முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லெக்கிங்ஸ்


       ‘த்தனை ஆடைகள் இருந்தென்ன.....லெக்கிங்ஸ் அணிவது தனி சுகம்தான். லெக்கிங்ஸை வடிவமைச்சது யாருனு கண்டுப்பிடிச்சு அவருக்கொரு விருதுக்கொடுக்கணும். என்ன சொல்றே நீ.....?’ என்றவாறு யாரிடமோ அவள் அலைபேசியில் அலாவிக்கொண்டிருந்தாள் கண்மணி.
       ‘வறுமை நிறம் சிவப்பு அல்ல. லெக்கிங்ஸ்’ இது வறுமைக்கு அவள் வகுத்திருக்கும் இலக்கணம். ஒரு சேலை எடுக்கும் விலையில் பத்து லெக்கிங்ஸ் எடுத்துவிடலாம் என்பது அவளது சமீப பொருளாதாரக் கண்டுபிடிப்பு. குட்டைப்பாவாடை அணிந்து டென்னிஸ் விளையாடும் சானியா மிர்ஸா அக்காவிற்கு இரண்டு மூன்று லெக்கிங்ஸாவது  எடுத்து அனுப்பி வைக்க வேணும் என்பது அவள் கொண்டிருக்கும் இலட்சியங்களில் ஒன்று.   
       சேலை அணிந்து போட்டி நடனமாடிய பார்வதிதேவி ஒற்றைக்காலைத்தூக்கி காதின் அணிகலனைக் கலட்ட முடியாமல் சிவபெருமானிடம் தோற்றுப்போனவளுக்கு லெக்கிங்ஸ் வாங்கிக்கொடுத்து அந்தப்போட்டியை மறுபடியும் நடத்திப்பார்த்திட வேணும் என்பது அவளது மற்றொரு இலட்சியம்.
       அதுமட்டுமா... உலகம் முழுவதும் சர்க்கஸ் நடத்தும் சகோதரிகளுக்கும், திரைப்படங்களில் அரைகுறை உடையில் நடனமாடுபவர்களுக்கும் ஒரு சோடி லெக்கிங்ஸாவது வாங்கிக்கொடுக்க வேணும் எனவும் அவள் நினைத்திருந்தாள். 
       ‘ உண்ண லெக் பீஸ். உடுத்த லெக்கிங்ஸ். இது எப்படி இருக்கு....? ’ அவளது தோழிகளிடம்  வசனம் பேசிக்கொண்டு தலைமுடியை நீவி விட்டுக்கொண்டாள்.
        லெக்கிங்ஸ் பற்றிய ஒரு பாடம் கல்லூரியில் வைத்தாலும் தேவலாம் என நினைத்தாள்.  ‘லெக்கிங்ஸ்  என்றால் என்ன....?’ என்றொருக் கேள்வியை அவள் அவளுக்குள்ளாகக் கேட்டுகொண்டாள். அதற்கான பதிலை அவளே வரையறுத்தாள். மக்களாட்சி  என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் கொடுத்த வரையறையைச் சற்று திருத்தி மாற்றி தொகுத்தாள். லெக்கிங்ஸ் என்பது பெண்களால், பெண்களுக்காக, பெண்களே வடிவமைத்த உடையாகும். இப்படியொரு பதிலை  வரையறுத்ததை நினைத்து தனக்குத்தானே மெய்ச்சிக்கொண்டாள்.
       லெக்கிங்ஸ் உடுத்திக்கொள்ள மட்டுமல்ல, உச்சரிக்கவே சுகமாகத்தான் இருக்கிறது. லெக்கிங்ஸ் என்பதை விடவும் லெக்கிங்ஸ் எனப் பெயர் சூட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு வேளை ஆண்கள் அவ்வுடையை வடிவமைத்திருந்தால் அவர்கள் லெக்கிங்ஸ் என்றே பெயர் சூட்டியிருப்பார்கள். பெயர் சூட்டுவதில் பெண்களை விடவும் ஆண்கள் தேர்ந்தவர்கள். 
       சேலை, தாவணி, பாவாடை, குர்த்தா, சுடிதார், மிடி, ஸ்கர்ட், கோட், கவுன்,ஜீன்ஸ்,  நைட்டி, ஜோலி, .....என இத்தனை ஆடைகள் வந்திருந்தாலும் லெக்கிங்ஸ் அளவிற்கு குறைவான விலையில் சுகமான ஆடையென இதற்குமுன்  எந்தவொரு ஆடையும் வந்ததாகத் தெரியவில்லை. உலகில் எத்தனை நிறங்கள் இருக்கிறதோ அத்தனை நிறத்திலும் லெக்கிங்ஸ் இருக்கிறது. சராசரி, பெரியது, நடுத்தரம் என எல்லா அளவிலும் கிடைக்கிறது. ஒரு ப்ளவுஸ் தைக்க தையற்காரருக்கு கொடுக்கும் கூலிதான் லெக்கிங்ஸின் விலை.
       உங்கள், நமது தொலைக்காட்சிகளின் வழியே நடு வீடு வரைக்கும் வந்து  கன்னத்தில் அறைந்து கவனிக்கச்சொல்லும் விளம்ப நடிகைகள் உடுத்தியிருக்கும் உடை லெக்கிங்ஸாகவே இருக்கிறது. பெண்களுக்கான உடையில் விலைக்குறைந்த உடை லெக்கிங்ஸ்தான். ‘ எனக்கு ஏன் லெக்கிங்ஸ் பிடித்திருக்கிறது தெரியுமா....வருமானத்திற்கேற்ற சரியான உடை’ என ஒரு விளம்பரம் வராதக்குறை ஒன்றுதான்.
       இரவில் ஆடை விலகியதுக்கூடத் தெரியாமல் தூங்கும் அக்காவிற்கு  பத்து சோடி லெக்கிங்ஸ் வாங்கிக்கொடுத்திருந்தாள். தன் வயதிற்கும், உயரத்திற்கும், நிறத்திற்கும் ஏற்ப  ஐந்து லெக்கிங்ஸ் எடுத்துகொண்டாள்.
       தோல் நிறத்திலும் லெக்கிங்ஸ் வந்திருக்கிறது. அது அரிதினும் அரிதாகக் கிடைக்கிறது. இருப்பதில் அதுதான் படுவிலை. ஆனால் அவளுக்கு அந்த நிற  லெக்கிங்ஸ் பிடிக்கவில்லை. அந்த நிறத்தை உடுத்திக்கொள்வது செயற்கையாக முகத்தை சர்ஜரி செய்துக்கொள்வதைப்போல அசூசையாக உணர்ந்தாள். அவளுக்கு பிடித்தது கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை இப்படியான நிறம்தான். வானவில்லில் உள்ள சிவப்பு நிறத்தைத் தவிர மற்ற நிறங்கள் யாவும் அவளுக்கு பிடித்தவையாக இருந்தன.  இத்தனை நிறங்களையும் ஒன்றுசேர்த்து கலக்கினால் கிடைக்கும் கறுப்புதான் அவளுக்கு மிகவும் பிடித்தமான நிறமாக இருக்கிறது. 
       அவள் கல்லூரிக்கு அணிந்து செல்வதற்கென்று ஒன்றிரண்டு லெக்கிங்ஸ்களை தனியாக எடுத்து வைத்திருக்கிறாள். கத்தரிப்பூ , வெளிர் பச்சை, சந்தன நிறத்திலான லெக்கிங்ஸ்கள் அவை. அவளுடைய  கல்லூரித் தோழி காந்திமதிக்கும், விடுதியில் அவளது அறை தோழியாக இருக்கும் சாந்தி, புனிதவதிக்கும், அவளுக்கு பிடித்தமான பேராசிரியர் நிர்மலா மேடத்திற்கும் கூட ஒரு சோடி லெக்கிங்ஸ் எடுத்து வைத்திருக்கிறாள்.  
       செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கையில் அந்த வாரத்தை விடுத்து மறுவாரம் அதை உடுத்திச்செல்ல வேண்டும் என நினைத்தாள். கல்லூரி திறக்கும் முதல் வாரம், முதல் நாளே புது லெக்கிங்ஸை உடுத்திச்செல்லலாம்தான். அவளது தோழிகள் அவளை கிண்டல் செய்து, வறுத்துக் கொட்டிவிடுவார்கள். ‘ இதை உடுத்தி வர எப்ப கல்லூரி திறப்பாங்கனு காத்திருந்தியாடி நீ.....’ என கேலி செய்து பிய்த்து நின்று விடுவார்கள். அவளை இப்படி வறுத்துக்கொட்ட மகேஸ்வரி ஒருத்தி போதும். அவளுக்குப்பயந்தே யாரும் முதல் நாள் கல்லூரிக்கு புத்தாடை அணிந்து வருவதில்லை. இருப்பினும் எப்பொழுது கல்லூரி திறந்து மறுநாள் வகுப்பு வரும் , எப்பொழுது தான் எடுத்து வைத்திருக்கும் லெக்கிங்ஸை உடுத்திக்கொண்டு சக தோழிகளின் புருவத்தை உயர்த்துவது,....என நாட்காட்டியையும் கடிகாரத்தையும் பார்த்தவளாக இருந்தாள்.
       ல்லூரி வேலை நாள் வந்திருந்தது. 
       முதல் நாள். மதியம் உணவு இடைவேளையின் போது கண்மணி தன் தோழிகளுடன் படை சூழ உட்கார்ந்திருந்தாள். அவள் எடுத்திருந்த லெக்கிங்ஸ் பற்றி நீட்டி மடக்கி அலாவிக்கொண்டிருந்தாள். அதன் இலகுவையும், அதன் விலையையும், அதை உடுத்துவதால் ஏற்படும் சுகத்தையும் உயர்வுநவிற்சி அணியில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
       இனி நான் அணியப்போகும் உடை லெக்கிங்ஸ்தான் என்றும், பெண்களுக்கு ஏற்ற உடை அதுதான் என்றும் ஒரு கோட்பாட்டினை விளக்குவதைப்போல் சொல்லிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கான உடையை பெண்கள்தான் தீர்மானிக்க வேணும். ஆண்கள் அல்ல....என உரிமைக்குரல் எழுப்பினாள். அவள் ஒரு பட்டிமன்றத்திலேயோ, நல்லாப் பேசுங்க நல்லதையே பேசுங்க.... நிகழ்ச்சியில் பேசுவதைப்போலதான் பேசிக்கொண்டிருந்தாள்.
       அகவிடகம் நிகழ்ச்சியில் பேசும் கம்பீரமும் தொனிப்பும் அவளது பேச்சில் இருந்தது. சுடிதார் உடைக்கு இப்படித்தான் ஆண்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிறகு என்ன ஆனது..... அவர்களின் பாட்டிமார்களுக்குக்கூட சுடிதார் எடுத்துகொடுத்தார்கள். அப்படித்தான் லெக்கிங்ஸ் உடைக்கு எதிர்ப்பு இருக்கிறது. காலப்போக்கில் பார்..... ஆண்களே அதை அணியத்தொடங்கிவிடுவார்கள்....’ என்றதும் அவளைச் சூழ்ந்திருந்த தோழிகள் ‘ குபீர்....’ எனச் சிரித்தார்கள்.
       மதியப் பாடவேளை தொடங்கியிருந்தது.
       வகுப்புகள் தோறும் சுற்றறிக்கை வந்தது. மெக்கானிக் சயின்ஸ் பேராசிரியர் நிர்மலா மேடம் சுற்றறிக்கையை வாங்கி மனதிற்குள் படித்தார். நெற்றியைச் சுழித்தார். பிறகு வகுப்பில் உரக்கப்பேசும் கண்மணியை அழைத்து சுற்றறிக்கையை வாசிக்கச்சொன்னார்.
       சுற்றறிக்கையை வாங்கி  முதலில் மனதிற்குள்  படித்தாள் கண்மணி.  படிக்கையில் அவளது உதடுகள் நீள்வாக்கில் நெழிந்தன.
       ‘ கண்மணி.....’
       ‘ மேம்....’
       ‘ சத்தமாக வாசி....’
       ஒரு கணம் நிர்மலா மேடத்தை நிமிர்ந்து பார்த்தவள் செயற்கையாக ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு உரக்க வாசிக்கத்தொடங்கினாள்.
       ‘ மாணவிகளின் கவனத்திற்கு........
       கல்லூரியின் நடத்தை விதி, மாணவிகளின் ஒழுக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் ஆடைகளை கல்லூரி வளாகத்திற்குள்ளும், விடுதியிலும் உடுத்தத் தடை விதிக்கப்படுகிறது.                   லெக்கிங்ஸ்,
        இறுக்கமான பேன்ட்,
        சட்டை, குட்டை குர்த்தா,
        உயர குதிகால் செருப்பு,
        வலைப்பின்னல் வேலைப்பாடு கொண்ட ஆடை,
        பெரிய கைக்கடிகாரம் போன்றவைகளுக்கு  தடை விதிக்கப்படுகிறது.
       இதை படித்ததும் வகுப்பறையில் ‘ குபீர்....’ என சிரிப்பொலி எழுந்தது. திடீர் சிரிப்பைக் கேட்டதும் நிர்மலா மேடம் ‘திக்’   என்றாகிப்போனார்.  
       ‘ஏன்டி.... சிரிக்கிறீங்க....’ -  நிர்மலா மேடம் கேட்டிருந்தார்.
       சிரிப்பு உதடுகள், பற்கள், வாயில் உடைய காந்திமதி சொன்னாள் ‘ மேம்.... கண்மணி காலேஜிக்கு உடுத்தி வர பத்து பதினைஞ்சு லெக்கிங்ஸ் எடுத்து வச்சிருக்காளாம்.......’  சொல்லி முடித்து ‘ கொல்’ லென வெடித்தாள்.
       ‘ இன்னொரு வேடிக்கை என்ன தெரியுங்களாம் மேம்.....’
       ‘ என்ன....?’
       ‘ உங்களுக்கொன்னு எடுத்து வச்சிருக்காளாம்.....’
       இப்படிச்சொன்னதும் மொத்த வகுப்பறையும் ‘ குபீர்....’ என வெடித்தது.
       ‘ ஏய்...ஏய்...எனக்கு ஒன்னு எடுத்துத்தாடி....’
       ‘ எனக்கு ஒன்னு...’
       ‘ எனக்கும் ஒன்னு....’
       ‘ எனக்கும்டி....’
       மொத்தப்பேரும் அவளைச்சூழ்ந்து நீட்டி, மடக்கி கேலி செய்தார்கள். அவளுக்கு அழுகை, அழுகையாக வந்தது.
       ‘ கண்மணி....’
       ‘ மேம்....’
       ‘ நெசமா....?’
       ‘ என்ன மேம்....’
       ‘ எனக்கொன்னு வாங்கிருக்கியா....?’
        ‘ஆம்...’ என்றவாறு நீள்வாக்கில் தலையாட்டியவள் பிறகு ‘ இல்லை...’ என  குறுக்குவாக்கில் ஆட்டினாள்.
       அன்றைத்தினம் முழுமையும் கேலிக்கை பொருளாகவே கண்மணி பார்க்கப்பட்டாள். அவளுக்கு ‘ லெக்கிங்ஸ்’ என  பட்டப்பெயர் சூட்டுமளவிற்கு அவள் உதைத்து விளையாடப்பட்டாள்.
       அன்றையத்தினமே   மொத்த மாணவிகளும்  மீட்டிங் அறைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.  முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவிகள்,...என தனித்தனியே உட்கார வைக்கப்பட்டார்கள். இது தவிர,
       விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகள்,....
       தினமும் பேருந்தில் சென்று வரும் மாணவிகள்....
       கல்லூரி பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் என பல பிரிவுகளாக பிரித்து உட்கார வைக்கப்பட்டார்கள்.
       முந்தைய செமஸ்டர்க்குள் கட்டிருக்க வேண்டிய கட்டணங்கள் கட்டாதவர்களின் பெயர்கள் உரக்க பெயர் சொல்லி அழைக்கப்பட்டார்கள். அவர்கள் வெளியே நிற்க வைக்கப்பட்டார்கள். அவர்களில் கண்மணி முதல் நபராக நின்றாள். எல்லோரும் தலையை குனிந்துகொண்டு நிற்க அவள் மட்டும் தலையை நிமிர்த்துக்கொண்டிருந்தாள். கல்லூரி தாளாளர் அடிக்குரலில் பேசினார். பேசவாச் செய்தார்.... மிரட்டினார்.
       ‘ இந்தாப்பாருங்க..... உங்கள நம்பி நான் காலேஜ் நடத்தில..... எங்க காலேஜ நம்பியும் நீங்க படிக்கல. காலேஜ்ல டிசிப்பிளின் முக்கியம். அதை விட ஆடைக்கட்டுபாடு முக்கியம். லெக்கிங்ஸ் அணிவது, குதிகால செருப்பு அணிவது, தலை வாறாம காலேஜ் காம்பஸ்க்குள்ள வாறது, தலை முடியில பெயிண்ட் அடிச்சிக்கிட்டு வாறது,... இதெல்லாம் கூடாது.
       இது ஒன்னும் சாதாரண காலேஜ் இல்ல. இந்தியாவின் டாப் டென் காலேஜ்ல ஒன்னு. நம்ம தமிழ்நாட்டுல நம்பர் ஒன் காலேஜ். ஒழுக்கத்திற்கும், டிசிப்பிலினுக்கும் பெயர்ப்போன காலேஜ். காலேஜ்ல ஆடை கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்க காலேஜ்க்கு கட்ட வேண்டிய ஃபீஸ்.
       யார் , யார்,...எவ்வளவு ஃபீஸ் கட்டணுமென  உங்களுக்குத் தெரியும். தெரியாதவங்க அவங்க அவங்க வகுப்பில ஒட்டியிருக்கிறப் பட்டியலைப் பார்த்து தெரிஞ்சிக்கிறுங்க. என்ன புரியுதா.....? பீஸ் கட்டுனாத்தான் கிளாஸ்க்கு அனுமதிக்கப்படுவீங்க. ரெண்டே ரெண்டு நாள்தான் அவகாசம். அதுக்குள்ள கட்டிரணும்.... இல்ல உங்க சர்ட்டிபிகேட்ட வாங்கிக்கிட்டு கட்டணம் வசூலிக்காத காலேஜு எங்கேயாவது இருந்தால் அங்கேப்போய் படிச்சிக்கிறுங்க. புரியுமென நினைக்கிறேன்......’
       சில மாணவிகள் பெரிதாக தலையாட்டி வைத்தார்கள். சிலர் ‘ உம்’மென உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் சிலர் ‘ கிசு கிசு’த்தார்கள். ஒவ்வொருவராக வெளியேறி வகுப்பறைக்கு வெளியே ஒட்டியிருந்த பட்டியலில் மொய்த்தார்கள். முணுமுணுத்தார்கள்....
       கண்மணிதான் முதலில் உரக்கக்கேட்டாள். ‘ மேம்..... என்னக் கொடுமை மேம் இது.....’
       ‘ எது.....?’
       ‘ நான் கட்டவேண்டிய ஃபிஸ் ஐயாயிரம். ஆனா பத்தாயிரமென இருக்கு மேம்....’
       ‘ எனக்கும் அப்படித்தான் மேம்....இருக்கு....’
       ‘ எனக்கும் மேம்...’
       ‘ எனக்குந்தான் மேம்......’
       வகுப்பறைக்கு உள்ளே வெளியே ஒரே சலசலப்பு.
       னி ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை கல்லூரி தொடங்கியிருந்தது. எந்நாளும் இல்லாத அளவிற்கு கல்லூரி ஒரே களேபரமாக இருந்தது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்கள். அவர்களின் முகத்தில் கலவரமும் கோபமும் தொற்றியிருந்தன.
       வெளிமாநிலம் சென்றிருந்த தாளாளர் விரைந்து கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டார். கல்லூரி முதல்வர் பேராசிரியர், விரிவுரையாளர்களை வைத்து அவசரக்கூட்டம் கூட்டினார். தினசரி நிரூபர்கள், தொலைக்காட்சிக்கு செய்தி சேகரிப்பவர்கள்,....என பலரும் கல்லூரிக்குள் மொய்த்தார்கள்.
       அன்றைய தினம் இரவு தொலைக்காட்சிகள் கல்வியாளர்களைக்கொண்டு வட்ட மேசை விவாதங்கள் நடத்தின. விடிந்ததும் ஒன்றிரண்டு தினசரிகள் அச்செய்தியை தலைப்புச்செய்தியாக பிரசுரம் செய்திருந்தன.
       ‘கட்டணக் கொல்லையைக் கண்டித்து கல்லூரி மாணவிகள்  லெக்கிங்ஸ் போராட்டம்......’


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...