புதன், 9 அக்டோபர், 2013

கொக்கரக்கோ.....



இங்கே நிற்கின்ற நூற்றுக்கணக்கான பேர்களில் யார் முன்னால் செல்வது ?“
அவர் ?”
அவர் வேண்டாம்
அப்ப நான் ? ”
நீங்களும் வேண்டாம்
வேறு யார்?”
நான் போகிறேன்
நீங்களா ?”
ஆமாம் நானேதான்
சரி போங்கள்
என்னை தொடர்ந்து எல்லோரும் வாருங்கள்
வருகிறோம். வருகிறோம்
சப்தம் கூடாது
ஆமாம். கூடாது. கூடாது
அதோ நாய்கள் !. ஜாக்கிரதை
உஷ்................!”
நாய்களின் கண்களில் பட்டுவிட்டால் நம் கதி அதோகதிதான்
வேகமாக நடங்கள். யாரும் பார்த்துவிடப்போகிறார்கள்
வரப்பில் பார்த்து நடந்து வாருங்கள். ஈரத்தில் கால்களை வைத்துவிடாதீர்கள்
விளைநிலத்திற்குள் இறங்கி விடாதீர்கள். ”
இது விளைநிலம் அல்ல. விலை நிலம்
அப்படியானால் இந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு போகலாமே?“
வேண்டாம். இதைவிட நல்ல இடங்களெல்லாம் இருக்கின்றன
நல்ல இடங்கள் என்றால்?”
ஆற்றுப்படுகை, கல்குவாரி, நிலக்கரி சுரங்கம், மலை , காடு
காடு என்றால் இடுகாட்டையும், சுடுகாட்டையும் சொல்கிறீர்களோ ?”
தலைவா.......இவருக்கு வெளியுலமே தெரியவில்லை
ஹக்.ஹக்.ஹக்..................”
காடு என்றால் வனம்.  சந்தனம், சுந்தரம் , தேக்கு மரங்கள் விளைந்து நிற்கும் நிலம்
அப்படி சொல்லுங்கள்
நாம் வந்து போகும் சுவடுகள் யாருக்கும் தெரியக்கூடாது
அப்படியே தெரிந்தாலும் யாரும் யாரையும் காட்டிக்கொடுத்திட கூடாது
அப்படியே காட்டிக்கொடுத்தாலும் நான்தான் என ஒத்துக்கொள்ளக்கூடாது
ஆமாமாம் . எதற்கும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும்
அதோ பாருங்கள்!  யாரோ ஒருவர் வருகிறார்
நல்லவேளை அவரிடம் மாட்டிக்கொள்ளத்தெரிந்தோம்
“  வேறு பாதையில் சென்றுவிடுவோம்
நான் அதைத்தான் சொல்ல நினைத்தேன்
அதோ ஒரு வரப்பு தெரிகிறது. அதில் போங்கள்
அதில் போய் ?”
கிழக்கு புறமாகச்சென்று அப்படியே மேற்கு பக்கம் திரும்பி  வடக்கு போங்கள்
“  அந்த பாதையில்தான் நான் போய்கொண்டிருக்கிறேன். நீங்கள் சத்தம் போடாமல் என் பின்னால் வாருங்கள்
ஒரு நிமிடம்
என்னது ? ”
அதோ ஒரு கொட்டகை ! “
ஆமாம் தெரிகிறது. அதற்கு என்னவாம்
கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு செல்லலாம்
செல்லலாம்தான். அதற்குள் விடிந்து விடுமே
மணி எத்தனை ?“
ஒரு மணி
ஒரு மணியாகி விட்டதா? மணியானதே தெரியவில்லை. “
அப்படியென்றால் இங்கே நிற்க வேண்டாம். போய் விடுவோம்
எவ்வளவு நேரம்தான் நடந்துக்கொண்டே இருப்பதாம்? “
இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் எனக்கு வேண்டியப்பட்டவரின் கல்குவாரி வரும் . அங்கே இளைப்பாறிக்கொள்ளலாம்
நான் சொல்வதைக்கேளுங்கள். என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது. கொஞ்சநேரம் இந்த கொட்டகையில் ...............................”
இதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இவரை நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று
புதிதாக வந்தவர்.  அதான்  அவருக்கு  கால்கள் கடுக்கின்றனகொஞ்ச நேரம் அவருக்காக  இந்த கொட்டகையில் நின்றுவிட்டுதான் செல்வோமே
சரி.சரி வாருங்கள்
மெதுவாக , மெதுவாக
யார் யாரோ படுத்திருக்கிறார்கள். அவர்களை மிதித்து எழுப்பிவிடாதீர்கள்
ஒருவர் மீது ஒருவராக எத்தனைப்பேர் படுத்திருக்கிறார்கள். ! பார்க்கவே வியப்பாக இருக்கிறது
ஆமாம். வியப்பாகத்தான் இருக்கின்றது
கொட்டகைக்குள் யாரோ ஒருவர் மட்டும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு  உட்கார்ந்திருக்கிறார் . உங்களுக்கு  தெரிகிறதா?“
ஆம் தெரிகிறது ! அவரிடம் பேச்சு கொடுக்க வேண்டாம்
அவர் யாரென்று பார்க்க வேண்டாமா?  நீங்கள் இருங்கள். நான் கேட்கிறேன்
“  யாரது ? ”
“ -----------------------”
ஒரு பதிலும் வரக்காணோமே . யாரது ?“
நீங்கள் யார் ? “
நான் கேட்ட கேள்வியைதான்நீகேட்டிருக்கிறாய்? ”
இல்லை. இல்லை. நான் கேட்க நினைத்த கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்
நீ யாரென்று சொல். பிறகு நாங்கள் யாரென்று சொல்கிறோம்
நான் இந்த இடத்தின்சொந்தக்காரன். இந்த இடம் எனது பெயரில் இருக்கிறது
அப்படியானால் உங்களுக்கு  வணக்கம் . வணக்கம்
“  வணக்கம். இப்படி வாருங்கள். உட்காருங்கள்
பிறகென்னஏன் நிற்கிறோம்? வாருங்கள் உட்காருவோம்
“  இந்த இடத்தை விற்கிற யோசனை எதுவும் இருக்குங்களா?“
“  ஏன் வாங்கிற மாதிரி இருக்கீங்களா?“
இடம் பத்து வேலி அளவிற்கு இருந்தால் வாங்கிக்கொள்கிறோம் . ஒரு காலேஜ் , மருத்துவமனை கட்டிவிடலாம் . அந்த அளவிற்கு இருக்குமா ?“
ஹீ ஹீ ஹீ  “
ஏன் சிரிக்கிறீர்கள் ?”
இது வெறும் எட்டடி நிலம்தாங்களே . அதுவும் புறம்போக்கு இடத்தை வளைத்து பட்டா  மாற்றி வைத்திருக்கிறேன்
அப்படியானால்  இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இதற்கும் பக்கத்தில் கல்குவாரி, நிலக்கரி சுரங்கம் , ஆற்றுப்படுகை எதுவும் இருக்குங்களா?“
ஏன் வாங்கப்போறீங்களா ? ”
முடிந்தால் வாங்குவோம்.“
முடியலை என்றால் ?”
சுரண்டுவோம்
காட்டுகிறேன். எனக்கு எவ்வளவு தருவீர்கள் ? “
லாபத்தில் பத்தில் ஒரு பங்கு  ”
சரி . அப்படியானால் என் கூட வாருங்கள்.  ”
அமாவாசை வானம். முகத்தில் அறையும் இருட்டு. நடு ராத்திரி. மரங்கள் அசையவில்லை.கிளைகள் , இலைகளில் நித்திரை சுருக்கங்கள். ஊர் நிசப்தமயம். வடக்கு திசையை நோக்கி , அகோரப் பற்களை காட்டியபடி அவ், அவ்என எகிறும் நாய்கள். தூரத்தில் நரிகளின் ஊழையிடும் சத்தம் . ஆந்தை எழுப்பும் வி்க்கல் ஒலி வேறு.
அதோ பாருங்கள். ஆயிரக்கணக்கான பேர் நிம்மதியாக தூங்குகிறார்கள்
சோம்பேறிகள்
இதோ பாருங்கள் . நூற்றுக்கணக்கான பேர் ஆடை விலகியது கூட தெரியாமல் படுத்திருக்கிறார்கள்
அப்பாவிகள்
அய்யய்யோ ! ”
என்னது ? ”
வெள்ளி முளைத்து விட்டது  ”
அப்படியானால் பொழுது விடியப்போகிறதா?”
ஆமாமாம்
எனக்கு ஒரு சந்தேகம்
எதுவாக இருந்தாலும் வேகமாக கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறோம்
இத்தனைப்பேர் நிம்மதியாக உறங்கிக்கிடக்கையில் நாம் மட்டும் ஏன் இப்படி அலைந்து திரிய வேண்டும் ?”
காரணம் இருக்கிறது
என்ன காரணமாம் ?”
அவர்கள்  அப்பாவி மக்கள்
பிறகு  நாம் ? “
முன்னாள் மந்திரிகள்
என்ன  சத்தத்தையும் காணோம் ? ”
“ .....................”
கொக்கரைக்கோ ...............
காலை புலர்ந்து விட்டது. பேய்கள் பகலில் பேசிக்கொள்வதில்லை.

அண்டனூர் சுரா
மண்டேலா நகர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை - மாவட்டம்
613301

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக