’டாக்ட....டாக்ட...இங்க வாங்க....இந்தப்பய சாப்பிட மாட்டேங்கிறா. இவன் குண்டில ரெண்டு ஊசிப்போடுங்க...’
உதடு வரைக்கும் முட்டிக்கொண்டு வந்த அழுகையை சட்டென நிறுத்தி
தொண்டைக்குள் மெல்ல இறக்கிக்கொண்டான் இராகுல். ஒரு தேம்பல் இல்லை, சிணுங்கல் இல்லை. நீரில்
கரையும் ‘விட்டமின் சி’ போல மெல்ல கண்ணீரில்
கரையத்தொடங்கினான்.
‘ பார்த்தியா....பார்த்தியா..... டாக்ட வாராங்க.... வந்தா
கையில, கால்ல ஊசிப்போடுவாங்க. இதெ....இதெ....மட்டும் வாங்கிக்க......எங்கே...எங்கே...ஆ....ஆ....’
என்றவாறு இட்லித்துண்டை வாயருகே கொண்டுச்சென்றாள் அஞ்சலை.
அவனது கேரட் உதடுகள் பரிதவித்தன. வெம்பின.
‘ டாக்ட...போயிடுங்க.....ஏ புள்ள சாப்பிடுறான்...’
அவள் கையை அசைத்து கோழியை,பூச்சாண்டியை விரட்டுவதைப்போல டாக்டரை
விரட்டினாள். ‘
எங்க...எங்க....இன்னொரு
வாய்....ஆ....ஆ....அம்புட்டுதான்....’
‘ஆ.....’அவன் பெரிதாக வாயைப்பிளந்தான். அரை பிடி இட்லி. கொஞ்சம் சட்னி. தொட்டுத்தொட்டு பிசைந்து
குழைத்து அவனது வாயிற்குள் ஒரே அமுக்கு.
‘ அபுக்...அபுக்....’ என
மென்றான் அவன். கண்ணீர் திவாலைகள் தாரையாக ஒழுகி எச்சிலுடன் கலந்து தொண்டைக்குள் இறங்கிக்கொண்டிருந்தன.
‘ நல்லப்பிள்ள....தங்கப்பிள்ள....முழுங்கிடு....இம்...இம்.....’ தொண்டையை மெல்லத்
தடவிவிட்டாள். இரண்டு மிடறுகள் தண்ணீர் கொடுத்தாள். வாறி அணைத்தாள்.
கொஞ்சினாள்.
இராகுல், எப்பொழுதும் அடம் பிடித்து சாப்பிடுபவன் அல்ல. அவன்
சாப்பாட்டு பிரியன். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தால் பூனை சாப்பிடுவதைப்போல
ஓர் அரவமுமில்லாமல் சாப்பிட்டு முடிப்பவன். இன்னும்....இன்னும்.....எனக் கேட்கக்கூடியவன்.
நூடுல்ஸ், மேகி, பாப்கார்ன்,...போன்ற எண்ணையில் வறுத்தது, பொரித்தது,
சுட்டது வகை உணவுகள்தான் அவனுக்குப்பிடிக்கும். நீராவியில் வேகும் வகை உணவுகள் அவனைப்பொறுத்த
வரைக்கும் ச்சீச்சீ....வகை உணவுகள்தான்.
துரித வகை உணவை அள்ளி ஒரு தட்டில் கொட்டி அவன் கையில் ஒரு கரண்டியைக்
கொடுத்துவிட்டால் போதும்.....மண்புழுவை மீன் தின்பதைப்போல ‘ அவுக்...அவுக்....’கென
மொத்த உணவையும் தின்று முடித்துவிட்டு ‘ இன்னும்...வேணும்....இன்னும் வேணும்....’ என
கேட்பவன் அவன்.
இன்று அவன் அம்மா ஊட்டுவது நீராவியில் வேக வைத்த உணவு. இட்லி. தண்ணீர் தெளித்து பூ போல எடுத்து
ஒரு தட்டில் வைத்து அதில் சட்னி , சாம்பார் சேர்த்து குழைத்து அவள் மகனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்
அவள்.
