முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாய்கள் இப்படிதான் பூனை தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன

                                  1


வீரபாண்டிய கட்டப்பொம்மன், பாளையக்காரக் கோட்டையைக் கட்ட பாஞ்சாலங்குறிச்சியைத் தேர்வுச் செய்ததற்கு ஒரு காரணமிருந்தது. பூனைகள் சேர்ந்து நாய்களை விரட்டியடித்த இடம் அது. இதைக் கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் இவ்விடம் வீரமிக்கது என்கிற முடிவிற்கு வந்து அந்த இடத்தில் ஒரு கோட்டையை எழுப்பினான்.

பூனைகள் அத்தனை உக்கிரத்துடன் நாய்களை விரட்டியக்கும் தைரியம் அவைகளுக்கு எங்கேயிருந்து வந்தது...? பூனைகளுக்கு வந்திருந்த கோபத்தின் காரணக் கதை இது.
          2
பூனை தேசம் அது. பூனைகள் வாழும் தேசத்தை பூனையின் தேசமென பூனைகளே பெயர்ச்சூட்டிக்கொண்டன. பூனை தேசம் வனங்களும், புதர்களும், குன்றுகளும் சூழ்ந்தப் பகுதியாக இருந்தது.

தன் இனத்தின் பரிணாம வளர்ச்சிதான் புலி என்பதை பூனைகள் தெரிந்து வைத்திருந்தன. ஆனாலும் தான் வேறு புலி வேறு என்று வேறுபடுத்திகொள்ளுமளவிற்கு பூனைகளுக்கு அறிவு இருந்தது. பூனைகள், தான் புலியைப் போலிருக்கிறோம் என ஒரு நாளும் அவை புலி வாழ்க்கை வாழ்ந்ததில்லை. பூனையின் வாழ்க்கையைத்தான் பூனைகள் வாழ்ந்துகொண்டிருந்தன.
பூனையின் தாய்மொழி ‘மியாவ்’. ‘மியாவ்’ மொழியை அவைகள் மிக உயர்வாகக் கருதின. அம்மொழி இல்லாமல் தன்னால் ஒரு காலமும் வாழ முடியாது என்பதை அவை புரிந்துவைத்திருந்தன. அவை பேசும் மொழியை அதன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தன. ‘மியாவ்’ என அழைக்கையில் அதற்குள் எழும் புத்துணர்வால் அதன் இனத்தோடு அவை கூடி வாழ்ந்தன.

ஒரு கட்டத்தில் பூனையின் தேசத்திற்குள் நாய்கள் புகுந்தன. நாய்கள் எப்பொழுதும் அடுத்த எல்லைக்குள் வாலைச் சுருட்டிக்கொண்டு பயந்து பதுங்கி நுழையக்கூடியவை. அப்படியாகவே அவை பூனையின் தேசத்திற்குள் நுழைந்தன. நாய்களுக்கு உணவு இன்னதென்று இல்லை. அவை கண்டதைத் தின்று கண்ட இடத்தில் படுத்து வாழ்வதாக இருந்தன.
நாய்கள் படுத்து உறங்க ஒரு வெட்டவெளி போதுமானதாக இருந்தது. அது தன் சுத்தத்தைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. எந்நேரமும் தின்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என நாக்கைத் தொங்கவிட்டவாறு அலைவதாக இருந்தன. அப்படியாக அலையும் நாய்களுக்கு  ஒன்றின் மீது மட்டும் முழு கவனமும் இருந்தது. அது அதன் தாய் மொழியான ‘ லொள் லொள்...’ . அம்மொழியை மற்ற உயிரிகளிடத்தில் பரப்ப வேண்டும் என கர்வம் கொண்டன.

பூனைகளின் வாழ்க்கை தொன்மையானது. நாய்கள் தோன்றுவதற்கு முன்னரே பூனைகள் பிறந்திருந்தன. பூனையுடன் சேர்ந்து அதன் மொழியும் பிறந்திருந்தது. பூனையின் பரிணாம வளர்ச்சிதான் புலி. புலிக்கு முந்தையது பூனை. ஆனால் புலிக்கு பிந்தையது நாய்.
மிதமான உணவைத் திங்கும் பழக்கத்தை பூனைகள் கொண்டிருந்தன. நாய்களைப் போல அவை நாறிப்போன உணவுகளை தின்பதில்லை. தின்றதை கண்ட இடத்தில் கக்கி வைப்பதில்லை. சிறுநீர், மலம் கழித்தால் அதை மண்ணைக் கொண்டு மூடும் பழக்கத்தை பூனைகள் கொண்டிருந்தன. தன் உடம்பை நாக்கால் சுத்தப்படுத்திக்கொள்ளும் அவை படுத்து உறங்குவதற்கு ஒரு சுகாதாரமான இடத்தை தேர்வு செய்துகொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தன.

பூனையின் தேசத்தில் நுழைந்துகொண்ட நாய்கள் பூனையின் தேசத்தை ஆளத்தொடங்கின. அதன் உடல்வாகு அதற்கு துணையாக இருந்தது. முதலில் வாலைச் சுருட்டிக்கொண்டு பூனையின் தேசத்திற்குள் நுழைந்த நாய்கள் பிறகு தன்னைக் கண்டு பூனைகள் வாலைச் சுருட்டிக்கொண்டு நடக்க வேண்டும் என கட்டளை இட்டன.

நாய்கள் அதன் எல்லைகளைப் பிரித்துகொண்டன. ஆளுக்கொரு புதர்களைப் பிடித்துகொண்டன. தன்னைச் சுற்றி எல்லை வகுத்துகொண்டு அதனதன் எல்லையில் நின்றுகொண்டு வாலை ஆட்டிக்கொண்டு காது மடல்கள் தலையில் அடித்துகொள்ளும்படியாக அதன் மொழியில் உரக்கப் பேசிக்கொண்டன.

‘ லொள்....’ ( இது நமது மொழி)
‘ லொள்...லொள்....’ ( நமது மொழி சிறந்த மொழி)
‘ லொள்...வவ்....லொள்.....’ ( நமது மொழி தெய்வீகமானது)
‘ லொள்.....வவ்...வவ்....லொள்....’ ( நமது தெய்வீக மொழி முதன்மையானது.)


வவ்...வவ்....லொள்....வவ்....லொள்ள்....லொள்ள்.....’ ( இம்மொழியை யார் பேசினாலும் அவர்கள் எங்களைப் போலவே தெய்வீக பிறப்பாகிவிடுவீர்கள்....)’
‘ ல்லொள்....லொள்....வவ்....வவ்....’ ( எங்கள் மொழிகள் மட்டுமே சிறந்த மொழி. மற்றவை நீச மொழிகள்.)

தினம் தினம் இதைப் பேசிக்கொள்வதுதான் நாய்களின் அன்றாட வேலையாக இருந்தன. இந்த உலகை ‘ லொள்,லொள்...’ மொழி மட்டுமே ஆள வேண்டும் என்பதில் அவைகள் கவனமாக இருந்தன. அம்மொழியைப் பரப்பும் வேலையில் இறங்கின.

பூனையின் மொழி ‘மியாவ்...’. பூனைகளுக்கு அதுதான் உயர்வான மொழியாக இருந்தது. அதன் தொன்மையும், சிறப்பும் அவைகளுக்கு தெரிந்திருந்தது. அம்மொழியில் பேசுவதன் மூலமே அதன் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள முடிந்தது.

‘மியா..’ ( எமது மொழி இதுதான்)
‘ மியாவ்’ ( எமது மொழியில்தான் நான் பேசுவேன்)
‘ மியாவ்வ்’ ( எமது மொழியில் மட்டுமே நான் பேசுவேன்)
‘ ம்யாவ்..மியாவ்...’ ( பிற  மொழிக்கும் நான் அடிபணிய மாட்டேன்’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’ ( எம் மொழி எமக்கு சிறந்த மொழி)

பூனையின் தேசத்தில் பூனைகள் அதிகமாக இருந்தாலும் நாய்களின் ஆதிக்கவே மேலோங்கி இருந்தது. நாய்கள் ஓடி வருகையில் அதன் கண்ணில் படாமல் பூனைகள் ஏதேனும் ஒரு மரத்தில் ஏறி ஒளிந்துகொள்ள வேண்டும். நாய்கள் நடமாடும் பாதையில் பூனைகள் நடமாடுவது கூடாது. நாய்கள் நிற்கும் இடத்தில் பூனைகள் அதன் மொழியில் பேசக்கொள்ளக் கூடாது. மீறி பேசினால் பூனையை விரட்டி ,அடித்து, கொன்றுத்திங்கும் வேலையில் நாய்கள் இறங்கியிருந்தன. தன் இனத்தை தானே சாப்பிடும் நாய்களுக்கு பூனை உணவு பிடிக்காமல் இருக்குமா என்ன...?

ஒரு நாய் இன்னொரு நாயிடம் சொன்னது. நம் மொழியை நாம்தான் தெய்வீக மொழி என்றும், உன்னத மொழியென்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம் மொழியை நாம் மட்டும் பேசுவதால் மட்டும் என்ன பெருமை வந்துவிடப்போகிறது. நாம் ஆள்வது பூனையின் தேசம். பூனையின் தேசத்தில் பிரதான மக்கள் பூனைகள்தான். நாம் பேசுகின்ற மொழியை பூனைகளையும் பேச வைத்தால் மட்டும்தான் உலகின் சிறந்த மொழி ‘லொள்...’ என்பதை நிலைநாட்ட முடியும் என ஆலோசனைக் கூறியது. அந்த ஆலோசனையை அனைத்து நாய்களும் ஏற்றுக்கொண்டன.

ஒரு நாள் நாய்கள் ஒன்று திரண்டு பூனைகளின் குடியிருப்பிற்குள் நுழைந்தன. பூனைகள் மரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டன. ஒரு நாய் ஒரு பூனையைப் பார்த்து சொல்லியது. ‘லொள்...’ ‘ லொள்....வவ்..’

  பூனைக்கு சிரிப்பு வந்தது. தன் மீசையை ஒரு முறை தன் கால்களால் நீவி விட்டுக்கொண்டது. மொழிப் பெருமைப் பேசும் அந்நாயிடம் பூனை ‘ மியாவ்...’ என்றது. நாய்களுக்கு கோபம் வந்தது. எங்கள் ஆட்சிக்கு உட்பட்ட தேசத்தில் எமது மொழி தான் தேசிய மொழி. நீங்கள் எம் மொழியில்தான் பேச வேண்டும் என்கிற கோணத்தில் நாய்கள் ஊழையிட்டன. தன் அகோரப்பற்களைக் காட்டி மிரட்டின. பூனைகள் அதற்குரிய பதுங்கலுடன் அதன் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறின.

‘ லொள்....’ என்றது நாய்.
‘மியா..’ - பதிலுக்கு பூனை.
‘ லொள்...லொள்....’
‘ மியாவ்’
‘ லொள்...வவ்....லொள்.....’
‘ மியாவ்வ்’
‘ லொள்.....வவ்...வவ்....லொள்....’
‘ ம்யாவ்...’

‘லொள்....வவ்....லொள்....லொள்...வவ்...வவ்.....’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’
‘வவ்...வவ்....லொள்....வவ்....லொள்ள்....லொள்ள்.....’
‘ மியாவ்...ம்ம்யாவ்....ம்ம்யாவ்வ்....’
‘ ல்லொள்....லொள்....வவ்....வவ்....’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’
‘ ல்லொள்....லொள்....வவ்....வவ்....’

நாய்கள் இப்படிச் சொன்னதும் பூனைகளுக்கு வந்ததே கோபம். அதன் மீசைகள் துடித்தன. அதன் கைகளால் மீசையை நீவி விட்டுக்கொண்டன. நாசியை விடைத்தன. அவை உட்கார்ந்திருந்த மரக்கிளைகள் அத்தனை உயரத்தில் இருந்தன. அந்த உச்சியிலிருந்து ஒரு சேரக் கீழே குதித்தன. பூனைகளின் குதிப்பால் அவ்விடம் புழுதிக் காடானது. நாய்கள் அதன் அகோரப்பற்களைக் காட்டி பூனைகளை மிரட்டின. பூனைகள் பயங்கொள்ளவில்லை. என் மொழியைப் பழித்த உன்னை நான் என்னச் செய்கிறேன் பார்....என்கிற கோபத்துடன் அதன் கால் விரல்களின் நகங்களை நீட்டி பற்களைக் காட்டியபடி நாய்களின் மீது பாய்ந்தன.

அத்தனை உயரத்திலிருந்து குதிக்கும் பொழுதே பாதி மிரண்டு போயிருந்த நாய்கள் தன் மீது பாயத் தொடங்கியதும் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓட்டமெடுத்தன. பூனைகள் நாய்களை விடுவதாக இல்லை. பூனையின் தேசத்திலிருந்து நாய்களை விரட்டியடித்த பூனைகள் தன் நாட்டிற்குள் திரும்பி தன் மொழியில் பேசினால் மட்டுமே தன் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து அதன் மொழியில் உரக்கப் பேசிக்கொண்டன.

‘மியா..’
‘ மியாவ்’
‘ மியாவ்வ்’
‘ ம்யாவ்..மியாவ்...’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...