தூயன் - முகம் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வயது 30. இவர் சிறுகதை எழுதத் தொடங்கி மூன்று வருடங்கள்தான் ஆகிறது. இவரது முன்மாதிரியான எழுத்தாளராக அசோகமித்ரனை கைக்காட்டுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இருமுகம். இந்நூலனை அவர் ‘ ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் ’ செய்திருக்கிறார். இவரது கதை பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும்படியாக இருக்கிறது. ‘ முகம்’ என்கிற கதை மிக முக்கியமானது. பன்றி வளர்ப்பவர்களின் குடும்பங்களை மிக அருகிலிருந்து பார்த்து, கவனித்து, உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் கதையாக இருக்கிறது. பன்றி வளர்ப்பவர்களிடம் அவர் தோழமைக் கொண்டிருப்பதும், நெருங்கிப் பழகுவதும், பன்றி வளர்க்கும் இடம், அடைக்கும் இடம் இவற்றை அத்தனை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். கதையில் பன்றியால் கதாப்பாத்திரத்தின் குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட வீட்டிற்கு வரும் பன்றிகளை ரகசியமாகப் பிடித்து கழுத்தை அறுத்து கொன்றுப்புதைக்கிறார். பன்றியை அவர் அவ்வாறு கொன்றுப் புதைப்பதற்கு அக்கதைப்பாத்திரம் நியாயமான காரணத்தையும் வலுவான உட்கிடக்கையும் கொண்டிருக்கிறது. ...