முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதிரத்தாலானக்கோடு

ஜஸ்டிஸ் சிரில் ரெட்க்ளிப், அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தார்.அந்தஅறை நூல்களால் நிரப்பப்பட்டிருந்தது.இந்துஸ்தான், அதன் பரந்து விரிந்த எல்லை, பண்பாடு , கலாச்சாரம் பற்றி முழுமையாக விவரிக்கும் நூல்கள் அதிகமாக இருந்தன.பாபரின் சுயசரிதை பாமர்நாமா, பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹுமாயின் நாமா, அக்பரின் ஆட்சிப்பகுதியை விவரிக்கும் அப்துல் ஃபஸல் எழுதிய அக்பர்நாமா நூல்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் விரித்து மேசையின் மீது கவிழ்க்கப்பட்டிருந்தன.
அறையின் மையத்தில் மற்றொரு மேசை இருந்தது.அதுசதுர வடிவிலானது.அதன் பரப்பைமுழுமையாக அடைத்து இந்துஸ்தானின்  நிலவரைப்படம் விரிக்கப்பட்டிருந்தது.நர்மதை நதி்க்கு வடக்கு நிலப்பகுதிகளே இந்துஸ்தான் .அதற்கான ஆதாரத்தை அவர் பல்வேறு நூல்களில் அடிக்கோடிட்டிருந்தார்.இந்துஸ்தான் என்பதைத்தான் இந்திய தலைவர்கள் வட இந்தியா என உச்சரித்துக்கொண்டிப்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார்.மேசையில் விரிக்கப்பட்டிருந்த நிலவரைப்படம் 1 : 8,300,000 மைல்என்கிற அளவுக்கோளுடன் வரையப்பட்டிருந்தது.பிரிட்டிஸ் அரசாங்கம் இந்தியாவில் கால் வைப்பதற்கு முன்பாக வரையப்பட்ட அக்பர் காலத்து வரைபடம் அது.
வரைபடத்தை குவி லென்ஸ் கொண்டு பார்த்தார் ரெட்க்ளிப்.வட இந்தியா பரந்து விரிந்துவடகிழக்கு எல்லைப்பகுதி கையேந்தி பிச்சை கேட்பதைப்போலவும் ,வடமேற்கு எல்லை அள்ளி முடியாத சிகை காற்றில் பறப்பதைப்போலவும் இருந்தது.
தீபகற்பம், தீவு, வளைகுடா, விரிகுடா, கடல், பெருங்கடல், ஜலசந்தி, குன்றுகள், மலைகள், பூடபூமி, சமவெளி,.....அப்பப்பா! இத்தனையும் ஒருங்கேப்பெற்ற இந்தியாவை நினைத்ததும் அவருடைய இமைகள் ஏறி இறங்கின.பிரிட்டிஸ் சாம்ராஜ்ஜியத்தின் காலனி நாடுகளாக எத்தனையோ நாடுகள் உண்டு.இப்படியொரு நாட்டை அடிமைப்படுத்தியதை பெருமையாக நினைத்தார் ரெட்க்ளிப்.இந்நாடு தன் கையை விட்டு போகப்போவதை நினைக்கையில் ஏமாற்றம் முகத்தில் சப்பென அறைந்தது.
வரைபடத்தில் அவர்ஒவ்வொரு மாகாணமாகப் பார்த்துக்கொண்டு வந்தார் ரெட்க்ளிப்.அவருடைய குறுகுறுப்பார்வை பஞ்சாப் மாகாணத்தின் மீது குவிந்தது.பஞ்சாப் மாகாணம் இந்தியப்பெண்ணின் உயிர்முடிச்சு முகுளம் போலத் தெரிந்தது.அதை அவர் வைத்தக்கண் எடுக்காமல் பார்த்தவண்ணமிருந்தார்.
ரெட்க்ளிப் பிரபலமான வழக்கறிஞர்.பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இயங்கும் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்.அவர் இந்திய நிலவரைப்படத்தை ஒரு தடயத்தைப்பார்ப்பதைப்போலதான் பார்த்தார்.அவருடைய பார்வைபஞ்சாப் மீதும் அதற்குள் ஓடும்  சிந்துவின் கிளை நதியான ரவியாற்றின்மீதும் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கையிலிருந்த ஒரு நீள  குச்சியின் உதவியால் ஆற்றின்தடத்தைக்கடந்தவராக இருந்தார். இந்திய நதிகள் பெண் பெயரில் அழைக்கப்பட ரவி மட்டும் ஏன் ஆண் பெயரில் அழைக்கப்படுகிறது...? என்பதற்கானக் காரணத்தை தேடும் முனைப்பில் இருந்தார் ரெட்க்ளிப். கிழக்கு நோக்கி பாயும் நதிகள் பெண் பெயரிட்டும் ,மேற்கு நோக்கி பாயும் நதிகள்  ஆண் பெயரிட்டும் அழைக்கப்படுவதைத் தெரிந்துக்கொண்டதும் அவர் ஒரு கணம் வியப்பின் ஆழத்திற்குச்சென்றார்.
அவரது பார்வை ரவியாற்றின் வளைவுகளில் நெழிந்து, சுழிந்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தது.ஓரிடத்தில் அவரது மொத்தப்பார்வையும்குவிந்தது.அதுதான் லாகூர்.பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் அது.முகலாயர்களின் நந்தவனம் என அழைக்கபடும் அந்நகரம்அக்பரின் பேரரசு காலத்தில்வாலாகவும், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் போது தலையாகவும் இருந்திருக்கிறது.இந்து , முஸ்லீம், சீக்கிய மதங்களின் சங்கமமாகவும், பிரிட்டிஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு சிம்மச்சொப்பனமாகவும் இருந்த லாகூர் நகரத்தை அவர் வைத்தக்கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
லாகூர் நகரத்திலிருந்து அவருடையப் பார்வை நகரவில்லை.லாகூர் நகரத்தைப் பார்ப்பதன் மூலம்  அவர் பஞ்சாப் வாழ் மக்களையும் உடன்பிறப்புகளாகப் பழகி வரும் இந்து , முஸ்லீம், சீக்கிய மதத்தினரையும் பார்த்தார். அவரது பார்வையில் ஏழு மில்லியன் வாழ்மக்களும் அவர்களின்  கபடமற்ற வாழ்க்கையும், மகிழ்ச்சியும் தெரிந்தது.
மிஸ்டர் ரெட்க்ளிப்வெளியிலிருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
யாரது...?”
உங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது
யாரிடமிருந்து...?”
மவுன்ட் பேட்டன்
வரைபடத்திலிருந்து பார்வை எடுத்த அவர் கதவைத்திறந்துக்கொண்டு அவர் வெளியே வந்தார்.தந்தியை வாங்கிப்பிரித்தார்.படித்தார்.
மிஸ்டர் ரெட்க்ளிப் அவர்களுக்கு.... 1948 ஜுன் 6 ஆம் தேதி நாம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய தேசியக்காங்கிரஸ் நமக்கு காலக்கெடு நிர்ணயித்திருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அந்தக்காலக்கெடு தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது.நாம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நாள் 1947 ஆகஸ்ட் 15.வரலாற்று ஆவணங்களை படித்துக்கொண்டிருக்காமல் உங்கள் மனசாட்சியின்படி இந்தியா பாகிஸ்தான் எல்லையை வகுப்பதில் முழுகவனமும் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.காலஅவகாசம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன.....”
படித்து முடித்ததும் முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட உணர்வில் அவர் திகைத்தார்.அவருக்கு வியர்த்துக்கொட்டியது.அவசரமாக அறைக்குள் நுழைந்தார்.அறையைச்சுற்றிலும் விரைந்துக்கிடந்த நூல்களை எடுத்து ஒரு மூலையில் அடுக்கினார்.
உள்கோட்டும் கழுத்தில் டையும் அணிந்துக்கொண்டு எப்பொழுதும் நீதிபதிக்குரியப் பகட்டுடன் இருக்கும் ரெட்க்ளிப்அதற்குப்பிறகு மழையில் நனைந்தக் கோழியைப்போல குறுகிப்போயிருந்தார். அவர் மனம் கனத்தது.எத்தனையோ வழக்குகளுக்கு மிகச்சரியானத் தீர்ப்புகளை வழங்கி முன்மாதிரியான நீதிபதி எனப் பெயர்ப்பெற்ற ரெட்க்ளிப்இரு நாடுகளுக்கும் எல்லைகளை வகுத்துக்கொடுத்து சரியானத் தீர்ப்பை வழங்க முடியுமா....என்கிற பயம் அவரை குலுக்கி எடுத்தது.அவருடைய மூக்குடன்கண் இமைகள் கூடுவாயில் இரண்டு விரல்களைக்கொடுத்து இரண்டு கட்டை விரல்களால் முகவாயைத் தாங்கியவாறு கண்களை இறுக மூடி அமைதியில் வீற்றிருந்தார்.அவருக்கு பசிதெரியவில்லை.தாகத்தை உணரமுடியவில்லை.குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தாலும் அவருக்கு வியர்க்கவே செய்தது.கைக்குட்டையால் அடிக்கடி முகத்தைத்துடைத்தவண்ணமாக இருந்தார்.அவரையும் அறியாமல் அவருடைய கண்கள் கலங்கின. அவருடைய மனம் இறுக்கமாக இருந்தது.தேன்க்கூட்டை கலைக்கப்போகிறேன் என்கிற குற்றவுணர்வு மனதிற்குள் குறுகுறுத்தது.
தன்மீது திணிக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண பணியிலிந்து விலகி விடலாமா...? என்றுக்கூட நினைத்தார் அவர்.உடல்நிலையும் வயதும் அப்படியொரு முடிவினை எடுக்க அவரை நிர்ப்பந்தித்தது.அப்படியொரு முடிவுக்கு வந்து விட்டால் வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் உடனான சிநேகிதம் அறுந்து விடுமோ...?.பிரிட்டிஷ் அரசாங்கம்தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச்சிதைப்பதைப்போலாகி விடுமோ....?.மனசாட்சி மார்புக்கூட்டைக் குடைந்தது.பஞ்சாப் மாகாணத்தை மட்டும் அவர் பூதக்கண்ணாடி வழியே தனித்துப்பார்க்கத்தொடங்கினார்.பஞ்சாப் இந்திய வரைபடத்தில் ஒரு மலையின் மீது பூனை படுத்துக்கிடப்பதைப்போலிருந்தது.
லாகூர் நகரம் யாருக்கு....? என்கிற  கேள்வி அவரையும் அறியாமல் எழுந்தது.இதய அறுவைச்சிகிச்சை செய்யப்போகிற மருத்துவரின் மனநிலையில் அவர் இருந்தார்.நிமிடத்திற்கொரு முறை கண்களைத்திறந்துஇந்திய வரைபடத்தைப்பார்ப்பதும் பிறகு கண்களை மூடிக்கொள்வதுமாக இருந்தார்.அரைமணிக்கொரு முறை புகைப்பிடித்தார்.அவ்வபோது ஒயின் அருந்தினார்.அவரால் சட்டென எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
கடந்த வாரம் கூட்டிய எல்லை கமிசனை மறுபடியும் கூட்டி இரு நாடுகளுக்கான எல்லையை வரையறை செய்யலாமா...? என்றுக்கூட நினைத்தார்.அந்தக்கூட்டத்தில் நடந்தேறிய போர்க்குரல், கதறல், கெஞ்சல், மிரட்டல்,..அவரைத்திகிலூட்டச் செய்தது.
லாகூர் எங்களுக்கே.லாகூர் இந்தியாவின் சொத்து
பாகிஸ்தானின் இதயம் லாகூர். லாகூர் எங்களுக்கே வேண்டும்
ஒரே வரிசையில் அமர்ந்துக்கொண்டு உனக்கு, எனக்கு என அடித்துக்கொண்டதை அவர் மறுபடியும் எதிர்க்கொள்ள விரும்பவில்லை.நேற்று வரைக்கும் நாடு என்றவர்கள், நாம் என ஒருக்கோட்டில் நின்றவர்கள் நான், நான்... என அடித்துக்கொண்டதை நினைக்கையில்  அவருக்குத் தலைச்சுற்றியது. அவர்களை மறுபடியும் எதிர்க்கொள்ள தன்னால் முடியாமா...? என்கிற கேள்வி அவரிடம் எழுந்தது.பதவியை ராஜினாமா செய்துவிட்டு லண்டன் நகரத்திற்கு ஓடிவிடலாமா....என்றுக்கூட நினைத்தார் ரெட்க்ளிப்.பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது அவர் செய்த சத்யப்பிரமாணம் குறுக்கே வந்து நின்றது.
வங்காளம் பாகிஸ்தானுக்கு!பஞ்சாப் இந்தியாவிற்கு! என உத்தேசக்கணக்கைத் தொடங்கினார் ரெட்க்ளிப்.தொண்ணூறு சதவீதம் செயல்திட்டத்தை முடித்துவிட்டத் திருப்தி மனதை நிறைத்தது.இத்திட்டத்தினை மவுன்ட் பேட்டனிடம் ஆலோசித்து அதை எல்லைக்கமிசன் உறுப்பினர்களிடம்ஒப்புதலைப்பெற வேண்டுமென நினைத்தார்.  அதை நினைக்க அவருக்கு மகிழ்ச்சியாக  இருந்தது.அதைக் கொண்டாடும் விதமாக அவர் இரண்டு மிடறுகள்ஒயின் அருந்தினார்.
அவரை ஆட்கொண்டிருந்த மகிழ்ச்சி விடிந்ததும் நீர்க்குமிழியாகிப்போனது.தினசரிகள் கொண்டு வந்தச்செய்திகள் அவருக்குள் புளியைக்கரைக்கச் செய்தது.வங்காளம் கிழக்கு மேற்கு என தானாகப்பிரிந்துகல்கத்தாவில் இந்துக்களும் டாக்காவில் இஸ்லாமியர்களும் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.......” இச்செய்தியைப்படித்ததும் அவருடைய முகம் கலையிழந்தது.வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது.
கர்சன் பிரபு செய்திருந்த வரலாற்றுப்பிழையால் வங்கம் தன் போக்கில்  சுயசரிதையை எழுதிக்கொண்டிருப்பதாக நினைத்தார் ரெட்க்ளிப்.கர்சன் பிரித்த வங்காளத்தை ஒட்டியே ரெட்க்ளிப் வட கிழக்கு பகுதியைப்பிரிக்கத்தொடங்கினார்.கல்கத்தாஇந்தியாவிற்கு !டாக்கா பாகிஸ்தானிற்கு! இதைப்பிரிக்க அவருக்கு அரை நாள் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.செயல்திட்டத்தின் பாதியை நிறைவேற்றிவிட்ட ஆத்மத்திருப்தி அவரை ஆட்கொண்டது.
வங்காளத்தை இரண்டாகப் பிரித்ததைப்போல அவரால் பஞ்சாப் மாகாணத்தைப் பிரிக்க முடியவில்லை.அதன் அழகு, அமைதி, ஒற்றுமை, வரலாற்றுச் சுவடுகள் அவர் முன் கைக்கட்டி கண்ணீர் சிந்துவதைப்போல இருந்தது.
கிர்ரிங்.... கிர்ரிங்.....
வெளியிலிருந்து அழைப்பு மணி.ரெட்க்ளிப் மெல்ல எழுந்து கதவைத்திறந்தார்.வெளியே இருவர் நின்றுக்கொண்டிருந்தார்கள்.அவர்களின் தலையில் குல்லா இருந்தது.அவர்கள் பாகிஸ்தான் பிரதிநிதிகள் என  சட்டென அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. மார்பில் கையை வைத்து குனிந்து நிமிர்ந்தபடி  வணக்கம் வைத்தார்கள். பதிலுக்கு ரெட்க்ளிப்பிடமிருந்து வணக்கம்.இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.மவுன்ட் பேட்டன் பிரபு நியமித்த எல்லை கமிசன் உறுப்பினர்கள் அவர்கள்.தீன் முகமது, முகமது முனீர்.
       “  உள்ளே வாருங்கள். வந்த விசயம்.....?”
       “ முகமது அலி ஜின்னா உங்களிடம் இந்தக் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு வரச்சொன்னார்என்றவாறு மனுவை ரெட்க்ளிப் முன் நீட்டினார் தீன் முகமது. மனுவைப்பிரித்து வாசித்தார் ரெட்க்ளிப்.அவருடைய நெற்றிச்சுருக்கங்கள் ஏறி இறங்கியது.
       “ கூடவே வாய்மொழியாகவும் கோரிக்கையை வலியுறுத்தச்சொன்னார்
       “ சொல்லுங்கள்
       “ லாகூர்எங்களுக்கே வேணும்
மதத்தினை அடிப்படையாகக்கொண்டு  பிரிவினைக் கோருகிறீர்கள்.லாகூரில் பெரும்பான்மையான மக்கள் சீக்கியர்கள், இந்துக்கள். அப்படி இருக்க நீங்கள் எப்படி லாகூர் நகரத்தின் மீது உரிமைக்கொண்டாட முடியும்...?”
அப்படியானால் கல்கத்தாவை எங்களுக்குக் கொடுங்கள்
இக்கோரிக்கை நியாயமாகப்படுகிறது.கல்கத்தாவை கேட்கும் நீங்கள் மொத்தமாக வங்கம் மாகாணம் வேணும் என்றல்லவா கேட்டிருக்க வேணும். நீங்கள் பெரும்பான்மையாக இஸ்லாம் மக்கள் வாழும் பகுதியை அல்லவா கேட்டுவிட்டீர்கள்
தீன் முகமது சட்டென எழுந்தார்.அவருடைய கண்கள் சிவந்துப்போயிருந்தது.
மிஸ்டர் ரெட்க்ளிப்... நீங்கள் மவுன்ட் பேட்டன் போலவே பேசுகிறீர்கள்
எப்படி....?”
இந்துகளுக்குச் சாதகமாக
ரெட்க்ளிப் தீன் முகமதுவை  ஏற ,இறங்கப்பார்த்தார். மெல்லியதாகச்சிரித்தார்.
       “ இதை மெஹர் சந்த் மஹாஜன், தேஜா சிங்கிடம் சொல்லுங்களேன்என்றார்.
       “ அவர்களிடம் ஏன் இதைச் சொல்ல வேணும்...?”
       “ அவர்கள் உங்களைப்போல இந்திய தேசத்திற்கான எல்லைக்கமிசன் உறுப்பினர்கள். அவர்கள் சற்று முன் வந்தார்கள்.ஒரு கோரிக்கை மனுவை நீட்டினார்கள். நீங்கள் சொன்ன அதே புளித்துப்போன வாசகத்தைத்தான்  அவர்களும் சொன்னார்கள்
என்னச் சொன்னார்கள்....?”
நான் பாகிஸ்தானியர்களுக்கு சாதகமாகச் செயல்படுகிறேனாம்....”
இல்லையில்லை . நீங்கள் இந்தியர்களுக்குத்தான் சாதகமாகச்செயல்படுகிறீர்கள்
       “ இதைதான் அவர்களிடம் சொல்லுங்கள் என்கிறேன்
       “ ரெட்க்ளிப்....நீ்ங்கள்சமயோசிதமாகபேசுகிறீர்கள்.உங்களின் முடிவுகள்எங்களுக்குப் பாதகமாக இருக்குமானால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றவாறு தீன் முகமது, முகமது முனீர் இருவரும் எழுந்து அறையை விட்டு வெளியேறினார்கள்.
நடந்து முடிந்த சம்பவங்களை நினைக்க நினைக்க ரெட்க்ளிப்பிற்கு இரத்த அழுத்தம் ஏறி இறங்கியது.உதடுகளைப் பற்களால் வருடிக்கொண்டார்.கண்களை மூடி கால்களை ஆட்டியபடி ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்திருந்தவர் மறுபடியும் வடமேற்கு எல்லையைப் பார்க்கத்தொடங்கினார்.
      லாகூர் நகரம்  கண் முன்னே நிழலாடிக்கொண்டிருந்தது.அவரால் சட்டென முடிவெடுக்க முடியவில்லை.மனதிற்குள் திக், திக் .....எல்லைப்பதற்றத்தைப்போல.இதயம் திடும், திடும்...மென துடித்துக்கொண்டிருந்தது.கொஞ்ச நேரம் தலைச்சாய்க்க வேண்டும் போலத்தோன்றியது.நாற்காலியில் உட்கார்ந்தவாறு தலைச்சாய்த்து கால்களை நீட்டி மெல்லக் கண்களை மூடினார்.
      எங்கும் போர்க்குரல்.அப்பாவி மக்களின் கதறல்.துகில் உரிப்பு.இரத்தம் சிந்துதல்.கற்பழிப்பு, குடிசைகளுக்கு தீ வைப்பு. எங்கும்மரண ஓலம்......
       திடு்க்கென விழித்தார் ரெட்க்ளிப்.அவருடைய ஆடை வியர்வையில் நனைந்துப்போயிருந்தது.மனதிற்குள் சடசடப்பு.எத்தகையச் சம்பவம் நிகழக்கூடாது என நினைத்தாரோ அது கனவாக வந்துப்போனதை நினைக்கையில் மனதிற்கு அசூசையாக இருந்தது.அதற்குப்பிறகு அவருக்குத் தூக்கம் வரவில்லை.
க்ரிங்க்...... க்ரிங்க்.....” தொலைப்பேசியின் ரீங்காரம்.எடுத்து காதில் வைத்தார் ரெட்க்ளிப்.
       “ நான் மவுன்ட் பேட்டன் பேசுறேன். லாகூர் நிலைமை பரிதாபத்திற்குரியதாகிவிட்டது
       “ அங்கே என்ன நடக்கிறது வைஸ்ராய்..? ”
       “ இரண்டு தரப்பினரும் லாகூரை ஆக்கிரமிக்கிறார்கள். ஒரே கலவரம்
       “ நான் என்ன செய்ய வேணும்...?”
       “ லாகூரை யாரோ ஒரு தரப்புக்கு கொடுத்து விடுங்கள்
       “ யாருக்கு....?”
       “ உங்களின் மனசாட்சிக்கு அதை விட்டு விடுகிறேன்
       தொடர்பு சட்டென துண்டித்துக்கொண்டது.
பஞ்சாப் மாகாணமும் அதற்குட்பட்டலாகூர் நகரமும் அவர் முன் பூதகரமாக எழுந்து நின்றது.லாகூர் இந்தியாவிற்கே.... லாகூர் இந்தியாவிற்கே..... என்றவாறு அவரது உதடுகள் கூக்குரலிட்டது.அவரது சட்டைப்பையில் கோர்த்திருந்த சிவப்பு மை பேனாவை எடுத்தார் ரெட்க்ளிப்.பஞ்சாப் மாகாணத்தின் மீது மெல்லியக்கோடு வரைந்தார்.லாகூரை நெருங்க நெருங்க அவரது கை நடுங்கத்தொடங்கியது.மனதிற்குள் குறுகுறுப்பு .அவருக்குள் யாரோ பேசுவதைப்போலிருந்தது.
ஒரு கூட்டை சிதைக்கும் பாவத்தைச்செய்திருக்கிறது பாகிஸ்தான்.அதனால் அதன் கூடும் சிதையவே  செய்யும்.அதற்கு ஒதுக்கப்படும் நகரத்தின்  எண்ணிக்கையைக் குறைக்க வேணாம்.லாகூர் அவர்களிடமேஇருந்திட்டுப்போகட்டும்.......”

ரெட்க்ளிப் கையிலிருந்த பேனா வரைபடத்தில் பஞ்சாப்பிற்கு குறுக்கே வேகமாக முன்னேறியது. அவர் வரைந்தக்கோடுலாகூர் அமிர்தசரஸ் சாலையைத்தாண்டி வாகாவைக்கடந்து  வளைந்து நெழிந்துச்சென்றது.லாகூர் கொஞ்சம் கொஞ்சமாக  பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையத்தொடங்கியது ; பஞ்சாபிகள் சொந்தம், பந்தம், உடைமை, கற்புகளை இழந்து அகதிகளாகஎதிரெதிர் எல்லைக்குள் நுழைந்ததைப்போல.......                                        

கருத்துகள்

  1. கர்சன் பிரபு செய்த வங்கப் பிரிவினையின் விளைவாக லாகூர் பாகிசுதானுக்கு உரிமையான ஒரு வரலாற்றுப் புள்ளியினை மையக் கருவாக்கி இந்திய-பாகிசுதான் எல்லைக் கோடு உருவானதை கற்பனை கலந்த ஒரு வரலாறு தழுவிய சிறுகதையாக ஆக்கியுள்ள தங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு கோடு எத்துனை இலட்சம் பேர்களை அகதிகளாக்கி விட்டது

    பதிலளிநீக்கு
  3. வரலாற்றில் இவ்வாறான வேதனையைத் தருகின்றன பக்கங்கள் அதிகமாகவே உள்ளன.

    பதிலளிநீக்கு
  4. வரலாற்றில் இவ்வாறான வேதனையைத் தருகின்றன பக்கங்கள் அதிகமாகவே உள்ளன.

    பதிலளிநீக்கு
  5. செய்கிற செயலை திருந்த செய்ய வேண்டும் .. திரும்ப செய்யக்கூடாது என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு..

    பதிலளிநீக்கு
  6. நாட்டுப் பிரிவினையின் ஒரு சிறிய பகுதியை உணர்ச்சிபொங்க வருணித்திருக்கிறீர்கள். இன்னும் இதேபோல் பிற வரலாற்றுக் காட்சிகளையும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  7. இன்னும் தமிழ்மணத்தில் இணையவில்லையா நீங்கள்? உடனே செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...