ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கட்டுரை அவரவர் வானம்

தமிழ்நாடு எங்கே இருக்கிறது ?” “ இங்கிலாந்தில் இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி விமானத்தில் நாடு திரும்பியவரிடம் சக பயணி ஒருவர் கேட்டக்கேள்விக்கு நம்மூர்க்காரர் சொன்ன பதில்தான் இது.மயங்கொலிப்பிழையைப்போல இது ஒருவகையான பிழை.பள்ளியில் படிக்கையில் , உலக வரைபடத்தில் இந்தியாவை கொண்டுப்போய்  நன்னம்பிக்கை முனையில் குறிப்பதைப்போலஇந்தியா என சொல்லவேண்டிய இடத்தில்  இங்கிலாந்து என சொல்லி விட்டார். நம்மையும் அறியாமல் நடந்தேறும் எத்தனையோ பிழைகளில் இதுவொரு பிழை.
விமான பயணத்தில் அரைத்தூக்கத்தில் இருந்தபொழுது இப்படியொரு பதிலை சொல்லிவிட்டேன் என அவர் என்னிடம்  பலதடவை சொல்லி கவலைப்பட்டார். அவரிடம் ஒருநாள் சொன்னேன்சரியாகத்தானே சொல்லிருக்கிறீர்கள்என்று.அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
ரசிகமணி டி.கே.சி - யிடம் ஒரு மாணவன் கேட்டிருக்கிறான்மதுரை எங்கே இருக்கிறது ?. அதற்கு அவர் சொன்னாராம்லண்டனில் இருக்கிறதுஎன்று. அவருக்கு அருகில் இருந்த நண்பர்களுக்கு ஒரே வியப்பு. டி.கே.சி சொன்னார்கடந்த வாரம் கம்பர்  மற்றும் கம்பராமாயணம் பற்றிய திறனாய்வுக்கூட்டம் மதுரையில் நடைப்பெற்றது. என்னையும் அழைத்திருந்தார்கள்.பேசியவர்களில் அத்தனைப்பேரும் இங்கிலீஸ்லதான் பேசினார்கள்.அவர்கள் பேசியதை வைத்துப்பார்க்கையில் மதுரை லண்டனில்தானே இருக்கிறதுஎன்றாராம்.டி.கே.சி பார்வையில் மதுரை லண்டனில் இருக்கிறது என்றால் நம் பார்வையில் தமிழ்நாடு இங்கிலாந்தில்தான் இருக்கிறது.நம்மூர்க்காரர் சொல்லியது சரிதான்!
                தமிழ்நாட்டிற்குள் இங்கிலாந்து மட்டுமா இருக்கிறது..?. வட கிழக்கு சென்னைக்குள் நுழைந்தால்  ஹைதரபாத் நகரத்தை காண முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு குடியிருப்புகளில் திருவனந்தப்புரத்தை காண முடியும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின்சரிபாதிபெருங்களுரால் ஆனது.செம்புலப் பெயல் நீர் போல அண்டை மாநில மொழிகள் தமிழகத்தில் இரண்டற கலந்து விட்டன.இப்படியிருக்க தமிழ்நாட்டில் டில்லி, லக்னோ, போபால் போன்ற நகரங்கள் (அதாவது இந்தி மொழி ) கால்பதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..?என இந்தி தமிழ்நாட்டிற்கு தேவை என்கிறகுரல் அவ்வபோது எழுந்தவண்ணமாக இருக்கிறது.இந்தி மொழியா....? வேண்டவே வேண்டாம் என்கிறஎதிர்ப்பும் இருக்கிறது.இதற்கிடையில் தமிழ்நாட்டிற்கு இந்தி வேணுமா?வேண்டாமா?என ஆராய வேண்டிய மனநிலையில் நாமிருக்கிறோம்.
       ‘அவரவர் தாய்மொழி அவரவருக்குஎன  ஒரு மொழியுடன் திருப்தியடைபவர்கள் யாரும் இன்று இல்லை.‘போதும் என்கிற மனமே பொன்செய் மருந்துஎன்கிற தத்துவம் மொழியைப்பொறுத்தவரைக்கும் போதுமானதாக இருக்காது.சமீபகாலமாக அவரவர் தாய்மொழியுடன் பிறதொரு மொழியை கற்றுக்கொள்ள அவரவர் துறையைச்சார்ந்து ஆர்வம் எழுந்து வருவதை கண்கூடாக காணமுடிகிறது. இனி தமிழ்நாட்டில் தமிழை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழகத்தில் காலம்தள்ள முடியாது. ஏனெனில் தமிழ் மொழி மட்டுமே பிரதானம் என உரிமைக்குரல் எழுப்பியவர்களின் வாரிசுகள் தமிழை விடவும் இந்தியைப் பிரமாதமாகப்பேசுகையில் அவர்களை முன்மாதிரியாகக்கொண்ட பாமர மக்களின் மனநிலை பிறமொழிகளின் தேவையைப்பற்றி யோசிக்க வைத்திருக்கிறது.சரி! அதற்காக  இந்தி மொழிக்கு சிவப்புக்கம்பளம் வரவேற்பு கொடுத்துவிட முடியுமா...?
       சமீபகாலமாக  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழியின் மீது கவனமும் அதைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் எழுந்துவருகிறது.இந்திய திரைப்படத்துறையினர் ஈரான் நாட்டு மொழியை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.காரணம் உலக திரைப்படங்களில் ஈரான் நாட்டு திரைப்படங்கள் முதன்மையானவை.அதைப்போன்று இந்தியாவில் இந்தி மொழித்திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்தாலும் இசையில் ஆதிக்கம் செலுத்துவது கன்னட மொழியே.இசையின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு கன்னடம் தேவையானதாக இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள் இந்திய மொழிகளில் வெளிவந்தாலும் உன்னதமான வரிகளைக்கொண்ட பாடல்கள் என்றால் முதலிடம் பெங்காளி( வங்காளி) மொழிக்குத்தான்.காரணம் பெங்காளி மொழியில் கொச்சையான சொற்கள் பாடல்களில் புகுத்தப்படுவதில்லை.இந்திய எழுத்தாளர்களுக்கு மலையாள மொழியின் மீது அதீத ஈர்ப்பு இருக்கிறது.சுதந்திரத்திற்கு பிறகான இலக்கிய படைப்புகளில் மலையாளத்தின் பங்களிப்பு அளப்பரியது.அடுத்து வடகிழக்கு மாநில இலக்கியங்களும், தொடர்ந்து கன்னடமும், தமிழும் இடம்பெறுகிறது.
இந்தியாவில் வணிகம் மற்றும் மருத்துவத்திற்கு ஏற்ற மொழி ஆங்கிலம்.சமயம், சித்த மருத்துவம் , உலக மொழிகளுடனான பாரம்பரிய தொடர்பு,... பற்றி அறிந்துக்கொள்ள ஏற்றமொழி தமிழ். வாஸ்து, மந்திரம், போதனை,பஜனை இந்திய மருத்துவம் சார்ந்த துறைகளுக்கு சமஸ்கிருதம். பேசுவதற்கு எளிமையும், எழுதுவதற்கு கடினமான மொழி தெலுங்கு.அதிகமான பிறமொழிச்சொற்கள் கலக்காமல் தன் தனித்துவத்தை இழக்காமலிருக்கும் மொழிபெங்காளி.... எனஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு மொழி அடையாளம் கொண்டிருக்கையில் இந்தி ஏன் இப்படி இந்திய மாநிலங்கள் முழுமைக்கும் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. காரணம் இருக்கிறது.ஆம், இந்தி இந்தியாவின் அரசியல் மொழி.தேசிய அரசியலுக்குள் நுழைபவர்கள் இந்தி தெரியாமல் சோபிக்கமுடியாது.
        இந்தியா  36முதலமைச்சர்களும், 4120 சட்ட மன்ற உறுப்பினர்களும், 534 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , 250 ராஜ்யசபா உறுப்பினர்களும், 72 அரசியல் கட்சிகளையும் கொண்டிருக்கிறது. இவர்களில் சரிபாதி பங்கினர் இந்தி மொழி பேசுபவர்கள்.இந்திபேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்திய அரசியலையும்.நாடாளுமன்ற செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறார்கள்.இந்தி மொழி தெரிந்த ஒருவரால்தான் ஒரு மாநிலத்தின் தேவையை ,அம்மக்களின் தேவையை  நாடாளுமன்றத்தில் வாதாடி பெற்றுவர முடியும்.
அவருக்குத் தெரிகிற இந்தி  மக்கள் அனைவரும்  தெரிகின்ற மொழியாக இருந்துவிட்டால் மாநில கட்சிகளின் வளர்ச்சி குன்றி தேசிய கட்சிகளின்  பங்களிப்புதலைத்தூக்கும் . மக்கள் நானொரு தமிழன், கன்னடன்,மலையாளன்,.... என்கிற பிரிவினை மறைந்து நானொரு இந்தியன் என்கிற அடையாளம் மேலோங்கும் என்கிற எண்ணோட்டம் தேசியப்பார்வை கொண்டவர்களிடம் எழுந்துள்ளது. சரிதான்!அதற்காக ஒரு மொழியை திணிக்க முடியுமா...?
பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.கிழக்கு வங்கம் ஏன் பிரிவினைக்கோரியது...? மேற்கு பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி உருது.கிழக்கு பாகிஸ்தானின் ( வங்கதேசம்) மொழி பெங்காளி. உருது மொழியை தேசிய மொழியாக்க பாகிஸ்தான் அரசு முயற்சித்தது.கிழக்கு வங்கம்  வங்கதேசமாக உதயமானது.
        இந்தி திணிப்பை பாகிஸ்தானின் உருது திணிப்புடன் ஒப்பிடவேண்டியதில்லை.காரணம் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்களும் அவருக்கு பிறகான பிரதமர்களும்இந்தி மொழியை மனமுகந்து ஏற்றுக்கொள்ளும் வரை இந்தி ஒருபோதும் கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாதுஎன உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தி தென்இந்தியாவில் வேர்விட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
       இந்தி,தேவநாகரி ( தேவ - கடவுள் , நாகரி - நகரம் ) அதாவது கடவுளின் நகரத்து மொழி என சுட்டப்படுகிறது. இந்திமட்டுமல்ல சமஸ்கிருதம், மராட்டி, குஜராத்தி, காஷ்மீரி,சாந்தாலி, சிந்தி மொழிகள் யாவும் அவ்வகையைச் சார்ந்த மொழிகளாக பாகுபடுத்தப்பட்டிருகிறது. சிலர்இம்மொழிகள் கிமு 500 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பிராமி எழுத்தின் நீட்சி என்கின்றார்கள்.பலர் அதை மறுக்கின்றனர்.மேலும் இது அபுகிடா  என அழைக்கப்படும் எழுத்து முறை வகையைச் சார்ந்தது. ஒரு எழுத்தை வைத்துக்கொண்டு அதன் வடிவத்தை நீட்டுவதன் மூலம் புதிய புதிய எழுத்துகளை உருவாக்கும் வகையைச் சார்ந்தது.
தற்போது பேச்சு, எழுத்து வழக்கத்தில் இருக்கும் இந்தி தேவநாகரி வடிவம் அல்ல. கடிபோலி வடிவம்.அதாவது முகலாயர்களின் வருகைக்குப்பிறகு உருவான கலப்பின மொழிதான் கடிபோலி.இது உருது மொழியின் கிளை மொழியாகும்.1867ஆம் ஆண்டிற்கு முன்பு  இந்தியின் பேச்சு மற்றும் எழுத்து வடிவம் தேவநாகரி அதன்பிறகு கடிபோலி. கடிபோலி எழுத்து வடிவம் வளர்ந்தக்காலம் துவிவேதி யுகம்என வரையறுக்கப்பட்டுள்ளது.
கடிபோலி இந்தியை வளர்த்தெடுத்தவர் மகாவீரர் பிரசாத்து துவிவேதி ( 1868 - 1938 )  அவர்கள். அவர் உருது வடிவத்துடன் கூடிய இந்தி மொழியை வளர்த்தெடுத்தார்.உருது மொழியுடன் இந்தி கலைச்சொற்களை இணைத்து நவீன இந்தியை உருவாக்கினார்.அவ்வடிவின் வாயிலாக  கவிதை நூல்களை இயற்றினார். விதி விடம்பனா’,‘ குமார சம்பவ சாரம் முதலிய உயர்ந்த கவிதை நூல்கள் கடிபோலி வடிவ இந்தி நூல்களாகும்.
        இந்தியின் தேசிய கவிஞரான  ‘மைதிலி  சரண் குப்தாஅவர்களின்  ‘சாகேத்து’, ‘யசோதராபோன்ற காப்பியங்களும் இன்றைய நவீன இந்தி இலக்கியங்களும் கடிபோலி இந்தி வடிவத்தால் ஆனவை. ஆனால் இந்தியின் வேதம் என அழைக்கப்படக்கூடிய ரிக், யஜுர் வேதங்கள் தேவநாகரி வடிவத்தலானவை.
மத்திய இந்தியாவில் அதாவது டெல்லி, லக்கோ ,... பகுதிகளில் கடிபோலி இந்தியும் மற்ற பகுதிகளில் தேவநாகரி இந்தியும் பேசப்பட்டு வருகின்றன. டெல்லி வாழ் மக்கள் பேசுகின்ற இந்தி காஷ்மீர் வாழ் இந்து பண்டிட்களுக்கு புரியாது.மக்கட்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்திய சுதந்திரத்தின் போது கடிபோலி இந்தி பேசுபவர்கள் அதிகமாக இருந்தார்கள்.என்வே சுதந்திரத்திற்கு பிறகு கடிபோலி வடிவ இந்தி நிர்வாக மொழியாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது ( தேசிய மொழி அல்ல).  ஆனால் தேவநாகரி இந்தி பேசுபவர்கள் அன்று முதல் இன்று வரை கடிபோலி இந்தியை எதிர்த்து வருகிறார்கள்..இதற்கிடையில்  கடிபோலி இந்தி உருது மொழியின் கிளை மொழி என்பதால் அம்மொழியை புறக்கணித்து தேவநாகரி வடிவம் கொண்ட இந்தியை பரவலாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. சமீபத்தி்ல் மத்திய அரசு நிறுவிய அரசிற்கான இணையதளம் தேவநாகரி வடிவிலானது.அதாவது உருது மொழி கலப்பற்ற இந்தி அது.
       உண்மையில் இந்தியும் உருதும் இரட்டை மொழிகள்.இந்தி வளர்வதற்கு உருதுவும், உருது வளர்வதற்கு இந்தியும் ஒன்றுக்கொன்று துணையாக இருந்துள்ளன.பாரசீகம், துருக்கி நாட்டினரின் மொழி வளம் உருது மொழிக்கு உண்டு .உருது உச்சரிப்பையும் , அதன் எழுத்து வடிவத்தையும் இந்தியிலிருந்து பிரித்ததன் பிறகு வலுவான கலைக்களஞ்சியம் இந்தி மொழியில் கிடையாது. உலகின் அரசியல் மொழி என அழைக்கப்படும் லத்தீன் மொழிக்கு நிகரான சொற்களஞ்சியமும் ,அலோபதி மருத்துவ சொற்களும் இந்தி மொழியில் போதுமான அளவிற்கு இல்லை. எனவேசமீபகாலமாக இந்தியை செம்மொழியான சமஸ்கிருதத்துடன் இணைந்து இந்தியை சமஸ்கிருதவயமாக்கம் வேலை நடந்தேறி வருகிறது.அதன் பொருட்டே ஆண்டுதோறும் சமஸ்கிருதம் மொழிக்கு மற்ற மொழிகளைக்காட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து வார விழா எடுத்து வருகிறது.
மத்திய அரசு இந்தியை  தேசிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏன்....?மத்திய அரசு 22 மொழிகளை வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்வதை பெரிய சுமையாக கருதுகிறது.அன்றைய  மதறாஸ் பிரசிடென்ஸி( சென்னை மாகாணம்) தமிழ்,தெலுங்கு, மலையாளம் பேசுகிற மக்கட்பிரதிநிதிகளைக்கொண்டு நிர்வாகம் செய்தது. மதறாஸ் தமிழ்மொழி அதிகம் பேசுபவர்களின் நிலப்பரப்பிற்குள் இருந்தது.அன்றைய சட்டமன்றத்தில் தமிழ்மொழியை மதறாஸ் பிரசிடைன்ஸின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்கிற போர்க்குரல் ஒரு போதும் தமிழர்களிடம் எழுந்ததில்லை.மூன்று மொழி பேசுபவர்களையும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்கள்நிர்வாகத்தை திறம்படத்தான் நடத்தி முடித்தார்கள். அவரவர் பேசுகிற மொழியை மொழிப்பெயர்பாளர்களைக்கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக்கொண்டார்கள்.
இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு 1.10.1953 அன்று ஆந்திரா, சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமாக அமைக்கப்பட்டதன் பி்றகு அன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் டாக்டர் பி.சி.ராய் ஒரு யோசனையை மத்திய அரசுக்கு தெரிவித்தார். மொழி அடிப்படையில் சிறிய மாநிலங்கள் அமைப்பதற்குப்பதிலாக இந்திய முழுவதையும் ஐந்து அல்லது ஆறு பெரிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இதனால் மாநில அரசுகள் பலம் உள்ளவையாக இருக்கும்என்றார். அதன்படி பீகார், மேற்கு வங்கம் மாநிலங்களை இணைத்து ஒரே மாநிலமாகவும், தென் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்கள் உள்ளடக்கி தட்சிணப்பிரதேசம் அமைக்கலாம் எனவும் யோசிக்கப்பட்டது. அப்படியொரு யோசனையின் போதுதட்சிணப்பிரதேசத்தின் ஆட்சி மொழி எது?’ என்கிற கேள்வி அன்றையதினம் எழுந்திருக்கவில்லை.
சமீபகாலமாக இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் சிவில் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் இன்றி இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் இந்தியை தாய்மொழியாக்கொண்ட மாணவர்கள் குரல் எழுப்புவதற்கு தமிழகத்திலிருந்து வலுவான எதிர்ப்பு எழவில்லை.  தமிழகத்திற்கு இந்தி வேண்டும் என கருத்து தெரிவித்தவர்கள் கூட சிவில் தேர்வு அவரவர் தாய்மொழியில் நடத்தப்பட வேண்டும் என கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
சரி, தமிழக பள்ளிக்கூடங்களில் இந்தி மொழியை அனுமதிப்போம்!.உத்திர பிரதேசத்தில் ஏதேனும் ஒரு பள்ளியில்  தமிழ் மொழியை ஒரு பாடமாக வைப்பார்களா? தமிழகத்தில் பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில்  கன்னட மொழிப்பாடம் ஒரு பாடமாக இருக்கிறது. ஆனால் இரண்டு வருடங்களாக  கர்நாடகத்தில் ஒரு பள்ளியில் கூட தமிழ் மொழிப்பாடம் இல்லையே!
இந்தி மொழியினர் செழிக்கிறார்கள்.பிறமொழிபேசும் மக்கள் தவிக்கிறார்கள்என ஒருவிதமான பொய் பிரச்சாரம் எழுந்துக்கொண்டிருக்கிறது. ஆனால்இன்று அதன் நிலை வேறு.கல்வியறிவு பெற்ற மாநிலப்பட்டியலில் தென்இந்திய கேரளாதான் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.கணினி துறை வல்லுநர்களில் தெலுங்கு மொழி ஆந்திரர்களே சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.சிவில் தேர்வுகளில் பீகாரிகளே முதல் பத்து இடத்திற்குள் வருகிறார்கள்.அதிவேக அரசு நிர்வாகத்தில் பஞ்சாபி மொழியினரே சிறந்தோங்குகிறார்கள் என ஒரு தகவல் அறிக்கையின் வாயிலாக புரிந்துக்கொள்ள முடிகிறது.
இன்று எல்லா மொழிகளும் கணினி வடிவத்தை பெற்று வருகின்றன.இந்திய மொழிகளில் கணினி பயன்பாட்டிற்கு இலகுவான மொழி தமிழ்தான்.கணினித்துறையில் ஒவ்வொரு மென்பொருளும் கண்டுப்பிடிக்கப்படுகையில் தமிழ்மொழிக்கென்று தனியாக மென்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகிறது. கணினி பயன்பாட்டில் ஆங்கிலம், மான்டெரின் மொழியைத்தொடர்ந்து தமிழ் மூன்றாமிடத்தில் இருக்கிறது.இப்படி ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருந்து வருகிறது.
       “தமிழ்மொழியை தவிர்த்து பிறமொழிகளை யாரும் கற்றுக்கொள்ளக்கூடாதுஎன்கிற கருத்தில்  யாருக்கும் உடன்பாடு இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும்  தேவையைச் சார்ந்து  மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காளி, இந்தி, சமஸ்கிருதம்.... என பிறதொரு மொழி தேவையானதாக இருக்கிறது.ஆனால் சிலர் இந்தி மொழி வேண்டும்என மட்டும்  குரல் எழுப்புவது ஏன்....?
              

1 கருத்து: