திங்கள், 24 ஏப்ரல், 2017

பொன்.குலேந்திரன் - கனடா எழுத்தாளர். அக்னிக்குஞ்சு இணைய இதழ் வழியே இவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து பல கதைகளை உடனுக்குடன் விமர்சனம் செய்திருக்கிறேன். அவரது விதி என்கிற ஒரு கதையை சற்று ஆழமாக விமர்சனம் செய்யப்போய் நேரடி அழைப்பிற்கு வந்தார். அவ்வபோது அவரது படைப்புகளை இணைய வழியில் அனுப்பி வந்தவர் அவரது நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சமீபத்தில் அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை எனக்கு அனுப்பி வைத்தார். 1. Generation ( the story of a estate worker) 2. Strange Relationship Generation நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு அதை தமிழில் குறுநாவலாக வடிவாக்கம் செய்ததை எனக்கு அனுப்பி வைத்தார். நான் அதை ஒவ்வொரு அத்யாயமாக வாசித்து விமர்சனம் எழுதிக்கொண்டு வந்தேன் . கனடாவிலிருந்து அவர் எழுதியிருந்தாலும் கதை நமூர் திருநெல்வேலி வழியே சிலோனில் அடைக்கலம் கொள்கிறது. சிங்களர்கள் இவருடைய பார்வையில் வேறொரு விதமாகத் தெரிகிறது. எனது தாத்தா கண்டியில் தேயிலைத் தோட்டத்தில் வேலைப்பார்த்ததும் என் அம்மா கண்டியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் தலைமுறை நாவலை ஒப்பிட்டு வாசித்தேன். வாசித்ததன் அடிப்படையில் எந்த ஒளிவுமறைவும் அற்று இந்நாவலைக் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
தலைமுறைகள் தலைமுறை நாவல் குறித்த விமர்சனம்.  அத்யாயம் 1 வீராசாமி பற்றிய அறிமுகமே அசத்தலாக  இருக்கிறது.  தங்கையின் மகளை மணந்துகொள்வது எங்கள் ஊர் பகுதியிலும் உண்டு . அப்படியானால் வீராசாமிக்கும் அவளது மனைவி நாச்சியாருக்கும் இடைப்பட்ட கால இடைவெளி புருவத்தை ஏற்றியிறக்க வைக்கிறது. முத்துக்குளித்தல் சம்பவம் பற்றிய காட்சி வடித்தலும் மண்பாடு ஊர் பெயர்காரணமும் அதன் வழியே கதையின் போக்கும் பெரிய எதிர்பார்ப்பை கூட்டுகிறது.  அத்யாயம் 2 கதை தலைமுறை கடந்து பாய்ச்சல் எடுக்கிறது. கதை சொல்லி வகை புதினமாக இருக்கக்கூடுமென தெரிகிறது . வீராசாமியின் மகன் கண்ணன் அவருடைய மகன் செல்லச்சாமி, வள்ளியம்மா என ஒரு அத்யாயத்திற்குள் மூன்று தலைமுறை உள்ளடக்க ஏன் இத்தனை பாய்ச்சல்.  முத்துக்குளியலிருந்து உப்பளத்திற்கு கண்ணன் கொண்டுவரப்படுவது தலைமுறை மாற்றம். உப்பளத்திலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்வதையும் அப்படியாக எடுத்துகொள்ளலாம். ஆனால் அக்காலத்தில் இலங்கை கண்டி என்றல்லவா அழைக்கப்பட்டிருக்க வேண்டும். உப்பளத்திலிருந்து எதிரொளிக்கும் சூரிய ஒளி கண்ணைப் பாதிக்கும் என்பது புது தகவல். கண்ணன் மீனாட்சி நட்பு இன்னும் கொஞ்சல் காதலழகு படுத்திருக்கலாம். அத்யாயம் இரண்டு பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வேலையைச் செய்திருக்கிறது. ஆனாலும் வாசிப்பு ஓட்டத்தில் தொய்வு  ஏற்படவில்லை. அத்யாயம் 3 தகிலுடையதாக இருக்கிறது. தூத்துக்குடி வழியாக இராமேஸ்வரம் சென்று அங்கேயிருந்து ஒரு படகு மூலமாக சிலோன் செல்கிறார். கடல் வழிப் பயணத்தின் போது ஒரு சிறுவன் தவறி கடலுக்குள் விழுந்துவிட அவனை கண்ணன் காப்பாற்றுமிடம் சிலிர்க்க வைக்கிறது. முத்து குளிக்க பழக்கப்பட்ட கண்ணனுக்கு இது சாத்தியமான ஒன்றுதான். ஏழு தீவுகள் அதிலொரு தீவு நயினாத்தீவுக்கு சென்றடையும் கண்ணனுக்கு படகோட்டி மூலம் ஒரு கோயிலுக்குள் தங்கும் வாயப்பு கிடைப்பதும் பிறகு ஒரு நகைக்கடையில் வேலைக் கிடைப்பதும் ஆறுதல் தருகிறது. ஏழு தீவுகளின் பெயர்களை ஆசிரியர் பட்டியலிட்டிருக்கலாம்....  அத்யாயம் நான்கு மற்றும் ஐந்து. நான்காவது அத்யாயம் கோவில் வருமானம் நகைக்கடை வருமானத்தை விடவும் தேயிலை தோட்டத்தில் வேலை  செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை வாசகர்களுக்கு புரிய வைக்கிறது. அத்யாயம்  ஐந்து மிகச்சிறப்பானப் பதிவு. தேயிலைத் தோட்டத்தினை குதிரையில் சுற்றிவந்த திருப்தியைத் தருகிறது. குறிப்பாக ஒரு அறைக்குள் நான்கைந்து குடும்பங்கள் தங்குவதும் பாலியல் சீண்டலும் கழிப்பறை , குளியலறை  அற்ற வசதியும் நாவலில் சுருக்கமாகவும் அதே நேரம் அடர்த்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோன் கதாபாத்திரம் நாவலுக்கு ஒரு வலுவைக்கொடுக்கிறது. கண்ணனின் குடும்பம் இணைந்திருப்பது ஆறுதல் தருகிறது. அத்யாயம் ஆறு , ஏழு  நாவலில் முக்கியக் கதாப்பாத்திரம் யாரென்று தெரியாதளவிற்கு பாத்திரத்தின் பெருக்கம் கூடிக்கொண்டே போகிறது. வீராசாமி - கண்ணன்- செல்லச்சாமி - வேலுச்சாமி கதையின் ஓட்டத்தில் பாத்திரப்படைப்பு மனதில் நிற்பதில் குழப்பம் வருகிறது.  மங்கேலியா புலூம்பீல்ட் தேயிலைத் தோட்டம் செல்லசாமிக்கு தபால் துறையில் வேலைக்கிடைப்பது , சரஸ்வதியுடன் திருமணம் வீரசாமியின் மரணம் தாய் சொந்த மண்ணை விட்டு வர அடம் பிடிப்பது போன்ற காட்சிகள் வெகுவாக மனதைக் கவர்கிறது. வேலுச்சாமி எடுக்கப்போகும் முடிவை அறிந்துகொள்ள அடுத்த  அத்யாயம் நோக்கி உந்துதலை  கொடுக்கிறது. நின்று எழுதவேண்டிய நாவலை ஓடிக்கொண்டு எழுதியிருப்பதாக நினைக்கத்தோன்றுகிறது. பார்க்கலாம். அத்யாயம்  எட்டு மற்றும் ஒன்பது வேலுச்சாமியை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு நகர்கிறது. அவனது கணித அறிவு மற்றும் சமயோசிதப் பேச்சு அவனை மேற்படிப்பை நோக்கித் தள்ளுகிறது. முதலில் வேலைக்காரனாக சேர்த்துக்கொள்ளப்படும் அவன் வீட்டின் முதலாளியே அவனைக் கொண்டுபோய் ஒரு பள்ளியில் சேர்ப்பதும் அவனது புத்திக் கூர்மையைப் பாராட்டுவதும் முதலாளி தொழிலாளி  உளவியலுக்கு முரணான ஒன்று. இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதால் இனம் ரீதியில் அச்சிறுவனை அவன் கொண்டாடச் செய்திருக்கலாம். இந்த இடத்தில் ஒரு பிரபலமான ஒரு சிறுகதை  ஒன்றைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.  இஸ்மத் சுக்தாய் எழுதிய கல்லு என்கிற உருது சிறுகதை.  தொழிலாளி -முதலாளி பந்தத்தின் உளவியலை மிகச்சரியாக படம் பிடித்த சிறுகதை இது.   தன் வீட்டில் வேலைக்காரனாக இருந்த ஒருவன் படித்து உயர் பதவியில் அமர்ந்து அந்த வீட்டில்  பால்ய பருவத்தில் விளையாடித்திருந்த வீட்டு எஜமானியின் மகளை பெண் கேட்டு வர எஜமானியின்  சுயமரியாதை  அவனுக்கு இடம் கொடுக்காது.  அவனை உதாசீனப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுவாள். நிஜ வாழ்வில் இது உண்மை. ஆனால் தலைமுறை  நாவலில் வேலுச்சாமி முதலாளியால் பெருதும் கொண்டாடப்பட  தமிழினம் என்கிற ஒற்றை  உணர்வைத் தவிர வேறொன்றையும் பெரிதாக யோசிக்கமுடியவில்லை. அவன் பெரியப் பொறுப்பிற்கு சென்றதன் பிறகு நேர்மையோடு செயல்படுவதும் அவனது மேஜையில் கோப்புகள் தங்காமல் பார்த்துகொள்வதும் விலைப் போகாமல் இருப்பதும் கதையின் போக்கை அழகுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் செய்கிறது. கதையில் சிங்களவர்களின் குறுக்கீடுகளும் வரம்பு மீறல்களும் இல்லாமல் இருப்பது நாவல் மீதான பெருத்த எதிர்ப்பார்ப்பை குறைப்பதாக இருக்கிறது.   தொடரும்.....பதாக நினைக்கத்தோன்றுகிறது. பார்க்கலாம். இறுதிப்பகுதி வேலுச்சாமி தேயிலைத் தொழிலாளர்களுக்கு பிரச்சனையை தலைமையேற்று பேசுகையில் சுருக்கெழுத்து பாத்திரமாக சிங்களப் பெண் தாரகா  அறிமுகமாகிறாள்.அவள்  சிலோனை கடைசியாக ஆண்ட சிங்கள வம்சத்தின் குடும்பப்பெண்ணுடன் ஒப்பீடு செய்யப்படுகிறாள். இருவரும் குடும்ப ஒத்துழைப்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். கலப்பு திருமணம் எங்கு நடந்தால் என்ன வரவேற்கப்பட வேண்டிய  ஒன்றுதான். அத்யாயம் பதினொன்று நாவலின் மிக முக்கியமானது. இந்த நாவல் எழுதப்படுவதற்கான நோக்கம் இதுதான் எனத் தெரியவருகிறது. தேயிலைத் தோட்டத்தில் வேலைச் செய்பவர்களுக்கு வீடு , கழிவறை மற்றும் குளியலறை, பென்சன் , குழந்தைகள் கல்விக்கற்க பள்ளிக்கூடம் , மது கட்டுப்பபாடு , மருத்துவ வசதிகள் செய்துதரப்படும் என கொள்கை முடிவு எடுப்பது நாவலின் மைய நீரோட்டத்தை கனம் கொள்ள வைக்கிறது.  வேலுச்சாமி தம்பதிக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் ஈ.வெ.ராமசாமி பிறந்த நாளன்று பிறந்ததால் அப்பெயர் சூட்டப்படுகிறது. அவன் எழுத்தாளர்  ஆகிறான். அவன்தான்  தேயிலைத் தொழிலாளர்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்கள் வாழ்ந்த இடங்களை  நேரில் பார்த்து தலைமுறை என்கிற நாவலை எழுதுகிறான்.  கடைசி அத்யாயம் கர்ப்பம் தரித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. வீராசாமியில் தொடங்கி இராமசாமியில் முடியும்  இந்நாவலின் எழுதப்படாத முன் பகுதிகளும் வீராசாமிக்கு முந்தைய தலைமுறை தாத்தா வீரபாண்டிய கட்டப்பொம்மன் படையில் போர் வீரனாக இருந்ததையும் முக்குலத்தோரின் வியப்பான சாகசங்களை எடுத்துச்சொல்வதாகவும் இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சியை கட்டப்பொம்மன் ஏன் தேர்வு செய்தான் என்பதற்கு நாவலுக்குள் வந்துபோகும்  நரியை முயல் விரட்டியக் கதை அழகையும்  வியப்பையும் அளிக்கிறது.  திருச்சந்தூர் முருகன் மீதான பக்தி,  ஆறு நாட்களில் எழுப்பப்பட்ட அரண்கள் யாவும் நாவலில் வியப்பைக் கூட்டுகிறது. அத்தகைய வீர குலத்தில் பிறந்த பெருமையுடன் ராமசாமி தலைமுறை நாவலை முடித்து மூதாதையர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.  நாவல் கடைசி பாத்திரம் நாவலின் நிஜ ஆசிரியர் பொன்.குலேந்திரனாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.  நாவலின் மிக முக்கியமான  இடமாக நான் பார்ப்பது சூரிய உதய் திட்டம் அத்யாயத்தைதான். நாவல் முடிந்திருக்க வேண்டிய இடமும் அதுதான். குல பெருமை பேசும்படியான கடைசி அத்யாயம் சற்று முந்தைய  அத்யாயத்தில் வைத்திருக்க வேண்டிய ஒன்று.  உழைக்கும் மக்களின்  ஏக்கத்தை துயரத்தை துடைத்த ஒரு கை இன்ன சமூகத்தின் கை எனத் தெரிய வருகிற பொழுது துயரம் சிறுத்து பெருமை தலையெடுக்கிறது.   உழைக்கும் மக்களுக்கான நாவல் கடைசி அத்யாயத்தில் ஒரு குலப்பெருமையை பேசக்கூடிய நாவலாக மாறுவதால் ஈரம் பிடிக்கவேண்டிய இடத்தை வீரம் பிடித்துகொள்கிறது. முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக