தேர்வு எண் 259742
வகுப்பு ஆறு
பாடம் கணக்கு
அ. சுருக்கமான விடை
1. “ சிக்புக், சிக்புக் , சிக்புக்..............................”
2. இரயில் சத்தத்தைக் கேட்டதும் வாரி சுருட்டிக்கொண்டு
எழுந்தேன் . உடம்பெல்லாம் வலி. தீ சுட்டதைப்போல ஆடைக்குள் எரிச்சல்.
ஆடையை இரத்தம் நனைத்திருந்தது. அதை லாவகமாக மறைத்துகொண்டேன். இரவெல்லாம் தூக்கம்இல்லாததால் இதயம் திடும்திடும் என மார்புக்கூட்டை இடித்துகொண்டிருந்தது.
கண்களை உருட்டித்திரட்டி விழிக்க முடியவில்லை. கண்ணாடித்துகள்கள் கிடந்து அறுப்பதைப்போல கண்களை உறுத்தியது.
3.நான் எழுந்ததும் சித்தி
மின் விளக்கிற்கு உயிர் கொடுத்தாள். ஒளிவெள்ளத்திற்குள்
நான். ஒளிக்கீற்றுகள் என்னை துலாவி பார்ப்பதைப்போல பளீச்சிட்டன.
சித்தி கண்களை தேய்த்துகொண்டு
என்னைப்பார்த்தாள். பிற்கு
மணியைப்பார்த்தாள். மணி
ஆறாவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன.
4. “ சரண்யா ............. மணிஆறு ஆச்சு.
இவ்ளோ நேரமா தூங்குறது?முழுப்பரீட்சை இல்லையா. கணக்கு பரீட்சை வேற. எழுந்திருச்சு மொகத்தைக்கழுவு .
படி........... ” . சித்தி உச்சந்தலையில்
கையை வைத்து ஆசி வழங்குவதைப்போலசொன்னாள்.
5. “ சித்தி............
நான் வீட்டுக்கு போகணும்” என்றேன்.
6. ”
ஏன்.............?”
7. “ அம்மாவைப்பார்க்கணும்”
8. சித்தி என் அருகினில் வந்தாள். எனது கன்னங்களை வருடினாள். என் கண்களில் பெருக்கெடுத்திருந்த கண்ணீரை முந்தாணையால் துடைத்தாள்.
“ பரீட்சை முடிஞ்சதும்
சித்தப்பாவை கொண்டு வந்து வீட்ல விடச்சொல்றேன். இன்னும் ரெண்டு நாள்தானே . இன்னைக்கு கணக்கு, நாளைக்கு அறிவியல்,
அடுத்த நாளு சமூகவியல். அவ்வளவேதான்! அப்புறம் ஒரு மாதம் லீவு . நீ அம்மா, அப்பா கூடவே இருக்கலாம்.
கொஞ்சம் பொறுத்துக்கோ ”
என்றாள்.
9. பொறுத்துக்கோ என்கிற சொல் என்னை குடைந்தெடுத்தது.
“ ப்ளீஸ் சித்தி . என்னை கொண்டு வந்து
அம்மாக்கிட்ட விடு”
10. “சித்தி சொன்னா புரிஞ்சுக்கோம்மா” என செல்லமாக
கோபித்தப்படி மிரட்டி, அனுதாபம் காட்டிவிட்டு
சமையலறைக்குள் சென்றாள். ஆவியாகிக்கொண்டிருக்கும் டீயை கொண்டு வந்து என் முன்னால் ஆற்றினாள். கொஞ்சம் போல குடித்துப்பார்த்துநாக்கை
சப்பிக்கொட்டி உள்ளுரச் சுவைத்தாள். சிறிய தம்ளரில் டீயை
ஊற்றி என்னிடம் நீட்டினாள்.
11. “ சித்தி நான்
வீட்டுப் போகணும்”
12. “ போகலாம். முதல்ல இதை குடி”
13. நான் ஒரு மிடறு பருகினேன்.
14. சித்தி கேட்டாள் “ சீனி சரியா இருக்கா?”
15. “ ம். சித்தி” என்றபடி அவளைப்பார்த்தேன்.
16. சித்தி சொன்னாள். “ நீ பொய் சொல்கிறாய். போய் சீனி டப்பாவை எடுத்துக்கிட்டு வா “
17. நான் எழுந்தேன் . நிற்க முடியவில்லை. வலிஉடம்பிற்குள் சுருக்,சுருக் என தைத்தது . அழுதுவிடலாமென தோன்றியது. கீழ் உடம்பு அசையாமல் கால்களை மெதுவாக எடுத்துவைத்து நடந்தேன். ஏன் இப்படி நடக்கிறாய்? சித்தி கேட்டிருக்க
வேண்டும். கேட்கவில்லை.
18. “ஏன்தான் இந்த கணக்கு பாடத்தைப்பார்த்து இப்படி பயப்படுகிறாயோ
? ” என்று மட்டும் கேட்டாள் . பிறகு சொன்னாள். “ நேற்றைய தினம் சித்தப்பா எந்ததெந்த
கணக்கெல்லாம் சொல்லி்க்கொடுத்தாரோ அந்த கணக்கையெல்லாம் சரியாச் செய். எந்தக்கணக்கு தெரியலைனாலும் சித்தப்பா
சொல்லிக்கொடுத்தகணக்கை மட்டுமாவது சரியா செய்திட்டு வா .” கண்டிப்புடன் கூடிய அறிவுரையை எனக்கு வழங்கினாள் .
ஆ. விரிவான விடை
1. நேற்று மதியம் நடந்தது இது . சித்திவீட்டில் இல்லை. பரீட்சை எழுதுவதற்காக தஞ்சாவூர் சென்றிருந்தாள்.
சித்தப்பா மட்டும் வீட்டில்
இருந்தார். அவருக்கு
குழந்தை இல்லை. ஒரு வேளை
இருந்திருந்தால் குழந்தைகள் வீட்டில் இருந்திருக்கும். தூங்கி இருக்கும், இல்லை விளையாடிக்கொண்டிருந்திருக்கும். இல்லை எதற்காகவோ அடம் பிடித்து அழுதுகொண்டிருந்திருக்கும்
.
நான் வீட்டிற்குள் நுழைந்ததும் சித்திப்பா
என்னை பார்த்து சிரித்து வைத்தார். “ பரீட்சை நல்லா எழுதினாயா
?” எனக்கேட்டார். நான் பதிலுக்கு சிரித்தபடி “ ம். எழுதினேன் சித்தப்பா
” என்றேன். “ எத்தனை
மார்க் வரும்? ” எனக்கேட்டார். “ வரும் சித்தப்பா ” என்றேன். “ வரும் என்றால் அம்பது மார்க் ?” என
ஒரு இழு இழுத்தார். “ எழுபது
வரும்” என்றேன். சித்தப்பா
என்னைப்பார்த்து “ நல்லது. அதுபோதும் . அடுத்த பரீட்சைக்கு
படி ” என்றார்.
நான் சாப்பிட்டேன்.
கொஞ்ச நேரம் தூங்கினேன்.
நான் எழுந்திருக்கும் பொழுது
மாலை மூன்றுமணி . எழுந்ததும் சித்தப்பா எனக்கு டீ வைத்து கொடுத்தார். “ அடுத்த பரீட்சைக்கு படி ” என்றார். நான் “ சரிங்க சித்தப்பா ” என்றேன். கொஞ்ச நேரம் டீச்சர் நடத்திய கணக்குகளை எடுத்து பார்த்துகொண்டிருந்தேன்.
சித்தப்பா என் அருகினில் வந்து உட்கார்ந்தார்.
நான் சற்று விலகி உட்கார்ந்தேன்.
என் கண்களைப்பார்த்து சிரித்தார்.
நான் நோட்டின் பக்கத்தை
திருப்பிக்கொண்டிருந்தேன். எனது நோட்டை வாங்கி எழுபத்து ஐந்து பெருக்கல் ஐம்பது
என எழுதி அதைப்பெருக்கச்சொன்னார். நான் பெருக்கிக்காட்டினேன். அதை செய்து முடிப்பதற்கு ஐந்து நிமிடங்கள்
எடுத்திருந்தேன்.
2. சித்தப்பா அதை வாங்கிப்பார்த்தார்.
“சரிதான்” என்றார். எனது கைகளைப்பற்றி குலுக்கினார். “ இதைவிட எளிமையாக செய்யலாமே ” என்றார்.
நான் “ எப்படி சித்தப்பா
?” என்றேன். எழுபத்து
ஐந்துடன் நூறைப்பெருக்கினால் எவ்வளவு ?” எனக்கேட்டார். நான் அதையும் பெருக்கிக்கொண்டிருந்தேன். அவர் எனது கன்னத்தை மெதுவாக கிள்ளி “ அழகு இருக்கு.
அறிவு இல்ல ” என்றார்.
அவர் கிள்ளியதை விட அறிவு
இல்லை என்கிற வார்த்தைதான் எனக்கு சட்டென தைத்தது.
“ எந்த எண்களையும் நூறால்
பெருக்க வேண்டியதில்லை. அந்த எண்ணிற்கு பக்கத்தில ரெண்டு ஜீரோ
போட்டால் போதுமே” என்றார். எழுபத்து ஐந்திற்கும் பக்கத்தில் இரண்டு
ஜீரோ போட்டு “ இப்ப இது எவ்வளவு ?“ எனக்கேட்டார். நான் “ ஏழாயிரத்து ஐநூறு ” என்றேன். “சரியாகச் சொன்னாய்” என்றவாறு என் முதுகை
தட்டிக்கொடுத்தார்.
“ சரி இந்த ஏழாயிரத்து ஐநூறில் பாதி எவ்வளவு ?” எனக்கேட்டார்.
நான் திறு, திறுவென முழித்தேன். அவர் என்னுடைய உதடுகளை குவித்து விரல்களால் தடவினார் . “ இதை ரெண்டால் வகு ” என்றார். நான் வகுத்துக் காட்டினேன்.
“ எவ்வளவு வருகிறது ?
” என்றார். “ மூவாயிரத்து
எழுநூற்று ஐம்பது ” என்றேன். அவர் என் கன்னங்களை வருடினார்.
3. எனக்கு பொதுவாகவே கணக்குப்பாடம்
பிடிப்பதி்ல்லை. அதில் சித்தப்பா சொல்லிக்கொடுத்தது கணக்குதானா
? என்கிற சந்தேகம் எழுந்தது. அவர் சித்தப்பா தானா? நான், நான் தானா? என் பெயர் சரண்யா தானா? நான் மனிதப்பிறப்பா இல்லை பிச்சிப்பூவா? எனும் மாதிரியான
கேள்விகள் எனக்குள் எழுந்தன. ”எனக்கு பயமா இருக்கு. நானே படிச்சிக்றேன்” என்றேன். சித்தப்பா என்கிற வார்த்தையை அப்போது நான் உச்சரிக்கவில்லை. அவர் ”ஏன் ?” என்றார். நான் கீழே குனிந்துகொண்டேன்.
அவன் என் முகத்தை உயர்த்திப்பார்த்தான்.
அவர் என்பதை இனி அவன் என்று சொல்லவே விரும்புகிறேன். “ பிடிக்கலையா ?” என்றான். “ ம்” என்றேன். என்னைப்பிடிக்கலையா ? இல்ல கணக்கு பிடிக்கலையா?
” எனக்கேட்டான். கேட்கிறான் பார் கேள்வி! கொஞ்சநேரம் என்னையே பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தான். என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தான்.
அவனது விரல்கள் என்னுடைய கன்னத்தில் பட்டது கம்பளி பூச்சி நெளிவதைப்போல
அருவருப்பாக இருந்தது.
“ சொல்லு சரண்யா . என்னைப்பிடிக்கலையா? இல்ல கணக்கு பிடிக்கலையா
?” எனக்கேட்டான். நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
“ சனியனே . நான் உனக்கு மகளடா. நீ எனக்கு கணக்கு நடத்த வில்லை.
கணக்கு பண்ணுகிறாயடா ”
. அவன் சொன்னான். “ சரண்யா................என்னமோ
சொல்லுகிறாய் , ஆனால் புரியவில்லை ” என்றான். எனது விரல்களைப்பற்றி
சொடுக்கெடுத்தான்.
4. “ ஏ பிளஸ் பி கோல்ஸ் ஸ்கொயர் இதுக்கு என்ன பார்முலா ?” எனக்கேட்டான். நான் வெறுமென உட்கார்ந்திருந்தேன். “ தெரியாதா ? ” எனக் கேட்டான். “ நான் “ ம்” என்றேன். “ஏ என்பது நீ , பி என்பது நான் என வச்சிக்கிட்டால்
, நீ ஸ்கொயர் பிளஸ் நான் ஸ்கொயர் பிளஸ் டூ நீநான் ” என்றான். நீநான் என சொல்லும் பொழுது என்னை அவன்
அவனோட அணைத்துகொண்டான். நான் திமிறினேன். விசும்பினேன். என்னை அறியாமல் சிறுநீர் கழித்தேன். அவன் என்னையும் ஈரத்தையும் ஈரமில்லாமல் பார்த்தான்.அசிங்கமா சிரித்தான்.
“ நீ வீட்டை நாசம் செய்ததை உன் சித்தி வந்ததும் சொல்லிவிடுகிறேன் ” என மிரட்டினான். “சொல்லட்டுமா ? ம்................. சொல்லட்டுமா ? ” தாவங்கொட்டையை உயர்த்தி
சிரித்து வைத்தபடி கேட்டான். நான் “ வேண்டாம் ” என்றேன். “ அப்படியென்றால் இங்கே வா ” என்றான். நான் சுவற்றில் ஒன்றினேன். என்னை அவன் இழுத்துச்சென்றான்.
5. மன்னிக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில்
தெரியும் . ஆனால்
எப்படி எழுத வேண்டும் என்றுதான் தெரியவில்லை.
6.
மேற்கண்ட கேள்விக்கு பதில் எழுதாமல் விட்டது ஒரு வகையில் நல்லது என்றே எனக்குப்படுகிறது.
ஏன் தெரியுமா ? நான் என்ன
பதில் எழுதினாலும் என்னை நீங்கள் அசிங்கப்படுத்தவே செய்வீர்கள். அனுதாபம் காட்ட மாட்டீர்கள். காரணம் நான் ஓர் இந்தியப்பிரஜை
! எனது கதையை சினிமா எடுப்பீர்கள். தொலைக்காட்சியில் வட்டமேஜை மாநாடு நடத்துவீர்கள்.
தின, நாள் , வார பத்திரிக்கைகளில் கிசுகிசு எழுதுவீர்கள்.
ஆனால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் காட்டமாட்டீர்கள்.
7. ஐந்தாவது கேள்விக்கான பதிலை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் உன் சித்தி
உயிரோடு இருக்கமாட்டாள்.உன்னையும் கொன்று புதைத்து விடுவேன்.
ஒரு கத்தியைக்காட்டி மிரட்டினான். அதுமட்டுமா சொன்னான். என் அம்மா அப்பாவையும்
கொன்று விடுவானாம்.
8. எனக்கு
நிகழ்ந்த அத்துமீறலை, பலாத்காரத்தை, அவமரியாதையை
சித்தியிடம் சொல்ல எனக்கு தைரியம் இல்லை.
அவள் அழுது ஊரைக்கூட்டிவிடும் வம்சாவளி . என்னை நடத்தைக்கெட்டவள் எனச்சொல்லி என்னை ஒதுக்கி வைத்தாளும் வைத்துவிடுவாள். கணவன் மனைவி உறவை பிரிக்கவா நீ வந்து
முளைத்தாய் என குத்திக்காட்டுவாள். அவள் பட்டப்படிப்பெல்லாம் படித்திருக்கிறாள் என்றுதான்
பெயர். பழமைவாதி
. சராசரி இந்தியப்பெண். கற்பு விசயத்தில்
கறார் பேர்வழி.
9. அம்மாவிடம் சொல்லி அனுதாபம் தேடிக்கொள்ள
துடிக்கிறேன். அம்மாவை கட்டிப்பிடித்து அழுது தீர்க்க தவிக்கிறேன்.
அம்மா.................
அம்மா................... என்னை ஏன்மா இத்தனைத்தூரம் கடந்து என்னை இங்கு சேர்த்து விட்டாய்?
தூரத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தால் நான் டாக்டராவேன் என்றா ?
போம்மா ............. உன் கூட நான் டுக்கா.
10. சித்தி
என்னை இன்று பள்ளிக்கூடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு அவள் பரீட்சைக்கு போய்விட்டாள். என்னைப்போல அவளும் பரீட்சை எழுதிக்கொண்டிருப்பாள். நான் பரீட்சை முடிந்ததும் வீட்டுக்கு பத்திரமாக போக வேண்டுமாம். சித்தி சொல்லிருந்தாள். சித்தப்பா மட்டும் வீட்டில் இருப்பார். அவரிடம் அறிவியல் பாடத்தில் முக்கியமான
கேள்விகள் எதுவென்று கேட்டு அதை மட்டும் படிக்க வேண்டும் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள்.
சொன்னவள் நின்று எனக்கு டாட்டா கூட காட்டவில்லை. அவளுக்கு நேரமாகி விட்டதன்று திரும்பிப்பார்க்காமல் ஓடியே விட்டாள்.
நான் தேர்வு முடிந்ததும் சித்தி வீட்டிற்கு போகத்தான் வேண்டுமா?
மாட்டேன் மாட்டவே மாட்டேன் . அது என்னால் முடியாது. எனக்கு பயமாக இருக்கிறது. அவனை நினைக்கும் பொழுதே எனக்கு தலைச்சுற்றுகிறது. இதயம் பளேர் பளேர் என அறைகிறது.
11. போனால் என்ன நடக்கும்.............? யாருக்குத் தெரியும். நாளைக்கு இப்படியெல்லாம் வலிக்காது எனச்
சொன்னானே. சொல்ல முடியாத இடத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து
இடுவதாக சொல்லிருந்தானே. புது ட்ரெஸ் ஒன்று எடுத்து தருவதாகவும் அத்துடன்
சத்தம் கொடுக்காத கொலுசு ஒன்றும் வாங்கித்தருவதாக
சத்தியம் செய்தானே . அடச்சீச்சி ! அவனும் எதிர்க்காலத்தில் ஒரு குழந்தை அப்பாவாகத்தான்
போகிறான்.
இ. வரைபடம்
1. அவசரத்தில் ஜாமன்ட்ரி பாக்ஸ் எடுத்து வராததால் என்னால் படம் வரையமுடியவில்லை. வரைபடத்திற்கான வரைமுறையை மட்டும் எழுதுகிறேன்.
2. முதலில் தேர்வறையை விட்டு சக மாணவர்களுக்கு முன் முதல் நபராக வெளியேறுகிறேன்
3. ரயில்வே ட்ராக்கிற்கு அருகில் சென்று ஒளிந்துக்கொள்கிறேன்.
4. யாரேனும் மிரட்டி கேட்டால் வயிற்றுப்போக்கு கக்கா இருப்பதாக சொல்லிக்கொள்வேன்.
5. ரயில் தூரத்தில் வருகிற பொழுது ஒத்த தண்டவாளத்தில் நீள்வாக்கில்படுத்துகொண்டு கண்களை
மூடி அம்மாவை நினைத்துகொள்வேன்.
6. ரயில் என் மேல் ஏறி கால், தொடை, வயிறு எனக்கடந்து
இதயத்தை தொடும் பொழுது அம்மா ஆசையை நிச்சயம் நிவர்த்தி செய்திருப்பேன். என் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதன்
மூலமாக பூப்பெய்த பெண்ணாக மாறியிருப்பேன்.
7. இதன்மூலம்
வாழ்நாட்கள் முழுவதும் எந்தவொரு ஆடவனுக்கும்
அடிமையாக ஆட்கொள்ளாமல் , பெண்களின் அணிகலன்களான அச்சம், நாணம், மடம், பயிர்ப்புகளில்
சிக்காமல் அணு அணுவாக சிதையாமல்ஒரு சராசரி
இந்திய பிரஜையாக இறந்துவிடுகிறேன்.
8. மீண்டும் பிறப்பேன். மீண்டு வர பிறப்பேன். அவனுக்கும் சித்திக்கும் குழந்தையாக
பிறப்பேன். திருநங்கையாகவே பிறப்பேன்!
அண்டனூர் சுரா
மண்டேலா
நகர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
மாவட்டம்613301
தொடர்புக்கு
958565 - 7108
கருத்துகள்
கருத்துரையிடுக