வெள்ளி, 17 மார்ச், 2017

அகநி வெளியீட்டில் மிகச்சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது மு.ஆனந்தன் அவர்களின் ' யுகங்களின் புளிப்பு நாவுகள்' என்கிற கவிதைத் தொகுப்பு. உதயசங்கர் மற்றும் அமிர்தம் சூர்யா  இருவரும் கவிதைகளுக்கு நெற்றிப்பொட்டு வைத்திருக்கிறார்கள். கவிதை என்பதற்கு அமிர்தம் சூர்யா கொடுத்திருக்கும் முன்னுரை அலாதியானது.
  அத்தனையும் நவீனக் கவிதைகள்.தேர்ந்த நடை. துள்ளல் எழுத்து. நளினத்தில் தொட்டு எடுத்த  நவயுகக்கவிதைகள்.

அரிதாரங்கள் பூசி
வெள்ளையும் சொள்ளையுமாய்த் திரிகிறது பகல்
அரணாக்கொடியையும் உதிர்த்து
அம்மணக்கட்டையாய் கிடக்கிறது இரவு
என்னதான் வெளிச்சத்தைப் பீய்ச்சியடித்தாலும்
நிழலாய் பின் தொடர்கிறது இருள்

என்கிற கவிதை இருளும் இருண்மையும் மடமையும் தொய்த்த வாழ்வின் அவயங்களைப் பேசுகிறது.
இக்கவிதையில் பகல் பகல்ல. இரவு இரவும் அல்ல. பகல் பிச்சைக்காசாக நீட்டும் ஓட்டுக்குப் பணம் என்றால் இரவு பிச்சைக்காரர்களாகிப்போகும் தடித்த வறுமை.
பகல் நிவாரணம் என்றால் இரவு தொடரும் பலாத்காரம்.


இப்படியாக பல பத்து கவிதைகள்.
யுகங்களின் புளிப்பு நாவுகள் என்கிற கவிதை புளித்த வாழ்வின் சுவடு.
பகலை மொண்டுக் குடித்த குடும்பம்
இருளைச் சொரண்டித் திங்கும்

இரு வரிகள் ஏக்கம் சூழ்ந்த வாழ்வின் இரு வேறு மேடு பள்ளங்களை அடையாளப்படுத்துகிறது.

உறிகளில் தொங்கும் உறக்கம்
உறை மோகித்தூடுருவும் பால்

என்கிற வரிகள் புளிப்பையும் இனிக்க வைக்கிறது.

தசாப்தப் பாலின் சூலகத்தில்
சதாப்த மோர் கருத்தரித்துள்ளது

என்கிற வரிகள் பால் , தயிர் ,  மோர்களின் மொட்டு அவிழ்ப்புகளை நினைவூட்டி மணத்தை நுகர வைக்கிறது. 

உறை மோரின் நீர்மையில்
ஊடுபாவிக் கிடக்கும்
யுகங்களின் புளிப்பு நாவுகள்  போல

வாசகனின் மன ஆழத்திற்குள் மோர்த்துளி சந்ததிகளின் விந்தணுக்களாக மொட்டு அவிழ்க்கிறார் மு. ஆனந்தன்.

அகநியின் நூல் கட்டமைப்பு ஆரணி பட்டு உடுத்திய தோற்றப்பொலிவைக்  கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
இவ்வாழ்த்துகள் மு. ஆனந்திற்கு மட்டுமானதில்ல.



3 கருத்துகள்:

  1. எனது நூல் குறித்து மிகச்சிறந்த விமர்சனம் . பகல் இரவு குறித்து சரியான அவதானிப்பை அளித்துள்ளீர்கள். தயிர், மோர் இடையே ஊடாடும் அழகியலை, கவித்துத்தை, அரசியலை அற்புதமாக அலசியுள்ளீர்கள். உங்களின் கருத்துப் பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றியும் ப்ரியங்களும் நண்பரே.

    பதிலளிநீக்கு