வெள்ளி, 3 ஜனவரி, 2014

சிறுகதை திற


             பயணிகளின்கனிவான கவனத்திற்கு. திண்டிவனம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்கு மூன்றாவது நடைப்பாதைக்கு  வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது...................
       அறிவிப்பை கேட்டதும் நடைமேடையில் மனிதத்தலைகள் மொய்க்கத்தொடங்கின. சாவிக்கொடுக்கப்பட்ட பொம்மைகளைப்போலபயணிகள் அதற்கும் இதற்குமாக நடந்தார்கள். மேடையின் விளம்பில் நின்று கொண்டு உடலின் முழு பலத்தையும்  கால் கட்டை விரலில்இறக்கி ரயில் வருகிறதா..........?   என ஆவல் பொங்கப்பார்த்தார்கள்.அவசரம் அவசரமாக  தேனீர் அருந்துவதும், முகம் கழுவதுமாக சிலர்.  பொதிகளை முதுகில் சுமந்துகொண்டும் இரண்டொரு முறை குதித்துகொண்டும் கபடி வீரனை பிடிக்க தயாராகுவதைப்போல சிலர்.
 டீ, காபி  ; டீ, காபி...........  டீக்காரர் பாடத்தை மனனம் செய்வதைப்போல ஒப்பிக்கிறார். இடையிடையே இட்லி , பிரியாணி  கூப்பாடுகள். பயணிகளின் கனிவான கவனத்திற்கு.................. தமிழ், இந்தி ஆங்கிலத்தில் மாறி மாறி  அறிவிப்புகள் ஒலித்தவண்ணம் இருந்தன. பயணிகள் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. ரயில் வரும் திசையை வைத்தக்கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.
“  சன்னல் ஓரமா பார்த்து இடம் பிடி. ”
“ எஞ்சினுக்கு  பக்கத்தில் வேண்டவே வேண்டாம்.”
“ நீ பிடிக்கிற இடத்தில யாரையும் உட்கார விட்டுடாதே. “  இப்படியாக பயணிகளின்
ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள், அவசரக்கூப்பாடுகள்.
அரை மூட்டை சாக்கைப்போல உட்கார்ந்துகொண்டு  கோழித்தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நண்பர்களின் தோள்களைப் பற்றி குலுக்கினேன். கையில் சுருட்டி வைத்திருந்த தினசரியால் அடித்து எழுப்பினேன். வேண்டா வெறுப்பாக  கண்களை தேய்த்து கொண்டு எழுந்தவர்கள் கடுவா மாதிரி வாயைத்திறந்து  கொட்டாவி விட்டுக்கொண்டார்கள்.  தலையையும் உடலையும்  அரை வட்டமளவிற்கு  சுற்றி சோம்பலை நெட்டிகளாக முறித்தார்கள்.
அவர்கள் கண்களில்  தெரிந்த சோம்பல் , நித்திரையை பார்க்கையில் அவர்கள் இன்னும் இந்த அவசர உலகத்திற்கு தயாராகவில்லை  என தெரிந்தது.  கண்களை  தேய்த்துகொண்டு ரயில் வரும் திசையை வேண்டா வெறுப்போடு பார்த்தார்கள்.
ஒருவன் சொன்னான்.  “  அட போங்கடா ........... நாம கிளம்பிய நேரத்துக்கு பஸ்ல போயிருந்தா இந்நேரம் ஊர் போய் சேர்ந்திருக்கலாம்“ .
மற்றொருவன் “ வேண்டாம்டா............ ரொம்ப கூட்டமாக இருக்கு. பஸ்லயே போயிடலாம் ” .
 இன்னொருத்தன் தன் பங்குக்கு  “ எதற்கும்  சீட் கிடைக்குதானு முயற்சி செய்து பார்ப்போம். கிடைக்கலைனா பஸ்ல போயிடலாம்” .
 அவர்கள் இப்படியெல்லாம் பேசிக்கொண்டதை கேட்கையில்ரயிலில் பயணிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைநீர்த்துப்போகச்செய்தது.
 “வயசுப்பெண்களை ரசிக்கத்தெரிந்த அளவிற்குரயிலை ரசிக்கத் தெரியவில்லையே ஏன்டா ?”என்கிற கேள்வியை மட்டும்அவர்களைப்பார்த்து கேட்டு வைத்தேன்.
ரயிலில் பயணம் செய்வதும் அம்மாவின் சேலையில் தொட்டில் கட்டி தூங்குவதும் ஒற்றென கருதுபவன் நான்.  என்.எஸ் கலைவாணர் ஒரு திரைப்படத்தில் சொன்னதாக அப்பா அடிக்கடி ஒரு வாசகத்தை சொல்வார். “ ரயில் சிக் புக், சிக் புக்னு ஓடுறதில்ல. செக் புக் ,  செக் புக்னு ஓடுது ” . பணம்தான் வாழ்க்கை என்பதை அவர் அப்படி நாசூக்காக சொன்னதாக சொல்வார்.
                     ரயில் சிக் புக் என்று ஓடுகிறதோ,  இல்லை செக் புக் என்று ஓடுகிறதோ......... ஆனால் சென்னை முதல் மன்னார்குடி வரை  தலைத்தெறிக்க ஓடும் இந்த ரயில்  இரண்டு நிமிடங்கள்  எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஓடுவதில் எனக்கு அப்படியொரு பெருமை.
ரயில்வே ஓடு பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பொழுது முதலில் நிலம் கொடுத்தவர் என் தாத்தாதானாம்.இதை எனது தாத்தா பெருமைப்பட சொல்வார்.  எங்களுக்கு சொந்தமான இடத்தில் ரயில் ஓடும் பொழுது  சொந்த ரயிலாக அதைப்பார்த்து பிரமிப்பேன்.   ரயிலில் பயணம் செய்வதை உள்ளுர ரசித்து பயணிப்பேன். சென்னையில் ஒரு  கல்லூரியில் இஞ்சினியர் படித்தக் காலம் முதல் வேலை தேடும்  படலம்  வரை  ரயில் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
       நான் சிறுவனாக இருந்த பொழுதுஇந்த ரயில் எனக்கு இரவு நேரத்தில் பயமூட்டும் பூச்சாண்டியாகவும், பகலில் சோறு ஊட்டும் கோமாளியாகவும் இருந்திருக்கிறது.தலை கவசத்தை அணிந்து கொண்டு ரன் எடுக்க ஓடுவதாகவும் ; முகமுடி அணிந்துக்கொண்டுபிள்ளைப்பிடிக்க வரும் பூச்சாண்டி போலவும் ;  அனகோண்டா பாம்பு   காட்டுக்குள்ளேருந்து சீறி வருவதைப்போலவும் ரயிலை  பல விதமாககற்பனை செய்திருக்கிறேன்.
                       ரயிலில் எத்தனை பெட்டிகள் இருந்தாலும் எனக்கு பிடித்தது கடைசி பெட்டிதான். அதில்தான் நான் எப்போதும் பயணம் செய்வேன்.கடைசி பெட்டியைப் பார்க்க பாவமாகத் தெரியும் . கணவனுக்கு பின்னே ஒடும் அடிமை மனைவியைப்போலவும், வரதட்சனை கொடுமைக்கு  ஆட்பட்டு  புகுந்த வீட்டிருந்து பிறந்த வீட்டிற்கு  கோபித்துக்கொண்டு ஓடும் பெண்களைப்போலவும் , என்னை காப்பாற்ற  யாரும் இல்லையா........?  என கதறும்சிறுமியைப்போலவும்தான் கடைசி பெட்டியைப் பார்ப்பேன்.
                     ரயிலின் எஞ்சின் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை.  அதிகாரத்தொனியில் என் வழி தனிவழியென்று தன் மனம் போனப்போக்கில் ஓடக்கூடியது. எல்லாமே எனக்கு கீழ்தான் என்கிற அகங்காரம் அதனிடம் எப்போதும் உண்டு. அது விரும்பிய பெட்டிகளை விரும்பிய இடத்திற்கெல்லாம்இழுத்துச்செல்லும். இழுத்துச்சென்ற பெட்டிகளை பாதியில் கலட்டிவிட்டு  வேறு பெட்டிகளுடன் கை கோர்த்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிடும். ஆனால் கடைசி பெட்டி.........? கிராமத்து பெண்களைப்போல கணவனை  பின்தொடர்வது ஒன்றே அதன் கதி.
தூரத்தில் கண்களைப் பறிக்கும் “பளிச் “ வெளிச்சம். “பா.........ம் “ பேரொலி. “சிக் புக், சிக் புக்“தாளம். ரயில் பயணிகளை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.
“ இதயம்................... நம்ம ஏழு பேருக்கும் சேர்த்து ஒரே  இடத்தில இடம் பிடி. இல்ல மூட்டை முடிச்சோடு  கோயம்பேடுதான்..............“ 
                  “ நான் ஒருத்தன்மட்டும் எல்லோருக்கும்  சீட் பிடிக்கிறேன். நீங்க  தண்டவாளத்துல உட்கார்ந்து  எஞ்சின் எப்படி ஓடுதுனு பராக் பாருங்கடா சோம்பேறி பசங்களா . நான் ஒருத்தன் எப்படிடா இத்தனை பேருக்கும்  சீட்  பிடிக்க முடியும் . அவனவனுக்கு அவனவன் சீட் பிடிக்கப்பாருங்க .............“ வாயில் வந்து விழுந்த சொற்களால் அவர்களை கடித்து குதறி வைத்தேன்.
                      “  அதெல்லாம் முடியாது.  நீ தான் சொன்னாய். எக்மோர்ல கூட்டமிருக்காது. ஆளுக்கொரு சீட்ல படுத்துக்கிட்டு போகலாமுனு. அதை நம்பிதான் உன் கூட இங்கே வந்தோம். நீயே எல்லோருக்கும் சேர்த்து இடம் பிடி..................“
அவன் இப்படி சொன்னதை விடவும் அவன் சொற்களில் இருந்த அலட்சியம்தான் என்னை அதிகமாக கோபமூட்டியது .  கோபத்தை  வெளிப்படுத்த இதுவா நேரம் ?சினத்தை  எச்சிலைப்போல் தொண்டைக்குள் இறக்கிக்கொண்டேன்.
                  “ சரி சரி........... நான் எல்லோருக்கும் சேர்த்து  சீட் பிடிக்கிறேன். உங்கள்ல ஒருத்தன் ஓடிபோய்   டிக்கெட் எடுத்துக்கிட்டு வாங்க“. எனது பையை முதுகில் சுமந்து கொண்டு, உடலை குலுக்கி , கை கால்களை நீட்டி ரயிலுக்குத் தயாரானேன்.
                       “ முதல்ல நீ இடம் பிடி . எல்லோருக்கும் இடம் கிடைச்சால்  பிறகு டிக்கெட் எடுத்துக்கலாம்“ . சொன்னவனை பார்வையால் தீய்க்கும் அளவிற்கு  ரயில் எனக்கு அவகாசம்  கொடுக்கவில்லை.
கண்களை குத்தும் ஒளி வெள்ளம், செவிப்பறையை கிழிக்கும் பா..................ம்  முழக்கம். ரயில்  வந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு பெட்டிகளும் என்னை கடத்துச்செல்ல நான்  பெட்டிகள் ஊடே பயணிக்கத்தொடங்கினேன்.
 ஒருவன் ஓடும் ரயிலில் சட்டென ஒரு கம்பியை பற்றி,  படியில் கால் வைத்து பயணத்தை தொடங்கிவிட்டிருந்தான். அப்பப்பா....... அவனுக்குத்தான் என்னவொரு துணிச்சல் !  படியில் கால் வைத்தது மட்டும்தான் தெரிந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அவன் எங்கேயோ சென்று விட்டிருந்தான். நான் எத்தனையோ நாட்கள் ரயிலில் பயணித்திருக்கிறேன். இப்படி அவசரப்பட்டு துணிவே துணையென  எந்த ரயிலிலும் ஏறியதில்லை. அவனையும் ரயிலின் வேகத்தையும் ஒரு சேரப் பார்க்கையில் எனக்கு கிலி மூட்டியது. நான் என் நண்பர்களை திரும்பிப்பார்த்தேன். எவனும்  நின்றுக்கொண்டிருந்த இடத்தை விட்டு நகரவில்லை. அத்தனைப்பேரும் பிடித்து வைத்த சாணம் போல் ஆடாமல் அசையாமல் அதே இடத்தில்  நின்று கொண்டிருந்தார்கள்.
” சரட், சரட்........... “
 என்னை கடந்துப்போகும்  பெட்டிகளின் வேகம் சற்று குறையத் தொடங்கின. நான் கடைசி பெட்டியின் வருகைக்காக காத்திருந்தேன். ஆனால் கூட்டம் என்னை மொய்த்து பெட்டிக்குள் லாவகமாக உள்ளே தள்ளியது.  என் அருகினில் வந்தஒரு பெட்டியின்  கம்பியை லாவகமாக பற்றினேன். சட்டென படியில் ஒரு கால் வைத்தேன். என்னைத்தொடர்ந்து நாற்பது வயது மதிக்கத்தக்கஒருவர் என்னை நெறித்துக்கொண்டு ஏறினார். ஏறியவர் என் முதுகில் ஒரு அழுத்தம் கொடுத்து என்னை   உள்ளே தள்ளினார். எனது பாதி உடல்  பெட்டிக்குள் நுழைந்து விட்டது.
“ ஆஹா........... இது ரிசர்வ் கம்பார்ட்மென்ட்டாச்சே “ எனறபடி கீழே குதித்தார். அவரைத்தொடர்ந்து நானும் இறங்கினேன் . பயணிகளை விலக்கிக்கொண்டு தளத்தில் கால் வைத்தேன். தளம் என்னை விராட் ......... என இழுத்துச்சென்றது. இடது கால்  செருப்பு உருவிக்கொண்டு ரயில்  சக்கரத்திற்குள்  விழுந்து விட்டது.
                                 ஒற்றைக் கால் செருப்புடன்  கால்களை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஓடினேன். புது செருப்பை பறிகொடுத்த கிறக்கம்.  பதினாறு வயதினிலே சப்பாணி கமலைப்போல ஒரு காலை தாங்கித்தாங்கி ரயில் பெட்டியுடன் சேர்ந்து ஓடினேன். ஒற்றைக்கால் செருப்பு  இயல்பான நடைக்கு அசூசையாக இருந்தது.  இந்த ஒற்றைச் செருப்பையும் ரயில்வே ட்ராக்கிற்குள் தள்ளிவிட்டு  பெட்டியை துரத்திக்கொண்டு ஓடினேன். ரயில் ஒரு வழியாக  நின்று  பெரு மூச்சு விடத் தொடங்கியது.
                     சக  பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். நான் கடைசி பெட்டிற்குள் லாவகமாக  ஏறினேன்.  நான்கைந்து பேர் துண்டை இறுக்கையில் விரித்து படுத்துக்கொண்டு “ ஆள் வருது, ஆள் வருது “ என்றபடி என்னை விரட்டி அடித்தார்கள். நான் எலியைப்போல நுழைந்து அடுத்த இருக்கையில் தாவிக் குதித்தேன். எதிரும் புதிருமான இரண்டு இருக்கைகள் கண்டுக்கொள்ளப்படாமல்  விசாலமாக இருந்தன.  என் பையைத் தூக்கி் தலைக்கு மேலுள்ள  ஷெல்ப்பில் வைத்தேன். சக நண்பர்களை கூவி அழைத்தேன்.
“ இடம் கிடைச்சிருச்சா.......?” என்றபடி ஒருவர் பின் ஒருவராக ஓடிவந்தார்கள்.  அவரவருக்கு  பிடித்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் முகத்தில் லயிப்பு.  பூத்துச்சொறியும்  புன்னகை. எங்கே படுக்கலாம்,  எப்படி கால்களை நீட்டிக்கொள்ளலாம், ரயில் எந்த திசையில் போகும் என்றவாறு முன்னோட்டம் பார்க்கத்தொடங்கினார்கள்.
                       “  இடம் பிடித்தாகி விட்டது . பிறகு என்ன, யாராவது ஒருத்தர் போய் டிக்கெட் எடுத்துக்கிட்டு வாங்க“  . நான் சொன்னதை  யாரும்  காது கொடுத்து கேட்பதாக இல்லை.
“ நீ போடா “
“ அவனை போகச்சொல்லு......“  என்றபடி ஒருவரையொருவர் சுட்டிக்கொண்டு தட்டிக்கழித்தார்கள்.  மணியைப்பார்த்தேன். ஒன்பதே கால் ஆகியிருந்தது.  சரியாக பத்து மணிக்கு ரயில் புறப்பட்டு விடும். அதற்குள் டிக்கெட் எடுத்தாக வேண்டும்.
                    “யாரை அனுப்பலாம்..........?.“
 அவனவனும்  பையைத்திறந்து எதையோ தேடுவதைப்போல பாவனைச் செய்துக்கொண்டிருந்தார்கள்.
“ பணம் கொடுங்கடா . நான் போய் டிக்கெட் எடுத்துக்கிட்டு வாறேன்“.டிக்கெட்டிற்குரிய பணத்தை வாங்கிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். பாதி தூரம் கடந்த பிறகுதான்  ஞாபகம் வந்தது. என் செல்போனில் உயிர்  இல்லை. ஒரு வேளை டிக்கெட் எடுக்க முடியாவிட்டால்............?   மூளை புதிர் போட்டது.
                 பெட்டியை நோக்கி திரும்பவும் ஓடி வந்தேன். “ எல்லாரும் நல்லா கேட்டுக்கிருங்க............. என் செல்போன்ல ஜார்ஜ் இல்ல.  ஒரு வேளை  என்னால டிக்கெட் எடுத்துக்கிட்டு  டயத்துக்குள்ள வரமுடியலைன்னா, நீங்க என் பையையும் எடுத்துக்கிட்டு  கீழே இறங்கிடுங்க . புரியுதா?“   நெஞ்சுக்கூடு ஏற இறங்க சொல்லிவிட்டு, டிக்கெட் கொடுக்கும் இடத்தை நோக்கி பாய்ச்சல் எடுத்தேன்.
                  ரயில் எஞ்சினுக்கும் கடைசி பெட்டிக்கும் இடைப்பட்ட தூரம்  ஒரு மைல்  இருக்கும். நான்  வால் பகுதியிலிருந்து தலை  பகுதியை நோக்கி ஓடினேன்.  செருப்பு இல்லாமல் ஓடியது பாதங்களில்  கூச்சத்தைக் ஏற்படுத்தியது.  வழவழப்பான தரைத்தளம்  என் உள்ளங்கால்களை ஓங்கி அறைந்தது. மொத்த உடலையும் கட்டை விரல்கள்  உந்திக்கொடுக்க ஓடினேன். 
                    மனித நடமாட்டங்களை மறுவி, சிதைந்துக்கிடந்த  பாலித்தீன் பைகளைத்தாண்டி ஓடினேன். நெரிசலுக்குள் லாவகமாக நுழைந்து  , பெண்களை, குழந்தைகளை, வியாபாரிகளை  விலக்கி ஓடி   ஒரு வழியாக பயணச்சீட்டு வாங்குமிடத்தை அடைந்திருந்தேன்.
 வரிசைமுடிச்சிண்டு கயிறாக, மனிதச்சங்கிலியாக நீண்டுக்கிடந்தது. ஒருவரையொருவர் இடித்துக்கொண்டும், திட்டிக்கொண்டும், முறைத்துக்கொண்டும் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள் . இந்த வரிசையில் தன்னை கடைசி ஆளாக நிறுத்தி டிக்கெட் எடுப்பதென்பது நடக்கக்கூடிய காரியமா? வரிசையை  உதாசீனப்படுத்திவிட்டு நேராக கவுண்டருக்குள்  கை நீட்டினேன்.
“ சார்............ மன்னை எக்ஸ்பிரஸ் பத்து மணிக்கு. டைம் ஆச்சு. மன்னார்குடிக்கு ஏழு டிக்கெட் கொடுங்க“.
 நான் அப்படி கேட்டதும் அவருடைய முகம் இருண்டு விட்டது.  என்னை வறுத்து எடுப்பதற்கு தகுந்தவாறு கீழே குனிந்து என் முகத்தை நன்றாக பார்த்தார்.  பணத்தை கசக்கி  வெளியே விட்டெறிந்தார். 
“  வரிசைக்கு போ............ய்யா“ . 
வரிசையில் நின்றவர்கள்  அவரை விட அதிகமாக கர்ஜித்தார்கள்.   “போ......டா” என சொல்லாத ஒரு குறை தான். முகம் தொங்கிப்போய், மனசு கிறங்க, வியர்வைக்காட்டில் நனைந்து, குதறுண்ட நாயாக வாலைச்சுருட்டிக்கொண்டு   பவ்வியமாக வெளியேறினேன். 
 கொஞ்ச நேரம்   அதே இடத்தில் நின்றபடி பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தேன். மணியைப்பார்த்தேன் .ஒன்பதரையைத் தாண்டி முட்கள் வட்டமடித்து கொண்டிருந்தன. வரிசையின் கடைசி முனையில் முடிச்சிட்டு விதி வழி செல்லும் வாழ்க்கையைப்போல வரிசையின் ஊடாக தொடர்ந்தேன். காலம்  அதிவேக ரயிலைப்போல கடந்து சென்றுக்கொண்டிருந்தது. ஆனால் வரிசை .............? கரு அட்டைப்பூச்சியைப்போல மெல்ல வளைந்து,  நெழிந்து, நெட்டி முறித்து  நகர்ந்தது. 
மணி  ஒன்பது ஐம்பதாகியிருந்தது.  ஐந்தாவது ஆளாக நின்றுகொண்டிருந்தேன்.   உடம்பில் படபடப்பு . மனதிற்குள் தவிப்பு. முகத்தில் உப்பு வரிக்கோடுகள்.  கால்கள் பாய்ச்சல் எடுக்க முன்னே இழுத்தன. எச்சிலை விழுங்கிக்கொண்டேன். உதடுகளை ஈரமாக்கிக்கொண்டேன். பணத்தை  கவுண்டர்க்குள் திணித்தேன்.
 “ மன்னை எக்ஸ்பிரஸ் . மன்னார்குடிக்கு ஏழு டிக்கெட்“
உதடுகள் படபடத்தன. மனசு வேகமாக ......... அடித்துக்கொண்டது.   பயணச்சீட்டுகளும், பாக்கியும்   என் கையில் திணிக்கப்பட்டன.  பாக்கி சரியாக இருக்கிறதா ? சரிபார்த்துகொண்டேன்.  பக்கத்தில் நீண்டிருந்த வரிசையை விலக்கி, காட்டாற்று வெள்ளமாக  ரயிலை நோக்கி பாய்ந்தேன். பயணிகளின் பணிவான கவனத்திற்கு.  மன்னை எக்ஸ்பிரஸ்................. அறிவிப்பு ஒலிக்கத்தொடங்கியது. தடகள வீரன் ஓடுவதற்கு முன்  மூச்சு வாங்குவதைப்போல எஞ்சின் இரைத்துக்கொண்டிருந்தது.  ரயிலின் எஞ்சின்  பெட்டியைத்தாண்டி  கடைசி பெட்டியை நோக்கி விரைந்தேன்.
  பெட்டிகள் மெல்ல நகர்ந்தன.   விறகுக்கட்டிலிருந்து விடுபடும் பாம்பு போல மெதுவாக  ஊர்ந்தன.  மேல் மூச்சு கீழ் மூச்சை  விழுங்க ஓடினேன். மூச்சுக்குழலை  உருமற்ற  பூதம் அடைத்தது . ஓடினேன்........ கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு  என்னை கீழே சாய்க்க முற்பட்டன. ஓடினேன்.........   சக நண்பர்கள் அவரவர் பைகளுடன் எனக்காக  நடைமேடையில் நின்றுக்கொண்டிருப்பது தெரிந்தது. வெறி பிடித்தவனைப்போல ஓடினேன். அவர்களை நோக்கி கூக்குரலிட்டேன்.
“ ஏறுங்க , ஏறுங்க “
ரயில் அடிப்பட்ட பாம்பைப்போல  பாய்ச்சல் எடுத்தன. நண்பர்கள் பெட்டிக்குள் தாவிக்குதித்தார்கள். அவர்களைத்தொடர்ந்து  நானும்  அதற்குள் பாய்ந்தேன். .
                          மனக்கிடங்கிற்குள்   பெருத்த நிம்மதி.  வாயிற்குள் முட்டிய பெருமூச்சுகளை வெளியே கக்கினேன்.  வாயில் நுரை தள்ளியது. பொசுக், பொசுக் என மூச்சுகள் வெளியே வந்து குதித்தன. ஒரு இருக்கையின் விளிம்பில் சாவகாசமாக உட்காரந்துக்கொண்டேன் .தலையை கீழே தொங்கவிட்டுக்கொண்டேன்.
                         ரயில் திசையை கிழித்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. எனது வியர்வைத்துளிகளை  காற்று துடைத்து எடுத்தது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.  எனது பையைத் தேடினேன். பை வைத்த இடத்தில் காணோம். யார் கையிலும் இருக்கவில்லை. மனதில் திகில்  கொண்ட போர். ஆழ்மனதில் இடி இறங்கியது. நெஞ்சில் படபடப்பு.
எனது  கல்விச்சான்றிதழ்கள் அத்தனையும் அதற்குள்தான் இருக்கின்றன. அத்தனையும் உண்மைச்சான்றிதழ்கள்.  பொறியியல் படிப்பு முடிந்து, அனைத்துப்பாடங்களும் தேர்ச்சி பெற்று கைத்தட்டலுடன் பெற்ற சான்றிதழ்கள்.சாதிச்சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள்  என எத்தனையோ  சான்றிதழ்கள்  .........................
மனது கிடந்து அடித்துக்கொண்டது. பயம் அடி வயிறு கலக்கியது. முகத்தில் விகாரம்.  உருவமற்ற ஒரு உணர்வு என் முகத்தில் ஓங்கி அறைந்தது.  நெஞ்சிற்குள் யாரோ கையை விட்டு நுரையீரலை நெறிப்பதைப்போல இருந்தது.  தலை  சுற்றியது.
 “ எங்கேடா என் பேக் ? “ ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மௌனிகளாக நின்றார்கள்.  யாரும் பெரிதாக  அலட்டிக்கொள்வதாகவோ, வருத்தப்படுவதாகவோ தெரியவில்லை. தேடுவதைப்போல பாவணை செய்தார்கள்.
ரயில் காற்றையும் திசையையும் விழுங்கிபாய்ந்துகொண்டிருந்தது. ரயிலிலிருந்து குதித்து விடணும் போல தோன்றியது.   சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி விடலாமா? என  மூளையில் யோசித்தது. அபாய சங்கிலியை பற்றி இழுக்க எத்தனித்தேன்.  அதற்குள் தாம்பரம் சந்திப்பு வந்துவிட்டது.
                   பிசாசு வேகத்தில் இறங்கி , இயங்கி லோக்கல் ரயிலைப்பிடித்து எக்மோர்  வந்திருந்தேன். ஆறாவது நடைமேடையிலிருந்து இறங்கி மூன்றாவது நடை மேடையை நோக்கி விரைந்தேன். மனதில் ஏதேதோ விபரீத கற்பனைகள். ஏமாற்றத்தின் கிறக்கங்கள். உயிர் அறுவதைப்போல உணர்வுகள்.
      பயணிகளை விலக்கி ஒரு வழியாக மூன்றாவது பிளாட்பாரம்  வந்து விட்டிருந்தேன்.ரயில் இல்லாமல் தண்டவாளங்கள்நீண்டுக்கிடந்தன. ஒரு முதியவர் கந்தல் துணி உடுத்திக்கொண்டு தண்டவாளத்தில் நின்றபடி டார்ச் விளக்கில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரது கையில்  எனது ஒற்றைக்கால் செருப்பு இருந்தது. அவர் அதன் மறு சோடியை தேடுவார் போலும். டார்ச் விளக்கை நேராக அடித்துப்பார்த்தார். அவர் கண்களில் ஒன்றும் சிக்கவில்லை. அவருக்கு உதவ வேண்டும் போல தோன்றியது.
                   “ அய்யா......... இதோட சோடியை தேடுறீங்களா?“ எனக்கேட்டேன்.
                   நான் அப்படி கேட்டதும் அவருடைய முகம் சுண்டிவிட்டது. செருப்பை பறித்துக்கொள்வேனோ என்கிற பயம் அவரை சட்டென ஆட்கொண்டது.
                   “ அதோ அங்கே கிடக்கு ” என்றபடி கடைசி பெட்டி நின்ற இடத்தை நோக்கி ஓடினேன்.
                  ஓரிடத்தில்   ரயில்வே போலீஸ்காரர்கள் நான்கைந்துப்பேர் சூழ்ந்து நின்றார்கள். அவர்களின் அருகில் எனது பை இருந்தது. எனக்குள் பெருத்த நிம்மதி. ஆனந்தப் பெருக்கம் ஆட்கொண்டது.
         “ சார்.......... என்னுடைய பேக் சார் ”
         ஒரு போலீஸ்  கேட்டார் “  மறந்திட்டு போயிட்டியா ? ”
     “ ஆமாம்  சார் ”
     “ படிச்ச பையனா இருக்கே. இப்படி அலட்சியமா இருந்திருக்கே “
      அவருடைய குரலில் அன்பு, கருணை , இரக்கம் மூன்றும்  தொற்றிருந்தன.
   “ இடம் பிடிக்கப்போய் என்னுடைய எதிர்காலத்தையே தொலைக்கத் தெரிஞ்சேன் சார்”
படபடப்பு , பரிதவிப்பு, கண்ணீர்  பெருக்குடன் சொன்னேன்.
                    “ இனி கவனமா நடந்துக்கோ  ” என்றவாறு ஒரு கண்டிப்பு கண்டித்தார். அவரை கண்ணீர் மல்க  பார்த்து ஆமோதித்தேன். பிறகு “ தேங்யூ சார் ” என்றபடி பையை பற்றிக்கொண்டு  நடக்கத்தொடங்கினேன். ஒரு போலீஸ் அதட்டல் குரலில் கேட்டார். “  தம்பி ............ உன் பேரென்ன ?”
                   நடையை சட்டென நிறுத்தி,  அவர்கள் பக்கம் திரும்பி  புன்னகைத்தபடி சொன்னேன்    “ இதயத்துல்லா சார் ”
                 நான் பெயரைச்சொன்னதும்  போலீஸ்காரர்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். கிசு கிசுத்துகொண்டார்கள். அதில் ஒருவர் லத்தியைக்காட்டி என்னை  அழைத்தார். நான் அவர்கள் அருகினில் சென்றேன் .  ஒரு மோப்ப நாய் எனது  பையை நுகர்ந்து பார்த்தது.
           “ பேக்குக்குள்ள என்ன இருக்கு ?“ அதட்டும் தொனியில், கரகர  குரலில் ஒருவர் கேட்டார்.
    “ சர்டிபிகேட்ஸ் சார்” என்றேன்.
         “  திற பார்க்கலாம்  ” என்றார்கள். திறந்துகாட்டினேன். பையைத்துருவி பார்த்தார்கள், என்னுடைய  முகவரி, அலைப்பேசி எண்களைக் கேட்டு குறித்துகொண்டார்கள். என்னை நேராக நிற்க வைத்து ஒரு புகைப்படம்  எடுத்துகொண்டார்கள். பிறகு “ சரி, நீ போகலாம் ” என்றார்கள். என்னுடைய உடல்  எங்குமாக உலாவிக்கொண்டிருக்க , நான் இன்னும் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.
                                                                                                                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக