முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்டுரை நீட் - வெளியேற்றும் தேர்வு

அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் டிஷ் எழுதிய சிறுகதை இது. ‘ஸ்பீக் ஈஸி ’ ஒரு தேசத்தின் அதிபர் பிடிக்காதவர்களையும், பிடிக்காத விதிகளையும் கழற்றிவிடலாம் என நினைக்கிறார். அதற்காக அவர் சட்ட விதிகளைத் திருத்தம் செய்கிறார். அவர் செய்யும் சட்டத் திருத்தம் இவ்வாறு இருக்கிறது. ‘ பொது இடத்தில் நின்றுகொண்டு யாரும் யாருடனும் பேசிக்கொள்ளக்கூடாது. மீறி பேசுவதாக இருந்தால் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம்’. 

இக்கதையை சமீப ஒரு நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். பொது இடம் என்பது நாடாளுமன்றம். அவரவர் அறை என்பது சட்டமன்றம். சட்டமன்றத்தில் உட்கார்ந்தவாறு பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காததன் விளைவு இந்த வருடம் நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. 

சட்ட மாமேதை அம்பேத்கரிடம் கேட்டார்கள். ‘ சட்டமன்றம் பெரியதா , நாடாளுமன்றம் பெரியதா...?’. அம்பேத்கர் சொன்னார். ‘ தற்போது இருக்கும் சட்ட விதிகளின் படி சட்டமன்றமே பெரியது. மாநிலங்கள் அவர்களுக்கான உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வரைக்கும் சட்டமன்றமே பெரியதாக இருக்கும்.’ கல்வி , மாநிலப்பட்டியிலில் இருந்த காலம் வரைக்கும் மாநிலத்தின் கை ஓங்கியிருந்தது. அதை பொதுப்பட்டியலுக்கு விட்டுக்கொடுத்ததன் பிறகு கடைசி ஒரு கோழிக்குஞ்சையும் காக்கைக்கு கொடுத்துவிட்டு பரிதவிக்கும் பெட்டையைப் போலாகிவிட்டது. 

நீட்தேர்வு தமிழ்நாட்டில் நடக்குமா....?நடக்காதா...? என்கிற கேள்வி இந்த முறை பெரியதாக எழவில்லை.  ஜெயலலிதா இருந்த நாட்கள் வரைக்கும் அக்கேள்வியைக் கேட்பதில் நியாயமிருந்தது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்விற்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு போராடுவார்கள்  என எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் அவர்கள் முதலில் இந்திக்கு எதிராகப் போராடுவதா...இல்லை நீட் தேர்விற்கு எதிராகப்  போராடுவதா...என குழப்பத்தில் ஆழ்ந்துபோனார்கள். நாளை வெளிவர இருக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவாக இருக்கும் என மாநில அரசு அறிவித்ததும் அதுநாள் வரைக்கும் தலைக்கு மேல் தொங்கிய கத்தியை மறந்துவிட்டு  கை விலங்கு உடைக்கப்பட்டதற்காக நாம்  கொண்டாடத் தொடங்கிவிட்டோம். 
ரேங்க் பட்டியல் தடை, நீட் தேர்வு நடைமுறை இரண்டையும் ஒப்பீட்டு பார்க்க வேண்டியதில்லை. நடப்பு ஆண்டின் மிகச்சிறந்த சீர்த்திருத்தங்களில் ஒன்று ரேங்க் பட்டியல் தடை .  நீட் தேர்வு ரேங்க் பட்டியல் மிக விரைவில் வர இருக்கையில் அதற்கு முன்பாக இன்னொரு ரேங்க் பட்டியில் தேவையில்லை என மாநில அரசு நினைத்திருக்கலாம். இரண்டு ரேங்க் பட்டியல் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் இல்லையா!

நீட் தேர்வை விடவும் ரேங்க் பட்டியல்தான் இத்தனை ஆண்டுகள் அரசுப்பள்ளிகளை அச்சுறுத்திய பெரும் பூதமாக இருந்து வந்திருக்கிறது . நீட் தேர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு. அடுத்து அமைகின்ற மத்திய அரசிற்கு மாநில கட்சிகள் நெருக்கடி கொடுப்பதன் வாயிலாக அதை களையவோ, திருத்தவோ அல்லது மாநில அரசிற்கான உரிமையாக அதைத்  தக்க வைத்துகொள்ளவோ முடியும்.  மேலும் எதிர்காலத்தில் இந்திய முழுமைக்கும் ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடத்துவதில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது. இதனால் நீட் தேர்வு தடைபட வாய்ப்பும் உண்டு. இந்திய பொதுத்தேர்தல் ஆறு, ஏழு கட்டங்களாக நடக்கையில் நீட் தேர்வை எப்படி இந்திய முழுமைக்கும் ஒரே நேரத்தில் நடத்திட முடியும்....? அது நடைமுறை சிக்கல்கள் நிறைய கொண்ட ஒரு சவாலான முயற்சியே. 

நீட் தேர்வில் மிகச்சரியாக பத்து மணிக்கு தொடங்குவதாக வைத்துகொள்வோம். அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் பத்து மணிக்கும் குஜராத் மாநிலத்தின் பத்து மணிக்கும் இடைப்பட்ட  நேர வித்தியாசம் ஐந்து நிமிடங்கள். அதாவது , நீட் தேர்வு வினாத்தாள் தேர்வு தொடங்கிய உடன் வாட்ச் அப்பில் வெளியாவதாக வைத்துகொண்டால் குஜராத் மாணவருக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே அக்கேள்வித்தாள் கிடைத்துவிட வாய்ப்புண்டு. அதாவது பூமியின் சூழற்சியை விடவும், தொழிற்நுட்ப சுழற்சி விரைவானது. பத்தாம் வகுப்பு மாணவர்கள்  பொதுத் தேர்வு எழுதுகையில் மாடிகளில் ஏறி சன்னல் வழியே புத்தகம் கொடுத்த பீகார் மாநிலத்திற்கும் , தேர்வுகளை எந்தச்சந்தேகத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றாக நடத்தும் கேரளத்திற்கும், எந்த நேரத்திலும் தேர்வு தடைபட வாய்ப்புண்டான சட்டீஸ்கர் மாநிலத்திற்கும், மாநிலத்தில் உள்நாட்டு கலவரம் இல்லாத நாட்களில் மட்டுமே தேர்வு நடைபெறும் சாத்தியக்கூறுகள் கொண்ட காஷ்மீர் மாநிலத்திற்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தேர்வு நடத்த முடியும் என்பது இந்தியாவை ஒரே நாளில் ‘நீட்’டல் அளவையில் அளப்பதற்கு ஒப்பானது. 

நீட் தேர்வு தமிழகத்தில் கூடாது என்கிற உரிமைக்குரல் நியாயமானது. அதே நேரம் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதில் வெற்றியாளராக நீந்திவரும் கற்பித்தல், மற்றும் பாடத்திட்டத்தை நம் மாநில அரசு கொண்டிருக்க வேண்டும் என்பது இனி வரும் காலங்களில் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.  மத்திய அரசு இந்த ஆண்டு திடீரென நடைமுறைப் படுத்தியிருக்கும் நீட் தேர்வு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்திருக்கவில்லை. இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை இடங்களை அபகரிக்கும் ஒரு வெளிப்படையான அணுகலாகவே இதைப் பார்க்க முடிகிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு தொடங்கியது இல்லை. சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே மருத்துவ கல்வி எல்லோருக்குமான கல்வியாக இருந்திருக்கவில்லை. 
ஆங்கில பழமொழி ஒன்று உண்டு. ‘ புது விளையாட்டு ஒன்றினை கண்டுப்பிடிக்கும் ஒருவன் வெற்றிப்பெறுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் வைத்துகொண்டே அதை அவன் உருவாக்குவான்..’ அவ்வாசகத்தின் படிதான் அன்றைய ஐ.சி.எஸ் தேர்வு , மருத்துவத் தேர்வும் நடந்தது. இன்றைக்கு நீட் தேர்வு அப்படியாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது.
இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டத்தின் அடிப்படையில் 1830 ஆண்டு அலோபதி மருத்துவ பயற்சி கொண்டுவரப்பட்டது. அதன் பொருட்டு 1831 ஆம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜும் தொடங்கப்பட்டது. இக்காலேஜில் பயிற்சிப் பெற்றவர்கள் மேல் நாட்டவரும், பிரிட்டிஷ்காரர்களுமாக இருந்தார்கள். அடுத்தடுத்து இந்தியாவில் பல மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட இந்தியர்களுக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டிருந்தது. அவ்வாய்ப்பை பிராமணர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். அதற்காக அவர்கள் ஒரு புது விதியொன்றை திணித்தார்கள். அவ்விதி ‘அலோபதி மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்’. 
 
அலோபதி மருத்துவம் இந்தியாவில் காலூன்றும் வரைக்கும் மருத்துவம் என்பது ஆதி மருத்துவ குடிகளால் பார்க்கப்பட்டு வந்தது. அதாவது இன்றைக்கு நாவிதர்களாக இருப்பவர்களின் குலத் தொழிலாக அது இருந்தது. மருத்துவத்தை குலத்தொழிலாகப் பார்த்துவந்தவர்கள் ஒரு கட்டத்தில் அவர்களும், அவர்களைப்போல கை வைத்தியம், அகத்தியர் வைத்தியம், நாட்டு வைத்தியம்,..பார்த்துகொண்டிருந்த பலரும் அலோபதி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க போட்டியிட்டார்கள். அவர்களின் போட்டியை சமாளிக்க அன்றைய பிராமணர்களால் கொண்டுவரப்பட்ட விதிதான் மருத்துவம் படிக்க  சமஸ்கிருதம்  தெரிந்திருக்க வேண்டும் என்பது. அவ்விதியின் படி நீதிக்கட்சி ஆட்சி வரும்காலம் வரைக்கும் சுமாராக தொண்ணூறு ஆண்டுகள் பிராமணர்களே மருத்துவம் படித்து வந்தார்கள். 
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் 1923 - ஆம் ஆண்டு பனகல் அரசர்  முதலமைச்சராக உட்கார்ந்ததும் மெட்ராஸ் யுனிவர்சிட்டி சட்டம் - 1923 என்கிற சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி ‘ மருத்துவம் என்பது அறிவியல் பூர்வமானது. இதற்கும் சமஸ்கிருதத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. பிராமணரல்லதோர் மருத்துவ கல்வி படிக்க தடுக்கும் இந்த சமஸ்கிருதம் புகுத்தல் அடியோடு நீக்கப்படுகிறது என பிராமணர்களின் எதிர்ப்பையும் மீறி பனகல் அரசர்  சட்டத் திருத்தம் செய்தார். இச்சட்டத்திருத்தம் நீதிக்கட்சியால் செய்யப்பட்ட மிக முக்கியமான சட்டத்திருத்தம் ஆகும். 
மருத்துவம் படித்த மருத்துவர்களை விடவும் ஆதி மருத்துவர்களின் கை வைத்தியமே அன்றைக்கு மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. பிராமண மற்றும் பிராமணரல்லாத அலோபதி மருத்துவம் உயர் ஜாதிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கும் வேலையைச் செய்திருந்தார்கள். ஆனால் பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட குடிகள் ஆதி மருத்துவர்களை நாடிச் சென்றுகொண்டிருந்தனர். ஆதி மருத்துவர்கள் தமிழ் மருத்துவ முறையைக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் அலோபதியில் அறுவைச் சிகிச்சை வருவதற்கு முன்பே அறுவைச்சிகிச்சை மருத்துவத்தில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். மூக்கு , காது, வாய் அறுபட்டு வந்தவர்களின் உறுப்புகளை எடுத்து உரிய இடத்தில் வைத்து ஒட்டும் மருத்துவ அறிவு அவர்களிடம் இருந்தது. 
ஆதி மருத்துவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையைக் கொண்டிருந்தார்கள். உடல் உபாதைகளுக்கும், உணவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அவர்களின் வாதம். ஆனால் அன்றைக்கு தென் இந்தியாவில் கால் ஊன்றிக்கொண்டிருந்த சைவர்கள் உடல் உபாதைகளுக்கு காரணம் கடவுள்தான் என்றிருந்தார்கள். ஒருவருக்கு உடல்நலம் குறைவு என்றால் ஆதி மருத்துவர்கள் கசாயம், மூலிகை, நாட்டு மருத்துகளால் குணப்படுத்தும் வேலையைச் செய்திருந்தார்கள். ஆனால் சைவர்கள் தேவராம், திருவாசகம் பதிகம் பாடி நோயிலிருந்து நோயாளியை மீட்டெடுக்கும் வேலையைச் செய்திருந்தார்கள். இருவருக்கிடையிலும் காலப்போக்கில் பகை வளரத் தொடங்கியது. 
இதற்கிடையில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் வேதாரண்யத்தில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது மதுரையை ஆண்ட கூன்பாண்டினை வெப்பு நோய் கண்டது. வெப்பு நோய் என்பது உடம்பில் தானே தீப்பிடித்து எரிவதைப் போன்ற நோய் அது. இந்நோய் இன்றைக்கும் இருக்கிறது. சமீபத்தில் என் உறவினர் ஒருவர் திடீரென்று கால்கள் தீப்பிடித்து எரிவதைப்போன்றிருக்கிறது எனத் துடித்தார். அவரைத் தூக்கிக்கொண்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு ஓடினோம். வலது கால் பாதத்திலிருந்து மேல் நோக்கி கறுத்துகொண்டு வந்தது. மருத்துவர்களுக்கு நோயின் தன்மைப்பற்றி புரிந்திருக்கவில்லை. காலையில் கணுக்கால் வரைக்கும் இருந்த கறுப்பு, மதியம் முழங்கால் வரைக்கும் வளர்ந்திருந்தது. மருத்துவர்கள் கூடி விவாதித்து தொடையோடு காலை வெட்டி எறிந்துவிட்டார்கள். திரும்பவும் தொடைப்பகுதி கறுத்துகொண்டு மேலே வந்தது. அவரைத் தூக்கிக்கொண்டு சென்னை புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனைக்கு ஓடினோம். அவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்றால் இவரைப் போல பலரும் ஒரு கால், இரு கால்களை இழந்து பரிதாபமாக கட்டிலில் கிடந்தார்கள். என் உறவினரின் தொடையை இன்னும் சற்று மேலே அறுத்து இனி கவலைப்படுவதற்கு ஒன்றில்லை என வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள் . 

ஒரு மருத்துவர் சொன்னார் ‘ இது ஒரு வகை இரத்தம் அடைப்பால் வரும் உடல் வெப்பம் நோய்.  புகைப்பிடிப்பு, மது அறுந்துவதால் வருகிறது. இதுவே இதயத்தில் வந்தால் உயிர் போய்விடும். காலில் வந்திருப்பதால்  பிழைக்க வைத்துவிட்டோம்....’ . அந்நோயினால் இரண்டு கால்களையும் இழந்திருந்தவர் சொன்னார் ‘ இது வெப்பு நோய், கூன்பாண்டியனுக்கு வந்தது. அவர் திருஞான சம்பந்தர் காலில் விழுந்து திருநீறு பூசிக்கொண்டதும் அந்நோய் அவரை விடுத்து சென்றுவிட்டது. அதுவே எனக்கு திருநீறு பூசியும் கால்களை எடுக்க வேண்டாகி விட்டது’ என்றவாறு அவர் அந்த வலியிலும் சிரிக்கச் செய்தார். 
கூன்பாண்டியனுக்கு வந்திருந்த வெப்பு நோய் திருஞானசம்பந்தர் விட்ட சாபத்தால் வந்தது என்கிறது பெரியபுராணம். புராணத்தின் படி திருஞானசம்பந்தர் பாண்டியன் நாட்டிற்கு வருகைத்தருகிறார். கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்கரசி சைவத்தின் மீது பற்றுடையவராக இருக்கிறார். ஆனால் கூன்பாண்டியன் சமணம் சமயத்தைச் சார்ந்தவர். திருஞானசம்பந்தர் என்கிற சிறுவன் மதுரைக்குள் வந்ததும் சமணர்கள் ‘அவனை கண்களால் பார்ப்பதே கூடாது’ என எச்சரிக்கை செய்கிறார்கள். அச்சிறுவன் தங்கியிருந்த அறைக்கு இரவில் தீ வைக்கிறார்கள். அத்தீ அச்சிறுவனை ஒன்றும் செய்யவில்லை. விடிந்து பார்க்கிறான் திருஞானசம்பந்தர். தன் அறைக்கு தீ வைத்த கோபத்தில் கூன்பாண்டியன் மீது சாபம் விடுகிறார். அதுதான் கூன்பாண்டியனின் வெப்பு நோய். 
இதற்கு முன்பு அப்பருக்கும் இதே வெப்பு நோய் இருந்திருக்கிறது. அவருக்கு யார் சாபம் விட்டதென்று புராணத்தில் குறிப்பு இல்லை. அப்பர் வெப்பு நோயைத் தணித்துக்கொள்ள திலகவதியார் கால் விழுந்து புரண்டு திருநீறு பூசிக்கொள்கிறார். அவரது வெப்பு நோய் தணி்ந்துவிடுகிறது. அப்பரின் தணிப்பைச் சொல்லி மங்கையர்கரசி தன் கணவனை திருஞானசம்பந்தரிடம் அழைத்துசென்று திருநீறு பூசி வெப்பு நோயிலிருந்து மீள்கிறார். இதன் பிறகு கூன்பாண்டியன் சைவ மதத்தில் சேர்க்கிறார். அவருடன் சேர்ந்து சைவ மதம் தழுவாத சமணர்களை சைவர்கள் கழுவேற்றிக் கொன்றார்கள் என்கிறது பெரியபுராணம். 
இக்கோரச்சம்பவம் ஆதாரம் அற்றது எனச் சொல்பவர்களும் உண்டு. ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கழுவேற்றிக்கொன்ற செய்தி ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது. கழுவேற்று மரங்கள் இராமநாதபுரம் உட்பட பல இடங்களில் வழிப்பாட்டு அடையாளமாகியிருக்கிறது. புராணக்கதை இவ்வாறு இருக்க ஆதி மருத்துவர்களின் வாய்வழிக்கதைகளும், போராட்ட களமும் வேறொரு கதையைச் சொல்லிச் செல்கிறது. 
ஆதி மருத்துவர்களே சமணர்கள். இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள். கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் வருகிறது. பாண்டியன் சிகிச்சைப் பெற்றுக்கொள்ள சைவர்களிடம் செல்கிறான் . சைவர்கள் திருமந்திரம் பாடுகிறார்கள். நோய் தணியவில்லை. பிறகு அவன் சமணர்களிடம் செல்கிறான். அவர்களின் மூலிகை மருத்துவத்தால் பாண்டியன் குணமாகிறான். சமணர்களின் மருத்துவ அறிவு சைவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. அவர்களை கழுவேற்றிக்கொள்கிறார்கள். கூன்பாண்டியனை மன்னித்து சைவத்தில்  சேர்த்துகொள்கிறார்கள். அன்றைக்கு கழுவேற்றப்பட்ட சமணர்கள் ஆதி மருத்துவர்கள். 

இது நடந்ததாக கூறப்படுவது ஏழாம் நூற்றாண்டு. இதற்கு பிறகும் ஆதி மருத்துவர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் உடம்பில் காயம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் அந்த இடத்திலிருக்கும் முடியை மழித்து மருந்துவிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மருத்துவத்தை மற்றக்குடிகள் மெல்லக் கற்றிருந்த போதிலும் உடல் காயம் ஏற்பட்ட இடத்திலிருக்கும் முடியை மழிக்க அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆதி மருத்துவர்களை அழைத்து முடிகளை மழிக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிறகு அதுவே அவர்களின் தொழிலாகியிருக்கிறது. 
இன்றைக்கு ஆதிமருத்துவர்கள் அம்பட்டர், நாவிதர், நாசுவர், பரியாரி, பண்டுவர், பண்டிதர், குடிமகன், பார்பர்....என பல பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ' மருத்துவர் சாதி' எனச் சாதி  சான்றிதழ் பெற அவர்கள் நடத்திய போராட்டம் மிக நீண்டது. 

சைவர்களின் மந்திரங்கள் ஆதி மருத்துவர்களின் மருத்துவத்திற்கு முன் தோற்றுப்போயிருக்கிறது. ஆகவே அவர்களின் முகத்தில் விழிப்பதற்கும் அவர்களை கழுவேற்றிக் கொன்ற குற்ற உணர்வாலும் அவர்களை பார்த்தாலே தம் குடிகளுக்கு ஆகாது என முடிவு செய்தவர்கள் ஆதி மருத்துவர்களை நாவிதர்களாகவும் தாழ்க்குடிகளாகவும் அறிவித்தார்கள். இன்றைக்கும் ஆதி மருத்துவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லப்படுகிற சவரத் தொழிலாளர் குடிகளும் சைவ வழி பிராமணர்களும் ஒரே ஊரில் இருப்பதில்லை . 

இச்சம்பவத்திற்கும் நீட் தேர்விற்கும் என்னத் தொடர்பு இருக்கப்போகிறது...? என மேலோட்டமாக நினைத்துவிடமுடியாது. மநு தர்மத்தின்படி சாதிக்கட்டமைப்பு எப்படி முக்கோணமானதாக இருக்கிறதோ அப்படியாகவே அறிவுசார் உலகமும் இருக்கிறது.  அறிவுசார் உலகத்தில் மருத்துவர்களே உச்சம். மாதா, பிதா, குரு, மருத்துவர்  என்பது  நவீன தத்துவம். சாதி கட்டமைப்பில் உச்சத்தில் இருக்கும் ஒருவர் அறிவு சார் உலகின் உச்சமென இருக்கும் மருத்துவத் துறையை எட்டுவதன் மூலமே அவரவர் கட்டி வைத்திருக்கும்  சமூக கட்டமைப்பை தக்க வைத்துகொள்ள முடியும். இதன்பொருட்டுதான் ஆயிரத்து எண்ணூற்று முப்பதுகளில் பிராமணர்கள் மட்டும் அலோபதி மருத்துவம் படிக்க வாய்ப்பாக சமஸ்கிருதம் மொழியை வைத்திருந்தார்கள். 

இன்றைக்கு  தேர்வை அப்படியாக பார்க்க வேண்டியதில்லை. ஆனால்' நீட் ' தேர்வின் போக்கு  கால ஓட்டத்தில் இந்தியில் வந்தே நிற்கும். உதாரணமாக இன்றைக்கு ஆங்கிலம் , தமிழ் இரு மொழி வினாத்தாளில் மொழிப்பெயர்ப்பில் குளறுபடிகள் ஏற்படுகையில் ஆங்கில வழிக் கேள்வியே பிரதானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்படியாக இந்தி மாறலாம். அட்டவணைப் பிரிவினர் அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டைத் தாண்டி பொதுப் பிரிவில் கூடுதல் இடங்களைப் பிடிப்பார்களேயானால் அவர்களின்  இட ஒதுக்கீடு முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்புண்டு.  இப்பொழுது முதுகலை மருத்துவ படிப்பிற்கு இட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது.  இதையும் தாண்டி அட்டவணைப் பிரிவினர் நீட் தேர்வில்  பெரும்பான்மை இடங்களைப் பிடித்தால் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுத முடியும் என அறிவிப்பு வரவேச் செய்யும்.
          
மருத்துவ துறையில் பிரசித்தி பெற்ற வாசகம் ஒன்றுண்டு 'எல்லா உடலும் போதுமான அளவிற்கு எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கிறது'. அந்த எதிர்ப்பு சக்தியைக் கொண்டு நாம் நோயை மட்டுமே விரட்ட வேண்டுமா என்ன..!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...