மகர்’
இச்சொல்லிற்கான அரசியல் அதிர்வு இன்றைக்கு வரைக்கும் இருக்கத்தான் செய்கிறது.அதற்குக்காரணம் பீமாராவ் ராம்ஜி என்கிற அம்பேத்கர் பிறந்தது ‘மகர்’ சமூகத்தில் என்பதால் அல்ல! இந்திய வரலாற்றை காலக்கோட்டில் வரைய முற்படுகையில் மகர் தவிர்க்க முடியாத அளவீடாக மாறிப்போனதுதான் இதற்கு காரணம்! பிளாசிப்போர், பிரிட்டிசாரின் கிழக்கிந்திய கம்பெனி, இராணுவம், மகாராஜா ரவீந்திர சிங், ஆங்கிலோ - பேஷாவா போர்,...இவற்றின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுகையில் மகர் இனம் தவிர்த்து வரலாற்று பக்கங்கள் நீள்வதில்லை.அவ்வரிசையில் 2018 ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடந்தேறிய பீமா - கொரேன் கலவரம் சேர்ந்து மகர் வரலாற்று பக்கங்களைக் கூட்டியிருக்கிறது.
நமது தமிழ் பத்திரிகைகள் இச்சம்பவம் குறித்து அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.பத்திரிகைகளை நாம் கோபித்துக்கொள்வதற்கொன்றுமில்லை . பீமா - கொரேகன் கலவரத்தை விடவும் முக்கியமானது நமக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம். டெல்லியிலிருந்து வாக்குக்கேட்க தனி விமானத்தில் வரும் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளைச் சொல்லி வாக்குகளை அறுவடைச் செய்யப்பார்க்கிறார். ஆனால் இங்கே ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு வாங்கிய ரஜினி தமிழனத்திற்காக அரசியலுக்குள் கால் வைக்கையில் கீதாசாரம் ஒப்பிக்கிறார். ரஜினி அரசியல் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகைகளிடம் பீமா - கொரேகன் கலவரம் குறித்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கக் கூடாதுதான்!
அந்த வகையில் ஆங்கிலப்பத்திரிகைகளைப் பாராட்ட வேண்டும். தலையங்கமாகவும், சமூக ஆர்வலரின் கட்டுரைகளாகவும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தன. ஒரு கட்டுரை ‘ பீமா - கொரேகன் நினைவுச்சின்னம், ஒரு வரலாற்று நிகழ்வு அல்ல. ஒடுக்கப்பட்டோரின் அடையாளத்திற்கும் சம உரிமைக்குமான போராட்டம் ’ என்றது. மற்றொரு கட்டுரை ‘ இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிரான வெடிப்புகள்’ என்றது. ‘ பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது’ என்றது மற்றொரு கட்டுரை.ஒரு கட்டுரை ‘ சம உரிமைக்காக நடந்தேறும் சரியான வரலாற்றுத் தவறுகள்’ என்றது. இக்கட்டுரைகளை வாசிக்கையில் எனக்கு ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசவா இயக்கிய ` RASHOMON ’ என்கிற திரைப்படம் என் நினைவிற்கு வந்தது.இத்திரைபடம் ‘ In a Grove ’ என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இக்கதையை எழுதியவரும் அவரேதான்.
ஒரு சாமுராயைக் கட்டி வைத்து மனைவியைக் கற்பழிக்கிறான் ஒரு வழிப்பறி கொள்ளையன்.கடைசியில் சாமுராய் படுகொலைச் செய்யப்படுகிறான். சடலத்தைப் பார்க்கும் ஒரு விறகு வெட்டி நீதிபதியிடம் முறையிடுகிறான். அக்கொலைக்குறித்து சாட்சியங்கள் எப்படி சொல்லப்படுகிறது என்பதுதான் கதை.
வழிப்பறி கொள்ளையன், கற்பழிக்கப்பட்டவள், இறந்து போன சாமுராய் (ஆவியாக ஒரு பெண்ணின் உடலில் இறங்கி ) மூன்று பேரின் சாட்சியங்களும் தன் சுயமரியாதைக்கு பாதகம் வராமல் மறைத்தாக வேண்டியதை மறைத்து அவரவர் போக்கில் நடந்ததைச் சொல்லிச் செல்வார்கள். எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதற்குள் அவரவர் நலன் சார்ந்த சுயநலம் இருக்கவே செய்யும் என்பதுதான் அத்திரைபடம் சொல்லவரும் ஒற்றை வரி.
பீமா - கொரேகன் கிராமத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஆங்கிலோ - பேஷாவா சதுரத் தூண் நினைவஞ்சலி கூட்டத்தில் நடந்தேறிய கலவரம் குறித்தக் கட்டுரைகள் அப்படியாகத்தான் அவரவர் சார்ந்த சமூகத்தின் சுயநலம் சார்ந்திருந்தது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வை காலத்தாலும் , தொலைவாலும் தூரத்தில் இருக்கும் தமிழர்கள் புரிந்துக்கொள்ள கூடுதலாக சில வரலாற்று சம்பவங்கள் தேவைப்படுகிறது.
ஒரு கட்டுரையாளர் ‘ஆங்கிலேயர்களைப்போலவே பேஷ்வா மன்னர் இரண்டாம் பாஜிராவ் , தன் இராணுவப் படையில் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்த்துக்கொண்டார்....’ என்பதை தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தார். இப்பகுதியைப் படித்ததும் எனக்கு வட்ட மேசை மாநாட்டு நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன. வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் கலந்துகொள்வதை காந்திஜி விரும்பவில்லை. அவர் வட்ட மேஜை மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்பாகவே வைஸ்ராயிடம் சென்று அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளக் கூடாது என முறையிட்டிருந்தார். அதற்கு அவர் பிரத்யேகமாகச் சொன்னக் காரணம் ‘ அம்பேத்கர் மகர் சமூகத்தைச் சார்ந்தவர். மகர் இனத்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல’.
மகர் இனத்தவர் மீது காந்திக்கு வரலாற்று புரிதல் இருந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் அவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்கள் என்பது மட்டுமல்ல. பதினைந்து முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நடைப்பெற்ற போர்களில் வெற்றிப் படைகளுக்கு காரணக்கருத்தராக இருந்தவர்கள் மகர் இனத்தவர்கள் என்கிற வரலாற்று புரிதல் அது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் கால் வைப்பதற்கு காரணமாக இருந்த போர் பிளாசிப்போர். ஐரோப்பிய கண்டத்தில் நடந்தேறிய பிரெஞ்சு - ஆங்கிலேய போர் வங்காளத்தில் மையம் கொண்டது. போருக்குப்பிறகு வங்காளம் பிரெஞ்சிடமிருந்து ஆங்கிலேய கிழந்திய கம்பெனி வசமானது. வங்காளத்தை ஆண்ட நவாப் சிராஜ் உத் தவுலா பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உதவியுடன் ஆங்கிலேயப் படைகளைத் தாக்கினர்.அத்தாக்குதலுக்குப்பிறகு இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய கிழக்கிந்தியப் படை நவாப் படையைத் தோற்கடித்தது. இது நடந்த ஆண்டு 1757 . இதிலிருந்து சரியான நூறாவது ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியப் படை இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியது. இந்தப் போர் நடந்தேறிய இடம் பிளாசி. இப்போரில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளின் கீ்ழ் போர் புரிந்தார்கள் என்கிறது வரலாறு.
அதன்பிறகு நடந்தேறிய இந்தியப் போர்களில் மகர் இனத்தவர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். . மராட்டியத்தில் இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவரான சத்ரபதி வீர சிவாஜி வெற்றிக்குப் பின்னும், அவருக்குப் பிறகு அவரது மூத்த மகனான சாம்பாஜி சிவாஜி தலைமையிலான மராட்டிய போர்களில் மகர் இனத்தவர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்திருக்கிறது. இந்த வரலாற்று புரிதலைத் தெரிந்திருந்த காந்திஜி அவர்கள் வைஸ்ராயிடம் மிகக்கடுமையாக அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்துக்கொள்வதை ஏற்க முடியாது என்றார்.
வட்ட மேசை மாநாடு நடைபெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் கொரேகன் கிராமத்திற்கு சென்றிருந்தார். அவர் சென்றிருந்த ஆண்டு ஜனவரி 1927. அப்பயணம் அவருக்கு மேலும் சில வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டியிருந்தது. ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி அல்ல’ என்கிற காந்தியின் குற்றச்சாட்டுக்கானப் பதிலை அவர் கொரேகன் கிராம வரலாற்று பக்கத்திலிருந்து கொடுத்திருந்தார்.
‘ காந்திஜி சொல்வதைப்போல மகர் இனத்தவர்கள் உயர் சாதியினர் என்றால் மனு தர்மத்தின் படி ஆட்சி செய்த பேஷாவா முதலாம் பாஜி ராவ் ஆட்சியிலும் ( 1775 – 1851 ), இரண்டாம் பாஜி ராவ் ஆட்சியிலும் ( 1851 – 1881 ) தன் போர்ப்படையில் ஏன் மகர் இனத்தவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை....?. அம்பேத்கரின் இக்கேள்விக்கு காந்திஜியிடம் பதில் இருந்திருக்கவில்லை.
பீமா - கொரேகன் கலவரம் குறித்து ஒரு நண்பரிடம் விவாதித்துக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார் ‘ ஒரு இந்திய மன்னருக்கு எதிராக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றியை மகர் இனத்தவர்கள் கொண்டாடுவது சரியா...?’ இக்கேள்வி அவரது கேள்வி அல்ல. இந்துத்துவ கேள்வி.
இந்துகள் ஒரே நேரத்தில் இரண்டு விதமான அடிமைச்சிக்கலிலிருந்து மீண்டு வரும் நிலைக்கு ஆட்பட்டிருந்தார்கள். ஒன்று ஏகாதிபத்தியம். மற்றொன்று தேசியம். இதைத்தான் மறைந்த எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி ‘இந்துத்துவவாதிகள் ஒரே நேரத்தில் கோபர்நிகஸ் காலத்துடனும் ஐன்ஸ்டீன் காலத்துடனும் வாழக்கூடியவர்களாக இருந்தவர்கள் ’ என்றார். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களின் ஆட்சியை முறியடிக்கும் தேவை இந்துத்துவவாதிகளுக்கு இருந்தது. இந்துத்துவவாதிகளின் போர்ப்படைகள் சுல்தான்களிடம் எடுபடவில்லை. ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்குள் வந்தார்கள். அவர்கள் சுல்தான்களிடம் போரிட்டு வெற்றியும் பெற்றார்கள்.. இப்போரில் இந்துக்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவானவர்களாகியிருந்தார்கள்.
கடந்த வருடம் இப்படித்தான் திடீரென சூடுப்பிடித்தது பக்கிங் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவல். நாவலின் படி வங்காளத்தில் சுல்தான் ஆட்சி நடக்கிறது. சுல்தான் ஆட்சிக்கு எதிராக இந்து இளைஞர்கள் கூடுகிறார்கள். நாவலின் கதாநாயகன் பவாநந்தன். அவனது தலைமையில் ‘ வந்தே மாதரம் ’ பாடிக்கொண்டு சுல்தான் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள். சுல்தான் படையை இந்து இளைஞர்களால் முறியடிக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் ஆங்கிலேயர்களுடன் கைக்கோர்க்கிறார்கள். இரு படைகளும் சேர்ந்து சுல்தான் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். இந்நாவலில் இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் இடம் முக்கியமானது. ‘ சுல்தான் ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேயர்களிடம் கைக்கோர்கிறோமே...?’ என ஒரு பாத்திரம் கேட்க அதற்கு மற்றொரு பாத்திரம் இவ்வாறு சொல்லும் ‘ ஆங்கிலேயர்களிடம் ஒப்பிடுகையில் சுல்தான்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியவர்கள்...’ .
மைசூர் சமஸ்தானம் திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. அவனது ஆட்சி ஆங்கிலேயப்படைகளால் முற்றுக்கு வந்தது. இந்த ஆங்கிலேயர்களின் வெற்றியை இந்துத்துவா தன் வரலாற்று பக்கத்தில் பொன் எழுத்துகளால் பொறித்திருக்கிறது. இந்திய உள்நாட்டு போரில் இந்துகள் ஆங்கிலேயர்களிடம் கைக்கோர்த்து பல வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அப்படியானதுதான் மூன்றாம் மராட்டியப் போர். ஆனால் இப்போர் குறித்த வரலாற்று சுவட்டிற்கு மராட்டியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க காரணம்...? இப்போரில் சுல்தான்களுக்கு பங்கில்லை. இப்போர் நடைப்பெற்றது பேஷவா - ஆங்கிலேயர் இருவருக்கிடையில். இப்போரில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேய வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி முகலாய ஆட்சியை முறியடிக்கையில் மகர் இனத்தவர்கள் சிவாஜி படையில் இருந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சிவாஜி , இந்து சாம்ராஜ்யம் நிறுவினாலும் அவருக்கு பின்னே வந்த அவரது மூத்த மகன் சாம்பாஜி முகலாயர்களிடம் தோற்று நிர்க்கதியாக நிற்கவே செய்தான். சாம்பாஜி சுல்தானால் கொன்றொழிக்கப்பட்டு அவரது உடல் ஓர் ஆற்றாங்கரையில் அழுகிய நிலையில் உடல்வேறு, கால் வேறாகக் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலைக் கண்டெடுத்து மரியாதைச் செய்து அடக்கும் செய்தவர் மகர் இனத்தவர் கோவிந்த் கைய்க்வாட். சிவாஜி மீதான மரியாதையால் அவர் அதைச் செய்திருந்தார். அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்பினார். கால ஓட்டத்தில் கோவிந்த் கைய்க்வாட் இறந்ததும் மகர் இனத்தவர்கள் சாம்பாஜி கல்லறை இருக்கும் அதே ஊரில் கோவிந்த் கைய்க்வாட்டுக்கும் நினைவுச்சின்னம் எழுப்பினார்கள். இருவரின் நினைவுகளையும் ஒரு சேரக் கொண்டாடினார்கள் மகர் இனத்தவர்கள். சாம்பாஜி மன்னரின் வாழ்க்கை வரலாறு பற்றிப்பேசுகையில் கோவிந்த் மகர் குறித்து பேசுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மேலும் சத்ரபதி சிவாஜி முகலாயர்களை வீழ்த்தி இந்து சாம்ராஜ்ஜியம் அமைத்ததை வரலாறு பெருமைப்பேசுவதற்கிடையில் அவரது மூத்தமகன் முகலாயர்களால் வீழ்த்தப்பட்டு சாம்பாஜியின் அழுகிய உடல் ஆற்றாங்கரையில் கண்டெடுக்கப்பட்ட வரலாறு சேர்கையில் இந்துத்துவா எடுக்கும் வீரம் பொதிந்த இந்து அரசியல் தவிடுபொடியாகி விடுகிறது. மராட்டியத்தில் இந்துத்துவா சிவாஜியையும், மகர் இனத்தவர்கள் சாம்பாஜியையும் தூக்கிப்பிடிக்கிறார்கள். இந்த முரண் மராத்தியர் – மகர் இருவருக்கிடையில் தீராப்பகையை ஏற்படுத்துகிறது.
பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் போர் படைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே உச்சப்பட்ச மரியாதை இருந்தது. மேலும் அவர்களுக்கு மட்டுமே கட்டாயக் கல்வியும், நல்ல உணவும் , சம்பளமும், இழப்பீடும் தரப்பட்டது. ஆகவே மகர் இனத்தவர்கள் போர் படையில் தொடர் ஆர்வம் காட்டி வருபவர்களாக இருந்தார்கள். அவர்களின் வளர்ச்சியைத் துண்டிக்கும் பொருட்டுதான் மராட்டிய மண்ணில் மநு தர்மம் ஆட்சி நிறுவும் முயற்சிகள் நடைபெற்றது.
இதே காலத்தில் பஞ்சாப் பகுதிகளை ஆண்ட மன்னராக இருந்தவர் மகாராஜா ரஞ்சித் சிங். இவரது படையின் கீழ் பணியாற்றவும் மகர் இனத்தவர்கள் ஆர்வம் காட்டினார்கள். மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களை இந்து மதத்திலிருந்து சீ்க்கிய மதத்திற்கு மாற்றி அவர்களைத் தன் படையின் கீழ் இணைத்துகொண்டார்.
மகர் இனத்தவர் தங்களை பேஷ்வா படையில் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து போராடிக்கொண்டு வந்தார்கள். தீண்டத்தகாதவர்கள் ஆயுதம் எடுக்க தகுதியற்றவர்கள், அவர்களுக்கு கல்வி என்பது கிடைக்கக்கூடாத ஒன்று,...இப்படியான ஒடுக்குமுறை தலையெடுக்கையில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இணைய வேண்டிய அவசியம் நேரிட்டது.
மராட்டிய போர் பேஷாவா - ஆங்கிலேயர்களுக்கிடையில் மூன்று முறை நடந்தேறியிருக்கிறது. கடைசியான போரில் பேஷ்வா தரப்பில் இருபதாயிரம் பேர். ஆங்கிலேய தரப்பில் எண்ணூற்று முப்பது நான்கு பேர். அதில் ஐநூறு பேர் மகர் இனத்தவர்கள்.. இப்போரில் ஆங்கிலேயப் படை வெல்ல மநு தர்ம ஆட்சி முற்றுப்புள்ளிக்கு வருகிறது. ஆங்கிலேயப் படை வெற்றிப் பெற்ற நாளாக ஜனவரி 1, 1818 வரலாற்றில் இடம் பெறுகிறது.
பொதுவாக எந்தவொரு போர் நடந்து முடிந்தாலும் போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஸ்தூபி எழுப்புவது ஆங்கிலேய கம்பெனியின் வழக்கமாக இருந்து வந்தது. அதன்படி போர் நடந்தேறிய இடத்தில் ஒரு சதுர தூண் எழுப்புகிறது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி.அதில் அப்போரில் மரணமுற்றவர்களின் பெயர்களை வடிக்கிறது. அந்நாட்கொண்டு மகர் இனத்தவர்கள் போரில் தன் வாரிசுகளைப் பறிக்கொடுத்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்தி வந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நினைவுத்தூண் என்பது இறந்தவர்களின் நினைவுச்சின்னம். அது வெற்றியின் அடையாளம் அல்ல. ஆனால் மராட்டியர்கள் அதைப்பார்ப்பது மகர் இனத்தின் வெற்றி சின்னமாகத்தான்!
இது போன்ற நினைவுத் தூண்கள் இந்தியாவில் நிறைய உண்டு. புதுடெல்லியில் நிறுவப்பட்டிருக்கும் இந்திய கேட் முதல் உலகப்போரில் பங்கேற்று கிழக்கிந்திய கம்பெனிக்காக உயிர்த்துறந்த இந்தியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு எழுப்பப்பட்ட ஒன்று. இன்றைக்கு அவ்விடம் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளம். அந்த இடத்தில் கூடும் கூட்டத்தைக் கலைப்பதற்காக கலவரமோ, தடியடியோ நடந்தால் எப்படியானதாக இருக்கும்...? ஜனநாயகப் படுகொலைதான் இல்லையா!அப்படியான கூடுகைதான் பீமா - கொரேகன் நினைவுத்தூண் இடத்திலும் கூடியிருந்தது. இரு நூற்றாண்டு நினைவு கூடுகை என்பதால் கூட்டம் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் மராட்டிய அரசு கலவரத்தைத் தூண்டியிருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இந்தாண்டு இப்படியான திடீர் கலவரம் நிகழக் காரணம்...?இன்றைக்கு இந்துத்துவாவின் தலைமையிடம் குஜராத். அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டச்சபைத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற தலித் இளையத்தலைவர் ஜிக்னேஷ் மெவானியின் வெற்றியும், அத்தேர்தலில் ஆளுங்கட்சியின் சரிவும், அடுத்து வர இருக்கின்ற கர்நாடக சட்டசபைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல்,... இவற்றைக் கருத்தில்கொண்டு பீமா - கொரேகன் கலவரம் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த இடத்தில் கனடா தத்துவ மேதை அயன் ஹாங்கிங் நினைவு கூறத் தக்கவர். அவர் நூற்றாண்டு அரசியலைக் கணித்தவர் . அவரது கோட்பாடு இது ‘ பதினெட்டாம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள், மக்கள் உடலின் மீது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துவார்கள். பத்தொண்பதாம் நூற்றாண்டில் மக்கட்தொகை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கும்.இருபதாம் நூற்றாண்டின் இலக்கு ஒன்றுதான். மக்களின் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துவது’
இந்தியாவில் நடந்தேறுவது ஆண்டான் - அடிமை அரசியல். அரசன் தன்னை தேர்ந்தெடுத்த அடிமைகளை மறந்துகொண்டிருக்கிறார். அடிமைகள் தன்னை அடிமையாக்கியவர்களை நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியான நினைத்தலுக்கு எதிரான ஒடுக்குமுறை, அதை கட்டுடைக்கும் பெருவெடிப்பு இவை இரண்டும் சேர்ந்ததுதான் பீமா - கொரேகன் கலவரம்.
மகர் சமூக எழுச்சிப் பேராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தமிழ்நாட்டிற்கொன்று இருக்கிறது. மகர் சமூகத்தினர் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறவர்கள். குறிப்பிடும்படியான வெற்றியும் பெற்றவர்கள்.அவ்வெற்றியின் அடையாளத்தில் ஒன்றுதான் பீமா - கொரேகன் நினைவுத்தூண். அத்தூணின் கீழ் அவர்கள் சங்கமிக்கையில் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாகத்தான் திரள்கிறார்களேத் தவிர ஒருபோதும் தங்களை அவர்கள் உயர் சாதியினராகப் பாவித்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர் ஒடுக்குமுறைக்கு உள்ளான சில சாதிகள், அச்சாதிகளை வழிநடத்தும் தலைவர்களால் தங்களைத் தாங்களே உயர்ந்த சாதிகள் என அறிவித்துக்கொள்ள முணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பீமா - கொரேகன் நினைவுத்தூண் சொல்லும் செய்தி ஒன்றுண்டு. ‘நான் ஒடுக்கப்பட்டவன் என ஒரு வாய் சொல்கையில் வெட்கப்பட வேண்டியது காதுகள்தானே தவிர வாய் அல்ல...’
கருத்துகள்
கருத்துரையிடுக