போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததையொட்டி செங்கடலை ஒட்டிய மேற்கு கரையோரப்பகுதிகள் அமைதிக்கொண்டிருந்தன. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைச்செய்திகள் யாவும் போர் நிறுத்தம் பற்றிய செய்தியைத் திரும்பத்திரும்ப உறுதிப்படுத்திக்கொண்டிருந்தன.
காற்றின் கற்பைக்கிழிக்கும் பீரங்கி சத்தமும், போர் விமானங்களின் உக்கிரமான உறுமலும், ராக்கெட் குண்டுகளின் டாம்பீரமும் இல்லாத கடற்கரை அதிசயமாகவும் அழகாகவும் தெரிந்தது. காகம் கரையும் சத்தமும், சிட்டுக்குருவிகளின் கீக்..கீக்.... கொஞ்சலும் கேட்கத்தொடங்கிருந்தன .
நிலைக்கண்ணாடி கீழே விழுந்து எட்டுத்துண்டுகளாக உடைந்துப்போனதைப் போலதான் பாலஸ்தீனம் என்கிற புண்ணிய பூமி உடைந்து சிதறிப்போயிருக்கிறது. ரிக்டர்க்குள் அடங்காத ஒரு பேரதிர்வு வந்திருந்தால் கூட இப்படியொரு அதிர்வை அதனால் ஏற்படுத்திருக்க முடியாது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி என்கிற இரு நகரத்தின் முகுளத்தில் விழுந்த இரண்டு குண்டுகள் ஜப்பானியர்களின் உயிரைத்தான் குடித்ததே தவிர ஜப்பான் நிலத்தை, வாழ்வாதாரத்தை, அதன் மண்ணை, அதற்குள்ளிருந்த ஈரத்தை அவ்விரு குண்டுகளால் துடைத்து எடுக்க முடியவில்லை. ஆனால் பாலஸ்தீனம் என்கிற புண்ணிய பூமி சிதைக்கபட்டு நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கைப்பிடி அளவு மண்ணை அள்ளினால் அதில் பாதிதான் அராபியர்களுக்குரியதாக இருக்கிறது. வீசும் காற்றில் பாதியை இஸ்ரேல் செக்ரூட்டி ஏஜென்ஸி என்கிற இராணுவ அமைப்பு பங்கு போடுகிறது.
பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அப்பளம் போல நொறுக்கப்பட்டிருக்கிறது. உடைந்தத்துண்டுகளில் ஒழுங்கில்லை. வடக்கு, தெற்கு ,கிழக்கு, மேற்கு திசைகள் இல்லை. எல்லை இல்லை. வரையறை இல்லை.பாலஸ்தீனம் ஒரே தேகம், ஒரே தேசம்.... என குரல் கொடுத்தவர்களில் பாதிப்பேர் இஸ்ரேல் எல்லைக்குள் குரல் வளை நெறிக்கப்பட்டு நிற்கிறார்கள். தாயும் மகனும் பாலஸ்தீனத்திற்குள்ளும் தந்தையும் மகளும் இஸ்ரேல்க்குள்ளும் பிரிந்து போன அவலம் நடந்தேறியது. மண்ணை இழந்ததுடன் தன் நிலத்துக்குரிய மக்களில் பாதிப்பேரை இஸ்ரேலிடம் பறிக்கொடுத்துவிட்டு அதோகதியில் இருக்கிறது பாலஸ்தீனம்.
பாலஸ்தீனம் நாட்டினருக்கு உட்பட்ட நகரம் காஸா. நூற்றி முப்பத்து ஒன்பது சதுர கி.மீ நிலப்பரப்பு கொண்ட மொத்த நகரமும் போர் நிறுத்தத்திற்குப்பிறகு மருத்துவமனையாக்கப்பட்டிருந்தது . அந்நகரத்திற்குள் வாழும் பதினெட்டு இலட்சம் அராபியர்களும் உடல் அளவிலும் மனதளவிலும் சிதைக்கப்பட்டிருந்தார்கள். பச்சிளங்குழந்தைகள், தள்ளாடும் முதியோர், பிள்ளைத்தாச்சிப்பெண்கள், இளைஞர்கள்,... என பலரும் மருத்துவமனைக்குள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள்.முகம் சிதைக்கப்பட்ட, கை கால்கள் இழந்தவர்களில் பாதி பேர் பாலைவனப்புழுதியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள்.நினைவு இழந்தவர்களும், ஏவுகணை, ரசாயணக்குண்டு தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் மருத்துவமனைக்குள் நிரப்பப்பட்டிருந்தார்கள். குழந்தைகள், பெண்களுக்கான அவசர சிகிச்சைகள் வேறு வழியின்றி மசூதிகளுக்குள் நடந்தேறிக்கொண்டிருந்தது.
ஒட்டகம் அடைக்கப்பட்ட கொட்டகைப் போலிருந்த ஒரு அகதி முகாமிற்குள் இருந்தபடி ஒரு சன்னலின் வழியே இத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆயிஷா பேகம். மூச்சை சற்று நிறுத்தி நுரையீரல் நிரையும் படியாக காற்றை உள்ளே இழுத்து வெளியே கக்கினாள். இரத்தம், மூத்திரம், மருந்து மாத்திரைகளின் நாற்றம் நாசியைத் துளைத்தது.
“ ம்மா...... ம்மா....”
உதடுகள் பரிதவிக்க தாயைத் தேடினாள் அவள் . தொண்டை வறண்டுக் கமறியது.
“ அல்லா.... நீதான் என் அப்பாவை கொண்டு வந்து என்னிடம் சேர்க்க வேணும். அப்பாவைத் தேடிச் சென்றிருக்கிற அம்மாவுக்கு அப்பா கிடைக்க வேணும். நபிகள் (ஸல்) நான் உன் குழந்தை. என்னிடமிருந்து அம்மாவையும் , அப்பாவையும் பிரித்து என்னை அனாதையாக்கிவிடாதே......”
அகதி கூடாரத்திற்குள் இருந்தபடி அவளுடைய பெற்றோரை நினைத்து மனதிற்குள் தொழுதாள் அவள். முகாமில் இருநூறு குழந்தைகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். நூற்றுக்கும் மேல் கணவனை, குழந்தைகளை இழந்த தாய்மார்கள் கால்களை நீட்டியபடி கைகளை ஏந்தி மேற்க்கூரையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் விழிகள் குழிக்குள் விழுந்துப்போய் பார்க்க பரிதாபத்திற்குரியவர்களாகத் தெரிந்தார்கள். அவர்களிடம் போதுமானளவிற்கு மாற்று உடை இல்லை. குழந்தையின் பசிப்போக்க தாய்ப்பால் இல்லை.... என இன்னும் எத்தனையோ இல்லை அவர்கள் இல்லாமல் இருந்தார்கள்.
முகாமை ஒட்டிய குடியிருப்பிற்குள் ஒரு சிறிய நுழைவு வாயில் இருந்தது. அதற்குள் ஒரு மசூதி. அதையொட்டி ஒரு ஆரம்பக்கல்வி கூடம் இருந்தது. ஐ.நா-வுக்கு சொந்தமான இருபது பள்ளிக்கூடங்களில் ஒரு பள்ளிக்கூடம் அது.அதன் சுவற்றில் ஒட்டிருந்த பழைய சுவரொட்டியை ஒருவர் வேகமாக கிழித்தார். அதன் மீது புதிய சுவரொட்டியை ஒட்டினார். அவரை தூரத்திலிருந்து பார்க்கையில் மதக்குருமார் போலத்தெரிந்தார். அவர் உடுத்திருந்த வெண்ணாடை, தலை வரைக்கும் போர்த்திருந்த தலைப்பாகை, நீண்டுத்தொங்கிய தாடி அதை வைத்து அவர் மதக்குருமார் என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள் ஆயிஷா பேகம். பள்ளிக்கூடம் சுவரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டிய அவர் அந்த இடத்தில் மண்டியிட்டு கண்களை மூடி தொழுகைச் செய்தார். ஐந்து நிமிடங்கள் வரைக்கும் அவரது தொழுகை நீண்டிருந்தது. அவர் எழுந்ததும் “ அய்யோ.... அய்யோ...” அலறலுடன் பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அந்த சுவரொட்டியை மொய்க்கத் தொடங்கினார்கள்.
ஆயிஷாபேகம் தலை பர்தாவை சரிசெய்துக்கொண்டு அந்த இடத்தை நோக்கி விரைந்தாள். விம்மல் தொண்டைக்குழிக்குள் இடறியது. கண்ணீர் கன்னத்தைக் கரைத்தது. அவள் திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டு ஓடினாள். அவள் பின்னே அவள் வயதையொட்டிய குழந்தைகள் ஓடி வந்தார்கள். சுவரொட்டியை மொய்த்துக்கொண்டிருந்த பெண்களை விலக்கி சுவற்றின் விளம்பிற்குச்சென்றாள் அவள். அரபு மொழியில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டியில் பார்வையை ஓட விட்டபடி மனதிற்குள் அல்லாவை வேண்டிக்கொண்டாள். “ அல்லா.... என் அப்பாவிற்கு எதுவும் ஆகிருக்கக்கூடாது. எந்த சேதாரமுமின்றி அப்பா எனக்கு கிடைக்க வேணும்”
“ ஆயிஷா.... நீ யாரோட பெயரைத் தேடுற?”
அவள் முதுகில் கையை வைத்து யாரோ கேட்பதைப்போலிருந்தது. அவளால் திரும்பிப்பார்க்க முடியவில்லை.ஆனாலும் சொன்னாள். “ அப்பா இப்ராஹிம்ஷா”
“ என்னச்சொல்கிறாய் ஆயிஷா.....! உன் அப்பா இன்னும் உயிருடன் தான் இருக்கிறாரா...?. உன் அப்பா இரண்டு வருடத்திற்கு முன் நடைப்பெற்ற போரில் இறந்து விட்டார் என்றல்லவா உன் தாயார் சொன்னார். அதை வைத்து தானே நீயும் உன் தாயும் இந்த ஐ.நா அகதிகள் முகாமில் சேர்ந்திருக்கிறீர்கள். இப்பொழுது அப்பா இருக்கிறார் என்று சொல்கிறாயே.....?”
இப்படி ஒருவர் சொன்னதும் அவள் நடுக்கம் கொண்டாள். குப்பென அவளுடைய பூஞ்சை உடம்பு வியர்த்தது.உடம்பு சடசடத்தது. அவள் வயதினையொத்த குழந்தைகள் அவளைச் சூழ்ந்துக்கொண்டார்கள்.
“ ஆயிஷா... உன் அப்பா உயிருடன் இருக்கிறாரா? என்னடி சொல்கிறாய்...? உன் முகத்தில் மகிழ்ச்சியை காணோமே! எனக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லையடி. நான் கூட பரவாயில்லை. எனக்காகவாவது அம்மா இருக்கிறார். இதோ இந்த நூர்ஜஹான் பேகத்திற்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. சொல்லடி ஆயிஷா... உன் அப்பா இருக்கிறாரா...? இந்த சுவரொட்டியில் அவருடைய பெயரோ அவருடைய புகைப்படமோ இல்லைதானே....?”
அவர்களின் கேள்விக்கு ஆயிஷா பேகத்தால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.
“இல்லை. அவர் இஸ்ரேல் தாக்குதலில் இரண்டு வருடத்திற்கு முன்பே இறந்து விட்டார்”
“ பின்னே சுவரொட்டியில் யார் பெயரையோ தேடினாயே? ”
“ அப்பா பெயரில் வேறு யாரேனும் இந்தப்போரில் இறந்திருக்கிறார்களோ எனப்பார்த்தேன்”
சாமார்த்தியமாக அந்தப்பொய்யைச்சொல்லிருந்தாள் அவள்.
“உன் அப்பா பெயருடையவர்களில் எத்தனைப்பேர் இந்தப்போரில் இறந்திருக்கிறார்கள்? பார்த்தாயா ஆயிஷா...? ”
“ எங்கே என்னை பார்க்க விட்டீர்கள். இந்தக்கூட்டம் கலைந்தால்தான் இனி பார்க்க முடியும்” எனச்சொல்லிய அவள் தன் சமயோசிதப்புத்தியை மனதிற்குள் மெச்சிக்கொண்டாள். “ அம்மா.... நீ எங்கேமா இருக்கே. எனக்கு பயமாக இருக்கும்மா. நீ வேகமா வாம்மா. அப்பாவை அழைச்சிக்கிட்டு இப்பவே வாம்மா.....” தொண்டைக்கும் உதட்டிற்குமிடையே சொற்களை உருட்டி அழுதாள்.
இரண்டு வருடத்திற்கு முன்பு,...
பதுங்குக் குழியிலிருந்து மனைவி மகளுடன் வெளியே வந்தார் இப்ராஹிம் ஷா. அவரது குடியிருப்பு தெருவையும் அவரது வீட்டையும் பார்க்கையில் அடிவயிறு எரிந்தது. மனைவி ரகமத் நிஷா ‘ஓ...‘ வென அலறினாள். ஏழு வயதேயுடைய ஆயிஷா பேகம் மணலில் புரண்டுக் கதறினாள்.
வான்வழி தாக்குதலில் வீடு நிர்மூலமாக்கப்பட்டிருந்தது. சுவடே தெரியாதளவிற்கு ஏவுகணைத்தாக்குதலில் முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தது. அவர்கள் செல்லமாக வளர்த்த ரசகுல்லா என்கிற ஒட்டகம், ஸல் என்கிற செம்மறி ஆடு , சலாக் என்கிற நாய், ஐந்து நெருப்புக்கோழிகள் யாவும் கொடூர தாக்குதலில் மூச்சுத்திணறி செத்துப்போயிருந்தன.வாசலில் வீற்றிருந்த பேரிச்சம் மரம் , கூந்தல் பனை , மரம் செடி, கொடிகள் யாவும் தீப்பிடித்து எரிந்து கருகிப்போயிருந்தன.
பாலஸ்தீனம் விடுதலை இயக்கத்தலைவர் யாசர் அராபத் பெயரில் உருவாக்கப்பட்ட அந்த திட்டமிட்ட நகரில்தான் அந்த வீட்டை எழுப்பியிருந்தார் இப்ராஹிம்ஷா. பத்து வருடங்கள் எகிப்து நாட்டிலும், ஐந்து வருடங்கள் துருக்கி நாட்டிலும் அடிமைத்தொழில் புரிந்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு அது. வீடா அது...? அவரைப்பொறுத்தவரைக்கும் சகல வசதியுடன் குட்டி மாளிகை . அந்த வீடுதான் ஏவுகணைத்தாக்குதலுக்கு உள்ளாகி தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.ஹரப்பா, மொகஞ்சதாரோவைப் போல சிதைக்கப்பட்டிருந்தது.
வேர் இழந்த மரத்தைப்போல உணரத்தொடங்கினார் இப்ராஹிம்ஷா. அணு உலை கொதிப்பதை விடவும் அடி வயிறு கொதித்தது. முகத்துவாரத்தின் வழியே துக்கம் துடித்தது. நாசி விடைத்து அழுகை பீறிட்டு வந்தது. மணலில் மண்டியிட்டு கண்களை மூடியபடி அல்லாவை அழைத்தார்.
காஸா நகர் வாழ் மக்களுக்கு இப்ராஹிம்ஷா வீடு இழந்து அதோகதியில் நிற்கும் அவலம் பெரிதென படவில்லை.எத்தனையோ பெண்கள் கணவனை, மகனை, மகளை இழந்து ஓடிக்கொண்டிருக்கையில் இப்ராஹிம்ஷாவின் இழப்பு அவர்களை பொறுத்தவரைக்கும் துச்சம்தான்! அவரவர் துக்கம் அவரவருக்கு.
இப்ராஹிம்ஷா மனைவியை மார்போடு அணைத்துக்கொண்டு அவளது தாவங்கொட்டையை முகத்திற்கு நேராக உயர்த்தியபடி சொன்னார். “ இத்தோடு நான் இறந்துட்டேன் என நினைத்துக்கோ...”
மனைவி திடுக்கென்றாள். தலை பர்தாவை சரிசெய்தவளாய் சட்டென கணவனின் வாயைப்பொத்தினாள். “ என்னங்க வார்த்தை இது. நம் குழந்தைப்பார்க்க இப்படியொரு வார்த்தை சொல்றீங்களே, இது தகுமா...? அல்லா.... என் கணவருக்கு நல்ல புத்தியைக்கொடு...”
“ இல்லை ரகமத்.... இல்லை. நானொரு முடிவு எடுத்திருக்கேன்”
“ எந்த விபரீதமான முடிவையும் இப்படி அவசரகதியில் எடுக்க வேணாம்”
“ இஸ்ரேல் அடிக்கு பதிலடி கொடுக்கும் பலத்தில் நம் பலம் இல்லை”
“ அதனாலே...?”
“ ஹமாஸ் இயக்கத்தில் சேரப்போகிறேன்.
“ என்னங்க சொல்றீங்க....! ஹமாஸ் இயக்கத்திலா...? அது தீவிரவாத இயக்கமென்று பேசிக்கொள்கிறார்களே”
“ உஷ்! வாயை மூடு. வரலாறு தெரிந்த நீயா இப்படி பேசுவது. ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் போராளி. அவன் போரில் தோற்றவுடன தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டான். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது குண்டு வீசிய அமெரிக்க அதிபர் ட்ரூமன் தீவிரவாதி. போரில் வெற்றிப்பெற்றவுடன் போராளியாக்கப்பட்டான். போரில் தோல்வியைத் தழுவும் விடுதலை இயக்கம் தீவிரவாதம். அதுவே வெற்றிப்பெற்றால் போராளி இயக்கம். இந்தியா நாட்டின் காந்தி, ரஷ்யா நாட்டின் ஸ்டாலின் லெனின், கியூபா நாட்டின் பிடல் காஸ்ட்ரோ ... போராளியாக அடையாளம் காட்டப்படும் அவர்கள் ஒரு வேளை தோற்றுப்போயிருந்தால் தீவிரவாதிகளாக்கப்பட்டிருப்பார் கள் .
ஹமாஸ் தீவிரவாதமா? விடுதலை இயக்கமா? என்பது உலகப்பார்வையில் இல்லை. இயக்கத்தின் வெற்றியைப் பொறுத்திருக்கிறது”
ரகமத்நிஷா கணவனை துறுதுறுவெனப் பார்த்தாள். அவளுக்கு அழுகை வந்தது. கணவனது கையை இறுகப்பற்றினாள். “ என்னையும் மகளையும் இப்படி அதோ கதியில் விட்டுவிட்டு போகிறேனு சொல்றீங்களே....?”
“ ஐ.நா அமைத்திருக்கிற அகதிகள் முகாமில்ல சேர்ந்துக்கோ”
“ ஐ.நா அமைத்திருக்கிற அகதிகள் முகாமில்ல சேர்ந்துக்கோ”
“ அந்த முகாமில சேர ஏகப்பட்ட விதிகள் கடைப்பிடிக்கிறாங்க”
“ குழந்தை தாயையோ, தந்தையையோ இழந்திருக்க வேணும் அவ்வளவுதான். நான் இந்தப்போரில் இறந்து விட்டதாகச்சொல்லிவிடு”
“ குழந்தையின் எதிர்க்காலத்தை கொஞ்சம் நினைத்துப்பாருங்க ?”
“ நம் குழந்தையின் எதிர்காலத்தை மட்டும் பார்க்காதே ரகமத். பாலஸ்தீனத்தின் மொத்த குழந்தைகளும் நிம்மதியான உறக்கத்தை இழந்துவிட்டு நிற்கிறார்கள் ”
கணவனின் இந்த துடிப்பான பேச்சை திரும்பத்திரும்ப அசைப்போடுகையில் இதயம் வேகு,வேகுவென துடித்தது.கண்ணீர் கோடை மழையாய் கொட்டியது.
“ ரகமத்... என்னை நினைத்து ஒரு போதும் கவலைப்படாதே. கணவனை இழந்தவள் பட்டியலில் உன் பெயரை பதிவு செய்துக்கொள். உலக நாடுகள் ஆயிஷாவுக்கு கொடுக்கும் நிவாரண நிதியை வேண்டாமென்று சொல்லிடாதே.அகதிகளுடனோ , வேறு யாரிடமோ மறந்தும் நான் ஹமாஸ் இயக்கத்தில் இருக்கிறேன் என சொல்லிடாதே....” என்றவாறு அவர் மகளை வாறி அள்ளி நெஞ்சோடு அணைத்தார். அவருக்கு தொண்டை அடைத்தது. மகளின் சாந்தமுகம் ஆழ்மனதை பிசைந்தது. மகளின் கன்னத்திலும், நெற்றியில், உள்ளங்கைகளில் மாறி மாறி முத்த மழை பொழிந்தார்.மனைவியை மார்போடு அணைத்து கண்களை இறுக மூடி கட்டியணைத்தார். காஸா நகரத்தின் தென்மேற்கு முனையிலிருந்து வடமேற்கு திசையை நோக்கி நடைக்கட்டினார்.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------------
உடைந்த சன்னல் வழியே வெட்டவெளியைப்பார்த்தவாறு அம்மாவின் வருகையை எதிர்நோக்கியவளாக இருந்தாள் ஆயிஷா. “ அம்மா.... நீ எங்கேம்மா இருக்கே. எனக்கு பயமாக இருக்கம்மா. வேகமாக அப்பாவை அழைச்சிக்கிட்டு வாம்மா.....”
ஆயிஷா அம்மாவைப்பார்ப்பதை விடவும் அப்பாவை பார்க்கவே அதிக ஆவல் கொண்டிருந்தாள். அவள் அப்பாவைப்பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டிருந்தது. அப்பாவின் முகம் பௌர்ணமி நிலவாக அவளது விழித்திரையில் படிந்திருக்கிறது.
அகதி முகாமிற்கு வெளியே ஒரு மைல் தூரத்திற்கு கடற்கரையின் மணற்பரப்பு. அங்கொன்றும் இங்கொன்றுமாக விண்ணைத்தொடுமளவிற்கு மசூதி. அதையொட்டி பல்பொருள் அங்காடி, அடுத்து மதக்குருமார்களின் தங்கும் விடுதி, அரபு மாளிகை, அடுத்தடுத்து சின்னதும், பெரியதுமாக கடைகள், குடியிருப்புகள்....
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆனப்பிறகும் காஸா நகர்ப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருந்தது. கணவனைத் தூக்கிக்கொண்டு ஓடும் மனைவிமார்கள், மரித்த குழந்தையை சடமாக கையில் ஏந்திக்கொண்டு வானத்தைப்பார்த்தவாறு கண்ணீர் வடிக்கும் தகப்பன்மார்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறும் தாய்மார்கள்..... என மொத்த நகரமும் நரகமாக இருந்தது.
ஆயிஷா ஒவ்வொன்றின் மீதும் பார்வையை கொஞ்ச நேரம் செலுத்தி மெல்ல நகர்த்திக்கொண்டிருந்தாள்.ஓரிடத்தில் அவளது பார்வை குவிந்தது. அவள் வைத்தக்கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே நின்றாள். அவளையும்அறியாமல் ஓரிரு முறை குதித்துக்கொண்டாள். தூரத்தில் அவளுடைய அம்மா ரகமத்நிஷா வந்துக்கொண்டிருந்தாள். முகாமிற்கு வெளியே ஓடிவந்த ஆயிஷா தாயின் கால்களை இறுகப்பற்றிக்கொண்டாள். ஆயிஷாவை தூக்கி தோளில் கிடத்திக்கொண்டாள் ரகமத்நிஷா. அகதிகள் முகாம் காவலர்களிடம் அனுமதி பெற்று வந்த திசையில் மீண்டும் நடைக்கட்டினாள்.
ஆயிஷா அம்மாவின் தலைமுடியை பிய்த்து “ அப்பா எப்படிம்மா இருக்கார். அப்பாவை நீ பார்த்தியா...? என்னை அழைச்சிக்கிட்டு வரச்சொன்னாரா..? ” அப்பா பற்றிய குறிப்பறிதலில் அதிக அக்கறைக்காட்டினாள்.
அவர்கள் போகும் வழியில் ஒரு பாலடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது. அது ஆள்அரவமின்றி காட்சியளித்தது.அதற்குள் மகளை அழைத்துக்கொண்டு சென்றாள் ரகமத் நிஷா . மகளை கீழே இறக்கி விட்டாள். அவளது கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் அறைந்தாள்.
ஆயிஷா பாவம்! இதற்கு முன் அவள் தாயிடம் அடி வாங்கியதில்லை. ரோஜா பூப்போன்ற அவளது மெல்லிய கன்னம் மிளகாய் பழம் அளவிற்கு தடித்து சிவந்துப்போயிருந்தது. அந்த குழந்தையை அடிக்க அவளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ! பலம் கொண்ட மட்டும் அறைந்தாள் அவள். “ அப்பா.... அப்பா..... ” எனத் துடித்தாள் ஆயிஷா.
தொண்டை இடறித் தேம்பி அழுதாள். அப்பா... வை உச்சரித்தவாறு இருந்தன அவளது உதடுகள். மகளையே பார்த்தவாறு கண்ணீர் சொரிந்த தாய் ரகமத், பிறகு மகளை கட்டியணைத்து கதறி அழுதாள். தாய் முகத்தைப்பார்த்து மகள் அழ, மகளை கட்டியணைத்து தாய் அழ, அவர்களின் அழுகையை அந்த பாலடைந்தக்கட்டிடம் இதயமில்லாமல் உள்வாங்கிக்கொண்டிருந்தது.
சின்னக்குழந்தை அவள். எவ்வளவு கண்ணீர்தான் அவளும் வடிப்பாள்...? கண்ணீர் முழுதும் வற்றிப்போய் அழுதழுது குரல்வளைக் கட்டிக்கொண்டது.
“ என் கொழுந்தே... பூச்செண்டே.... அழுது முடிச்சிட்டியா...?”
மகள் வாய்திறந்து என்னவோ சொன்னாள். அவளால் பேச முடியவில்லை. தொண்டை வறண்டுப்போயிருந்தது .இதற்காகக்தானே ரகமத்நிஷா ஒரு தவறும் செய்யாத மகளை இத்தனை அடி அடித்தாள். மகளை வாரி அள்ளி தோளில் கிடத்திக்கொண்டு ஐநா அமைத்திருந்த ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
மருத்துவனைக்குள் சிகிச்சை பலனின்றி இறந்து , வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சடலங்களை நோக்கி விரைந்தாள். ஒரு சடலத்தின் மீது போர்த்தியிருந்த முகத்துத்துணியை மெல்ல அகற்றினாள்.
ஆயிஷா பேகம் தலையில் அடித்துகொண்டு ஓலமிட்டாள். அவளது ஓலம் அவளுக்கு கேட்காதப்பொழுது உலகிற்கு கேட்குமா என்ன...?
நொறுங்கிய அல்ல நொறுக்கப்பட்ட என்றே கொள்ளவேண்டும். அப்பப்பா வேதனை.
பதிலளிநீக்குவேதனை
பதிலளிநீக்கு