வியாழன், 3 நவம்பர், 2016

ஈரநிலம்


நான், என் மனைவி, மகள், சீனு நான்குபேரும் ஒரு கள்ளத்தோனியில் புலம் பெயரத்தொடங்கினோம். ஒரு வாரம் ஆகுமெனச் சொன்னப் பிரயாணம் இரண்டு வாரங்கள் கடந்தும் கரைத்தொட முடியவில்லை. பயணம் நீண்டுக்கொண்டே இருந்தது.
பெரிய மீன், சின்ன மீனைத்தின்னும்; சிங்களமண் தமிழ் மண்ணைத் தின்னுவதைப் போல. ஆனால், எங்கள் பெருங்குடலை சிறுகுடல் தின்பதை உணர்ந்தோம். பசியால் துடித்தோம். தாகம் தணிக்க முடியாமல் நாக்கு வரண்டுத் தவித்தோம்.
சொந்த மண்ணை விடுத்து அந்நிய மண்ணில் அடைக்கலம் புக, யாருக்குத்தான் மனம் கொள்ளும்..?. எனக்கு இலங்கை மண்ணை விட்டு புலம்பெயர கடுகளவும் மனமில்லை. பிறந்த மண், புழுதி வாறித் தூற்றி விளையாண்டுத் திரிந்த நிலம் , சொந்தம், பந்தம்,.....இத்தனையையும் விட்டுவிட்டு வேறொரு நிலத்தினை நோக்கி இடம் பெயர என் மனம் ஒப்பவில்லை. ஆனால் என் மனைவி இந்நிலத்தை விட்டு புலம் பெயர்ந்தால் மட்டுமே மிச்சச் சொச்ச வாழ்வை ஓரளவேணும் கழிக்க முடியும் என்கிற முடிவில் அவள் இருந்தாள். இந்நிலத்தை விட்டு எங்கேயேனும் போய்விட வேண்டும் என என்னிடம் மண்டியிட்டு கெஞ்சினாள். கண்ணீர் சரமாக ஒழுகக் கேட்டாள். அழுதாள். புரண்டாள்..
‘ பாப்பம்...பாப்பம்....’ என்று நான் காலம் கடத்தி வந்தேன். ஒரு நாள் அவள் என் சட்டையைப்பிடித்து குலுக்கினாள். ‘ இதுக்கு மேலும் என்னால்  இங்கண்ட காலம் தள்ள இயலாது...?’ சினம் கொண்டு கண்ணீராகக் கொட்டினாள்.
‘ கொஞ்ச நாட்கள் எனக்கு அவகாசம் கொடும்’ என்றேன்.
‘யுத்தம் உச்சம் தொட்ட நாள் கண்டு சொல்லிண்டு வாறென். இந்த யுத்த பூமி வேணாம்....வேணாம்....எண்டு....’ அவள் தன் இரண்டு கைகளையும் அகல விரித்து வைத்துகொண்டு கதறினாள். தலையில் அடித்துகொண்டாள். தலைவிரிக்கோலமாக இருந்தாள். அவளது இருப்பையும், அழுகையையும் பார்க்கையில் எனக்குள் ஒரு உருவமற்ற பூதம் நெஞ்சுக்கூட்டைத் தாக்குவதைப்போலிருந்தது.
எந்நேரமும் கள்ளம் கபடமற்று சிரித்தவண்ணமாக இருந்தவள் அவள். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் அத்தனை தினசரிகளையும் ஒரு வரி விடாமல் வாசித்து விடுபவள். தினசரியில் இருக்கும் எழுத்துப்பிழையைக்கூட அவள் சுட்டிக்காட்ட தவறமாட்டாள். இப்பொழுதெல்லாம் அவளால்  எதையும் வாசிக்க முடிவதில்லை. எந்நேரமும் அல்லற்படும் அழுதக்கண்ணீர்தான்.  அவள் எதற்காக அழுகிறாள், யாரை நினைத்து அழுகிறாள் என்று கூட என்னால் கணிக்க முடியவில்லை. அவளுடைய தகப்பனார்,  பெற்ற மகன், மகள்,.... இவர்களில் யாரை நினைத்து அழுகிறாள் என அழுதுகொண்டிருக்கும் அவளாலேயே கணிக்க முடியாத துக்கத்தில் அவள் மூழ்கிக்கொண்டிருந்தாள்.
‘ வாருன்கள்....எங்கே யானும் போய்விடுவம் ’
‘ இவ்விடத்த விட்டு ஏன் போவ வேணும்...?’ என்றேன் நான்.
‘அட கண்டிக்கதிர்காமக்கந்தா.....எம் பிள்ளையாள் உயிர் பிழைக்க வேணாமா.... ’
அவளது உதடுகள் உதிர்ந்த சிறகைப்போல் துடித்தன. ‘ இந்த மட்டக்களப்பை விட்டு எங்கண்ட போவ இயலும்...?’
‘ இந்த ஆழி சூழ் உலகில் தமிழன் எங்கண்ட இல்லை. தமிழ்நாடு போவம்....’
‘ அங்கண்டப்போவதற்கு இங்கண்டே இருந்து மாண்டுத் தொலயலாம்...’ என்றேன்.
‘ அப்படி எண்டால் மலேயா போவொம். அங்கண்டபோய் ஒரு பிழைப்பத்தேடிக்கொள்வொம். கனடா....போவொம். ஆஸ்திரிலியா போவொம். எங்கயாண்டும் போவொம்.....’
‘ ஆசை கண்டு எழுப்பிய புதுகுடில், கோப்பித்தோட்டம், பனைமரக்கூடல், ஆடு, சீனு,..... இத்தனயும் விட்டுண்டு எப்படி போவ இயலும்....’ என்றேன்.
அவள் பெருமூச்சொரிந்தாள்.  சினம் கொண்டு பார்த்தாள்.
‘ எம் ஒரு மகனை இழந்து நிற்கிறொம். தெரியும் தானே.... ஒரு நாள் நான்கு சிங்கள இராணுவன்கள் வந்தான்கள். எம் மகனை போராளி என்றான்கள். அவன் என்ன போராளியா...? அவன் புலி கொடியைக்கூட  தீண்டியவன் இல்லன். நானும் நீயும் என்னவெல்லாம் சொல்லிப் போராடினொம்.  மறுதலித்தொம். விசாரிக்க வேணும் என அழைத்துகொண்டு போனவன்தான். இன்னும் வீடு திரும்ப இல்லை....
எம் மூத்த மகள் யாழினி. யாழ்பாணம் பாடசாலையில் முதுகலை அரசியல் படித்தள். அவள் என்ன போராளியா...? அவள் குழந்தாய். அவளுக்கு அன்புத் தவிர வேற என்னத்தெரியும்....? இலகு மனம் கொண்டவள். அதிர்ந்துகூட  பேசத் தெரியாதவள். அவளையும் விசாரிக்க வேணும் எண்டு அழைச்சிண்டு போனவள்தான். எத்தனை நாள் அவளைத் துலாவினொம். அவள் மாண்டச் செய்தி கூட வேறு யார் மூலமாகவோதான் கேட்கப்பெற்றொம். அன்றைய நாள் தொட்டு அழுதுக்கிடக்கிறென். பசி அற்று இருக்கிறென். உங்கள நான் கண்டிக்கதிர்காமக்கந்தனா... நினைக்கிறென். கையெடுத்துக் கும்பிடுறென். வாருங்கள் எங்கேயாண்டும் போய்விடுவொம்....’ எனக் கண்ணீரில் மன்றாடினாள்.
அவள் வற்புருத்தலின் பேரில்தான் நாங்கள் நான்கு பேரும் இந்த கள்ளத்தோனியில் புலம்பெயர்ந்தோம். மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்க்கு பேருந்து பயணம் செய்கையில் உடம்பு உதறுவதைப்போலதான் இந்தக்கள்ளத்தோணியில் குலுங்கினோம்.
ஆசைக்கண்டு எழுப்பிய புது குடில். விற்றுவிட்டோம். ஒரு வேலி கோப்பித் தோட்டம். விற்றுவிட்டோம். பணத்தை டோலராக மாற்றி மடியில் கட்டிக்கொண்டு கடலே விதியெனக் கடந்தோம்.
கண்ணுக்கு எட்டிய மட்டும் சமுத்திரம். எந்த திசையில் இடம் பெயர்ந்துகொண்டு இருக்கிறோம் என அடையாளம் காண முடியவில்லை. பகலவன் உதித்தால் மட்டும் காண இயலும். இரவு வந்தால் மரண பயம். என் குழந்தை அழுகிறாள். பொல..பொல...வெனக் கண்ணீர் சொரிகிறாள். ‘வேணாம் அப்பா....  வீட்டுக்கு போயிடலாம்....’ என்கிறாள்.
‘ எம் தங்கம் அல்லவா நீ.... அங்கு பாரும். நட்சத்திரம்’ காட்டினேன். நட்சத்திரம் சிங்கள ராணுவன்கள் விட்டெறியும் ஏவுகணைப்போல தெரியும் போலும். பயத்தால் தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள். முகத்தை அவளது அம்மாவின் சேலையால் மூடிக்கொண்டாள்.
‘ அப்பா....அக்கா எங்கே.....?’
அவள் கேள்வியில் நான் துடித்தேன். ஓலமிட்டு அழும் மனைவியின் வாயை அடைத்தேன்.
‘ அப்பா..... அண்ணா எங்கே.....?’
‘ அண்ணா , அக்காவை அழைக்கத்தான் போகிறொம்...’ என்றேன்.
அவள் ‘ அய்......!’ என்றவாறுக்குதித்தாள்.‘அவகளிடத்தான் போய்கிறோமா....?’ என ஆனந்தத்தில் சிரித்தாள்.
‘ ஓம்....ஓம்....’ என்றேன் நான்.
இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் எத்தனை தூரம்....நாலாயிரத்து இருநூற்று முப்பத்து ஒன்பது கல்தூரம். தோணி எத்தனைத்தூரம் போய் இருக்கும். இன்னும் எத்தனைத் தூரம் போக வேணும். போக முடியுமா...என் தொண்டைக்கும் நெஞ்சிற்குமிடையே பயம் உருண்டையாக உருண்டது. நான்கு நாட்களைக் கடந்து விட்டோம். மனதிற்கு சுகம் இல்லை. துணிவு இல்லை.
ஒரு நம்பிக்கைக்குரிய ஓர் அந்நியன், ‘ நான் உறுதியாக அடைக்கலம் தேடித்தருவன்’ என்கிற உத்திரவாதத்தின் பேரில்தான் நாங்கள் பிரயாணம் செய்தோம். முன்தொகையாக ஆயிரம் டோலர் வாங்கிக்கொண்டான். மீதம் நடுக்கடலில் கொடுக்க வேணும்.  நாட்டிற்குள் நுழைந்ததும்  ஆறு , ஏழு எடத்தில் கையூட்டு நீட்ட வேணும். உண்ண வேணும். உடுத்த வேணும். முகாம் கிடைக்கும் மட்டும் தனியாக வசிக்க இடம் தேடிப்பிடிக்க வேணும். மடியில் இருக்கும் டோலர் போதுமா....தெரியவில்லை. அதைவிடக் கவலை தோனி கரைப்போய் சேருமா....!
பிராயாணம் தொடங்கிய முதல் நாள்...
அமாவாசை. முழு இருட்டு. மூட்டை முடிச்சுடன் கல்லடி பாலம் கடந்து , அனிச்சம் வீடு, வாவி உளிச்சம் குளத்தைக் கடந்து கண்களில் கண்ணீர் சொரிய மட்டக்களப்பு துறைமுகம் வந்தடைந்தோம். அங்கேயிருந்து ஒரு கள்ளத்தோணிக்கு மாறினோம். ஐம்பது கல் தூரம் கடந்து வந்து விட்டோம். சுற்றிலும் கண் கட்டிய இருட்டு. கடற்கரையின் கலங்கரை விளக்கம் வெளிச்சம் மட்டும் மின்மினிப்பட்சியாக  ஒளிர்வதைக்காண முடிந்தது.
என் ஏழு வயதுடைய மகள் கேட்டாள்.‘ அப்பா.... அங்கே பாரும். அங்கே தெரிவது திரிகோணமலையில் விழும் குண்டுதானே....?’
‘ இல்லை...அம்மா. இல்லை...அது கலங்கரை விளக்கம் ’ என்றேன் நான். அவள் அதை நம்பவில்லை.
‘ இல்லை அப்பா . அது சிங்களவன் விட்டெறியும் குண்டுதான் ’ என்றாள்.
அவள் அதைச்சொல்லி வைப்பதற்கும் வெளிச்சம் எங்கள் புலனிலிருந்து மறைவதற்கும் சரி என்று இருந்தது.
பிரயாணம் நான்கு நாட்களைத் தொட்டிருந்தது.
என் மனைவி கலங்கிய முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். அவளது மடியில் மகள் இசையாழ் படுத்திருந்தாள்.  அவளது மடியில் சீனு படுத்திருந்தது.
சீனு பாவம். ஐந்து அறிவுடைய பிராணியாக இருந்தும் என்னவோ ஒரு துக்கம் அதன் கண்ணில்  தெரிந்ததைக் காண முடிந்தது. நான்கு நாட்களாக எதையும் அது உண்ணவில்லை.  குரைக்கவில்லை. வாலாட்டல் இல்லை.
நாங்கள் எங்களுக்குத் தேவையான உருப்படிகளை நான்கு மூட்டைகளாகக் கட்டியிருந்தோம். ஒரு மூட்டையில் எள் உருண்டை இருந்தது. அதை எடுத்து என் மனைவிக்கும் மகளுக்கும் கொடுத்தேன். நான் ஒன்று எடுத்துகொண்டேன்.
மகள் சொன்னாள். ‘ அப்பா....சீனுவுக்கு ஒன்று கொடுங்கள் ’.
நான் மட்டக்களப்பில் எப்படியேனும் இந்த சீனுவை விட்டு விட்டு வந்துவிடலாம் என்றுதான் பார்த்தேன். சீனு எங்களை விட்டு போவதாக இல்லை. நாங்கள் வளர்த்தெடுத்த செல்லம் அல்லவா அது!  நான் என்ன செய்ய...? சீனுவையும் தூக்கிக்கொண்டுதான்  தோணியில் ஏறினோம்.  
எள் உருண்டையை எடுத்து சீனு வாய் அருகினில் கொண்டுப்போனேன். சீனு எழுந்திருக்கவில்லை. வாலைப் பிடித்து ஆட்டினேன். அதற்கு உணர்வு என்று ஒன்று இல்லை.
‘ அட கதிர்காமக்கந்தா....’ நான் அழுகிறேன். என் அழுகையைக் கண்டு மகள் அழுகிறாள்.
அவள் என்னச்செய்வாள்...? அவள் பாவம்....! அவளுக்கு தோழி சீனு இல்லையா.... பெட்டை நாய். அவளுக்கு அது செல்லம். அது இறந்துபோனதை அவளால் எப்படி பொறுத்துக்கொள்ள இயலும்.....நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவள் கேட்பதாக இல்லை. குலுங்கிக் குலுங்கி அழுதுக்கொண்டிருந்தாள். கண்ணீர் அவளுடைய கன்னங்களில் தாரையாக ஒழுகிக்கொண்டிருந்தது.
தோணியோட்டி அண்ணா எழுந்து வந்தான்.
‘ உங்களுக்கு கொஞ்ச மேனும் அறிவு எண்டு இல்லை. நான் சொன்ன விதிமுறை எதையும் நீங்க மதிக்க இல்லை. யாரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியா தேசத்தில் இந்த நாயை கொண்டுச்செல்லாவிட்டால் என்னவாம்...’
‘அண்ணா..என்னை மன்னித்து விடுங்கள். எண்ட பேச்சை என் பிள்ளையாள் கேட்க இல்லை. நான் என்ன அண்ணா செய்ய இயலும்..’
‘சரி... அடுத்து எண்ட சொன்னேன். யாரும் யாருக்காகவும் அழக்கூடாது சொன்னேன் இல்லையா....பாரும்! உன் பிள்ளையாள் குலுங்கிக்குலுங்கி  அழுதுண்டு இருக்காள்...’
நான் என் மகளை தோளில் கிடத்திக்கொண்டு அவளைத் தேற்றினேன்.
‘ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் புலம் பெயரும் ஈழத்தமிழர்களின் தொகை கூடிக்கொண்டு போய்கிறது. அங்குள்ள பூர்வீக குடிகள் ஈழத்தமிழன் எண்டு தெரிந்தால் ஈவு, இரக்கப்பட மாட்டேன்கிறான்கள். உங்களில் யாருக்கும் அது தெரிய இல்லை. திரும்பவும் நான் சொல்கிறன். மனதில் தைத்துக்கொள்ளும். உங்களில் யாருக்கும் என்னனாலும் நடக்கக்கூடும். மாண்டுக்கூட தொலையலாம். அடி விழலாம். யாரும் யாருக்காகவும் அழுவுது இயலாது. விளங்குகிறது தானே.... ?’
‘ ஓம் அண்ணா....’
‘உங்களை மீட்டுப்போக ஆஸ்திரேலியா தேசத்து படகு ஒன்று வரும். நீங்கள் அதில் மாறி மீன் தொட்டிக்குள் ஒழிந்துக்கொள்ள வேணும். அதை ஒரு பெரிய பலகையைக்கொண்டு மூடி விடுவொம்.
ஆஸ்திரேலியா பொலீஸ் கண்ணில் அகப்படக்கூடாது. அவன்கள் ஈவு இரக்க மட்டவன்கள். தன் துப்பாக்கியால் மீன் தொட்டியைச் சுடுவான்கள். அதற்குள் யாரெனும் மறைந்து  இருக்கான்களா எண்டு கூர் ஆயுதம் கொண்டு பார்ப்பான்கள். தோட்டா, கூர் ஆய்தம்,...யார் மேலெனும் படக்கூடும். என்ன நடந்தாலும் பொறுத்துக்கொள்ளத்தான் வேணும்.  சத்தம் எழும்புதல் கூடாது. ஒரு வேளை எழும்பினால்.... அவ்வளவேதான்! இலங்கைக்கு திருப்பிவிடுவான்கள். இத்தனை நாள் எடுத்த எல்லா முயற்சியும் வீண் எண்டாயிடும்...விளங்கும் எண்டு நினைக்கிறன்....’
‘ ஓம்... விளங்குகிறது அண்ணா......’
‘ பாரும்...இந்த நாய் மாண்டு விட்டது. அதை தூக்கி கடலுக்குள் போடப்போகிறன். எல்லாரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்’ என்றவன் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை  நோக்கி வந்தான். நாயின் வாலைப்பிடித்து தூக்கி கடலுக்குள் விட்டெறிந்தான்.
அதன்பிறகும் இரண்டு நாட்கள் கடலுக்குள் மிதந்தோம். மிரண்டுக்கிடந்தோம். எந்தத் திசையில் போய் கொண்டு இருக்கிறோம் என எங்களால் கணிக்க முடியவில்லை.
ஒரு நாள் ஏறு பொழுதிருக்கும். தோணியோட்டி அண்ணா தோணியை நிறுத்திவிட்டு எங்கள் பக்கம் திரும்பினான்.
‘இந்துமாப்பெருங்கடலில் இந்திய எல்லையை நாம் கடந்து விட்டொம். இனி ஆஸ்திரேலியா. இன்னும் ரெண்டு நாட்களில் உங்களை மீட்டுச்செல்ல படகு ஒன்று வரும். அதன் பிறகு நான் நாடு திரும்பி விடுவென். நீங்கள் நான் சொன்னதைப்போல நடந்துகொள்ள வேணும். என்ன புரிகிறது தானே......’
‘ ஓம் அண்ணா....’
அவன் சொன்ன படகு  மூன்று நாட்கள் கழித்துதான் வந்தது. தோணியிலிருந்து படகிற்கு தாவிக்கொண்டோம். படகோட்டி அண்ணா எங்களுக்கு கைகளைக் காட்டி தலையில் கை வைத்து ஆசியுடன் எங்களை அனுப்பி வைத்தான்.
ஆஸ்திரேலியா படகு அது.  நல்ல சவுகரியத்துடன் இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. அப்படகில் அந்நாட்டு கொடி பரந்தது. அவன் மீனவன். ஆங்கிலத்தில் செப்பினான். தமிழும்  கதைத்தான். அவனுக்கு நான் கொடுக்க வேண்டிய டோலரை அவன் வாங்கிக்கொண்டான்.
நல்ல வேகத்தில் அந்த படகு செல்வதை எங்களால் உணர முடிந்தது. படகின் வேகத்தில் எங்கள் உடம்பில் புது இரத்தம் பாய்வதைப்போலிருந்தது. மூன்று நாள் இரவு முடிந்து விடிந்திருந்தது. ஆஸ்திரேலியாவை நெருங்கியிருந்தோம்.
படகோட்டி எங்களிடம் கையை நீட்டி ‘ அதோ...! பாருங்கள்....அது பப்புவா நிபூசிக். ஆஸ்திரிலியாவின் கடற்தீவு ’ என்றான். நாங்கள் மூவரும் படகிலிருந்து மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தோம். தீவுகள் பார்க்க கடற்பரப்பையொட்டிப் பறக்கும் மின்மினிப்பட்சிகளைப் போலிருந்தது. படகு அத்தீவினையொட்டிச் சென்றது. கொஞ்சம் தூரத்தில் மற்றொரு தீவு தெரிந்தது. அது  மானுஸ் தீவு. தீவின் கலங்கரை விளக்கம் வெள்ளொளியை எங்களால் பார்க்க முடிந்தது. .
அன்றைய நாள் இரவில் படகோட்டி பயந்த நிலையில் இருந்தான். திடீரென்று எங்கள் பக்கம் திரும்பி ‘மறைந்துகொள்ளுங்கள்...மறைந்துகொள்ளுங்கள்...’ என்று பதறினான். ‘என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள்’ என மண்றாடினான்.
நாங்கள் மட்டக்களப்பு புதைக்குழிக்குள் மறைந்துகொள்வதைப்போல மீன் தொட்டிக்குள் மறைந்துகொண்டோம். ஆழி சூழுடன் கூடிய பயம் எங்களைச் சூழ்ந்துகொண்டது. படகைச் சுற்றிலும் ஆஸ்திரேலியா பொலீஸ்காரர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
படகு ஓரிடத்தில் நிற்பதை உணர்ந்தோம். வானத்தில் குண்டு முழங்கும் அரவம் கேட்டது. அந்த அரவத்தைக் கேட்டதும் என் மகள் திடுக்கிட்டாள்.
‘அய்யோ...! அப்பா...! சிங்களன் குண்டு போடுகிறான்.....’ என ஓலமிட்டாள்.
‘ உஷ்.....!’  நான் அவளது வாயை அடைத்தேன்.
மீன் தொட்டியை ஒரு லத்திக்கொண்டு தட்டினான் ஒரு பொலிஸ்.
‘ படகில் என்ன...? ’ ஆங்கிலத்தில் கேட்டான்.
‘ மீன்...மீன்....’ படகோட்டி சொன்னான்.
எனக்குள் பயம் சில்லிட்டு இருந்தது. குளிர் வேறு பிய்த்துத்தின்றது. நான் என்  மனைவியையும் மகளையும் கோழி தன் சிறகால் அரவணைப்பதைப்போல அணைத்துக்கொண்டு நடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தேன்.  
ஓர் கூர்ஆயுதம் ஒன்று மூடி இருந்த பலகையைத் துளைத்தது. மறுஆயுதம் என் தொடையில் பாய்ந்தது. இன்னொன்று என் கண்  முன்னே குத்தி நின்றது.
‘அப்.....’ மகள் ஒலி எழுப்பினாள்.
அவளது வாயை இறுக அடைத்தேன். மறுகையால் என் தொடையில் பாய்ந்த ஆயுதத்தைப் பிடுங்கி முனையில் இருந்த குருதியைத் துடைத்தேன். மனைவியையும் மகளையும் இறுக அணைத்துகொண்டேன்.  கூர் ஆயுதம் ஒன்று மகளின் கையைத் துழைத்தது.
‘அய்யோ....!’ என் உயிர் அறுவதைப்போலிருந்தது.
‘ அப்.....’
அவள் ஓலமிடுவதற்கு முன் அவளது வாயை இறுக அடைத்தேன். அவள் விசும்பினாள். இன்னும் இறுக அடைத்தேன்.
வெளியில் பொலீஸ்காரர்களின் அரவம் அதிகமாக இருந்தது. கடல் போர்த்திய இரவு ஒளிவெள்ளமாகத் தெரிந்தது. உடம்பில் ரத்தம் சொற்றியது. மகளின் வாயிலிருந்து கையை மெல்ல எடுத்தேன்.
‘ அம்...‘ 
நாசிகள் வழியே விசும்பல் வந்த வண்ணமிருந்தது. நான் கையை எடுத்தால் போதும். அவ்வளவேதான்! இத்தனை நாள் எடுத்த எல்லா முயற்சிகளும் வீண் என்றாகி விடும். என் கையில் கைக்குட்டை இருந்தது. அதனால் அவளது வாயையும் நாசியையும் இறுக அடைத்தேன்.
‘ என் செல்லம்....என் அழகு... என் தங்கம்.....சத்தம் இடுதல் கூடாது....’ அவளது காதிற்குள் முணங்கினேன்.
அவள் கண்களைத்திறந்து என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் மட்டக்களப்பு தெரிந்தது. யாழ்பாணத்து புழுதி தெரிந்தது. கண்டி கதிர்காமம் ஏக்கம் தெரிந்தது. அவளை இறுக அணைத்து முத்தம் கொடுத்தேன். அவள் என் தங்கம். என் அழகு. என் தேவதை. அவளை நெஞ்சோடு அணைத்தேன். அவள் அழ இல்லை. ஒரு சிணுங்கல் இல்லை.
படகு  மெல்ல நகர்வதைப்போலிருந்தது. எங்களை விட்டுப்போயிருந்த உயிர் திரும்பி வந்ததைப்போலிருந்தது.
என் மனைவி என் மடியிலிருந்த மகளை ‘வெடுக்’கெனப் பறித்தாள். தோளில் கிடத்திக்கொண்டு முதுகைத்தட்டினாள். பாதங்களை வருடினாள். குஞ்சை இழந்த கோழியின் பரிதவிப்பில் தவித்தாள். மகளை மடியில் கிடத்திக்கொண்டு  தலையைக் கோதினாள். கன்னங்களைப் பிடித்துக் குலுக்கினாள். கண் காது, மூக்கு, செவியென முத்தமழைப்பொழிந்தாள். நெஞ்சோடு அணைத்தாள்.
எனக்கான உலகம் நழுவி மெல்ல கடலுக்குள் மூழ்குவதைப்போலிருந்தது. இதயத்தை முள்வேலி அறுத்தது. என்னவோ ஒன்று நடந்து விட்டது. நினைக்கவே பயமாக இருந்தது. கைநழுவி தீக்கனலில் விழுந்துவிட்டதைப்போல திடுக்கிட்டேன். ஒரு பெருந்தவறை செய்துவிட்ட லயத்தில் துடித்தேன். கண்களை இறுக மூடிக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது. கீழ் உதட்டை பற்களால் கடித்து கண்ணீர் சொரிந்தேன். விசும்பினேன். வாயிற்குள் துணியை திணித்துக்கொண்டு குலுங்கினேன்.
என் மனைவி பிள்ளையாள் மீது சரிந்து கிடந்தாள். மார்பில் செவிச்சாய்த்தாள். தலையில் அடித்துகொண்டாள். தலை விரிக்கோலமாய் ‘ வீ......ல்’ எனக் கத்தினாள். நான் என் வாய்ப்பொத்திருந்த கைகளை எடுத்து அவளது வாயினை அடைத்தேன்.


1 கருத்து: