வியாழன், 13 ஏப்ரல், 2017

சு.வேணுகோபால் கணையாழி இதழில் 'மறைந்த பின்னும் பறக்கும் பறவை' குறுநாவல் வாசித்தேன். ஒரு ஓவியக் கலைஞனின் வாழ்க்கை அவனது ஏமாற்றம், குடும்ப சூழலை இந்நாவல் கனத்துடன் பதிவு செய்திருந்தது. நாவல் வால்பாறை சுற்றுலா கொண்டாட்டத்துடன் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் டீச்சரின் அந்தரங்க உறுப்புகள் உட்பட பலதையும் கேலி செய்து அவர்கள் பெற்ற தண்டனைகளுடன் நகரும் கதை ஓரிடத்தில் யாரென்று தெரியாத ஒருவர் தற்கொலைச் செய்துகொள்ள அதை அவர்கள் காவல் துறையிடம் முறையிட காவலர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொள்ள என திகிலுடன் நகரும் கதை தற்கொலை செய்துகொண்டவர் யாரென தெரியவருகிற பொழுது மனது கனத்து விடுகிறது. தற்கொலைஞன் தமுஎகச, கலை இலக்கிய கூட்டங்களுக்கு ஓவியம் வரையும் மணிமாறனாக இருக்கிறான். ஓவியம் இனி தீட்டவேண்டாம் என்றும் மகள் பூப்பெய்துவிட்டதால் தினக்கூலி வேலைக்கு போக வேண்டும் என அவரது மனைவி பணிக்கிறாள். அவருக்கு ஒரு கலை இலக்கியக் கூட்டத்திலிருந்து ஓவியம் தீட்ட அழைப்பு வருகிறது. மனைவி தடுக்கிறாள். இதற்கிடையில் அவள் தினக்கூலிக்கு வேலைக்குச் செல்லுமிடத்தில் ஒருவன் உன் மகளுக்கு நான் நகை எடுத்து தருவதாகவும் உனக்கு எப்பொழுது பணம் கிடைக்கிறதோ அப்பொழுது பணம் தந்தால் போதுமென்று சொல்லியச்செய்தியை அவள் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஒரு பக்கம் ஓவியம் தீட்ட போக முடியாமையும் இன்னொரு பக்கம் மூன்றாவது ஒருவன் மனைவியை வளைக்கப்பார்ப்பதும் அவனுக்குள் உள்ளக்கிடக்கை கிடந்து அடித்துகொள்கிறது. வால்பாறை சுரங்கத்திற்குள் இறங்கி அவரை அள்ளி வருகிறார்கள். அவர் மகளின் பூப்பெய்தல் சடங்கைக் கூட செய்து முடிக்காமல் மனைவியின் ஓலத்தோடு இடுகாட்டிற்கு தூக்கிச்செல்லப்படுகிறார். நாவல் தொடக்கத்தில் குதூகலத்தையும் இறுதியில் ஒரு கலைஞனின் துயர் வாழ்வையும் எழுதிச்செல்லும் இந்நாவல் கலைஞர்களுக்கான நாவல். சு.வேணுகோபால் மற்றும் கணையாழி இதழ் இருவருக்கும் எனது வணக்கங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக