முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுகதை டாலர்



       ‘ நீங்கள் வைதேகி’
       ‘. ஆம்...’
       ‘ உங்கள் தகப்பனார் மருதமுத்து. விவசாயி. இருப்பிட முகவரி மஞ்சம்பட்டி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு. தென்இந்தியா....’
       ‘ ஆம்...சரி.’
       ‘ வாழ்த்துகள்....’
       ‘ வாழ்த்துகளுக்கானக் காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்....?’
       ‘ நேர்முகத் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளில் தேர்வாகி மூன்றாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்....’
       ‘  என்னை அடுத்தச்சுற்றுக்கு தேர்வு செய்த உங்களுக்கும் நிறுவனத்தார்களுக்கும் நன்றி ’
       ‘ முதல் சுற்றில் கலந்து கொண்ட ஆயிரம் பொறியாளர்களில் ஐம்பது பேர்கள் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களிலிருந்து மூன்றாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டவர்கள் பத்து பேர்கள் மட்டுமே. அப்பத்து பேர்களில் நீங்களும் ஒருவர்...’
       ‘ நன்றி’
       ‘ இன்னொரு தகவலையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்...’
       ‘ ஆம்....சொல்லுங்கள்...’
       ‘ முதல் இருசுற்று அளவிலான நேர்முகத்தேர்வில்  ஆங்கிலப்புலமை, நிர்வாகம் தொடர்பானக் கேள்விகள், துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொன்னதன் அடிப்படையில் நீங்கள் இரண்டாமிடத்தில் இருக்கிறீர்கள்....’
       ‘ நன்றி’ .
       ‘ இத்தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்...?’
       ‘ பெருமையாகக் கருதுகிறேன் ’
       ‘ இச்சுற்று உங்களின் கடைசி சுற்றாக இருக்கலாம். ஒருவேளை இச்சுற்றில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மனநிறைவை அளிக்கும்படியாக உங்கள் பதில் இருக்குமேயானால் நீங்கள் அடுத்தச் சுற்றுக்கு அழைக்கப்படுவீர்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன்....’
       ‘ முன்னறிவிப்பிற்கு நன்றி ’
       ‘ அடுத்தச்சுற்றில் மூன்று கேள்விகள் மட்டும் கேட்கப்படும். அக்கேள்விகளுக்கு அப்பொழுதோ அல்லது இருபத்து நான்கு மணி நேரம் கழித்தோ உங்கள் பதிலைச் சொல்லலாம். உங்கள் பதில் எங்கள் நிர்வாகத்தைத் திருப்திப் படுத்தினால் அன்றைய தினமே உங்களுக்கான பணி நியமன ஆணை இணையம் வழியில் அனுப்பி வைக்கப்படும். கூடவே நீங்கள் எங்கள் நாட்டிற்கு வருவதற்கான அனுமதி மற்றும் பயணத்தொகை அனுப்பிவைக்கப்படும்...’
       ‘ இது எனக்கொரு வாய்ப்பு. அடுத்தச்சுற்றில் தேர்வு பெற்று உறுதியாக பணி நியமன ஆணையைப் பெறுவேன்....’
       ‘ எங்கள் நிறுவனத்தின் விருப்பமும் அதுதான்’
       ‘ உங்கள்  விருப்பத்தினை நான் நிவர்த்திச் செய்வேன்....’
       ‘ வாழ்த்துகள்...நீங்கள் பள்ளிப்படிப்பை தாய்மொழி வழிக்கல்வியில் படித்திருக்கிறீர்கள். உயர்க்கல்வியை எங்கள் மொழியில் முடித்திருக்கிறீர்கள். மேனிலைக் கல்வியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற நீங்கள் பொறியியலில் முதலிடம் பெற்றிருக்கிறீர்கள். அதற்காகவும் எங்கள் நிறுவனம் உங்களை வாழ்த்துகிறது....’
       ‘ நன்றி’
       ‘ இப்பொழுது உங்களுக்கான முதல் கேள்விக்கு வருகிறேன். உங்கள் நாட்டில் பள்ளிக்கல்வியை ஆங்கில வழியில் படித்த பலர் பொறியியல் பாடங்களில் தேர்ச்சிப் பெற முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் பள்ளிக்கல்வியை தாய்மொழி வழியில் கற்ற நீங்கள் ஒரே முயற்சியில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். இது எப்படி உங்களால் முடிந்தது....?’
       ‘ நான் என் குடும்பச் சூழ்நிலையை நினைத்துப் படித்தேன். தேர்ச்சிப்பெற்றேன்...’
       ‘ அப்படியானால்... நீங்கள் வறுமையானக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்ல வருகிறீர்கள்..அப்படித்தானே....?’
       ‘ இல்லை....என் குடும்பத்தார்கள் என் மீது அதீதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களின் நம்பிக்கையை நினைவாக்கும் பொருட்டு கடினமாக உழைத்தேன் எனச் சொல்ல வருகிறேன். ’
       ‘ இதற்கு முன் யாராலும் சொல்லப்படாத மாறுபட்டப் பதிலாக உங்கள் பதில் இருக்கிறது’
       ‘ நன்றி’
       ‘ நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பொறியாளராக பணியமர்த்தப்பட்டால் உங்கள் உழைப்பை யாருக்காக அர்ப்பணிப்பு செய்வீர்கள்....?’
       ‘ யாருக்காக....என்கிற சொல்லிற்குள் யார் யாரை கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது...’
       ‘ உங்கள் குடும்பம். எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பம். உங்களைப்போல பலருக்கும் எனக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் முதலாளியின் குடும்பம்....இவற்றுக்குள் உங்கள் பதில் இருக்கிறதா....?’
       ‘ இதற்கு வெளியிலிருந்து ஒரு நல்லப் பதிலைச் சொல்ல முடியும் என நினைக்கிறேன்....’
       ‘  நினைக்கும் பதிலை நீங்கள் சொல்லலாம்...’
       ‘ என் உழைப்பை எனக்கும்கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு செய்ய நினைக்கிறேன்.....’
       ‘ ஏன்....?’
       ‘ நான் ஒரு வேலையை திறம்பட முடித்தால்தான் எனக்கும் கீழ் பணியாற்றுபவர்கள் அதன் தொடர்ச்சியைச் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஒரு நிறுவனம் வளர்வதற்கு இது ஒன்றே வழி என நினைக்கிறேன்.’
        ‘ நன்று. அடுத்தக்கேள்வி. நீங்கள் படித்தது உங்கள் தேசத்தில். ஆனால் எங்கள் நாட்டு நிறுவனத்தில் வேலைத்தேடக் காரணம்....?’
       ‘ உங்கள் நாட்டிலும் எங்கள் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக....’
       ‘ உங்கள் படிப்பு, நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண், இதை வைத்துப்பார்க்கையில் உங்களுக்கு உங்கள் நாட்டில் நல்ல வேலை கிடைத்திருக்க வேணும். ஆனால் கிடைக்கவில்லையே ஏன்....?’
       ‘ என்னைப் போன்ற திறமையானவர்களை வேலையில் அமர்த்தினால் திறமைக்கு ஏற்ப நிறைய சம்பளம் கொடுக்க வேணுமே...என என் நாட்டு முதலாளிகள் நினைத்திருக்கலாம்....’
       ‘ அப்படியானால் எங்கள் நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கக் காரணம் அதிக சம்பளம். அப்படித்தானே....?’
       ‘ அது காரணமல்ல. அதுவும் ஒரு காரணம்....’
       ‘ உங்களை எம் நிறுவனம் தேர்வு செய்து உங்களின் திறமையை முழுமையாக அங்கீகரித்ததன் பிறகு நீங்கள் இதை விடவும் அதிகச் சம்பளம் தருவதாக அழைக்கும் நாட்டிற்கோ, நிறுவனத்திற்கோ செல்ல மாட்டேன்....என உத்திரவாதம் தர முடியுமா.....?’   
       ‘ அதற்கான அவசியம் எனக்கு நேரிடாது. காரணம் நான் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது நிறைய சம்பளம் அல்ல. உழைப்பிற்கேற்ப நிறைவானச் சம்பளம். அந்தச் சம்பளம் எனக்கு கிடைக்கையில் நான் ஏன் வேறொரு நிறுவனம், நாட்டினைத் தேட வேண்டும்....?’
        ‘ எங்கள் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு செல்ல மாட்டேன் என உங்களால் உறுதிமொழி தரமுடியுமா....?’
       ‘ ஆம்....தருகிறேன்....’
       ‘ அடுத்தக் கட்ட கேள்விகளுக்கு போவோம்....உங்களுடையத் தனித்திறமை என்ன....?’
       ‘ நன்றாகப் படம் வரைவேன்.....கட்டுரை எழுதுவேன்.....’
       ‘ ஒரு பொறியாளர் ஓவியராக இருக்க வேணும். அவசியமும் கூட. ஆனால் கட்டுரையாளராக இருக்க வேண்டியதில்லை....என் கருத்தின் மீது உங்களது எதிர்வினை என்ன....?’
       ‘ பொறியாளர்களுக்கு ஓவியத்திறமை இருக்க வேண்டியது அவசியம் எனக் கருதும் நீங்கள் கட்டுரையின் மீது முரண்படுவதற்கானக் காரணம் புரியவில்லை...’
       ‘ நன்றாகக் கேட்டீர்கள்....நீங்கள் எழுதும் கட்டுரை உங்களுக்கு பேரும் புகழும் வாங்கித்தரலாம். ஆனால் அதேக் கட்டுரை எங்கள் தேசம் மற்றும் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை சீர்க்குலைக்கும்படியாக இருந்துவிடக்கூடும் இல்லையா! ’
       ‘ எதை வைத்து சொல்கிறீர்கள்....?’
       ‘ஒரு பொறியாளர் பொறியியல் தொடர்பானக் கட்டுரைகளை எழுதும் வரைக்கும் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. பொறியியல் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எங்கள் நாட்டு பொருளாதாரம்தான் காரணம் என எழுதிவிடுவீர்களாயின் நீங்கள் எம் நிறுவனத்திற்கு அவப்பெயர் தேடி தருவதாக இருந்துவிடக்கூடும். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....?’
       ‘ உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்...’.
       ‘ உங்கள் தந்தையார் என்னச் செய்கிறார்.....?’
       ‘ பேச்சாளர்...’
       ‘ புரியவில்லை....’
       ‘ இலக்கிய மன்ற விழாக்களில் பேசக்கூடியவர்....’.
       ‘ எங்களின் முதல் நிபந்தனை , இனி அவர்  எந்தக் கூட்டத்திலும் பேசுதல் கூடாது....’
       ‘ நான் உங்கள் நாட்டில் பணியாற்றுவதற்கும் என் தந்தையார் எங்கள் ஊரில் இலக்கியம் பேசுவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்....?’
       ‘ உங்கள் கேள்வி சரியானது. ஆனால் தொடர்பு இருக்கிறது.’
     
  ‘ எப்படி....! அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்....?’
       ‘ உங்கள் தந்தையார் இலக்கியம் பேசி பொது மக்களைக் கவரும் நபர் என்றால் அவரால் உங்கள் பணி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது’
        ‘ அவரால் என் பணி எப்படி பாதிப்படையும்...?’
        ‘ உங்கள் தந்தையார் இலக்கியம் மட்டும் பேசினால் பரவாயில்லை. இலக்கியத்துடன் அரசியல் பேச அதை பத்திரிக்கைகள் வேறொரு விதமாகத் திருத்தி எழுத...உங்கள் தந்தையார் காவல் துறையினரால் கைது செய்யப்படலாம் இல்லையா....?’
       ‘ என் தந்தையார் கம்பராமாயணம் பேசக்கூடியவர். அவர் பேச்சுக்கும், அரசியல் பிரச்சனைக்கும் ஒரு தொடர்பும் இருக்கப்போவதில்லை....’
       ‘ கம்பராமாயணத்தில் அவர் பேசப்போவது கம்பரைப் பற்றி அல்ல. இராமனைப்பற்றி. இதற்கு மேலும் நான் விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்....’
       ‘ ஆம்..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனப்புரிகிறது’
       ‘ அவரது இலக்கியப் பேச்சால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என எங்கள் நிறுவனம் கருதுகிறது....’
       ‘ உங்கள் பதில் உத்தேசமானது....’
       ‘ இருக்கலாம்....ஒரு வேளை அவர் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார் என வைத்துகொள்ளுங்கள். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் இருந்துகொண்டு அவருக்காக கவலைப்பட வேண்டிவரும் இல்லையா! அதனால் உங்கள் பணி தொய்வடைந்து நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்....?’
       ‘ சரிதான்...என் அப்பா இனி இலக்கியம் பேசமாட்டார்....’
       ‘ அவரிடமிருந்து ஓர் உறுதிமொழி கடிதம் பெற்றுத்தர வேணும்...’
       ‘ அவசியம் தருகிறேன்...’
       ‘ அடுத்து நீங்கள் பதிலளிக்கும் தோரணை , கேள்விகளுக்கிடையில் கேள்வி கேட்கும் தொனி இவற்றை வைத்துப்பார்க்கையில் நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என நினைக்கத் தோன்றுகிறது. என் சந்தேகத்திற்கு உங்கள் பதில்.......?
       ‘ இக்கேள்விக்கும் என் பணிக்கும் என்னத் தொடர்பு....?’
       ‘ இருக்கிறது...எங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றுகையில் எதிர்பாராவிதமாக விபத்து நேரிடலாம்....’
       ‘ என்ன சொல்கிறீர்கள்....!’
       ‘ ஒரு வேளை என நான் சொன்னதை நீங்கள் கவனத்தில் எடுத்துகொள்ள வேணும்...!’
       ‘ இம்....சொல்லுங்கள்...’
       ‘ விபத்து நிகழ்ந்தால் உங்கள் நாட்டில் கம்யூனிஸ்ட்கள் கொடிப்பிடித்து போராட்டத்தில் குதித்து விடுவார்கள். இழப்பீடு கேட்பார்கள். இழப்பீடு கொடுப்பதைப்பற்றி எங்களுக்கு ஒரு தயக்கமும் இல்லை. உலகம் முழுமைக்குமான எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சரிய வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமன்று....எங்கள் தேச பிரமுகர்கள் உங்கள் தேசத்திற்கு வருகையில் கறுப்புக்கொடி காட்டுவீர்கள். இதனால் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படலாம். இத்தனைக்கும் காரணம் நீங்கள் கம்யூனிஸ்ட்டாக இருப்பதுதான்...இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....?’
       ‘ அப்படியொரு நிகழ்வு ஒருபோதும் நடந்தேறாது’
       ‘ ஒரு வேளை நடந்தால்....?’
       ‘ போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் என் மொத்தக் கவனமும் இருக்கும்’
       ‘ ஒரு வேளை நீங்கள் விபத்தில் இறந்து விடுகிறீர்கள்....’
       ‘ ................’
       ‘ பார்த்தீர்களா....உங்களால் சட்டெனப் பதில் சொல்ல முடியவில்லை...அதற்காகத்தான் நீங்கள் கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடாது என்கிறேன்....’
       ‘ நாங்கள் கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்ல’
       ‘ நீங்கள் ஈழத்தமிழ் ஆதரவாளராகவும் இருக்கக்கூடாது. ஏனென்று கேட்கலாம். நீங்கள் ஈழத்தமிழ் ஆதரவாளர் என்றால் எங்கள் நாட்டில் வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கம் காட்டுவீர்கள். அவர்கள் வைத்திருக்கும் சங்கங்களில் ஐக்கியமாவீர்கள். எங்கள் அரசு எடுக்கும் கொள்கை முடிவில் தலையிடுவீர்கள். போராடுவீர்கள்.....’
       ‘ நான் ஈழத்தமிழ் ஆதரவாளர் அல்ல...’
       ‘ ஈழத்தமிழர் மட்டுமல்ல எந்த தமிழருக்கும் நீங்கள் ஆதரவாளராக இருத்தல் கூடாது....’
       ‘ மாட்டேன்......’.
       ‘ நீங்கள் உங்கள் உறுப்புகளைத் தானம் செய்திருக்கக்கூடாது....’
       ‘ அது என் விருப்பம்’
       ‘ இருக்கலாம்....உறுப்புகளை நீங்கள் தானம் செய்தால் நீங்கள் இறந்ததன்பிறகு உங்களைப் பதப்படுத்தி உடனடியாக உங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிவரும். இதனால் கூடுதல் செலவு ஆவது ஒரு பக்கமிருந்தாலும் இதனால் சில சட்டப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது...’
       ‘ நான் இது நாள் வரைக்கும் என் உறுப்புகளை தானம் செய்யவில்லை.’
       ‘ நல்லது. இதைத்தான் எங்கள் நிறுவனம் எதிர்ப்பார்க்கிறது. இத்துடன் நீங்கள் ஒரு ஒப்பந்தத்துடன் கையெழுத்திட வேண்டும்...’
       ‘ என்ன ஒப்பந்தம்...?’.
       ‘ ஒருவேளை நீங்கள் பணியின் போது இறந்தால் உங்கள் உடலை எங்கள் நாட்டில் எரியூட்டுக்கொள்ள அனுமதிக்க  வேண்டும்....’
       ‘ உங்கள் கேள்வி என்னை மிரட்டுவதைப்போலிருக்கிறது’
       ‘ இக்கேள்வியால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை....உங்கள் உயிர்க்கான முழு பாதுகாப்பும் எங்கள் நிறுவனத்தைச் சார்ந்தது. ஒரு வேளை என்பதற்குள் இவ்வகை ஒப்பந்தம் தேவையாக இருக்கிறது....’
       ‘ ஆம்....கையெழுத்திடுகிறேன்....’
       ‘ எங்கள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைத்தால் பத்து வருடங்களுக்கு நீங்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது....’
       ‘ என் எதிர்காலத்தில் உங்கள் நிறுவனம் தலையிடுவதைப்போலிருக்கிறதே...’
       ‘ ஒருவேளை திருமணம் செய்துகொள்வீர்களாயின் எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது....’
       ‘ உங்கள் அனுமதியுடனே இரண்டையும் செய்வேன்....’
       ‘ உங்களின் உடனடி பதிலுக்கு என் நன்றி...’
       ‘ நன்றி...’
       ‘ இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கற்பு பற்றி பெரிய அளவில் பேசப்படுகிறது. கற்பு பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன....?’
       ‘ கேள்வி புரியவில்லை....’
       ‘புரியவில்லையா.....! சரி, முதலில் நான் எங்கள் நிறுவன செயல் திட்டத்தைச் சொல்கிறேன். அதிலிருந்து உங்களின் நிலைப்பாட்டை சொல்லுங்கள்....?’
       ‘ ஆம்....சொல்லுங்கள்...’
       ‘வருடத்திற்கொரு முறை நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பொருட்டு அவர்களை சர்வதேச சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வோம்...உங்கள் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கும் தானே....?’
       ‘ ஆம்....ஒத்துழைக்கும்....’
       ‘ அவ்வாறு அழைத்து செல்கையில் தங்கும் இடவசதி கிடைக்காததன் பொருட்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ நீங்கள் உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் அல்லது ஓர் ஆண் நபருடன் தங்கும் நிலை ஏற்படலாம்....உங்கள் கற்புநெறி அதற்கு ஒத்துழைக்கும் தானே....?’
       ‘ .......’
       ‘ இக்கேள்விக்கானப் பதில் உங்களிடமிருந்து வரவில்லையே!. அடுத்ததொரு கேள்வி. எங்கள் நிறுவனத்திற்குள் அல்லது வெளியில் பணியின் போது அல்லது விடுதியில் ஓர் ஆணின் கிண்டலுக்கு நீங்கள் ஆட்படலாம்....நேசிக்கப்படலாம்....ஒரு தலை காதலுக்கு உட்படலாம்...அல்லது எங்கள் நிறுவனத்திற்கு வருகை தரும் சிறப்பு விருந்துனர்களின் விருந்திற்கு நீங்கள் அழைக்கப்படலாம்....அங்கு உங்கள் மனம் நோகும்படியான சம்பவம் எதுவும் நடந்தேறலாம். இத்தகைய சம்பவம் நிகழ்வது அரிதினும் அரிதான ஒன்று. ஒருவேளை நிகழ்ந்தால் நிறுவன தலைமையிடத்தில் இழப்பீடு கோர உங்களுக்கு முழு அனுமதி உண்டு. ஆனால் எங்கள் மற்றும் உங்கள் நாட்டின் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரக் கூடாது....இந்த நிபந்தனையின் மீது உங்கள் பதில் என்ன....?’
       ‘ .....’.
       ‘ அடுத்ததொரு முக்கியமானக் கேள்வி. கடைசி கேள்வியும் கூட. எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் பொதுத்தேர்தல்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெறலாம்....ஒருவேளை கிடைத்தால் உங்களின் வாக்கைப் பதிவு செய்து உரிய முறையில் அனுப்பி வைக்கும் உரிமை எங்களுடையது. இந்த நிபந்தனையின் மீது உங்கள் பதில் என்ன...?’
       ‘......’
       ‘இச்சுற்று இத்துடன் முடிவிற்கு வருகிறது. கடைசியாகக் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் அடுத்தச்சுற்றுக்கான கேள்விகள். இக்கேள்விக்கானப் பதிலை நீங்கள் இப்பொழுதே சொல்லி பணி நியமன ஆணையைப் பெறலாம். அல்லது நாளை இதே நேரம்...சரியாக பத்து மணிக்கு காணொளிக்காட்சியில் தொடர்பு கொண்டு பதில் தெரிவிக்கலாம். முதல் கேள்விக்கானப் பதில் ‘ ஆம் அல்லது பரவாயில்லை ’ இவற்றில் ஒன்றாக இருப்பது நல்லது. அடுத்தக்கேள்விக்கான பதில் ‘ ஆம்....’ என்றே  இருக்க வேண்டும். கடைசி கேள்விக்கு ‘ ஆம்...’ ஒன்றே பதிலாக இருக்க முடியும்.’
       ‘ !!!!...’ 
       ‘ வைதேகி... கடைசியாக ஒரு செய்தி...’
       ‘ ஆம் சொல்லுங்கள்....’
       ‘ மீண்டுமொரு முறை எங்கள் நிறுவனம் உங்களுக்குத் தரப்போகும் சம்பளத்தை நினைவூட்டுகிறேன்....நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பொறியாளராக பணி நியமனம் செய்யப்பட்டால் வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை , எட்டு மணி நேரம் வேலையுடன் கூடிய முதல் மாத அடிப்படைச்சம்பளம் பத்தாயிரம் அமெரிக்க டாலர்... இந்திய ரூபாயில் தெரிந்துக்கொள்வதாக இருந்தால் சம்பளத்தை எழுபதால் பெருக்கிக்கொள்ளுங்கள்.....
                                       




கருத்துகள்

  1. முக்கால்வாசி பேர் இப்படிதான் வாழ்ந்த்திட்டிருக்காங்க. நம்ம ஊர்ல செய்ற கேவலமான தொழிலும் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...