செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மன்னராட்சிக் கோரிய மீன்கள்


மீன்கள், ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தன. குட்டிகள், வளரினங்கள், முட்டையிடும் மீன்கள் யாவும் தலைமையின் மீது அதிருப்தி கொண்டன.
அக்கிணற்றில் மிகச்சிறிய மீனான நெத்திலி முதல் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக் கெண்டை,...என இருபதுக்கும் மேற்பட்ட மீனினங்கள் வாழ்ந்து வந்தன. அம்மீனினத்தில் பெரிய இனமாக புல் கெண்டை இருந்தது. அம்மீன் கூட்டத்திற்கு தலைவனாக இருந்தது. அம்மீனிற்கு எதிராகத்தான் மற்ற மீனினங்கள் தன் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தன. சிறு, பெரும் அலைகளை உருவாக்கி கிணற்றைக் கொந்தளிக்க வைத்தன. சிறிய மீன்கள் வாயை ‘ஆ...’வெனத் திறந்து வானத்தைப் பார்த்து செத்ததைப்போல காட்டி தன் அதிருப்திகளைக் காட்டின. நடுத்தர மீன்கள் வால் துடிப்புகளால் தண்ணீரை அடித்தும் பெரிய மீன்கள் தாவிக்குதிப்பதுமாக இருந்தன.
இக்கூட்டத்திற்கு தலைவனாக இருக்கின்ற புல் கெண்டை கிணற்றின் அடியில் உயிர் வாழக்கூடியது. கிணற்றின் சகதிக்குள், துடிப்புகளைப் புதைத்து ஓய்வு எடுப்பவை. சகதி தரும் குளுமையும் அதன் கொழகொழுப்பும் அதற்கு இனிமைாக இருப்பவை. அம்மீன் தன் பிள்ளைக்குஞ்சுகளுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தன. ஒரு நாளைக்கு ஓரிரு முறை மட்டும் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்து தன் மற்ற மீன்கள் எப்படி இருக்கின்றன எனப் பார்வை பார்த்துவிட்டு செல்லும். அவ்வளவேதான்! அதன் ஆட்சியும் அதிகாரமும்...
கிணற்றில் தண்ணீர் இருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டு வருவதைப்பற்றி தலைமை மீன் அக்கறைக்கொள்ளாமல் இருந்தது. இரையில்லாமல் குட்டி மீன்கள் செத்துக்கொண்டு வருவதையும் பெரிய மீன்கள் பசி பொறுக்க முடியாமல் சிறிய மீன்களைத் தின்று கொண்டிருப்பதையும் தலைமை மீன் அறிந்து வைத்திருக்க வில்லை.
அக்கிணற்றில் வசித்த மீன்களில் உயர்குடி மீனாக விரால் இருந்தது. அம்மீன் கிணற்றின் மேல் மட்டத்திற்கும் தரைக்குமாகச் சென்று வரும் மீன் அது. தரை மட்டத்திலிருருக்கும் குளிர்ச்சியும், மேல் மட்டத்திலிருக்கும் இதமான வெப்பமும் அதற்குத்தேவை என்பதால் அம்மீன் கீழ் நோக்கிச் செல்வதும் பிறகு மேலே வருவதுமாக இருந்தது. அவ்வாறு சென்று திரும்பும் பொழுது அது எடுத்துகொள்ளும் கால விரயத்தை வைத்து பார்க்கையில் கிணற்றின் நீர் மட்டம் குறைந்திருப்பது அதற்குத் தெரிய வந்தது.. ஒரு நாளைக்கு முப்பது தடவை மட்டும் கிணற்றின் தரைக்கும் வாய்க்குமாக போய்த்திரும்ப முடிந்த அம்மீனால் இப்பொழுதெல்லாம் ஐம்பது தடைவைக்கு மேல் சென்று திரும்ப முடிவதை வைத்து அதிர்ச்சி அடைந்தது. தன் இனம் சந்திக்கப்போகும் பேரழிவை மற்ற மீன்களுக்கு தெரியப்படுத்த அவசரக்கூட்டம் கூட்டியது.
‘மீன்களே.....நாம் நமக்கான இரையை மட்டும் இழந்து வரவில்லை. நாளுக்கு நாள் நாம் உயிர் வாழத் தேவையான தண்ணீரையும் இழந்து வருகிறோம்....’ எனச் சொன்னதும் மற்ற மீன்கள் நடக்க இருக்கும் பேரழிவை நினைத்து பெரிதாக வாயைத் திறந்து திகைத்தது.
‘ ஒரு காலத்தில் நாம் வசிக்கக்கூடிய இக்கிணற்றில் வாய் வரைக்கும் தண்ணீர் இருந்திருக்கிறது...’ என்றது ஒரு மீன்.
‘ காக்கைக் குருவிகள் கிணற்றின் கட்டையில் உட்கார்ந்துகொண்டு தலையை நீட்டி தண்ணீர் குடித்திருக்கிறது...’ என்றது இன்னொரு மீன்.
‘ கிணற்றைச் சுற்றிலும் மீன்கொத்திகளும், கொக்குகளும், காக்கைகளும் நம்மை உணவாக்கிக்கொள்ள ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது. நம் மூதாதையர்களில் பலர் பறவைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள்....’
ஒரு மீன் சினத்தால் கொதித்தது. ‘ என்னச் சொல்கிறாய்....!’
‘ நம் மூதாதையர்கள் இரையானதைப்போல அவர்களும் நமக்கு இரையாகி இருக்கிறார்கள்....’
‘ என்னச் சொல்கிறாய்....’
‘ஆமாம்...ஒரு ஆடு தண்ணீர் குடிக்க கிணற்றிற்குள் தலையை நீட்டப்போய் அந்த ஆடு தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது. அது செத்து அழுகி மிதந்திருக்கிறது. அழுகிப்போன அவ்வாடு நம் தாத்தா, பாட்டிகளுக்கு இரையாகியிருக்கிறது. நம் மூதாதையர்கள் வயிறு முட்டத் தின்று பெருத்திருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க வீசிய வளையை அறுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று...?’ அழுவதைப்போல பேசி நிறுத்தியது விரால் மீன்.
விரால் மீனின் பேச்சைக் கேட்டதும் மற்ற மீன்கள் துள்ளிக்குதித்தன. துடிப்புகளால் வயிற்றில் அடித்துகொண்டன.
‘ இதைப்பற்றியெல்லாம் நம் தலைமை கவலைப்பட்டிருக்கிறதா. இல்லையே...’ ஒரு மீன்.
‘ எவ்வளவு நம்பிக்கையில் புல் கெண்டை மீனை தலைவனாகத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அம்மீன் நம்மீது ஒரு அக்கறையுமில்லாமல் எப்படி அதனால் சகதிக்குள் உல்லாச வாழ்க்கை வாழ முடிகிறது. ஜனநாயகத்தை நம்பி இனி பயனில்லை....’
‘ஆமாம்...ஜனநாயகம் தோற்றுவிட்டது’
‘ வேண்டாம்...வேண்டாம்....ஜனநாயகம் வேண்டாம்....’
‘ மாட்டோம்...மாட்டோம்....புல் கெண்டை மீனை தலைவனாக ஏற்ற மாட்டோம்...’
மீனின் போர்க்குரலால் கிணறு குலுங்கியது. தண்ணீரை வாறி அடித்தது. கிணற்றுக்குள் நடக்கும் விந்தையைப் பார்த்து அவ்வழியே பறந்து சென்ற கொக்குகள் கிணற்றுக்குள்  எட்டிப்பார்த்தன.
‘ மீன்களே...என்ன பிரச்சனை. ஏன் உங்களுக்குள் இத்தனை போராட்டம்....?’ கொக்கு கேட்டது.
‘ எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை....’
‘ ஏன் இல்லை....’
‘ எங்கள் தலைவர் எங்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருக்கிறார். கிணற்றின் ஆழத்திற்குச் செல்பவர் எப்பொழுதாவதுதான் திரும்பி வருகிறார். எங்களுக்கு போதுமான அளவிற்கு இரை இல்லை. நாங்கள் சுற்றி வர இட வசதியில்லை. எங்கள் தேவைகளைப் பற்றி புல் கெண்டை ஒரு கவலையும் படவில்லை.....’
நெத்திலிப்பொடி சொன்னது. ‘ எங்கள் இனத்தில் பலரை நாங்கள் இழந்து தவிக்கிறோம்....’
‘ ஏன்...?’
‘ பெரிய மீன்களுக்கு எடுக்கும் பசிக்கு சிறிய மீன்களாகிய நாங்கள் இரையாகி விடுகிறோம்....’
‘ உங்கள் பிரச்சனைகளைக் கேட்க கவலையாக இருக்கிறதே...நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்....உங்களுக்கு உதவி செய்கிறேன்...’ என்றது கொக்கு.
‘ எங்களுக்கு ஜனநாயகத் தலைவர் வேண்டாம். மன்னர்தான் வேண்டும்....’ என்றது ஜிலேப்பி.
‘ ஆமாம்...மன்னன்தான் வேண்டும்...’ என ஜிலேப்பியின் கோரிக்கையை ஆதரித்தது கெளுத்தி.
‘ மன்னனே வேண்டும்...மன்னனே வேண்டும்.....’
மீன்களின் ஆர்ப்பாட்டத்தை கொக்கு காது கொடுத்துக்கேட்டது. பிறகு சொன்னது ‘ மன்னன் என்றால் வெளியிலிருந்துதான் வருவான் பரவாயில்லையா.....?’
மீன்கள் ஒற்றைக் குரலில் சொன்னது ‘ பராவாயில்லை....எங்களுக்கு மன்னன்தான் வேண்டும்...’
‘எனக்குத் தெரிந்து ஒரு மன்னன் இருக்கிறார். அவரை நான் அழைத்து வருகிறேன்...’ என்ற கொக்கு . பறந்து சென்றது.
மறுநாள் காலையில் நான்கு கொக்குகள் கிணற்றிற்கு வந்தன. அதன் கால்களில் மீன்களுக்கான மன்னன் இருந்தது.
‘ மீன்களே....’ கொக்கு அழைத்தது. மீன்கள் அனைத்தும் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்தன.
‘ உங்களுக்காக ஒரு மன்னனை அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்களை அரவணைத்து வைத்துகொள்வார். உங்களுக்குத் தேவையான அளவிற்கு பாதுகாப்பு அளிப்பார்....’ என்றவாறு நான்கு கொக்குகளும் நான்கு மூலையில் நின்றுகொண்டு மன்னனை கிணற்றுக்குள் தள்ளியது.
மன்னன் கிணற்றுக்குள் விழுந்ததும் நீரின் அதிர்வு பெரிய அளவில் இருந்தது. கிணறு ஒரு  குலுங்கு குலுங்கி நின்றது. மேலும் கீழுமாக அலை அடித்தது. மீன்கள் பயந்து விலகித் தெறித்தது. கிணற்றின் தரை மட்டத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த புல் கெண்டை தனக்கு எதிராக வந்திருக்கும் மன்னனை மேற்பரப்பிற்கு வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டது.
கொக்கு கிணற்றுக்குள் தள்ளிய மன்னன் வளை. அது கிணற்றுக்குள் பரந்து விரிந்திருந்தது. அதன் உடம்பு சல்லடையாக இருந்தது. அதன் மீது சிறிய , நடுத்தர மீன்கள் துள்ளிக்குதித்தன. தனக்கு பெரியப்பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு பெருமைக்கொண்டன. அதன் மீது எப்படி ஏறிக்குதித்தாலும், கடித்தாலும் மன்னனுக்கு கோபம் வராததைக் கண்டு பூரித்தன.
இத்தனைக் காலம் ஒற்றுமையாக வாழ்ந்த மீன்கள் புது மன்னன் வந்ததும் இரண்டு பிரிவுகளாயின. சில மீன்கள் மட்டும் மன்னனின் அரவணைப்பில் இருந்தன. மற்றவை மன்னனின் பரந்த வெளிக்கு கீழாக வாழத் தொடங்கின. மேல் மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் கீழ் மட்டத்திற்கும், கீழ் மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் மேல் மட்டத்திற்கும் பயணிக்க முடியாத நிலையானது.
‘ நாங்கள் இனத்தால் உயர்ந்தவர்கள். பாருங்கள் நாங்கள் கிணற்றின் ஆழத்தில் வாழ்கிறோம்...’ என்றது ஆழத்தில் வசித்த மீன்கள்.
‘ இல்லையில்லை....நாங்கள்தான் உயர்ந்தவர்கள். எங்களைப் பாருங்கள் மன்னர் அரவணைக்கிறார்....’ என்றது மேல் மட்ட மீன்கள்.
‘ நாங்களே பெரியவர்கள்...’
‘ இல்லையில்லை...நாங்களே உயர்வானவர்கள்....’
கிணறு மறுபடியும் குலுங்கியது. நீர் மட்டத்தில் அலை அடித்தது. தண்ணீர் நாலாபுறமும் தெறித்தது. கிணற்றில் நடக்கும் ஆரவாரத்தைப்பார்த்து தன் படை சூழ கொக்குகள் வந்தன. தலையை நீட்டி கிணற்றைப் பார்த்தன.
‘ ஆம்...எங்களுக்கு மன்னராட்சி பிடித்திருக்கிறது...’ என்றன மீன்கள்.
‘ ஏன் பிடித்திருக்கிறது....’ - கொக்கு.
‘ எங்கள் வாழிடம் எங்களோடும் அவர்கள் வாழிடம் அவர்களோடும் இருக்கிறதே....’ என்றது ஒரு வகை மீன்.
‘ எங்கள் இருவரில் யார் பெரியவன் என்றே தெரியவில்லை...அது ஒன்றுதான் குறை...’ என்றது இன்னொரு மீன்.
இரு மீன்களுக்கிடையில் சண்டை எழுந்தது. சண்டையைப் பார்த்ததும் கொக்கிற்கு கோபம் வந்தது.  அப்படியானால் நான் அழைத்து வந்து மன்னனை நானே திரும்ப அழைத்துகொள்கிறேன்...’ என்றவாறு மன்னனை மேலே இழுத்தது.
மன்னனைத் தழுவிக்கொண்டிருந்த மீன்கள் மேலே மேலே செல்வதைக்கொண்டு ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தன.  அதன் கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அத்தனையும் செத்து மடிந்தன.
கிணற்றுக்குள் இருந்த நெருக்கடி சற்று தளர்ந்தது என சில மீன்கள் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சந்தோசமடைந்தன. சில மீன்கள் மட்டும் தன் குஞ்சுகளை இழந்து தவித்தன.
ஓரிரு நாட்களுக்குப்பிறகு மறுபடியும் மீன்கள் ஒன்று கூடின. இனி நமக்குத் தேவை ‘ ஜனநாயக ஆட்சியா, மன்னராட்சியா...?’ எனக் கலந்து ஆலோசித்தன.
ஒரு மீன் சொன்னது. ‘ புல் கெண்டை போல ஜனநாயகத் தலைவன் வேண்டாம். வளையைப்போல மன்னனும் வேண்டாம்..’ என்றது.
‘ அப்படியானால் நாம் யாரை மன்னனாகத் தேர்ந்தெடுப்பதாம்...’ என மீன்கள் முழித்துகொண்டிருக்கையில் ஓர் உருவம் பெருத்த சத்தத்துடன் கிணற்றுக்குள் விழுந்தது. அவை விழுந்த அதிர்வு கிணறு முழுமைக்கும் இருந்தது. மீன்கள் நாலாபுறமும் தெறித்து விலகி ஓடின.
கிணற்றிற்குள் விழுந்த உருவம் மேல்மட்டத்திற்கும் தரை மட்டத்திற்குமாக சென்று திரும்பிக்கொண்டிருந்தது. ‘ ஆம்...நாம் நமக்கொரு மன்னர் கிடைத்துவிட்டார்....’ என மீன்கள் அவ்வுருவத்தைப்பார்த்து கொண்டாடின. ‘ நீங்கள்தான் எங்களை ஆள வேண்டும்..’ என அந்த உருவத்திடம் கோரிக்கை வைத்தன.
அக்கிணற்றிற்கு புதிதாக வந்திருக்கும் மன்னன் ‘ஆமை’. தன்னைச்சுற்றியிருந்த மீன்களை ஒரு பார்வைப் பார்த்த ஆமை ‘ சரி...உங்களை நான் ஆள்கிறேன்...’ என சம்மதம் தெரிவித்தது.
ஆமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தது. கை கால்களை நீட்டி, மடக்கி பேசி அசத்தியது. ‘ உங்களைப்போல நானும் இந்த தண்ணீரை நம்பித்தான் இருக்கிறேன்...’ என்றது. ‘ நான் உங்களில் ஒருவன்...’ என்றது. ஆமையின் பேச்சு மீன்களுக்கு ரொம்பவே பிடித்துபோய் விட்டது.
மீன்கள் ஆமையுடன் பேசுவதும் அதன் மீது ஏறிக்குதித்து விளையாடுவதுமான இருந்தன. ஆமை மீது ஏறிக்கொள்ளும் மீன்களை ஆமை எல்லா உலகத்திற்கும் அழைத்து சென்றது. இப்படியொரு மன்னனை இதற்கு முன் தாம் பார்த்ததில்லை என மீன்கள் பெருமை பேசிக்கொண்டன.
ஆமை தினம் தினம் மீன்களிடம் நலம் விசாரித்தது. அக்கிணற்றிருக்குள் அத்தனை மூலைகளுக்கும் சென்று இளப்பாறி வந்தது.  தான் பார்த்த மூலைகளின் சிறப்பை மீன்களுக்கு தன் பேச்சுத் திறமையால் சொல்லி
அசத்தியது.
மீன்களுக்கு தன் மன்னனை ரொம்பவே பிடித்துபோய் விட்டது. அப்படி பிடித்துப்போக இன்னொரு காரணமிருந்தது. ஒவ்வொரு நாளும்  மீன்களுக்குத் தேவையான உணவை ஆமை கொடுத்து வந்தது. ஆமை தினமும் தின்று செறித்து, வெளியாக்கும் மலம்தான் மீன்களுக்கான உணவு. ஆமையின் மலத்தைத் தின்று ருசி கண்ட மீன்கள் இனி ஆமை இல்லாமல் ஒரு நாளும்  உயிர் வாழ முடியாது என்கிற முடிவிற்கு வந்தன. ஆனால் ஆமை அதற்கான உணவை அதுவே தேடிக்கொண்டது. ஆமையின் உணவு மீன்களின் முட்டைகளாக இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக