வெள்ளி, 9 ஜூன், 2017

மிகத் துல்லியமானத் தாக்குதல்

மிகத் துல்லியத் தாக்குதல்         
       பச்சையும் சாம்பலுமான சீருடையை உடுத்திக்கொண்டு இமயமலையின் அடிவாரத்தில் தவழ்ந்து, மறைந்து தான் வைத்திருக்கும் உலகத் தரமானத் துப்பாக்கிக்கு எவனேனும் ஒருவன் தீவிரவாதி என்கிற பெயரில் இரையாகக் கிடைக்கமாட்டானா....என இந்திய இராணுவத்தினர் தேடுவதைப்போலதான் அன்ஸர் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான். எந்த மூலையிலிருந்தும் அழுகையாக, ஓலமாகக் கிடைத்தாலும் போதும் என்றளவில்தான் அவனது தேடல் இருந்தது.
       வாழ்கிறோம்...என்கிற பெயரில் ஒரு நாளைக்கு எப்படியேனும் பத்து முறையேனும் செத்துவிடும் எத்தனையோ காஷ்மீரிகளில் அவனும் ஒருவன். உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களில் ஒன்றாக அவனுடைய மாநிலம் இருக்கிறது. இந்தியாவின் மொத்த பனியும் அங்கேதான் கொட்டுகிறது. ஆனால் பனியினாலான நடுக்கத்தை விடவும் பயத்தினாலான நடுக்கமே அவனை பெரிதும் நடுக்கிக்கொண்டிருந்தது. இந்திய வரைபடத்தில்தான் அதன் பெயர் காஷ்மீர். ஆனால் அதன் வாசிகள் அழைப்பது என்னவோ பள்ளத்‘தாக்கு என்றுதான்.  
       அன்ஸரின் தாய் உறவு சர்வதேச எல்லை முள் வேலிக்கு அப்பால் இருக்கிறது. தந்தை உறவின் கீழ் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவன் வாழ்ந்துகொண்டிருந்தான். உலகின் ஏதேனும் ஒரு மூலையில் ஒரு புது ரகத் தோட்டா, துப்பாக்கி, பீரங்கி, ஆளில்லா இயங்கும் போர் விமானம், ராக்கெட் கண்டுப்பிடிக்கப்பட்டு சந்தைக்கு வராத நாட்களில் அவனுக்கான வாழ்க்கை அவனிடம் இருந்தது. மற்ற நாட்களில் முகுளத்தையும் நடுங்கச் செய்யும் நடுக்கம்தான்!
       ராஜஉரி, பூஞ்ச், குப்வாரா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவசரக்கால வாகனங்களுடன் , இராணுவ வாகனங்கள் மட்டும் சாலைகளில் இயங்கிக்கொண்டிருந்தன. சாலை முழுவதும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். முக்கத்திற்கு முக்கம், திருப்பம், பள்ளி வாசல், கோயில், கல்விச்சாலை, அங்கன்வாடி, அங்காடி,..என ஓரிடம் தவறாமல் இராணுவத்தினர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைத் தவிர பொது மக்களின் நடமாட்டம் அறவே அற்றிருந்தது. அவரவர் ஏதேனும் ஒரு மறைவிடத்தில் தொலைத்த அமைதியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து அன்ஸர் அவனுக்கான அமைதியைத் தேடிக்கொண்டிருந்தான்.
       அவனுக்கான அமைதி புது மனைவியிடத்திலிருந்தது. திருமணம் நடந்தேறிய அன்றையத் தினமே அவன் மூளையை மட்டும் வைத்துகொண்டு இதயத்தை மனைவியிடம்  கொடுத்துவிட்டிருந்தான். அந்த இதயத்தைதான் அவன் ஓரிடம் விடாமல் தேடிக்கொண்டிருந்தான். இதயத்தைத் தேடி இரத்தம் தமனி, சிரைக்குள் ஓடுவதைப்போல அவன் மனைவியைத் தேடி ஓடிக் கொண்டிருந்தான்.
       சர்வதேச எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள பூஞ்ச் மற்றும் ராஜஉரி மாவட்டங்களுக்கிடையில் ஒரு மலையின் அடிவாரத்தில் அவனுடைய ஊர், தெரு, வீடு இருக்கிறது. அவன் தேடுவதை ஒரு கனம் நிறுத்தி நின்று நிதானிப்பானேயானால் அவனது கிராமம் பூஞ்ச் மாவட்டத்தில் பாஞ்ச்கிரியான் எனத் தெரியவரும். அவனுக்கு ஏது நேரம்....அவனிடமிருந்த ஒவ்வொரு நொடியும் மனைவியைத் தேடிக் கண்டுப்பிடிப்பதிலேயே கழிந்துகொண்டிருந்தது.
       மனிதனுக்கு இரண்டு காதுகளின் அவசியம் காஷ்மீரிகளுக்கு தேவையென இருந்தது. ஒரு காது பாகிஸ்தானிற்கு. இன்னொன்று இந்தியாவிற்கு. ‘ வாழ்கிற நாள் வரைக்கும் இந்தியா என்கிறப் பெயரை உச்சரிக்கக்கூடாது...’ என்கிறது பாகிஸ்தான். ‘ சாகும் பொழுதும் பாகிஸ்தானை நினைக்கக்கூடாது...’ என்கிறது இந்தியா. இரண்டு காதுகளையும் ஏறாமல் இறங்காமல் பார்த்துகொண்டவர்கள் மட்டும் பள்ளத்தாக்கில் தப்பிப்பிழைத்துகொண்டிருந்தார்கள்.
.      அன்ஸர் தூங்கி இரண்டு வாரங்களாகி விட்டிருந்தன. மனைவியின் இதமான வெப்பம், குளிரை உடைக்கும் அவளது மூச்சுக்காற்று இல்லாமல் அவனால் தூங்கமுடியவில்லை. மனைவியைத் தொலைத்தத் துயரம் உச்சந்தலையைத் தொட்டு பாதங்களில் இறங்கியது. எப்படியேனும் மனைவியைத் தேடிக் கண்டுப்பிடித்திட வேணும் என்கிற வேட்கை மட்டும் தொண்டைக்கும் நெஞ்சிற்குமிடையில் உருண்டுக்கொண்டிருந்தது. நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவைப் பற்றியும், அது கொடுக்கும் எச்சரிக்கைப்பற்றியும் அவன் தெரிந்து வைத்திருக்கவில்லை. கிளை மறைவில் இலைகளுக்கிடையில் தொங்கும் ஆப்பிளைத் தேடுவதைப்போலதான் அவன் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான்.
       ‘ அன்ஸர்...இவள்தான் உன் மனைவி....நான் சொல்வதை நீ நம்பு..’ அவனுக்கு நெருக்கமானவர்கள் ஒரு பாஷ்மினா கம்பளி உடுத்தியவளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.‘இதோ...நீ அவளுக்கு வாங்கிக்கொடுத்த பர்தா, சால்வை... இவள்தான் உன் மனைவி....’ என்றவாறு உறவினர்கள் சிரத்தை எடுத்து விளக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களது விளக்கத்தை அவன் சட்டென உதாசீனப்படுத்தினான்.‘ இவள் என் மனைவியாக இருக்க முடியாது. என் மனைவி எதோ ஓரிடத்தில் ஒழிந்திருக்கிறாள்...அவளை நான் எப்படியேனும் தேடிக்கண்டுப்பிடிப்பேன்...’ என்றவன் அவர்களிடமிருந்து விலகி அவன் சந்தேகப்படுமிடங்களில் தேடிக்கொண்டிருந்தான்.  
       மட்டைப்பந்து விளையாடுகையில் இழுத்து அடிக்கப்பட்டப் பந்து பவுண்டரிக்கு வெளியே சிக்ஸர்களாக விழுவதைப்போலதான் பீரங்கிக்குண்டுகள் ஆங்காங்கே விழுந்துகொண்டிருந்தன. கிழக்கிலிருந்து மிகச்சரியாக இலக்கு நோக்கி சீறிப்பாயும் குண்டுகள் கில்லட், ஹுன்சா, நாகர்,ஸ்கர்டு  எல்லைக்குள் விழுந்து உயிரைக் கழுவிக்குடித்துகொண்டிருந்தன.
       காஷ்மீர், ஜம்மு இரண்டும் இரு வேறு நிலம். இது பள்ளம், அது மேடு. காஷ்மீரில் பனி பெய்தால் ஜம்முவில் வெயில் அடிக்கும். காஷ்மீரில் போர் என்றால் ஜம்முவில் ஓரளவேணும் அமைதி நிலைக்கொண்டிருக்கும். ஆனால் பாகிஸ்தான் இந்தியா மீது தொடுத்த உரி தாக்குதலுக்கு பிறகு இரு நிலங்களின் காதுகளிலும் எறும்பு புகுந்து அமைதியைத் தொலைத்திருந்தன.
       இந்திய இராணுவம் பாகிஸ்தான் நோக்கி விட்டெறிந்து மிர்பூரில் விழுந்து வெடிக்காதக் குண்டுகள் ராஜஉரிக்கு திரும்பி வந்தன. அதன் குலைநடுக்கம் பூஞ்ச் வரைக்கும் இருந்தன. பூஞ்ச் மக்கள் ராஜஉரிக்கு இடம்பெயர்ந்தார்கள். ராஜஉரியினர் பூஞ்ச்க்கும்,. ராம்கார் சம்பாவிற்கும், சம்பா மக்கள் ஜம்முவிற்கும் ஜம்முவினர் ராம்காருக்குமாக மூட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கடலின் அடியில் இடம்பெயரும் சுழற்சி நீரோட்டம்  பள்ளத்தாக்கு மக்களிடம் நடந்துகொண்டிருந்தது.
            அன்ஸர் தேடலில் இந்து , முஸ்லீம், புத்தம் பாகுபாடு பார்க்கவில்லை. சன்னி , ஷியா , குஜ்ஜார் என பிரிக்கவில்லை. அவன் ஒவ்வொரு தெரு, வீடாக நுழைந்து அவனுக்கானவளைத் தேடிக்கொண்டிருந்தான். ஹரிசிங் வம்சாவளிகள் அதிகம் வாழும் சிங் வாழ் பகுதிகளில் முதலில் தேடினான். ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் தட்டி அவன் கையில் வைத்திருக்கும் மனைவியின் புகைப்படத்தைக் காட்டி ‘ இவள் இங்கே எங்கேனும் ஒழிந்திருக்கிறாளா...?’ எனக் கேட்டான். ஒரு வீடு தவறாமல் கேட்டுக்கொண்டு வந்தவன் உலகின் அமைதி விரும்பிகள் எனச் சொல்லிக்கொள்ளும் புத்தப்பிட்சுகளின் வீட்டுக் கதவுகளை அவன் தட்டத் தயங்கவில்லை.
       குஜ்ஜார் இன மக்களுக்கு இஸ்லாமியர்களை அவ்வளவாகப் பிடிக்காது. அவர்கள் இந்திய நலன் விரும்பிகள். காஷ்மீரை கடைசியாக ஆண்ட ஹரிசிங் மன்னரின் அமைச்சர் பொறுப்புகள் அத்தனையையும் அனுபவித்தவர்கள். இன்றைக்கும் அவர்களது ஆதரவு இல்லாமல் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் குளிர் மற்றும் கோடைக்கால சட்டசபையை நடத்திட முடியாது. அவர்களின் கடைத்தெருக்கள், குடியிருப்பு , அலுவலகத் தெருக்களில் நுழைந்து மனைவியின் வயது, அடையாளங்களைச் சொல்லி மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான். குஜ்ஜார் வாழ் தெருக்களை முடித்து இந்து வாழ் குடியிருப்பிற்குள் நுழைந்தான். அதிலும் சைவம், வைணவம் என்கிற பாகுபாட்டுடன் கூடிய தெருக்களாக இருந்தது. அதற்குள்ளாகத் தேடினான்.
       அடுத்து அவன் இரண்டு குன்றுகளைக் கடந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியினர் அதிகம் வாழும் உதாம்பூர் மாவட்டத் தெருக்களுக்கள் நுழைந்தான். பல பள்ளங்களில் இறங்கி ஏறி ஒரு காலத்தில் ஹிஸ்ப் - உல்- முஜாஹிதீன் அமைப்பினர் அதிகமாக நடமாடிய வீதிகளில் துலாவினான். லஷ்கர் - இ- தொய்பாவினர் மறைந்திருந்த இடம் எனச் சொல்லிக்கொள்ளும் மலையின் அடிகார குடியிருப்புகளில் தேடினான். ஹர்கத் - உல்- அன்ஸர், ஜெய்ஷ் - இ- முகமது, ஹர்கத் - உல்- முஜாஹிதீன், முஸ்லீம் விடுதலைப்படை, தலிபான், அல் - ஃபத்தா, அல் - ஃபரன், டுக்தரன் - இ- முல்லத், அல் - ஜிஹாத், ஜமாய்த் - உல்- முஜாஹிதீன், அல் - பதர், அல் - பர்க்,  ஹிஸ்புல் மோமினின், தரிக் -இ- ஜிஹாத், ஹிஸ்புல்லா, ஐக்கிய ஜிகாத் குழு, ஹர்கத் -இ- ஜிகாத்- இ- இஸ்லாமி, இஸ்லாமிய முன்னணி, இக்வான் உல் முஸ்லிமீன், , காஷ்மீர் விடுதலை ஜிஹாத், ... என பிரிவினைவாதிகள் அவ்வபோது தலைத்தூக்கிய இடங்களிலெல்லாம் ஒரு பதட்டமுமில்லாமல் தேடினான்.
       வானம் விட்டுவிட்டு தூரிக்கொண்டிருந்தது. ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு மூதாட்டி செம்மறி கூட்டத்தை மேய்த்துகொண்டிருந்தாள். செம்மறிகள் ஒன்றோடொன்று முட்டி, மோதி விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு செம்மறியின் முதுகில் இரண்டு ஆட்காட்டிக்குருவிகள் உட்கார்ந்து கொண்டு தன் வாயிலிருந்த இரையை அதன் ஜோடிக்கு ஊட்டிக்கொண்டிருந்தது. இன்னொரு மரத்தில் இரண்டொரு குருவிகள் ஒன்றையொன்று கொத்தி கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்தன. அதனைப் பார்த்ததும் அவனுக்கு அவன் மனைவி ஞாபகத்திற்கு வந்தாள். மனைவி தோளில் கையைக் கிடத்திக்கொண்டு நடப்பதும், சிரித்து விளையாடுவதுமான நினைவுகள் அவனுக்கு வந்தன.
       அவன் செம்மறி மேய்த்துகொண்டிருந்த அந்த மூதாட்டியிடம் சென்றான். ‘ என் பெயர் அப்பாஸ் அன்ஸர்...இந்த படத்தில் இருப்பவள் என் மனைவி. பெயர் ஸர்மத் நிஷா. வயது இருபத்து ஐந்து. இருவரும் நிக்காஹ் செய்துகொண்டு ஒரு மாதமாகிறது. புகைப்படத்தில் இருப்பதை விடவும் அழகாக இருப்பாள். மேலுதட்டில் ஒரு மச்சமிருக்கும். சிரிக்கையில் கன்னங்களில் குழி விழும். அரபி பேசுவாள். உருது பேசுவாள்... இந்தி தேவையானளவிற்கு தெரியும்...இவளை எங்கேனும் பார்த்தீர்களா....?’ எனக் கேட்டான். அவள் தலை பர்தாவை ஒரு முறை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டு புகைப்படத்தைத் துலாவிப்பார்த்தாள். அவனைப் பார்த்தபடி உதட்டைப் பிதுக்கினாள்.
       அன்ஸர் மனம் போனப்போக்கில் நடந்தான். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு போக வேண்டிய வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாகனத்திற்கு முன்பும் ஒரு இராணுவன் துப்பாக்கி ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தான். அவர்களிடம் புகைப்படத்தைக் காட்டி கேட்டான். வானகங்களில் ஏறிக் குதித்து மனைவியைத் துலாவினான்.
       சன்னி முஸ்லீம் குடியிருப்பிற்குள் நுழைந்தான். முஜாஹிதீன் தெரு, லஷ்கர் வீதி, ஜிஹாத் குடியிருப்பு, பதர்வாசிகள் வாழும் பகுதி, பர்க் நிலம், ஃபத்தா குறுக்குச்சந்து, ஃபரன் சதுக்கம், மில்லத் தெரு,...என ஒவ்வொரு தெருவாகக் தேடிக்கொண்டு வந்தவன் ஷன்னி குடியிருப்பிற்குள் நுழைந்தான்.
       குஜ்ஜார், சன்னி , இந்து குடியிருப்புகளில் இருந்த பரபரப்பு ஷியா வாழ் பகுதியில் இல்லாமலிருந்தது. அவர்கள் காஷ்மீருக்கு விழுந்திருந்த தலையெழுத்தை நினைத்து முகத்தில் துக்கம் சூழ உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் வாசலில் நின்றுகொண்டு அவன் மனைவியின் பெயரைச் சொல்லி உரக்கக் கத்தினான். ‘ என் தங்கமே....ஸர்மத் நிஷா நீ எங்கேயடி இருக்கிறாய்....? என் அமைதியைப் பறித்துக்கொண்டு நீ எங்கேயடி போனாய்....? தயவுசெய்து என்னை நீ அலையவிடாதே... வெளியில் வா....’ என்றவாறு கண்ணீர் கம்பலையுடன் அவன் அடித்தொண்டையிலிருந்து எழுந்த பிரவாகத்தால் கூப்பிட்டான்.
       அவனால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அவனுக்கு மயக்கம் வருவதைப்போலிருந்தது. ஒரு மரத்தடியின் கீழ் படுத்தான். அவனுக்கு தூக்கம் வரவில்லை. அவனது மனவோட்டத்தில் மனைவி கூப்பிடும் தூரத்தில் எதொவொரு இடத்தில் அவள் இருக்க வேண்டும் என அவனது ஆழ்மனம் உறுத்தியது. தலையில் கவிழ்த்திருந்த குல்லாவை எடுத்து இடுப்பில் சொறுகிக்கொண்டு புரண்டுப் படுத்தான்.
       ஒரு இராணுவன் துப்பாக்கியை ஏந்தியபடி பூட்ஸ் காலால் அன்ஸரை உதைத்து எழுப்பினான். அவன் திடுக்கென விழித்தான். ‘ என் மனைவி கிடைத்திட்டாளா....?’ கண்களை அகல விரித்துக் கேட்டான். அந்த இராணுவன் அவனை ஒரு முறை முறைக்கப் பார்த்துவிட்டு ஓரடி தள்ளி நின்றான். அன்ஸர் எழுந்தான். தன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து கத்தையாக இந்திய கரன்சிகளை அள்ளினான். இராணுவன் முன் நீட்டினான். ‘ வைத்துக்கொள்ளுங்கள்....உங்களுக்கு என்  மனைவி இருக்குமிடம் தெரியும்....இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என் மனைவியை எனக்கு காட்டிக்கொடுங்கள்....’ என்றவாறு அவனிடம் கெஞ்சினான். அந்த இராணுவன் ஒன்றும் சொல்லாமல் துப்பாக்கியை ஒரு கணம் அவனது நாசிக்கு நேராக காட்டிவிட்டு பத்தடி தூரம் தள்ளிப்போய் நின்று ஒரு திசையைப் பார்த்து குறி வைத்தான்.
       அவன் படுத்திருந்த மரத்தடியையொட்டி பண்டிட் அதிகம் வாழும் தெரு இருந்தது. அதற்குள் நுழைந்தான். ஒவ்வொரு வாசலிலும் விசாரித்தான். பிறகு இராஜபத்திர வம்சத்தினர் வாழும் தெருக்களுக்குள் நுழைந்தான். பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பிற்குள் நுழைந்தான். அவர்கள் தந்த சில சப்பாத்திகளை வாங்கி மென்றான். தண்ணீர் குடித்தான். ஒன்றிரண்டு சப்பாத்திகளை வாங்கி அவன் உடுத்தியிருந்த அழுக்கு பைஜாமா பைக்குள் திணித்துகொண்டான்.
       எப்பொழும் பரபரப்பாக இருக்கும் தோடா மாவட்டத் தெருக்கள் வெறிசோடி இருந்தன. ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் அவசரகால வாகனமாக இயங்கிக்கொண்டிருந்தன. அவனது கண்களுக்கு தென்படும் வாகனத்தைத் தேக்கினான். நிற்காத வாகனத்தில் ஏறிக்குதித்தான். வாகனத்திற்குள் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு அத்தனை வேகத்தில் இயங்கும் வாகனத்திலிருந்து குதித்து ஏதேனும் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கையில் வைத்திருக்கும் புகைப்படத்தைக்காட்டி ‘ இவளை உங்களுக்கு தெரிந்திருக்கும். இவளை யாரேனும் பார்த்தீர்களா....?’ எனக் கேட்டான்.
       எப்படியேனும் தன் மனைவி தனக்கு கிடைத்துவிடுவாள் என்கிற நம்பிக்கை அவனுக்குள் வேர் விட்டிருந்தது. ஒவ்வொரு இடமாகத் தேடி திரும்பவும் அவன் அவனது மாவட்டத்திற்கு வந்தான். அவனது தெருவிற்குள் நுழைந்து அவனது வீட்டினை அடைந்தான். வீடு துப்பாக்கிக்குண்டுகளால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது. அவனது வீட்டின் சுவர்களை, கூரைகளை உலகத்தரத்தினலானத் தோட்டாக்களால் குடையப்பட்டிருந்தது. அவன் வீடு மட்டுமல்ல அந்தத் தெருவில் உள்ள இன்னும் சில வீடுகளும் பீரங்கி குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. நாய்கள் குரைத்தபடி இருந்தன.
       வீட்டிற்குள் நுழைந்து மேற்கூரையைப் பார்த்தான். மேற்க்கூரை கான்கிரீட் பட்டையாக விழுந்து கிடந்தன. சுவர்கள் வீட்டிற்குள் சரிந்து உடைந்து நொறுங்கி இருந்தன. மலை கற்களான வீடு அது. இமயமலை அடிவாரத்து சதுர வடிவிலான கற்கள். ஒவ்வொன்றாக எடுத்து அதற்குள் தன் மனைவி இருக்கிறாளா...எனத் தேடினான். கோழி அதற்கான இரையைத் தேடுவதைப்போலதான் அவன் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான்.
       அவனுக்கு வேண்டியப்பட்டவர்கள் இரண்டு பேர் ஓடி வந்தார்கள். மூச்சிறைக்க நின்றார்கள். ‘ அன்ஸர்...’ என்றார்கள். ‘ உன் மனைவி கிடைத்துவிட்டாள் ’ என்றார்கள். அவன் உதடுகள் விரிய சிரித்தான். மனைவி கிடைத்துவிட்டாள் என்கிற மகிழ்ச்சியில் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அவன் உடுத்தியிருந்த பைஜாமா உடை மேலே கீழே இழுத்துவிட்டுக்கொண்டான். முகத்தைத் துடைத்துகொண்டான். ஆடை கிழிந்திருப்பதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. தலையில் கவிழ்ந்திருந்த குல்லாவை அப்படியும் இப்படியுமாக நகர்த்தி சரி செய்துகொண்டான். அதே இடத்தில நின்றவாறு மகிழ்ச்சியின் பெருக்கில் குதித்தான். கைக்கொட்டிச் சிரித்தான். அவனது சட்டைப்பைக்குள் இருந்த சப்பாத்தித் துண்டுகளை எடுத்து பிய்த்து சுற்றி நின்றவர்களிடம் கொடுத்தான். இன்னொரு பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தான். கரன்சி நோட்டுகள் வந்தன. கொத்தாக அள்ளி வானத்தை நோக்கி விட்டெறிந்தான்.
       ‘ எங்கே என் தங்கம்....? என் அழகு....? ஸர்மத் நிஷா.....நிஷா....’ என்றவாறு நாலாபுறமும் ஓடினான்.
       தகவல் கொண்டு வந்திருந்த இரண்டு பேர் அவனை கைத்தாங்கலாகப் பிடித்துகொண்டு நடந்தார்கள்.  அவனை ஒரு மருத்துவமனைக்குள் அழைத்துசென்றார்கள். மருத்துவமனைக்கு உள்ளே வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் வைத்தி்ருந்த துப்பாக்கியை விலக்கி அக்காவலனை இளக்காரமாகப் பார்த்தான். ‘ எனக்கு என் மனைவி கிடைத்துவிட்டாள்...’ என்றவாறு சிரித்தான்.
       அவர்கள், அவனை மருத்துவமனையின் உள் கட்டிடத்திற்குள் அழைத்துச்சென்றார்கள். வடக்கு பக்கம் திரும்பி சாலையோர கட்டிடத்திற்கு வந்திருந்தார்கள். அது பிணக்கிடங்கு. அதற்குள் மூவரும் நுழைந்தார்கள். ஒன்று, இரண்டு, மூன்று சடலங்களைத் தாண்டி வெண் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு சடலத்தை அவனிடம் காட்டினார்கள். ‘ அன்ஸர்...இவன்தான் உன் மனைவி ...’
        அன்ஸர் அவன் அந்த உருவத்தை குறுகுறுவெனப் பார்த்தான். தொட்டான். உடம்பை குலுக்கி எழுப்பினான்.
       ‘ இதோ...நீ இவளுக்கு வாங்கிக்கொடுத்த தொங்கல்...சல்வர்....பாஷ்மினா கம்பளி....’
       அவன் அவற்றை வெறிக்கப்பார்த்தான். காலடி ஓரடி பின்னால் எடுத்துவைத்தான்.
       ‘ அன்ஸர்....இவள்தான் உன் மனைவி. நாங்கள் சொல்வதை நம்பு.. வீணாக உன் மனைவியைத் தேடி அலையாதே....’ அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அன்ஸர். அவர்களை முறைக்கப்பார்த்தான்.
       ‘ உனக்கு அவள் மீது சந்தேகம் வருகிறதா....?’
       ‘ ஆம்....’ என்றவாறு அன்ஸர் தலையாட்டினான்.
       ‘ ஒரு நிமிடம் இரு...’ இரண்டு பேரில் ஒருவன் வெளியில் ஓடி இரண்டு மருத்துவ அதிகாரிகளை அழைத்து வந்தான். அதிகாரிகள் ஸ்ரெட்சரில் இருந்த அந்தச் சடலத்தின் கட்டை விரலை எடுத்து அவர்கள் வைத்திருந்த கணினி கண்ணாடி வில்லையில் வைத்தார்கள். கண் முன்னே அவளது புகைப்படம் விரிந்தது.
       அன்ஸர் ‘ அய்....’ என்றவாறு புகைப்படத்தைப் பார்த்தான். முகம் பூரிக்கச் சிரித்தான். அதிகாரிகள் கேட்டார்கள். ‘இது உன் மனைவி தானே.....? ’ ‘ ஆம்....’ என்றான். ‘ அவளது ஆதார் எண் சரிதானே....?’  மனதிற்குள் சொல்லிப்பார்த்துகொண்டு சிரித்தான்.
       ‘ பெயர் ஸர்மத் நிஷா.’
       ‘ஆம்....’
       ‘கணவர் பெயர் அப்பாஸ் அன்ஸர்’.
       ‘ நான்தான்...நான் தான்....’
       ‘ வயது இருபத்து ஐந்து ’
       ‘ ஆமாம்....’
       ‘ அப்படியென்றால் இவள்தான் உன் மனைவி....இவளை தூக்கிக்கொண்டுபோய் உனக்கான இடத்தில் அடக்கம் செய்துகொள்.....’ மருத்துவ அதிகாரிகள் சொன்னார்கள்.
       அன்ஸர் ஒன்றும் பேசவில்லை. கணினி திரையிலிருந்து பார்வையை எடுத்து ஸ்ரெட்சரில் படுக்க வைத்திருந்த சடலத்தின் மீது  குவித்தான். கண்களை உருட்டித் திருட்டி பார்த்தான். நுகர்ந்து பார்த்தான். அவள் கனமழையில் நினைந்த சிவப்பு பூவைப்போல இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாள். அன்ஸர் சுற்றி நின்ற அத்தனைப் பேர்களையும் இளக்காரமாக ஒரு முறைப்பு முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

        ‘ அவள் என் மனைவியைப்போலிருக்கும் யாரோ ஒருத்தி. அவள் என் மனைவியாக இருந்தால் என்னைக் கண்டதும் துள்ளி எழுந்திருக்கல்லவா செய்திருப்பாள்...’ என்றவாறு அவன் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி தேடாத இடங்களில் தேடத் தொடங்கினான்.

3 கருத்துகள்:

  1. சிறு சிறு பத்திகளாகப் பிரித்துப் பதிவிட்டால் படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்நண்பரே

    பதிலளிநீக்கு
  2. கதை மனதைத் தொட்டது. காஷ்மீரில் வாழும் பொதுமக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. arumai. unga kathai onnu kalkila padichen. parisu petra kathai. biramithen. neengkathana avar. vaaztthukkaL sago :)

    பதிலளிநீக்கு