ஆயக் கலை அறுபத்து நான்கில் முதன்மையானக் கலை சமையல் கலை. பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருக்கிறது என்கிற புரளியைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியைச் சமைத்து சோறு ஆக்குதல் அறுபத்து ஐந்தாவது கலையாகி இருக்கிறது. இதுநாள் வரைக்கும் அறுபத்து ஐந்தாவது கலையாக இருந்த கணினி கலை அறுபத்து ஆறாவது கலையை நோக்கி தள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் அரிசியை சீனாவின் கொடை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா சீனா இரண்டு நாடுகளுக்கு இடையேயான பகைமை பிளாஸ்டிக் அரிசியை இந்தியாவிற்குள் அனுமதிப்பதன் வாயிலாக முடிவிற்கு வருகிறது. இனி இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி , ஒற்றை மதம் இந்து , ஒற்றை உணவு பிளாஸ்டிக் சோறு....இந்த வரிசையில் இந்தியாவின் ஒற்றை எதிரி பாகிஸ்தான். உலகின் முதல் மாற்று அறுவைச் சிகிச்சை மனிதத் தலையிடத்தில் யானையின் தலையைப் பொறுத்திய அறுவை சிகிச்சைதான் என உலகிற்கு பறைசாற்றிய நம் விஞ்ஞானிகள் இன்னொரு கண்டுப்பிடிப்பை கண்டறிந்துள்ளனர். அது மணிமேகலை காப்பியக் காலத்து யானை பசியுடைய காயசாண்டிகை கடைசியில் பசியாறியது இந்த பிளாஸ்டிக் அரிசி சோற்றில்தான். அத்துடன் அவள் அட்சயப்பாத்திரத்தில் சமைத்து எடுத...