டாக்டர் என்றால் இராகுலுக்கு செம பயம்.
எந்த டாக்டரைப்பார்த்து பயப்படுகிறான்....? அவனது கற்பனைக்கு
வந்து நிற்கின்ற அந்த டாக்டர் யார்..... என்று அவனுக்கும் தெரியாது. நிறம், உருவம் தெரியாத அந்த டாக்டர் யாராக இருக்கும்...? யாராக இருந்தால் என்ன...? ஒவ்வொரு குழந்தைக்கும் சோறூட்ட, தூங்க வைக்க நிலாவோ, பூனையோ,பூச்சாண்டியோ தேவைப்படுவதைப்போல இராகுலுக்கு டாக்டர்.
மருத்துவம் படித்து , சமூகப்
பணியாற்றி, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் இந்த டாக்டரை இப்படி பூச்சாண்டியாகக் காட்டிவிட்டோமே.....என நினைக்கையில்
சிரிப்புடன் கொஞ்சம் மனவருத்தம் இறுக்கவே செய்யும். என்ன செய்ய.....பிள்ளைகளுக்கு பயம் காட்ட, சோறு ஊட்ட, தூங்க வைக்க இப்படியான பெயர், ஊர் தெரியாத ஓர் உருவம் தேவைப்படுகிறதே...
இராகுலுக்கு மட்டுமல்ல. அஞ்சலைக்கும்
டாக்டர் என்றால் பயம்தான். இருவரும் பயப்படுவது டாக்டரை நினைத்து அல்ல. அவர் செலுத்தும்
ஊசியை நினைத்துதான்.
இராகுலுக்கு அடிக்கடி சுரம் வரும். தலைச்சுற்றல் வரும். வாந்தி வரும். மகனைத்தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வாள். கால் கடுக்க நிற்பாள். டாக்டரை சந்திப்பாள். அத்தோடு சரி. ஊசி அறைப்பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டாள்.
‘இந்தாப்பாரும்மா.... இது
சீசன் சுரம். ஊசிப்போடலன்னா குணமாகாது’ செவிலியர்கள் அவளை கடிந்துக்கொள்வார்கள்.
‘ பிள்ளைக்கு வலிக்கும் சிஸ்டர்....’
‘ வலிக்காத ஊசி எங்கே இருக்கு...’
‘ வேண்டாம் சிஸ்டர்....அவன் பொறுக்க மாட்டான்.’
‘ மருந்து எடுத்தாச்சு. இதை என்னச்செய்றதாம்...?’
‘ எனக்குனாப் போடுங்க...’
‘ எந்த உலகத்தில நீ இருக்கியோ...’ செவிலியர்கள் தலையில் தலையில் அடித்துக்கொள்வார்கள்.
இராகுல் என்றைக்கு டாக்டரையும், செவிலியர்களையும், ஊசியையும் அடையாளம் கண்டு
அழ ஆரம்பித்தானோ.... அதற்குப்பிறகு அவள் ஊசிப்போட்டுக்கொள்ள மகனை அனுமதித்ததே இல்லை. கடைசி கடைசியாக மகனுக்கு தர்மாஸ்பத்திரியில் ஒன்றரை வயதில் டிடிடி ஊசி போட்டதோடு சரி.
பூமிக்கு நிலவு போல அஞ்சலைக்கு ஒரே பிள்ளை இராகுல். படுச்சுட்டி. எந்த விளையாட்டு விளையாடினாலும் பட்டாசு திரியாட்டம் குதிப்பவன். அவன் விளையாடுகையில் கேலியும் கொக்கறிப்புகளும் உச்சத்தில் இருக்கும். எப்பொழுதும் சிரித்துக்கொண்டும், அடுத்தவர்களை கேலிக்கிண்டல் செய்துக்கொண்டும் இரை பொறுக்கும் கோழிகளின் சிறகு பரிதவிக்கும் பரபரப்பில் இருப்பவன்.
இரண்டு நாட்களாக சுகமில்லை.
அவ்வபோது வந்துவிட்டுப்போகும் சுகமும், வாந்தி, மயக்கமும் அவனை விட்டு போவேனா....என்கிறது.
சாப்பிட மாட்டேங்கிறான். சாப்பிட்டதும்
வாந்தி எடுத்துவிடுகிறான். உடம்பு
இழைத்துகொண்டே வருகிறது. கீச்,மூச் வாங்குகிறது. திடுக்...திடுக்....கென முழிக்கிறான்.
பாயோடு பாயாக மூத்திரம் கழிக்கிறான். அவனால் அழ முடியவில்லை.
‘டாக்ட.... டாக்ட...இங்க வாங்க .... சாப்பிட மாட்டேங்கிறான். குண்டில ரெண்டு ஊசிப்போடுங்க.....’
டாக்டர் என்றாலே பயப்படுபவன் வெறுமென மடியில் உட்கார்ந்திருந்தான்.
ஒரு சிணுங்கல் இல்லை. ஒரு மறுப்பு இல்லை....
ஒரு வாரமாகவே அவனுக்கு சுகமில்லை. கேலி இல்லை. கிண்டல் இல்லை. ஒரு கோரைப்பாயின் மேல் சேலையை விரித்து அதன் மீது படுக்க வைக்கப்பட்டிருக்கிறான். வயிறு முதுகுத்தண்டோடு ஒட்டிப்போய் கிடக்கிறது. கண்கள்
முட்டையின் வெள்ளைக்கருவாக இருக்கிறது.
அவனுடைய நெற்றியில் , மார்பில், வயிற்றில், முதுகில் முத்து முத்தாக வியர்வைத்துளிகள். முந்தானையால் அதைத் தொட்டு எடுத்தாள் அஞ்சலை.
‘கொய்ங்.....’
கொசுப்படை வேறு செங்கிஸ்கான் படையெடுப்பாக
அவனை மொய்த்தது. மின்விசிறி “ டர், டுர், டக், டுக்” என்றவாறு சுற்றிக்கொண்டிருந்தது. அதனால் வியர்வையைத் துடைக்க முடியாத பொழுது கொசுப்படையை விரட்டவா முடியும்! கொசுக்கடியால் கால் விரல்களை அசைத்தபடி புரண்டுப்படுப்பதும், புரியாத மொழியில் உழறுவதுமாக இருந்தான் இராகுல். கதவு அடைக்கப்பட்ட வீடு வெக்கையும் புழுக்கமுமாக இருந்தது. மகனைத்தூக்கி தோளில் கிடத்திக்கொண்டு வீட்டிற்குள் நீள்வாக்கில் நடக்கத்தொடங்கினாள்.
நேற்றையத்தினத்தை விடவும் இன்றையத்தினம் மேலும் சொடுங்கிப்போயிருந்தான்.
முந்தாநேற்று பறித்த முளைக்கீரை தண்டைப்போல துவண்டிருந்தான். இரண்டு கைகளையும் கால்ச்சட்டைக்குள் நுழைத்துக்கொண்டு அட்டைப்பூச்சியைப்போல சுருண்டுப் படுத்திருந்தான். முதுகுத்தண்டு எலும்புகள் ஆட்டுக்கால் முடிச்சைப்போல முட்டிக்கொண்டிருந்தன. இரண்டு கால்களும் பிட்டத்தோடு ஒடுங்கிப்போயிருந்தன.
கொஞ்ச நேரம் திண்ணையில குந்திருக்க மாட்டான். அவிழ்த்து விட்ட ‘காங்கேயம்’ வகை காளையைப்போல
ஓடித்திரிவான். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால் புத்தகத்தை எடுத்துப்புரட்ட மாட்டான். எழுத மாட்டான்.... எந்நேரமும் விளையாட்டு , விளையாட்டு, விளையாட்டுதான்... மகனது நினைவுப்பேழை அவளது கண் முன்னே நிழலாடியது.
“ இராகுலு”-
“ அம்மா....?”
“ ஸ்கூல்ல கொடுத்த வீட்டுப்பாடத்த முடிச்சிட்டியா..?”
“ ...ம். முடிச்சிட்டேனே”
“ என்ன கொடுத்தாங்க...?”
“ ஒன்னு ரெண்டு படிச்சிட்டு வரச்சொன்னாங்க”
“ எங்கே சொல்லு?”
“மாடி மாடி ஒன்னு. மத்தாப்பு ரெண்டு, சோளப்பொறி மூணு,........”
இப்படிதான் எதைக்கேட்டாலும் அதிலொரு கேலியும் ,குறும்புத்தனமுமாகப் பதில் சொல்வான். என்னவாகி விட்டது அவனுக்கு....? விளையாட மாட்டேங்கிறான், படிக்க மாட்டேங்கிறான், பள்ளிக்கு போக மாட்டேங்கிறான்.....எந்நேரமும் படுத்தப் படுக்கைதான்!
மகனைப்பற்றி நினைக்கையில் அஞ்சலைக்கு கண்கள் உடைய கண்ணீர் வழிந்தது. உதடுகள் வறண்டு பரிதவித்தன. மகனை உற்றுப்பார்த்தாள். அவனது மோவாய் ஒடுங்கிப்போயிருந்தது. தடித்துத்தொங்கிய கண் மடல்கள். மேல்வயிறு குழி விழுந்து,அடி வயிறு பந்து போல பருத்துப்போயிருந்தது. பல்லாங்குழி புளியங்கொட்டைகளைப்போல குழிக்குள்ளாக கிடந்தன கருவிழிகள். உடம்பெங்கும் கொசுவம் மாதிரியானச் சுருக்கம். கையைப்பிடித்து உள்ளங்கையை உற்றுப்பார்த்தாள். கைகள் இரத்த ஓட்டமின்றி தேரையின் அடிவயிற்றைப்போல வெளீரென இருந்தன.
அவன் நன்றாகச் சாப்பிட்டு இரண்டு வாரங்களாகிவிட்டது. பச்சத்தண்ணி மட்டும்தான் வேணுங்கிறான். நாக்கு அடிக்கடி வறண்டு போகிறது என்கிறான்.
“ இராகுல்...” அழைப்பில் தாய்மை கனிந்திருந்தது.
“ ம்மா...!”
“ ஏ செல்லம்ல. எழுந்திரிடிம்மா”
மகனை உசுப்பி தலைக்கு போர்வையைக்கொடுத்து கால்களை நீட்டி குந்த வைத்தாள். அவனால் குந்தியிருக்க முடியவில்லை. அவனது இமையை விலக்கி விழியை உற்றுப்பார்த்தாள். விழித்திரையின் நரம்புகள் வெளிர்த்துப்போயிருந்தன. கைகள் நடுங்கின. கால்கள் சடசடத்தன.
“இராகுல்....”
அவன் அம்மாவை நிமிர்ந்து மட்டும் பார்த்தான். நாசிகள் விடைத்தன. அழ வேண்டும் போல இருந்தது. அழவும் தெம்பு வேண்டுமே!
மகனை குறுகுறுவெனப் பார்த்தாள் அஞ்சலை. முந்தானையை எடுத்து மகன் முகத்தை துடைத்து விட்டாள். பெத்த வயிறு பதறியது. கர்ப்ப பைக்குள் ஏதோ ஒன்று ‘சுருக்’கென தைப்பதைப்போலிருந்தது.
‘ இராகுலு.... ஆஸ்பத்திரிக்கு போவோமா...?’
‘ வேண்டாம்மா...’
‘ ஏன்டிம்மா....?’
‘ ஊசிப்போடுவாங்க....’
மகனை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சினாள். ‘ஊசிப்போட உன்ன நான் விட்டுறுவேனா....?. ஏ தங்கத்துக்கு
வலிக்காதா...? நீ துடிச்சிப்போயிட
மாட்டீயா...?. என்னால அதை தாங்கிக்கொள்ள முடியுமா...? மாட்டேன்டிம்மா...மாட்டேன்.... எத்தனை ஊசி போடணுமனாலும் எனக்குப்போடுங்க. என் செல்லத்திற்குப் போட்டுடாதீங்கனு
சொல்லிடுவேன்....ஆஸ்பத்திரிக்கு
போவோம்..ம்.....போவோம்....’
மெல்ல எழுந்திருக்க முயற்சித்தான்
அவன். அவனால் எழுந்திருக்க முடியவில்லை.
‘ பார்த்தியா.....பார்த்தியா...எழுந்திருக்க முடியல. நீ பள்ளிக்கூடத்தி்ற்கு போகணுமெல. படிக்கணுமெல. படிச்சி பெரிய ஆபிஸரா வரணுமெல. வா... ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்திடுவோம். ஊசிப்போட மாட்டாங்க. உன்னோட ஊசிய நான் போட்டுக்கிறேன். போவோமா......?’
‘ ம்’
‘ ம்... நல்லப்பிள்ள. கருத்துப்பிள்ள , தங்கப்பிள்ள...’
மகனை அள்ளிக் கொஞ்சினாள். அவனது முடிகளை நீவி விட்டாள். மகனைத்தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள் . முந்தானையால் மகனை மூடிக்கொண்டாள். வேகமாக மருத்துவமனைக்குச் சென்றாள்.
அரசு மருத்துவமனை அது. பேட்டரி தீர்ந்துப்போன பொம்மையைப்போல மெதுவாக இயங்கிக்கொண்டிருந்தது.
மருத்தவர் முன் உட்கார வைக்கப்பட்டான் ராகுல். அவனது இமைகளை
விலக்கிப்பார்த்தார். வயிற்றைச் சுண்டினார். பக்கம் பக்கமாக எழுதினார்.
பெரியக்கோயில்களுக்குப் போகிறவர்கள் கோயிலைச்சுற்றி இருக்கிற சிலைகளைக் கும்பிட கோயிலை
ஒரு வலம் வருவதைப்போல அவள் மகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனையை சுற்றி வலம் வந்தாள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சோதனைக்கு மகனைக்கிடத்தினாள்.
சோதனைகள் முடித்து டாக்டர் முன் இராகுல் உட்கார வைக்கப்பட்டான்.
டாக்டர் சோதனையின் முடிவுகளை வெறிக்கப்பார்த்துக்கொண்டிருந்தார்.
உடலின் வெப்பநிலையைக் கவனித்தார். புன்முறுவல் கொண்டு அதை டிக் அடித்தார். அடுத்து
நாடித்துடிப்பை கணக்கிட்டார். அதை வட்டம் கட்டினார். சுவாசத்துடிப்பை எண்ணினார். அதில்
அடிக்கோடிட்டார். இரத்த அழுத்தத்திற்கு அருகில்
பெருக்கல் குறியிட்டு வட்டம் கட்டினார்.இரத்தம், சிறுநீர், மலம் சோதனைகளைப் பார்த்தார்.
இமைகளை ஏற்றி இறக்கினார்.
‘டாக்டர்... என் பிள்ளைக்கு என்ன டாக்டர்...? ’ பரிதவித்தாள்
அஞ்சலை.
‘கவலைப்படுற
மாதிரி ஒன்னுமில்ல. இதுக்கு ஊசி இருக்கு ’
அவள் திடுக்கிட்டாள். ‘ ஊசி வேணா... வலி பொறுக்க
மாட்டான் டாக்ட...’
‘ ஊசி நான் போடப்போறதில்ல. அவனாகவே போட்டுக்கணும்’
‘ எத்தனை நாளைக்கு டாக்டர்....?’
‘ தினமும் மூணு வேல.....’
‘ டாக்டர்....!’
‘ ம்.....இன்சுலின் பிராப்ளம்.
சர்க்கரை முத்திப்போயிருக்கு’
‘ டாக்டர்.....!’
விதியின் கொடுமையை யாரிடம் சொல்வது?
பதிலளிநீக்குகொடுமைதான்
பதிலளிநீக்கு