திங்கள், 17 அக்டோபர், 2016

இரோம் ஷர்மிளா - ஒரு பெண் புலியின் பொதுவழிப்பாதை.


        ‘என்னை பத்திரிக்கையில் போடாதீர்கள்...’ என்றொரு சிறுகதை. ஒரு குடிசைக்குள் நுழையும் இந்திய இராணுவம் ஒரு அப்பாவிச் சிறுவனைக் கைது செய்கிறது. அச்சிறுவன் தான் கைது செய்யப்படுவதற்கானக் காரணத்தைக் கேட்கிறான். இராணுவம் துப்பாக்கியை நீட்டியபடி காரணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லிவருகிறது. சிறுவன் ‘ நான் ஒரு தவறும் செய்ய வில்லை...நான் சின்னப்பையன், சாராயம், போதை மருந்து எனக்குத் தெரியாது. நான் உளவாளி இல்லை,. யாரிடமும் நான் பணம் வாங்கவில்லை...என்னிடம் எந்தத் துப்பாக்கியும் கிடையாது. நான் தீவிரவாதி கும்பலைச் சேர்ந்தவனில்லை. நீங்கள் சொன்ன எந்த விஷயமும் எனக்கு சம்மந்தமில்ல, நான் அப்பாவி. நான் செத்துப்போயிட்டேன் என்றால், என்னைப் பற்றி  அவதூறாகப் பத்திரிக்கையில் எழுதாதீர்கள். ஏனென்றால் அதை மறுக்க என் தரப்பில் யாருமில்லை....’ அவன் மீது இராணுவத் தோட்டாக்கள் பாய்கின்றன.
       மணிப்பூரி எழுத்தாளர் ஈ.ஸோனாமணி சிங் எழுதிய இக்கதையை கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கினால் அச்சிறுவன் சுடப்படும் அரவம், அழுகுரல், கதறல் யாவும் வடகிழக்குத் திசையிலிருந்து வருவதை உணரலாம். அந்த வடகிழக்கு திசையில்தான் மணிப்பூர் இருக்கிறது.
       அஸ்ஸாம் வாழ் பழங்குடிப் பெண்களை இந்திய இராணுவம் அத்துமீறி பலாத்காரம் செய்கிறது. அதற்கான எதிர்ப்பு மணிப்பூரி பெண்களிடமிருந்து எழுகிறது. இந்த எதிர்ப்பு இந்தியா அதுநாள் வரை கண்டிராத எதிர்ப்பு. உலக அரங்கில் இந்தியாவை வேறொருக் கோணத்தில் காட்டும் படியான எதிர்ப்பு அது. ஆம், ‘ இந்தியன் ஆர்மி ரேப் அஸ்’ என்கிற பதாகையைப் பிடித்தபடி ஏழு பெண்கள் அஸ்ஸாம் சட்டசபை வாசல் முன்பாக  நிர்வாணமாக நின்றார்கள். மணிப்பூர் பெண்களின் போராட்டம் என்பது வெறும் மணிப்பூர் வாழ் மக்களுக்கானது அன்று. ஏழு சகோதரிகளின் நாடு என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களான ஏழு மாநிலங்களுக்கானப் போராட்டம். அதன் உச்சப்பட்சம் மணிப்பூரின் தொடர் போராட்டங்கள்.
       அஸ்ஸாம் சட்டசபை முன் நிர்வாணமாக நின்ற ஒரு பெண்மணியிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார் ‘ உங்களால் எப்படி அப்படி கூச்சமில்லாமல் நிர்வாணமாக நிற்க முடிந்தது....?’ அதற்கு அப்பெண்மணி ‘ இந்திய இராணுவத்தினர் முன் பலமுறை நான் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறேன்....’
       மணிப்பூர் பெண்கள் அளவிற்கு தைரியசாலிகள் இந்தியாவில் இல்லை. உலகில் பெண்களே ஒரு பெரிய கடை வீதியை நிர்வகிக்கும் ‘இமா’ கடைத்தெரு மணிப்பூரில் இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகம் நிகழ்வதும் அங்கேதான்! இன்றும் பனிரெண்டு வயது ஒரு சிறுமி எண்பது வயது கிழவருக்கு மூன்றாம் தாரமாக மணமுடிக்கப்படுகிறாள். அறுபது வயது கிழவி முப்பதே வயதான ஓர் இராணுவ வீரனால் கற்பழிக்கப்படுகிறாள். இதுதான் மணிப்பூர்.
       மணிப்பூர் மாநிலத்திற்கென்று இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்திய இராணுவம் ஒரு புதுரகத் துப்பாக்கியை வாங்குவதாக வைத்துக்கொள்ளுங்கள். அத்துப்பாக்கி மனிதர்களைச் சரியாகச் சுடுகிறதா...எனச் சோதிக்க வேண்டுமென்றால் அவர்கள் மணிப்பூர்க்குத்தான் சென்றாக வேண்டும். அங்கு ‘ ஏன் எங்களைச் சுடுகிறீர்கள்...?’ என யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இந்திய இராணுவத்திற்கு இருக்காது. அப்படியாக நடந்த படுகொலைகள் மணிப்பூரில் நிறைய.
       இரண்டாயிரம் ஆண்டின் நடுப்பகுதியில், மணிப்பூர் தலைநகரில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பத்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள். இராணுவத்தார்கள் துப்பாக்கியை எடுத்தார்கள். ஒருவரையும் விட்டு வைக்காமல் சுட்டுப்பொசுக்கினார்கள். இப்படுகொலையைக் கண்டித்து வட கிழக்கு மாநிலங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. பலர் தீக்குளித்தார்கள். பலர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். இன்னும் பலர் உண்ணாவிரதமிருந்தார்கள். கால ஓட்டத்தில் பலரும் அவரவர் போராட்டத்தினை முடித்துக்கொண்டார்கள். ஒருவர் மட்டும் அவரது உண்ணாவிரதம் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார். தலை முடிகளை அவர் அள்ளி முடிந்துக்கொள்ளவில்லை. நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளவில்லை. காது மூக்குகளில் அணிகலன்கள் உடுத்திக்கொள்ளவில்லை. பெற்றத் தாயினை அவர் சந்திக்கவில்லை. தொண்டை வழியே நீராகரத்தை இறக்கிக்கொள்ளவில்லை. மணிப்பூரி வாழ் பெண்களின் உடையான ‘எனாபி’ என்கிற நீள்தாவணியைத் தவிர வேறொரு உடையை அணிந்துக்கொள்ளவில்லை. அவரது போராட்டம் பதினாறு ஆண்டுகள் நீடித்தன. உலகின் மிக நீண்டகால பட்டினிப் போராட்டம் இது. இதுவொரு அசாதாரணப் போராட்டம். இப்போராட்டத்தை நிகழ்த்திக்காட்டியவர்  இரோம் சானு ஷர்மிளா.
       2000 நவம்பர் - 5 இவர் இந்திய ஆயுத சிறப்பு சட்டத்திற்கு எதிராக பட்டினிப்போராட்டத்தைக் தொடங்குகையில் அவருக்கு வயது இருபத்து எட்டு. யாரோ ஒருவருக்கு மூன்றாவது நான்காவது மனைவியாக மணம் முடிக்கப்பட்டு மூன்று , நான்கு குழந்தைகளுக்கு தாயாகியிருக்க வேண்டிய வயது அது. ஆனால் இரோம் ஷர்மிளா அந்த வயதில் தன் சுவை உணர்வு நரம்புகளை கட்டுப்படுத்திக்கொண்டு உடல் வதைக்க தன் ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் என்றால் அப்போராட்டத்திற்கு பின்னே மிகப்பெரிய மாநில ஒடுக்குமுறையும் எதேச்சதிக்கார இராணுவ அத்துமீறியப் போக்கும் இருந்ததே காரணம்....
       அவர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியதும் அவர் மீது இந்திய குடியுரிமைச் சட்டம் பாய்ந்தது ‘ இவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்...’ என ஒவ்வொரு வருடமும் நீதி மன்றத்திற்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். நீதிபதி ஒற்றைக் கேள்வியைக் கேட்டார் ‘ நீ தற்கொலைக்கு முயற்சி செய்தாயா.....?’ ‘ ஆம்....’ ‘ ஒரு வருடக்காலம் உனக்கு கடுங்காவல் தண்டனை...’ நீதி விசாரணையும் தண்டனை பிரயோகிப்பும் இத்துடன் முடிந்துவிடும்.
       ‘ ஏன் தற்கொலைக்கு முயன்றாய்....? இதன் பின்னணி என்ன...? மத்திய அரசு இவரது தற்கொலை முயற்சிக்கு சொல்லும் பதில் என்ன...?’ இப்படியாக எத்தனையோ கேட்கப்பட வேண்டியக் கேள்விகள் இருந்தும் ஒரே கேள்வி பதினாறு வருடங்களும் கேட்கப்பட்டது என்றால் அது இரோம் ஷர்மிளாவிற்கு எதிரான நீதி விசாரணையில்தான்!
       இந்தியாவில் பட்டினிப்போராட்டத்தை பிரபலப்படுத்தியவர் காந்திஜி. காந்திஜி பட்டினிப் போராட்டத்தை கையில் எடுக்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியா எட்டு மாகாணங்களாக இருந்தன. எட்டு மாகாணமும் பிரிட்டிஷாரின் ஆளுமையின் கீழ்தான் இருந்தது என்றாலும் அவரது பட்டினிப்போராட்டம் மூன்று மாகாணங்களின் நிர்வாகத்தை மட்டுமே கேள்விக்கேட்பதாக இருந்திருக்கிறது. மெட்ராஸ்,மத்திய மாகாணத்திற்கு எதிராக அவர் ஒரு போதும் பட்டினி போராட்டம் நடத்தியதில்லை. பஞ்சாப், வங்கம், லாகூர் மாகாணங்களின் கவனத்தை தன் பக்கமாகத் திருப்பவே அவர் அதிகப்படியான உண்ணாவிரதத் போராட்டத்தைக் கையில் எடுத்திருந்தார். ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் ஒவ்வொரு விதமான போராட்டம் தேவைப்படுகிறது என்பது காந்திஜியின் அறிதல். ஆனால் இரோம் ஷர்மிளாவின் பட்டினிப் போராட்டம் காந்திய வழியில்தான் இருந்தது. ஆனால் பதினாறு ஆண்டுகால போராட்டம் ஒரே வகையினதாக இருந்திருக்கிறது. பிஜேபி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இப்போராட்டத்தின் வீரியத்தை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க வேண்டும். மறு பிஜேபி ஆட்சியின் போது போராட்ட உத்தியை மாற்றி அமைத்திருக்க வேண்டும்...இந்திய. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வழி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் இராம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை கவனஈர்ப்பிற்கு உட்படுத்திருக்க வேண்டும்...இத்தனையும் இல்லாமல் அவரது போராட்டம் ஒரு வழிப்போராட்டமாக இருந்தது அவரே எதிர்ப்பார்த்திராத கசப்பான நிகழ்வு.
       மணிப்பூர் அறுபது சட்டப்பேரவை உறுபினர்களையும் இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களை உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது. இவர்கள் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளின் பிரதிநிதிகளாக இருப்பதால் இரோம் ஷர்மிளாவின் பட்டினிப் போராட்டம் திட்டமிட்டு கண்டுக்கொள்ளாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இந்தத் தொடர் கண்டுக்கொள்ளாமையும், புறக்கணிப்பும் இரோம் ஷர்மிளா இத்தனை ஆண்டுகள் மேற்கொண்ட தொடர் பட்டினி போராட்டத்திலிருந்து மாற்று முடிவு எடுக்க தூண்டியிருக்கிறது.
       காந்திஜி எப்பொழுது உண்ணாவிரமிருந்தாலும்  இரண்டு மூன்று கோரிக்கைகளுடன் பொது இடத்தில் உட்கார்வார். அவரது கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றையேனும் ஆங்கிலேய அரசு  பரிசீலனைச் செய்யும். அப்பரிசீலனை காந்திஜீயின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த ஓரளவு வெற்றியாக காந்தியின் ஆதரவாளர்கள் கொண்டாடுவார்கள். இது ரஷ்ய மக்களின் போராட்ட உத்தி . இதை அவர் டால்ஸ்டாய் மூலமாக தெரிந்து வைத்திருந்தார். அதைக் கையாண்டு வெற்றியும் பெற்றார். ஆனால் இரோம் ஷர்மிளா காந்தியின் வழியில்தான் போராடினார். ஆனால் அவரது உத்தியில் அல்ல. ஆகையால்தான் இத்தனை நீண்ட போராட்டம் கைவிடுகையில் அவரது கோரிக்கை ஓரளவேணும் வெற்றிப்பெற்றிருக்கவில்லை. இந்திய அரசாங்கத்தின் முன் அவர் வைத்தது ஒரே கோரிக்கைதான். அது ‘ ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.....’ என்பது.
       இந்திய தலைநகர் டெல்லிக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு இடைப்பட்டத் தொலைவு அப்படியொன்றும் தூரமில்லை. ஆனால் மணிப்பூர் மாநிலத்திற்குள் நுழைய எளிய வழி அண்டை நாடான மியான்மர் வழியே செல்வதுதான். ஒரு ரொட்டித் துண்டை இந்தியத் தலைநகரம் அனுப்புவதாக வைத்துகொண்டால் மணிப்பூர் மக்களின் கையைத் தொடுகையில் ரொட்டித்துண்டில் நிச்சயம் காளான் பூத்திருக்கும். இவ்விரு நகரங்களுக்கிடையே அத்தனைத் தூரமில்லைதான். ஆனால் நிறையத் தடைகள் இருக்கின்றன.
       ஓர் இந்திய பிரஜை மணிப்பூர் மாநிலத்திற்குள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. அஸ்ஸாம், மிசோரம், நாகாலாந்து வழியே செல்லவேண்டுமென்றால் மலை, குன்று, பள்ளத்தாக்கு, நதி, காடு பாலங்களை கடந்தாக வேண்டும். இவற்றைக் கடப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கடினமில்லை. ஆனால் மணிப்பூரில் இயங்கும் பதினொரு ஆயுதம் ஏந்திய குழுப்போராளிகளின் கண்களில் சிக்கிக்கொள்ளாமல் கடப்பதுதான் நெஞ்சுக்கூட்டை திக்குமுக்காட வைக்கும் பெரிய சவால்!.
       மணிப்பூர் மக்களின் வாழ்க்கைச்சித்திரம் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையுடன் ஓரளவு ஒத்துப்போகும். ஈழத்தமிழர்களுக்கென்று கண்ணீர் வடிக்க தமிழகம்,மலேசியா, சிங்கப்பூர், கனடா,....நாடுகள் இருக்கின்றன. ஆனால் மணிப்பூர் மாநிலத்தார்களுக்கு யாருமில்லை என்பதுதான் ஆயுதப்படை சிறப்புச்சட்டம் இத்தனை ஆண்டுகள் நீடித்து இருப்பதற்கானக் காரணம். இதே சட்டத்தை அஸ்ஸாம், அருணாசலப்பிரதேசத்தில் பெரிய அளவில் பிரயோகிக்க முடியாது.மீறி  பிரயோகித்தால் அவர்கள் சீனா ஆதரவாளராக மாறிவிடுவார்கள் என்கிற பயம் இந்திய அரசிற்கு இருக்கிறது.
       ஒரு குட்டி மாநிலம் மணிப்பூர். அதற்குள் பதினொரு பிரிவினைவாதிகள் இருக்கிறதா...? என்கிற கேள்வி எழக்கூடும். ஆம் என்பதே இதற்கானப் பதிலாக இருக்க முடியும். மணிப்பூர் வாழ்வியல் கூறுகளைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்தால் அதற்குள் இருக்கும் கோஷ்டி பூசல் தெரியவரும்.
       திபெத் - மியான்மர் மொழி வம்சாவளிகள் கூகிசி. இவர்களைத் தவிர மொய்ரங்க், டுமான், அங்கோம், லுவாங்க், செங்க்லி, காபா, நகன்பாஸ் ஆகிய பழங்குடிகள் மணிப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் நிஙக்தௌஜா என்கிற சிறுபான்மை இனத்தவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மணிப்பூர் நிலத்தை நீண்டக்காலம் ஆட்சி செய்தவர்கள் நிங்க்தௌஜா இனத்தவர்கள். இவர்கள் வங்கத்திலிருந்து குடியேறியவர்கள். இவர்களின் ஆட்சிக்கு உகந்ததாக அவர்களுக்கென ஒரு பொது மொழி தேவைப்பட்டது. ஒன்பது பழங்குடிகள் பேசிய மொழிகளைத் தொகுத்து ஒரு பொது மொழியை உருவாக்கினார்கள். அதுதான் மணிப்பூரி.
       இதுதவிர மணிப்பூரிவாசிகளுக்கென்று ஒரு மதம் இருக்கிறது. அது ‘மெய்தி’. இது மியான்மர் நாட்டினரின் பெரும்பான்மை மதம். 1709 ஆம் ஆண்டு ஒரு கருப்பு சம்பவம் நடந்தேறியது. அதன் பிறகே மணிப்பூர் மக்களின் வாழ்வியல் ஆயுதம் போராட்டமாக உருவெடுத்தது.
       கிரிப் நிவாஜ் என்கிற அரசன் ஆட்சிக்கு வருகிறார். இவர் கிழக்கு வங்கத்திலிருந்து குடிப்பெயர்ந்தவர். இவர் நாந்திதாஸ் கோஸெய்ன் இந்து மத போதகரால் ஈர்க்கப்பட்டு தானும் அவரது குடும்பம், சுற்றத்தார்களும் மெய்தி மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறுகிறார்கள். மணிப்பூரில் ஒரே மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக மன்னன் மெய்தி மதம் சார்ந்த அத்தனைத் தடயங்களையும் நெருப்பிட்டு அழிக்கிறார். அத்துடன் மெய்தி மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள். மெய்தி மதம் சுவடில்லாமல் அழிக்கப்படுகிறது. மெய்தி மதத்தினர் தப்பித்தோம் பிழைத்தோமென அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்கிறார்கள். மணிப்பூர் ஆங்கிலேயே ஆட்சிக்கு கை மாறியதும் இவர்களின் இடம் பெயர்வு திரும்பவும் மணிப்பூர் நோக்கித் திரும்புகிறது. திரும்பியவர்கள். ஒன்பது பழங்குடி இனத்தவர்களாக ஒவ்வொரு பகுதியில் குடி அமர்கிறார்கள். அவரவர் பகுதிகளை அவரவர்களே ஆட்சிச்செய்துக்கொள்ள போராடுகிறார்கள். போராட்டம் ஆயுதப் போராட்டமாக வெடிக்கிறது. ஒன்பது பழங்குடிகள் போதாதன்று , இந்தியா விரும்பிகள், மியான்மர் விரும்பிகள், சீனா விரும்பிகள்.... வேறு.
       மணிப்பூர் இந்திய ஆட்சிப்பகுதியிடன் இணைந்த வருடம் 1957. சி பிரிவு மாநிலமாக இணைகிறது. மாநிலத்திற்குள் நிகழும் உள்கலவரத்தை தடுக்கும் பொருட்டு மிசோரம், அஸ்ஸாம், நாகாலாந்து பகுதிகளிலிருந்து 1971 ஆண்டு வாக்கில் மணிப்பூர் தனி மாநிலமாக அறிவிக்கப்படுகிறது.அறிவிக்கப்பட்ட மாநிலத்திற்குள் ஒன்பது பழங்குடி மக்களும் தாங்கள்தான் பூர்வீகக்குடிகள் என்றும் தங்களுக்கே இம்மாநிலத்தை ஆளும் முழு அதிகாரமும் இருக்கிறதென்று ஆயுதக்குரல் எழுப்புகிறார்கள். ஆயுதம் ஏந்திப் போராடும் இவர்களை இந்திய அரசு நக்ஸலைடுகள் என்கிறது. நக்ஸலைடுகளுக்கு சீனா , பாகிஸ்தான், மியான்மர் நாட்டிலிருந்து தொடர் ஆயுத உதவிக் கிடைத்து வருவதாக இந்திய அரசு சந்தேகம் கொள்கிறது.
       மணிப்பூரில் சட்டப்பேரவை என்று ஒன்று இருந்தாலும் என்றும் அம்மாநிலத்தை ஆட்சி செய்வது ஜனாதிபதி அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஆயுதப்படை சிறப்புச்சட்டம் - 1957 தான். இந்தியாவில் இருக்கும் சட்டங்களில் மிகவும் பழமையானச் சட்டம் இது. இதுநாள் வரை ஒரு திருத்ததிற்கு கூட இச்சட்டம் உட்படுத்தப்படவில்லை. இச்சட்டத்தை திருத்தம் செய்வதற்காக மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டன. நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி திருத்தம் அவசியம் என்றது. வீரப்ப மொய்லி கமிட்டி கூடுதலாக சில ஷரத்துகளைச் சேர்த்து சில பாதகமான வரம்புகளை தவிர்க்க வேண்டும் என்றது. நீதிபதி வர்மா கமிட்டி பொதுவான சில திருத்தங்களை முன் வைத்தது. ஆனால் ஒரு கமிட்டியின் ஆலோசனைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
        இச்சட்டத்தை விலக்கக்கோரி மணிப்பூரில் இயங்கிய பதினொரு பிரிவினைவாதிகளும் ஒவ்வொரு விதமானப் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். பட்டினிப்போராட்டம், நிர்வாணப்போராட்டம், தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், இந்திய உரிமைகளை துறக்கும் போராட்டம்,... இப்படியாக. பலரும் போராட்டத்திலிருந்து விலகிக்கொண்டு ஆயுதங்களை கையில் எடுக்க இரோம் ஷர்மிளா தொடங்கிய பட்டினிப் போராட்டம் பதினாறு ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருந்தது. அவர் வாய் வழியே எந்தவொரு திட, திரவ உணவையும் எடுத்துக்கொள்ளாமல் அறப்போராட்டத்தில் நீடித்தார். அவர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறைப்பிடிக்கபட்டார். அவருக்கு தேவையான உணவு திரவ உணவாக நாசியின் வழியே வழங்கப்பட்டு வந்தது.
       இரோம் ஷர்மிளா உடன் போராட்டத்தைத் தொடங்கிய பலரும் ஆயுதப்படை சிறப்புச்சட்டத்தின் கீ்ழ் இந்திய இராணுவத்தினரால் தோட்டாக்களுக்கு  பலிக்கடா ஆகிப்போனார்கள். ஆனால் இரோம் ஷர்மிளா மட்டும் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் இருக்கிறது. ஆயுதப்படை சிறப்புச்சட்டத்திற்கு எதிராக போராடியவர்களில் இரோம் ஷர்மிளா மட்டும்தான் மணிப்பூர் இந்தியாவின் ஒருங்கிணைந்தப்பகுதி என வெளிப்படையாக அறிவித்தவர். அதற்காக அவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்கள் மணிப்பூர் சுயாட்சி பகுதி என்றும், அது இந்தியாவிலிருந்து துண்டாடப்பட வேண்டும் என்றும், அது வங்கதேசம், சீனா, மியான்மருடனான ஒருங்கிணைந்தப் பகுதி என்றும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அத்தனைக் குழுக்களும் ஒவ்வொரு கோணத்தில் ஆயுதம் தாங்கிப் போராடிக்கொண்டிருந்தாலும் அனைவரின் போராட்டமும் ஆயுதப்படை சிறப்புச்சட்டத்தை எதிர்க்கொள்வதில் ஒருமித்திருந்தன. இக்கட்டத்தில்தான் இரோம் ஷர்மிளா தன் பட்டினிப் போராட்டத்தை ஆகஸ்ட் 9 - 2016 அன்றுடன் முடித்துக்கொள்கிறேன் என்றும் தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், மணிப்பூர் மாநிலத்தின் முதமைச்சராக விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  
       இரோம் ஷர்மிளா தனிக்கட்சி தொடங்க முன்வரவில்லை. வருகிற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த திடீர் விருப்பத்திற்கு பின் பிஜேபி வகுக்கும் வியூகம் இருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி தான் ஆட்சிக்கு வந்தால் ஆயுதப்படை சிறப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பை நிறைவேற்ற முடியவில்லை என்பதால் அச்சட்டத்திற்கு எதிராக நிற்கும் ஒரே பிம்பம் இரோம் ஷர்மிளாவின் பட்டினப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் அப்படியொரு சட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்பதை நம்ப வைக்கலாம் என்கிற உத்தியை அவர் கையாள்வதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
       இரோம் ஷர்மிளா சுயேட்சையாக போட்டியிட்டு எவ்வாறு முதலமைச்சராக முடியும்...என்கிற கேள்வி இவ்விடத்தில் தவிர்க்க முடியாமல் எழுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் சுயேட்சைகள்தான் அதிகப்படியாக வெற்றிப்பெறுகிறார்கள் என்பதைக் கொண்டு பார்த்தாலும் அத்தனைப்பேரும் இரோம் ஷர்மிளாவை ஏற்றுக்கொள்வார்களா....என்கிற இன்னொரு கேள்வியும் எழுகிறது. மணிப்பூர் சட்டமன்றத்திற்குள் நுழையும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் பிரிவினைவாதிகள். அவர்கள் இந்திய அனுமானியான இரோம் ஷர்மிளாவை எப்படி முதலமைச்சராக ஏற்றுக்கொள்வார்கள்....? அப்படியே அவர்  மணிப்பூரின் முதலமைச்சரானால் பிரிவினைவாதிகளால் அவரின் உயிருக்கு ஆபத்து வரவேச் செய்யும்.
       ஆயுதப்படை சிறப்புச்சட்டத்தை இந்திய அரசு விலக்காத வரைக்கும் நான் என் பட்டினிப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் என் போராட்டம் வெற்றிப்பெற்றதன் பிறகே நான் என் தாயைச் சந்திப்பேன்...என்றும் உறுதிப்பாடுகொண்டிருந்த இரோம் ஷர்மிளா தன் போராட்டத்தை திடீரென கைவிட இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஆங் சான் சூகி.
        ஆங் சான் சூகி , மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி விலக்கிக்கொள்ளவும், ஜனநாயகம் வேண்டியும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அகிம்சை வழியில்  போராடிக்கொண்டிருந்தவர். அதற்காக அவர் வீடடுக்காவலில் வைக்கப்பட்டார். ஆங் சான் சூகி - விற்கு பன்னாட்டு ஆதரவு இருந்தது. அவரது போராட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆங் சான் சூகியின் அரசியல் பிரவேசமும், அதில் அவருக்கு கிடைத்த வெற்றியும் இரோம் ஷர்மிளாவின் முடிவை மாற்றியிருக்கிறது.
       மற்றொரு காரணம் முதற்காரணத்தை விடவும் முக்கியமானது. இரோம் ஷர்மிளாவின் சமீபக்காதல். இவர் கோவா வாழ் பிரிட்டீஸாரான டெஸ்மண்ட் குட்டீனோ என்பரை காதலித்து வந்தார். அதை அவரே வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்திருந்தார். தன் இத்தனை ஆண்டுகால தொடர் போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல சொல்ல தன் நிழலை ஒத்த ஒரு நிஜம் தேவை என அவர் கருதியிருக்கிறார். இந்த தேவையும் அதற்காக அவர் உணர்ந்த அவசியமும் பதினாறு ஆண்டுகால பட்டினிப்போராட்டத்தை கை கழுவ வைத்திருக்கிறது.
       மணிப்பூரி கவிஞர் இபோபிஷக் சிங் எழுதிய ஒரு பிரபலமான கவிதையை சமீப இரோம் ஷர்மிளா முடிவுகளுடன் ஒப்பிட்டு நாம் திருப்தி அடையாளம். முடிந்தால் அவரை வாழ்த்தவும் செய்யலாம்!
       உரக்கப் பேச முடியாது
       வெளிப்படையாக நினைக்க முடியாது
       எனவே கவிதை
       உன்னை நான் ஒரு மலராக எண்ணிப்பாடுகிறேன்.

       இப்போது இவ்விடத்தில்
       நான் மலர்களைப் பற்றி யோசிக்க வேண்டும்
       என் குட்டி மகள் , என் மனைவி
       என் வேலை
       என் சொந்தப் பாதுகாப்பு
       ஆகியவற்றை மனதில் கொண்டு.

1 கருத்து:

  1. ஷர்மிளா பற்றிய கூடுதல் செய்திகளை தங்களது பதிவின் மூலம் அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு