புதன், 28 ஜூன், 2017

அணிந்துரை

ஜன்னல் - பொன்.குலேந்திரன் (கனடா) நூலிற்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை 

ஜன்னல்  வழியே உலகைக் கதைத்தல்


'ஜன்னல் வழியே வெளியைப் பார்ப்பதுதான் சிறுகதை'  என்கிறார் எச். ஜி.வெல்ஸ். ஜன்னலின் வழியே எவ்வளவுதான்பார்த்துவிட முடியும்...? அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொருத்தது. ஒரு சராசரி பார்வையாளனால்  கூப்பிடும்  தூரம் வரைக்கும் பார்க்கலாம்.  இன்னும் கொஞ்சம் துருவிப்பார்த்தால் கூப்பிடும் தூரத்தைத் தாண்டி  நம்மையும்  அறியாமல் குவியும் ஏதேனும் ஓர்  ஒற்றைப் புள்ளி வரைக்கும் பார்க்கலாம்.  அந்த ஒற்றைப் புள்ளி பால்வெளித் திரளின் இன்னொரு சூரிய குடும்பமாகக்கூட இருக்கலாம். ஜன்னல் வழியே விரிந்து  பாயும் நம் பார்வை  ஒரிடத்தில் குவியவேச் செய்யும். குவிய வேண்டிய பார்வை குவியாமல் விரிந்தே சென்றால்,  முழு உலகையும் ஜன்னல் வழியே கண்டுவிடலாம். அப்படியாகக் கண்ட உலகை' ஜன்னல்' சிறுகதைத் தொகுப்பின் வழியே  நம்மையும் காண வைக்கிறார் எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்கள்.

கனடா வாழ் எழுத்தாளர் பொன். குலேந்திரன் அவர்கள் எனக்கு பரீச்சையமானது அக்னிக்குஞ்சு இணைய இதழ் வழியே. அதில் அவரது 'விதி' என்கிற சிறுகதையை வாசித்து சக எழுத்தாளர்களுக்கிடையே இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச விதியை மீறி அக்கதையை நான் விமர்சனம் செய்திருந்தேன். வெறும் புகழ்பாடுதல் இல்லாத அந்த விமர்சனம்  எங்களை கண்டம் கடந்து நெருங்க வைத்தது.

புலம்பெயர்வு எழுத்தாளர்களின் எழுத்துகள் வலியானது. அவர்கள் விட்டுச்சென்ற மண், உயிர் வாழ பற்றிக் கொண்ட  மண் இரண்டையும்  வேறுபட்ட உராய்வு வெப்பத்துடன் கதையாக்கும் உத்தியால்  வாசகர்களின் மனம் கனக்கவே செய்யும். ஆனால் இவரது எழுத்து கனத்துடன் கூடிய மணத்தைக் கொடுக்கிறது. நீரால் பிரிந்து கிடக்கும் மனிதர்களை   கண்டங்களைக் கடந்து  கதாப்பாத்திரங்களால் துன்பம் மறந்த மெல்ல இழையோடும் இன்ப நூலால்  இணைக்கிறார்.

பதினெட்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் பதினெட்டு கதைகளும் முத்துக்கள். ஒரு கதையின் நீரோட்டம் இன்னொரு கதைக்குள் கசிந்திடவில்லை. ஒரு கதையின் பாத்திரம் இன்னொரு கதைக்குள் அசூசை கொடுக்கவில்லை. பாத்திரப் படைப்பை விடவும் கதையாக்கலின் செய்நேர்த்தி மெச்சும்படியாக இருக்கிறது.

முயற்சி என்கிற சிறுகதை துபாயில் வேலைப்பார்க்கும் ஒரு கேரள இளைஞனை பற்றிப் பேசுகிறது. அவன் கடும் முயற்சியில் ஒரு ரெஸ்டாரெண்டு தொடங்குகிறான். அக்கடைக்கு  பாலக்காடு ரெஸ்டாரெண்ட் எனப் பெயர் சூட்டுகிறான். இக்கதையின் பேசும்பொருள் தூரம் கடந்து கால் பதிக்கும் பாலக்காடு அல்ல. கால் பதிக்க அனுமதிக்கும் துபாய்.

அன்வர் பின் அகமது என்கிற கதை மொழி , மதம் , இனம் கடந்து இரட்சிக்க வைக்கிறது. இக்கதையின் பாத்திரம்  நாமாக இருக்கக்கூடாதா....என்கிற ஏக்கம் நம்மையும் அறியாமல் துளிர்விடச் செய்கிறது. கடை ஊழியனாக வேலைப்பார்க்கும் அவனுக்கு அவனது முதலாளி தன் மகளைத் திருமணம் முடித்து வைத்து அழகுப்பார்க்கிறார். சாதி,மதம்,ஏழை ,பணக்காரன், ஜோதிடம் , பொருத்தம்....என்கிற எந்தக் குறுக்கீடும் அவனது வாழ்தலில் இல்லை. இத்தகைய இல்லை சூழ்ந்த வாழ்க்கை கடல் தாண்டி கூடுவது ஆறுதல் தரும்படியாக இருக்கிறது.

பேய்வீட்டு மரைக்காயர் என்கிற சிறுகதை துப்பறியும் நாவல் அளவிற்கு இருக்கிறது. எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே என்கிற பழமொழிக்கு கொடுக்கும் விளக்கம் புதுமையானது. கதைக்குள் சோழர்களின் பாத்திரம் வருகிறது.அது கதைக்கு அடர்த்தியையும் விறுவிறுப்பையும் கொடுக்கிறது. இக்கதை நாவலாக வேண்டிய ஒன்று.

தெரு ஓவியன் கதை புலம்பெயர்ந்தவர்களின் கீற்றுக் கனவு. ஆப்பிரிக்க இளைஞனான அவனைப் பற்றிய சித்திரமும் அவனது ஓவிய வடிப்பும் ஓவியத்திற்குள் பொதிந்திருக்கும் ஏக்கமும் கதையின் முடிவும் அவன் தீட்டிய ஓவியத்திற்கும் வலிக்கவே செய்யும்.

ஆலமரத்து ஆவி என்கிற கதை பகலில் வாசிக்கையில்  அமாவாசையின்  நடுநிசி  அச்சத்தை மூட்டுகிறது. கதையை அவர் மூட நம்பிக்கையை நோக்கி நகர்த்திச்சென்று பிற்பகுதியில் பிரமாதப்படுத்திவிட்டார்.  கதையின் இடையில் வரும் மொனிக்கா பாத்திரம் மொத்த ஆலமரமாக மாறுகிறது. ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதிலும் கிளையிலும் பேய்கள் தொங்கும் காட்சியைத்தரும் இக்கதை பொடியா வீழ்வதில் சமநிலைப் பெறுகிறது. சபாஷ்...! போட வைக்கிறது.

இத்தொகுப்பின் தலைப்பிடப்பட்ட சிறுகதை மிக முக்கியமான சிறுகதை.
சென்னையில் அப்பலோ மருத்துவமனை போன்று கனடாவில் டிரிலியம் மருத்துவமனை. ஏழை,மத்தியவாழ்வர், பணக்காரர்கள் எனப் பலரும் மருத்துவ வசதி பெறும் மருத்துவமனையாக அது இருக்கிறது.

தோமஸ் , ஒலிவர் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். தோமஸ் புற்று நோயாளி. அவருக்கு  ஜன்னலோர படுக்கை கிடைக்கிறது. அவர் எழுத்தாளரும் கூட. அவர் ஜன்னல் வழியே இயற்கைக்காட்சிகளை வர்ணித்து ஓலிவர் உடன் பகிர்ந்து கொள்கிறார். ஓலிவர் தனக்கு ஜன்னலோர படுக்கை கிடைக்கவில்லையே  என ஏங்குகிறான்.

அன்றைய தினம் விடிந்து பார்க்கையில் தோமஸ் படுக்கை காலியாக இருக்கிறது. செவிலியிடம் விசாரிக்கையில் அவர் இரவு இறந்துவிட்டது தெரியவருகிறது. ஓலிவர் ஜன்னல் படுக்கைக்கு மாறுகிறான். ஜன்னல்  வழியே பார்கையில் சுவர் மட்டுமே தெரிகிறது.

தோமஸ் இயற்கைக்காட்சிகளை வர்ணித்து இருந்தாரே என செவிலியிடம் கேட்கிறான். செவிலி சொல்கிறார். தோமஸ்க்கு கண் தெரியாது. அவரொரு எழுத்தாளர் என்பதால் கற்பனையாக  சொல்லிருக்கலாம் என்கிறார்.மிகை அலங்காரத்துடன் எழுதப்படாத இக்கதை தொகுப்பிற்கு  சுகமான கனம்.

 இப்படியாக ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் கலைடாஸ்கோப்பின் பிம்பத்தை கொண்டு வந்து நிறுத்துகிறார்.

 பொன்.குலேந்திரன் கண்டம்  கடந்து வாழ்பவராக  இருக்கிறார். என் அருகில் அவர் வாழ்பவராக இருந்தால் அவரது கையை இறுகப் பிடித்து  குலுக்குபவனாக இருந்திருப்பேன்.

ஜன்னலைத் திறந்தால் காற்றுதான் வரும். இத்தொகுப்பைத் திறக்கையில் காற்றுடன் கூடிய உலக மணம் வருகிறது. திரை கடந்து இந்நூல் வாசிக்கப்பட எனது வாழ்த்துகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக