சனி, 12 அக்டோபர், 2013

எனது வகுப்பறையில் ஒரு நாள்..................
                                                        அண்டனூர் சுரா - கந்தர்வகோட்டை
              பள்ளியில் ஆசிரியர்கள் பட்டப்பெயரால் அழைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.  அந்த வகையில் எனக்கு பல பெயர்கள் உண்டு .  அதில் ஒரு பெயர் ஆய்த எழுத்து.
      அந்த வருடத்தின் முதல் நாள் பாடவேளை அது.  நான் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தேன் . மாணவர்கள் ஆரவாரத்துடன் எழுந்து “ வணக்கம் ஐயா ” என்றார்கள் .  மானசீகமான சிரிப்புடன் அவர்களுடைய மரியாதையை ஆமோதித்தேன். மாணவர்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தவர்களை வரிசையாக உட்கார வைத்துப் பார்த்தேன். வகுப்பறை அழகாக தெரிந்தது.
         “ பிள்ளைகளே............. உங்களைப்பார்க்க உயிராகவும், மெய்யாகவும்  தெரிகிறீர்கள் ” என்றேன்.   பெண்கள் “ நாங்கள்தான் உயிர் ” என ஆர்ப்பரித்தார்கள். பதிலுக்கு ஆண்கள் “ இல்லையில்லை நாங்கள்தான் உயிர் ” என்றார்கள். வகுப்பறை ஆரவாரமாக  இருந்தது
         நான்  ஆண்கள் உட்கார்ந்திருக்கும்  பக்கம் திரும்பி “ இவர்கள்தான்  உயிர் “ என்றேன்.  பெண்களின் தலைகள் சட்டென ஒடிந்து கீழே தொங்கிப்போகின. அவர்களுடைய முகங்கள் ஏமாற்றத்துடன் தத்தளித்தன.
       “ கண்ணுங்களா............ நீங்கள்  பதினெட்டு பேர் இருக்கிறீர்கள் அதனால் நீங்கள் மெய். ஆண்கள்  பனிரெண்டு பேர் இருப்பதால் அவர்கள் உயிர் ” என்றேன். அப்பொழுது  ஒரு மாணவன் “ ஐயா......... அப்படியானால் நீங்கள் ஆயுதம் சரிங்களா? ”  என்றான். அவன் அப்படி சொன்னதும் மாணவர்கள் சில்லரைக்காசுகள் சிதறுவதைப்போல சிரித்தார்கள்.
            உயிரும் மெய்யுமாக சேர்ந்து முப்பது பேர் சிரித்தது இருநூற்று பதினாறு பேர் சிரிப்பதைப்போல இருந்தது.

                                                                                                                                          akaramblogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக