முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுகதை லத்தி

                லத்தி

இரண்டு பூதங்கள் நெருங்குவதைப்போலதான் அந்த நான்கு கால்களும் என்னை நெருங்கியிருந்தன. நான் பூப்பெய்த அன்றைய தினம் ஒடுங்கி உட்கார்ந்ததைப்போல கால்,தொடைகள் மார்போடு அணைய கால்களை இறுகக் கட்டிக்கொண்டு சுவற்றில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தேன்.
‘டக்,..டுக்....டக்...டுக்....’ -  பூட்ஸ்களின் அரவம்.
ஒரு கையில் டார்ச் லைட் இருந்தது. அதன் மண்டை போலீஸ்க்கே உரித்தான தீர்க்கமான முழியைப் போலிருந்தது. அந்த டார்ச் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறி இன்னொரு கைக்கு மாறியது. அதை வாங்கியக் கை வெளிச்சத்தை என் மீது அடிப்பதும் நிறுத்துவதுமாக இருந்தது.
ஈட்டி பாய்வதைப்போல பாய்ந்த வெளிச்சத்தின் ஊடே அந்த இரண்டு உருவங்களையும் பார்த்தேன். நான்கு பூட்ஸ் கால்களும் என்னை மிக அருகில் நெருங்கியிருந்தன. பூட்ஸ்களின் நிறம் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் வெளிர்த்துபோன அப்பாவிகளின்  தோல் நிறத்தில் இருந்தன.
எனக்கும் பூட்ஸ் கால்களுக்குமிடையே இரும்புக்கம்பிகளான கிறில் கேட் இருந்தது. பெண்களுக்கு கன்னித்திரையைப்போல விசாரணைக் கைதிகளுக்கு இரும்புக் கேட். விசாரணைக்கைதி தப்பித்து விடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட கதவாக அது இருக்கவில்லை. விசாரணைக் கைதியிடம் அந்நியர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட அடைப்பாக அந்தக்கிறில் இருந்தது. அதன் உள்ளேயும் வெளியேயும் தாழ்ப்பாள் இருந்தது.
கிறில் கேட்டிற்கு வெளியே நான்கு பூட்ஸ் கால்களும் நீண்ட நேரம் தொட்டு நின்றுகொண்டிருந்தன. நான் லாக்கப் அறையின் விளிம்பில் குறுகி உட்கார்ந்திருந்தேன். பூட்ஸ் கால்கள் என்னை மிக அருகில் நெருங்கி வந்திருந்தன. நான் என்னையும் அறியாமல் சுவற்றுப்பல்லியாக ஊர்ந்து சுவற்றின் மூலைக்குச் சென்றிருந்தேன். டார்ச் லைட்டின் ஒளிக்கதிர் கம்பிகளுக்கிடையில் ஊடுறுவி சுவற்றின் மீது ஒரு பெரிய வெள்ளொளி வட்டமாக  விழுந்து  அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தது.
நான் அந்த ஒளியின் வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் ஒரு எலி நகர்வதைப்போல நகர்ந்தேன். ஒளிவீச்சு என்னை விரட்டிக்கொண்டு வந்து ஒரு  மூலையில் என்னைப்பிடித்திருந்தது. நான் குறுகி தலையை மடிக்குள் புதைத்தவாறு உட்கார்ந்திருந்தேன். ஒளிவட்டம் என்னிடமிருந்து விலகி சுவற்றை அரை வட்டமடித்தது. நான் ஒளியின் ஓட்டத்தோடு சுவர்களைப்பார்த்தேன். இதற்கு முன்பு என்னைப்போல ஒரு பெண் அடைக்கப்பட்டிருந்த அறையாக அது இருக்கவில்லை. ஒரு பூதமோ, ஒரு காட்டு விலங்கோ அடைக்கப்பட்ட அறையைப்போலதான் அந்த அறை இருந்தது. சுவர்கள் நகங்களால் பிராண்டி, கிறுக்கப்பட்டிருந்தன.
டார்ச் அடித்துகொண்டிருந்த உருவம் டிப், டாப் உடையில் இருந்தது. தலையில் நெற்றி நீட்டப்பட்ட தொப்பி இருந்ததை டார்ச் விளக்கில் விழுந்த நிழலில் கவனிக்க முடிந்தது. மேலாடை தோளிடத்தில் மூன்று பட்டைகள் இருந்தன. இடுப்பை இறுகப்பிடிக்கும் பெல்ட், அதற்குளிருக்கும் தொப்பை,...என அத்தனையும் வெளிச்சம் தந்த நிழலிலிருந்து கவனிக்க முடிந்தது.
ஓர் உருவம் டார்ச் லைட் வைத்திருந்தது. அதன் பின்னே நின்ற மற்றொரு உருவம் ‘கிளிப்’பிடப்பட்ட ஒரு தடித்த அட்டையை வைத்திருந்தது. அதற்குளிருந்த நான்கைந்து வெள்ளைக்காகிதங்களின் முனைகள் காற்றில் அலாவி சறுகுகளுக்கே உரித்தான அரவத்தைக் கொடுத்தன.
ஒரு கை முரட்டுத்தனமாக கிறில் கேட்டைத் திறந்தது.
‘ கிரிச்...கிரிச்....கிரீச்....க்ளாங்க்.....’
பூட்ஸ்கள் நான்கும் லாக்கப்பிற்குள் நுழைந்தன.
‘டக்....டுக்....டக்.....டுக்.....’
கிறில் சாத்தப்பட்டது.
‘ கிளாங்க்....கிரீச்...கிரீச்...கிரீச்....’
உள்ளூர பூட்டு திணிக்கப்பட்டது.
‘டுடாங்’
பூட்டப்பட்டது.
‘டடச்’
நான் ஒரு சுவற்றின் மூலையில் ஒன்றிப்போயிருந்தேன். மலையாத்தம்மன் சுவாமியை வேண்டிக்கொண்டேன். எனது இரண்டு கைகளையும் கன்னங்களில் கொடுத்திருந்தேன். கைகள் மெல்ல நடுங்குவதைப்போலிருந்தன.
நான்கு  பூட்ஸ் கால்களும் என்னை நோக்கி வந்தன. என் இதயத் துடிப்பின் ஓசையும் பூட்ஸ்களின் காலடி அரவமும் ஒரே மாதிரியாக இருந்தன. எது இதயத்துடிப்பு, எது பூட்ஸ்களின் காலடி அரவம் என என்னால் பிரித்தறிய முடியவில்லை. டார்ச் விளக்கு என் மேல் கவிழ்ந்து கிடந்தது. பூப்பு நீராடலின் போது தலையிலிருந்து பாதம் நோக்கி தண்ணீர் இறங்குவதைப்போல ஒளிவெள்ளம் என் மேல் இறங்கியது.
அறையின் ஓரத்தில் ஒரு நாற்காலி கிடந்தது. அதை ஒரு கை நீட்டி இழுத்தது.
‘ கிடாக்...டடுக்....’
ஓர் உருவம் அதில் ஏறி உட்கார்ந்தது. கால் மேல் கால் கிடத்திக்கொண்டு ஆட்டியது. கால் ஆட்டுதலுடன் அந்த உருவம் உட்கார்ந்திருந்த நாற்காலியும் சேர்ந்து ஆடியது. இன்னொரு உருவம் நின்று கொண்டிருந்தது. எந்த உருவம் உட்கார்ந்திருக்கிறது, எந்த உருவம் நிற்கிறது என என்னால் கணிக்க முடியவில்லை.
ஒர் உருவம் மிரட்டும் தொனியில் பேசியது. அப்பேச்சு இருட்டினைத் துளைத்து என் காதிற்குள் எதிரொலித்தது.
‘ கேட்கிற கேள்விக்கு ஒழுங்காப் பதில் சொல்லணும் என்னா.....?’
என்னையும் அறியாமல் நான் ‘ம்’ இட்டிருந்தேன்.
‘ உன் பேரன்ன...?’
‘ வாச்சாத்தி...’
‘ வயசு....?’
‘  இருபது’
‘ என்ன படிச்சிருக்கே....’
‘ பத்தாவது...’
‘ பாஸா....?’
‘ ம்....?’
‘ உன் அப்பா பேரு...?’
‘ மலையப்பன்’
‘ அம்மா பேரு....?’
‘ பேச்சாயி....’
‘ உன் அப்பா என்னப்பண்றாரு....?’
‘ செத்துட்டாரு...’
‘ எப்ப...?’
‘ அஞ்சு வருசத்துக்கு முன்னாடி...’
‘ எப்படி...?’
‘ செம்மரம் வெட்டினானு சந்தேகத்தின் பேர்ல விசாரணைக்கு அழைச்சிக்கிட்டு போயி சுட்டுக் கொன்னுட்டான்க....’
‘ கொன்னுட்டான்களா...?’
‘ ம்.....’
கேள்வித்தொடுப்புகள் இத்துடன் நின்றிருந்தன. இரு உருவங்களும் ஒன்றையொன்று பார்த்துகொண்டன. தொண்டைக்குள் கணைத்துகொண்டன.
‘ ஒ அம்மா எங்கே...?’
‘ விசாரணைக்கைதியா இருக்காங்க...’
நாற்காலியில் கால் மேல் கால் கிடத்தியிருந்த உருவம் நின்றுக்கொண்டிருந்த உருவத்திடம் கேட்டது. ‘ நேத்தைய விசாரணைக் கைதியில இவளோட அம்மாவும் இருக்காளா...?’
‘ ஆமாம் சார்...’ என்றது நின்ற உருவம்.
அந்த உருவங்களின் பேச்சுகளுக்கிடையில் நான் நுழைய வேண்டிய அவசியம்  நேரிட்டது.  ‘ என் அம்மா மட்டுமல்ல....அந்த  அம்பது பேர்ல என் தம்பி...அண்ணனும் இருக்காங்க....’
‘ குடும்பமே இருக்கீங்க.....இம்.....? ’ என்றவாறு அவ்விரு உருவங்களும் ‘கொல்’லெனச் சிரித்தன.
நான் ஒரு பதிலும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தேன்.
‘ அடையாளம் சொல்லு....?’
‘ என்ன அடையாளம்.....?’.
‘ மச்சம்...தழும்பு எதாவது....?’
நான் இருட்டறைக்குள் இருந்தவாறு  என்னைத் துலாவினேன். நான் பள்ளியில் படிக்கும் பொழுது கிளாஸ் டீச்சரிடம் சொன்ன அடையாளங்கள் என் நினைவிற்கு வந்தன.
‘ கழுத்தில ஒரு மச்சம்....’
தரையை நோக்கி விழுந்திருந்த டார்ச் வெளிச்சம் மேலே கீழே நகர்ந்து என் கழுத்தில் குவிந்தது.
‘ எங்கே...?’
நான் கையைக் கொண்டுப்போய் கழுத்து குழிக்கும் குரல் வளை முடிச்சிற்குமிடையே விரலை வைத்துக்காட்டினேன். டார்ச் வெளிச்சம் அங்கே, இங்கே எனப் பெயர்ந்து அங்குலம்  நகர்ந்து அவ்விடத்தில் குவிந்தது.
‘ கையை எடு....’ ஒரு குரல் மிரட்டியது.
நான் கையை எடுத்தேன். நான்கு கண்களும் என்னைக் குறுகுறுவெனப் பார்த்தன.
‘ ம்...சார்.... ஒரு மச்சமிருக்கு...’ என ஓர் உருவம் சொன்னதும் மற்றொரு உருவம் அதை குறிப்பிடத் தொடங்கியது. டார்ச் வெளிச்சம் என்னிடமிருந்து விலகி எழுத்தில் குவிந்தது.
‘ இன்னொன்னு...?’
‘ இன்னொன்னா...! நான் எதைச்சொல்வதாம்.....?’ எனக்குள் துலாவினேன். மறைவான இடத்தில் இருக்கும் மச்சத்தைச்சொன்னால் காட்டச்சொல்வார்களோ...’ என்கிற பயம் என்னைக் கவ்வியது.
‘ கேட்கிறேன்ல.....’ அந்த உருவத்துடன் சேர்ந்து சுவரும் பேசியது.
‘ வயிற்றில ஒரு மச்சம்’
‘ பொய் சொல்லக்கூடாது...’
‘ பொய் சொல்லல...இருக்கு’
கொஞ்ச நேரம் இரு உருவங்களுகிடையில் பெருத்த அமைதி நிலவியது. பிறகு கையில் வைத்திருந்த பேனா நழுவி கீழே விழுவதும் அதைக் குனிந்து எடுக்கும் அரவமும் கேட்டது.
‘ எங்கே காட்டு....’
ஓநாய் சப்புக்கொட்டுதல் போன்ற கட்டளை அது. காவல் நிலையத்திற்குள் சிறை கைதி ஆணாகவே இருந்தாலும் அவர்களின் கணீர் குரல் பெண்ணாகி விடுகிறது. போலீஸ், பெண்ணாக இருந்தாலும் அவர்களின் கன்னிக்குரல் ஆணாகி விடுகிறது. என்னிடம் கேட்டது ஆண் குரலா...பெண் குரலா...என என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் அது அதிகாரத்தின் துருப்பிடித்த உச்சக்குரல் என்பதை மட்டும்  உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
நான் உடுத்தியிருந்த ஆடை எனக்குள் கனத்தது. என்னையும் அறியாமல் அது அவிழ்ந்து விடுமோ என்கிற பயம் என்னை மென்றது.
‘ காட்டுனு சொல்றேன்ல....’
ஒரு கை என்னை நோக்கி வந்தது. இடுப்பின் ஊடே நுழைந்து வயிற்றின் மையத்தைத் துலாவியது.  டார்ச் விளக்கு வயிற்றை ஊடுறுவியது.
‘ ம்...சார்...இருக்கு....எழுதுங்க. வயிற்றின் மையத்தில் ஒரு மச்சம்’
எழுதிய உருவம்  நீண்ட நேரம் கிறுக்கிக்கொண்டிருந்தது. கடைசியில் ‘டக்’ என்று ஒரு புள்ளியை வைத்து ‘கிளிப்’பிடப்பட்ட அட்டையையும் பேனாவையும் கீழே வைத்தது.
இரண்டு உருவங்களும் எழுந்து நின்றன. உடம்புகளை முறுக்கிக் கொடுத்தன.
ஒர் உருவம் விரல்களைச் சொடுக்கி ‘ ஏய்....இங்கே வாடி....’ என அழைத்தது. ஒரு பூனை ஒரு எலியை அழைத்தால் இப்படித்தான் அழைக்கும்படியான அழைப்பு அது. நான் அதே இடத்தை விட்டு நகராமல்  இடத்தில் நின்று கொண்டிருந்தேன். டார்ச் வெளிச்சம் அணைக்கப்பட்டு அறை கருவறை இருட்டைப்போல அடர்த்தியாகவும், பயங்கரமாகவும் இருந்தது.
‘ சொல்றேன்ல...இங்கே வாடி....’
நான் இடத்தை விட்டு நகரவில்லை. கண்களை இறுக மூடி குலதெய்வத்தை மனதிற்குள் வேண்டியவாறு நின்றேன்.
‘ நாளைக்கு உங்க ஊர் ஜனங்க எல்லாரையும் விடுவிக்க போறோம்....அவங்க யார் யாரெல்லாம் சந்தன மரம் வெட்டப்போனாங்க...யாரெல்லாம் செம்மரம் வெட்டப்போனாங்கனு உண்மையச் சொல்லிட்டாங்க....நீயும் அவங்கள மாதிரி உண்மையச் சொல்லிட்டா அவங்கக் கூட நீயும் போயிடலாம்....என்னா.?.’
‘ எனக்கு அதெப்பத்தி ஒன்னும் தெரியாது’
‘ எதைப்பத்தி ஒன்னும் தெரியாது’
‘ சந்தன மரம், செம்மரம் வெட்டுறவங்களப்பத்தி ’
‘ யாரெல்லாம் காட்டுக்கு வேலைக்கு போறாங்க....?’
‘ தெரியாது’
‘ நீ போயிருக்கேனு உன் அம்மா சொல்லிருக்கா...?’
‘ அவங்க சொல்லிருக்க மாட்டாங்க’
‘ நீ போனதில்ல...?’
‘ ம்...போனதில்ல....’
‘ நீ என்ன வேலைப்பார்க்கிறே....?’
‘ ஆடு மாடு மேய்க்கிறே’
‘ உங்க ஊருக்கு வெளியே ஓரிடத்தில செம்மரக்கட்டைகள மறைச்சி வச்சிருக்கீங்கனு தகவல் வந்திருக்கு...’
‘ எனக்குத் தெரியாது’
‘ வேற யாருக்குத் தெரியும்’
‘ தெரியாது’
‘ உனக்குத் தெரியும்...’
‘ தெரியாது’
‘ தெரியும்’
‘ தெரியாது’
‘ தெரியும்’
‘ சத்தியமா எனக்குத் தெரியாது. உங்களக் கும்பிடுறேன். என்னால முடியல. என்னை விட்டுருங்க...ப்ளீஸ்....’
பூட்ஸ்களின் காலைப்பிடித்துகொண்டு கெஞ்சினேன். அவ்விரு உருவங்களிடமிருந்து விலகி சுவற்றில் ஒரு மூலையில் ஒடுங்கினேன். இரு உருவங்களும் கேட்டைத் திறந்துக் கொண்டு காட்டுப்பூனைகளைப்போல கள்ளநடையில்  வெளியேறின. எனக்கு மயக்கம் வந்தது. வியர்த்துக்கொட்டியது. சுருண்டு அதே இடத்தில் விழுந்தேன். மயக்கத்தின் ஆழத்திற்கு சென்று கொடுங்கனவுகளின் நீட்சியில் சிக்கினேன். ஒரு பாதாளக்குகை வழியே கரை ஏறி மயக்கத்திலிருந்து மீண்டு விழிப்பிற்கு வந்திருந்தேன்.
மறுபடியும் இரண்டு உருவங்கள். சற்று முன் வந்துப்போன உருவங்கள் அல்ல. வேறொரு உருவங்கள். ஆனால் அதைப்போன்று பூட்ஸ், தொப்பி, பெல்ட், தொப்பை....
‘ உன் பேரென்ன வாசாத்தியா....?’
‘ ம்....’
‘ உனக்கு ஏன்ம்மா இந்த வேலை...?’
‘ எனக்கு சத்தியமா எதுவும் தெரியாது...’
‘ ஒரே பொய்ய திரும்பத் திரும்ப சொல்லக்கூடாது’
‘ எனக்கு ஒன்னுமே தெரியாது....’
ஓர் உருவம் டார்ச் லைட் அடித்தது. மற்றொரு உருவம் கேள்வித் தொடுத்தது. கேள்வித்தொடுப்பும், மிரட்டலும் ரம்பம் போல அறுக்கும் குரலில் இருந்தது.
‘  உண்மையச்சொல்லிவிடு. உன்ன விட்டுருறேன்...’
‘ எனக்குத் தெரியாது..’
‘ பொய் சொல்றே...’
‘ எனக்குத் தெரியாது...’
‘ நீ உண்மைய மறைக்கிற....’
‘ மறக்கல எனக்குத் தெரியாது...’
‘ நீ மறைக்கிற...’
‘ மறைக்கல...’
‘ மறைக்கிற...’
‘ மறைக்கல...’
‘ மறைக்கிற...’
        ‘ உங்கள கும்பிறேன்... நான் எதையுமே  மறைக்கல... என்ன விட்டுருங்க......’
நான் கெஞ்சிக் கதறி கும்பிட்டு தட்டுத்தடுமாறி விழுந்திருந்தேன். அவ்விரு உருவங்களும் என்னிடமிருந்து நழுவிக்கொண்டு கிளம்பியது. கிறில் திறந்து சாத்தப்பட்டது. நான் ஒரு பக்கமாக ஒடுங்கி கால்களை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டு  கிடந்தேன். தொலைவில் வல்லூறுகளின் கத்தலும் பறவைகளின் கீச்சிடுதலும், நரியின் ஊழையிடுதலும் கேட்டுக்கொண்டிருந்தன.
‘ குக்கூ...கூ....கூ...கூ....’ குயிலின் கூவுதல் எனக்குள் சங்கு ஊதுவதைப்போலிருந்தது. என் இதயம் திடும்...திடும்...என இடித்தது. என் ஆடைகள் நனைந்து பிசுபிசுத்துப்போயிருந்தது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. வலி என்னை இறுகப்பிடித்திருந்தது.
என் அம்மாவையும் இப்படித்தான் விசாரணை செய்வார்களோ.... என்கிற கவலை என்னைப்பிய்த்து தின்றது. அம்மாவையும் அவளுடன் சேர்த்து கைது செய்த நம்மூர் பெண்களையும் விடிந்ததும் விடுதலை செய்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்களே...அவர்கள் தெரிந்ததைச் சொல்லிவிட்டார்களோ... தெரிந்ததைச் சொல்லிவிட்டால் விடுவித்து விடுவதாகச் சொல்வது உண்மைதானோ...? எனக்குள் தராசுத்தட்டுகள் ஏறி இறங்கின. மலைவாழ் மக்களுக்கு கிடைத்திருக்கிற வாழ்க்கையை நினைத்து என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
மறுபடியும் கிறில் கேட் திறந்து சாத்தப்பட்ட சத்தத்தைக் கேட்டதும் ‘திடுக்’கென விழித்தேன்.
‘ வாச்சாத்தி....?’
ஓர் அரவமுமில்லாமல் சுவற்றின் விளிம்பில் ஒடுங்கினேன்.
‘ எழுந்திரடி....’ ஓர் உருவம் என் கைகளைப்பிடித்து தூக்கியது. நான் கால்களைத் தரையில் இழுவிட்டுக்கொண்டு தொங்கினேன்.
‘ நில்லு. போயிடலாம்....’
மெல்ல எழுந்து நிற்க முயன்றேன். முடியவில்லை.
‘ நீ வீட்டுக்கு போகணும்ல்ல....’
‘ ம்....’
‘ போலீசு லாக்கப் வாழ்க்க கஷ்டமா  இருக்குல்ல....?’
‘ ம்.....’
‘ போலீஸ்க்காரப் பயல்வ பொல்லாதவன்களா இருக்கான்கள்ள...?’
‘ ம்...’
‘போலீசு கஷ்டடி விசாரணைய தாங்கிக்க முடியாதும்மா... நீ கல்யாணமாகாதப்பொண்ணு வேற.... உனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...ம்...?. உனக்கு என்னத்தெரியுமோ அதை மட்டும் சொல்லு. நீ விடிஞ்சதும் போயிடலாம்...’
‘ எனக்கு எதுவுமேத் தெரியாது...’
‘ தெரியாது...?’
‘ சத்தியமாத் தெரியாது’.
‘ உனக்கு எல்லாம் தெரியும்.  நீ ஒருத்தருக்கிட்ட சொல்லிருக்கே....’
‘ நான் யார்க்கிட்டேயும் சொல்லல....’
‘ சொல்லிருக்கே....’
‘ சொல்லல......’
‘ சொல்லிருக்கே...’
‘ சொல்லல.....’
‘ சொல்லிருக்கே....’
‘ சொல்லல......’
‘ சொல்லிருக்கே...சொல்லிருக்கே....சொல்லிருக்கே....’
என் உடம்பில் வலு இல்லை. அடி வயிறு தீ சுட்டதைப்போலத் தகித்தது. துவைத்த துணியைப்போல ஆகிவிட்டிருந்தேன் நான்.
‘ அய்யோ....என்னை விட்டுருங்க.... எனக்குத் தெரிந்ததைச் சொல்லிடுறேன்.......’
இரண்டு உருவங்களும் என்னிடமிருந்து விலகி நின்றன. என் உடம்பு சடசடத்தது. வியர்த்துக்கொட்டியது.
‘ ம்....சொல்லு...யார் மரங்களை வெட்டச்சொன்னது...?’
‘ யாருனு தெரியாது’
‘ திரும்பவும் நீ  பொய் சொல்றே...?’
‘ யாருனு தெரியாது. ஆனா அவர என்னால அடையாளம் காட்ட முடியும்.......’
‘ அவர் எப்படி இருந்தாரு....?’’
‘ அவரொரு அரசியல்வாதி’
‘ ஆளுங்கட்சியா....எதிர்க்கட்சியா....?’
‘ அது தெரியாது. ஆனா அவரு பெரிய அரசியல்வாதி ’
‘ பெரிய அரசியல்வாதின்னா...?’
‘ ரெண்டு மூனு காரோட வருவாரு...’
‘ அவரை மட்டும்தான் உனக்குத் தெரியும்...ம்....?’
‘ அவர்கூட ஒரு போலீஸ் வருவாரு...’
‘ ஆம்பளப்போலீஸா...பொம்பளப்போலீஸா....?’
‘ ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசமெனத் தெரியாது. அவரு போலீஸ்னு மட்டும்தான் தெரியும்...’
‘ எந்த ஸ்டேசன்ல வேலைப்பார்க்கிறாருனு தெரியுமா....?’
‘ தெரியாது. ஆனா....அவரையும் என்னால அடையாளம் காட்ட முடியும்....’
‘ அவங்க ரெண்டுப்பேரை மட்டும் தான் உனக்குத் தெரியும்....ம்...?’
‘ அவங்க கூட இன்னும் நாலைஞ்சு போலீஸ்க்காரங்க அப்பப்ப வருவாங்க...’
‘ அவங்க யார் யார்னுத் தெரியுமா....?’
‘  தெரியாது...’
‘ ஆனா அவங்களயும் நீ அடையாளம் காட்டுவே...?’
‘ ம்.... காட்டுவேன்...’
அந்த உருவங்கள் இரண்டும் ஒரு நிமிடம் அமைதியாக நின்றன. ஒன்றையொன்று பார்த்துகொண்டன. என்னை நெருங்கி வந்தன. நெருக்கின.
‘ அவங்களத் தெரியுமா....?’
கேள்வியால் என் தொடை இடைவெளி ‘விண்...விண்...’ என்றது. வலி அடிவயிற்றைப் பிளந்தது.
‘ தெரியும்....’
‘ தெரியுமா....?’
‘ தெரியும்...’
‘ தெரியாதுனு சொல்லு’
‘ தெரியும்...’
‘ தெரியாதுனு சொல்லு’
‘ தெரியும்...’
‘ தெரியாதுனு சொல்லு....தெரியாதுனு சொல்லு....தெரியாதுனு சொல்லு....’
அண்டனூர் சுரா

கருத்துகள்

  1. ஐயா! முந்தா நாள் இரவே படித்து விட்டேன். ஆனால், கைப்பேசியிலிருந்து படித்ததால் உடனே கருத்திட இயலவில்லை.

    ஒரு கொடுமையைச் செய்தியாகப் படிப்பதற்கும், அதையே கதை கவிதை போன்ற புனைவு வடிவங்களில் படிப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இரண்டாவது வடிவத்துக்குத் தாக்கம் மிக மிகக் கூடுதல். இந்தக் கதை அதற்கு இன்னொரு அத்தாட்சி!

    மிகவும் திகிலூட்டும் கதை! நான்காவது வரியைப் படித்தவுடனேயே என்ன மாதிரியான கதை என்பது தெரிந்து விட்டது. ‘வாச்சாத்தி’ என்ற பெயரைப் பார்த்தவுடனேயே எந்தக் கதை என்பதும் தெரிந்து விட்டது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை மெலிதான உள்ளத்து நடுக்கத்துடனேயே படித்து முடித்தேன். முதல் பரிசு என்றால் சும்மாவா? மிகச் சரியாகவே கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வை இந்தத் தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இப்படிக் கதை வடிவில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தோழர்.9444640986 தொடர்புகொளளுங்கள் அய்யா. உங்கள் விருப்பத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. நன்றி தோழர்.9444640986 தொடர்புகொளளுங்கள் அய்யா. உங்கள் விருப்பத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...