முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னைக் கொல்வது சரிதானா....?

  ஒரு பேச்சாளர் மேடையில் இவ்வாறு பேசினார். ‘ திருவள்ளுவரை எடுத்துகொல்லுங்கள்...பாரதியாரை எடுத்துகொல்லுங்கள்......’ மேடையின் எதிரே முன் வரிசையில் உட்கார்ந்திருந்தவர் தமிழ் கொலையை பொறுக்க முடியாமல் குறுக்கிட்டார் ‘பேச்சாளரே...அவர்களை உங்களால் கொலை செய்ய முடியாது...அவர்கள் முன்பே இறந்துவிட்டார்கள்....’ பேச்சாளர் தன் தமிழ் உச்சரிப்பை நினைத்து கூனிக்குறுகிப்போனார். கொலை இரண்டு இடத்தில் நடைபெறுகிறது. கத்தியைத் தீட்டும் பொழுதும் நாக்கைத் தீட்டாதப்பொழுதும்.
      பத்தினியும் கொலை செய்வாள். அம்மா கூட கொலை செய்வாள். அம்பை எழுதிய ஒரு சிறுகதை உண்டு. ‘ அம்மா ஒரு கொலை செய்தாள்’. கம்பர் அரசவையில் கம்பராமாயணத்தை  அரங்கேற்றம் செய்ததன் பிறகு தமிழ்ப்புலவர்கள் மத்தியில் ஒரு சர்ச்சசை எழுந்தது. ‘இராமனால் வாலி கொலை செய்யப்பட்டது சரியா...?’. ‘சரி’என்றும், ‘தவறு’ என்றும் வழக்காடுகள் நடந்தேறின. இராமன் மக்கள் முன் தோன்றி ( பாத்திரமாக) ‘ நான் வாலியை மறைந்திருந்து கொன்றது சரிதான்...ஒரு குடும்பத்தைக் காக்க ஒரு தனி ஒருவனை அழிப்பது தவறல்ல....’ என்ற வகையில் இராமன் தரப்பு நியாயம் இருந்தது.
      கொலைக்கு எதிராக தோன்றிய தமிழ் காப்பியம் புரட்சி கவி எனலாம். பாரதிதாசன் ‘பில்கணியம்’  எனும் வடமொழி காப்பியத்தைத் தழுவி புரட்சிக்கவி படைத்தாலும் தமிழர்களின் மாண்பைப் பறைச்சாற்றும் காப்பியமாக புரட்சிக்கவி இருந்தது. உதாரணன் என்கிற மரணத்தண்டனைக்கைதி மன்னனுக்கு எதிராக செய்யும் கலகம்தான் புரட்சிக்கவி. சிலப்பதிகாரத்தில் கண்ணகி, தன் கணவனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக்கு எதிராக நியாயம் கேட்டாலும் கோவலனின் கொலை ‘ ஊழ்வினை ஊர்த்துவந்து ஊட்டும்’ எனும் அடிப்படையில் அது நியாயப்படுத்தப்படுகிறது. அதாவது முற்பிறவியில் கோவலன் பரதன் என்கிற பெயரில் வாழ்ந்திருந்தவன். அவன் வசு எனும் அரசனின் கீழ் மெய்க்காப்பாளனாக இருந்தான். சங்கமன் எனும் ஒரு வணிகன் மனைவியுடன் சிங்கபுரத்து கடைவீதிகளில் ஓர் அணிகலனை விற்றுக்கொண்டிருந்தான். அவன் மாற்றரசனின் ஒற்றன் எனும் சந்தேகத்தின் பேரில் பரதனால் கொலை செய்யப்படுகிறான். அந்த ஊழ்வினையின் படிதான் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். ஆனால் பாரதிதாசன் இயற்றிய புரட்சிக்கவி அப்படி அன்று. தன் மகள் அமுதவல்லியை காதல் புரிந்தான் என்பதற்காக உதாரணன் மரணத்தண்டனைக்கு உள்ளாகிறான். அவன் மரணத்திலிருந்து விடுபட உழைக்கும் மக்களைத் திரட்டும் முனைப்பில் பொதுவுடை பேசுகிறான். மக்கள் முன் தோன்றி ‘ ஒரு கன்னியைக் காதல் புரிந்த ஒன்றைத் தவிர நான் என்ன தவறு செய்தேன்....? என்னை கொலை செய்வது சரியா...?’ என உரிமைக்குரல் பேசினான்.மரணத்தண்டனைக்கு எதிரான ஒரு சாமானியனின் முதல் கண்டனக்குரல் அதுதான்!
      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒரு சீரியலைத் தயாரித்தது. உலகத் தமிழ்ப்பெண்களைப் பெரிதும் கவர்ந்திருந்த சீரியல் அது. அச்சீரியலில் அப்பா என்றொரு பாத்திரம்.  அப்பாத்திரத்துடன் பெண்கள் வெகுவாக ஒன்றிப்போயிருந்தார்கள். ஒரு நாள் அவர்  திடீரென இறந்துப்போகிறார். பெண்கள் ‘ கொய்....’யென எழுந்துவிட்டார்கள். அவரது இறப்பிற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். வேறு வழியில்லாமல் அத்தொலைக்காட்சி இறந்துப்போனவரை மீடியா முன் நிறுத்தி ‘ என்னை கொன்றது சரிதான்...’ எனப்பேச வைத்தது.
      ‘கொலை ஒருபோதும் ஒரு கலை ஆகாது’. ரோமானிய ஆட்சியாளர்கள் கொலைக்கென ஒரு திருவிழா எடுத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு எதிராக கலகம் செய்பவர்களுக்கு எதிராக பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரையிலான கொலைத்திட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையில் பெரியத்தொகை ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் பிரான்சிஸ்  பெர்டினாந்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட பரிசுதானாம். ‘ ஆஸ்திரியா இளவரசரை கொலை செய்து வருபவருக்கு கேட்கும் தொகை குறைவில்லாமல் வழங்கப்படும்...’ இதுதான் பரிசுத்தொகை. பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவி இருவரையும் ஒரு ரயில் நிலையத்தில் வைத்து செர்பியா நாட்டு ஒரு இளைஞன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தான். ஆனால் அவனால் பரிசுத்தொகையைப் பெற முடிந்ததா என்றால் இல்லை. அக்கொலைதான் முதல் உலகப்போர் நடந்தேற உடனடி காரணமாகிவிட்டது.
      ‘கொலையாளியை விடவும் ஆபத்தானவன் கொலையை ஊக்குவிப்பன்’ - இது காந்தி சொன்னது. இலங்கை உள்நாட்டுப்போரின் போது ஈழத்தமிழர் இன அழிவிற்கு இரண்டு நபர் முக்கியமானவர்கள். ஒருவர் ராஷபக்சே. மற்றொருவர் சரத் பொன்சேகா. ஆனால் ராஷபக்சே மீது நாம் காட்டிய எதிர்ப்பு சரத் பொன்சேகா மீது காட்டவில்லை. காரணம் முன்னவர் கொலையைத் தூண்டியவர். பின்னவர் செய்தவர்.
      ஹிட்லர் யூதர்களைக் கொன்றுக்குவித்தவன். அதே நேரம் அவன் கொலையாளிகளை அவன் ஊக்குவித்ததில்லை. ஆனால் இன்று யூதர்களை ஆளும் இஸ்ரேல் தேசத்து பிரதமர் நெதன்யாஹு கொலை செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். பாலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையையொட்டி ஒரு விபத்து. ஒரு பாலஸ்தீனி மருத்துவ உதவி வேண்டி தவிக்கிறான். இஸ்ரேல் இராணுவன் எலோர் அஸாரியா என்கிறவன் அவனைப்பார்க்கிறான். அவனது பார்வைக்கு மருத்துவ உதவிக்காக ஏங்குபவன் ஒரு மனித உயிராகத் தெரியவில்லை. அவனைப்பொறுத்த வரைக்கும் அவனொரு பாலஸ்தீனி. தன் துப்பாக்கியை எடுத்தான். பாலஸ்தீனி நெற்றியில் வைத்து ஒரே சூடு. அவனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு நேரில் வரச்செய்து வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார். இந்த வருடத்தின் மிகச்சிறந்த  இஸ்ரேல் குடிமகன் அவன்தானாம்.!
      இது ஒரு புறமிருக்க, பிலிப்பைன்ஸ் தேசத்து புதிய அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்ட் அதிபராக பதவி ஏற்று ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. அவரது உயிரை எடுப்பவர்களுக்கு மர்ம நபர்கள் பத்து இலட்சம் டாலர்கள் பரிசாக அறிவித்திருக்கிறார்கள். அவர் தலைக்கு விலை நிர்ணயிக்க காரணம் அவர் போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்திருக்கிறார்..
      ‘ ப்ளீஸ்...என்னை கொலை செய்து விடுங்கள்’ என்றொரு கடிதம் ஜப்பான் அருங்காட்சியத்தில் இருக்கிறது. நாட்டில் ஹிரோசிமா நகரில் வீசப்பட்ட அணு குண்டால் பாதிப்பிற்கு உள்ளான ஒரு சிறுமி எழுதியக் கடிதம் இது. இதேப்போன்று ஒரு கோரிக்கை இந்திய உச்ச நீதி மன்றத்தில் நீண்ட காலம் தொட்டு நிலுவையில் இருந்து வருகிறது. ‘ மூளைச்சாவு அடைந்து உயிரோடிருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்....’.
      மனிதனை மனிதன் செய்வது மட்டும் கொலை அன்று. ஒரு பட்சியை ஒரு மனிதன் கொல்வதும் கொலைதான். பறம்பு மலையை தலைமையிடமாகக்கொண்டு வேள்பாரி பறம்பு குறுநிலத்தை ஆண்டு வந்தான். மூவேந்தர்கள் பாரியைக்கொன்று அவனது நாட்டினை தன் வசப்படுத்தினார்கள். பறம்பு வாழ் மக்கள் பசியால் தவித்தார்கள். பாரியின் நண்பன் கபிலர் என்ன செய்தார் தெரியுமா....? அத்தேசத்தில் இருந்த பச்சைக்கிளிகளைப் பிடித்து பழக்கி நாட்டினையொட்டியுள்ள நெற்வயலுக்கு அனுப்பி நெற்களைக் கொண்டு வரச்செய்து மக்களின் பசியை போக்கினான். இதையறிந்த அண்டை நாட்டினர் பச்சைக்கிளிகளை பிடித்து கூண்டிற்குள் அடைத்தார்களேத் தவிர அவற்றைக் கொன்றுவிடவில்லை. ஆனால் இந்திய அரசின் சமீப நடவடிக்கை விவசாயத்திற்கு எதிராக இருக்கும் விலங்குகள், பட்சிகளைக் கொன்றுக்குவிக்கும் முனைப்பில் இறங்கியிருக்கிறது.
      பீஹார் மாநிலத்தில் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் நீலா வகை மான்களை சுட்டுக்கொல்ல மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்திருக்கிறது. அத்துறையின் அன்றைய  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் அனுமதிக்கு மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். ஓர் ஆட்சிக்குள் நடந்தேறும் இந்த ஆதரவும் எதிர்ப்பும் ஆரோக்கியமான அரசியலுக்கு ஓர் உதாரணமாக பேசப்பட்டாலும் ஆரோக்கியமான பொது உயிரிக்கொள்கைக்கு ஆரோக்கியமன்று..
      ஒரு மானினை வேட்டையாடுவதிலிருந்துதான் இராமாயணம் தொடங்குகிறது. இராமாயணம் பல வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதில் ஒரு கதை. தசரதன் மன்னனாகுவதற்கு முன்னால் அவனொரு பெரு விவசாயி. அவனது விவசாயத்தை மான்கூட்டம் துவசம் செய்கிறது. ஒரு நாள் சிரவணன் தன் பெற்றோர்களை தோளில் சுமந்துகொண்டு அவ்விவசாய நிலத்தின் வழியே நடக்கிறான். விவசாய நிலத்திற்குள் ஒரு மான் நுழைந்து விட்டதென்று தசரதன் அம்பு எய்துகிறான். சிரவணன் இறந்து போக அவனது பெற்றோர் சாபத்திற்கு உள்ளாகிறான் தசரதன். நடுப்பகுதியில் மானினை பிடிக்கப்போய் துணைவி சீதையை இழந்தான் இராமன். பிறகு அனு‘மான்’ கொண்டு சீதையை மீட்டு வருகிறான். சீதையை மீட்க உதவிய அனுமான், இராமன் மன்னனாக முடிச்சூட்டிக்கொள்கையில் அவனுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்கிறது அந்த இராமாயணம். காரணம் இராமன் குடும்பத்திற்கும் மானுக்கும் ஆகாதாம்! அனுமான் இனத்தால் குரங்கு. பெயரால் மான்.
      இதிகாசத்தின் படி இராமன் மன்னான முடிச்சூட்டிக்கொண்ட அயோத்தி தேசத்தின் வட எல்லை இன்றைய இமாசலப்பிரதேசம். அம்மாநிலத்தில் விவசாயத்திற்கு இடையூறு செய்யும் குரங்குகளைச் சுட்டுத்தள்ள மத்திய அரசு அம்மாநில அரசிற்கு அனுமதி அளித்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் யானைகளையும், கோவாவில் மயில்களையும், சந்திரபூரில் காட்டுப்பன்றிகளையும் கொல்ல அவ்மாநில அரசுகளுக்கு முழு அனுமதியை அளித்திருக்கிறது. அந்த வரிசையில் இன்று பீஹாரில் நீலா வகை மான்.
      தமிழ்நாட்டில் தேசியப்பறவையான மயிலைக்கொல்வது தேசக்குற்றம். ஆனால் கோவாவில் மயிலைக்கொல்வது குற்றமுமன்று. பசுவைக்கொல்வது பாவம்! நீலா வகை மான்களைக் கொல்வது பாவமன்று! எந்த தேசத்தில் நாமிருக்கிறோம்....?     
      குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் அவர்களை கண் கலங்க வைத்த ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தேறியது. கேதா மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவி அம்பிகா ‘ பிறக்காத மழலையின் மடல்’ என்றொரு கடிதத்தைப் படித்தார்.  ‘ அம்மா, நான் இந்த உலகை பார்க்க விரும்பினேன். புது காற்றை சுவாசிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. உன் கருவில் இருந்த நான் ஒரு பெண் சிசு எனத் தெரிந்து கொண்டதாலேயே நீ என்னை கொலை செய்து விட்டாய். இவ்வுலகில் பிரவேசிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாமலேயே சவமாக்கப்படும் வேதனை மிகவும் கொடியது. அம்மா நீ ஒன்றை தெரிந்துகொள். பெண் குழந்தை இல்லாத எந்த ஒரு இல்லமும் முழுமை பெறுவதில்லை...’ இக்கடித்தை ஒரு சிறுமியில் படிக்கக் கேட்கையில் நம் நெஞ்சுருகிறது இல்லையா! இதேக் கடிதத்தை இமாசலப்பிரதேசத்து குரங்கு, கோவா மயில், மேற்கு வங்கத்து யானை, பீஹாரின் நீலா மான் வாசிப்பதாகக்கொண்டால் அவைகளுக்காக கண்ணீர் சிந்த மேனகா காந்தி ஒருவரால் மட்டும்தான் முடியுமென்றால் நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் எனக் கேட்டுக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

      ஒரு வேளை ‘ என்னைக் கொல்வது சரிதானா....?’ என நீலா வகை மான் கேள்வி கேட்பதாகக் கொண்டால் அதற்கானப் பதில் ‘ சட்டம் மக்களுக்கானது ; மான்களுக்கானது அல்ல’ என்பதாகத்தான் இருக்குமோ....?.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...