கட்டுரை அண்டனூர் சுரா
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முனைவர்
பட்டம் பெற்ற வேலையில்லா தமிழ் பட்டதாரி ஒருவர்
ஒரு பல்கலைக்கழகம் நடத்திய நேர்முகத்தேர்வில் கலந்துக்கொண்டிருந்திருக்கிறார் . அவரிடம் இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது . “ மயக்கம்
எதனால் வருகிறது? ” . அதற்கு அவர் இவ்வாறு பதில் சொன்னார் . “ நேரத்திற்கு சாப்பிடாததால் வருகிறது ” . இந்தப்பதிலைக் கேட்டதும் கேள்வி தொடுத்தவருக்கு மயக்கம் வந்துவிட்டது. அடுத்து கேட்டார் “ மயக்கத்தை எத்தனை வகைப்படுத்தலாம்?” . “ இரண்டு
வகைப்படுத்தலாம்” . கேட்டவருக்கு
இன்ப அதிர்ச்சி. அவரைப்பாராட்டாமல்
இருக்க முடியவில்லை. “ அவை என்னனென்ன?”. அதற்கு அந்தப் பட்டதாரி சொன்னார் “
பசி மயக்கம், வியப்பு மயக்கம் ” .
மொழியில் உள்ள சொற்களின் ஓசையை செழுமைப்படுத்தவே
மயக்கம் வருகிறது . அதாவது
எழுத்துகள் ஒலியின் அளவை நீட்டிக்கும் பொருட்டு தமக்குள்ளாக மயங்குவதே மயக்கமாகும்
. ஒன்று உயிர் மயக்கம். உதாரணம் சொல்லிசைஇ (ஐஇ) . மற்றொன்று மெய்ம்மயக்கம். உதாரணம் வளர்ச்சி (ர்ச்) . இந்திய
மொழிகளில் தமிழ் மொழிக்கு மட்டுமே இருக்கின்ற சிறப்பு இலக்கணம் இது. அந்நிய
நாட்டு மொழிகளில் மயக்கத்தை ஆங்கில மொழி மட்டுமே பெற்றுள்ளது. தமிழ் மொழியில்
மயக்கம் மொழியின் தொடக்கத்தில் , இறுதியில்
வராது. இடையில்
மட்டுமே வரும்.
தொலைக்காட்சி என்கிற சொல்லில் மயக்கம் இல்லை
. தொலைக்காட்சியில் இடம்பெறும் சினிமா, செய்தி,
விவாதம், பேட்டி, கருத்தரங்கம், விளம்பரம் ,ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றில்
ஒன்றில் கூட மயக்கம் இல்லை . ஆனால் பாருங்கள்! தொலைக்காட்சியை பாரக்கும் பொழுது நம் ஒவ்வொருவருக்கும் மயக்கம் வரவே செய்கிறது !
மக்களின் மூன்றாவது கண் என குறிப்பிடப்படுவது தொலைக்காட்சி. கண் என்பதே விகாரம் பெற்று காண் என்றானது. அதுவே காட்சியானது
. காட்சியை பௌதீகம் இரு வகைப்படுத்துகிறது. ஒன்று குறுங்காட்சி. மற்றொன்று தொலைக்காட்சி. தொலைவில் நிகழும் காட்சிகளை கண் முன் கொண்டு வந்து
நிறுத்துவதே தொலைக்காட்சி . அப்படியெனில் வளர்ந்திருக்கும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி இணைய
வளர்ச்சியில் தமிழ்நாட்டையும், மாவட்டத்தையும் நடிகர்,நடிகைகளையும், சினிமாவையும்
மட்டுமே காட்டிவிட்டு தொலைக்காட்சி என்பதற்கான முழு பொருளையும் அறுவடை செய்திட முடியாது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான்
எந்த இடத்தில் இருக்கிறது ? நூறு ஆண்டுகளுக்குப்பின் நயாகரா வீழ்ச்சி பனிக்கட்டி வீழ்ச்சியாகிப்போனது
ஏன்? இந்த நிகழ்வு பூமிக்கு அது அறிவிக்கும்
எச்சரிக்கை என்ன? தென்னிந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக தொடர் மழை இல்லாமல் போனது எதனால்
? இந்த நிலை நீடித்தால் இந்தியா , தமிழகம் என்னவாகும் ? இதுபோன்ற கண்ணுக்குத்தெரியாத
தொலைத்தூர நிகழ்வுகளை விவாதித்தல், செய்தியாக்குதல், ஒளிப்பரப்பினால் மட்டுமே தொலைக்காட்சி என்பதற்கான முழுப்பொருளையும் அடைய முடியும். அப்படிப்பார்க்கையில் நம் பார்த்துக்கொண்டிருப்பது
உங்கள், எமது, நமது தொலைக்காட்சி தொலைக்காட்சியே
அல்ல. தொல்லைக்காட்சிகளே!
“ நம் நாட்டின் முதுகெலும்பு பஞ்சாயத்து
(கிராமம்) ” இது காந்தியடிகள் சொன்னது. பஞ்ச
என்றால் ஐந்து . ஒரு
நாட்டிற்கு தேவையான உழவு, உற்பத்தி, நாணயம், அரசியல், நிர்வாகம் இவை ஐந்தும் கிராமத்திலிருந்து
பிறப்பதால் கிராமத்தை அவர் பஞ்சாயத்து என்றார். இது ஒரு புறம் இருக்க, ஒரு நாட்டின் கட்டமைப்பை பஞ்சாயத்து ( ஐந்து அங்கங்கள் ) என்கிறார் எழுத்தாளர் அகிலன். தலை – அறவோர் , சிந்தனையாளர். நெஞ்சு
– கட்சி ,அரசியல், நிர்வாகம், போலீஸ், இராணுவம் . வயிறு – வாணிபம், உற்பத்தி, வாங்குபவர், விற்பவர். கை-
உழவர்கள். கால்-
இயந்திரத்தொழில், கனிம உற்பத்திகள். அப்படிப்பார்க்கையில்
நம் நாடு பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டதே.
இன்று தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாகிப்போனதும் இந்த
பஞ்சாயத்தால்தான். கிராமங்களில்
கட்டப்பஞ்சாயத்து ஒளிக்கப்பட்டு விட்டதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால்
அது தொலைக்காட்சிகளில் வேர்விட தொடங்கியிருக்கிறது. வட்ட மேஜை மாநாடு போல உட்கார்ந்துக்கொண்டு தினம்
தினம் நடக்கும் நிகழ்வுகளை கலந்துரையாடுவது ஒருவகை பஞ்சாயத்துதான். இது ஆரோக்கியமான நிகழ்ச்சி . அதில்
மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஒரு நாட்டின் நெஞ்சு என குறிப்பிடப்படும்
அரசியல் மற்றும் கட்சிகளை மட்டும் விவாதிப்பது
ஆரோக்கியம் இல்லையே! ‘அந்தக்கட்சி இந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்வதால் அந்த அணிக்கு
சாதகமா? பாதகமா? ‘ சாதகமா? பாதகமா? என்கிற
அவர்களின் கேள்வி நாட்டுக்கு அல்ல. அணிக்கு! பிறகு எதற்காம் தேர்தல்?
கிராமங்களில் இப்போதெல்லாம்
குழாயடி சண்டை நடப்பதில்லை. அப்படியெனில் தண்ணீர்
தேவைகளில் தன்னிறைவு அடைந்து விட்டதாக
எடுத்துகொள்ளக் கூடாது . என்ன விலை கொடுத்தேனும்
மக்களிடமிருந்து வாக்குகளை வாங்குவிட முடியும்
என்கிற நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு வந்திருப்பதைப்போல தண்ணீரையும் விலைக்கு வாங்கிவிடமுடியும்
என்கிற நம்பிக்கை மக்களிடம் வளர்ந்திருக்கிறது . ஆகவே இன்றைய கிராமங்கள் அமைதியாக இருக்கிறது. ஆனால் பாருங்கள் தொலைக்காட்சியில் நிகழும் அரசியல்
கட்சிகளுக்கிடையேயான கருத்து யுத்தம் பைப்படி
சண்டையை தோற்கடித்து விட்டது. இதில் மிகவும்
பரிதாபத்திற்குரிய நிகழ்வு என்னத்தெரியுமா? ஒரு அரசியல் தலைவர் மாநிலம் கடந்து தேசியத்தலைவராக அவதாரமெடுக்கிறார். மக்களிடம்
நன்மதிப்பை பெற்று ஒரு மாற்றுத்தலைவராக உருவாகிறார். ஆனால் அவர் கட்சியைச்சார்ந்த சிலர் நேரடி விவாத்தில்
கலந்துகொண்டு கட்சியை வளர்க்கிறோம் எனும் பெயரில் முன்னுக்குப்பின் முரனாகவும் அகடவிகடமாகவும் பேசி
மக்கள் வைத்திருக்கும் கட்சியின் மீதான நம்பிக்கையை குழைக்கிறார்கள் . இதை என்னவென்று
சொல்வதோ?
இன்னொரு
பஞ்சாயத்து பெண்கள் மத்தியில் மூன்றாவது காதாக மாறிப்போயிருக்கிறது. கள்ளக்காதல்,
கொலைக்காதல், பொல்லாக்காதலை சேர்த்து – பிரித்து வைக்கும் நிகழ்ச்சி அது . அந்தரங்கத்தை
உலகச்சந்தையில் கூவி விற்கும் நிகழ்ச்சியும் கூட . அந்த நிகழ்ச்சியில் தோன்றும் திடீர்
நீதிபதிகள் கறுப்பு உடை அணிவதில்லை. கையில் சட்டத்துறை நூல்கள் இல்லை. கண் கட்டிய நீதி தேவதை , தராசு இல்லை. சுத்தியல் இல்லை. அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு மறுதீர்ப்பும்
இல்லை. மேல்முறையீடும் இல்லை. அவர்கள் பளேர் நீதிபதிகள். ஆம். அண்ணாவின் வாசகத்தை சற்று மாற்றி எழுதலாம். சட்டம்
ஒரு தொலைக்காட்சிப்பெட்டி . அதில் சம்மந்தப்பட்டவர்களின் வாதம் ஒளி விளக்கு.
இது ஒரு புறம் இருக்க, வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு கட்சிக்கு நிதி வசூலிக்கும் தாண்டவம்
நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.
ஒரு கட்சியின் கொள்கை இது. ‘
நோட்டும் ஓட்டும் ஒன்றே‘ . இதுபரவாயில்லை. “ கட்சிக்கு
ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று விடலாம்” அரசாண்ட ஒரு கட்சி உறுப்பினரின் வாக்கு மூலம் இது” . ஒரு மாநில கட்சி உறுப்பினரின் விமர்சனத்தை பாருங்கள். ‘ கோடான
கோடி கொடுப்பினும் இந்த முறை அவருக்கு அங்கே சீட் இல்லை‘. சுதந்திரப்போராட்டத்தை
வீறு நடையில் கொண்டுச்செல்ல காந்தியடிகள் கையெழுத்து வேட்டை நடத்தினார் . ஒரு
கையெழுத்திற்கு ஐந்து ரூபாய். போதுமான நிதி வசூலானதும் அதை அவர் நிறுத்திக்கொண்டார். ஆனால்
அவர் பெயர் கொண்ட தேசத்தில் கட்சி நடத்தும் நம் அரசியல்வாதிகள் அதிரடி வசூலை நிறுத்துக்கொள்வதாக தெரியவில்லையே!
‘ நாங்கள் எந்தக்கட்சியுடன் கூட்டணி
என்பதை மாநாடு கூட்டியே முடிவு செய்வோம் ‘ இன்றைய தமிழத்தின் நவீன அரசியல் பாடம் இது
. எந்தவொரு
கட்சியும் ஒரு மாநாட்டை திட்டமிட்டு நடத்தி முடிக்க குறைந்தப்பட்சம் இரண்டு கோடி ரூபாய்
செலவு செய்வதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது
. ஏழ்மையை அகற்ற வந்த கட்சிகள் முதல் தமிழகத்தை உயர்த்திப்பிடிக்க
வந்த கட்சிகள் வரை கூட்டம் சேர்த்து மாநாடு நடத்துவதையே கொள்கையாக கொண்டுள்ளது . இதெல்லாம் தேர்தல் கணக்கில் சேராது
என்பது மயக்கத்தை வரவைக்கக்கூடிய செய்தியாகும்.
1930 – 32 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தின்
முதலமைச்சராக இருந்தவர் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசர் ‘ பொப்பிலி ராஜா ‘. திருவண்ணாமலைக்கு
வருகைத்தந்த காந்தியடிகளை வரவேற்க அவர் அந்நகரத்திற்கு
வருகைத்தந்தார். அந்நகர
நிகழ்ச்சியின் முடிவில் திலக் சாஸ்திரி எனும்
ஒரு நிரூபர் காந்தியடிகளிடம் ஒரு கேள்விக்கேட்டார். “ சுதந்திரம் பெற நீங்கள் இத்தனை வேகம் காட்டக்காரணம்
என்ன?” காந்தியடிகள் சொன்னார் . “ வடஇந்தியாவிலிருந்து
தென் இந்தியாவிற்கு வருகைத்தந்த எனக்கு ஆகியிருக்கும்
ஒரு நாள் சாப்பாடு செலவு வெறும் ஐந்தரை அணா. ஆனால் என்னை வரவேற்க வந்த இம்மாகாண முதலமைச்சருக்கான
சாப்பாடு செலவு எழுத்து ஐந்து ரூபாய் . இந்த நிலை இனிமேலும் தொடராமல் தடுக்கவே பூர்ண சுதந்திரம்
பெற முனைகிறேன் ” என்றார்.
தேசம் முழுமைக்கும் ஒரு தேர்தலை நடத்தி
முடிக்க அரசு எத்தனைக்கோடி ரூபாய் செலவு செய்கிறதோ அதை விட கூடுதலான செலவை ஒரு மாநில
கட்சி அந்த மாநிலத்தில் தேர்தலை சந்திக்க செலவு செய்வதாக தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்திருக்கிறது. மயக்கம்
வருவதைப்போல இருக்கிறது அல்லவா!
வருகிற நாடாளுமன்றத்தேர்தலில் இந்திய நாட்டின் பிரதமர் யார் என முடிவு செய்வது பொதுமக்கள்
அல்லவாம்! பிறகு........... ? . அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, ஜப்பானின் பத்திரிக்கைத்துறை
, ரஷ்யாவின் அணு சக்தித்துறை இவை மூன்றும்தானாம் ! இதற்கான முன்னோட்டமாக நாடாள துடிக்கும் இந்தியத்தலைவர்கள் தங்களின் ஆளுமையை
உயர்த்திப்பிடிக்க வெளிநாடுகளில் மூன்று இலக்க மதிப்புகளில் பல கோடிகள் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எந்தக்கட்சி யாருடன் கூட்டணி என முடிவாகவில்லை. யார்க்கு எத்தனை இடம் என பிரிக்கவில்லை. எந்தத்தொகுதிக்கு யார் வேட்பாளர் என அடையாளப்படுத்தவில்லை
. அதற்குள் இத்தனை கண் கட்டி வித்தை, மயக்கம் வர
வைக்கக்கூடிய மூடு மந்திரம் தொடங்கிவிட்டது. இத்தனையும் அறிவிக்கப்பட்டுவிட்டால்
...............?
தமிழக மக்களே ............... இப்பொழுது
சொல்லுங்கள் மயக்கம் எதனால் வருகிறது? எழுத்துகள்
ஒலியின் அளவை நீட்டிக்கும் பொருட்டு தமக்குள்ளாக மயங்குவதால் மயக்கம் வருகிறது என்கிறீர்களா
? . அதுதான்
இல்லை ! தேர்தல் வருவதால் வருகிறது!
அண்டனூர் சுரா
(
எழுத்தாளர் )
மண்டேலா
நகர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
மாவட்டம்
613301
தொடர்புக்கு 958565 - 7108
கருத்துகள்
கருத்துரையிடுக