ஆணி வேரும் சில சல்லிகளும்..... தன் குஞ்சுகள் மொத்தத்தையும் பருந்திற்கு கொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்குமே கோழி அப்படியாகத்தான் அந்த வேப்பமரம் நின்றுகொண்டிருந்தது. அம்மரத்தின் மொத்த இலைகளும் பழுத்து, கருகி, உதிர்ந்துபோயிருந்தன. மரக்கிளைகள் கவிழ்ந்து தானாகவே ஒடிந்து அந்தரத்தில் தொங்கின. பித்த வெடிப்புகளைப்போல் வேர் வெடிப்புகள். தண்டுகள் பட்டைப்பட்டைகளாகத் தெரித்து உதிர்ந்துகொண்டிருந்தன. மரமெங்கும் கரையான்கள். சுள்ளெரும்புகள், சூவைகள். எப்படி இருந்த மரமிது! ஊரின் பெரிய வேப்பமரம் இதுதான். குடை ராட்டினம் போல நாலாபுறமும் கிளைப்பரப்பி கவிழ்ந்திருக்கும். சாணம் தெளித்ததைப்போல நிழல்கள் சொட்டைச் சொட்டையாக. சிலு..சிலு...வென இதமாகக் காற்று வீசிக்கொண்டிருக்கும். ஒரு குட்டி சோலைவனம் அது. பொழுது விடிந்தால், இருட்டினால் போதும். பறவைகளின் குதூகலத்தால் மரம் ஆர்ப்பரிக்கும். ‘ கீக்...கீக்...கீக்....’ ‘ கொக்...கொக்...கொக்....’ ‘ கிரீ...