ஞாயிறு, 12 மார்ச், 2017

பெஅ வாசகர் வட்டம்

அந்த இருட்டறையில் அவன் அம்மணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். இடுப்பு வரைக்குமான உடம்பு நேர்க்கோட்டிலும் மேலுடம்பு முன்பக்கமாக வளைந்து , முதுகு மேலும் கூன் விழுந்து போயிருந்தது. அவனுடைய தலை  விளைந்த நெற்கதிரின் குனிவைப்போலிருந்தது.
கால்களை அவன் அப்படியும் இப்படியுமாக எடுத்து வைத்தான். தொடைகளை முன்பக்கமாக வளைத்து அந்தரங்க உறுப்பை மறைக்க முயற்சித்தான். அவனுடைய இரு பக்கத் தொடை சப்பைகளும் உள்ளூரக் குழி விழுந்துபோயிருந்தன. வயிறு சுருக்கம் விழுந்துபோய் விலா எலும்புகள் அகடு, முகடுகளாக இருந்தன.  
அந்தரங்க உறுப்பை மறைத்தாக வேண்டிய இரண்டு கைகளும் பின்பக்கம் ஒரு நீளக் கத்தல் துணியைக்கொண்டு இறுகக்கட்டப்பட்டிருந்தன. மொத்தத் துணியும் கைகளில் இறுக சுற்றப்பட்டிருந்ததால் அது பார்க்க பிரிமணைப் போலத் தெரிந்தன. அவனுடையக் கண்கள் ஒரு காவித்துண்டால் இறுகக்கட்டப்பட்டு பிடறிப்பக்கம் ஆட்டுக்கால் முடிச்சிட்டிருந்தார்கள். இரண்டு முடிச்சுகள் போக மீதத்துணி பூனை வாலினைப்போன்று தொங்கிக்கொண்டிருந்தது.
ஒரு கல்லூரி மாணவனுக்குரிய மிடுக்கும், துடிப்பும் அவனிடமிருந்தது. நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஒரு படிக் கீழான குடும்பத்தைச் சார்ந்தவனாகத் தெரிந்தான். தினக்கூலி அல்லது வார சம்பளங்களில் வயிற்றைக் கழுவி ஊற்றும் வறுமை அவனது முகத்தில் தெரிந்தது.
அவன் பார்க்க அப்பாவியாக இருந்தான். வரும் வழியிலோ அல்லது ஒரு கூட்டத்திலிருந்தோ அவனை மட்டும் தனியாகக் கடத்தி வாய்ப்பொத்தி, கண்களைக்கட்டி தூக்கி வரப்பட்டவனைப்போலத் தெரிந்தான். அவன் உடுத்தியிருந்த ஆடை அவசரக்கதியில் கழட்டி உருவப்பட்டு தூரத்தில் தூக்கி எறியப்பட்டிருந்தது. கீழாடை கறுப்பும் சாம்பலும் இரண்டறக் கலந்த ஜீன்ஸாக இருந்தது. ஜட்டி வெளிர் மஞ்சள் நிறத்திலும் ஜட்டியின் தொடை விளம்புகளில் கார்பன் துணுக்கு படிகம் போல அழுக்குப்படிந்துபோயிருந்தது. மேலாடை சிவப்பு நிறத்தினாலான பனியனாக இருந்தது. அதில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரே-வின் முகங்கள் பதிக்கப்படவில்லை என்றாலும் பனியனின் அடர் சிவப்பு பார்க்க கம்யூனிஸ்ட்க்குரிய மச்சம் அல்லது தழும்பாகத் தெரிந்தது. அவன் ஒரு மூத்திரச்சந்தினையொட்டிய ஒரு இருண்ட அறைக்குள் நிற்க வைக்கப்பட்டிருந்தான். மூத்திரம், பீ , எலி செத்த வாடைகள் மூக்கைத்துளைத்தன. அத்துடன் ஒரு துரு நாற்றம் நுரையீரலைப் பிசைந்தெடுத்தது. அந்த நாற்றத்திற்கிடையில் பெரும் முயற்சி எடுத்து மூச்சொரிந்தவனாக அவன் இருந்தான். அவனுடைய கால்கள் தொடை வரைக்கும் தடதடத்தப்படி இருந்தன. அவனுடைய நாசியிலிருந்து கக்கிய மூச்சு அனல் மூச்சாக இருந்தது. அவனது நெஞ்சுக்குழியும் வயிறும், மார்பும் மேலே ஏறி இறங்கின.
அவனைச்சுற்றி பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அத்தனைப்பேர் கைகளிலும் கணுக்களுடன் கூடிய உருட்டுக்கட்டை இருந்தன. தலையில் காவித் துண்டை இறுகக்கட்டி முடிச்சை வலது பக்கக் காதுக்கு அருகில் சற்று மேலே முடிச்சிட்டிருந்தார்கள். முடிந்தது போக மிச்சத்துணி குரங்கு வாலினைப்போலத் தொங்கிக்கொண்டிருந்தது.
அவர்கள் பார்க்க ஆக்ரோஜமாகவும், விகற்பமாகவும் தெரிந்தார்கள். ஒரு வேட்டை நாய்க்குரிய பசி அவர்களின் நாசியின் நுனியில் இருந்தது. அவர்கள் உருட்டுக்கட்டையை உள்ளங்கையில் தாங்கி சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவன் அவனது முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தான். தண்ணீர் அவனது முகத்தில் தெறித்ததும் அவன் திடுக்கிட்டான். தலையை நாலாபுறமும் சிலுப்பி தண்ணீரிலிருந்து விலகிக்கொள்ள தலையைச் சுழற்றினான். இரண்டு பேர் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையை கட்டப்பட்டிருந்த கைகளுக்குள் திணித்தார்கள். அவன் மொத்தப்பலத்தையும் கொடுத்து விசும்பினான். உடம்பை நாலாபுறமும் திருப்பி எம்பிக்குதித்தான். ஒருவன்  அவனது கையை இறுகப்பிடித்துக் கொள்ள மற்றொருவன் கட்டையை அவனது கைக்குள் திணித்து பிட்டத்திற்கும் முதுகிற்குமிடையில் நேராக நிறுத்தி பிட்டத்து முனையை வெளிப்புறமாக இழுத்தார்கள். அவனுக்குள் வலி எடுத்திருக்க வேணும்.  ஆனாலும் அவன் ஒரு சலனமுமில்லாமல் வெறுமென நின்றுகொண்டிருந்தான்.
ஒருவன் அவனது தலை முடியை இறுகப்பிடித்து தலையைப்பின்பக்கமாக இழுத்தான். தலை பின்னோக்கியும், நெஞ்சுடன் கூடிய வயிறு முன்பக்கத்திற்கும் சென்றது. அம்பு சொறுகப்படாத வில் வடிவத்திற்கு அவனுடைய மொத்த மேனியும் வந்திருந்தது.
ஒருவன் முகத்தில் தண்ணீர் அடித்தபடியே இருந்தான். ஒருவன் விரல்களைச் சுருட்டி, மடக்கி கட்டை விரலை விரல்களுக்குள் நுழைத்து முகத்தில் ஓங்கி  ஒரு குத்திட்டான். ஒரே குத்தில் அவனுடைய தாவங்கொட்டை மேல்நோக்கிப்போனது. அவனது பற்களின் வழியே இரத்தம் ஒழுகி வாயின் இரு பக்கம் விளிம்புகளில் வழிந்துக்கொண்டிருந்தது. அவன் நாவினால் வழியும் இரத்தத்தை வாங்கி எச்சிலோடு எச்சலாக இரத்தத்தைத் தொண்டைக்குள் இறக்கிக்கொண்டான். அவனது தொண்டை முடிச்சு மேலே கீழே ஏறி இறங்கியது.
ஒருவன் அவனது கன்னத்தைக்  கை விரல்களால் இறுகப்பற்றினான். கட்டை மற்றும் நடு விரல்களால் கன்னங்களை அழுத்தினான். அவனது வாய் ‘ ஆ....’வெனத்திறந்தது. நாக்கு மேல், கீழ் அன்னத்திற்கிடையே நீண்டுக்கிடந்தது. மேல் அன்னக் கடைப்பற்களில் ஒன்று ஆட்டம் கண்டு அதில் இரத்தம் வழிந்து நாக்கில் திவாலையாக விழுந்து எச்சிலோடு எச்சிலாக கலந்து நுனி நாக்கின் வழியே கீழ் அன்னத்திற்குள் விழுந்தது.
‘ சொல்லுடா.... பாரத் மாதா கி ஜே’ கண்களில் தீப்பறக்க, உதடுகள் படபடக்க, நாசியில் கோபத்தின் உச்சம் தெறிக்க அவன் அடித்தொண்டை அதிரக்கத்தினான்.
அவன் அதனை காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. வலியை, ரணத்தை மெல்ல உள்வாங்கி மண்டைக்குள் உட்கிரகித்தான்.
‘ பாரத் மாதா கி ஜே’
அவன் சொல்லவில்லை. அவனுடையக் கண்கள் கட்டப்பட்டிருந்ததால் அவனைச்சுற்றி எத்தனைப்பேர் நிற்கிறார்கள் என அவனால் கணிக்க முடியவில்லை. ஏன் அடிக்கிறார்கள்....எத்தனைப்பேர் அடிக்கிறார்கள்.... எந்த இடத்தில் நிறுத்தி அடிக்கிறார்கள்.... எவ்வளவு நேரம் அடிப்பார்கள்....எனத் தெரியாமலும் தெரிந்துக்கொள்ள முடியாமலும் அவன் நின்று கொண்டிருந்தான். எலும்பு போர்த்திய உடம்பானாலும் திடகாத்திரமாகவே அவன் நின்றுகொண்டிருந்தான். பட்ட மரத்தின் திடகாத்திரமாக அவனுடைய உடம்பு இருந்தது. அவனுடைய உதடுகள் சிறகு அறுபட்ட பட்டாம்பூச்சியின் இறக்கையைப்போல பரிதவித்தன. இதயம் ‘திடும்....திடும்...’ என அடித்துகொண்டது. என்னத்தையோ சொல்லி அவனுக்குள் முணுமுணுத்தபடி இருந்தான். தலையை பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு தலையை முன்பக்கமாக இழுத்தான். மற்றொருவன் அவனது பிடறியை ஒரு கையால் பிடித்துகொண்டு மறு கையால் அவனது முகத்தில் ‘ நொங்’ கென்று ஒரு குத்திட்டான். அவன் வலிப்பொறுக்க முடியாமல் ‘ பெஅ.......’வெனக் கத்தினான்.
முதலில் குத்தியவன் அடுத்து குத்தியவனைப்பார்த்து சொன்னான் ‘ நான் சொன்னேன் இல்லையா.......இவன் பெரியார் அம்பேத்கார் வட்டத்தைச் சேர்ந்தவன்னு. பார்த்தீயா...பெஅ...எனக் கத்துறான்....‘ என்றவாறு  அவன் மற்றவர்களை வெறிநாய்க்குரிய கொலை வெறியுடன் பார்த்தான். அத்தனைப்பேரும் அவனுடைய கண்டுப்பிடிப்பை பெரிதாக மெச்சி ஆமோதித்தார்கள். ஒருவன் மட்டும் பார்வையால் மறுத்தான். ‘ நீ வா...இவனைப்பிடி... நானொரு குத்து விட்டுப்பார்க்கிறேன் ’ என்றவாறு அவன் முன் பக்கமாக வந்தான். விரல்களை மடக்கி கண் கட்டப்பட்டிருந்தவனின் முகத்தில் ஓங்கி பலம் கொண்ட மட்டும் ஒரு குத்திட்டான்.
‘ நங்’
‘ பெஅ....’
‘ நங்’
‘ பெஅ...’.
  அவன் அப்படி அலற, அலற,... மற்றவர்களின் முகம் கோபத்தால் சிவந்தது. ஒருவன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால்  இரத்தம் ஒழுக நின்றுக்கொண்டிருந்தவனின் வயிற்றில் ஓர் அடி வைத்தான்.
‘ பெஅ...’
இன்னொருத்தன் அவனது தொடையைக்கடித்தான்.
‘ பெஅ...’
இன்னொருவன் நாலாபுறமும் எதையோத் தேடி ஒரு குச்சியை எடுத்து வந்து அவனுடைய விரல்களுக்கிடையில்  நுழைத்து ‘ சொல்....பாரத் மாதா கி ஜே...’ என்றவாறு பற்களைக்கடித்துகொண்டு வலு உள்ளமட்டும் நெறித்தான். அவன் வலிப்பொறுக்க முடியாமல் ‘ பெஅ...’எனக் கத்தினான்.
முகத்தில் ஒரு குத்து. விழுந்தது.
‘பெஅ...’
கன்னத்தில் ஒரு அறை.
‘பெஅ...’
அவனைச்சுற்றி நின்றுக்கொண்டிருந்த கும்பல் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள். கோபத்தால் முகம் சிவந்தார்கள். உருட்டுக்கட்டையால் கால் விரல்களில் ‘நங்’கென்று  வைத்தார்கள்.
‘ பெஅ...’ என அவன் வாயிலிருந்து எச்சிலும் இரத்தமும் ஒழுகக் கதறினான்.
ஒருவன் அவனது குரல் வளையில் கையைக்கொடுத்து ஒரே வீச்சில் தள்ளிக்கொண்டு சுவற்றின் மீது முட்டினான். ‘ சொல்லுடா....பாரத் மாதா கி ஜே’
அவனது கண்களில் இறுகக்கட்டப்பட்டிருந்த காவித்துணி நனைந்து கண்ணீர் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்தது. ‘ ஈனப்பயலே...உனக்கு பெஅ வாசகர் வட்டம் ஒரு கேடு....! ம்....உங்க வட்டத்தில எத்தனைப்பேரடா இருக்கீங்க.....? எவன்டா தலைவரு....நீ என்னப்பொறுப்புல இருக்கே......?’ என்றபடி அவன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாவங்கொட்டையில் ஓர் இடி இடித்தான். வாயிலிருந்து ரத்தம் வழிய அவன் ‘ பெஅ...’ என அலறிட்டான்.
‘ பெஅ....எனச் சொல்லாதே....’
‘பெஅ...’
‘ சொல்லாதே...’
‘ பெஅ...’
‘ சொல்லாதே...’
‘ பெஅ....’
‘ சொல்லாதே....’
‘ பெஅ...’
ஒவ்வொரு   ‘சொல்லாதே...’விற்கும் ஒவ்வொரு அடி விழுந்தது. அவன் ஒவ்வொரு அடியையும் வாங்கிக்கொண்டு ‘ பெஅ..பெஅ...பெஅ....பெஅ.....’ எனத் தொண்டை நாண் அறுகக் கத்தினான்.
அவனை ஐந்து பேர் இறுகப்பிடித்துகொண்டிருந்தார்கள். மொத்தப்பலத்தையும் கொடுத்து அவன் விசும்பினான். ‘மாக்’கென்று குதித்தான். இரண்டொரு  முறை மேலும் கீழுமாகக்குதித்து தரையில் குப்புற விழுந்தான். அவனது கால்கள் இரண்டும் மேலே தூக்கிக்கொண்டிருந்தன. ஒரு காலினை ஒருவனும் மற்றொரு காலினை இன்னொருத்தனும் முரடடுத்தனமாகப் பிடித்தார்கள். பலம் கொண்ட மட்டும் கணுக்காலைப்பிடித்து நெறித்து வளைத்து ஒடித்தார்கள். அவன் ‘ பெஅ.....’ வென அலறினான்.
‘ பாரத் மாதா கி ஜே’
‘ பாரத் மாதா கி ஜே’
‘ பாரத் மாதா கி ஜே’
மரம் முறிவதைப்போல அவனது கணுக்கால்கள் முறிந்தன. ஒவ்வொரு முறிவின் போதும் அழுகை விம்பிட அவன் அலறினான்.
‘ பெஅ...
பெஅ....
பெஅ...’
அவனது கால்களை முறித்துகொண்டிருந்தவர்கள் அவர்களது கைகள் வலிக்க அவனை அப்படியே கிடத்திவிட்டு நாலடித்தூரம் தள்ளிநின்றார்கள். பிறந்த மேனியில் குப்புறக்கிடந்தவன் பிட்டத்தை முறுக்கிக்கொடுத்தான். இரண்டு பிட்டங்களும் திராவிடக்காளையின் திமிலைப்போல குலுங்கி ஆட்டம் கண்டன. ஒருவன் அந்தப்பிட்டத்தில் தண்ணீர் ஊற்றினான். இன்னொருத்தன் குனிந்து அவனது காதருகேச் சென்று  ‘ இனி பெஅ வாசகர் வட்டத்திற்குப் போக மாட்டேனுச்சொல்லு....’ என்றவாறு அவனது காதிற்குள் முழங்கினான்.
அவன் ஒரு அசைவுமில்லாமல் அப்படியே படுத்துக்கிடந்தான். ஒருவன் கையில் வைத்திருந்தத் தடியால் திமில் போலிருந்த பிட்டத்தில் ஓங்கி ஓர் அடி வைத்தான். அப்பொழுதும் அவன் ‘பெஅ...’ என்றான். விழுந்த அடியில் பிட்டங்கள் சேவல் கொண்டை அளவிற்கு சிவந்து போயிருந்தது. வலியால் உடம்பைக்குலுக்கி இடது வலதாக உருண்டான். கண்களை இறுகக் கட்டியிருந்த துணி மெல்ல அவிழ்ந்துகொண்டு வந்தது. ஒருவன் அவனது தலையை ஓங்கி மிதித்தான். இடதுப் பக்கமாக அவனது தலை சாய்ந்திருக்க அவனது கடவாய் வழியே இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. ஒருவன் அவிழ்ந்தத் துணியை இறுகக்கட்டினான். அவனைச்சுற்றிருந்தவர்கள் அவனிடமிருந்து விலகி நின்றார்கள். குப்புறப்படுத்திருந்த அவன் பின்னால் இறுகக்கட்டப்பட்டிருந்த கையை மெல்ல அசைத்து தரையில் ஊன்றி எழுந்திருக்க முயற்சித்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. கால்களும், கைகளும் தடதடத்தன. தொடையில், பிட்டத்தில் முழங்கால்களில் ரத்தம் சொட்ட தசைகள் கிழிந்துத் தொங்கின.
அவன்  மெல்ல தன்னைப் புரட்டிக்கொடுத்தான். முதுகைத் தரையில் சாய்த்து கால்களை ஒன்றுப்பின் ஒன்றாக மடக்கி  இடதுப்பக்கமாகத்திரும்பி முதுகை சற்று எம்பிக்கொடுத்து முழங்காலிட்டான். இரு கைகளையும் தரையில் ஊன்றிருந்தவன் ஒரு கையை மெல்ல எடுத்து ஊன்றி மறு கையை முழங்காலுக்குக் கொடுத்து தத்தி, தத்தி மெல்ல எழுந்தான். அவனது கண்களில் கண்ணீர் சன்னமாக இறங்கிக்கொண்டிருந்தது. வாயிலிருந்து வழிந்த ரத்தம் மார்பில் தெறித்து வயிற்றில் வழிந்து  தொடை வழியே தரையில் விழுந்துத் தெறித்தது.
கையில் உருட்டுக்கட்டை வைத்திருந்த ஒருவன் கட்டையை கீழே கடாசி விட்டு  பிடறி மயிற்றை பற்றி முன்பக்கமாகத் தள்ளி ‘ இனி நீ... பெஅ வட்டத்திற்கு போவீயாடா....’ என்றவாறு சுவர் வரைக்குமாகத் தள்ளிக்கொண்டுப்போய் சுவற்றில் ‘மட்...மட்..மட்...மட்...மட்.....மட்..’டென முட்டினான். ஒவ்வொரு முட்டின் போதும் அவன் ‘பெஅ.....

பெஅ...
பெஅ...
பெஅ...
பெஅ.....
பெஅ....’ என்றவாறு அவன் அலறினான். உடம்பைக்குலுக்கி வெதும்பினான். அவனைச்சூழ்ந்து நின்ற கும்பலின் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டை அவர்களின் பிடியிலிருந்து கீழே விழுந்தது. இன்னும் எவ்வளவோ அடியை வாங்குமளவிற்கு அவனிடம் வலு இருந்தாலும் அவனை இதற்கு மேலும் அடிக்க அவர்கள் திராணியற்று நின்றார்கள். அவர்களின் மொத்த உடம்பும் வியர்த்துக்கொட்டியிருந்தது. கீச், மூச்...வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
புறங்கைகளால் வியர்வையைத் துடைத்தெடுத்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள். மெல்ல முணுமுணுத்துகொண்டார்கள்.
ஒருவன் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்தான். மற்றவர்கள் அவனை  பிறந்த மேனியுடன் தூக்கினார்கள். உருட்டுக்கட்டையை அள்ளினார்கள். அவர்கள் சற்று முன் வந்திருந்த ஆட்டோவில் முதலில் உருட்டுக்கட்டைகளை அடுக்கினார்கள். அதன் மேல் அவனைக் கிடத்தினார்கள்.
ஆட்டோ வந்திருந்தப் பாதையில் பயணித்தது. அந்த மத்தியப் பல்கலைக்கழகம் சுற்றுச்சுவரையொட்டிய ஒரு குறுகலான பாதைக்குள் நுழைந்தது..
ஓரிடத்தில் ‘ பெஅ வாசகர் வட்டம்’ என்றொரு ஒரு பதாகை இருந்தது. அந்த இடத்தில் ஆட்டோ ஓரிரு நொடிகள் நின்றது. ஒருவன் பொதி மூட்டையைப்போலக் கிடந்தவன் மீது ஒரு உதை விட்டான். இரத்தமும் சகதியுமான அவன் ஆட்டோவிலிருந்து விழுந்து உருண்டான்.
‘ பாரத் மாதா கி ஜே...’ என்றதும் ஆட்டோ புழுதியை வாறி தன் தலையில் கொட்டிக்கொண்டு அந்த மங்கியப் பொழுதிற்குள் போய் மறைந்தது.
தெருவோர மக்கள் ஓடிவந்தார்கள். பிறந்த மேனியாகக் கிடந்த அவனைத் தூக்கினார்கள். கைக்கட்டு, கண் கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். அவனது மேனியெங்கினும் ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்ததைத் துடைத்தார்கள். முகம் வீங்கி, விழிகள் பிதுங்கிக்கொண்டிருந்ததில் அவன் யாரென அவர்களால் கண்டறிய முடியவில்லை.
அவன் தடுமாற்றத்துடன் மெல்ல எழுந்தான். கைகளை அந்தரங்க உறுப்பிற்குக் கொடுத்து கூனிக்குறுகி நின்றான்.
. ‘ தம்பி...நீ யாரு....?, நீ என்னே செய்தாய்...? உன்னை யார் அடிச்சது....?, எங்கே வைத்து அடிச்சாங்க.....?’
அவன் அந்தரங்கத்திலிருந்து கைகளை எடுத்து நாலாபுறமும் அசைத்து அவனுடைய மொழியில் விளக்கத்தொடங்கினான்.
‘ பெஅ.....
பெஅ......
பெ... பெ...பெ...
அ... அ.... அ....
பெஅ ’.

2 கருத்துகள்: