் முகம் வீங்கிப்போயிருந்தாள். செவிட்டியும் அதன் குட்டிகளும் இல்லாத வீடு அவளுக்கு வெறிச்சோடித் தெரிந்தன.
       அந்திமப்பொழுதில் அவளது வீட்டிலிருந்து கிளம்பிய குட்டியானை புகையைக் கக்கிக்கொண்டு  வாசலில் வந்து நின்றது. காவ்யா அதைப் பார்த்துக்கொண்டு அறைந்த சோகமாய் உட்கார்ந்திருந்தாள். அவளது அப்பாவும்,அம்மாவும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அவர்களைப்பார்க்க அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. நாசியின் வழியே அனல் காற்று வெடித்தது.
                ‘ செவிட்டியையும், குட்டிகளயும் ஏம்மா வித்தே...?’ அம்மாவின் சேலையைப் பற்றிக்கொண்டு அவளை அடித்தாள். அவளது  தலை முடிகளைப் பிய்த்தாள்.
                ‘எனக்கு செவிட்டி வேணும்,...செவிட்டி வேணும்......’ தரையில் உருண்டுப்புரண்டு அழுதாள்.
                ‘ கொர் ... கொர்,...’ என்றொரு அரவம் வாகனத்திற்குளிருந்து வெளிப்பட்டது. காவ்யா சட்டென அழுகையை நிறுத்தினாள். பார்வையால் நாலாபுறமும் துலாவினாள். பன்றியின் உறுமலின் அரவம் வரும் திசையைத் தேடினாள். சங்கிலிமுத்து ஒரு பன்றியைத் தூக்கி மார்போடு அணைத்துகொண்டு நின்றார்.
                ‘காவ்யா....இந்தா... வாங்கிக்கோ......’
       காவ்யா வெறித்த முகமாய் பார்த்தாள்.
       ‘ வா....இதோட பேரும் செவிட்டிதான்...சினையா இருக்கு. ஒரு மாசத்தில குட்டிக போட்டுடும்... வா...இந்தா...என்றவாறு அதை மகளிடம் நீட்டினார்.
                ‘ போங்க... நா வாங்கமாட்டேன். இதையும் நீ வித்துப்புடுவே....’ கொஞ்சலும் அழுகையும் கலந்த குரலில் சொன்னாள் காவ்யா.
ஊகூம்....மாட்டேன்டியம்மா....இதொண்ணும் சாதா செவிட்டி இல்ல. ஒஸத்தி. சேர்மன் பண்ணையிலிருந்து வாங்கிக்கிட்டு வாறோம்....இது வெள்ளைச்செவிட்டி. வா... இந்தா....வாங்கிக்கோ....’ மெல்ல வாகனத்திலிருந்து இறங்கிய சங்கிலிமுத்து அதை காவ்யாவின் மடியில் கிடத்தினார். அதை வாங்கி மார்போடு அணைத்தாள் காவ்யா. அதன் காதிற்குள் கொர்....கொர்..’ என்றாள். பதிலுக்கு அதுவும் ‘ கொர்....கொர்....’ என்றது.



கருத்துகள்

  1. வாழ்த்துகள் சுரா. இதுவரை யாரும் தொடாத பகுதியினை கருவாக்கி கதை உருவாக்கியமைக்குப் பாராட்டுகள்.அசிங்கமாக ஒதுக்கப்படும் உயிர் செவிட்டி மீது காவ்யா காட்டும் அன்பினை அருமையாக வடித்திருக்கிறீர்கள். ஆயிரம் சுகாதாரக் கேடுகளால் நோய் தொற்றினாலும் அரசுத் துறை முத்திரை குத்தியதை பொதுப்புத்தியாக ஏற்று, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் செயலுக்கு சாட்டையடி தந்துள்ளமை அருமை.

    பதிலளிநீக்கு
  2. காவியாவின் பாசம், பன்றி குட்டி ஈன படும் பாடு , எல்லாம் அருமை.
    எப்படியோ காவியாவிற்கு காதுகேட்கும் குட்டி கிடைத்து விட்டதே! மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...