வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

மில்லி கிராம் மாத்திரை

மனித மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையொன்று தன்னிடம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் வாசலில் நின்றுகொண்டிருந்தார். மலச்சிக்கலும், வாயுத்தொல்லையும் நீண்ட நாட்கொண்டு எனக்கு இருந்து வருவதை யாரோ ஒருவர் அவரிடம் சொல்லிருக்க வேணும். அல்லது நான் நடக்கையில் , உட்கார்ந்து எழுந்திருக்கையில் என் பின் வாசல் வழியே காற்று உடைபடுவதை அவர் கவனித்திருக்க வேணும். அல்லது ஏதோ ஒரு பொதுயிடத்தில் அவரது நாசியை அடைக்கும் படியாக என்னுடைய கரியமில வாயு வெளியேறியிருக்க வேணும்....

மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தவர் முகத்தை ‘உம்’மென வைத்திருந்தார். இந்தக்காலத்திலும் இப்படியொரு மாத்திரை இருக்கிறதென்று தெரியாமல் ஏன்தான் வீதியெங்கும் மலத்தைக் கழித்து தெருக்களை நாறடித்து வைத்திருக்கிறீர்களோ.... எனச் சமூகத்தை நினைத்து கோபப்படும் மனிதராகத் தெரிந்தார். சண்டைக்கலை நடிகர் ஜெட்லியின் முகவெட்டும் உடல்வாகும் அவரிடமிருந்தது. சிவந்த உடம்பு, மீசை மழிக்கப்பட்ட உதடுகள். இமையும் புருவங்களும் மழுங்கிப்போயிருந்தன.
தலையில் உயரமான தொப்பி அணிந்திருந்தார். ‘ பிசினஸ்...பிசினஸ்....ஒன்லி பிசினஸ்.....’ எனச்சொல்லிக்கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனி, ஔரங்கசீப்பிடம் வணிகம் பேசிய தொப்பியாக அது இருந்தது. கையில் தடித்த ஒரு புத்தகமிருந்தது. முதுகுப்புறத்தில் ஒரு நீண்டப்பை தொங்கிக்கிடந்தது. ஜீன்ஸ், பேண்ட், சர்ட், ஷு, டை....இத்யாதிகளால் பார்க்க அவர் ஒரு தேர்ந்த வியாபாரியைப் போலிருந்தார்.
திடகாத்திரமான உடல்வாகு அவருடையது. இந்த மாத்திரையை வாங்கிக்கொள்ளவில்லையென்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் என்னச் செய்கிறேன் பார்.....என மிரட்டும் தொனியில் என்னைப்பார்த்தார். வாசலில் நின்று கொண்டிருந்தவர் ஒருவர்தான் என்றாலும் அவருக்குள் நான்கு பேர்கள் ஒழிந்திருந்தார்கள். பல மொழிகள் பேசுவதில் தேர்ந்தவராக இருந்தார். ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், குஜராத்தி நான்கு மொழிகள் அவருடைய உதடுகளில் வளைந்து நெழிந்து ஓடியது. தமிழ் உச்சரிப்புகளில் திருநெல்வேலி நெடி இருந்தது.
அவர் என் மிக அருகினில் நெருங்கியிருந்தார். அவரிடமிருந்து ஒருவிதமான நறுமணம் கசியத்தொடங்கியது. இந்திய குடும்பங்களுக்கு பரீச்சையமான ப்பேர் அன்ட் லவ்லி, ட்ரீம் ப்ளெவர் - பான்ஸ் பவுடர், கோகுல் சாண்டல், க்ளினிக் ப்ளஸ்,.....போன்ற வாசணை போலில்லாமல் யாராலும் யூகித்துவிட முடியாத நறுமணமாக அவ்வாசணை இருந்தது. வாய்த்திறந்து பேசுகையில், மெல்லச் சிரிக்கையில் , ஒவ்வொரு செய்கைக்கும் ஒவ்வொரு வாசணை அவரிடமிருந்து கசிந்துகொண்டிருந்தது.
நான் அவரிடம் பேச்சுக்கொடுக்கவில்லை. தெரியாத்தனமாக ஒரு விளம்பரத்திற்கு மிஸ்டுகால் கொடுக்கப்போய் நான் பட்டப்பாடு போதும். தலையில் மயிர்கள் முளைத்தப்பாடில்லை. மொத்தமாக உதிர்ந்தப்பாடுமில்லை. அந்த  அனுபவம் என்னை மேலும் ‘உஷார்’ படுத்தியது.
வாசலில் நின்றிருந்தவர் பீப்பாய் கணக்கில் மாத்திரையைப்பற்றி அளந்துகொண்டிருந்தார். ‘ நீங்க...நினைக்கலாம்....மலமாவது....மணப்பதாவது.....?’ என்கிற கேள்வியைக் கேட்டுவிட்டு சிரித்துகொண்டிருந்தார். மலத்தைப்பற்றி பேசுகையில் நாணமாவது, மடமாவது..... நான் முகத்தை  ‘உம்’மென வைத்துகொண்டேன்.
‘ இங்கே...பாருங்க சார்.....தேன் இருக்கிது இல்லையா......தேன்.... அது தேனீயோட மலம்....ஆனால் மணக்குது பார்த்தீங்களா.....’
என் இமைகள் ‘படக்’கெனத் திறந்திருக்க வேணும். அதை அவர் கவனித்திற்க வேணும். நின்றுகொண்டிருந்தவர் என் அருகினில் வந்து உட்கார்ந்துகொண்டார். கீழேதான் உட்கார்ந்தார் என்றாலும் அவரது உட்காருதலில் வியாபாரத்தனம் இருந்தது. கையில் வைத்திருந்தப் புத்தகங்களைக் கீழே வைத்தார். முதுகில் சாய்ந்துகிடந்த பையை எடுத்து மடிக்குள் வைத்துகொண்டார். புத்தகத்தை விரல்களால் ‘சரசர...’வெனப் புரட்டினார். தாழம்பூ வாசணையைப்போல ஒருவித வாசணை அதற்குளிலிருந்து வந்தது. பையைத்திறக்கையில் இன்னொரு வாசணை வந்தது. ஒரு உறையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து மேலுறையைப் பிரித்து என்னிடம் நீட்டி நுகர்ந்துப்பார்க்கச் சொன்னார். நான் மலத்தை வாங்குவதைப்போல மாத்திரையை வாங்கி தயக்கத்துடன் நுகர்ந்துப்பார்த்தேன். அவரது உடம்பு, ஆடை, புத்தகத்திலிருந்து கசியும் நறுமணங்களின் கதம்பமாக அவ்வாசணை இருந்தது.
‘ எப்படி சார் இருக்கு வாசணை...?’
அவர் என்னக்கேள்வியைக்கேட்டாலும் பதில் எதுவும் சொல்லக்கூடாதென இருந்தேன். வியாபாரிகளை சந்தையை விட்டு விரட்டுவதற்கான ஒரு வழி அவர்களிடம் வாயை மூடிக்கொண்டு இருப்பது....
‘ மணக்குதா...இல்லையா.....?’
‘ இம்....’
‘தேனீ வயிற்றுக்குள் இருக்கும் ஒரு ஹார்மோனை எடுத்து அதிலிருந்து இந்த மாத்திரை தயாரிக்கப்பட்டிருக்கிறது....’
‘ ஊகூம்...’.
அவர் வாயினை என் காதிடத்திற்கு கொண்டு வந்து ஒரு முறை நாலாபுறமும் சுற்றிப்பார்த்துவிட்டு சொன்னார் . ‘ நீங்க விடும் டர்.....மணக்குமா சார்.....?’
‘ இம்....?’
‘ குசு....குசு.....மணக்குமானு கேட்கிறேன்.....’
‘ ஊகூம்.......’
‘ நாறுமில்ல.....?’
‘ இம்....’
‘ ஆனால் நான் விடுகிறது மணக்கும்....’ என்றவாறு பிட்டத்தை மெல்லத் தூக்கினார். அவர் தூக்குவதற்கும் அவருடைய மலப்புழை கிழிவதற்கும் சரியென இருந்தது. ‘ டர்..........ர்.’ கண்களை இறுக மூடிக்கொண்டு காற்றினை உள்ளே இழுத்து வெளியே விட்டார். சுவாசித்துப்பாருங்க....மணக்குது பார்த்தீங்களா.....?’
நான் நாசியை இறுகப்பிடித்துகொண்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து விரல்களை எடுத்தேன். ஒரு நறுமணம் என் நாசிக்குள் இறங்கி நுரையீரலை நிரப்புவதைப்போலிருந்தது. இதற்கு முன் எங்கேணும் உணர்ந்திட முடியாத நறுமணமாக அது இருந்தது.
‘ இப்ப என்னச் சொல்றீங்க....?’
நான் ஒன்றும் பேசவில்லை. ஒரு மைக்ரான் அளவிற்குக்கூட வாயைத் திறக்கவில்லை. அவர் கையில் வைத்திருந்த புத்தகத்தை மெல்ல விரித்தார். உயர் தரமான காகிதத்தினாலான புத்தகமாக அது இருந்தது. புத்தகம் முழுமைக்கும் கோட், சூட் அணிந்த சீமான், சீமாட்டிகள் அவருக்கே உரித்தான அதிகப்படியான சிரிப்பை உதிர்த்துகொண்டு கை குலுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்கள்.
‘ இப்ப என்னச் சொல்றீங்க.....?’
‘ நான் சொல்வதற்கு ஒன்றுமில்லையே...’ என்றேன்.
என்னை பேச வைத்துவிட்ட திருப்திக்கு அவர் வந்திருக்க வேணும். அவர் என்னை ஓர் இரையைப் பார்ப்பதைப்போலதான் பார்த்தார். ஒரு கையேட்டினை எடுத்து அதில் கட்டம் கட்டப்பட்டிருந்தச் செய்தியைக் காட்டினார். ஆங்கிலத்திலிருந்த அச்செய்தியை வாசித்தார். இன்னொரு ஏட்டில் அதே செய்தி ஹிந்தியில் பிரசுரமாகியிருந்தது. அதையும் வாசித்துக்காட்டினார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் இந்த மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதாக ஒரு செய்தி இருந்தது. ஒபாமா எப்பொழுதாவது அம்மாத்திரையை எடுத்துகொள்கிறார் என்றும் இருந்தது. கிளிண்டன் ஒரு முறை இந்தியாவின் வழியே பாகிஸ்தானிற்கு செல்கையில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷரப்பிற்கு இந்த மாத்திரையை கொடுத்ததாக இருந்த கட்டம் கட்டிய இன்னொரு செய்தியைக் காட்டினார். அச்செய்தியில் பில்கிளின்டன் முஷரப் இருவரும் கைக்குலுக்கிக்கொண்டிருந்தார்கள். இருவரின் கை குலுக்களுக்குள் இருந்த இடைவெளியில் தெரிவது இந்த மாத்திரைதான் என்றார். நான் இருவரின் முகங்களையும் அவர்களுக்கிடையேயான கைக்குலுக்களையும் பார்த்துகொண்டிருந்தேன். இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம் எழுந்தது. இந்தியாவில் இருக்கையில் இந்த மாத்திரையை நம் பிரதமருக்கு கொடுத்தாரா...இல்லையா....என்கிற சந்தேகம்தான் அது. எனக்குள் எழுந்தது நியாயமான சந்தேகம்தான் என்றாலும் அதை நான் கேட்க நினைக்கவில்லை. இப்படியொரு சந்தேகத்தைக் கேட்க வைப்பதன் மூலம் எனக்குள் அவர் எப்படியும் நுழைந்துவிடலாம் என அவர் நினைத்திருக்கலாம் இல்லையா....!  என் ஆட்காட்டி விரலை என் முகத்திற்கு நேராக நீட்டி என்னை நான் உஷார் படுத்திக்கொண்டேன்.
‘உலக கோடீஸ்வரன்களில் முதலிடம் யார் தெரியுங்களா....?’
‘ யார்....?’
‘பில்கேட்ஸ்...’
‘ இன்னும் அவர்தானா....?’
நான் அப்படிக்கேட்டதும் என்னை அவர் ஒரு ஏளனப் பார்வையில் பார்த்தார். வியாபாரத்தனமாக ஒரு சிரி சிரித்துகொண்டார்.
‘ அவர் ஒரு நாளைக்கு மூன்று வேலை இம்மாத்திரையை எடுத்துக்கொள்வதா’க பெருமைப்பூரித்தார். ‘இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஐ.நா சபையில் நடந்தேறும் முக்கியக் கூட்டங்களில்  உலகத் தலைவர்களுக்கு இம்மாத்திரை கொடுக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டினரின் கழிப்பறைகள் மணப்பதற்கு இதுதான் காரணம். இதே மாத்திரை சீனர்கள் கள்ளச்சந்தையில் இறக்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாத்திரைகள் இந்த அளவிற்கு மணத்தை கொடுப்பதில்லை...’
நான் மாத்திரையை வாங்கி தயாரித்த வருடம், தொழிற்சாலையின் பெயரைப் பார்த்தேன். மாத்திரை அட்டையில் காலாவதி நாட்களுக்கு இன்னும் ஒரு வருடக்காலமிருந்தது. மாத்திரையிலும் அதன் அட்டையிலும் அமெரிக்காவின் இறகு விரித்த கழுகு சின்னம் இருந்தது.
‘ செப்டிக் டேங்க் பக்கத்தில் இருக்கோ...’ நாசியை இறுகப்பொத்திக்கொண்டு துலாவினார்.
‘ இம்....’ என்றேன் நான்.
‘இவ்ளோ நாற்றத்தோடு எப்படி வசிக்கிறீங்க.....’ என்றவர் ‘இம்மாத்திரையைச் சாப்பிட்டுப் பாருங்க....அப்பறம் சொல்வீங்க.....’ என்றவாறு ஒன்றிரண்டு மாத்திரைகளைப் பிரித்தார்.
‘ ஒரு மாத்திரையைப் போட்டுப்பாருங்கள்....’ என்ற அவர் ஒரு மாத்திரையை எடுத்து கையை நீட்டச்சொல்லி உள்ளங்கையில் வைத்தார். மாத்திரை குழந்தைகள் கழிக்கும் மலத்தின் நிறத்தில் இருந்தது. மஞ்சளும் கறுப்பும் கலந்து ஒரு பிசிறுமில்லாது ஒரு முழு வட்டத்தில் இருந்தது. நான் அதை விழுங்கவும் முடியாமல் திருப்பக் கொடுக்கவும் முடியாமல் கையில் வைத்தபடி உட்கார்ந்திருந்தேன்.
‘ என்ன சார்...யோசனை....வாயில போட்டுக்கோங்க....’
‘ இந்த மாத்திரை எவ்வளவு....?’
‘ இந்த மாத்திரைக்கு நீங்க பணம் தரவேண்டியதில்லை...சாம்பிள்... தண்ணீ வேண்டியதில்ல. சப்பி சாப்பிற மாத்திரை. மாத்திரையோட ருசி எச்சில்ல கலந்து வயிற்றுல கலக்கணும்...அப்பத்தான்.....காலையில போகிற வெளிக்கு மணக்கும்.....’
எவ்வளவு நேரம்தான் நான் மாத்திரையை கையில் வைத்துகொண்டிருப்பது. மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டேன். பஞ்சு மிட்டாய் கரைவதைப்போல மாத்திரை எச்சிலில் கரைந்து இதுவரைக்குமில்லாத இனிப்பில் எச்சி்ல் தித்தித்தது. கற்கண்டின் சுவையைப் பத்தால் பெருக்குவதைப்போல் அதன் சுவை இருந்தது. அந்த மாத்திரை கரைந்து தொண்டைக்குள் இறங்கிய ஒரு மணி நேரத்திற்குப்பிறகும் எச்சில் இனித்துக்கொண்டே இருந்தது.
‘ நல்லா இருக்கே.....’
‘ அமெரிக்கா மாத்திரை. நல்லா இல்லாமல் இருக்குமா....’
‘ எவ்வளவு....?’
‘ ஒரு மாத்திரை நூறு ரூபாய்...’
‘ ஒரு மாத்திரையா....!’
‘ அமெரிக்க மாத்திரை சார்.....வாட், மதிப்புக்கூட்டு வரி,இறக்குமதி வரி....னு ஏகப்பட்ட வரிகள் இம்மாத்திரை மேல் இருக்கு சார்....’
‘ உங்களுக்கு எத்தனை வேணும் சார்....’
‘ வேணாம்.....சும்மா கேட்டேன்.....’
ஓர் அமெரிக்கன் ஆப்பிரிக்கனை இப்படித்தான் ஏளனமாகப் பார்ப்பான் எனும் படியாக ஒரு பார்வைப் பார்த்தார்.
‘ நம்மூர் ஜனங்கள் ஒன்ன மட்டும் புரிஞ்சிக்கிற மாட்டேங்கிறாங்களே ஏன் சார்.....?’
‘ என்ன புரிஞ்சிக்கிற மாட்டேங்கிறாங்க....?’
‘ வியாதிக்கு மருந்து சாப்பிடுற நம்ம ஜனங்க வருமுன் காக்கும் மாத்திரையைக் கொடுத்தால் சாப்பிட மாட்டேங்கிறாங்களே...?’
அவர் என்னைப் பார்த்துகொண்டு கண்களைக் கூட சிமிட்டாமல் கேட்டிருந்த தொனி என் அடிவயிற்றைக் கலக்கியது. ‘ எனக்கு வியாதி எதுவும்  தொற்றியிருக்கா என்ன...?’ - கேட்டேன்.
‘ பின்னே இல்லையா....?’ என்றவாறு அவர் ஒரு அப்பாவித் தனமாகப் பார்த்தார்.
‘ என்ன வியாதி...’ என்றேன்.
‘ உங்க வீட்டு செப்டிக் டேங்க் நாற்றத்தைச் சுவாசிக்கிறப்பதான் தெரியுதே....நீங்க வியாதியில பூத்து,காய்த்து, காய் கனி கொடுக்கும் மரமென......’
நான் என் சுயமரியாதைக்கு இழுக்கு வந்துவிட்டதைப்போல உணர்ந்தேன்.
‘ நீங்க .....எங்கே சார் ஒர்க் பண்றீங்க....?’
‘ வெளியுறவுத் துறையில......’
‘ ஆபிஸர் கேடர்....?’
‘ இம்...’
‘ மீட்டிங்க்ல இருக்கிறப்ப டர்....வந்துச்சினா என்ன செய்வீங்க.....?’
அவருடையக் கேள்வி மிக முக்கியமானக் கேள்வியாக எனப்பட்டது. ஆனால் என்னப்பதில் சொல்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.
‘ பார்த்தீங்களா....உங்களுக்கிட்ட பதில் இல்ல....இந்த மாத்திரையை சாப்பிட்டீங்கனு வச்சிக்கோங்க. நீங்க எப்ப வேணுமானாலும் டர்...ர் விடலாம்.....’
நான் ஆடாமல் அசையாமல் அவரையே பார்த்துகொண்டிருந்தேன்.
‘ மணக்கும் சார்....உங்களுக்கும் கீழ் வேலைப்பார்க்கிறவங்க ரொம்பப் பெருமையா நினைப்பாங்க சார்....’
‘ டர்...நாறத்தானே வேணும்....’
‘ ஏன் நாறணுங்கிறேன்....? ஏன் சார் நாறணும்.....சட்டம் எதுவும் அப்படிச் சொல்லுதா....? இந்தியாவில நூறு விஐபிகள் இந்த மாத்திரையைச் சாப்பிடுறாங்க. அவங்கதான் அமெரிக்காவுக்கு போறதும் வாறதுமா இருக்காங்க....அவங்க விடுகிற டர்....பேழுற மலம் நாறாதப்ப நம்ம மலம், டர்...மட்டும் ஏன் நாறணுங்கிறேன்... ஏன் சார் நாறணும்.....?’
‘ இந்த மாத்திரைய யாரெல்லாம் எடுத்துக்கிறாங்க....?’
‘ வட இந்திய ஹீரோ, ஹீரோயின்ஸ், சென்ட்ரல் மினிஸ்டர் கொஞ்சப் பேர்....அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமா....வியாபார நோக்கமா....போறவங்க, வாறவங்க.....’ என்றவர் கையில் வைத்திருந்த செய்தித்தாளினை எடுத்து காட்டினார். எனக்கு வியப்பாக இருந்தது. நடிகர், நடிகைகளுடன் நெருக்கமாக நின்று கைக்குலுக்கியபடி அந்த மாத்திரை வியாபாரி நின்றுகொண்டிருந்தார். அவர் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து அலைபேசியை எடுத்தார். யூடியூப்பைத் திறந்தார். ஒரு நடிகை ஹிந்தியில் கால், கை, தொடை, பிட்டத்தை ஆட்டியப்படி சிலாகித்துகொண்டிருந்தார்.
அவருடைய முக நூலைத்திறந்துக்காட்டினார். முகநூலின் முகப்பு அம்மாத்திரையின் விளம்பரமாக இருந்தது. தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்களில் நடிக்கும் பலரும் அவரது முகநூலில் வரிசைக்கட்டி நின்றார்கள். ப்ளாக்கைக் காட்டினார். ட்வீட்டர், வாட்ஸ்அப்,...என பலவற்றிலும் அவருடைய சிரித்த முகம் இருந்தது. பலரும் அவரிடம் மாத்திரைக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள்..
அவர் அலைபேசியைக் காட்டிக்கொண்டிருக்கையில் எனக்கு ‘டர்...’ வந்தது. என்னுடைய ‘டர்....’ அவருடைய ‘டர்...’ரைப்போல மணத்திருக்கவில்லை.
‘ பார்த்தீங்களா சார்.....இப்படி நாறலாமா.....?’
அவர் என்னைப்பார்த்து அப்படி கேலியாகக்கேட்டதும் ‘ பத்து மாத்திரை கொடுங்கள்....’ என்றேன்.
‘ பத்து வராது சார்....வாங்கினால் எட்டு....பதினாறு....இருபத்து நான்கு, முப்பத்திரண்டு....’
‘ எட்டு தாங்க....’
‘ என்ன சார் நீங்க....பதினாறாக வாங்கிக்கிறுங்க....’
‘ அவ்ளோ பணம் இல்லையே ’
‘ டிஸ்கவுன்ட்ல தாறேன் சார்....’
மாத்திரைகளை ஒரு அழகான  அட்டைப்பெட்டியில் வைத்துக்கொடுத்தார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டார். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச்சொன்னார். என் முகவரியை வாங்கிக்கொண்டார். ஆதார் எண், வங்கிக்கணக்கு எண்களைக் குறித்துக்கொண்டார்.
மாதம் பிறந்தால் சரியாக ஒன்றாம் தேதியில் கிடைக்கும் படியாக  எஸ்.டி கொரியரில் மாத்திரைகளை அனுப்பி வைத்துவிடுகிறார். நல்ல மனிதர். ஒன்றிரண்டு மாத்திரை கூடவே வைத்து அனுப்புகிறார். நான் மாத்திரை சாப்பிடுகிற விடயம் என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
வீட்டில் என் மனைவி, மகள், மகன் உட்பட பலரும் என் மலத்தைப்பற்றிதான் பேசிக்கொள்கிறார்கள். ‘மலம் மணக்க என்னதான் சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்கிறீர்கள்....?’ எனக் கேட்டு பலரும் என்னை நச்சரிக்கிறார்கள்.
ஒரு நாள் இப்படித்தான் வாசலில் தனியாக உட்கார்ந்திருந்தேன். தானொரு மாத்திரை வியாபாரி என சொல்லிக்கொண்டு ஒருத்தன் வாசலில்  நின்றுகொண்டிருந்தான். குடுகுடுப்புக்காரனைப்போல அவன் தான் கொண்டு வந்திருக்கும் மாத்திரையைப் பற்றி விளக்கத் தொடங்கினான். இப்பொழுது இந்தியாவில் குறிப்பாக மேல்த்தட்டு மக்களை ஒரு புதுநோய் ஒன்று ஆட்டிப்படைக்கிறது. அந்நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாமல் விட்டால் மற்றவர்கள் முகம் சுழிக்கும்படியான நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடும். அதுவொரு மனநோய். அதற்கான மாத்திரைதான் என்னிடம் இருக்கிறது என்பதாக ஆங்கிலத்தில் அளந்து கொண்டிருந்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. அவனாகவே மாத்திரையின் கம்பெனி, அக்மார்க் சான்று , கண்டுப்பிடித்த மருத்துவ விஞ்ஞானிகளின் பெயர்களைச் சொல்லி இம்மாத்திரையை சாப்பிட்டால் மட்டுமே அந்நோயிலிருந்து குணமடைய முடியும் என சிலாகித்தான்.
நான் பொறுமையிழந்துபோய் கேட்டேன். என்ன நோய் அது...? எதற்கான மாத்திரை உன்னிடம் இருக்கிறது...?’ என்றேன். ‘ இம்...அப்படிக்கேளுங்க...’ என்றவன் மெல்ல என் காதினை நோக்கிக் குனிந்தான். ‘ இப்ப கொஞ்ச நாளாக மேட்டுக்குடி மக்களை ஒரு நோய் ஆட்டிப்படைச்சிக்கிட்டிருக்கு. அந்த நோயால் பீடிக்கப்பட்டவங்க அவரவர் கழிக்கிற மலத்தை ஒரு குச்சியில எடுத்து நுகர்ந்து பார்க்கச் செய்வாங்க...இது ஒருவிதமான மனநோய். இந்த நோயைக் கண்டுக்கொள்ளாமல் விட்டவங்க குடும்பத்தை விட்டே தள்ளி வைக்கப்பட்டிருக்காங்க. மூக்கிற்கு போகிற மலத்த வாய்க்கு கொண்டுப்போனால் வீட்டோட வச்சிருப்பாங்களா என்ன...! ’ என்றவாறு ஒரு சிரி சிரித்தான். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

‘ உங்களுக்கு எதுவும் அதுமாதிரியானப் பிரச்சனை இருக்குதுங்களா...?’ என்றவாறு அவன் என் அருகில் நெருங்கி உட்கார்ந்தான். நான் அவன் கையில் வைத்திருந்த மாத்திரையை வாங்கி அது அமெரிக்க மாத்திரைதானா...என உறுதிப்படுத்தத் தொடங்கினேன்.

3 கருத்துகள்: